அக்கினிப் பறவை -14

1 4 மதியச் சாப்பாட்டு நேரம் முடிந்து சோம்பலான தூக்கம் கலந்த பின் மதிய வேளை. இனி இரவு கடைக்கான வேலைகளை மாலை ஆறு மணி அளவில் துவக்கினால்...


14

மதியச் சாப்பாட்டு நேரம் முடிந்து சோம்பலான தூக்கம் கலந்த பின் மதிய வேளை. இனி இரவு கடைக்கான வேலைகளை மாலை ஆறு மணி அளவில் துவக்கினால் போதும். பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டுக் கடையைப் பெருக்கி விட்டுக் கனகம் விடை பெற்றுச் சென்று விட்டாள். ஆடியபாதம் தேவையான முன் வேலைகளைச் செய்து விட்டுச் சென்று விட, அன்னம் வாசல் கதவை மூடிவிட்டு உள்ளே வந்தாள். நாற்காலியில் கிடந்த சந்தியாவின் துவைத்து உலர்ந்த துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்தபோது வாசல் கதவு தட்டப்பட்டது. சென்று திறந்தாள். சந்தானலட்சுமி நின்று கொண்டிருந்தாள்.
"வா சந்தானம். இப்பத்தான் வழி தெரிஞ்சதா..? உள்ளே வா.." என்றவள் சந்தானலட்சுமி உள்ளே வந்தவுடன் கதவை மூடிவிட்டு வந்து சமையலறைக்குச் சென்றாள். சந்தானம் பின் பக்க அறையில் அமர்ந்து அன்னம் மடித்துக் கொண்டிருந்த சந்தியாவின் துணிகளைத் தொடர்ந்து மடிக்க ஆரம்பித்தாள். இரண்டு தம்ளர்களில் காபியுடன் வந்த அன்னம் சந்தானலட்சுமியிடம் ஒரு காபி தம்ளரைக் கொடுத்து விட்டு எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அதற்குள் சந்தியாவின் துணிகளை மடித்து விட்டிருந்த சந்தானலட்சுமி காபியைக் குடித்தவாறு அன்னத்தைப் பார்வையால் ஆராய்ந்து கொண்டிருந்தாள். தோழியின் துளைக்கும் பார்வையைக் கண்டும் காணாதவள் போல் காபியை குடித்து முடித்த அன்னம்,
"என்னடி பார்வையால் என்னை பொத்தல் போடறே. என்ன விஷயம்.." என்று வினவியபடி சந்தானலட்சுமி கொடுத்த காலி தம்ளரையும் அவள் குடித்த தம்ளரையும் பாத்திரம் கழுவும் இடத்தில் போட்டு விட்டு அமர்ந்தாள்.
"சந்தியா சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாயாம். அவளும் வேலைக்குப் போய் நான்கு மாதங்களாகி விட்டது. கை நிறைய சம்பளம். 'இன்னும் பிரமோஷன் வந்தால் சம்பளம் எதிர்பார்க்காத அளவில் கூடக் கிடைக்கும் பெரியம்மா'ங்கிறாள். 'கடையை மூடிட்டு ரெஸ்ட் எடும்மா'ன்னு அவள் கெஞ்சினால் விதண்டாவாதம் பேசுகிறாயாம். இது என்ன பிடிவாதம் அன்னம். சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நீ தெம்பாக ஆரோக்கியமாக இருந்தால் தான் சந்தியாவிற்கு துணையாக இருக்க முடியும். இதுவரைக்கும் நீ உழைச்சதில் அர்த்தமிருக்கு.. இப்போதுதான் உன் குறிக்கோள் நினைவேறிருச்சே.. இனிமேல் யாருக்காக நீ இந்த ஓட்டம் ஓட வேண்டும்..? உன் ஓட்டத்தையும் உழைப்பையும் நிறுத்து அன்னம். இனி உன் உடம்பு இந்த உழைப்பைத் தாங்காது. நீ நினைத்ததை சாதிச்சுட்டே. சந்தியாவைப் படிக்க வைச்சு ஆளாக்கி அவளோட சொந்தக் காலில் நிற்க வைச்சுட்டே. நீ கனவு கண்டது போல அவளும் சுயமாய் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாள். இனிமேலும் ஏண்டி நீ இறக்கை கட்டிக் கிட்டுப் பறக்கிற..? அவ குழந்தைடி.. உனக்கு ஏதாவது ஒண்ணு ஆகிட்டா அந்தக் குழந்தை மனசு தாங்காதுடி அன்னம். நீ ஓய்வெடுக்க ஆரம்பி.."
"சந்தானம் அவள் குழந்தைன்னு நீயே உன் வாயால் சொல்லிட்டே. அவளுக்கு தான் புரியாது. உனக்குமா என் வேதனையும், தவிப்பும் புரியலை..?"
"எதைச் சொல்கிறாய்டி..? வேலை நிரந்தரமாகனும்னு நீ சந்தியாவிடம் சொன்னதைச் சொல்கிறாயா..? அன்னம் சந்தியாவுக்கு எக்ஸ்ட்ரா குவலிபிகேஷன் நிறைய இருக்கு. ஊரில் இருக்கிற அத்தனை கோர்ஸையும் நீ படிக்க வைச்சிருக்கிற.. அவ தகுதிக்கு இந்த வேலை போனாலும் ஆயிரம் வேலை உடனுக்குடன் கிடைச்சிடும். அவ சம்பாதிக்கிறது நிற்காதுடி அன்னம். நீ உட்கார்ந்து சாப்பிடு."
"சந்தானம். நான் அவளைப் படிக்க வைச்சது வேலைக்கு அனுப்பினது அவளுடைய எதிர்காலத்தின் நன்மைக்காக.. அவ தன் காலில் நிற்கணும்கிறதக்காக.. எனக்கு வந்த அவல நிலை என் பெண்ணுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக.. அவள் சம்பாத்தியத்தில் நான் உட்கார்ந்து சாப்பிடணும் என்பதற்காக இல்லை."
"எனக்குப் புரியலை அன்னம். நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குப் புரியலை. அம்மா, பொண்ணுக்கிடையே ஈகோ எதுக்குடி..?"
"சந்தானம். என்னடி இப்படிச் சொல்றே. என் பொண்ணு கிட்ட நான் ஈகோ பார்ப்பேனா..? என்னைப் புரிந்துக் கிட்டது இவ்வளவுதானா..?"
"மன்னிச்சுக்கடி அன்னம் நீதான் என் மரமண்டைக்கு புரிவது மாதிரி உடைச்சுப் பேசி விடேன். நீ என்னதான் நினைக்கிறாய்..?"
"எனக்கு நேர்ந்த கதி என் பெண்ணுக்கு நேர்ந்து விடக் கூடாது. நாலு சுவருக்குள் அடைபட்டு வெளியுலகம் தெரியாமல் என் வாழ்க்கையை நான் தோற்ற மாதிரி என் பெண்ணும் கிணற்றுத் தவளையாக இருந்து ஏமாந்து விடக் கூடாது. எனக்குத் தோள் கொடுக்கவும், பாதுகாப்பு கொடுக்கவும், வழி காட்டவும் நீயும் உன் குடும்பமும் இருந்தீங்கடி. நீங்கள் எல்லோரும் இல்லாவிட்டால் என் கதி என்ன ஆகியிருக்கும்..? உழைக்க ஆயிரம் வழி இருக்கலாம். ஆனால் மரியாதையோடு வாழ வேண்டாமா அதைத்தான் என் பெண்ணுக்கு தேடிக் கொடுத்தேன். சந்தயா பெண் சிங்கம் சந்தானம். எந்தச் சூழ்நிலையையும் சந்திப்பாள். எல்லாவற்றையும் ஜெயித்து வந்து விடுவாள். எனக்கு வேண்டியது அதுதான். அதை விட்டு விட்டு அவ சம்பாதிப்பா அவகாசில் நான் உக்காந்து சாப்பிட்டு உயிரை வளத்துக்கலாம்னு நினைச்சு அவளை ஆளாக்கலை சந்தானம்."
"பாத்தியா.. இப்பத்தானே என் பொண்ணு கிட்ட நான் ஈகோ பார்ப்பேனான்னு கேட்டே..? இப்ப இப்படிப் பேசுறயே. அவ இதைக் கேட்டால் தாங்குவாளா..?"
"எனக்கும் தெரியும்டி. அதுதான் உன்கிட்ட என் மனசைத் திறந்து சொல்றேன். உன்கிட்ட சொல்லாம நான் யார் கிட்ட சொல்லுவேன்..? சொல்லு.."
தோழியின் வார்த்தைகளில் மனம் நெகிழ்ந்த சந்தான லட்சுமியின் கண்களில் நீர் தளும்பியது.
"என் கிட்டத்தான் சொல்லணும். என்கிட்ட உன் மனச்சுமையைப் பூராவும் இறக்கி வைச்சுடுன்னுதானே நான் சொல்றேன். இன்னும் ஏன் மனசில் போட்டுக் குமைஞ்சுக்கிட்டு இருக்கே. உன் உடம்பு இருக்கும் நிலை உனக்குத் தெரியாதுடி. அது தெரிந்தால் நீ இப்படிப் பேச மாட்டாய். அது எங்களுக்கும் உன் பெண்ணுக்கும் தான் தெரியும். அதனால் தான் அவ இந்தப் பாடுபடறா.."
"எனக்கும் தெரியும் சந்தானம்.." அன்னத்தின் அமைதியான பதில் சந்தான லட்சுமியை அலற வைத்தது.
"என்னடி தெரியும் உனக்கு..?"
"எனக்கு வந்திருக்கிறது இதய நோய்ன்னு தெரியும்.."
"அடிப்பாவி! எப்படிடீ... உனக்குத் தெரிஞ்சது..?"
"சந்தியா இல்லாத சமயம் எனக்கு நெஞ்சு வலி வந்திருச்சு. என்னோட மெடிகல் ரிப்போர்ட்டை எடுத்துக் கிட்டு நானாக வேற ஒரு டாக்டர்கிட்டப் போனேன். அவர் தான் எனக்கு வந்திருக்கிறது இதயநோய்ன்னு சொன்னார்."
"உன்கிட்ட நேராவே சொன்னாரா..? அப்படிச் சொல்லலாமா..? தெய்வமே!"
"அவர் மேல் தப்பில்லை சந்தானம். 'யாரும் உங்க கூட வரவில்லையா'ன்னு கேட்டார்."
"'நான் யாருமில்லாத அநாதை'ன்னு சொன்னேன் அதனால் வேறு வழியில்லாமல் என் நோயைப் பற்றி என்னிடமே சொன்னார்."
"ஏண்டி பாவி அப்படிச் சொன்னே..?"
"என் புருசனைப் பத்தித்தான் முழுசாத் தெரிஞ்சுக்காம கோட்டை விட்டுட்டேன். என் நோயைப் பத்தியாவது எனக்கு முழுசாத் தெரிய வேண்டாமா..?"
"தெரிஞ்சுக்கிட்ட இல்ல.. அப்புறம் ஏன்டி பிடிவாதம் பிடிக்கிறே. உன் உயிரோடு ஏன் இந்த விளையாட்டு விளையாடறே. அந்தப் பச்சை மண்ணை ஏன்டி பரிதவிக்க விடறே. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவ தாங்குவாளா..?"
"இப்போத்தான் அவளை பெண் சிங்கம்ன்னு சொன்னேன். நீ பச்சை மண்ங்கிறே.. அவ ஜெயிக்கப் பிறந்தவடி."
"உன்னைத் தோற்ற பின்னாலே அவ எதை ஜெயித்து என்ன பண்ண..?"
"வாழ்க்கை பூராவும் அம்மா கூடவே வரமாட்டாள்ன்னு அவளுக்குப் புரிய வைடி.."
"அதுதான் ஏன்..? அன்னம். உன் உயிரை நீயே குறைச்சுக்கணும்னு ஏண்டி கங்கணம் கட்டிக்கிட்டு நிற்கிறே..?"
"இருந்து என்ன செய்யப் போகிறேன் சந்தானம். சந்தியாவிற்கு நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாகி விட்டது. என் வேலை முடிந்து விட்டது. இனிப் போக வேண்டியதுதானே..?"
"எல்லாக் கடமையையும் முடிச்சிட்டயா..? சந்தியாவிற்கு கல்யாணம்ன்னு ஒன்னைப் பண்ணி வச்சிட்டயா.. பொறு.. நகை வாங்கி வச்சிட்டேன்னு சொல்லாதே. நீ கெட்டிக்காரி. ஐம்பது பவுன் நகையைச் சேர்த்துட்ட.. அதை என் கிட்ட கொடுத்து வைக்கும்போது 'இது சாப்பாட்டுக் கடை ஆளும் பேரும் வந்து போற இடம். நம்ம கிட்ட இருந்தா பத்திரமா இருக்கும்ன்னு நினைச்சுக் குடுக்கிறா'ன்னு தான் வாங்கி வச்சேன். உன் மனசில் இந்த சூதுவாது இருக்கும்ன்னு நினைச்சு வாங்கி வைக்கலை அன்னம் நீ பறக்கத் துடிக்கற. அதனால் சந்தியாவின் பொறுப்பை என்கிட்டக் கொடுக்கிறன்னு தெரியாமல் போச்சேடி. பாவி. ஏண்டி இப்படிப் பண்ற..?"
"சந்தானம். நான் போகணும்னு ஆசைப்படறேண்டி. சந்தியா ஆசைப்பட்டால் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வை. இல்லைன்னா அவ விருப்பப்படி விட்டு விடு."
"இது வேறயா..? ஏண்டி இன்னைக்கு நல்ல வார்த்தையே பேசக்கூடாதுன்னு தீர்மானம் பண்ணி யிருக்கியா கல்யாணமகிறது எவ்வளவு பெரிய விஷயம். பெத்தது ஒத்தப் பொண்ணு.. அது கல்யாணம் வேணாம்னால் விட்டு விடணுமாம். புத்திக் கித்திக் கெட்டுப் போச்சா உனக்கு. அறிவு கெட்டவளே!"
"கல்யாணம்தான் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கைல ஒரு குறிக்கோளா..? அதுதான் பெரிய விஷயமா..? போடி முட்டாள். என் கல்யாணத்துக்கு எங்கண்ணன் விக்காததை எல்லாம் வித்துக் கல்யாணம் பண்ணி வச்சார். தாய், தகப்பனில்லா பொண்ணுங்கற குறை தன் தங்கச்சிக்கு தெரிய கூடாதுன்னு மாஞ்சு, மாஞ்சு சீர் செஞ்சார். கடைசியில் என் கதி என்ன ஆச்சு..? என் கல்யாணம் என்னை வாழ வைச்சதா..? கடைசி வரைக்கும் நானும் என் பெண்ணும் வாழக் கூரைக் கொடுத்ததா..? எனக்குக் கல்யாணத்துக்கு செலவழிச்ச பணத்தை எங்கண்ணன் என் பேரில பிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வச்சிருந்தாருன்னு வை. என் காலம் பூராவும் அந்த வட்டிக் காசில் நான் உட்கார்ந்து சாப்பிட்டிருப்பேன். போடி நீங்களும் உங்கள் கல்யாணமும்."
"எல்லோருடைய கல்யாணக் கதையும் உன் கதை போலவே இருக்குதா அன்னம்..? இப்ப என்னையே எடுத்துக்க.. என் தாய், தகப்பன் வசதியில்லாதவங்க.. உங்கண்ணன் உனக்கு செஞ்ச சீர் வரிசையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடச் செய்யலை. பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைத்துத்தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்கள். பிரதீப் அப்பா என்னைச் சீரும், சிறப்புமாக வாழ வைக்கலையா..?"
"ஒரு பெண்ணுக்கு கல்யாண வாழ்க்கை அமையறது அவள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததுன்னு ஆகிப் போயிருச்சு. கல்யாண வாழ்க்கையில் வெற்றி வருமா தோல்வி வருமான்னு யாராலும் சொல்ல முடியாது. ஆனால் சந்தானம்.. ஜெயித்தால் சந்தோஷம் இரண்டு பேருக்கும், தோற்றால் துக்கம் பெண்களுக்கு மட்டும்தான் கிடைக்குது."
"அதனால் உன் பெண்ணுக்கு கல்யாணமே தேவை யில்லைன்னு நினைக்கலாமா..?"
"நான் அப்படிச் சொல்லலை சந்தானம். சந்தியா அவ கல்யாணத்தை அவளே முடிவு பண்ணட்டும். அவளோட கணக்குத் தப்பாது. நல்லது கெட்டதை அவளே அலசி ஆராய்ந்து முடிவு பண்ணட்டும். நான் வாழ்க்கையில் தோற்றுப் போனவ. அவ கல்யாணத்தை முடிவு பண்ண நான் இருக்கணும்னு அவசியமில்லை."
"நீ போறதிலேயே குறியாயிரு. ஏண்டி இப்படி எங்களைப் பாடாய் படுத்தற..?"
"ஏன்னா.. ஏன்னா.. நான் அந்தப் பாடு பட்டுக்கிட்டு இருக்கேன்டி.. பாடாய்ப் பட்டுக்கிட்டு இருக்கேன். சந்தானம்... நான் உன்னை ஒண்ணு கேட்கிறேன் பதில் சொல்லு. எனக்கு இந்த நோயில்லைன்னு வை. 'நான் கடைசி வரைக்கும் சம்பாதிக்கிறேன். நீ உட்கார்ந்து சாப்பிடு'ன்னா சந்தியா கேட்பாளா..?"
"என்னடி இது.. அவளோட வேலை அவளோட அடையாளம்டி. அதை எப்படி விடுவா..?"
"ம்ம்.. அதையேதான் நான் சொல்றேன். இது என் வேலை. என்னோட அடையாளம். இதை எப்படி நான் விடமுடியும்..? சந்தானம். என் வாழ்க்கையில் நான் தோத்துப் போய் அநாதையாய் பெண் குழந்தையோடு வெளியே வந்தப்போ எனக்குத் தாலி கட்டின மனுசன் சொன்னான். 'நீ படிக்காத முண்டம்டி.. எப்படிப் பிழைப்பேன்'னு. அப்ப எனக்கு வாழ வழி காட்டினது இந்தத் தொழில்டி. இப்போ நான் இரண்டு பேருக்குச் சம்பளம் கொடுக்கிற முதலாளி. என்னோட சமையலுக்கு எத்தனை ரசிகர்கள் தெரியுமா..'அம்மா உணவகம்' இந்த ஏரியாவில் பேமஸ். என்னுடைய இந்த அடையாளத்தை விட்டு விட்டு என்னை இந்தப் பூமிக்கு பாரமாக வாழச் சொல்கிறாயா..?"
இந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறுவாள் சந்தான லட்சுமி. கவிதைகளில் மனதைப் பிழிய வைத்து அதில் தேசப்பற்றை சுடேற்றி வைத்த எட்டயபுரத்து மீசைக் கவிஞனே.
'சொல்லடி சிவசக்தி! நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ..'
என்று புலம்பியிருக்கிறானே. இந்த அன்னம் புலம்பு வதில் ஆச்சரியமென்ன இருக்கிறது. ஆனால்...
"நீ நோயாளி அன்னம்.."
"என்னோட இப்போதைய சந்தோசமே அதுதாண்டி."
"அடிப்பாவி என்னடி இப்படிச் சொல்லுற..?"
"பதறாதே சந்தானம். இத்தனை நாள் என் உயிரை எடுக்க நாள் குறிக்காத கடவுள் இப்போ குறிச்சிருக்கான்னா அவன் எவ்வளவு கருணையானவன் பார்ததாயா..? சந்தியாவை வளர்த்து ஆளாக்கிவிட்டேன். வேலை முடிஞ்சாச்சு. இனிப் போக வேண்டியதுதான்."
"அன்னம். என் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டாதேடி."
"அழுகாதே சந்தானம். இத்தனை நாள் என் நெஞ்சில் தான் நெருப்பு எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு.. என் பெண்ணை தவிக்க விட்டுறக்கூடாது. அடுத்தவர்கிட்ட கையேந்தி நிற்கிற நிலை அவளுக்கு எந்தக் காலத்திலும் வந்துவிடக் கூடாதுங்கிற வைராக்கியத் தீ எரிந்துகிட்டு இருந்தது. அந்தத் தீயில் என் அடி மனசின் ஆழத்தில் இருந்த அந்த மனுசனின் நினைப்பு அமுங்கிப் போயிருந்தது. இப்பக் கடமை முடிஞ்சதும் அந்த நினைப்பு மேலே வருது சந்தானம். என்னால் தாங்க முடியலையே. உன் உயிரையே அந்த ஆள் மேல் வைச்சிருந்தேனடி. அரை நிமிசத்தில் என் ஆவியை குடிச்சுப் புட்டானே. நான் இருந்து என்ன செய்யப் போகிறேன்டி. இந்த வேலையை நிறுத்தாமல் செய்தால்தான் என்னால் அவனை மறக்க முடியும். நிறுத்தினேன்னு வை. யோசிக்க ஆரம்பிச்சுருவேன். அந்த யோசனையில் இன்னும் கொஞ்ச நாள் இருக்கப் போற உயிர் கூடப் பொட்டுன்னு போயிடும். நான் சும்மா இருக்கக் கூடாது. சந்தானம் என்னை வேலை செய்ய விடு. அந்தப் பாவியை அவன் செய்த துரோகத்தை மறக்கவிடு. நினைக்க வைக்காதே.."
பொங்கி எழுந்த அன்னத்தின் உணர்வுகளை சுனாமிப் பேரலையாக சந்தானத்தை அடித்துச் சென்றது. அதில் மூழ்கிப்போன இரு தோழிகளும் எத்தனை நேரம் அப்படியே அமர்ந்து இருந்தார்களோ.. தெரியாது.. வாசல் கதவு தட்டப்பட உணர்வு பெற்று எழுந்தார்கள். கண்களைத் துடைத்துக் கொண்ட சந்தானலட்சுமி சென்று கதவைத் திறந்தாள். சந்தியா நின்று கொண்டிருந்தாள்.
"எப்போ பெரியம்மா வந்தீங்க..?"
"மதியமே வந்திட்டேன். உள்ளே வா.."
"அம்மா என்ன சொல்றாங்க பெரியம்மா.. பேசியிருப்பீங்கல்ல..?"
"அவளை அவ வழியிலேயே விட்டுவிடு சந்தியா. இருக்கிற காலம் வரை நிம்மதியாக இருக்கட்டும்.."
சந்தானலட்சுமி உள்ளே சென்று விட சந்தியா திகைத்து நின்றாள். அப்படியானால்.. அம்மாவின் நிம்மதி வேலை செய்வதில்தான் இருக்கிறதா..? சந்தியாவின் நிம்மதியில் இல்லையா..? அம்மா..? மனம் அரற்ற அவள் அசையாது அங்கேயே நின்றாள்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -14
அக்கினிப் பறவை -14
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-14.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-14.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy