உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.. -2

2 ஜன்னலோர எதிர்காற்று.. முகத்தில் படிந்து மனதில் படிந்தது... "எப்படியிருக்க பத்மா.. ?" காவேரி ஆற்றங்கரையில் அர்ச்சன...


2
ஜன்னலோர எதிர்காற்று..
முகத்தில் படிந்து மனதில் படிந்தது...


"எப்படியிருக்க பத்மா..?"
காவேரி ஆற்றங்கரையில் அர்ச்சனாவுடன் அமர்ந்து மகளுக்கு பாட்டுச் சொல்லிக் கொண்டிருந்தவளிடம் ஏக்கமும்.. நிராசையும்.. இழப்பின் வலியும் முகத்தில் அப்பியிருக்க கேள்வி கேட்டபடி வந்து நின்ற அந்த மணிதரை நினைத்துப் பார்த்தாள் அர்ச்சனா..
அவரை நிமிர்ந்து பார்த்த பத்மாவின் விழிகளில் தெரிந்த துடிப்பை அர்ச்சனா இனம் கண்டு கொண்டாள்..
ஒரு நொடிதான்.. ஒரேயொரு நொடிதான்.. தன் மனதை மறைத்தவளாக.. பாறை போன்ற இறுகிய முகத்துடன் ஆற்று நீரை வெறித்துப் பார்த்தவள்.. அப்படியொரு நபர் அங்கே நின்று நலம் விசாரித்துக் கொண்டிருப்பதை அறியாதவளைப் போல மகள் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
"நீ பாடும்மா.."
"என்கிட்டப் பேச மாட்டியா பத்மா.."
"அர்ச்சனா.. பாட்டைக் கவனி.."
"நானென்ன செய்தேன் பத்மா..?"
"அர்ச்சனா.. சொன்னதைக் கேட்காம அங்கேயென்ன வேடிக்கை வேண்டிக்கிடக்கு.. அடி வேணுமா..?"
"வேண்டாம் பத்மா.. என்மேல இருக்கிற கோபத்தை குழந்தைமேல காட்டாதே.. நீ தேவதை..! தேவதைகள் குழந்தைகளை அடிக்க மாட்டாங்க.. கொஞ்சுவாங்க.. நீ தேவதையாவே இரு.."
அந்த மனிதர் விறுவிறுவென்ற நடையுடன் போய் விட்டார்.. அவர் போன திக்கை வெறித்துப் பார்த்த பத்மாவின் கண்களில் தெரிந்த வேதனையும்.. கண்ணீர் துளிகளும் வெகுநாள்கள் வரை அர்ச்சனாவின் மனதை அறுத்துக் கொண்டேயிருந்தது..
"அவர் யாரும்மா.." அர்ச்சனா கேட்டாள்தான்..
"தோற்றுப் போன ஜீவன்.. என்னைப் போலவே.." துயரத்துடன் பதில் சொன்னாள் பத்மா..
அதற்குப் பின்னால் அந்த மனிதரை அர்ச்சனா பார்த்ததே இல்லை.. பத்மாவும் அவரைப் பற்றிப் பேசியதில்லை... அவளைப் பொறுத்தவரை அவள் வாழ்வின் பற்று கோலாக மகளை இறுக்கிப் பற்றிக் கொண்டிருந்தாள்.. அவள் கண்களில் மகளைக் காணும் போது மட்டும் உயிர்ப்பு வந்து நிற்கும்.. மகளின் கன்னம் பிடித்து...
"சின்னஞ்சிறு கிளியே - கண்ணம்மா..
             செல்வக் களஞ்சியமே..!
    என்னைக் கலி தீர்த்தே - உலகில்
             ஏற்றம் புரிய வந்தாய்..
    பிள்ளைக் கனியமுதே..! - கண்ணம்மா..
             பேசும் பொற்சித்திரமே..
    அள்ளியணைத்திடவே - என் முன்னே
             ஆடி வருந்தேனே..!"
என்று பாடுவாள்.. பத்மா பாடும் போது தாய்மையின் ஜ்வலிப்பு அவள் கண்களில் தெரியும்..
அவள்.. அவளாக.. மகளிடம் மட்டுமே இருந்தாள்..
அர்ச்சனாவும் அன்னையின் மனதைப் போல அவள் கொஞ்ச ஆடிவரும் தேனாகத்தான் இருந்தாள்.. கூடவே பிரகாசத்தின் செல்வக் களஞ்சியமாகவும் அவள் இருந்தாள்.
"கோனாட்சி பல்லவர்தம்..
             குளிர்சோலை காஞ்சிதனில்..
    காமாட்சி என்ற பெயர் எனக்கு..
             கொடுங் கோலாட்சி
         தனை எதிர்க்கும்
             மாரியம்மன் என்ற பெயர்
         கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு .."
பத்மாவின் பாடல் ஒலி பூஜையறையிலிருந்து இடம் பெயர்ந்து ஹாலுக்கு வந்தது.. அர்ச்சனா மாடி ஹாலின் கைப்பிடியில் சாய்ந்து அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அந்த அதிகாலையிலும் குளித்து.. மங்கலகரமான அழகுடன் நெற்றியில் குங்குமத் தீற்றுடன் ஒரு கையில் பூஜை மணியடித்தபடி.. மறுகையில் சாம்பிராணிப் புகையை வீடு முழுவதும் காட்டிக் கொண்டிருந்தவள் அண்ணாந்து மகளைப் பார்த்து விட்டாள்.. அவள் விழிகளில் மின்னல் வந்தது.. அர்ச்சனா தாயைப் பார்த்துக் கையாட்டினாள்.. சிரிப்புடன் தலையாட்டியபடி பாடலைத் தொடர்ந்தாள் பத்மா...
"ஆறென்றும்.. நதியென்றும்..
             ஒடையென்றாலும் - அது
    நீரோடும் பாதைதன்னைக்
             குறிக்கும்..
    நிற்கும் ஊர் மாறி..
             பேர் மாறி..
    உருமாறி.. கருமாரி..!
             ஒன்றே ஓம்சக்தி யென
    உரைக்கும்..."
அர்ச்சனா தெய்வீக இசையில் நனைந்தபடி மாடிப் படிகளில் இறங்கினாள்.. பூஜையறையில் சாம்பிராணிக் கரண்டியையும்.. மணியையும் வைத்து விட்டுத் திரும்பிய பத்மா அவளைப் பார்த்துச் சிரித்தாள்...
"காபி கலந்து கொடுக்கவா..?"
"ஊஹீம்.. டீ தான் வேணும்.. தூக்கம்.. தூக்கமா வருதும்மா.."
"எப்ப எழுந்திருச்ச..?"
மகளிடம் கேட்டபடி அடுப்பைப் பற்ற வைத்து டீ போட ஆரம்பித்தாள் பத்மா..
"ஸாரிம்மா.. உங்களுக்கு வேலை வைச்சுட்டேனா..?" அர்ச்சனா தயக்கத்துடன் கேட்டாள்..
"இல்லைன்னா மட்டும் எனக்கு வேலை-யிருக்காதா..?" மகளைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தாள் பத்மா..
சிரித்தபோது தெரிந்த அவளின் பல்வரிசையில் லயித்துப் போனாள் அர்ச்சனா..
'இந்த அம்மாதான் எத்தனை அழகா இருக்காங்க..' அவளின் மனம் பெருமை கொண்டது..
அந்த வகையில் அர்ச்சனா பத்மாவின் ஜாடையைக் கொண்டிருந்தாள்.. பத்மாவின் எழுமிச்சைப் பழ நிறத்தைப் போல இல்லாவிடினும்.. கோதுமையின் நிறத்தில் பத்மாவின் முக அமைப்பையும்.. கொடி போன்ற உடல் வாகையும்.. அடர்ந்த நீண்ட கூந்தலையும் அர்ச்சனா கொண்டிருந்தாள்..
"இன்னும் கொஞ்ச நேரத்தில் ராஜாத்தியம்மாவும்.. பானுவும் வந்திருவாங்க.. அவங்க வந்த பின்னாலே அவங்கவங்க வேலையை ஆரம்பிக்கப் போறாங்க.. நீங்க எதுக்காக சிரமப் படனும்..?" பரிவுடன் வினவியபடி டீக் கப்பை வாங்கிக் கொண்டாள் அர்ச்சனா...
"அவங்க வந்தாலும் அவங்களுக்கு வேலை சொல்கிற வேலை எனக்கிருக்கே.. அவங்க ஒழுங்கா வேலை செய்கிறாங்களான்னு கவனிச்சுக்கிற வேலையும் சேர்ந்திருக்கே.. அதோட உன் அப்பாவுக்குத்தான் மத்தவங்க காபி கலந்து கொடுத்தாப் பிடிக்காதே.."
இதைப் பெருமையுடன் சொல்லாமல் வெறுமையுடன் அவள் சொல்வதை அர்ச்சனாவால் புரிந்து கொள்ள முடிந்தது.. மனைவியின் கைப்பக்குவத்தை ரசித்துக் குடிக்கிறவராக பிரகாசம் இருந்திருந்தால் அந்த வெறுமை அவளுக்குள் வந்திருக்காது என்று அர்ச்சனா நினைத்துக் கொண்டாள்...
பிரகாசம் கோணல்புத்தி படைத்தவர்.. மனைவியின் ஏழ்மையான பிறந்த வீட்டை அவரால் மறக்க முடியவில்லை.. அங்கே பிறந்து வளர்ந்தவள் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டேயிருக்க வேண்டுமென்பது தான் அவரது நோக்கமாக இருந்தது.. அவர் கண்முன்னால் பத்மா ஓய்ந்து போய் உட்கார்ந்து விட முடியாது.. கண் அயர்ந்து உறங்கி விடவும் முடியாது...
தாயை அனுதாபத்துடன் பார்ப்பதைத் தவிர அவளை அந்தத் துன்பங்களிலிருந்து மீட்டெடுக்க அர்ச்சனாவால் முடியவில்லை..
"வேற ஏதாவது வேணுமாடா செல்லம்..?" மகளைக் கொஞ்சலுடன் கேட்டாள் பத்மா..
"இல்லைம்மா.." காலிக் கப்பை சமையலறை சின்க்கில் போட்டு விட்டு படிப்பைத் தொடர மாடியேறினாள் அர்ச்சனா..
புத்தகத்தை விரித்ததும் மற்ற நினைவுகள் விலகி ஓடிவிட படிப்பில் ஆழ்ந்து விட்டாள்.. சுற்றுப் புறத்தை கவனிக்கவில்லை..
"கொஞ்சம் நகர்ந்துக்கங்க சின்னம்மா.."
மாடி ஹாலைப் பெருக்கியபடி வந்த பானு சொன்னதும் தான் அவள் அங்கே இருப்பதையே கவனித்தாள் அர்ச்சனா..
கைகளை நீட்டி.. உயர்த்தி சோம்பல் முறித்தபடி எழுந்து நின்றவள்..
"எப்ப வந்த பானு..?"
குனிந்து புத்தங்களை அள்ளியபடி கேட்டாள்.. அர்ச்சனா..
"அப்பவே வந்திட்டேன் சின்னம்மா.." பானு பெருக்குவதைத் தொடர்ந்தாள்..
அர்ச்சனா புத்தகங்களை அவள் அறையில் வைத்து விட்டு மணி பார்த்தாள்.. கல்லூரிக்கு கிளம்புவதற்கு வெகு நேர இடைவெளி இருந்தது.. திரும்பவும் படிப்பில் மூழ்க அவளால் முடியவில்லை.. தொடர்ந்து படித்ததில் ஓர்வித மான சலிப்புணர்வு ஏற்பட்டிருந்தது.. தூங்க முடியாமல் டீயின் உற்சாகம் தடுத்ததில்.. சற்று நேரத்திற்கு தோட்டத்தில் உலவி விட்டு வரலாம் என்று அவள் தோட்டத்துப பக்கமாக போனாள்.. முதல்நாளின் மழை ஈரத்தை தோட்டத்தின் ஈரமணலும்.. நனைந்த தளிர்களும் உணர்த்த.. செடிகளின் இலைகளில் இருந்த மழைநீரை விரலால் சுண்டினாள்.. அது அவள் முகத்தில் தெறித்து அவளுக்குள் சிலிர்ப்பை உண்டாக்கியது..
"ஸ்ஆ...ஆ.."
கன்னத்தில் இரு கைகளையும் வைத்து அந்த சில்லிப்பை ரசித்தவள் காம்பவுண்டின் அருகே நடந்த உரையாடலில் திரும்பிப் பார்த்தாள்..
"யார் நீங்க..?"
வாசலில் இருந்த செக்யூரிட்டி காம்பவுண்டுக்குள் நுழைய முயன்று கொண்டிருந்தவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.. வந்திருந்தவன்.. உயரத்திலும்.. கம்பீரமான தோற்றத்திலும் ஈர்க்கப்பட்ட அர்ச்சனா...
'யார் இவன்..?' என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டபடி.. அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கவனித்தாள்...
"இது பத்மா அத்தையோட வீடுதான..?"
வந்தவனின் கேள்வியில் அர்ச்சனா ஆச்சரியப் பட்டுப் போனாள்.. அதுவரை பத்மாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு எந்த விருந்தாளியும் அவர்களின் வீட்டுக்கு வந்ததில்லை.. பத்மாவின் பிறந்த வீட்டுச் சொந்தங்களை அவள் மட்டும் மகளின் துணையுடன் போய் பார்த்து வருவாள்.. ஆனால்.. அவளைத் தேடிக் கொண்டு அவளின் பிறந்த வீட்டுச் சொந்தங்கள் அந்த வீட்டின் படியேறியது கிடையாது..
வாசலில் காவல் காக்கும் செக்யூரிட்டி பத்மாவை 'அம்மா' என்று அறிந்தும்.. அழைத்தும் பழக்கப்பட்டவன்.. அந்த வீட்டில் பிரகாசத்தின் பெயரும்.. அர்ச்சனாவின் பெயரும் மட்டுமே அதுவரை உச்சரிக்கப் பட்டு வந்திருந்த படியால் அவனுக்கு சட்டென்று வந்திருப்பவன் சொல்வது அந்த வீட்டின் எஜமானியின் பெயரை என்பது மறந்து போய் விட்டது..
அவனும்தான் என்ன செய்வான்..? பிரகாசம் மட்டுமே பத்மாவை பெயர் சொல்லி அழைக்கக் கூடியவர்.. அவரும் அந்தப் பெயரை வீட்டுக்குள் தான் சொல்லுவார்.. எனும் போது அவனுக்கு பத்மா என்பது யாருடைய பெயர் என்பது சட்டென்று நினைவுக்கு வராததில் வியப்பொன்றும் இல்லையே...
அந்த வீடு பிரகாசம் ஐயாவின் வீடு என்றுதான் மற்றவர்களால் அறியப் பட்டிருந்தது.. அந்த வீட்டில் வந்த இதுதானே பத்மா அத்தையின் வீடு என்று ஒருவன் கேட்டால் செக்யூரிட்டி விழிக்க மாட்டானா..?
அர்ச்சனாவுக்கு மனம் தாங்கவில்லை.. செக்யூரிட்டியின் திருதிருத்தலைக் கண்டு.. ஒருவேளை வீடு மாறி வந்து விட்டோமோ என்ற குழப்பத்துடன் வந்தவன் திரும்ப யத்தனித்ததைக் கண்டவள் அவசரமாக கையைத்தட்டி அவனை அழைத்தாள்.
"ஹலோ.. உங்களைத்தான்.. ஒன் செகண்ட்.."
அவளின் கைதட்டலில் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் கோபம் படர்ந்தது.. அது எதனால் வந்தது என்று புரியாதவளாக வாசலுக்கு விரைந்தாள் அர்ச்சனா..
"என்னையா கைதட்டிக் கூப்பிட்டிங்க..?" அவன் முகச்சுளிப்புடன் வினவினான்..
"ம்ம்ம்.. உங்களைத்தான் கூப்பிட்டேன்.. ஏன் கேட்கறிங்க..?" புரியாமல் கேட்டாள் அர்ச்சனா..
"இதுதான் உங்க ஊரின் மேனர்ஸா..?" சுள்ளென்று அவன் கேட்டான்..
"எதைச் சொல்கிறீங்க..?" அப்போதும் அர்ச்சனாவுக்கு அவன் எதற்காக கோபப் படுகிறான் என்று புரியவில்லை..
"எதுன்னு கூடத் தெரியலையா..? குட் மேனர்ஸ்.. கீப் இட் அப்.. கைதட்டிக் கூப்பிடறிங்களே.. அதைச் சொன்னேன்.." அவன் இகழ்ச்சியாக அவளை மேலும் கீழுமாக பார்த்து வைத்தான்..
'என் வீட்டுக்கே வந்து நின்னு என்னை இந்தப் பார்வை பார்க்கிறானே..' அவன் துணிச்சலில் அர்ச்சனா அவனை ஏற இறங்க பார்த்து வைத்தாள்...
'அம்மா பெயரைச் சொல்லிக்கிட்டு வந்து நிற்கிறானேன்னு கூப்பிட்டா.. சிலுப்பிக்கிறான்..'
அர்ச்சனா அவனைத் தோரணையுடன் பார்த்தபடி..
"வேற எப்படிக் கூப்பிடறது..? அதையும் நீங்களே சொல்லிருங்களேன்.." என்று கேட்டு வைத்தாள்..
"கிண்டலா..?" அவன் கண்சிவந்தான்..
"ஒரு சுண்டலுமில்ல.. காலங்கார்த்தாலே எங்க வீட்டு வாசலுக்கு வந்து எனக்கு மேனர்ஸ்கத்துக் கொடுக்கறிங்களே.. அதை முழுசாக் கத்துக் கொடுங்கன்னு தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்.. இதில கிண்டல் எங்கே வந்தது..?" அர்ச்சனா புருவங்களை உயர்த்தினாள்..
"கை தட்டிக் கூப்பிட்டா மேனர்ஸைப் பத்திச் சொல்லிக் கொடுக்க மாட்டாங்களா..?" அவன் எதிர் கேள்வி கேட்டான்..
"அதைச் சொல்லிக் கொடுக்கிறதுக்குப் பதிலா உங்க பெயரைச் சொல்லிக் கொடுக்கலாம்.. அதைச் சொல்லாம எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மா பெயரைச் சொல்லி விசாரிச்சுட்டு.. திரும்பிப் போகப் பார்த்தா கைதட்டிக் கூப்பிடாம என்ன செய்கிறது..? நானென்ன உங்க பெயரைத் தெரிஞ்சு வைச்சுக்கிட்டேயா வஞ்சனை பண்றேன்..? பாத்திரத்தில் இருந்தால்தான் கரண்டியில் வரும் சார்.. உங்க பெயர் என்னன்னு எனக்குத் தெரிந்திருந்தாத்தான் அதைச் சொல்லி உங்களை நான் கூப்பிட முடியும்.. இல்லைன்னா கை தட்டல்தான்.."
அர்ச்சனா நீளமாக விளக்கம் சொல்லிய விதத்தில் அவன் விழிகளில் ஒரு மின்னல் வந்து போனதை அவள் கவனித்தாள்.. அதில் அவள் மனதில் ஓரமாக சிறு மகிழ்வு ஏற்பட்டது எதனால் என்றுதான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை..
அவன் விழிகளில் சுவராஸ்யத்தின் சாயல் லேசாக கோடிட்டு மறைந்தது.. அவன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவனாக கற்பாறை போல இறுகிய முகத்துடன்..
"நீங்க பத்மா அத்தையின் பெண்ணா..?" என்று கேட்டான்..
"ம்ம்ம்.." தலையசைத்தவள் செக்யூரிட்டியைப் பார்த்து..
"நம்ம வீட்டுக்குத்தான் வந்திருக்காங்க.. அம்மா பெயரைச் சொன்னதும் உங்களுக்கு உடனடியா யாரைச் சொல்றாங்கன்னு புரியலை போல.." என்றாள்..
"அது எப்படி..?" முகச்சுளிப்புடன் கேட்டான் அவன்..
"இந்த வீட்டோட எஜமானி யாருன்னு செக்யூரிட்டிக்குத் தெரிந்திருக்க வேணாமா..? அவங்க வீட்டில வேலை பார்த்துக்கிட்டு அவங்க பெயரைச் சொன்னா அது யாருன்னு தெரியாம இந்த ஆளு இந்த முழி முழிக்கிறாரு.. நீங்களும் அதை ஏன்னு கேட்காம இவருக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு நிற்கறிங்க.. இங்கே என்னதாங்க நடக்குது..?"
அர்ச்சனா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவளால் அவனது கேள்வியை எதிர்நோக்க முடியவில்லை.
'நியாயமான கேள்விதானே..' சங்கடத்துடன் மௌனித்தாள்..
"இப்பத்தான் என்னைப் பார்த்திருக்கீங்க.. அதுக்குள்ள என் பெயரைத் தெரிந்திருந்தாத்தானே கூப்பிட முடியும்ன்னு சொன்னீங்கள்ல.. அதைப் போல வீட்டின் எஜமானியின் பெயர் என்னன்னு மத்தவங்களுக்கும் தெரியப் படுத்தி வைக்கனும்.. அப்பத்தான் அவங்க என்னைப் போல எஜமானியம்மா பெயரைச் சொல்லிக் கிட்டு வருகிறவங்களை அடையாளம் கண்டுக்க முடியும்ன்னு ஏங்க உங்க யாருக்குமே தோணலை..?"
அவனின் தார்மிக கோபத்தில் அர்ச்சனாவுக்குள் மெலிதான ஆச்சரியம் ஏற்பட்டது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.. -2
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.. -2
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirththene-2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirththene-2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy