அக்கினிப் பறவை. -1

முத்துலட்சுமி ராகவன் எழுதிய அக்கினிப் பறவை... 1 அண்ணாசாலையில் அகன்ற சாலைப் பகுதியில் உள்ள பல மாடிக் கட்டிடங்களில் ஒன்றில் இயங்கிக...


முத்துலட்சுமி ராகவன் எழுதிய
அக்கினிப் பறவை...
1

அண்ணாசாலையில் அகன்ற சாலைப் பகுதியில் உள்ள பல மாடிக் கட்டிடங்களில் ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த அந்த அலுவலகம் காலை நேரத்தின் பரபரப்போடு இயங்க ஆரம்பித்தது. உள்ளே பணிபுரிந்து கொண்டிருந்த ஆடவர் மற்றும் மகளிர் வேலைக்கு வர ஆரம்பித்திருந்தனர். ஒவ்வொருவராய் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தபோது உள்ளே மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாய் வந்த பெண்ணொருத்தி அமர்ந்திருந்த பெண்களில் ஒருத்தியைப் பார்த்து,
"குட்மார்னிங் வனஜா.." என்றாள் மூச்சிரைக்க.. பதிலுக்கு,
"குட்மார்னிங் சுசிலா.." என்ற வனஜா,
"ஏண்டி இப்படி மூச்சு வாங்குது..? மெதுவாக வரக் கூடாதா..?" என்றாள்.
"ஏன் சொல்ல மாட்டாய்..? துர்வாச முனிவர் வருவதற்கு முன்னாடியே சீட்டில் வந்து உட்கார்ந்து விட்ட தைரியம் உனக்கு.. துர்வாசர் வருவதற்கு முன்னாடி வந்துடனும்னு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நான் ஓடி வந்த தவிப்பு எனக்கு இல்ல தெரியும்.. போடி... ஸ்ஸு.. அம்மாடி.. ஒரு வழியா வந்துவிட்டேன்.." என்று சுசிலா அவளது சீட்டில் அமர்ந்து கொண்டு ஆசுவாசப் பெருமூச்சுவிட, பிரியா புயலாய் உள்ளே நுழைநதாள். வரும்போதே,
"ஹாய் வனஜ்! காலங்கார்த்தாலேயே சுசிலா புலம்பிக் கொண்டிருக்கிறாளே என்னவாம்.." என்று வம்பு கேட்கும் ஆர்வத்துடன் கேட்க, வனஜா,
"நத்திங் ப்ரியா..! லேட்டாயிடுச்சுன்னு பயந்திட் டாளாம். இப்போது நீ லேட்டாத்தானே வர்றே..? துர்வாசருக்குப் பயந்து ஓடியா வர்றே..? அதைத்தான் சொன்னேன். பொரிஞ்சு தள்ளுரா.." என்று கூறினாள்.
அதற்கு அந்தப் பிரியா, "நான் மெதுவாக வந்தேனா..? நெவர்.. நான் அப்போதே வந்து விட்டேன். வாசலில் நின்று அரட்டையடிச்சுக்கிட்டு இருந்தேன்.. துர்வாச முனிவர் வந்துவிட்டார். அதான் சீட்டுக்கு வந்தேன்.." என்று கூற வனஜாவும், சுசிலாவும் பதறிப் போனார்கள்.
"அடிப்பாவி.. என்னடி சொல்றே. துர்வாசர் வந்தாச்சா. வனஜ்! நீ உன் சீட்டுக்குப் போ.. நான் என் சீட்டுக்கு வந்து விட்டேன்." என்றபடி சுசிலா பாய்ந்து அவளது சீட்டை ஆக்ரமித்து வேலையிருப்பது போல் குனிந்து கம்ப்யூட்டரை நோண்ட ஆரம்பித்தாள். வேலை பார்ப்பது போல் பாவனை செய்தபடி குனிந்து இருந்தாலும் விழிகள் வாசலைப் பார்த்தபடி இருந்தன.
வெளியே டக்டக்கென்று ஷூவின் கம்பீரமான காலடிச்சத்தம் கேட்டது. அந்த அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும் வேலை செய்யும் பாவனையில் கம்ப்யூட்டரை கட்டி அணைத்துக் கொள்ள 'ஆதித்தன்' அந்த நிறுவனத்தின் ஜி.எம். என்றழைக்கப்படும் ஜெனரல் மேனேஜர் பதவி வகிப்பவன் உள்ளே நுழைந்தான். கடுகடுவென்ற முகத்துடன் 'துர்வாச முனிவர்' என்று அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்களால் முக்கியமாய் பெண்களால் பெயர் சூட்டப் பட்ட அந்த ஜெனரல் மேனேஜர் எல்லோருடைய 'குட்மார்னிங்'குகளையும் போனால் போகிறதென்று சிறு தலை அசைவுடன் ஏற்றுக் கொண்டு அவனது தனியறைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே போன அடுத்த நிமிடம் அலுவலகமே மூச்சு வாங்கி ஆசுவாசப்பட்டுக் கொண்ட நேரத்தில் பிரியாவின் டேபிளின் மேலேயிருந்த இன்டர்காம் அலறியது. பிரியா அதை விட வேகமாய் அலறிக் கொண்டு எடுத்துப் பேசினாள்.
"பிரியா..! கொஞ்சம் வந்துவிட்டுப் போங்க." என்று ஆணையிட்டது ஆதித்தனின் குரல். உயிரெல்லாம் வடிந்து விட்ட நிலையில் சவமாய் வெளுத்துப் போன முகத்துடன் அவள் சீட்டை விட்டு எழுந்திருக்கையில் பக்கத்து சீட் வசுமதி துக்கம் விசாரித்தாள்.
"என்னடி ப்ரியா..? துர்வாச முனிவரின் சாபம் இன்றைக்கு உன்கிட்டயிருந்து ஆரம்பிக்கப் போகுதா..? இன்றைக்கு முதல் பலி நீதானா? நல்லா மாட்டினே போ.."
"வசு ப்ளீஸ்.. நானே நொந்து போயிருக்கேன்.. நீ வேற மேலேயும் நோகடிக்காதே..."
"எதுவானாலும் உள்ளே போய் அர்ச்சனையை வாங்கிக் கட்டிக் கொண்டு வந்து நொந்து போ.. லேட்டாய் போனேன்னு வை, துர்வாசர் அதுக்குள்ள வெளியே வந்து எல்லார் மத்தியிலும் காச்சு காச்சுன்னு காச்சிரும். தேவையா..?"
"அடிப்பாவி.. அந்தாளு மாதிரியே நீயும் சாபம் கொடுக்கறியேடி. நான் உள்ளே போய் அர்ச்சனை வாங்கிக் கட்டிக் கொள்வதைக் கேட்க உனக்கு அவ்வளவு ஆசைடி. போறேன்டி. எல்லாம் என் நேரம். போய் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறேன்."
நடுங்கிக் கொண்டே போய், எம்.ஆதித்தன் எம்.இ., எம்.பி.ஏ., ஜெனரல் மேனேஜர் என்ற போர்டு மாட்டப் பட்டிருந்த அறையின் முன் நின்று மெதுவாய், மிக மெதுவாய் ஒரு விரலால் கதவைத் தட்டினாள் பிரியா.
"யெஸ் கமின்" என்ற கண்டிப்பான குரல் கேட்டவுடன் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றாள்.
வெளிர் நீல சுடிதாரில் அழகாய் மாடலிங் பெண் போன்ற தோற்றத்துடன் முன்னால் வந்து நின்ற பிரியாவின் அழகு கொஞ்சம் கூட பாதிக்காதவனாய் அந்த ஆதித்தன் முறைத்தான். மென்று துப்பிய வார்த்தைகள் போல் தோன்ற,
"டேக் யுவர் சீட்" என்றான். இருபத்தியெட்டு வயது வாலிபனான அவன் முன்னால் நிற்கும் உணர்வில்லாமல் செங்கல்காள வாசலின் உள்ளே நிற்பது போல் வியர்த்து விறுவிறுக்க நின்றிருந்த பிரியா,
"இட்ஸ் ஓகே சார்.." என்றாள் அவசரமாக,
"ஏன் உட்காரப் பிடிக்காதா..? நின்று கொண்டி ருந்தால் தான் பிடிக்குமா..? அதனால்தான் ஆபிஸ் நேரத்தில் ஆபிஸ் சீட்டில் உட்காராமல் ஆபிஸ் வாசலில் நின்று கொண்டிருந்தீர்களா..?"
"சார் அது வந்து..."
"எது வந்து.. ம்ம்.. இந்த வந்து போயெல்லாம் வேண்டாம். உங்களுக்கு எட்டு மணி நேர வொர்க்குன்னு தெரியுமில்லை.."
"சார்.. சார்..."
"தெரியுமா..? தெரியாதா..? ஐ வான்ட் இம்மீடியட் ஆன்சர்.."
"தெரியும் சார்.."
"அது தெரிந்துமா, ஆபிஸ் நேரத்தில் வாசலில் நின்று அரட்டையடித்துக் கொண்டு இருந்தீர்கள்..? மாதக் கடைசியில் ஆயிரக் கணக்கில் சம்பளம் கொடுப்பது நீங்க வேலை செய்யணும்கிறதுக்காக. அரட்டையடிக் கிறதுக்கு இல்லை. புரியுதா..? காலையில் வந்தவுடனேயே அரட்டைக் கச்சேரியை ஆரம்பித்து வைக்கிறீர்களே.. உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா..? இல்லையா..?"
"இல்லை சார்.. அது வந்து.." என்று பதறினாள் பிரியா.
"இல்லையா..? எது இல்லை..? மனச்சாட்சி இல்லையா..?"
"இல்.. ஐயோ.. நான் அந்த அர்த்தத்தில் 'இல்லை'ன்னு சொல்லவில்லை சார்." என்று பிரியா பரிதவித்தாள்.
"குட்.. இன்னைக்கு நாள் நல்லபடியா ஆரம்பிச் சிருக்கு.. 'ஐயோ அம்மா'ன்னு அருமையாப் பேசுறீங்க.. இதைத்தான் காலேஜில் படிச்சு டிகிரி வாங்கினீங்களா..?"
"இல்..இல்லை.. சார்" என்று 'இல்லை'யென்ற பதிலைத் தவிர எந்தப் பதிலை இந்தக் கேள்விக்கு கூறுவது என்ற தடுமாற்றத்துடன் பிரியா கூறினாள்.
"ச்சு.. முதலில் இந்த ப்ளடி 'இல்லை'யை விட்டுத் தொலையுங்கள்.. இன்னொரு தரம் இப்படி பிகேவ் பண்ணினால் 'மெமோ' கொடுத்து விடுவேன். பிகேர்புல். ஆபிசுக்கு வருவதாக நினைக்கிறீங்களா..? இல்லை மெரினா பீச்சிற்கு வருவதாக நினைக்கறீங்களா..? லுக் மேடம். இந்த லூட்டியடிக்கிறது. அரட்டையடிக்கிறது இதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த ஆபிஸில் வேலை பார்க்கிறதாக இருந்தால் வேலை பாருங்க. இல்லைன்னா ரிசைன் பண்ணிவிட்டு உங்க வீட்டு வாசலில் போய் நின்று அரட்டையடிங்க. மைன்ட் இட்.. புரியுதா..?"
"யெஸ் சார்.."
"என்னத்துக்கு இப்போ 'யெஸ்' போடறீங்க..? ரிசைன் பண்ணிடறீங்களா..?"
"நோ... நோ... நோ சார்..."
"எஸ், நோ, இந்த இரண்டு வார்த்தையை விட்டால் வேறு வார்த்தை எதுவும் பேசத் தெரியாதா..? ஆனால் அரட்டையடிக்க ஆரம்பித்து விட்டால் மட்டும் சரளமாய் வார்த்தைகள் வந்து விழுகின்றதே.. எப்படி..ம்..?"
"இனிமேல் ஜாக்கிரதையாய் நடந்து கொள்கிறேன் சார்.." என்று தழைந்த குரலில் பேசிய பிரியாவின் கண்களில் நீர் திரையிட்டிருந்தது.
அதைக் கவனிக்காதவன் போல் ஆதித்தன் பேசினான்.
"ஜாக்கிரதையாய் நடக்க நீங்க என்ன கம்பி மேலேயா நடக்கப் போறீங்க.. ஆபிஸ் நேரத்தில் ஆபிஸ் வேலையை மட்டும் பாருங்க மேடம். எனக்கு அது போதும். ஆபிஸ் நேரம் முடிந்தவுடன் நீங்க எக்கேடு கெட்டால் எனக்கென்ன..?"
"ஓ.கே. சார்.." என்று இந்த பதிலுக்கும் அவன்  என்ன கூறப் போகிறானோ என்ற பயத்துடன் பிரியா கூறினாள். அவளது பயத்தை மெய்ப்பிப்பது போல ஏதோ பேச வாய் திறந்தவன் போன் மணி அடிக்கவும் அதை எடுத்து,
"ஹலோ மேக்னா பவர்ஸ் லிமிடெட் ஜி.எம்.ஹியர்." என்றபடி அவளைப் போகலாம் என்று ஒற்றை விரலால் சைகை செய்து வெளியேற்றினான்.
கிழிந்து போன துணியாய் வெளியே வந்தாள் பிரியா.. உள்ளே ஆதித்தன் கத்திய காட்டுக் கத்தலை செவிமடுத்திருந்த அலுவலகத்தின் சக ஊழியர்களின் இரக்கமான பார்வைகளைக் கடந்து அவளது இருப்பிடத்திற்குப் போய் அமர்ந்தாள். அவளது காலை நேரத்து உற்சாகம் ஆதித்தனின் அக்கினிப் பேச்சில் பொசுங்கிப் போயிருக்க இயந்திரமாய் கண்களில் நீர் வழிய வேலையில் ஆழ்ந்தாள்.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை. -1
அக்கினிப் பறவை. -1
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxg/tBycFYb9LksXTLHGOaYBwqP0RuTBefcvwCLcBGAsYHQ/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxg/tBycFYb9LksXTLHGOaYBwqP0RuTBefcvwCLcBGAsYHQ/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkiniparavai-1.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/akkiniparavai-1.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy