உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -10

10 சொல்லாமலே பூப்பூத்த மனதை.. சொல்லிடவே வார்த்தைகள் தேவை.. "டிங்.. டிங்.." கோவில் மணியோசையில் கோபுரத்தில் கூடு கட்ட...


10
சொல்லாமலே பூப்பூத்த மனதை..
சொல்லிடவே வார்த்தைகள் தேவை..


"டிங்.. டிங்.."
கோவில் மணியோசையில் கோபுரத்தில் கூடு கட்டியிருந்த புறாக்கள் சிறகடித்து பறந்தன.. கற்கள் பதிக்கப் பட்டிருந்த தரையில் தண்ணீர் தெளித்திருந்ததில் பாதங்கள் உணர்ந்த வெம்மையில்லாத ஈரத்தில் கோவிலுக்கே உரிய ஒரு தன்மையினை உணர்ந்தாள் அர்ச்சனா...
"அண்ணியும் நானும் அடிக்கடி கோவிலுக்குப் போவோம்.."
அந்த நாள் ஞாபகத்தில் மூழ்கினாள் பத்மா.. அதைச் சொல்லும் போது அவளையறியாமல் வெளிப்பட்ட பெருமூச்சில் கலந்து கொண்டவனைப் போல கதிர்வேலன் மௌனமாக நடந்தான்...
"முற்றத்திலே இருந்த முல்லைக் கொடியிலே.. கொடி மலராப் பார்த்துப் பறித்து நெருக்கமான தொடுத்து வைச்சிருப்பாங்க.. நான் போனதும் என் தலை நிறைய வைத்து விடுவாங்க.. அதுக்குப் பின்னாலே நாங்க கதை பேசிகிட்டே கோவிலுக்குப் போவோம்..."
பத்மாவின் விழிகள் கடந்து போன காலத்தின் நினைவுச் சுவடுகளில் பதிந்து கிடந்தன.. காலத்தை இழுத்துப் பிடித்து அதில் கால் பதிக்க முயன்றவளைப் போல அவளின் பரிதவிப்பு இருந்தது..
கடந்து போன காலத்தை இழுத்துப் பிடிக்க எவரால் முடியும்..? செலவளித்த பணத்துளிகளை சம்பாதித்து விடலாம்.. கடந்து போன மணித்துளிகளை சம்பாதித்து விட முடியுமா..?
முடியாது என்பதை உணர்ந்திருந்ததினால் பத்மாவினால் நடந்தவைகளை நினைத்துப் பார்த்து அசைபோட மட்டுமே முடிந்தது.. கதிர்வேலனால் அவளது துயரத்தைப் போக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது..
"அண்ணன் சொல்லுவார்.. பெரிய நாயகி.. நான் உன்னைக் காதலிக்கிறேனோ இல்லையோ.. என் தங்கை உன்னைக் காதலிக்கிறாடிம்பார்.."
இதைச் சொல்லும் போது பத்மாவின் குரல் தேம்பியது.. அவள் விழிகள் உதிர்த்த கண்ணீர் துளிகளை அவள் இடது கரத்தால் துடைத்தபடி.. வலது கரத்தில் அர்ச்சனைப் பொருள்கள் அடங்கிய பூக்குடையை இறுகப் பிடித்தபடி பேசினாள்...
"அண்ணி சிரிப்பாங்க... அவங்க என் மேல வைச்சிருந்த பாசம் தான் கதிர் அவங்க சொந்தத்தை அழிச்சிருச்சு.. என்மேல அவங்க காட்டின பிரியத்துக்காக அவங்களுக்கு பிரியமானவங்கள வாழ விடாம செஞ்சிட்டாங்க.. நான் மட்டும் அண்ணிகூட அந்த அளவுக்கு இழையாம இருந்திருந்தா.. அவங்க சொந்தம் வாழ்ந்திருக்கும் கதிர்.. நான் அதைச் செய்யாமல் போனேன்.. "
எதற்காக அம்மா இந்த வார்த்தைகளைக் கூறுகிறாள் என்று தெரியாமல் திகைத்தாள் அர்ச்சனா..
அவர்களுடன் கோவிலுக்கு வந்திருந்த கதிர்வேலன் பத்மாவை அமைதிப் படுத்த விரும்பாமல் அவளை அவள் போக்கிலேயே பேசவிட்டு மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது அவளுடைய திகைப்பை அதிகப் படுத்தியது..
"என் கூடப்பிறந்த அண்ணன் தன் சுயநலத்தைப் பார்த்துக்கிட்டு தள்ளி நின்னாரு.. என் அக்கா என்னை சுயநலம் பிடிச்சவன்னு குத்தம் சொல்லுச்சு.. என்னைப் பெத்தவங்க ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நாங்க நிற்க ஒரு வழிகிடைச்சிருக்குடி மகளேன்னு கதறினாங்க.. நான் ஊமையா நின்னேன் கதிர்.. பேச வாயிருந்தும் பேச முடியாத எனக்கு ஆதரவா என் பெரியப்பாமகனான உங்க அப்பா தானே கதிர் பேசினார்..? எனக்காக போராடினாரே.. அவர் பேச்சுக்கும் அவங்க கட்டுப் படலையே.. கடைசியிலே என்னையும் ஆத்தில தள்ளி விட்டு.. நீச்சலடிக்க முடிஞ்சா நீந்திவான்னு சொல்லிட்டு.. மத்தவங்களையும் கடும் பாலைவனத்தில தள்ளி விட்டுட்டாங்களே.. அப்பயும் என் அண்ணி என்னைப் பார்த்து ஒற்றை வார்த்தை சொல்லலையே..."
"இப்பவும் அம்மா உங்களைப் பத்தி உயர்வாத்தான் பேசறாங்க அத்தை.. குறைவாய் பேசினதில்லை.." கதிர்வேலன் மௌனம் கலைத்தான்...
"அவங்க யாரு கதிர்.. பெரிய நாயகியாச்சே.. பெயரிலேயே பெருந்தன்மையை வைச்சிருக்கிறவங்-களாச்சே.. எப்படிச் சொல்வாங்க..? அண்ணி தங்கம் கதிர்.. நான்தான் பித்தளையிலும் சேர்த்தியில்லாத ஈயம்.."
"ம்ப்ச்சு.. என்ன பேச்சு இது அத்தை.. நாம எதுக்காக கோவிலுக்கு வந்திருக்கோம்..? அர்ச்சனாவுக்கு எக்ஸாம் முடிஞ்சிருக்கு.. இத்தனை நாளா விழுந்து விழுந்து படிச்ச பொண்ணுக்கு மாறுதலா இருக்கட்டுமேன்னு கோவிலுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கோம்.. இங்கே வந்து இப்படிப் பேசலாமா..?"
பத்மா அதற்காக மட்டும் கோவிலுக்கு வந்திருக்க மாட்டாள் என்று அர்ச்சனா நினைத்துக் கொண்டாள்.. அவளுக்கு மனம் விட்டுப் பேச இடம் தேவைப் பட்டிருக்கிறது.. அதற்காக அண்ணன் மகளை துணைக்கு வா என்ற சாக்கைச் சொல்லி அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்திருக்கிறாள்..
பாரம் கொண்ட மனம் அதை இறக்கி வைத்து இளைப்பாற சகஜீவன்களின் மத்தியில் மனித நேயமுள்ள ஒரு மனதைத் தேடுவது காலங்காலமாக நடந்து கொண்டு தானே இருக்கிறது..?
ஒவ்வொரு மகாராணியின் மனதிலும் புதைந் திருக்கும் சுமைகளை அவர்களுடைய அந்தரங்கத் தோழிகளிடம்தானே அவர்களால் இறக்கி வைக்க முடிந்திருக்கிறது..? கழுத்தை அறுத்தாலும் அந்த துயரச் சுமைகளை வெளியில் சொல்லாத அந்த அந்தரங்கத் தோழிகளிடம் அவர்களின் மகாராணிகள் இறக்கி வைக்கும் மனச் சுமைகளை அவர்கள் யாரிடம் போய் இறக்கி வைப்பார்கள்...?
பத்மா சிரித்த முகமாய் இருப்பவள்தான்.. பிரகாசத்தின் செந்தணல் போன்ற சுடு சொற்களால் அவள் முகம் என்றுமே வாடியதில்லை.. அவர் என்னவோ அவளுக்கு சாமரம் வீசிக் கொண்டிருப்பதைப் போல அவள் சிரித்த முகத்துடன்தான் இருப்பாள்...
அந்தச் சிரிப்பு அர்ச்சனாவுக்காக என்பதை அர்ச்சனா மிக நன்றாகவே அறிவாள்...
அவர்கள் இறைவனை வழிபட்டார்கள்.. அம்மனை வணங்கி விட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள்.. முன்பக்க மண்டபத்தில் காலாற அமர்ந்தார்கள்..
கதிர்வேலன் தேங்காய் பழக்கூடையை இழுத்தான்.. அர்ச்சனை செய்யப்பட்ட தேங்காயை மண்டபத்தின் கல்தரையில் மோதி உடைத்தான்.. ஓடுகளை நீக்கி விட்டு தேங்காய் சில்களாக்கி.. அவற்றை அர்ச்சனாவிடம் நீட்டினான்...
"ஹ...! பரிட்சை எழுதி களைச்சுப் போய் இருக்கிறவளுக்கு அர்ச்சனை தேங்காய் சில்லைக் கொடுக்கிற முதல் அத்தானா நீங்களா தான் இருப்பீங்க.." கேலி பேசியபடி அதை வாங்கிக் கொண்டாள் அர்ச்சனா..
அவளின் கேலியில் கதிர்வேலனின் கண்கள் மின்னின...
"அத்தானுக்கு இப்பக் கொஞ்சம் சிரமம் தான்னாலும்.. அத்தை மகளுக்கு ட்ரீட் கொடுக்க முடியாத அளவுக்கு சிரமமில்ல.. இப்ப முன்பசிக்கு தேங்காய் சில்லைக் காலி பண்ணு.. பின் பசிக்கு வீட்டுக்கு போகிற வழியில ஏதாவது ஒரு ஹோட்டலில ஒரு வெட்டு வெட்டலாம்.. பட்.. ஸ்டார் ஹோட்டலெல்லாம் என் பட்ஜெட்டுக்கு கட்டுபடி யாகாதும்மா.. ஏழைக்கேத்த எள்ளுருண்டைதான்.. எப்படி..? சரிதானே...?"
"சரியில்லைன்னு யாராவது சொல்லுவாங்களா..? ட்ரீட் கொடுக்க மனசு வந்துச்சே.. அதுவே போதும்.."
"உனக்குப் படிக்க மனசு வந்திருக்கிறப்ப எனக்கு ட்ரீட் கொடுக்க மனசு வராம போகுமா..?"
அவன் கேள்வியில் அவன் வார்த்தைக்காக அவள் கவனமாக படித்தது பொதிந்திருக்க.. அவர்கள் இருவரும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்..
அர்ச்சனா தேங்காய் சில்லைச் சுவைத்தபடி அந்தி நேரக் கோவிலின் சூழலை ஆத்மார்த்தமாக அனுபவித்தாள்.. பத்மா சிந்தனையுடன் தேங்காய்ச் சில்லை பற்களால் நெருடியபடி பேசாமல் இருந்தாள்...
"வாழைப்பழம் சாப்பிடறிங்களா அத்தை.." கதிர்வேலன் கேட்டான்..
"அது அவங்க அண்ணன் மகனோட பேவரைட் அயிட்டம்ன்னு விட்டு வைச்சிட்டாங்களாம்.. இல்லைம்மா..?"
அர்ச்சனாவின் கண்களில் மின்னல் சொல்லிய கேலியில் கதிர்வேலனின் கண்களும் மின்னின...
'குரங்குன்னு சொல்றயா..?' அவன் கண்கள் அவளை போலியாக மிரட்டின..
'ஆமாம்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?' பதிலுக்கு அவள் தெனாவெட்டாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள்..
'இரு.. உன்னை..' அவன் ஒற்றை விரலை ரகசியமாக உயர்த்தி சமிக்ஞை செய்தான்..
'வெவ்வெவ்வே..' அவள் அழகு காட்டினாள்..
"அத்தை.. என்னைவிட உங்க மகளுக்குத்தான் வாழைப்பழம் பொருந்திவரும்ன்னு என்னமா நடிச்சுக் காட்டுது பார்த்தீங்களா..?"
அவள் அழகு காட்டியது குரங்கைப் போல இருப்பதாக கதிர்வேலன் செய்த கேலியில் அவள் கடுப்பாகி...
"உர்ர்ர்.." என்று முறைத்தாள்..
"அச்சு அசல் அதுவேதான்.." அவனின் கேலி அதிகமானது..
இதை எதையும் கவனிக்காதவளாக தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்த பத்மா..
"உனக்கு ஹெல்ப் வேணும்ன்னா அர்ச்சனாவின் அப்பாவிடம் நான் பேசிப் பார்க்கவா கதிர்..?" என்று வினவினாள்...
கதிர்வேலனின் முகம் கருத்துப் போனது.. பாறையைப் போல இறுகிப் போன அவன் முகத்தைப் பார்க்க அர்ச்சனாவுக்கு பயமாக இருந்தது.. எதற்காக அவனுக்கு இந்த அளவுக்கு கோபம் வரவேண்டும் என்று அவள் திகைத்தாள்..
"அதை மட்டும் செய்துராதீங்க அத்தை.." கண்டிப்பான குரலில் சொன்னான் கதிர்வேலன்..
"எனக்கு இப்ப சிரமம்தான்.. ஆனாலும் அதை சரி செய்ய என்னால் முடியும்ன்னு நான் நம்பறேன்.. ஒருவேளை அது முடியலைன்னா.. சொந்தத் தொழிலை விட்டுட்டு அடுத்தவங்களிடம் வேலைக்குப் போயிட்டுப் போறேன்.. என்னிடம் தொழில திறமை இருக்குத்தை.. கையிருக்கு.. உழைத்துச் சாப்பிட தெம்பிருக்கு.. என் குடும்பத்தைக் காப்பாற்ற என்னால முடியும்..."
"ஆனா கதிர்.. இது நீ ஆசையாசையாய் ஆரம்பித்த தொழில்.." பத்மா குரல் கமறப் பேசினாள்..
"இது நான் ஆசையாசையாய் ஆரம்பித்த தொழில் தான் அத்தை.. அதைவிடவும் நான் ஆசையாசையாய் இருந்த சிலசொந்தங்கள் இருக்கிறாங்க... அதை மறந்துட்டுப் பேசாதீங்க.. எந்தக் காலத்திலேயும் உங்க ஹஸ்பெண்டிடம் நான் உதவின்னு வந்து நிற்க மாட்டேன்.."





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -10
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -10
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirththene-10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunnaaleuyirththene-10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy