அக்கினிப் பறவை -5

5 குற்றாலம் தாண்டிப் பயணித்தது அந்த பஸ். ஜன்னல் வழியே வெளியே பார்த்தான் ஆதித்தன். அடர்ந்த மரங்களும் , சுழித்தோடும் வாய்க்கால் நீரும் ...


5

குற்றாலம் தாண்டிப் பயணித்தது அந்த பஸ். ஜன்னல் வழியே வெளியே பார்த்தான் ஆதித்தன். அடர்ந்த மரங்களும், சுழித்தோடும் வாய்க்கால் நீரும் அவன் மனதிற்கு இதத்தைத் தரவில்லை. மனதுக்குள் பாரம்தான் சேர்ந்தது. அந்தக் கிராமத்திற்குள் நுழைந்து நின்றது பஸ். உயிரற்றவனாய் எழுந்து கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கினான்.
ஊருக்குள் நடந்தான் ஆதித்தன். அத்தனை வருடங்கள் ஆன பின்னும் மாறாமல் அப்படியே இருந்தது ஊர். அதே கோவில் திண்ணை.. அதே வம்பு பேசும் பெரிசுகள். அவர்கள் உருவாக்கிய அதே வம்பு மடம். கோவில் திண்ணையிலிருந்த பெரிசு ஒருவர் கைகளை நெற்றியின் மேலே வைத்து உற்று நோக்கினார். பக்கத்திலிருந்த இன்னொரு பெரியவரிடம் வினவினார்.
"சோலையப்பா.. யாருலே அது.. தூரத்தில வெள்ளையும் சொள்ளையுமா வாரது..?" பக்கத்திலிருந்த பெரிசு பதில் கூறினார்.
"அட.. இது தெரியாதாலே.. இது வேற யாருமில்ல.. நம்ம மலையப்பன் மவன்தான்.."
"மலையப்பன் மவனா..? என்னாலே.. கிறுக்கு பிடிச்சிருக்காலே.. மலையப்பன் மவன்ல எவன்லே பள்ளிக் கூடம் போய் படிச்சவன், அவனுக மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்காத பயபுள்ளைக ஆச்சேலே.."
அந்த சோலையப்பன் கிண்டலாய் பொருள் பொதியச் சிரித்தார்.
"அட என்னலே.. நீ சுத்த விவரம் கெட்ட மனிதனா இருக்கீரு.. இவன் அந்த பூங்காவனம் பெத்துப் போட்டவனில்ல.."
"அட ஆமாம்லே.. அதை மறந்துட்டேனே.. இவன் அந்தப் பூங்காவனத்தோட மவனா.. ஜாடை அப்படியே உரிச்சு வைச்சாப்புல ஆத்தாவைப் போலவே இருக்கானே இந்தப் பயபுள்ள.. பட்டணத்தில் வேலை பார்கிறவனா..?"
கோவில் திண்ணையில் வம்பளந்தவர்களின் பேச்சு ஆதித்தனின் செவிகளில் அமிலத்தை ஊற்றி இறங்கியது. அவன் மனம் அக்கினியேற்றது. உடலும் மனமும் எரிய கால்களை எட்டி நடை போட்டான். காரில் வந்திருக்கலாம். இந்தப் பேச்சுக்கள் காதில் விழுந்திருக்காது. ஆனால் அவன் போகப் போகும் வீட்டில் இருப்பவர்கள் வயிறு எரிந்து விடும். சாபம் கொடுப்பது போல் கத்த ஆரம்பித்து விடுவார்கள். தேவையில்லாமல் யார் வாயிலும் விழுக வேண்டாம் என்று நினைத்துப் பஸ்ஸில் வந்தால் இங்கு வேறு மாதிரியான பேச்சுக்கள் காதில் விழுகிறது. அதுவும் எப்பேர்ப்பட்ட பேச்சு.. சென்னையில் பிரபலமான மேக்னா பவர்ஸ் ஸிமிடெட்டின் ஜி.எம். இங்கு காணப்படும் அடையாளமே வேறு ஆயிற்றே..
இந்த ஒரு அடையாளத்தை துறப்பதற்காகத்தானே அவன் இந்த ஊரை விட்டு ஓடினான். மீண்டும் அதே அடையாளத்தைத் தேடி வர வேண்டியதாகி விட்டதே. பேசிக் கொண்டிருந்த பெரிசுகளை சட்டை செய்யாமல் விடுவிடுவென ஊருக்குள் நடந்தான். எதிர்படும் முகங்களின் வியந்த பார்வைகளையும், அறிந்த பார்வைகளையும் அலட்சியம் செய்து மேலே நடந்தான். ஊரின் மத்தியில் அந்த மாடி வீடு தெரிந்தது. வீட்டிற்குள் நுழைந்தான். எதிர்பட்ட அந்தக் கரிய பெண்மணி காரித் துப்பினாள்.
"எடுபட்ட நாய்கள் எதுக்கு வந்து தொலைக்குதுக.. போகிற காரியம் உருப்பட்டாப்புலதான். கண் காணாம தொலைஞ்சது அப்படியே தொலைஞ்சு போகாம திரும்பி ஏன் வந்து தொலைக்குதுக.. என் உயிரை எடுக்கவா..? ஏன்லே காளியப்பா.. எங்கேலே போய் தொலைஞ்சே..?"
"ஏம்மா.. இந்தக் கத்துக் கத்தறே.. சும்மாவே உனக்கு வெங்கலத் தொண்டை எட்டு வீட்டுக்குக் கேட்கும். இப்ப எட்டு ஊருக்குக் கேட்குது.. காளியப்பன் எங்கே போயிட்டேன்..? இந்தா வந்து விட்டேன். இப்பச் சொல்லு. எதுக்குக் கூப்பிட்ட." என்றபடி வந்த அந்த இளைஞன் அந்த பெண்மணியின் ஜெராக்ஸ் பதிப்பாய் அவளது தோற்றத்தை நகல் எடுத்தது போல் இருந்தான்.
"அங்கே பாருலே.. வாசலில் யாரு வந்து நிக்கறதுன்னு.." அவள் குரலைத் தாழ்த்திச் சொல்ல வாசல் பக்கம் பார்த்தவன் ஆதித்தனைக் கண்டதும் முகம் மாறினான்.
'இவன் எதற்கு வந்தான்..?' என்ற சந்தேகம் அவன் விழிகளில் மின்ன,
"எங்கலே வந்தே.." என்றான் ஆதித்தனைப் பார்த்து.
"தாத்தாவைப் பார்க்க.." என்றான் ஆதித்தன் இறுகிய முகத்துடன்,
"யாருக்கு.. யார் தாத்தாடா.. உனக்கு அந்தக் கிழவன் தாத்தாவா..?" அவன் மேலே பேசுமுன்.
"இங்கே என்னலே சத்தம்..?" என்று கேட்டபடி மலையப்பன் வந்தார். குட்டையான கறுத்த நிறத்துடன் இருந்தவர், மனைவியைப் பார்த்து,
"என்னலே வெள்ளையம்மா.. என்ன இங்கே வம்பு பண்ணிக்கிட்டு இருக்கவ.." என்றார் எரிச்சலுடன்.
வெள்ளையம்மாள் என்று அழைக்கப்பட்ட அந்தக் கருத்தம்மாள் முகத்தை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு கூறினாள்.
"உனக்கு வாக்கப்பட்டு வந்திட்டேன்ல்ல.. வம்பு வளக்கிறதுதானே எம் பொழப்பா போச்சு.. ஒன் அருமை மவன் வந்திருக்கான். எதுக்கு வந்திருக்கான்.. ஏன் வந்திருக்கான்னு.. என் மவன் கேட்டிகிட்டிருக்கான்."
'உன் அருமை மகன்' என்று மனைவி கூறிய ஆதித்தனை அறிமுகமற்ற பார்வை பார்த்தபடி, காளியப்பனிடம்,
"ஏன்லே.. கேட்டில்ல.. என்ன சொன்னான்.." என்று வினவினார் மலையப்பன்.
"கேட்டேன்ய்யா.. அதுக்கு என் தாத்தாவைப் பாக்க வந்தேன்னு தெனாவெட்டா பேசுறான் பயபுள்ள" என்றான் காளியப்பன் ஆதித்தனை முறைத்தபடி.
"சொல்லிட்டான்ல்ல.. பாத்துட்டுப் போகட்டும்.. உன் சோலிக் கழுதய பார்த்துக்கிட்டுப் போ.." என்று மலையப்பன் கூற வெள்ளையம்மாள் வெகுண்டாள்.
"அதானே பார்த்தேன்.. ஐயாவுக்குப் பாசம் பொங்குதோ.. பெத்த மகன்கிற நினைப்பு வருதோ.. இங்க பாரு.. இந்த வீட்டுக்குள்ள எம்மவன்களைத் தவிர வேறொருத்தன் உன் மவன்னு சொல்லிக்கிட்டு வந்தான்.. உன் வேரறுத்துடுவேன். பார்த்துக்க.. ஓடுகாலி பெத்ததுகள்லாம் உறவு முறையா..? இருந்து பொழைச்சவ கேணச்சிறுக்கியா..."
"தா.. தா.. சும்மா கத்திக்கிட்டு இருந்தே தூக்கிப் போட்டு மிதிச்சிடுவேன். யாருடி உறவு கொண்டாடினா..? இன்னைக்கோ.. நாளைக்கோன்னு நாளை எண்ணிக்கிட்டு இருக்காருடி எங்க ஐய்யன். அவரு உசிரு.. இந்த கேடு கெட்டவ பெத்த பிள்ளை மேல இருக்கு.. வருசக் கணக்கா வனவாசம் போனவன் வளர்த்த பாசத்தில அந்த வயசான மனுசனை ஒரு எட்டு பார்த்திட்டுப் போகலாம்ன்னு வந்திருப்பான். பார்த்துட்டுப் போகட்டுன்னுதான் சொல்றேன். இங்க இருக்க வைச்சு சீராட்டல.."
காளியப்பன் கோபத்துடன் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே வெளியே செல்ல வெள்ளையம்மாள் கோபமாய் உள்ளே சென்றாள். எதிரே நின்ற மூத்த மகனை ஏறிட்டுப் பார்த்த மலையப்பனின் விழிகளில் கடுகளவு கூட பாசமில்லை. வெறித்துப் பார்த்தவர் பார்வையை வேறு திசையில் திருப்பிக் கொண்டு ஒரு வார்த்தை கூட மகனிடம் பேசாமல் வெளியே சென்று விட்டார்.
"தம்பி..! வாங்கய்யா..." என்று அழைத்தபடி வந்து பாசத்துடன் பெட்டியை வாங்கிக் கொண்டான் முனியாண்டி. தோட்ட வேலை செய்பவன்.
"தாத்தா எப்படியிருக்காரு.." என்று கேட்டான் ஆதித்தன்.
வெளியே இருந்த மாடிப்படிகளில் ஆதித்தனின் பெட்டியைச் சுமந்து கொண்டு ஏறிக் கொண்டே முனியாண்டி பதில் சொன்னான்.
"ரொம்ப தழண்டு போயிட்டாருய்யா.. நெதமும் உங்க நினைப்புத்தான். அம்மாவுக்கும், உங்க தம்பிமார்களுக்கும் அதுல ரொம்ப கோவங்க.."
அவனைத் தொடர்ந்து ஏறிய ஆதித்தன்.
"டாக்டர் வந்து பார்த்தாரா..?" என்று கேட்டான்.
"எங்கங்க வந்து பார்க்கிறது..? டவுன் ஆஸ்பத்திரிக்குத் தான் கொண்டுகிட்டுப போகணும். அய்யாதான் ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வண்டிகட்டச் சொல்லிக் கூட்டிக் கிட்டுப் போவாரு. அதுக்குக்கூட இந்த மகராசி கூப்பாடு போடுவாக."
"மத்தவங்க.. யாரும்.. அதாவது.. மத்த பேரப்பிள்ளைகள் யாரும் அக்கறை எடுத்துக்க மாட்டாங்களா..?"
ஆதித்தனின் குரல் தழுதழுத்து ஒலித்தது.
"மத்த பேரப்புள்ளைகளா.. யாருய்யா உங்க தம்பி மார்களா..? உங்க மூணு தம்பிமார்களும் எந்த விசயம் சொன்னாலும் மூணு திசையில நிப்பாங்க. ஆனா உங்க தாத்தாவப் பத்தி பேசினா மட்டும் மூணு பேரும் ஒரே மனசா ஒரே திசையில நிப்பாங்க. 'வயசானா போக வேண்டியது தானே.. இதுல சாகப் போற கிழவனுக்கு மருத்துவம் என்ன பார்க்க வேண்டியிருக்கு'ன்னு தினமும் ரகளை பண்றாங்கய்யா. அவங்க சொத்து குறையுதாம்.."
முனியாண்டியின் பேச்சில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் ஆதித்தன். வயதானால் போய் விட வேண்டியதுதானா..? அப்படி அவர் போய் விட்டால்..? ஆதித்தனுக்கு யார் இருக்கிறார்கள்..? ஆதித்தனை யார் தேடுவார்கள்..? நெஞ்சுக் குழியில் துக்கம் அடைத்தது.
பேசிக் கொண்டே மாடியறையின் கதவைத் திறந்து உள்ளே போன முனியாண்டி, "பெரியய்யா! யாரு வந்திருக்காங்க பாருங்க.." என்று கூவினான்.
"யாருலே..?" என்றபடி நரைத்த புருவங்களை மேலேயுர்த்தி விழிகளை கூர்மையாக்கிப் பார்த்த தணிகாசலம் பேரனைக் கண்டு கொண்டார். முகத்தில் வெளிச்சம் பரவ வார்த்தைகளில் பாசம் கலந்த பரவசத்துடன்,
"ஆதித்தா..! வத்திட்டயா ராசா..." என்றார்.
"வந்துவிட்டேன் தாத்தா.." என்று தழுதழுத்த குரலில் கூறியவன் அவரின் தோல் சுருங்கிய வயோதிகக் கைகளை வாத்சல்யத்துடன் பிடித்துக் கொண்டு அருகே அமர்ந்தான். முதியவரின் கரம் அந்த வாலிபனின் கரத்தை அழுந்தப் பிடித்துக் கொண்டது.
"தாத்தாவாப் பார்க்க இத்தன நாளா ஏன் ராசா வரலே..?"
"வேலையிருந்தது தாத்தா.." அவன் உண்மையை மறைத்து உரைத்தான்.
"வருசக் கணக்காவா சோலி இருக்கும்..? இந்த வயசான கெழவன் உனக்கு என்ன கெடுதல் பண்ணி னான்னு கண்ணில படாமப் போன ராசா..?"
"நீங்க கெடுதல் பண்ணினீங்களா..? என்ன தாத்தா பேசுகிறீக. என்னைப் படைத்தவன் எனக்கு கெடுதல் பண்ணி விட்டான் தாத்தா. அவன் பண்ணின ஒரே நல்ல காரியம் எனக்கு உங்க பேரன்கிற உறவைக் கொடுத்தது தான்."
தணிகாசலத்தின் தளர்ந்த கைகள் பேரனின் தலையைக் கோதின. ஆதுரமான குரலில், "இன்னுமா மறக்கலை ஆதித்தா..?" என்று கடிந்து கொண்டார்.
"எப்படி மறக்கும் தாத்தா..? நான் சாகும் வரை மறக்குமா தாத்தா..?"
"மறக்கணும்லே... மறந்துடணும்.. வளர்ற புள்ள நெஞ்சில நஞ்சை சுமக்கக் கூடாதுலே.. ஆதித்தா.. என் ராசா.. மறந்துரு.. எல்லாத்தையும்.. நான் சொல்றது புரியுதா.. எல்லாத்தையும் மறந்திடணும்.." என்றார் தணிகாசலம் ஆணையிடும் குரலில். ஆதித்தன் மனம் உடைந்தான். தொண்டை அடைக்கக் கரகரத்த குரலில்,
"முடியலையே தாத்தா. என்னோடு சேர்ந்து அந்த நினைப்பும் வளருதே.. நான் என்ன செய்யட்டும். முளைக்கிற செடியாக இருந்தால் முளைக்கும் போதே கிள்ளி விடலாம். இது விருட்சமாக வளர்ந்து நிற்கிறதே.."
"விருட்சமா வளர்ந்தா கோடாலி எதுக்குலே இருக்கு. ஆதித்தா... என் பேராண்டி.. உன் மன உறுதிதான் கோடாலி. அதை வைச்சு வேண்டாத நினைப்ப வெட்டி எறிஞ்சுட்டு வாழ்க்கையில உறுதியா நிக்கணும்லே. ஜெயிக்கணும். நீ ஜெயிக்கணும்."
"வைராக்கியத்தைக் கேடயமாக வைத்திருக்கிறேன் தாத்தா.. என்னை அழிக்கும் நினைவுகளோடு போராடிக் கொண்டுதான இருக்கிறேன்.. ஆனால் என்னால் ஒரு அளவுக்கு மேல் போராட முடியவில்லை தாத்தா.. ஏன் படைத்தான் தாத்தா.. அந்த இறைவன் என்னை ஏன் படைத்தான். இப்படி ஒரு பிறவியை ஏன் கொடுத்தான்..?"
ஆதித்தன் வெடித்துச் சிதற தணிகாசலம் தட்டுத் தடுமாறி எழுந்து அமர்ந்து கொண்டார். பேரனை ஆதரவாய் அணைத்தவர்,
"கடவுளை நிந்திக்காதேலே.. ஏன் படைத்தான்னா கேட்குற.. இந்த தாத்தாவுக்கு நீ பேரனாகணும்ன்னு படைச்சான்லே.." என்றார்.
ஆதித்தனின் குமுறும் மனம் இந்த சொற்களைக் கேட்டதும் கொதித்துப் பொங்கி வந்த பாலில் நீர் தெளித்தாற் போல் அடங்கிப் போனது. அவரது காலடியில் சரிந்து அமர்ந்தவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.
'நெஞ்சோடு நஞ்சை சேர்த்துப் படைத்த இறைவனை நிந்திப்பதா..? இல்லை அந்த நஞ்சிலும் தேன் துளியாய் தித்திக்கும் இந்த வயோதிகரின் பாசத்தை அளித்தானே அதற்காக அவனை சிந்திப்பதா..? இந்த முதியவரின் மடி கிடைக்காமலிருந்தால் மொட்டிலேயே அவன் வாழ்வு கருகிப் போயிருக்குமே.'
அன்று போல இன்றும் அவரின் மடியினில் தலை சாய்த்தான் ஆதித்தன். பேரனின் தலையைப் பாசத்துடன் தடவிய அந்தச் சுதந்திரப் போராட்டத் தியாகியின் உள்ளம் வேதனைப்பட்டது. வெள்ளைக்காரனை எதிர்த்து அவர் போராடிய போராட்டமெல்லாம் போராட்டமேயில்லை. இந்தப் பேரப் பிள்ளைக்காக அவர் போராடியது தான் பெரிய போராட்டம்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -5
அக்கினிப் பறவை -5
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy