உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..-1

உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.. 1 மழைநேர மரக்கிளையை இழுத்தேன்.. சாரல் தெறித்ததில் மனம் நனைந்தது.. "நானாட்சி செய...


உயிர்தேனே..!
உன்னாலே.. உயிர்த்தேனே..

1
மழைநேர மரக்கிளையை இழுத்தேன்..
சாரல் தெறித்ததில் மனம் நனைந்தது..


"நானாட்சி செய்து வரும்..
             நான்மாடக் கூடலிலே
    மீனாட்சி என்ற பெயர் எனக்கு..
             கங்கை நீராட்சி செய்துவரும்..
    வடகாசிதனில்
             விசாலாட்சி என்ற பெயர் எனக்கு.."
படித்துக் கொண்டிருந்த அர்ச்சனா கவனம் கலைந்தவளாக மாடி ஹாலில் எட்டிப் பார்த்தாள்.. பூஜையறையில் மணியொலித்தது.. விடிந்தும் விடியாத கருக்கல்லை மாடி ஹாலின் பால்கனி சொல்ல..
'இந்த நேரத்திலேயே பூஜையை ஆரம்பிச்சாச்சா..? இந்த அம்மா தூங்குவாங்களா.. மாட்டாங்களா..?' என்று மெலிதான ஆச்சரியத்துடன் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்..
பத்மா அப்படித்தான் இருந்தாள்.. அவள் எப்போது தூங்கப் போவாள் என்று யாருக்குமே தெரியாது.. ஒருநாள் அப்படித்தான்.. அறையில் தண்ணீரில்லையென்று தூக்கம் கலைந்து தண்ணீரைத் தேடிய அர்ச்சனா மாடிப்படிகளில் இறங்கி வந்தபோது சமையலறையில் வெளிச்சம் தென்பட்டது..
'இந்த நேரத்தில பாத்திரத்த யாரு உருட்டறாங்க..'
அர்ச்சனா சமையலறையில் எட்டிப் பார்த்த போது பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த பத்மா திரும்பிப் பார்த்து முறுவலித்தாள்..
"ஏம்மா.. நீங்க தூங்கப் போகலை..?" அர்ச்சனா ஆச்சரியத்துடன் வினவியபோது..
"தூங்கத்தான் போனேன்டா.. உங்க அப்பா ஆபிஸ் ஃபைலை பார்த்துக்கிட்டு இருந்தார்.. என்னை எழுப்பி சூடா காபி ஒரு கப் வேணும்னு கேட்டார்.. அதான் வந்தேன்.." என்று சொன்னாள்..
"ஓ.." அர்ச்சனாவின் விழிகளில் அனுதாபம் வந்தது..
அந்த அனுதாபத்தைக் கவனிக்காதவளைப் போல காபி கலந்தபடி.. மகளைப் பார்க்காமல்..
"உனக்கும் ஒரு கப் காப்பி சேர்த்து கலக்கவா..?" என்று கேட்டாள் பத்மா..
"நோ தேங்க்ஸ்.. எனக்கு இப்ப சூடா காப்பி வேணாம்.. சில்லுன்னு தண்ணிதான் வேணும்.." பிரிட்ஜைத் திறந்தாள் அர்ச்சனா..
குளிர் தண்ணீர் பாட்டிலை தொண்டையில் சரித்துக் கொண்டிருந்தவள் கதவு திறந்து மூடும் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்..
பத்மாதான் கொண்டு போன காபி கப்பில் துளிக் கூட குறையாமல் அப்படியே திருப்பிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள்..
"அம்மா..?" கேள்வியாப் பார்த்த மகளின் முகத்தைச் சலனமில்லாமல் பார்த்த பத்மா..
"அப்பா தூங்கிட்டார்டா.. எழுப்பினா எரிஞ்சு விழறார்.. அவருக்கு காபி வேணாமாம்.. தூங்கும் போது யாராவது காபி குடிப்பாங்களான்னு கேட்கிறார்.. அவர் கேட்பதும் நியாயம் தானே.." என்றபடி காபியை பருக ஆரம்பித்தாள்..
'தூங்கறப்ப யாரும் காபி சாப்பிட மாட்டாங்கதான்.. தூங்கறவர்களை எழுப்பி காபி போடச் சொன்னவர் கட்டாயம் அதைச் சாப்பிட்டிருக்கனும்..' அர்ச்சனாவிற்குள் மெலிதான கோபம் வந்தது..
அந்த நொடியில் அவளுக்கு என்னவோ பிரகாசத்துக்கு காபி தேவைப்பட்டிருக்காது என்று தோன்றியது..
நிச்சிந்தையாக தூங்கும் மனைவியின் தூக்கத்தைக் கலைக்க வேண்டும்... அது மட்டுமே அவருடைய தேவையாக இருந்திருக்க வேண்டும்...
'தூங்கக் கூட அம்மாவுக்கு உரிமையில்லையா..?' அர்ச்சனா பல்லைக் கடித்தாள்..
பிரகாசத்திடம் அந்தக் கேள்வியைக் கேட்டால் இல்லையென்ற பதிலைத்தான் அவர் சொல்லுவார்..
"காவேரி ஓரமா என் கார் போய்க்கிட்டு இருந்துச்சு.. ரேடியேட்டர் சூடானதில கார் நின்னு போச்சு.. தண்ணீர் கேட்கலாம்ன்னு குடத்தோட இருந்த பொண்ணுகிட்டப் போனேன்.. என்னைக் கவனிக்காம அவ பாட்டுப் பாடிக்கிட்டே குடத்தில தண்ணியை நிரப்பிக்கிட்டு இருந்தா.. நீண்ட பின்னலோட கொடி போல இருந்தா.. என்னங்கன்னு கூப்பிட்டேன்.. திரும்பிப் பார்த்தவளின் அழகில மயங்கிப் போய் அன்னைக்கு விழுந்தவன்தான்.. ம்ஹீம்.. இன்னைக்கு வரைக்கும் எழுந்திருக்க முடியலை.."
காவியம் போன்ற இந்த நிகழ்வைச் சொல்லும் தருணங்களில் பிரகாசத்தின் முகத்தில் கனிவு ததும்பாமல் கடுமை ததும்பித் தொலைக்கும்.. பத்மாவோ.. சலனமில்லாமல் முகம் இறுக தொலைதூரத் தொடுவானில் தொலைந்து போன அவளின் கடந்த காலம் தென்படுகிறதா என்று துழாவுகிறவளைப் போல வெறித்துக் கொண்டிருப்பாள்...
அர்ச்சனாவுக்குத்தான் ஆற்றாமையாக இருக்கும்.. அழகும்.. மென்மையும் ததும்பிக் கொண்டிருக்கும் அவளுடைய தாயை காவேரிக்கரையில் பார்த்த வினாடியிலேயே அவளுடைய தந்தை காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்.. திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்.. அதைச் சொல்லும் போது அவர் முகத்தில் ஆண்மை நிறைந்த சந்தோசம் வந்து சேர வேண்டாமா..?
"எப்படி வரும்..?" என்று கேட்பார் அவர்..
"என் லெவலுக்கு கோடிஸ்வரக் குடும்பங்களில இருந்து சொத்து சுகத்தோட பெண்ணெடுத்திருக்கனும்.. எனக்கு இணையான அந்தஸ்தோட இருக்கிறவளக் கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தானே எனக்கும் பெருமையா இருக்கும்..? என்னைச் சேர்ந்தவங்க முன்னாலே தலை நிமிர்ந்து நின்றிருக்க முடியும்..? அதை விட்டுட்டு வெறும் அழகில மயங்கி.. வசதி குறைவான வீட்டில பெண் கட்டினா.. என்ன மதிப்பிருக்கும்..? இதில சந்தோசம் எப்படி வரும்..?"
இப்படிப் பேசும் பிரகாசத்திடம் நானா உங்களைப் பெண் கேட்டு வரச் சொன்னேன் என்ற கேள்வியினை பத்மா கேட்டு விட வேண்டும் என்று மனதார ஆசைப்பட்டாள் அர்ச்சனா..
பத்மா ஒரு நாளும் அதைச் செய்ததில்லை.. மௌனமாக தனக்குள் புதைந்து போகிறவளைப் பார்க்கும் போது அர்ச்சனாவின் மனம் பிசையும்..
"ம்ப்ச்.. அழகைப் பார்த்து மயங்கின மயக்கத்தில் என் எதிர்காலத்த நினைச்சுப் பார்க்காம இருந்து தொலைச் சுட்டேன்.."
பிரகாசம் அலுத்துக் கொள்ளும் போது... அர்ச்சனாவிற்கு என்னவோ எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு நிற்பது அவரல்ல என்று தோன்றும்..
பத்மாதான் அதைத் தொலைத்து விட்டு நிற்கிறாள் என்று தோன்றும்.. அவளின் மென்மைக்கும்.. சாத்வீகத்திற்கும்.. கருணைக்கும்.. சாந்தத்திற்கும்.. அவளுக்கு அமைந்திருக்க வேண்டிய வாழ்வே வேறு என்று தோன்றும்..
பத்மா வாழ்வை வாழ்வாக வாழ்ந்திருக்க வேண்டும்.. அதற்கான அத்தனை குணாதிசியங்களையும்.. கொண்டவள் அவள்.. இருந்தும் அவளது குணங்களுக்கு எதிர்மாறான வாழ்வை அவள் வாழ வேண்டியிருந்தது.. அதில் அவளுக்கு சந்தோசம் இருக்கிறதா.. இல்லையா என்று அறியாதவராக.. அதை அறியும் ஆர்வமோ.. விருப்பமோ இல்லாதவராக.. பிரகாசம் அவளுடைய பிறந்த வீட்டின் பொருளாதார நிலையைச் சொல்லிக் காட்டிக் கொண்டேயிருப்பார்..
"பங்சனுக்கு போகனும்.. கூட வான்னு கூப்பிட்டா.. மெல்லிசா ஜரிகை போட்ட சேலையும்.. தாலிக் கொடியுமா வந்து நிற்கிறா.. இவ பிறந்த வீட்டுப் பக்க பங்சன்னா இதுவே அதிகம்தான்.. ஆனா என் பக்க பங்சனில.. எங்க பக்க வீடுகள்ல வேலை பார்க்கிறவங்க கூட இதைவிட கிராண்டா உடுத்திக்கிட்டு வருவாங்க.. கொஞ்சமாச்சும் என் லெவலைப் புரிஞ்சு நடந்துக்கனுமா.. இல்லையா..? இன்னும் பிறந்த வீட்டு பஞ்சத்திலேயே இருந்தா எப்படி..?"
இப்படிச் சொல்கிற பிரகாசம்தான்.. கெட்டி ஜரிகையும்.. வைர நகைகளுமாக கிளம்பி நிற்கும் மனைவியைப் பார்த்து..
"உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதால நீ இதையெல்லாம் கண்கொண்டு பார்த்திருக்க.. இல்லேன்னா.. உன் வாழ்நாளில இதைப் போல வைர நகைகளை உன்னால பார்த்திருக்க முடியுமா..? உங்க குடும்ப லெவலுக்கு தங்கமே அதிகம்தான்.. இதில வைரத்தைப் பத்திப் பேசக்கூட உங்களாலே முடியுமா..? இந்தச் சேலையோட விலை என்ன தெரியுமா..? இரண்டு லட்சம்..! உன் பிறந்த வீட்டில இருநூறு ரூபாய்க்கு சேலை எடுத்துக் கொடுத்தாலே அதிகம்... நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதாலே உனக்கு இந்த யோகம் அடிச்சிருக்கு.. அனுபவி.. அனுபவி.." என்று இகழ்ச்சியாகப் பேசுவார்..
அந்தத் தருணங்களில் பத்மாவின் உடலைச் சுற்றியிருந்த பட்டுப்புடவையும்.. நகைகளும் முள்ளாக அவளைக் குத்தியிருக்கும் என்பதை அர்ச்சனாவினால் புரிந்து கொள்ள முடிந்தது..
பத்மா எதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள்.. சலனமில்லாத முகத்துடன் பிரகாசத்தின் முள்வார்த்தை-களைப் பொறுத்துக் கொண்டு ஒரு துறவியைப் போல வீட்டை வலம் வருவாள்..
அவள் முகத்தில் சந்தோசம் ததும்புவது அவளுடைய பிறந்த ஊரில் ஓடும் காவிரி நதியைக் காணும் போதுதான்..
அரிதாக.. அத்தி பூத்ததைப் போல.. அவளையும்.. அர்ச்சனாவையும் பத்மாவின் பிறந்த ஊருக்கு அனுப்பி வைப்பார் பிரகாசம்..
அனேகமாக அந்தச் சமயங்களில் பத்மாவின் பிறந்த வீட்டில் ஏதாவது விசேசம் நடைபெறவிருக்கும்.. அந்த விசேசங்களில் கலந்து கொள்வதை பிரகாசம் தவிர்த்து விடுவார்..
அவரைப் பொறுத்தவரை அவர் பக்கத்து விழாக்களுக்கு அவருடைய மனைவியாக.. பட்டும்.. வைர நகைகளுமாக பத்மா கூடப் போய் வரவேண்டும்.. அதுவே பத்மா பக்கத்து விழாக்கள் என்றால் அவரால் அதில் கலந்து கொள்ள முடியாது. அதி முக்கியமான வேலைகள் அவருக்காக அணி வகுத்து நிற்கும்..
"உன் வீட்டுக்கு நான் மாப்பிள்ளையாய் வந்ததே பெரிய விசயம்.. இதில் சொந்தக்காரன்னு சொல்லிக்கிட்டு விசேசங்களுக்கு வந்து போகனுமா..? நெவர்.."
அவர் பார்வை சொல்லாமல் சொல்லுவதை பத்மாவினால் புரிந்து கொள்ள முடியும்.. வளர்ந்த பின்பு அதை அர்ச்சனாவினாலும் புரிந்து கொள்ள முடிந்தது.. அப்போதெல்லாம் அவள் மனதில் தாயின் மீதான இரக்கம் பொங்கி எழும்..
ஆனால்.. பிரகாசம் கூட இல்லாத அந்த நாள்களில் பத்மா அவளாக வலம் வருவதைக் காணும் போது.. பிரகாசம் கூட வராதது நல்லதிற்குத்தான் என்று நினைத்துக் கொள்வாள் அர்ச்சனா.. அந்த அளவுக்கு அந்த நாள்களில் குதூகலமாக இருப்பாள் பத்மா..
அர்ச்சனாவுடன் காவேரிக் கரையில் நடப்பாள்.. அவளுக்கு காவேரி நதியில் நீந்தக் கற்றுக் கொடுத்தது பத்மாதான்.. கரையோர தென்னந் தோப்புக்களையும்.. அதில் பாடும் குயில்களையும் ரசிக்க மகளுக்கு கற்றுக் கொடுத்தாள்.. ஆற்றங்கரையோரப் பூச்செடிகளின் நறுமணத்தை நுகரக் கற்றுக் கொடுத்தாள்.. சித்ரா பௌர்ணமியன்று ஊரே ஒட்டு மொத்தமாக ஆற்றங்கரைக்கு வந்து நிலாச்சோறு சாப்பிடும் அனுபவத்தை அவளுக்குக் காட்டி.. நிலாச்சோற்றின் சுவையை ருசிக்கக் கற்றுக் கொடுத்தாள்.. ஆற்றங்கரையின் படித்துறையில் அமர்ந்து.. சுழித்தோடும் ஆற்று நீரைப் பார்த்தபடி.. பாட்டுப் பாடும் கலையை மகளுக்குக் கற்றுக் கொடுத்தாள்.. அந்தப் பாடல்களையும் மகாகவி பாரதியின் பாடல்களாகத் தேடிப் பிடித்து மகளுக்குச் சொல்லிக் கொடுத்தாள்.. பாரதிதாசனின் கவிதை வரிகளின் தன்மையில் மூழ்க கற்றுக் கொடுத்தாள்..
"துன்பம் நேர்கையில் - யாழெடுத்து..
             நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..?
    எனக்கின்பம் சேர்க்க மாட்டாயா...?"
கண்ணீர் கரையும் குரலில் இதயத்தின் ஆழத்திலிருந்து ஒலிக்கும் ஏக்கமாக ஸ்ருதி லயத்துடன் அவள் பாடும் போது.. அர்ச்சனாவின் மனம் நெகிழும்.. அவளுடைய தாயின் துன்பம் போக்க அவளால் ஆனதைச் செய்ய வேண்டுமென்று மனம் துடிக்கும்..
பத்மா அதை உணரமாட்டாள்.. அவள் பார்வை ஒரு மயிலிறகின் மென்மையோடு மகளை வருடிக் கொடுக்கும்.. அவள் வாழ்வின் ஜீவாதாரமே மகள்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும்.. அன்பில்லாத வாழ்வில் அன்பை நிறைத்து அவள் வயிற்றில் பிறந்த மகளை அவள் பார்வை தாலாட்டும்..
"அன்பிலா நெஞ்சில்..
             தமிழில் பாடி - நீ
    அல்லல் நீக்க மாட்டாயா..?
             கண்ணே..! நீ
    அல்லல் நீக்க மாட்டாயா..?"
அவள் கண்களில் ஏக்கமும்.. இறைஞ்சுதலும் தூளி கட்டிக் கொண்டு ஆட.. கண்களில் நீர்திரையோடு பத்மா பாடுகையில் அர்ச்சனாவின் மனம் கசியும்.. அன்பிலா வாழ்க்கையை வாழும் அல்லல் நிறைந்த அன்னையின் வாழ்வீல் அல்லலைத் தீர்க்க வேண்டுமென்ற வேகம் உண்டாகும்.. பண்பில்லாத மனிதர் மத்தியில் பண்பட்ட குணவதியாக தனித்து நிற்கும் தாயின் கண்ணீர் துடைக்க வேண்டுமென்ற துடிப்பு ஏற்படும்..
"பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே..
             வாழ்வில் உணர்வு சேர்க்க நீ -அன்று
    நற்றமிழ் கூத்தின் முறையினால்..
             ஆடிக் காட்ட மாட்டாயா..?"
பத்மாவின் பாடலில் பாரதிதாசனின் கவிதை வரிகள் நர்த்தனமாடும்..
அர்ச்சனா தாயின் வளர்ப்பாக வளர்ந்தாள்.. அதே சமயத்தில் தந்தையின் வளர்ப்பாகவும் இருந்தாள்..
"ஷி இஸ் மை ஒன்லி ஒன் டாட்டர்.. தி குவின் ஆஃப் மை ஹவுஸ்.. அன்ட் லைஃப்.."
மகளைத் தன் வீட்டின் மகாராணி என்று தான் அனைவருக்கும் சொல்லி அறிமுகப் படுத்துவார் பிரகாசம்.. மனைவியை அப்படிச் சொல்ல மாட்டார்.. அவரைப் பொறுத்தவரை அவருடைய கடைக்கண் பார்வை பட்டதால் அதிர்ஷ்டக் காற்று அடிக்கப் பெற்று அவரின் வாழ்க்கைத் துணைவியாகும் பெரும் மேற்றைப் பெற்றவள் பத்மா.. மற்றபடி.. பெரிதாக அவளைப் பற்றிப் பேச எதுவுமில்லை...
அர்ச்சனா அப்படியில்லை.. அவள் பிரகாசத்தின் ரத்தம்.. அவருடைய மகள்.. அவருடைய பரம்பரையின் வாரிசு.. அவருடைய அனைத்துச் சொத்துக்களுக்கும் அதிபதி..
"என் மக என்னோட தொழில் சாம்ராஜ்யத்தை ஆளப் பிறந்தவடி.. அவ கையில வீணையைக் கொடுத்து உன்னைப் போல ஆக்கனும்னு நினைக்காதே.. இவ என் பரம்பரை.. உன் பிறந்த வீட்டுப் பழக்கமெல்லாம் இங்கே வேணாம்.."
அவர் போட்ட சப்தத்தில் அவருக்குத் தெரியாமல்தான் அர்ச்சனா பத்மாவிடம் வீணையைக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது..
காவேரியோரம் கண்களில் உயிர்ப்புடன் மனம் விட்டுச் சிரிக்கும் பத்மாவின் விழிகளில் தெரியும் உயிர்ப்பை அவர்களது வீட்டில் அவள் எங்கே ஒளித்து வைத்திருக்கிறாள் என்று நினைத்து மனம் குமைவாள் அர்ச்சனா...
பிரகாசத்தைத் திருமணம் செய்து கொள்ளாமல் பத்மாவழிச் சொந்தத்தில் எவரையேனும் அவள் திருமணம் செய்து கொண்டிருந்தால் அவளின் உயிர்ப்பு அவளிடம் நிலைத்திருந்திருக்கும் என்ற வேதனையில் அர்ச்சனாவின் மனம் வெம்பும்..
பத்மாவின் அழகும்.. குணங்களும்.. பாட்டும்.. வீணையிசையும் காணக் கிடைக்காத திரவியங்கள்.. பொக்கிசங்கள்.. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய செல்வங்கள்..
அவற்றை உணர்ந்து அதன் மதிப்பைப் போற்றிப் பாதுகாத்து. பெட்டகமாய் அவளைப் பேணும் வாழ்க்கைத் துணை மட்டும் அவளுக்குக் கிடைத்திருந்தால்.. குடிப்பதற்கு கூழ் கிடைத்திருந்தால் கூட அதில் அவள் நிம்மதியும்.. சந்தோசமுமாக வாழ்நதிருப்பாளே..
அப்படிப்பட்ட வாழ்வு அவளுக்குக் கிடைத்து விடாமல் தட்டிப் பறித்தது யார்..? அவளுடைய உயிர்ப்பை அவளைவிட்டு ஓட்டி விட்டது யார்..? சிறகடித்துப் பறந்தவளின் சிறகொடித்து.. தங்கமும்.. வைரங்களும் இழைந்த கூண்டுக்குள் அவளைத் தள்ளி விட்டது யார்..?
இவை அனைத்தையும் செய்தது பிரகாசமல்லவா..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..-1
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..-1
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwk/vlHvyuYaaXM4X4AkcE_xETOl2SbHpPkngCLcBGAsYHQ/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwk/vlHvyuYaaXM4X4AkcE_xETOl2SbHpPkngCLcBGAsYHQ/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunaaleuyirththene-1.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/uyirtheneunaaleuyirththene-1.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy