வாங்க பேசலாம்

முக நூலில்  நான் படித்த கதை ..மனதை தொட்டது ..உங்களுக்காக நம் தளத்தில்  ..பெண்கள் வாழ்வை எழுதுபவர்கள்....இலக்கியம் ஒருபோதும் வாழ்வியல...

முக நூலில்  நான் படித்த கதை ..மனதை தொட்டது ..உங்களுக்காக நம் தளத்தில்
 ..பெண்கள் வாழ்வை எழுதுபவர்கள்....இலக்கியம் ஒருபோதும் வாழ்வியலைச் 
சொல்வதில்லை..அது இயல்பு வாழ்வியலுக்குப் புறம்பானது
Karthiga Vasudevan

பாட்டி 
-------------
உங்கப்பாவால நகை போட முடியாமத்தான் உன்னய எங்கப்பாவுக்கு மூனாந்தாரமா கட்டிக் கொடுத்தாங்களாமே?!
மாமாக்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஜாலியான மூடில் பாட்டியை இப்படிச் சொல்லி கேலி செய்வதுண்டு.
அதற்கு பாட்டி சொல்லும் பதில்;
“எங்கப்பா என்னய பணப்பெட்டின்னு இல்ல கொண்டாடுவாரு, வரவு, செலவெல்லாமே மனக்கணக்குத்தேன். உங்கள மாதிரி புஸ்தகம், நோட்டு, வச்சா கணக்குப் போட்டுக்கிட்டிருந்தேன். நகை போட முடியலன்னு உங்கப்பாவுக்கு வாக்கப்பட்டு நான் மேட்டமலைக்கு வரல. என்னய விட வயசானவரக் கட்டிக்கிட்டு நான் இந்த ஊருக்கு வந்தாலும், வந்த அன்னைல இருந்து எனக்கு கிடைச்ச மரியாதை அன்னைக்கு என் வயசுப் பொண்ணுக யாருக்குமே கிடைக்காத பெருமையாக்கும். நண்டு, சிண்டு முதற்கொண்டு ஊருக்குள்ள என்னைய விடப் பெரிய ஆம்பிளயாள், பொம்பளயாள் எல்லாருக்குமே நான் பெரியம்மா. பெத்தி, மாரியம்மாம்மான்னு எங்குட்டு திரும்பினாலும் ஊரே என்னைக் கொண்டாடுச்சு பார்த்துக்க! யாருக்கு கெடைக்கும் இந்தப் பாக்கியம்”
இதைச் சொல்லும் போது பாட்டியின் முகம் பெருமிதத்தால் பூரித்திருக்கும்.
பாட்டியின் இளம்பிராயத்தில் அவருக்கு ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்ததாக அத்திப்பூத்தாற் போல எங்களிடம் பகிர்ந்துகொண்டதுண்டு. பிறந்த ஊரில் அவர் வீடிருந்த அதே தெருவில் ஏராள நிலபுலன்களுடனும், சொத்துக்களுடனும் தாட்டியமாக வாழ்ந்து வந்த சொந்த அத்தை பெற்றெடுத்த ஒற்றைக்கொரு பிள்ளைக்குத்தான் பாட்டியைத் திருமணம் செய்து தரப்போகிறார்கள் என்று ஊருக்குள் பேச்சிருந்திருக்கிறது. பாட்டிக்கும் அதில் இஷ்டமே. அந்த முறைமாப்பிள்ளையோ சரியான வாய் செத்தவர். அவரால் தன் அம்மாவை மீறிக்கொண்டு தன்னிஷ்டமே பிரதானம் என்று கொடி பிடிக்க முடியவில்லை. அத்தைக்கோ தன் பிள்ளைக்கு தங்களை விடவும் வசதி வாய்ப்புகள் கூடிய பெரிய தனவந்தக் குடும்பத்தில் பெண்ணெடுக்கும் பேராசை பிடித்து ஆட்ட அவர் தன் அண்ணன் மகளான என் பாட்டியை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டார்.
பெற்றோர் பெண் கேட்டுச் சென்று முறைப்படியாகத் திருமணம் செய்து வைப்பார்கள் என்று நம்பாததால் பாட்டியின் முறைமாப்பிள்ளை பாட்டியிடம் தூதனுப்பியிருக்கிறார்... எப்படியென்றால், கோயிலில் தாலி கட்டிக் கொண்டு வீட்டுக்குப் போனால் பெற்றவர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என. அதில் பாட்டிக்கு மட்டுமல்ல அவரது அம்மாவுக்கும் விருப்பமில்லை.
இந்தப்பக்கம் பாட்டியின் அம்மா அதாவது என் கொள்ளுப்பாட்டிக்குத் தன் மூத்த மகளைத் தன்னுடைய அண்ணன் மகனுக்கு கட்டித்தர வேண்டுமென்று ரொம்பவும் ஆசை. ஆனால், இதில் பாட்டிக்கு விருப்பமில்லை. ஆனாலும் அம்மாவை எதிர்த்துப் பேச முடியாமல் திருமணப் பேச்சை எடுக்கையில் சும்மா இருந்திருக்கிறார். நடுவில் பாட்டியின் தலைவிதி என்ற ஒன்றிருக்கிறதே! தாய்மாமன் மகனோ மிலிட்டரி ரிட்டர்ன் மைனர். அவருக்கு அங்கே ஏற்கனவே ஒரு காதல் டிராக் ஓடிக் கொண்டிருந்ததால், அந்தப் பெண்ணைத்தான் நான் கட்டிக் கொள்ளப் போகிறேன், உன் மகளை என்னால் கட்டிக் கொள்ள முடியாது அத்தை என்று அவர் தன் மேனத்தையின் முகத்துக்கு எதிரேயே திண்ணக்கமாகக் கூறி விட... கொள்ளுப்பாட்டிக்கு வந்ததே பாருங்கள் பொல்லாக் கோபம்... அது சடுதியில் கடும் வன்மமாக மாறத் தன் உடன் பிறந்தாரையும் அவரது மகனையும் கடுஞ்சொற்களால் ஏசி முச்சந்தியில் நின்று மண்ணள்ளித் தூற்றி சாபமிட்டு விட்டு தன் புகுந்த வீட்டுக்கு நடையைக் கட்டி விட்டார். அத்தோடு சரி அப்புறம் பிறந்து வீட்டுப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை என்பார்கள்.
இப்படிப் பாட்டியைப் பொறுத்தவரை அவரது திருமண எதிர்பார்ப்புகள் இரண்டுமே கூடி வராமல் போனதில், அந்நேரத்தில் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடிய நிராகரிக்கப்பட்ட உணர்வு பாட்டியையும் பலமாக அசைத்துப் பார்த்திருக்கிறது. அந்தச் சூழலில் தான் அவருக்குள் ஒரு வைராக்கியம் உரம் பெற்றிருக்கக் கூடும்.
தன்னை வேண்டாமென நிராகரித்த அந்த இரண்டு ஆண்மகன்களைக் காட்டிலும் தாட்டியமான ஆண்மகன் ஒருவரைத் தான் திருமணம் செய்து கொண்டே ஆகவேண்டுமென பாட்டிக்குத் தோன்றியிருந்தால் அதில் பிழையேதும் உண்டோ!
உலகமெங்கும் பெண்களுக்கு தங்களது வருங்காலக் கணவர்கள் குறித்து என்னென்ன எதிர்பார்ப்புகள் இருந்திருக்கக் கூடுமோ அதுவே தானே நம்மைப் பெற்றெடுத்த அம்மாக்களுக்கும், பாட்டிகளுக்கும், நமக்கும் ஏன் நாளை நமது மகள்களுக்கும் கூட இருக்கக் கூடும்! இதில் புதிதாக விளக்கிச் சொல்ல என்ன இருந்து விடப் போகிறது.
அப்படித்தான் அந்நாளில் 17 வயது இளம்பெண்ணான பாட்டி, அவரைக் காட்டிலும் இருமடங்கு வயது வித்தியாசம் கொண்ட என் தாத்தாவைத் திருமணம் செய்து கொண்டு மேட்டமலைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். வயது வித்தியாசம் மட்டுமல்ல, தாத்தாவுக்கு பாட்டிக்கு முன்பே இரண்டு மனைவிகள் இருந்து அவரோடு சில காலம் வாழ்ந்து மறைந்துமிருக்கிறார்கள். அவர்களில் மூத்த மனைவி காதல் கடிமணம் புரிந்து கொண்ட பிரியத்துக்குகந்த மனைவி என்பது பாட்டி அறியாக் கதை. இரண்டாமவரைப் பற்றிப் பெரிதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. அவர் திருமணமாகி வந்த நாள் தொட்டே உடல்நலக் குறைவால் அவஸ்தைப் பட்டவர் என்றும் ஒரே ஒரு மகளைப் பெற்றெடுத்து விட்டு கடமை முடிந்ததென கண்களை மூடி விட்டார் என்பார்கள்.
தாத்தாவின் பிரியத்துக்கு உகந்த மூத்த மனைவியின் பெயர் கிருஷ்ணம்மாள். தாத்தாவின் பெயர் கிருஷ்ணசாமி நாயக்கர். பெயர் பொருத்தத்தைப் பாருங்களேன்! சொந்த அத்தை மகள் என்பதால் இருவருக்குள்ளும் மனம் ஒத்துப் போய் அந்தக் காலத்தில் அவர்கள் இருவரும் காதல் மணம் புரிந்து கொண்டதாகக் கேள்வி. அந்தப் பாட்டியை நாங்கள் கண்டதில்லையே தவிர, என் பாட்டியின் வாயிலாக அவர் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்குமே ஒரு உக்கிரமான குல தெய்வத்தைப் போலத்தான் சித்தரிக்கப்பட்டிருந்தார். வீட்டில் எந்த ஒரு நல்ல காரியமென்றாலும் அவரை வணங்காமல் தொட்டுத் தொடர்ந்ததில்லை. அந்தப் பாட்டி, தாத்தாவோடு வாழ்ந்தது கொஞ்சமாயிருக்கலாம். ஆனால், இன்றும் எங்களைப் பொறுத்தவரை மேட்டமலையின் மச்சு வீட்டுக்குள் தெய்வமென உறைந்திருப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுவதென்னவோ வாஸ்தவமே.
அப்பேர்ப்பட்ட கிருஷ்ணம்மாளுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. பேர் சொல்ல ஒரு ஆண் வாரிசைப் பெற்றுப் போட்ட கையோடு ஒரு உப்புப் பெறாத காரணத்திற்காகத் தாத்தாவோடு மனஸ்தாபப் பட்டுக் கொண்டு தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொண்டிருக்கிறார். ஆம், ஒருமுழக்கயிற்றில் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். ஒன்றரை வயது கூட நிரம்பாத சின்னஞ்சிறு பாலகனாக பெரிய மாமா, அம்மா இறந்தது கூட அறியாக் குழந்தையாக பசித்து அழுகையில், நெடுநேரமாய் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கம் எட்டிப் பார்க்க அங்கே வாழையடி வாழையெனத் தழைத்துக் கிளைத்திருக்க வேண்டிய ஒரு அழகான தாம்பத்தியம் அற்ப காரணத்தை முன்னிட்டு அஸ்தமித்திருந்தது.
மூத்த மனைவி சுங்கிடிச் சேலை வாங்கித் தராத கோபத்தில் தூக்குப் போட்டுக் கொண்டார் என ஊரெல்லாம் பேசிக்கொண்டு கலைந்தார்கள். பிறகு வந்தவரே ராமக்கா பாட்டி. அவரை பற்றித்தான் முன்னமே சொல்லியாச்சே. இப்படி தாத்தாவின் இரு மனைவிகளுக்கு நேர்ந்த கதியைக் கண்ட பின்னும் என் பாட்டி அவருக்கு மூன்றாம் மனைவியாகச் சம்மதிக்க வலுவானதொரு காரணம் இருந்திருக்கத் தான் வேண்டும்.
பாட்டியொன்றும் அதிசயிக்கத்தக்க குணாம்சங்கள் கொண்ட இளவரசியாகப் பிறந்து விடவில்லை, மூன்று மனைவிகளை மணந்து ஆண்டு அனுபவிக்க தாத்தாவும் கூட தசரத மகராஜா இல்லை தான். ஆனால், அவர்களைப் பற்றி பின்னாட்களில் நாங்கள் அப்படி நினைக்கத் தக்க வகையில் தான் இருக்கிறது அவர்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகள். அவையொன்றும் சோலைவனத்து மலர்ப்பாதைகள் அல்ல. கல்லும், முள்ளும் சமயத்தில் கொடும் விஷம் கொண்ட பாம்புகளும், தேள்களும் ஏனையை விஷ ஜந்துக்களும் சர்வ சுவாதீனமாக உலவிக் கொண்டிருந்த இந்தப் பூவுலகின் கப்பிப் பாதைகளில் தான். அந்தக் கரிசக்காட்டு மூலை முடுக்கெல்லாம் பாட்டியும், தாத்தாவுமாக எங்களுக்கென விட்டுச் சென்ற நினைவுகளில் ஆழ்ந்திருக்கையில் சில நேரங்களில் மிகுந்த ஆதூரத்தில் கண்கள் நனைவதைத் தவிர்க்க முடியவில்லை.
தாத்தாவுக்கு வாக்கு சாதூர்யம் அதிகம் என்பார்கள்.
பெரிதாக ஆஹா, ஓஹோவென செல்வம் கொட்டி அளக்கவில்லை என்றாலும் அவருக்கு என்று மேட்டமலையில் ஒரு பெத்த பெயர் இருந்தது. நாயக்கர்,தேவர், நாடார், பிள்ளைமார், பட்டியலினத்தவர் எனப் பலஜாதி மக்கள் புழங்கிய ஊரில் கிருஷ்ணசாமி நாயக்கருக்கு என ஒரு மரியாதை இருந்தது. அந்த மரியாதையோடு கணிசமான அளவில் நிலபுலன்களும், ஒரு தீப்பெட்டி ஆபீஸும் தாத்தாவுக்குச் சொந்தமென இருந்தது. அதையெல்லாம் சுட்டிக் காட்டித்தான் பாட்டியைப் பெண் கேட்டு சிந்தப்புலிக்குச் சென்றிருக்கிறார்.
பெண் பார்க்க வந்த அன்று, பாட்டியின் சிந்தப்புலி வீட்டின் கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சல் மெத்தையில் கால் மடக்கி அமர்ந்து தாத்தா ஆடிக் கொண்டிருக்க. பாட்டி, தாத்தாவை முதன்முறை கண்டது அந்தக் கோலத்தில் தான். தாத்தா நல்ல உயரம். காமராஜரைப் போல கைகள் இரண்டும் முழங்காலைத் தாண்டி நீளும். மொட மொடப்பான வெள்ளைக் கதர் வேஷ்டி, முழங்கை வரை நீளும் வெள்ளைக் கதர் சட்டை, தோளுக்கு வெளிர் காவி நிறத்தில் கதர் துண்டு. நல்ல அகலமான நெற்றி. தீட்சண்யமிக்க கண்கள். அதில் முதல் பார்வையிலேயே பாட்டிக்கென இத்தனூண்டு காதலும் தென்பட்டிருக்கலாம்.
அந்தக் காதல் கலந்த பிரியத்திலும் அவரது கம்பீரமான தோற்றத்திலும் பாட்டிக்கு தனக்கான எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை வலுத்திருக்கலாம்.
அன்றியும் இங்கே மட்டுமென்ன வாழ்கிறது. பிறந்த வீட்டில் அப்பா தான் பாசத்தையும், நேசத்தையும் கொட்டி வளர்த்தாரே தவிர பாட்டியின் அம்மா தன் பெண்மக்களைப் பொறுத்தவரை மிக மிகக் கண்டிப்பானவராகவே இருந்திருக்கிறார். சதா நேரமும் பெண்களை வாட்டி வதக்கி வேலை வாங்குவதில் கவனமாக இருந்தார் என்று பாட்டி சொல்லக் கேள்வி. அதில் அவர் தவறேதும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்தில் வீட்டுச் சூழல் அப்படி அவரைச் செய்ய வைத்திருக்கலாம்.
பிறந்த வீட்டில் நாள் முச்சூடும் ஓய்வு ஒழிச்சல் இன்றி வேலை செய்தும் கூட பெற்ற தாயிடமிருந்து ஆறுதலாக ஒரு வார்த்தை பெற்று விடமுடியாத நிராசையில் பாட்டி, தாத்தாவை மணந்து கொண்டு மேட்டமலைக்குப் போய் விட்டால் அங்கே வீட்டில் சமையல் வேலை மட்டும் தான். பிறகு அக்கடாவென பகலில் கொஞ்சம் ஓய்ந்திருக்கலாமே என்று எண்ணியிருக்கலாம். அப்படிச் சொல்லித்தான் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்.
பெண்ணைக் கொடுத்தால் போதும். அங்கே தோட்ட வேலைகளுக்கும், தீப்பெட்டி ஆபீஸ் வேலைகளுக்கும் பணியாட்கள் உண்டு. மாரியம்மாள் மூத்தார் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு சமைத்து இறக்கினால் போதும், கூடமாட ஒத்தாசைக்கு ஆட்கள் உண்டு என்று பாட்டியின் மாமனார் அளித்த வாக்குறுதியில் பாட்டிக்கு வெகு திருப்தி.
திருமணம் நடந்தது.
அன்றைய முன்மாலைப் பொழுதில் பெண்ணும், மாப்பிள்ளையுமாக முத்தால்நாயக்கன் பட்டி முதலாளியின் வில்வண்டியில் சிந்தப்புலி வீதிகளில் பட்டணப்பிரவேஷம் வந்தார்கள்... புதுப்பெண்ணையும், மாப்பிள்ளையையும் காண ஊரே வீதிகளில் திரண்டிருக்க பெண்ணைக் கொடுத்து விட்டு பாட்டியின் அம்மா உதிர்த்த வார்த்தைகள் என்ன தெரியுமா?
“ஆமா, நல்ல எளந்தாரிக்கு கட்டிக் கொடுத்து பொண்ணும், மாப்பிள்ளையுமா பட்டணப்பிரவேஷம் வர்றாங்க, அத ஓடிப்போய் வேடிக்கை பார்க்காதது ஒன்னு தான் கொறை!”
தன்னைப் பெற்ற அன்னையின் இந்த ஏகடியப் பேச்சை பாட்டி 88 வயதில் தனது இறப்பு வரையிலுமாக நினைவில் வைத்திருந்தார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
ஆண்டுகள் பல கடந்தும், சொன்னவர்களே மண்ணுக்குள் புதைந்து போன பின்னும் கூட அந்த வார்த்தைகளை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே நிஜம்.
//ஒரு இளம்பெண் தண்ணீர் குடத்துடன் நிற்கும் இந்த ஓவியம் ஓவியர் இளையராஜாவின் படைப்பு. தன் வாழ்நாள் முழுவதும் இறப்பிற்கு முதல்நாளிலும் கூட தண்ணீர்க்குடம் சுமக்கத் தயங்காத என் பாட்டியை இது எனக்கு நினைவுறுத்தியதால் வெறும் சித்தரிப்புக்காக மட்டுமே அதை இங்கே பயன்படுத்தியிருக்கிறேன். நன்றி.////
Comments
Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வாங்க பேசலாம்
வாங்க பேசலாம்
https://scontent.fmaa1-4.fna.fbcdn.net/v/t1.0-9/83031247_2744463838972223_2881599442715148288_n.jpg?_nc_cat=106&_nc_ohc=UrGY5cIADg0AX_vr6b5&_nc_ht=scontent.fmaa1-4.fna&oh=23aa98841d482b70c708601d20c780c1&oe=5EDBB95C
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/vaangapesalaam.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/vaangapesalaam.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy