அக்கினிப் பறவை -13

13 காமராஜர் அரங்கின் வெளியே காரை நிறுத்தினான் ஆதித்தன். விளக்குகளின் ஒளிச்சிதறலில் சொர்க்கலோகம் போல் மின்னிக் கொண்டிருந்தது இரவு நேர ...


13

காமராஜர் அரங்கின் வெளியே காரை நிறுத்தினான் ஆதித்தன். விளக்குகளின் ஒளிச்சிதறலில் சொர்க்கலோகம் போல் மின்னிக் கொண்டிருந்தது இரவு நேர சென்னை மாநகரம். காமராஜர் அரங்கின் வி.ஜ.பி.க்களுக்கான நுழைவாயிலின் வழியே உள்ளே நுழைந்தான் அவன். ஆதித்தனின் நெருங்கிய நண்பர் ஒருவர் திரைப்படத் தயாரிப்பாளர். அவரது புதிய படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட் வெளியீட்டு விழாவிற்கு அவனுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். 
தனிமை சூழ்ந்த அவனது வாழ்வின் சூன்யம் பிடித்த மாலை நேரங்களை இது போன்ற ஜனரஞ்சகமான பொழுதுபோக்குகளில் கழித்துவிட்டு பின்னிரவில் வீடு திரும்பி உறங்கி விடுவது அவன் வழக்கம். உள்ளே சென்றவன் முன் வரிசை சீட்டுக்களில் ஒன்றில் அமர்ந்தான். மேடையில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. யாரோ... யாரோ ஒருவரை புகழ்ந்து பேச இவன் அசிரத்தையாய் சுற்றிலும் வேடிக்கை பார்த்தான்.
அவன் அமர்ந்திருந்த வரிசையில் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியைக் கண்டதும் அவன் முகம் சுருங்கியது. அந்தப் பெண்மணி கையில்லாத ரவிக்கை அணிந்து வட மாநிலப் பெண் போல் தோற்றம் அளித்தாள். அவளது இடப்பக்கம் அமர்ந்திருந்த வட இந்தியர் அவளது தோளைச் சுற்றி கை போட்டிருந்தார். வலது பக்கம் ஆணும், பெண்ணுமாய் அந்தப் பெண்ணின் ஜாடையில் இளம் வயதினர் இருவரும் அமர்நதிருந்தனர். 
அவர்களது பேச்சிலிருந்து அவர்கள் அந்தப் பெண்மணியின் கணவரும், பிள்ளைகளும் என்பது தெரிந்தது. கணவனின் ஜோக்கிற்கு 'கலகல'வென நகைத்த வண்ணம் திரும்பிய அந்தப் பெண்மணியின் முகம் அவனுக்கு மிகப் பரிச்சயமானது போல் அவனுக்குத் தோன்றியது. அந்தப் பெண் பார்ப்பது போலத் தோன்றியதும் பார்வையைத் திருப்பிக் கொண்டவன் மீண்டும் அவளது நகைப்பொலியைக் கேட்டு தன்னிச்சையாய் அவளைத் திரும்பிப் பார்த்தான். அதே நேரம் அவனைப் பார்த்த அந்தப் பெண்ணின் கண்களில் ஓர் வியப்புத் தோன்றி மறைந்தது. நிச்சயம் அந்தப் பெண் அவனுக்கு அறிமுகமானவள்.
'யாராயிருக்கும்' என்று எண்ணமிட்டபடி சேரில் சாய்ந்து அமர்ந்தான். மேடையில் கேசட்டை புகழ் பெற்ற இயக்குநர் ஒருவர் வழங்க தயாரிப்பாளர் பெற்றுக் கொண்டிருந்தார். மேடையிலிருந்து இறங்கிய ஆதித்தனின் நண்பர் அவனை நோக்கி வந்தார்.
"வெல்கம் ஆதித்தன். ரொம்ப பிஸியாயிருந்தேன். கவனிக்க முடியலை.."
"அதனாலென்ன..?"
"எல்லாம் வசதியாயிருக்கா..?"
"ரொம்ப வசதியாயிருக்கு.. கவலைப்பட வேண்டாம்."
ஆதித்தனுடன் பேசிக் கொண்டிருந்தவரின் கவனத்தை அந்தப் பெண்மணியின் நகைப்பு ஈர்த்தது. திரும்பிப் பார்த்த ஆதித்தனின் கண்களில் தீப்பொறி பறந்தது. 'கூட்டத்தின் மத்தியில் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் படி என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது..' என்று அவன் எரிச்சலுற அவனது நண்பரோ உற்சாகமாய்.
"ஓ! மிஸ்டர் அண்ட் மிஸஸ் கபூர் குடும்பத்தோடு வந்திருக்காங்களா..?" என்றபடி ஆதித்தனின் நண்பர் அந்தக் குடும்பத்தை நோக்கிச் சென்றார். 
அவர் நீட்டிய கைகளை தாராளமாய் பற்றிக் குலுக்கிய அந்தப் பெண் அவனுடன் மிகச் சரளமாய் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சு வாக்கில் திரும்பிய ஆதித்தனின் நண்பர் அவனை அழைத்தார். இவன் எழுந்து அவர்கள் அருகில் சென்றான்.
"இவர் மிஸ்டர் கபூர். இவங்கதான் மிஸஸ் கபூர்.."
"ஏன் எனக்கென்று பெயரில்லையா ராதா.."
ராதாகிருஷ்ணன் என்ற ஆதித்தனின் நண்பரது பெயரைச் சுருக்கி 'ராதா' என்று அழைத்துச் சிரித்தாள் அந்த மிஸஸ் கபூர்.
உடனே மனைவி ஏதோ பெரிய ஜோக்கை சொல்லி விட்டது போல் 'ஓஹ்ஹோ' என்று விழுந்து விழுந்து சிரித்த அந்தக் கபூர்,
"அவள் பெயரைத்தான் சொல்லி விடுங்களேன் மிஸ்டர் ராதாகிருஷ்ணன். என்ன ஹனி.. உனக்காக நான் சிபாரிசு செய்து விட்டேன். இப்போ திருப்திதானே.." என்றார் ..
அவருடன் சேர்ந்து சிரித்த ராதாகிருஷ்ணன்.
"ஆதித்தன் இவங்க மிஸஸ் பூங்கா கபூர்" என்று கூறினார்.
"என்ன இது 'பூங்கா'ன்னு ஒரு பெயரான்னு உங்க பிரண்ட் நினைச்சிடப் போறார். அப்புறம் என் பிள்ளைகளின் பெயர்கள் செடி,கொடின்னு வருமோன்னு பயந்திடப் போறார்." என்று பூங்கா என்று அறிமுகப்படுத் தப்பட்ட அந்தப் பெண் சொல்லிச் சிரிக்க, கூடச் சேர்ந்து அவள் கணவரும் சிரிக்க ஆரம்பித்தார்,
'சிரிப்பாய் சிரிக்கிறது தான் இவங்க பழக்கம் போல. என்ன பழக்கமோ.. என்ன குடும்பமோ..' என்று நினைத்தபடி கை குலுக்க நீட்டிய அவளது கைகளைப் புறக்கணித்து கபூருக்கு கை நீட்டியவனின் மனதில் இடி இடித்து மின்னல் வெட்டியது.
படாரென்று திரும்பி கையிலாத ஜாக்கெட் அணிந்து உதடுகளில் சாயம் தீட்டி தலைமுடியைக் கவனமாய் வெட்டி முதுகில் விரிய விட்டு நவநாகரிக வட இந்தியப் பெண்ணின் ஓர் அங்கமாய் நின்றிருந்த அந்த மாதை உற்றுப் பார்த்தான். 
'பூங்கா'.... பூங்காவனம்.. மலையப்பனின் மனைவியாக இருந்த பூங்காவனம்.. இவனைப் பெற்றுப் போட்டு விட்டு எவனோ ஒரு வட இந்தியனுடன் தலை மறைவாகிப் போன பூங்காவனம்.. அந்த பனையூர் கிராமத்து வீட்டின் தேவையில்லாத சாமான்கள் போடும் அறையில் கண்ணாடி நொறுங்கிய பிரேமிட்டபடத்தில் சிரித்துக் கொண்டிருந்த பூங்காவனம்.. தாயின் முகம் எப்படி இருக்கும் என்று இவன் தேம்பி அழுதபோது தியாகி தணிகாசலம் தேடி எடுத்துக் கொடுத்த படத்திலிருந்த பூங்காவனம்.. இங்கே வட இந்தியன் ஒருவனின் மனைவியாக எதிரில் நின்றாள்.
அவள் அருகில் நின்று கொண்டிருந்த இளம் வயது பெண்ணையும், இளைஞனையும் காட்டி, "மோனிகா இவங்க மகள். இது சுனில் இவங்க மகன்.." என்று அறிமுகம் செய்து வைத்தார் ராதாகிருஷ்ணன்.
"அழகான, அனவான பேமிலி.." என்று கூறி அதற்கும் பூங்கா சிரிக்க அவளது கணவர் அவளை தோளோடு அணைத்துக் கொண்டார். 
பிள்ளையும், பெண்ணும் அவளருகில் வந்து ஏதோ கேட்க கணவரின் அணைப்பிலிருந்து விலகி பெண்ணையும், பையனையும் இருகைகளாலும் அணைத்துக் கொண்டு அவள் பதில் கூறினாள்.
அவனைப் பெற்ற தாய். வேறு ஒரு மனிதரின் பிள்ளைகளுக்குத் தாயாக அவன் எதிரில் நிற்கிறாள். இந்தக் கொடுமையை அவன் எங்கே போய் சொல்வான்..? இப்படியே பூமியில் புதைந்து போனால்தான் என்ன..? தசைகள் இறுக முகத்தைத் திருப்பிக் கொண்டவன் நகரப் போனான்.
"எங்களையெல்லாம் யாருன்னு தெரிஞ்சுகிட்டு நீங்க யாருன்னு சொல்லாமப் போனால் எப்படி..?" என்ற பூங்காவனத்தின் கேள்வியில் நின்றான்.
"என் நண்பன் ஆதித்தன். மேக்னா பவர்ஸ் லிமிடெட் கம்பெனியின் ஜி.எம்." என்று அவனை அறிமுகப்படுத்தினார் ராதாகிருஷ்ணன்.
"ஓ.. இந்த இளம் வயதிலேயே ஜி.எம்மா..?" என்று கண்களை விரித்த பூங்கா அவனை உற்றுப் பார்த்தாள்.
"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.."
"நீங்க சென்னைக்கு இப்போதுதான் முதன் முதலா வந்திருக்கீங்க.. நீங்க ஆதித்தனைப் பார்த்திருக்க முடியாது மிஸஸ் கபூர்."
"நோ மிஸ்டர் ராதாகிருஷ்ணன். பூங்கா நார்த் இண்டியன் வுமனில்லை. மதராஸிதான். சுத்த தமிழ் பொண்ணு. பார்த்தோம் காதலிச்சோம். கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஹோஹ்ஹோ.." என்று கபூர் சிரிக்க இந்த முறை பூங்கா கபூரின் சிரிப்பில் கலந்து கொள்ள வில்லை. 
இறந்த காலத்தை தேடுபவளாய் எதிரில் நின்றவனை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள். மனைவியின் முகமாறுதலைக் கவனித்த கபூர் மனைவியைத் தொடர்ந்து ஆதித்தனை உற்று நோக்கினார்.
"ஓ! ஆச்சரியம் ஹனி..! இவரைப் பார்த்தால் நம்ம சுனில் மாதிரியே இல்லை. அதனால்தான் உனக்கு அவரை எங்கேயோ பார்த்தது போல் தோன்றுகிறது.."
கபூரின் வார்த்தைகளில் தூக்கி வாரிப் போட்டு தந்நிலைக்கு வந்த பூங்கா சுனிலைப் பார்த்தாள். தாயின் ஜாடையை அப்படியே எடுத்தது போல் பூங்காவின் ஜாடையிலிருக்கும் சுனிலின் ஜாடையிலேயே ஆதித்தனும் இருப்பது எப்படி..? கலங்கித் தவித்தது அவளின் இதயம். எதிரில் நின்றவனின் எரிக்கும் விழிகள் எதையோ உணர்த்த,
"உங்க சொந்த ஊர் எது மிஸ்டர் ஆதித்தன்.." என்று கேட்டாள்.
"தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க மேடம்."
"ஓஹ்ஹோ..!" என்று அவன் பெரிய ஜோக்கை சொல்லி விட்டது போல் கபூர் சிரிக்க ஆரம்பிக்க மனதிற்குள் அலுப்புடன் ராதாகிருஷ்ணன் பக்கம் திரும்பினான் அவன்.
"ஓகே. ராதா நான் வருகிறேன். பை.."
விடைபெற்றுக் கொண்டு அவன் விரைய கண்களிலிருந்து அவன் மறையும் வரை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்கா.
"அவனுடைய சொந்த ஊர் குற்றாலம் பக்கம் ஒரு கிராமம்ன்னு சொல்வான் மேடம்.." என்றார் ராதாகிருஷ்ணன்.
அதிர்ந்து போன பூங்காவின் காலடியில் பூமி நழுவியது. ஐயோ..? அவன் யாரோ ஒருவனில்லை. அவள் பெற்ற பிள்ளைதானா..? தாயறியா சூள் இல்லை. அவனைக் கண்டதும் அவள் நெஞ்சம் நடுங்கியது இதனால்தானா..?
அவளது மனப் போராட்டத்தை அறியாத கபூர்.
"என்ன ஹரி அவரைப் பற்றி நிறைய டீடெயில் கேட்கிற.. ஒரு வேளை நம்ம மோனிகாவுக்கு ஏத்த மாப்பிள்ளையாய் இருப்பாரோன்னு பார்க்கிறாயா..?" என்று கேட்டு வைக்க அதிர்ந்துபோன பூங்கா,
"நான்சென்ஸ்." என்று கத்தினாள்.
எதிர்பாராத அவளின் இந்தக் கோபத்தில் திகைத்துப் போன கபூர்..
"எதற்கு இத்தனை கோபம் ஹனி.." என்றார் புரியாத வராய்.
"நத்திங்.." என்றபடி தலையைப் பிடித்துக் கொண்டவளிடம்,
"ஆதித்தன் இஸ் வெரி ஹேண்ட்சம். இல்லைம்மா.." என்றாள் மோனிகா.. 
அவ்வளவுதான் பொறுமை எல்லை மீற படாரென்று மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள் பூங்கா. அடிபட்ட கன்னத்தை பிடித்துக் கொண்டு குழந்தையாய் நின்ற மோனிகாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நிற்க மகளை முறைத்துப் பார்த்தவள் அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றாள்.
"ஸாரி மிஸ்டர் ராதாகிருஷ்ணன். அவளுக்கு தலைவலி போல.. நாங்கள் கிளம்புகிறோம். பை" என்றபடி நிலைமையைச் சமாளித்து விடை பெற்ற கபூர் பூங்காவைத் தொடர்ந்து சென்றார். 
மோனிகாவின் தோளில் கை போட்டு சமாதானம் செய்தபடி தமக்கையை அழைத்துச் சென்றான் சுனில்.
தனது அடுக்கு மாடிக் குடியிருப்பிற்கு சென்று தன் அபார்ட்மென்டின் கதவைத் திறந்ததும் விளக்குகளைப் போடாமல் அப்படியே கதவை அடைத்து விட்டு படுக்கையறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தான் ஆதித்தன்.
'அழகான, அளவான பேமிலி..
பூங்காவனத்தின் சிரிப்பு காதுகளில் எதிரொலிக்க அதிலிருந்து தப்பிக்க முனைபவன் போல் காதுகளை மூடிக் கொண்டு தலையணையில் முகம் புதைத்துக் கொண்டான் அவன்.
மூடிய கண்களுக்குள் பிள்ளைகள் இருவரின் தோள்களிலும் கை போட்டு அணைத்தபடி தாய்மைப் பெருக்கோடு நின்றிருந்தவளின் உருவம் தெரிந்தது.
'அவர்கள் தான் நீ பெற்ற பிள்ளைகளா..? அப்போது நான்..? நான் யார்...?.. சொல்லு நான் யார்...?'
அந்தராத்மா அலற எழுந்து உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொண்டான்.
குந்திக்கு அர்ஜூனன் தானே பிள்ளை..? கர்ணன் அநாதைதானே.. கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. அந்தக் கலியுக கர்ணனின் விழிகளில். உறங்காத இரவின் ஒவ்வொரு மணித்துளியும் போராட்டமாய் நகர விடியும் போது அவன் உடல் கொதிக்க ஆரம்பித்திருந்தது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -13
அக்கினிப் பறவை -13
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy