உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.. -3

3 உன் முகம் பார்த்த அந்நொடியில்.. உயிர் பூவே மனதில் மலர்ந்தது... ' ஏன் சொல்லவில்லை... ?' வந்திருந்தவன் கேட்ட கேள்வியி...


3
உன் முகம் பார்த்த அந்நொடியில்..
உயிர் பூவே மனதில் மலர்ந்தது...


'ஏன் சொல்லவில்லை...?'
வந்திருந்தவன் கேட்ட கேள்வியில் பொதிந்திருந்த நியாயத்தில் அர்ச்சனா வேதனை கொண்டாள்...
யாரோ ஒருவன்.. அவளுடைய அம்மாவுக்கு அந்த வீட்டில் எந்த அளவிலான உரிமையும்.. மரியாதையும் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறான்.. அதற்கு தகுந்த பதிலைச் சொல்லி அவன் வாயை அடைக்க முடியாமல் அர்ச்சனா திகைத்து நிற்கிறாள் என்றால் இதை என்னவென்று சொல்லுவது..?
"அம்மாவ.. அம்மான்னு கூப்பிட்டே பழக்கமாகிருச்சுங்கய்யா.. இங்கே யாரும் அவங்க பெயரைச் சொல்லிக்கூடப் பேச மாட்டோம்.. அதனால சட்டுன்னு ஞாபகத்துக்கு வரலை.. நீங்க பெரிய மனசு பண்ணி இதை மன்னிச்சு மறந்திரனும்.." செக்யூரிட்டி கெஞ்சினான்..
"உங்க மேல என்ன தப்பிருக்கு..?"
வந்தவனின் பார்வை கூர்மையாக அர்ச்சனாவின் மீது படிந்து உன்மீதும்.. உன் அப்பாவின் மீதும்தான் தவறு இருக்கிறது என்று குற்றம் சுமத்தியது..
இதற்காகத்தான் விடியற்காலையில் அவன் கிளம்பி வந்திருக்கிறானா என்ற எரிச்சலுடன்..
"உள்ளே வாங்க.." என்றாள் அர்ச்சனா...
போனால் போகிறது.. உன்னை மன்னித்து இந்தப் பேச்சை இத்துடன் விட்டு விடுகிறேன் என்ற பாவனையுடன் அவன் குனிந்து அவன் பெட்டியை எடுத்துக் கொண்டான்.. அர்ச்சனா முன்னால் நடக்க அவளை ரசிக்காமல் முறைத்தபடி பின் தொடர்ந்தான்..
"பானு.. என்னத்த துடைச்சிருக்க..? பாரு.. சோபாவில தூசி படிஞ்சிருக்கு..?"
வேலைக்காரப் பெண்ணை அதட்டிக் கொண்டிருந்த பத்மா மகளின் பின்னால் வந்து கொண்டிருந்தவனைக் கண்டதும்.. ஆச்சரியப்பட்டுப் போனாள்..
"கதிர்.."
பத்மாவினாலும் அத்தகைய உற்சாகத்துடன் பேச முடியும் என்பதை அன்றுதான் அறிந்தாள் அர்ச்சனா...
"நீயேதானா..? என் கண்ணையே என்னால நம்ப முடியலையே.. வா.. வா.."
இருகைகளையும் நீட்டி வரவேற்ற பத்மாவை அதிசயமாகப் பார்த்தாள் அர்ச்சனா.. அதைவிட அதிசயமாக அந்தக் கற்பாறை முகத்துக்காரனின் பாறை முகம் பத்மாவைக் கண்டதும் பூவாக மலர்ந்தது..
'பாருடா.. இதத்தான் பாறையில பூ முளைக்கிறதுன்னு பாட்டுப் பாடி வைச்சாங்களோ...'
வந்தவன் குனிந்து பத்மாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.. அவன் உச்சந்தலையில் கை வைத்த பத்மாவின் முகத்தில் பாசமும்.. பரிவும் போட்டி போட்டுக் கொண்டு ததும்பி நின்றன.. வந்திருப்பவன் பத்மாவிற்கு அதி முக்கியமான விருந்தாளி என்பதை தாயின் முகத்தில் தெரிந்த உணர்வலைகளிலிருந்து யூகித்தாள் அர்ச்சனா..
"அர்ச்சனா.. இது யாருன்னு தெரியுமா..?"
அவனை பாசத்துடன் அணைத்தபடி மகளைப் பார்த்துக் கேட்டாள் பத்மா.. இல்லையென்ற பாவனையில் தலையை இடமும் வலமுமாக அசைத்த அர்ச்சனாவின் விழிகளில் குறும்பு கூத்தாடியது..
"தெரிந்திருந்தா சாரிடம் காலையிலேயே டியூசன் கத்துக்க வேண்டிய அவசியம் வந்திருக்காதும்மா.."
"டியுசனா..?" பத்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்..
"டியுசனேதான்.." என்றாள் அர்ச்சனா..
"எதைப் பத்தியாம்..?"
"மேனர்ஸைப் பத்தித்தான்.. எனக்கு மேனர்ஸ் தெரியலையாம்.. சாரைக் கைதட்டிக் கூப்பிட்டு விட்டேனாம்.. அதுக்காக எனக்கு மண்டகப்படியை நடத்தி முடிச்சுட்டு மேனர்ஸ்ன்னா கிலோ என்ன விலைன்னு கேட்கக் கூடாதுன்னு டியூசன் எடுக்க ஆரம்பிச்சுட்டார்.. ஒரு வழியா சாரை உள்ளே தள்ளிக்கிட்டு வருகிறதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்திருச்சு.."
அர்ச்சனா வெட்டி முறித்த அலுப்பை விவரிப்பதைப் போல விவரித்து வைக்க.. அந்தக் கதிர் உக்கிரமாக அவளை முறைத்தான்..
"த்ச்சு.. தள்ளிக்கிட்டு வந்தீங்களா..? என்ன பேச்சுன்னு இப்படிப் பேசறிங்க..? சகிக்கலை..."
அவன் முகத்தைச் சுளித்தபோதுதான் தனது வார்த்தைப் பிரயோகத்தின் தவறையே உணர்ந்தாள் அர்ச்சனா...
'இவனைப் போய் தள்ளிக்கிட்டு வந்தேன்னு சொல்லித் தொலைச்சுட்டேனே..' அவள் நாக்கைக் கடிக்க..
"ஏய்ய்.. உன்னை இவ தள்ளிக்கிட்டு வந்தாளாம் கதிர்.." பத்மா சிரிக்க ஆரம்பித்து விட்டாள்..
வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவள் சிரித்த விதத்தில் முறைத்தவனும்.. முறைக்கப்பட்டவளும் மனம் கனிந்தார்கள்..
'அம்மாவா இது..?'
கண்கள் பனிக்கத் தாயை பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் செவிகளில்..
"இங்கேயென்ன சிரிப்புச் சத்தம்..?" என்ற பிரகாசத்தின் கர்ஜனை வந்து விழுந்தது..
யாரோ மந்திரக் கோலைச் சுழற்றியதைப் போல நொடிப்பொழுதில் பத்மாவின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்ததைக் கவனித்த அந்தக் கதிரின் முகத்தில் கடினம் பரவுவதைக் கண்டாள் அர்ச்சனா.. பத்மாவின் மீதான அவனது அபிமானத்தை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.. ஏனோ அவளுக்கு அது ஒர் நிறைவையும் தந்தது..
"என் அண்ணன் மகன் ஊரிலிருந்து வந்திருக்கிறான்.." பத்மா முணுமுணுத்தாள்..
வந்திருந்தவனை ஏற இறங்கப் பார்த்த பிரகாசத்தின் விழிகளில் துளிக்கூட வரவேற்பின் சாயல் தென்பட வில்லை..
"உன் அண்ணனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறானா..? சொல்லவேயில்ல.." படு கிண்டலாக மனைவியிடம் கேட்டார்..
"என் பெரியப்பா மகனையும் அண்ணன்னுதான் சொல்லுவோம்.." முகம் மாறாமல் பதில் சொன்னாள் பத்மா..
"பெரியப்பா மகன்னா..?" புருவத்தைச் சுளித்து யோசித்த பிரகாசத்தின் முகம் மாறியது..
"ஓ.. அந்த சோமசுந்தரத்தையா சொல்கிற..?" கேட்டவரின் குரலில் கடுமை தாண்டவமாடியது..
"ம்ம்ம்.." அவர் முகம் பார்க்காமல் தலை அசைத்தாள் பத்மா..
"அந்த ஆளு என்னவோ கம்பெனி ஆரம்பிச்சு ஓசூர் பக்கம் ஒதுங்கிட்டாரே.. அப்புறம் அவரோட மகன் எப்படி இந்தப் பக்கம் வந்திருக்கிறாப்புல..?"
அவரின் அந்தக் கேள்வியை அர்ச்சனா ரசிக்க வில்லை.. வேண்டாத விருந்தாளியாக அவர் வந்திருப்பவனை நினைக்கிறார் என்பதை மட்டும் அவள் உடனடியாகப் புரிந்து கொண்டாள்.. பத்மாவின் முகக் கன்றலில் வேதனை கொண்டவள் பிரகாசத்தைக் கட்டுப் படுத்த வேண்டிய பொறுப்பு அவளுக்கு வந்து சேர்ந்து விட்டதைப் புரிந்து கொண்டாள்..
"வாட் இஸ் திஸ்ப்பா..? ரொம்ப நாள் கழிச்சு.. நம்ம அம்மாவப் பார்க்க அவங்க வழிச் சொந்தம்ன்னு ஒருத்தர் வந்திருக்கிறார்.. அவர் எப்படி.. எதுக்காக வந்திருக்கார்ங்கிற ஆராய்ச்சியெல்லாம் எதுக்கு..? அம்மாவைப் பார்க்க வந்திருக்கிறார்ன்னு எடுத்துக்கிட்டு அவரை ரிஸீவ் பண்ண வேண்டாமா..?"
மகளின் கண்டிப்பில் நிதானித்தார் பிரகாசம்.. வேண்டாவெறுப்பாக வந்திருந்தவனைப் பார்த்தவர்..
"வாங்க.." என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்தார்..
"ம்ம்ம்.." அவன் அந்த ஒற்றைச் சொல்லைக்கூட உதிர்க்காமல் முணுமுணுத்து வைத்தான்...
"பெயர் என்னன்னு சொன்னீங்க..?"
"இன்னும் சொல்லலை..."
அவனின் இடக்குப் பேச்சில் பிரகாசம் மீண்டும் மலையேறி விடக்கூடாதே என்று கவலைப்பட்டுப் போனாள் அர்ச்சனா..
அவளே வன்பாடு பட்டு அவருக்கு வேப்பிலை அடித்து மலையிறங்க வைத்திருக்கிறாள்.. அதைப் புரிந்து கொள்ளாமல் அவன் இந்த முறைப்பு முறைக்கிறானே...
'இவனை என்ன செய்யலாம்...?'
மகளிடம் பிரகாசத்தின் கோப விழிகள் கேட்டன.. அர்ச்சனா இமை மூடித் திறந்து அவரை அமைதிப் படுத்தினாள்...
"கதிர் வேலன்னு பெயர்.." பத்மா சொன்னாள்..
"ஏன்..? உன் அண்ணன் மகனுக்கு வாயில்லையா..? அவர் பெயரைக் கூட அவர் சொல்ல மாட்டாரா..?"
இப்போது இடக்குப் பேச்சை பிரகாசம் கையில் எடுத்துக் கொண்டார்...
"ஏன் இல்லை..? வாயெல்லாம் இருக்கிறது.. கேட்கிற விதத்திலே கேட்டா பதிலும் தானா வந்திருக்கும்.. இங்கே தான் அப்படியில்லையே.."
அந்தக் கதிர்வேலன் பிரகாசத்தை மலையேற வைப்பதிலேயே குறியாக இருந்தான்.. எதற்காக அவன் அந்த அளவுக்கு பிரகாசத்திடம் விரோதம் பாராட்ட வேண்டுமென்று அர்ச்சனாவுக்குப் புரியவில்லை.. அத்தையின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருப்பவன்.. அத்தையின் கணவரிடம் இப்படித்தான் பேசுவதா..?
கதிர்வேலன் பேசும் முறை தவறானது என்று அர்ச்சனா நினைத்தாள்.. ஆனாலும் அத்தி பூத்ததைப் போல அரிதாக பத்மாவின் வழி வகையில் பிறந்த வீட்டுச் சொந்தமென்று வந்திருப்பவனிடம் கண்டிப்பாக பேச அவளாலும் முடியவில்லை...
"அப்பா ஆபிஸ் கிளம்பற அவசரத்தில் இருப்பாங்க.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.. அம்மா.. என்னம்மா இது.. உங்க அண்ணன் மகன்ங்கறிங்க.. உட்காரச் சொல்லி முதல்ல காபி கொடுங்க.. பானு.. இங்கே வா.. மாடியில இருக்கிற கெஸ்ட் ரூமை சுத்தம் பண்ணிட்டு ஓடி வா.. இவர் அதில்தான் தங்கப் போறார்.. அப்பா.. நீங்களும் உட்காருங்க.. காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.. அம்மா ப்ளீஸ்.. இவங்களோடு சேர்த்து எனக்கும் ஒரு கப் காபி வேணுமே.."
அர்ச்சனா அழகாக நிலைமையைச் சமாளித்ததில் பத்மாவின் முகத்தில் நிம்மதி வந்தது.. கதிர்வேலனுக்காக மாடியிலிருக்கும் விருந்தினர் அறை தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற மன ஆறுதலுடன் அவள் காபியைக் கலக்கிக் கொண்டு வர சமையலறைக்கு விரைந்தாள்..
"இங்கே சமையலுக்கெல்லாம் ஆள் இல்லையா..?"
கதிர்வேலன் தோரணையாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து சோபாவில் கை போட்டபடி விசாரித்த விதத்தில் பிரகாசம் பல்லைக் கடித்தார்..
"அதுவா மிஸ்டர் கதிர்வேலன்.. உங்க அத்தைக்கு அண்ணன் மகனைக் கண்டதும் தலைகால் புரியலை போல.. அதான்.. தன் கையாலேயே காபியைக் கலக்கி உங்களுக்குக் கொடுக்கனும்ங்கிறதுக்காக போயிருக்கிறா.." பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கடித்து மென்று துப்பினார்..
அர்ச்சனாவுக்கு அதில் பிடித்தமில்லை.. அவருக்கான அனைத்து வேலைகளையும் பத்மாவே செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிரப்பித்து விட்டு.. இன்றுதான்
அவளை சமையலறையை அடையாளம் பார்க்க அனுப்பியிருப்பதைப் போல அவர் பேசிய விதத்தில் அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது..
"இல்லையேப்பா.."
சட்டென்று அவள் மறுத்துப் பேசியதில் கதிர்வேலனின் கண்களில் மின்னல் வந்து அமர்ந்தது.. அந்த மின்னலில் அவள் ஓர் நொடி பேச்சிழந்தாள்..
"இல்லைன்னா..?" என்ற பிரகாசத்தின் கடுமையில் பேச்சைத் தொடர்ந்தாள்..
"அம்மா இவருக்கு மட்டும் தனியாக் காபி கலக்கப் போகலையே.. உங்களுக்கும் எனக்கும் சேர்த்துக் கலக்கத் தானே போயிருக்காங்க.. அதைத்தான் சொன்னேன்.. அதோட.." அவள் முடிக்காமல் நிறுத்த..
"அதோட..?" என்று கேட்டு தொடர வைத்தார் பிரகாசம்..
"உங்களுக்கான வேலைகளை அம்மாவே பார்த்தாத் தானே திருப்தி வரும்..?" என்று அர்ச்சனாவின் விளக்கத்திற்கு..
"யாருக்குத் திருப்தி வரும்..?" என்று கேட்டு வைத்தான் கதிர்வேலன்...
"அப்பாவுக்குத்தான்.." தன்னையறியாமல் சொல்லி விட்டாள் அர்ச்சனா...
"அதானே பார்த்தேன்.." என்றான் கதிர்வேலன்..
பிரகாசத்தின் முகத்தில் கோபத்தின் சாயல் தெரிந்தது.. அவர் வீட்டில் அமர்ந்து கொண்டு.. அவர் மனைவி அவருக்குச் சேவை செய்வதை சட்டமாக விமரிச்சப்பவனை என்ன செய்தால் தேவலாம் என்ற கடுங்கோபம் அவருக்குள் சுழன்றது..
அவரால் எதுவும் செய்ய முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.. வந்திருப்பவன் சோமசுந்தரத்தின் மகன்.. பத்மாவை அவர் எப்படித் திருமணம் செய்து கொண்டார் என்ற விவரங்களை நிச்சயமாக அவன் அறிந்து வைத்திருப்பான்.. அவனுடைய தந்தையான சோமசுந்தரம் அவரால் முடிந்த அளவுக்கு பிரகாசத்தை எதிர்த்து நின்றார்.. பத்மாவை பிரகாசத்திற்கு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது என்று தடுத்துப் போராடினார்.. கடைசியில் பத்மாவின் கூடப் பிறந்தவராக இல்லாமல் ஒன்று விட்ட அண்ணனாக பிறந்து விட்ட ஒன்றினாலேயே உரிமையிழந்த வராக பிரகாசத்திடம் தோற்றுப் போனார்.. பத்மாவின் திருமணத்தைப் பார்க்க விரும்பாமல் அந்த தினங்களில் குடும்பத்துடன் சோமசுந்தரம் வெளியூர் சென்று விட்டதை நினைவு கூர்ந்தார் பிரகாசம்..
'அவன் மகன் எப்படியிருப்பான்.. அவனப் போலத் தானே இருப்பான்..'
பிரகாசத்தின் மனதில் வஞ்சம் வந்தது.. வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியை பகைமையுடன் ஓர் பார்வை பார்த்து வைத்தார்.. அந்தப் பார்வைக்கு அசைந்து கொடுக்காமல் கல்லூளி மங்கனாக அவன் அமர்ந்திருந்த தோரணையில் அவர் வெகுண்டார்.. வெளிப்படையாக அவரின் விரோதத்தை அவன் மீது காட்ட முடியாததில் அவரின் கோபம் அதிகரித்தது..
அவ்வாறு அவர் வெளிப்படையாக அவரின் பகையுணர்வை காட்டி விட்டால் அர்ச்சனாவின் மனதில் தந்தையின் மீதான உயர்ந்த பிம்பம் மறைந்து விடும்.. தாயின் உறவினனாக வீட்டுக்கு வந்திருப்பவனை அவமதித்த குற்றத்தை அவள் மன்னிக்க மாட்டாள்.. அவளுக்கும் தந்தைக்கும் நடுவில் இடைவெளி ஏற்பட்டு விடும்.. அத்துடன் எதனால் அந்த பகையுணர்ச்சி அவர் மனதில் ஏற்பட்டிருக்கிறது என்பதை மட்டும் அவள் அறிந்து விட்டால் வேறு வினையே வேண்டாம்...
'என் மக.. காலகாலத்துக்கும் என் முகத்தில் விழிக்க மாட்டா..' பிரகாசம் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டார்.
நல்லவேளையாக அந்தச் சூழ்நிலையை அதிக நேரம் நீடிக்க விடாமல் பத்மா காபிக் கோப்பைகளுடன் வந்து விட்டாள்.. கதிர்வேலனிடம் அவள் காபிக் கோப்பையை நீட்டும் போது அவள் கண்களில் தெரிந்த வாத்சல்யத்தில் அர்ச்சனா மனம் நெகிழ்ந்தாள்.. அதே வாத்சல்யத்தையும் பரிவையும் கதிர்வேலனின் விழிகள் பிரதிபலித்ததில் ஆச்சரியப்பட்டுப் போனாள்..
"நீங்களும் உட்காருங்க அத்தை.."
பத்மாவின் வீட்டில் பத்மாவையே உபசரித்த அவனின் அந்த மனோதைரியத்தை வியந்து போனாள்.. பத்மா மறுத்துப் பேசாமல் மகளின் அருகில் அமர்ந்து விட்டதில் பிரகாசத்தின் முகம் சுருங்கியது..
அவள் இதைப் போல பிரகாசம் இருக்கும் போது இணக்கமாக அமர்ந்து பேசியதில்லை.. அவரும் பேச விட்டதில்லை.. அர்ச்சனாவின் வற்புறுத்தலுக்காக
அவளும் குடும்பத்துடன் பேசலாம் என்று அமர்ந்து விட்டால் போதும்.. குளவியைப் போலக் கொட்டித் தீர்த்து விடுவார்..
"இந்த டீப்பாயில ஏன் தூசியாயிருக்கு..? வேலைக்காரி பெருக்கி சுத்தம் பண்ணினா நீ எதையும் பண்ணக் கூடாதுன்னு சட்டம் ஏதும் போட்டிருக்கா..? உன் பிறந்த வீட்டில வேலைக்காரங்கதான் எல்லாத்தையும் செய்தாங்களா..? நீ செய்ததே இல்லையா..? இங்க வந்து தான எல்லாத்தையும் பார்த்திருக்க...? வேலை செய்கிறவங்க ஒழுங்கா வேலை செய்கிறாங்களான்னு கூடப் பார்க்க மாட்டியா..? அதைக்கூட உன்னால செய்ய முடியாதா..?"
"அந்த ஷோ கேஸில பொம்மை ஏன் திரும்பியிருக்கு..? அதை யார் திறந்தது..? நீ திறக்கலைன்னா என்ன.. அது திரும்பியிருக்கிறது உன் கண்ணில படலையா..? ஒழுங்காத் திருப்பி வைக்கனும்கிற அறிவு கூட இல்லையா..? அதுசரி.. இங்க வந்து தான நீ எல்லாத்தையும் பாத்திருக்க.. உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்..?"
"அந்த பிளவர் வாஷில பூ பிரஷ்ஷா இல்லயே.. ஏன்..? இன்னைக்குப் பூத்த பூவைப் பறித்துக்கிட்டு வந்து அடுக்கி வைக்க உனக்கு நான் சொல்லிக் கொடுக்கனுமா..? உன் பிறந்த வீட்டப் போலவே இங்கேயும் அழுது வடிஞ்சுக்கிட்டு இருக்க முடியாது.. இதையெல்லாம் கவனிச்சுச் செய்யப் பழகு.."
அவர் பேசும் பேச்சில் அவர்களுடன் சேர்ந்து உட்காராமல் விலகி நிற்க பழகிக் கொண்டாள் பத்மா..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.. -3
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.. -3
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirththene-3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirththene-3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy