அக்கினிப் பறவை -11

11 "அம்மா போஸ்ட்.."  வாசலில் போஸ்ட்மேனின் சத்தம் கேட்டது. கனகம் சென்று விசாரித்துவிட்டு உள்ளே வந்தா ள் . "என்ன கனக...


11

"அம்மா போஸ்ட்.." 
வாசலில் போஸ்ட்மேனின் சத்தம் கேட்டது. கனகம் சென்று விசாரித்துவிட்டு உள்ளே வந்தாள்.
"என்ன கனகம் தபாலை வாங்காமல் வர்றே..?"
"சந்தியாவுக்கு ஸ்பீடு போஸ்ட் தபால் வந்திருக்காம்மா.. கையெழுத்துப் போட்டு சந்தியாதான் வாங்கணுமாம்.." கனகம் பதில் கூற அன்னம் நிமிர்ந்து பார்த்தாள்.
கைவேலையை நிறுத்திவிட்டு, "சந்தியாவிற்கு ஸ்பீடு போஸ்ட் வந்திருக்கா..?" என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் உள்ளே திரும்பி, "சந்தியா.." என்று அழைத்தாள்.
"என்னம்மா..?" என்று கேட்டபடி சந்தியா அங்கு வந்தாள்.
"உனக்கு ஸ்பீடு தபால் வந்திருக்காம். போஸ்ட் மேன் வாசலில் காத்துக்கிட்டு இருக்கார். சட்டுன்னு போய் வாங்கிட்டு வா. அவர் நாலு இடத்திற்குப் போக வேண்டியவர்." என்று அன்னம் கூற வாசலுக்கு விரைந்த சந்தியா போன வேகத்தில் தபாலுடன் திரும்பி வந்தாள்.
"எங்கேயிருந்தும்மா தபால் வந்திருக்கு.."
"நான் இன்டர்வியூக்கு போன 'மேக்னா பவர்ஸ் லிமிடெட்' கம்பெனியில் இருந்து வந்திருக்கும்மா.." என்று சந்தியா பதில் கூறினாள். மகளின் முகத்தில் படபடப்பை உணர்ந்த அன்னம் மகளின் அருகே வந்தாள்.
"பெருமாளை மனசில் நினைத்துக்கிட்டு பிரிச்சுப் பாரு. நல்ல சேதியாகத்தான் இருக்கும். பயப்படாமல் பிரிச்சுப் படி.." என்று மகளின் தலை கோதினாள்.
தாயின் அருகாமையில் அமைதி அடைந்த சந்தியா கவரைப் பிரித்துப் படித்தாள். அவள் முகம் காலைக் கதிரவனாய் பிரகாசித்தது. ஆனந்தத்துடன் அன்னத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்,
"வெற்றி.. அம்மா.. வெற்றி.." என்று கூவினாள்.
"இது என்ன கண்ணு பழைய சினிமாவில் முதல் ஸீனில் வரும் டயலாக் மாதிரி பேசுற.." என்று கனகம் சிரித்தாள். அன்னமும் அதை ஆமோதித்து புன்னகை செய்ய சந்தியா தாயின் கன்னங்களில் முத்தமிட்டு,
"அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சும்மா. இது அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் நாளைக்கே ஜாயின் பண்ணனுமாம்.." என்று குதூகலத்துடன் கூறினாள்.
அன்னத்தின் முகம் மலர்ந்தது. அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை வாங்கிக் கொண்டு சுவாமி மாடத்துக்குப் போனவள் பெருமாள் படத்தின் கீழ் அதை வைத்து வணங்கினாள். சந்தியா உள்ளே வந்து தாயின் பாதம் தொட்டு வணங்கினாள்.
"கடவுளுக்கு முன்னால் மனிதர்களை கும்பிடக் கூடாது சந்தியாம்மா.."
"கடவுளுக்கு முன்னால் மனிதக் கடவுளைத்தான் கும்பிடுகிறேன்ம்மா.."
"ஐஸ் வைக்காமல் வா. இன்னைக்கு ரவா கேசரி பண்ணுகிறேன்."
"அம்மா எனக்கு கேசரிக்குப் பதில் ஒரு பிராமிஸ் பண்ணுங்க. அது போதும்.."
"என்னடி புதிர் போடறே.. நீயென்ன கேட்டாலும் அம்மா செய்ய மாட்டேனா. இதில பிராமிஸ் எதுக்கு.." என்று மகளின் கன்னத்தை செல்லமாய்த் தட்டியவாறு அன்னம் கூறினாள். சந்தியா தாயின் கரங்களைப் பிடித்துக் கொண்டு அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவாறு,
"நான் வேலைக்குப் போய் முதல் மாதச் சம்பளம் வாங்கினதும் நீங்க இந்தக் கடையை மூடிவிட வேண்டும். நாம் வேறு வீடு பார்த்துப் போயிடலாம்.." என்றாள்.
"அதை அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப நீ உள்ளே போய் ரெஸ்ட் எடு. இது மதிய நேரம். எல்லோரும் சாப்பிட வர ஆரம்பித்து விடுவார்கள்."
"ஊகும். நீங்க எனக்கு பிராமிஸ் பண்ணாமல் நான் விட மாட்டேன். அம்மா ப்ளீஸ். என் மனம் படும் பாடு உங்களுக்குத் தெரியாது. நான் சீரியஸா சொல்கிறேன் கேளுங்கம்மா.." என்று சந்தியா கெஞ்சினாள். அன்னம் புன்னகைத்தாள். மகளின் முதுகில் ஆதரவாய் தட்டிக் கொடுத்தவாறு,
"சந்தியா.. நீ இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது கேட்க என் மனசுக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கு. என் குழந்தை என்னை உட்கார வைத்துக் காப்பாத்துற அளவுக்கு வளந்துட்டாள்ன்னு நினைக்கும்போது நான் பட்ட பாடுக்கு பலன் கிடைச்சிருச்சுன்னு நிம்மதி வருது. ஆனா நான் உடனே கடையை மூட முடியாது." என்று கூறினாள். சந்தியா முகம் வாட, "ஏம்மா..?" என்று கேட்டாள்.
"உனக்கு இன்னும் வெளியுலகம் தெரியவில்லை சந்தியா. உனக்கு வேலை கிடைச்சிருப்பது தனியார் கம்பெனியில். இது அரசாங்க வேலையில்லை. அங்கே உனக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கணும். சம்பளத்துக்காக அவமரியாதையை சகித்துக் கொள்ளும் பெண் நீயில்லை. அப்படி ஏதாவது நடந்தால் நீ வேலையை விட்டு விடுவாய் உன்னை எனக்குத் தெரியும். நீ போகணும்னு சொன்னாலும் அப்படிப்பட்ட இடத்துக்கு நீ வேலைக்குப் போவதை நான் அனுமதிக்க மாட்டேன். என்னையும் உனக்குத் தெரியும். அங்கே எல்லாம் நல்ல படியா இருந்து நீயும் தொடர்ந்து வேலை செய்கிறேன்னு வை. அதுக்கப்புறம் உன் வேலை நிரந்தரமானதும் அதற்குக் குறைந்தது இரண்டு வருசமாவது ஆகும். அதுக்குப் பின்னாலதாண்டா. நான் என் வேலையை நிறுத்த முடியும்."
இதில் இவ்வளவு இருக்கிறதா..? கண்கள் விரிய நோக்கிய மகளின் கன்னத்தில் தட்டி விட்டு உள்ளே சென்றாள் அன்னம். சந்தியா சிந்தனைல் ஆழ்ந்தாள். வேலைக்குப் போகப் போகும் இடத்தில் பிரச்னைகள் வருமா..? இந்த சந்தியா சமாளிக்க இயலாதவளா..? அவள் மனம் உறுதியுடன் உரைத்தது. சந்தியா கட்டாயம் சமாளிப்பாள். அன்னத்தை உட்கார வைத்துக் காப்பாற்றுவாள்.
மறுநாள் காலையில் கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணி விட்டு வேலைக்குக் கிளம்பினாள் சந்தியா. அழகான வேங்கடகிரி காட்டன் புடவை. தலைக்குக் குளித்து நீண்ட பின்னலிட்டு பூச்சூடியிருந்தாள். மங்கல கரமாய் நின்றவளின் கன்னம் தொட்டு திருஷ்டி கழித்து வேலைக்கு அனுப்பி வைத்தாள் அன்னம். தாயின் பாதம் தொட்டு பணிந்து, வேலையில் சேரக் கிளம்பினாள் மகள்.
சரியான நேரத்திற்குள் அலுவலகம் சென்று விட்டாள் சந்தியா. மரியாதை நிமித்தம் எம்.டி. நாராயணனை முதலில் சந்தித்து நன்றி கூறினாள். 
பின்னர் தன் பிரிவின் மேனேஜரை சென்று பார்த்து வேலையில் சேர்வதற்கான கையொப்பம் இட்டு அன்று முதல் 'மேக்னா பவர்ஸ் லிமிடெட்'டின் ஊழியர்களில் அவளும் ஒருத்தி ஆனாள். 
மேனேஜர் ஜெனரல் மேனேஜரைப் பார்த்துவிட்டு வந்துவிடும்படி கூற ஆதித்தனின் அறைக்குச் சென்று கதவைத் தட்டி
"மே ஐ கமின் சார்" என்று அனுமதி கேட்டாள். 
"யெஸ் கமின்" என்ற ஆதித்தனின் அனுமதி கிடைத்தவுடன் உள்ளே சென்றாள்.
"குட்மார்னிங் சார்.." என்ற குரலில் நிமிர்ந்தவன் எதிரே நின்று கொண்டிருந்தவளைப் பார்த்ததும் எரிச்சலுற்றான். 
'இவளா..?' என்று பல்லைக் கடித்தவன் யோசனையின்றி,
"வரும்போது கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு வரணும்கிற மேனர்ஸ் கிடையாதா..? ஆனால் இந்த ஆபிஸில் அது தேவை.." என்று முகத்தில் அடித்தாற்போல் கூறினான்.
"சார். நான் கதவைத் தட்டினேன். நீங்கள்தான். 'யெஸ் கமின்'ன்னு சொன்னீர்கள். அதன் பின் தான் நான் உள்ளே வந்தேன்." என்று சந்தியா முகம் மாறாமல் கூற அனுமதி கேட்டது அவள் என்று அறியாமல் வரச் சொல்லி விட்ட தன் மடமையை நொந்தபடி அதைச் சுட்டிக் காட்டியவளை எந்த முறையில் நோகடிப்பது என்று சிந்தனையுடன்,
"ஓகே.." என்றான் முகத்தை கடுமையாய் வைத்துக் கொண்டு பின்னர்,
"என்ன வேண்டும். என் நேரத்தை வீணாக்காமல் சீக்கிரம் சொல்லிவிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க" என்றான். அதற்கும் முகம் மாறாத சந்தியா,
"சார் நான் இன்றைக்கு இந்தக் கம்பெனியில் ஜாயின் பண்ணியிருக்கிறேன்." என்று கூறினாள்.
"ஜாயின் பண்ணினால் வேலையைப் பார்க்க ஆரம்பியுங்கள். அதுக்கு ஏன் என் நேரத்தை வீணடிக்கிறீங்க.." என்றான் அவன் உதாசீனக் குரலில்.
"சார் நான் மேனேஜர் கிட்ட ஜாயினிங் ரிப்போர்ட் கொடுத்து விட்டேன். அவர்தான் உங்களை மரியாதைக்காக பார்த்துவிட்டு வரச் சொன்னார்." என்று அவனது உதாசீனத்தை உதாசீனப்படுத்தி விட்டுப் பதில் சொன்னாள் சந்தியா.
அவன் விழிகளோ சினத்தில் சிவந்தன.
"அவர் சொல்லாட்டி உங்களுக்கு மரியாதை தெரிந்திருக்காது. அப்படித்தானே."
"உங்களுக்குப் பிடிக்காததை நான் செய்திருக்க மாட்டேன்."
"அதாவது எனக்கு மரியாதை கொடுத்தால் பிடிக்காது. அப்படித்தானே.."
"உங்கள் நேரத்தை வீணடித்தால் உங்களுக்குப் பிடிக்காது."
பொறியில் சிக்காத எலியாய் அவள் பதிலுரைக்க அவன் இன்னும் கோபமானான்.
"ஸோ.. ஒரு ஆபிஸின் ஜி.எம்மைப் பார்க்க உங்களுக்கு மேனேஜர்தான் சொல்லிக் கொடுக்கணும். உங்களுக்கா சுயமாய் தெரியாது."
"எனக்கு சுயமாய் தெரிந்தாலும் என் மேலதிகாரி சொல்வதையும் நான் காது கொடுத்துக் கேட்கணும். அதுதானே சரி. எல்லாம் எனக்குத் தெரியும்ன்னு இருக்கக் கூடாது. சரிதானே சார்..?"
இப்போது அவள் பொறியை வைத்தாள். இதற்கு என்ன பதில் சொல்வது..? 'இல்லை. நீ சுயமாய் செயல்படு' என்று மேலதிகாரியான அவன் எப்படிச் சொல்வது..? காரணமின்றி எரிந்து விழுந்து,
"போங்க போய் வேலையைப் பாருங்க. காலங்கார்த்தாலே வந்து உன் உயிரை வாங்காதீங்க. 'வார்த்தை படிச்சவங்க வேலைக்கு உதவ மாட்டாங்க'ன்னு நான் சொன்னால் கேட்டால் தானே. பெண்ணுக்கு பெண் சப்போர்ட் பண்ணினாங்க. அந்த விமாலாவால் உங்களை வேலைக்குச் சேர்க்க வேண்டியதாகி விட்டது. இப்போ என் உயிர்தான் போகுது. போங்க.. போங்க.." என்று ஒற்றை விரலால் வெளியேறச் சொன்னான்.. 
சந்தியா புன்னகையுடன் அவன் அறையிலிருந்து வெளியே வர அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் ''வென்று திறந்தவாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆதித்தன் மேஜை மேலிருந்த முக்கியமான லெட்டர் களைப் படித்து விட்டு அதற்கு என்ன பதில் கொடுப்பது என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டு தன் செயலாளரை அழைக்க மேஜை மேலிருந்த இன்டர்காமை அழுத்தினான். கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
 "யெஸ் கமின்.." என்றபடி லெட்டரை படித்துக் கொண்டு பதிலை யோசித்தவாறு எதிரே வந்து நின்றவளைக் கவனித்ததும் மீண்டும் கடுப்பானான்
எதிரே நின்று கொண்டிருந்தது சந்தியா..!
"ஏம்மா.. நீங்க ஏன் வந்தீங்க..? ஒழுங்காய் வேலை பார்க்கற உத்தேசம் இல்லையா..?" என்று அவன் எரிந்து விழுக,
"நீங்கள்தானே சார் இன்டர்காமில் அழைத்தீர்கள். வேலை பார்க்கத்தானே வந்திருக்கிறேன்..?"
"ச்சு... நான் என் செக்ரட்டரியைத்தானே கூப்பிட்டேன்."
"நான்தானே சார் ஜி.எம்மின் பர்ஸனல் செக்ரட்டரி. அந்தப் போஸ்டில்தானே இன்றைக்குக் காலையிலிருந்து ஜாயின் பண்ணியிருக்கிறேன்.."
"சட்.." அவன் மண்டையில அடித்துக் கொண்டான். 
என்ன துன்பம் இது.. இவளைக் கண்டாலே ஆகவில்லை. ஆனால் இவளைச் செயலாளராக நியமிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இவனது செயலாளராக அவளை ஏற்றுக் கொள்ள வேண்டியது நிச்சயம் துன்பம்தான். 
கடுப்பானவன். "உட்காருங்கம்மா.. அதை வேற நான் தனியா சொல்லணுமா.. செக்ரட்டரி வேலைக்கு வந்திட்டிங்கல்ல.. உட்கார்ந்து தொலையுங்க." என்று எரிந்து விழுந்தான்.
சந்தியா வாதம் பண்ணாமல் அவன் கோபத்தை புரிந்து கொண்டவளாய் எதிரே அமர்ந்தாள். ஆதித்தன் வரிசையாக பதில்களைக் கூறிக் கொண்டே வர குறுக்கிடாமல் விரைவாய் கையேட்டில் குறிப்பெடுத்துக் கொண்டாள்.
"கம்ப்யூட்டர் தெரியுமில்லை.." என்று கேட்டவனிடம்,
'நீதானே இன்டர்வியூ பண்ணினாய்.. அதில் எத்தனை கோர்ஸ் முடித்திருக்கிறேன் என்று தெரியாதா..?' என்று மனதிற்குள் வினவிக் கொண்டவள் வெளியே பவ்யமாய்,
"தெரியும்.." என்றாள்.
"நல்லவேளை..! வாயடிக்க மட்டும்தான் தெரியுமோன்னு நினைத்தேன்."
"வேலையும் தெரியும் சார்.." என்று நறுக்கான பதிலைச் சொன்னவளை ஒரு முறை ஏற இறங்க புருவத்தை மேலேற்றியவாறு எடை போட்டவன்,
"நல்லது.. பார்க்க அழகாக இருந்தால் மட்டும் போதாது நடவடிக்கையும் ஐ மீன்.. வேலையும் நல்லாச் செய்யணும். அழகாகச் செய்யணும். புரியுதா..?" என்றான் எகத்தாளமாய்.
"ஓகே சார். ஆனால் ஒரு சந்தேகம் சார். நீங்க பார்க்க அழகாக இருக்கிறதாக யாரைச் சொன்னீர்கள் சார். என்னையா..?" என்று கேட்டாள் சந்தியா.
"அது.. சரி.. இந்தக் கேபினுக்குள் நீங்கள்தானே என் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க. அப்புறமென்ன இதில் சந்தேகம்..? என் வாயால் இன்னொரு முறை நீங்கதான்னு சொல்லிக் கேட்கணுமா..?"
அவளை மட்டம் தட்டும் வேகத்தில் அவன் பேச சந்தியா விறைப்புடன்,
"இது ஆபிஸ் சார். நீங்கள் ஜி.எம். நான் உங்கள் பெர்ஸனல் செகரட்டரி. அப்படி என்ன இங்கே அழகிப் போட்டியா நடக்கிறது..? நீங்கள்தான் ஜட்ஜா..? நான்தான் அதில் கலந்து கொள்பவளா..? அழகைப் பற்றிய பேச்சு இங்கே எதற்கு..? உங்கள் ஜி.எம். போஸ்டிற்கு இது அழகில்லை சார். ஜி.எம். என்ற முறையில் என் வேலையைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். திட்டுங்கள். நான் கேட்டுக் கொள்கிறேன். அழகைப் பற்றிப் பேச வேண்டாம். அத்தோடு ஒருவரை அழகு என்று உருவத்தைப் பார்த்து எப்படி சார் சொல்ல முடியும். உள்ளத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டும் சார்.. என்னைக் கேட்டால் ஐஸ்வர்யாராயைவிட அன்னை தெரஸாதான் அழகு என்று சொல்வேன். இனி இந்த மாதிரிப் பேச்சுக்களை நாம் தவிர்த்து விடலாம சார்.." என்று கூறியவள் எழுந்து வெளியே சென்று விட்டாள்.
ஆதித்தன் அசையாமல் ஆணி அடித்தது மாதிரி அமர்ந்து விட்டான். முதல் முறையாக அவனை எதிர்த்து வாதாடும் அந்தப் பெண்ணின் மேல் எரிச்சல் போய் மரியாதை வந்தது. அவளது வார்த்தைகளில் இருந்த உண்மையை அவனது நெஞ்சம் ஏற்றது. 
அழகென்று சொன்னால் முகம் மலரும் மனிதரிடையே 'எது அழகு..? என் முகமா இல்லை அகமா..?' என்று கேட்டு விட்டுச் சென்று விட்டாள். 
அவனது இருபது வயதிலிருந்து இந்த இருபத்தியெட்டு வயது வரை அவன் சந்தித்த பெண்கள் அவனது அழகான தோற்றத்தில் ஈர்க்கபட்டிருக்கிறார்கள். அதன் பின் அவனது முள்ளான சுபாவத்திற்கு அஞ்சியே தள்ளி நின்றிருக்கிறார்கள். தாயின் வெகுமதியான அவளது அழகான தோற்றத்தில் தானிருப்பதை எண்ணி அவன் மனம் நொந்திருக்கிறான். அதுதானே அவனது தந்தையை அவனை விட்டுப் பிரிய வைத்தது..
தனது அழகிய முகத்தை கண்ணாடியில் பார்க்கக்கூட அவன் விரும்ப மாட்டான். எவ்வளவு தெளிவு அவளிடம்..? என்னவென்று கூறினாள்..? 'உருவத்தைப் பார்க்காதே உள்ளத்தைப் பார்
யார் பெண்ணே அவ்வாறு பார்க்கிறார்கள்..? முகத்தை வைத்துத்தானே எல்லோரும் அடையாளம் காணப் படுகிறார்கள். மனதை யார் பார்க்கிறார்கள்..
ஆதித்தன் வியப்புடன் அவள் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தான். ஏனோ அவன் நெஞ்சில் ஆண்டாண்டு காலமாய் அழகிய பெண்கள் மீது இருந்த வன்மம் குறைந்து ஏதோ ஓர் இதம் அவன் நெஞ்சில் பரவியது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -11
அக்கினிப் பறவை -11
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkinipparavai-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy