அக்கினிப் பறவை -4

4 அன்றைய நாள் சந்தியாவிற்கு நன்றாக நினைவிருக்கிறது. கட்டிய துணியுடன் வீட்டை விட்டு வெளியேறியவள் அடைக்கலம் கேட்டு மிதித்த படி உறவினர் ...


4

அன்றைய நாள் சந்தியாவிற்கு நன்றாக நினைவிருக்கிறது. கட்டிய துணியுடன் வீட்டை விட்டு வெளியேறியவள் அடைக்கலம் கேட்டு மிதித்த படி உறவினர் வீட்டுப்படியல்ல. ஆருயிர் தோழியின் வீட்டுப்படி. நட்பின் கதவு திறந்தது. கை நீட்டி அவர்களை அணைத்துக் கொண்டது சந்தானலெட்சுமியின் நட்பு. சந்தான லட்சுமியின் கணவர் கோபாலனும் மகனும் உறவினர்கள் போல் அவர்களை ஏற்றுக் கொண்டனர். சந்தான லட்சுமியின் மகன் பிரதீப், சந்தியாவின் அண்ணன் ஆனான். ஆனால் அந்த வீட்டில் ஓர் நாளுக்கு மேல் அடைக்கலம் கேட்கவில்லை அன்னம்.
"சந்தானம் எனக்கொரு வீடு பார்த்துக் கொடு."
"தனியாகப் போகப் போகிறாயா..? எங்கே போவாய்..? எப்படி வாழ்வாய்..? இதோ பார் நீயும், சந்தியாவும் எங்களுக்குச் சுமையில்லை. பிரதீப்பை அண்ணா, அண்ணா'ன்னு சுற்றிச் சுற்றி வருகிறாள் சந்தியா.. என் வீட்டுக்காரர் உன் கூடப் பிறந்த பிறப்பாய் நினைக்கிறார். அப்புறமென்ன..?"
"அந்த ஆளைப் போலவே நீயும் கேட்கிறாய் பார்த்தாயா..? தனியா வந்தவள் தனியாகத்தாண்டி வாழணும். அகதி போல் அடைக்கலமாய் அண்டி வாழக்கூடாது."
"அகதின்னு சொன்னால் அறைந்து விடுவேன். வைராக்கியம் இருந்தால் மட்டும் போதுமா அன்னம், வாழ வழி வேண்டாமா..?"
"கையில்லையா சந்தானம்.. எனக்கு இரண்டு கையில்லையா..? புத்தகப் படிப்புத்தான் படிப்பா..? பேனா பிடித்து எழுதுவதுதான் தொழிலா..? படிக்காத பெண்களுக்கு அடையாளம் கொடுப்பது எது..? அடுப்படிதானே..! அந்த அடுப்படி என்னைக் காப்பாற்றும் இந்த உலகில் பசியும், ருசியும், தெரிந்த மனிதர்கள் இருக்கும் வரை கரண்டி பிடிப்பவர்கள் கைகளுக்கு வேலையுண்டு சந்தானம். பசிக்கு, ருசியா சமைத்துப் போட்டவர்களுக்கு வாழவும் வழியுண்டு. இந்தா இதைப்பிடி."
"என்னடி கழுத்தில் போட்டிருக்கிற செயினை அவிழ்த்துக் கொடுக்கிறே..?"
"இது என்னுடைய தாய் வீட்டுச் சீதனம் சந்தானம். என் அண்ணன் எனக்காக.. இந்தக் தாய் தகப்பனில்லாத தங்கைக்காக.. பெண்டாட்டியிடம் இடி சோறு சாப்பிட்டுக் கொண்டே போராடி.. குருவி போல் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து எனக்குச் செய்து போட்ட நகை இது சந்தானம். இதை விற்றுக்கொடு.."
"அன்னம் எதற்கு இப்போது அவ்வளவு பணம்..? அத்தோடு உனக்குப் பணத்தேவையென்றால்.. எவ்வளவாக இருந்தாலும் நான் கொடுக்கிறேன்டி.."
"எனக்கு சின்னதாக முன்னால் நான் சாப்பாட்டுக் கடை போட்டுக் கொண்டு பின்னால் என் மகளுடன் குடியிருந்துக்கிற மாதிரி ஒரு வீடு பார்த்துக் கொடு. வீட்டு அட்வான்ஸ், சாப்பாட்டுக்கடைக்கு பாத்திரங்கள், நீண்ட மேஜை, நீண்ட பெஞ்ச்.. அப்புறம் நாங்க உடுத்திக்க மாத்துத் துணிகள் இப்போதைக்கு ரெண்டு செட்.. இதையெல்லாம் பணமில்லாமல் நான் சமாளிக்க முடியாது. இந்தச் செயின் எட்டுப் பவுனில் செய்தது. விற்று விடு."
"அன்னம் என்னடி இப்படிச் சொல்றே.."
"சந்தானம்.. என் அண்ணன் பாடாய்ப் பட்டு.. இந்த ஆளைத் தேடிப் பிடித்து.. நல்லவன், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன்னு விசாரித்துச் சொல்லி என்னை இந்த ஆள்கிட்ட ஒப்படைத்தார். தங்கச்சி கண் மூடற வரைக்கும் அவளுக்குத் தாலி கட்டியவன் வைத்துக் காப்பாற்றுவான்னு நினைச்சு எனக்கொரு கல்யாணம் பண்ணி வைச்சார். நானும் எனக்குத் தாலி கட்டியவனை என் உயிராய் நினைத்தேனே சந்தானம்... ஒரு கணத்துக் குள்ளே அவன் என் ஆவியை குடிச்சுப்புட்டானேடி.. சந்தானம் என் புருசன்னு நான் நினைச்சிருந்தவன் சொன்னான்.. 'அடியே அன்னம். நீ படிக்காத முண்டம்டி. இங்கேயே எனக்கும், என் ஆசை நாயகிக்கும் சமைத்துப் போட்டுக் கொண்டு... நான் அவள்கூட குடும்பம் நடத்துறதைப் பார்த்துக் கொண்டு ஒரு மூலையில் கிடடின்னு' சொன்னான்.. அவளை தனி வீட்டில் வைத்திருந்தால்கூட நான் கொஞ்சம் பயந்து.. வெளியேறத் தயங்கி இருப்பேன்டி.. ஆனால் என் வீட்டிற்கே கூட்டி வந்து.. என் கண் முன்னேயே அவள்கூட குடும்பம் நடத்தப் போறேன்னு சொன்னானே.. அப்போதே என் மனம் செத்து விட்டது சந்தானம்.. செத்துவிட்டது."
"அன்னம்.. ஐயோ அன்னம்.. உனக்காடி இந்தக் கொடுமை..? தனியாக வீட்டு வாசலில் கோலம் போடக் கூடப் பயப்படுவாயேடி..? நீயா தனியாகப் போய்.. அதுவும் சாப்பாட்டுக் கடை வைத்து.."
"ஏண்டி அப்படிச் சொல்கிறாய்..? சாப்பாட்டுக் கடை வைத்தால் அது கவலைப்பட வேண்டிய தொழிலா..? சந்தானம். இந்த நாட்டில் அநாதையான பெண்களும், அடிமட்டப் பெண்களும் வாழ வழி காட்டுவது இந்த சமையல் தொழில்தாண்டி. கரண்டி பிடிச்சவங்களுக்கு கடைசி வரை ரிட்டயர்ன்மெண்ட் கிடையாது.. எப்போது என் தன்மானம், சுயமரியாதை.. அந்த வீட்டில் பறிபோய் விட்டதோ.. அப்போதே எனக்கு தனியாக வாழ்வதற்கு பயம் போய்விட்டது. தைரியம் வந்து விட்டது. சந்தானம்.. அழுகாதே.. நான் தோற்று விடமாட்டேன். வாழ்ந்து காட்டுவேன். என் சந்தியாவை என்னைப் போல் படிப்பறி வில்லாமல், தன் சாப்பாட்டிற்கும் தேவைகளுக்கும் புருசன் கையை எதிர்பார்க்கிறவள் போலில்லாமல் தன் காலில் நிற்கிறவளாக சுய சம்பாத்தியம் உள்ளவளாக உருவாக்கிக் காட்டுவேன். அதுவரை நான் ஓய மாட்டேன். சந்தானம் எனக்குப் பண உதவியெல்லாம் வேண்டாம். யாருமில்லைன்னு நான் சோர்ந்து போகும் போது எனக்கு சாய்ந்து கொள்ளத் தோள் கொடு. அது போதும்."
சந்தானலட்சுமி தோள் கொடுத்தாள். அன்றிலிருந்து இன்று வரை அன்னம் சோரும் போதும், சந்தியா வளரும் போதும் சந்தானலட்சுமி, சந்தியாவுக்கு மற்றொரு தாயானாள். கோபாலனே தந்தையானார். பிரதீப் பாசத்தையும் நட்பையும் கொட்டும் அண்ணன் ஆனான். எட்டு வயது சந்தியாவின் கரம் பிடித்த பத்து வயது பிரதீப்பின் கரம் இன்று வரை ஒரு சகோதரனாய், நண்பனாய் அவளைத் தொடர்ந்து வருகின்றது.
"சந்தியா.." 
அன்னத்தின் களைப்பான குரல் கேட்டு நடப்புலக்கிற்கு திரும்பிய சந்தியா
"என்னம்மா..?" என்று வினவியபடி தாயின் அருகே விரைந்தாள்.
"இன்னைக்கும் கடை திறக்கலையா..?"
"இன்றைக்கு திறந்திடுவோம்மா.. கனகம்மாள் வந்ததும் திறந்திடலாம்."
"கனகம் எங்கே போயிருக்கா..?"
"மார்க்கெட் போயிருக்காங்க.. காய்கறி ஒண்ணுமே ஸ்டாக் இல்லைம்மா."
"ஆடியபாதம் வரவில்லையாம்மா..?"
"வந்து விட்டார்ம்மா.. பின்னாடி பலசரக்கு வந்து இறங்கியிருக்கு.. அதை சரி பார்த்துக்கிட்டு இருக்கார்.."
"என் செல்லமே.. இந்த அம்மாவால் உனக்கு எவ்வளவு தொந்திரவு..?"
"என்னம்மா தொந்திரவு..? உங்களுக்கு உடம்புக்கு முடியலை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் என்ன தனியாகவா சமாளிக்கிறேன். கனகம் சித்தியும், ஆடியபாதம் மாமாவும் இருக்கிறாங்கல்ல.."
"உனக்கு ஏதோ இன்டர்வியூ வந்திருக்குன்னியே..?"
"அது நாளைக்குத்தான்ம்மா.. இப்ப நீங்க கொஞ்சம் படுத்துத் தூங்குங்க. மாத்திரை போட்டிருக்கீங்க இல்ல.. தூங்கணும்மா.. தூங்கவில்லையானால் ரொம்ப சிரமமாகி விடும். தூங்குங்க. அதிகம் பேசக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரில்லை.. என் தங்க அம்மா.. பட்டு அம்மா இல்லே.. தூங்குங்க.."
மகள் கொஞ்சலாய் மொழிய அன்னம் அதை ரசித்தபடி அமைதியாய் தூங்கிப் போனாள். அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அருகில் அமர்ந்திருந்த சந்தியாவின் இதயம் வேதனையில் துடித்தது. டாக்டர் தூங்க மட்டுமா சொன்னார்..?
"அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்மா சந்தியா.. ஓய்வு மிகவும் அவசியம். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தை கையாள்வது போல அவங்களை மிக ஜாக்கிரதையாய் பத்திரமாய் பார்த்துக்கணும். முக்கியமாக அவங்க எந்தவித வேலையையும் செய்யக்கூடாது. ஓய்வு மிக அவசியம். படபடப்பு, வியர்வை, ஓடி, ஆடி நடமாடுதல் போன்றவை ஆபத்தை விளைவிக்கும்.. என்ன மாதிரியான ஆபத்து தெரியுமா..? உயிர் போகும் ஆபத்து.."
ஆறு தினங்களுக்கு முன்னர் அடுக்களையில் வேலை செய்து கொண்டிருந்த அன்னம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தாள். கனகம், ஆடியபாதத்தை கடையை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு.. சந்தான லட்சுமிக்கு போன் பண்ணி விட்டு சந்தியா, அன்னத்தை ஆட்டோவில் அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள். அவசரமாய் அன்னத்தை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த டாக்டர் அன்னத்திற்கு வந்திருப்பது 'ஹார்ட் அட்டாக்' என்றார். அவள் இனி உழைக்கக் கூடாது ஓய்வு அவசியம் என்றார்.
என்ன செய்வாள் சந்தியா..? இதயம் வலிக்க வீட்டை விட்டு வெளியேறிய அன்னத்திற்கு நிஜமாகவே இதயத்தில் வலி வந்து விட்டது. அவளேற்ற வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் வலி வராமல் என்ன செய்யும்..? அவளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஆனால் எப்படி ஓய்வு கொடுப்பது..? அன்னம் படிக்கும் பெண்ணை சமையல் அறைப் பக்கம் அனுமதித்தது இல்லை. 'அம்மா உணவகம்' நடத்தும் பொறுப்பை சந்தியா ஏற்பதை அன்னம் அனுமதிக்க மாட்டாள். சரக்கு மாஸ்டரான ஆடிய பாதமும், சுற்று வேலைகள் செய்யும் கனகமும் எத்தனை நாள் துணையிருப்பார்கள்..? யார் தயவையும் நாடாத அன்னத்தின் மகளல்லவா அவள்..? இனி என்ன செய்யப் போகிறாள்..?
சந்தியா பீரோவைத் திறந்து மேல் தட்டில் வைத்திருந்த அந்தக் கவரை எடுத்தாள். 'மேக்னா பவர்ஸ் லிமிடெட்' என்று அழகாய் அனுப்புவர் முகவரி அச்சிடப் பட்டிருந்தது. நாளைக்கு நேர்முகத் தேர்வு. 'இந்த வேலை மட்டும் கிடைக்குமானால்..' சந்தியா பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தபோது,
"சந்தியா எங்கே இருக்கே..?" என்று வினவியபடி பிரதீப் வந்தான்.
"வா அண்ணா என்ன கையில் பை..?"
"சித்திக்குப் பழம் வாங்கி வந்தேன்.. இந்தா, ஆமாம் அது என்ன கையில் கவர் வைத்திருக்கிற, இங்கே கொடு." என்று வாங்கிப் படித்த பிரதீப்,
"மேக்னா பவர்ஸ் லிமிடெட்' பெரிய கம்பெனி சந்தியா.. இங்கே வேலை கிடைத்தால் நீ லக்கிதான். ஆனால் கிடைக்காமல் எப்படிப் போகும்.. டிகிரி படித்து இருக்கிறாய். கம்ப்யூட்டர் கோர்ஸில் மூன்று சர்டிபிகேட் வாங்கியிருக்கிறாய். செக்ரட்டரி கோர்ஸ் படித்திருக்கிறாய். தைரியாமாய் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணு.. வெற்றி நிச்சயம்.." என்று கூறினான்.
"உன் வாக்கு பலிக்கட்டும அண்ணா, அம்மாவுக்கு நான உன்னைப் போல் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று ஆசை.."
"நீதான் முடியாதுன்னு சொல்லிட்டாயே.."
"அது எவ்வளவு நல்லதாகப் போய் விட்டது பார்த்தாயா..? டிகிரி படிக்கும்போதே ஈவினிங் டயத்தில் எல்லா கோர்ஸையும் படிக்க முடிந்தது. இப்போ நான் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் அது எவ்வளவு உதவுகிறது பார்த்தாயா அண்ணா.."
"இப்பவும் சொல்றேன் சித்திக்கு உடம்பு சரியில்லாமல் போனால் நீ வேலைக்குப் போய்த்தான் குடும்பத்தைப் பார்த்துக்கணும்கிற அவசியமில்லை.. நான் நல்ல வேலையில் இருக்கிறேன். என் அப்பா, அம்மா இருக்கிறார்கள்.. நீ என் தங்கை சந்தியா.. நாங்கள் உன்னைக் கைவிட்டு விடுவோமா..?"
"அண்ணா! அம்மா, பெரியம்மாகிட்ட என்ன சொன்னார்களோ.. அதைத்தான் நான் உன்னிடமும் கேட்கிறேன். எனக்கு அண்ணனாக இரு.. ஒரு தோழனாக இரு.. நான் சோர்ந்து போனால் தாங்கிக் கொள்ள தோள் கொடு போதும். நான் அன்னத்தின் மகள். யாருக்கும் பாரமாக வாழ மாட்டேன்."
"ஏய்.. அசடு.. இதுக்குப் போய் இவ்வளவு சீரியஸா ஆவாங்களா..? இப்ப என்ன நீ உன் காலில் நிற்கணும் அவ்வளவுதானே.. நீ வேணும்னால் பார்.. நாளைக்குப் போகும் இன்டர்வியூவில் நீ நிச்சயம் சக்ஸஸ் பண்ணுவ. 'அண்ணா இந்தா ஸ்வீட்'ன்னு எனக்குக் கொண்டு வந்து கொடுப்ப.."
பிரதீப்பின் மன நிம்மதிக்காக சந்தியா புன்னகைத்தாள். மனம் மட்டும் 'மறுநாளைய நேர்முகத் தேர்வில்  அவள் வெற்றி பெறுவாளா..?' என்ற எண்ணத்திலேயே உழன்றது.

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -4
அக்கினிப் பறவை -4
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy