அக்கினிப் பறவை. -3

3 ' அம்மா உணவகம் ' என்ற சிறிய பெயர் பலகை தொங்கிய அந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த இரு அறைகளில் ஒன்றில் கட்டிலில் படுத்துக் ...


3

'அம்மா உணவகம்' என்ற சிறிய பெயர் பலகை தொங்கிய அந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த இரு அறைகளில் ஒன்றில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த அன்னம் தளர்வாக அழைத்தாள்.
"சந்தியா.." அவளது அழைப்iக் கேட்டதும் அடுத்த அறையிலிருந்த சந்தியா அவசரமாய் அன்னையின் அருகே வந்து அவள் முகத்தின் நேராகக் குனிந்து கேட்டாள்.
"என்னம்மா.. என்ன வேண்டும்..?"
"தாகமாக இருக்கிறதம்மா.. தண்ணீர் குடு."
"பொறுங்கம்மா.. நான் வெந்நீர் எடுத்து வருகிறேன்." என்று கூறிவிட்டு அவசரமாய் சமையலறைக்குச் சென்ற சந்தியா தம்ளரில் வெந்நீர் கொண்டு வந்தாள்.
"இந்தாங்கம்மா குடியுங்கள்." என்றவள் அன்னம் எழுந்து கொள்ள சிரமப்படுவதைப் புரிந்து கொண்டு அருகிலிருந்த ஸ்டூலில் தம்ளரை வைத்து விட்டு அன்னையின் உதவிக்குச் செல்ல முயன்றாள். மகளை சைகையில் தடுத்து விட்டு அன்னம் தளர்வாய் எழுந்து படுக்கையில் அமர்ந்தாள். 
தலையணையை எடுத்து சரிந்து அமர்ந்திருந்த அவளின் முதுகிற்கு அணைவாய் வசதியாய் உயர்த்தி வைத்த சந்தியா தம்ளரில் கொண்டு வந்திருந்த வெந்நீரைக் கொடுத்தாள். மெதுவாய் அதை வாங்கிப் பருகிய அன்னையின் பொழிவிழந்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவிற்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. அன்னம் தம்ளரை திருப்பிக் கொடுத்து விட்டு மீண்டும் படுக்க முயல அவளது தலையணையை எடுத்து வாகாய் வைத்து அவள் படுத்துக் கொள்ள உதவி செய்த சந்தியாவிற்கு அன்னையின் சோர்ந்த முகத்தைக் கண்டு நெஞ்சு பிசைந்தது.
அன்னத்தின் முகம் முந்நாளில் இப்படியா இருந்தது..? முகம் பார்க்க அறிந்த குழந்தைப் பிராயத்திலிருந்து சந்தியா அறிந்த தாயின் முகம் நினைவில் நிழலாடியது. மூக்குத்தி மினுமினுக்க முகத்தில் ஒரு ஜ்வலிப்பு தொனிக்க கனிவோடும் தாய்மையோடும் அவள்  சந்தியாவைப் பார்க்கும்பொழுது கோவிலில் கர்ப்பகிரஹத் துககுள் வீற்றிருந்த அம்மன்தான் வெளியே வந்து தன் தாயாக நடமாடிக் கொண்டு இருக்கிறாளோ என்று சந்தியா பிரமிப்பாள்.
மகளைக் காணும்போது கண்களில் மின்னும் கனிவு கணவனைக் கண்டதும் காதலாக மின்னும். தயானந்தனின் முகம் பார்த்த நிமிடத்தில் மலரும் தாயின் முகத்தை எத்தனை நாள் ஆச்சரியத்துடன் பார்த்திருப்பாள் சந்தியா..? கண்களில் மையலும் நடையில் ஒயிலும் சேர அவள் தயானந்தனிடம் காதலுடன் பேசும்போது தன் மகளைக்கூட மறந்து விடுவாள். கணவனின் மேல் உயிரையே அல்லவா வைத்திருந்தாள்! கடமைக்காக வாழ்ந்திருந்தால் அன்னம் இப்படி நைந்து படுக்கையில் விழுந்திருக்க மாட்டாள். காதலாய் அல்லவா வாழ்ந்து விட்டாள்..?
தயானந்தனும் அன்னதிற்கு சளைத்தவனல்ல.. அன்னத்தையே சற்றிச் சுற்றி வந்தான். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது மனைவிக்கு மலர்ச்சரம் வாங்காமல் அவன் வந்ததில்லை. மாதச் சம்பளம் வந்தவுடன் புதுச் சேலை வாங்கித் தராமல் இருந்ததில்லை. வருடாந்திர போனஸ் வந்தால் அடுத்த நாளே அன்னத்தின் கழுத்தில் புதுநகை மின்னும். மகள் பிறந்த பின்னும் மனைவிக்கு அடுத்தே மகளைக் கொண்டாடியவன் அவன். மனைவியையும், மகளையும் இரு கண்களாகவே பாவித்தான். 
யார் கண் பட்டதோ தெரியவில்லை. தயானந்தனின் பார்வை திசை மாறியது. மாறிய காலத்தைப் புரிந்து கொள்ளாமல் கணவன் மேல் இருந்த மையல் குறையாமலே வாழ்ந்து வந்த அன்னம் ஒரு நாள் உண்மையை நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டி வந்தது. அன்று அவள் கண்களில் இருந்த கனிவு மறைந்தது. காதல் மறைந்தது. சீற்றமும், சினமும் அதில் குடி கொண்டன.
"அன்னம்" என்று வாசலில் தயானந்தன் அழைக்கும் குரல் கேட்டு துள்ளலுடன் ஓடிவந்து
 "இதோ வந்திட்டேங்க" என்று கொஞ்சும் குரலில் கூறிக் கொண்டே கதவைத் திறந்தவள் திகைத்தாள். 
அங்கே தயானந் தனுடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அன்னத்தை விட அழகாய், இளமையாய் முகத்தில் ஒருவித கவர்ந்திழுக்கும் காந்தத் தன்மையுடன் நின்றிருந்த அந்தப் பெண் தயானந்தனின் தோளோடு தோள் உராய கையில் பெட்டியுடன் நின்றிருந்தாள். 
அன்னத்தின் கண்களில் 'இவள் யார்' என்ற வினா எழுவதைக் கவனிக்காதவன் போல் உள்ளே நுழைந்த தயானந்தன்
"உள்ளே வா காந்தா" என்று உடன் வந்த பெண்ணைப் பார்த்து அழைத்தான். 
தோற்றத்திற்கேற்ற பெயர் கொண்ட அந்த காந்தாமணி உள்ளே நுழைந்தாள்.
கதவை மூடித் தாழிட்ட தயானந்தன் அந்தக் காந்தா மணியைப் பார்க்க அவள் வீட்டைச் சுற்றி உரிமையுடன் ஒரு பார்வையைச் சுழல விட்டபடி அங்கிருந்த சோபாவில் சுவாதீனமாய் உட்கார்ந்தாள். தயானந்தன் அன்னத்தின் பார்வையை நேருக்கு நேராய் பார்க்காமல் சுவரைப் பார்த்தபடி,
"அன்னம்.. இது.. வந்து.. காந்தா.. வந்து.. காந்தாமணி.." என்று தயங்கித் தயங்கி இழுக்க அன்னத்தின் அடி வயிற்றில் கலக்கம் மூண்டது. 
கணவனையும் அந்தக் காந்தாமணியையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளது பார்வையை சந்திக்க முடியாமல் கணவன் தலையைக் குனிந்து கொள்ள அந்தக் காந்தாமணியோ வெகு அலட்சியத்துடன் ஏளனமாகப் பார்த்தாள். அந்தப் பார்வை உணர்த்திய வெற்றிச் செய்தி எதையோ அறிவுறுத்த அன்னம் மனம் பதறினாள். 
அந்தக் காந்தாமணியின் பார்வை உணர்த்துவது என்ன..? அவள் எதை வென்று விட்டாள்..? அதை அறிந்தே கொள்ளக் கூடாது என்று அவள் மனம் அஞ்சியது. தயானந்தன் அவளுக்கே உரியவன்.. அவன் அன்னத்தின் கணவன். பசுவைத் தேடும் கன்றாய் அவள் பார்வை தயானந்தனின் பதில் பார்வைக்காக.. அவனது காதல் பார்வைக்காக.. ஏங்கி அவன் மேல் படிந்தது. அவனோ அவளது உயிர் தவிப்பதைக் கண்டும் காணாதவனாக அவளது பார்வையைச் சந்திப்பதைத் தவிர்த்தான்.
மனைவியின் மருண்ட தோற்றத்தைக் காணத் தெம்பில்லாதவனாக தயானந்தன் விழிகளைத் திருப்பினான். அங்கே இரட்டைப் பின்னலுடன் அழகான ரோஜா நிற கவுன் அணிந்து கொண்டு மருள் பார்வையுடன்  திடீர் விருந்தாளியை சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயது சந்தியாவை நோக்கி கைகளை நீட்டினான். 
தகப்பன் நீட்டிய கைகளுக்குள் ரோஜாக் குவியலாய் புகுந்து கொண்டாள் சந்தியா.. தயானந்தனின் கழுத்தில் கை போட்டு அவனது தோள்களில் சலுகையாகச் சாய்ந்து கொண்ட சந்தியா, காந்தமணியை நோக்கி விரலை நீட்டி,
"இவங்க யாருப்பா..?" என்று கேட்டாள்.
தான் கேட்க அஞ்சிய கேள்வியை எளிதாகக் கேட்டு விட்ட மகளைப் பதைப்புடன் நோக்கினாள் அன்னம். அவளது மனதில் அபாய மணி அலறியது. 
'அன்னம் இங்கிருந்து ஓடிவிடு. உன் காதல் கணவன் உன் மேல் இடியை இறக்கும் முன் தப்பித்து விடு. அவன் கூறப் போகும் கொடும் சொற்களை உன் செவிகள் கேட்கும் முன்னர் ஓடிவிடு.
 அவள் மனம் எச்சரிக்க நகர முடியாமல் கால்கள் துவைத்த துணிபோல் தொய்ந்து விட நிற்க முடியாமல் சுவரைப் பற்றிக் கொண்டு நின்றாள் அன்னம்.
'சொல்லாதே. என் உயிரைக் குடிக்கும் வார்த்தை எதையும் சொல்லி விடாதே..' என்று அவள் விழிகள் கெஞ்ச அதைக் கவனிக்க மறுத்தவனாய் அவளது பதட்டத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஆழ்ந்த குரலில் அவளது உயிரைப் பறிக்கும் அந்த வார்த்தைகளைக் கூறினான் அவள் கணவன்,
"இதுதான் உன் சித்திடா."
"ம்ஹா.." என்ற குரல் எழுப்பிய வண்ணம் விழிகள் விரியப் பார்த்த அன்னம் அப்படியே பின்னே நகர்ந்தாள். 
அவள் உயிரின் ஆணி வேரைப் பறிக்கும் அந்தப் படுபாதகப் பதிலை உரைத்தவன் அவளுக்குப் புறமுதுகு காட்டி நின்று கொண்டிருந்தான் அவன் தோள்களைப் பற்றித் தன்புறம் திருப்பியவள் வெறி கொண்ட வேங்கையாய் மூச்சு வாங்கினாள்.
"என்ன சொன்னே..? எங்கே என் முகத்தைப் பார்த்துச் சொல்லு..?"
"அன்னம்.. நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளு.."
"எதைப் பொறுமையாக் கேட்க..? நான் மோசம் போன கதையவா..? இல்லை நீ சோரம் போன கதையவா..?"
"அன்னம். இப்ப என்ன கெட்டுப் போச்சுன்னு இந்தக் கத்துக் கத்தறே..?"
"கெட்டுப் போகலையா.. எதுவுமே கெட்டுப் போகலையா.. நீ கெட்டுப் போகலை..?"
"ஆமாண்டி.. அதுக்கென்ன இப்ப..? நான் கெட்டுத்தான் போயிட்டேன். இப்ப என்னங்கற நீ..? நான் ஆம்பளைடி. நாலு காசு சம்பாதிக்கிறவன். அப்படி இப்படித்தான் இருப்பேன். பொட்டக் கழுதை நீ எதிர்த்தா கேள்வி கேட்கிற..? இப்ப ஆமாம்ன்னு சொல்லிட்டேன்ல்ல என்னடி செய்வே..?"
"என்ன செய்வேனா..? எதுவும் செய்வேன். பொம்பளைன்னா உனக்கு அத்தனை இளக்காரமாய் போச்சா.. நீ வணங்குகிறவரைக்கும் தான் நான் தேவி.. என்னைப் பழியெடுக்கணும்னு நினைச்சே நான் காளி.."
"நீ என்னவா வேணும்னாலும் இருந்துக்க.. இந்த வீட்டுக்குள் இருக்கிறதானா காளி அவதாரமெல்லாம் எடுக்க முடியாது. நீ சொல்கிறபடி நான் ஆடிக்கிட்டிருந்த காலமெல்லாம் மலையேறிப் போயிருச்சு.. இது என் வீடுடி. நான் இஷ்டப்படித்தான் இருப்பேன்."
"அப்ப முடிவா நீ என்ன சொல்றே..? இந்த வீட்டில் இவ இருக்கக் கூடாதுன்னு நான் சொல்றேன். இவ இருக்கிற திசைப் பக்கம் கூட நீ திரும்பக் கூடாதுன்னு நான் சொல்றேன். இவ சவகாசத்திதற்கு இப்பவே நீ தலை முழுகிடணும்னு நான் சொல்றேன். செய்ய முடியுமா..? முடியாதா..?"
"இவளை நான் இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இனிமே இவ நம்ம கூடத்தான் இருப்பா."
"உன் கூட இருப்பான்னு சொல்லு.. நம்ம கூடன்னு சொல்லாதே.."
"அப்படின்னா..? என்னை எதுத்துக்கிட்டு உன்னால என்னடி செய்ய முடியும்..?"
"எது வேணும்னாலும் செய்ய முடியும். போலீஸ் ஸ்டேசனுக்குப் போக முடியும். கட்டின பொண்டாட்டி உயிரோடு இருக்கும்போது இன்னொரு கல்யாணம் கட்டினா என்ன ஆகும்ன்னு காட்ட முடியும். ஜெயில் களி திங்க வைக்க முடியும். நீ வேலை பார்க்கிற ஆபிஸில் உன் மேலதிகாரி கிட்ட வந்து நின்னு புகார் சொன்னேன்னு வை. உன் வேலையை காலி பண்ண முடியும். நாலு காசு சம்பாதிக்கிறவன்னு பெருமை அடிச்சியே. அதுக்கு வழியில்லாம உன்னை ரோட்டில் நிறுத்த முடியும். ஆனால் நான் அதையெல்லாம் செய்ய மாட்டேன். எப்போ குடியிருக்கிற வீட்டைக் கோவிலா மதிக்காமல் வேறொருத்தியைக் கூட்டிக்கிட்டு வந்தியோ அப்பவே நீ ஈனப் பிறவிங்கறதை நிரூபிச்சுட்டே. என்னைவிட இன்னொருத்தி மேல்ன்னு நீ நினைச்சிட்டப் பின்னால் இனி நீயாய் திருந்தி வந்தாலும் எனக்கு நீ வேணாம்."
"என் வீட்டில் இருந்து கொண்டு என்னை வேணாம்னு சொல்ல உனக்கு என்ன தைரியம்டி வாய்க்கொழுப்பா..?"
"இவ்வளவுக்குப் பின்னாலும் இந்த வீட்டில் இருப்பேன்னா நினைச்சே.. உன்னை மாதிரி மானம் கெட்ட மனுசனாயிருந்தால் இருந்திருப்பேன். நான் மானமுள்ள மனுஷி. இந்த வீட்டில் இனி ஒரு கணம் கூட இருக்க மாட்டேன்."
"இங்கே இருக்காமல் எங்கேடி போவ..?"
"அது என் பிரச்னை.. உனக்கு அது தேவையில்லை நகரு. நானும் என் பெண்ணும் இந்தக் கணமே வீட்டை விட்டு வெளியே போயாகணும். இங்கே நின்று உன் முகத்தைப் பார்க்க, பார்க்க என் உடம்பெல்லாம் பத்திக் கிட்டு எரிவது போல் இருக்கு.. வழியை விடு."
வழியை விடாமல் மறித்துக் கொண்டு நின்றிருந்த தயானந்தன் கூறினான்.
"இங்கே பார். வெளியே போய் நீ என்னடி செய்வே..? படிச்சிருக்கியா..? எட்டாம் கிளாசைத் தாண்டலை. வெளியே போகிறாளாம். உனக்கு என்ன தெரியும்கிற தைரியத்தில் வெளியே போகிறேன்கிற.."
"நான் படிக்காதவள்தான். சம்பாதிக்க வழி யில்லாதவள் தான். அந்த தைரியத்திலதான நீ ஒருத்தியைக் கொண்டு வந்தே.. நான் என்ன செய்வேன்கிற கவலை உனக்கு வேண்டாம். அது உனக்குத் தேவை யில்லாத கவலை. வழியை விடு."
"நீ போனால் போடி. என் பெண்ணை ஏன் கூட்டிப் போற..?" என்று அவன் சந்தியாவின் கையைப் பிடித்து இழுக்க, அவன் கையை தட்டி விட்ட அன்னம்,
"உன் பெண்ணா..? யார் அது..? இவள் என் பெண். இந்தா உட்கார்ந்து இருக்கிறாளோ காந்தா... மணி ....இவள் வயித்திலே இனிப் பிறக்கறதுதான் உன் பெண்.."
"அதை நாளைக்குப் பார்ப்போம்டி. இப்ப என் பெண்ணை விடு.."
"இங்கே பார். நான் சொன்னால்தான் இவள் உன் பெண்.. தெரிஞ்சுக்க.."
"ஹா! அது அந்தக் காலம்டி.. இப்ப ஆயிரத்தெட்டு டெஸ்ட் வந்தாச்சு.."
சந்தியாவை விடாமல் அவன் வாதாடிக் கொண்டிருக்க அன்னம் வெகுண்டாள்.
"இப்ப என் பெண்ணை விடப் போகியா இல்லையா..?"
"பாரு அன்னம்.. வெளியே போறேன்னு வீராப்பு பேசாமல் வீட்டிலே அடங்கிக்கிட.. பேசாமல் இங்கேயே இரு."
"இங்கேயே இருந்து.. நீ அவள் கூட வாழறதைப் பார்த்துக்கிட்டு நடைப் பிணமா அடுக்களையில் முடங்கிக் கிடக்கவா. நீ மனிதனா இல்லை மிருகமா..?"
அப்போதும் தயானந்தன் வழியை விடாமல் மறிக்க அந்தக் காந்தாமணி அழைத்தாள்.
"தயானந்த்.."
"என்ன காந்தா.." என்று குழைந்தான் அவன்.
"அவங்க போவதானால் போகட்டும் விட்டு விடுங்கள்."
ஏதோ மறுத்துப் பேச வாயெடுத்தவனைப் புழுவைப் பார்ப்பது போல் கேவலமாய் பார்த்தபடி அன்னம் ஏளனமாய் நகைக்க வாயடைத்துப் போய் அவன் திக் பிரமையுடன் நிற்கும்போது நெருப்புப் பார்வையுடன், கட்டிய துணியுடன், மகளையும் மனதில் தைரியத்தையும் கைபிடித்துக் கொண்டவளாய் அன்று வெளியேறியவள் தான் அன்னம். 
இன்று வரை கணவனிருக்கும் திசைப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தந்தையின் நினைவு கூட சந்தியாவிற்கு வந்து விடாதபடி தாய்க்கு தாயாய் தகப்பனுக்குத் தகப்பனாய் நின்று போர்க்களமாய் ஆன வாழ்வில் துணிந்து நின்று வாழ்ந்து காட்டினாள்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை. -3
அக்கினிப் பறவை. -3
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkiniparavai-3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkiniparavai-3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy