பொதிகையிலே பூத்தவளே -68

68     " ஆறு அது ஆழம் இல்ல.. அது              சேரும் கடலும் ஆழமில்ல..     ஆழம் எது அய்யா.. ?              அந்த பொம்பள மனசு...


68

    "ஆறு அது ஆழம் இல்ல.. அது
             சேரும் கடலும் ஆழமில்ல..
    ஆழம் எது அய்யா..?
             அந்த பொம்பள மனசுதான்யா..
    அடி அம்மாடி.. அதன் ஆழம் பார்த்ததாரு..?
               அடி ஆத்தாடி.. அத பார்த்த பேர கூறு நீ.."
தெரு முனையிலிருந்த மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக கட்டப் பட்டிருநத மைக் செட்டிலிருந்து பாடல் ஒலித்தது.. மண் மணம் மிகுந்த ஒரு கோவில் திருவிழாவைக் கொண்டாடும் ஊரில் இதுபோன்ற பாடல்கள் நேயர் விருப்பமாக ஒலிக்கும்.. யாரோ யாருக்காகவோ ஒலிக்க வைப்பார்கள்..
"தண்ணியில கோலம் போடு..
             ஆடிக்காத்தில் தீபம் ஏத்து..
    ஆகாயத்தில் கோட்ட கட்டு..
             அந்தரத்தில் தோட்டம் போடு..
    ஆண்டவனத்தான் கூட்டி வந்து
             அவனை அங்கே காவல் போடு..
    அத்தனையும் நடக்கும் அய்யா..
             ஆசை வைச்சாக் கிடைக்கும் அய்யா..
    ஆனாக் கிடைக்காது.. நீ ஆசை வைக்கும் மனது..
             அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே.."
கடையில் மீனா இழுத்துப் போட்டிருந்த சோபாவில் கால் மீது கால் போட்டு உட்கார்ந்து மீனாவையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.. அவனுடைய துளைக்கும் பார்வையிலிருந்து தப்பிக்க தலையைக் குனிந்து கொண்டாள் மீனா..
"கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி..
             உள்ளுக்குள்ளே எல்லாம் பொய்யி..
    சொன்ன சொல்லு என்ன ஆச்சு..?
             சொந்தமெல்லாம் எங்கே போச்சு..
    நேசம்.. அந்த பாசம்.. அது எல்லாம் வெளிவேசம்..
             திரை போட்டு செஞ்ச மோசமே.."
விஷ்வாவின் கூர்மையான லேசர் பார்வை அவளை உறுத்தியது.. அவன் பேசவில்லை.. பாடலை அவதானித்துக் கொண்டிருந்தான்.. பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனது முக பாவம் மாறிக் கொண்டே இருந்தது.. மீனாவுக்கு என்னவோ, பாடலை அவனே பாடிக் கொண்டிருப்பதைப் போலவே இருந்தது.. அவன் அப்படித்தான் அவளை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..
"கரெக்டா பாடறானேடி.. என்னைப் போல் ஒருவன்.." சினத்துடன் சொன்னான் விஷ்வா..
அவன் பேசுவது மற்றவர்களின் காதுகளில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்ற கலவரத்துடன் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள் மீனா.. கடையின் கூட்டத்தில் அவன் மெதுவான குரலில் பேசியது பக்கத்தில் இருந்த மீனாவின் காதுகளில் மட்டும்தான் விழுந்தது.. மற்றவர்கள் துணிகளையும் பொருள்களையும் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தார்கள்..
விஷ்வாவைக் கண்டதும் மீனா வீட்டுக்குப் போகலாம் என்றுதான் சொன்னாள்.. விஷ்வாதான் மறுத்து விட்டான்..
"வாட் ஃபார்..? உன் பேரண்ட்ஸை பக்கத்தில் வைத்துக்கிட்டு நான் உன்னிடம் பெர்சனலா பேச மாட்டேன்னு பிளான் பண்றியா..?"
குதர்க்கமாக வேறு கேட்டு வைத்தான்.. மீனா திறந்த வாயை இறுக மூடிக் கொண்டாள்.. அவளுக்கும் விஷ்வாவை உடனடியாக வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போவதில் விருப்பமில்லை.. ஒர்முறை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கிடப்பவளின் முன்னால் வரமளிக்கும் கந்தர்வனாக அவன் வந்து நிற்கிறான்.. அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவள் வெளிவரவில்லை.. மனதில் பதிந்திருக்கும் ஆசை முகத்தை அவனறியாமல் பார்க்க அவளுக்குப் பிரத்யேகமான சில நிமிடங்கள் தேவைப்பட்டன.. புனிதாவையும் மூர்த்தியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு விஷ்வாவை பருகு, பருகு என்று பார்க்க முடியாது.. அதனால் விஷ்வா சொல்வதை விரும்பாதவள் போல முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அவனை சோபாவில் உட்காரச் சொன்னாள்.. அவனும் தோரணையாக கால்மீது கால் போட்டு அமர்ந்து அவளை மயக்கினான்..
"எதுக்காக இந்த பயம்..?" விஷ்வா புருவங்களை உயர்த்தினான்..
"ப்ளீஸ்.. மெதுவாகப் பேசுங்க.." மீனா முணுமுணுத்தாள்..
"வாட் ஃபார்..?" அவன் சீறினான்..
"யார் காதிலாவது விழுந்து விட்டால் கஷ்டமாகிரும்.."
"பிராப்ளமாகிடுமா..? என்ன பிராப்ளமாகும்.. ஓ..! எவனையாவது நீ மேரேஜ் பண்ணிக்குவ இல்ல.. அதுக்குப் பிராப்ளமாகிடுமோ..?" கண்கள் இடுங்க பற்களைக் கடித்தபடி கேட்டான் விஷ்வா..
மீனா அவனை இமைக்காமல் ஓர் பார்வை பார்த்தாள்.. நேர்கொண்ட அந்தப் பார்வையில் அவன் லயித்தான்.. ஓர்நொடி மீனா தடுமாறினாள்.. அவன் பார்வையில் தெரிந்த சிலாகிப்பு அவள் மனதைக் கவர்ந்து இழுத்தது.. மறுநொடியில் இதைப்போல்தானே அவன் வனமலரைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்ற எண்ணம் மனதில் வந்தது.. முகம் இறுக திரும்பிக் கொண்டாள்.. விஷ்வாவின் புருவங்கள் முடிச்சிட்டன..
"என்ன..?" அதட்டினான்..
"யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லை.. என் அப்பாம்மாவுக்கு மகளா, அவங்ககூட கடைசிவரைக்கும் இருந்து விடும் முடிவில் இருக்கிறேன்.." வறண்ட குரலில் சொன்னாள் மீனா..
இதைத்தான் அவள் சொல்வாள் என்று அவனுக்கும் தெரியும்.. இருந்தும் அவள் வாயால் அதைச் சொல்வதைக் கேட்பதில் அவனுக்குப் பெருத்த சந்தோசம் உண்டானது.. விழிகள் மின்ன அவளையே பார்த்தான்.. மீனாவின் முகம் லேசாக சிவந்தது.. அது அவனுக்குப் பிடித்திருந்தது..
"நீ டிசைட் பண்ணியிருக்கலாம்.. உன் பேரண்ட்ஸ் இதுக்கு ஓகே சொல்லனுமே.. அவங்க உனக்கு மேரேஜ் பண்ணிப்பார்க்க ஆசைப்படலாம்.. அதைத் தவறுன்னு சொல்ல முடியாதே.."
"அதை அப்போப் பார்த்துக்கலாம்.."
"யாரைப் பார்க்கப் போகிற..? உன்னைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையையா..?"
மறுபடியும் இமைக்காத ஓர் முறைப்பு.. விஷ்வா கள்ளுண்ட வண்டாக கிறங்கிப் போனான்.. லேசாக இமைசிமிட்டிப் புருவங்களை உயர்த்தி இறக்கினான்.. மீனாவுக்கு உலகமே மறந்து போனது.. மயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.. அதற்காகவே காத்திருந்த அவனது பார்வை அவளது பார்வையைக் கவ்வியது.. மீனா தூண்டிலில் சிக்கிய மீனாக ஆனாள்..
"அக்கா.. இதுக்குப் பில் போடுங்க.."
தான் கொண்டு வந்திருந்த துணி வகைகளையும் பொருள்களையும் கடையிலிருந்த பிளாஸ்டிக் கூடையில் நிரப்பி டேபிளில் வைத்தாள் ஒரு பெண்.. மீனா அவசரமாகப் பார்வையை விலக்கிக் கொண்டு ஸ்கேன் பண்ணி, பில்லை பிரிண்ட் கொடுத்து, எடுத்து.. அந்தப் பெண்ணிடம் கொடுத்துப் பணத்தை வாங்கி மீதியைக் கொடுத்தாள்.. அடுத்தடுத்து ஆள்கள் குவிந்து விட மீனா வேலையில் பரபரப்பும் அவனைப் பார்க்க முடியாத பதட்டமுமாக தவிப்புடன் படபடவென வேலையில் ஆழ்ந்தாள்..
"பாப்பா.. எனக்கு முதலில் பில் போடு.. பையனுக்கு சாப்பாடு கொண்டு போகணும்.."
"உனக்குத்தான் வீட்டில வேலையிருக்கு.. எனக்கு இல்லையா..? வீட்டில போட்டது போட்டபடி விட்டுட்டு வந்திருக்கேன்.. விசுக்குன்னு போயாகனும்.. எனக்கு முதலில பில் போடு மீனா.."
"ரெண்டு பேரும் வழிய விடுங்க.. நான் ஊருக்குப் போகனும்.. ஓடுற ஓட்டத்தில ரெண்டு சேலைகள வாங்கிக்கிட்டுப் போகலாம்ன்னு ஓடியாந்தேன்.. பஸ்ஸைப் பிடிக்கனும்.. எனக்குப் பில்லப் போடாத்தா.."
அங்கே தில்லு முல்லு ஏற்பட்டது.. அத்தனை பேருக்கும் ஈடு கொடுத்து சமாதானமாக பேசியபடி பத்தே நிமிடங்களில் பில்லைப் போட்டுப் பணத்தை வாங்கிக் கும்பலைக் குறைத்து விட்டாள் மீனா..
"குட்.." என்றான் விஷ்வா..
உன் பாராட்டுக்கு நான் ஒன்றும் காத்துக் கிடக்கவில்லை என்பதைப் போலக் கித்தாய்ப்பாய் பார்த்தபடி மீனா பணத்தை எண்ணும் மெஷினில் நோட்டுக்களைப் போட்டு எண்ணிக் கட்டுப் போட்டு வைத்தாள்.. மனதுக்குள் அவனது பாராட்டு தாலாட்டியது.
"எங்கிருந்தாலும் உன்னை நீயே செதுக்கிக்கிற.. மிகத் திறமையான அட்மினிஸ்ட்ரேட்டர் நீ.. மதுரைக்குத் திரும்பும் டிசிசனை நீ எடுத்தபோது அடுத்து என்ன செய்யப் போகிறாயோன்னு கவலைப் பட்டேன்.. நானே வேண்டாம்ன்னு தூக்கி எறிந்துட்டு வர்றவ விஸ்வரூபம் மாலில ஜாயின் பண்ணவும் மாட்ட.. ஃபேமிலியை ரன் பண்ண எங்கேயாவது குறைந்த சேலரியில உனக்குப் பொருத்தமில்லாத வேலையில ஜாயின் பண்ணிருவியோன்னு டென்சனா இருந்தது.. தேங்க் டு காட்.. நீ பியூச்சரை யோசித்துப் பிளான் பண்ணியிருக்கிற.. ஹவுஸ் ரெண்ட் வருகிறதைப் போலப் பிளான் பண்ணிக் கட்டியது பெரியதில்லை.. உனக்கும் உன் அப்பாவுக்கும் பிஸினெஸ் பண்ணக் கடைகளையும் சொந்த இடத்தில் கட்டி, அதில் பிஸினெஸ்ஸை ரன் பண்ணி சக்சஸ் பண்ணியும் காட்டிட்டயே.. யு ஆர் கிரேட் மீனா.. இப்படிப்பட்ட புத்திசாலி, வினோத் சொன்னதைக் கேட்டுக் கொண்டு என்னை விட்டு விலகி ஓடி வந்திட்டியே.. அதுதான் எப்படின்னு எனக்குப் பிடிபட மாட்டேங்குதுடி.."
மீனா பெருமூச்சுடன் தன் பார்வையை உயர்த்தி அவன் பார்வையை நேருக்கு நேராகச் சந்தித்தாள்.. கலங்கிய அவளது விழிகளில் படிந்திருந்த கண்ணீர் திரையில் அவனது புருவங்கள் மேலே உயர்ந்தன..
"ஒரு பெரிய பிழை திருத்தம் சார்.."
"சாரா..? நான் உன் விஷ்வாடி..."
"அது அப்போ.."
"இப்போ என்ன வந்தது..? எது மாறியிருக்கிறது..? உன் விஷ்வா இன்னொருத்திக்கு ஹஸ்பெண்டாகி உனக்குச் சொந்தமில்லாம போயிட்டேனா..? இல்லை, நீதான் வேறு ஒருவனை மேரேஜ் பண்ணிக்கிட்டு, எனக்குச் சொந்தமில்லாதவளா ஆகிட்டியா..? இந்த இரண்டுமே இந்த ஜென்மபத்தில் நடக்காதுன்னு உனக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்.. அப்புறம் எதுக்காக இந்த வெளிவேடம்..?"
"நான் பிழை திருத்தத்தைச் சொல்ல வர்றேன்.. நீங்க வேறு எதில் எதிலோ டைவெர்ட் ஆகறிங்க.."
"என்னன்னு சொல்லித் தொலை.. சார், மோர்ன்னு டயலாக் மட்டும் பேசாதே.. கொன்று கானாடுகிரி மலையுச்சியில இருந்து தூக்கி வீசிருவேன்.."
"அதுக்கு எதுக்கு கானாடுகிரி மலைக்குப் போகனும்..? மதுரையைச் சுத்தியும் மலை இருக்கே.."
"மதுரை உனக்குப் பிறந்த ஊர்.. கானாடுகிரிதான் உன்னுடைய ஊர்.."
மீனாவுக்குள் அதிர்வு வந்தது.. அவன் இன்றுவரை மாறவில்லை.. மீனாவின் மீது கொண்ட காதலில் உறுதியாக இருக்கிறான்.. அவளைத் தேடி மதுரைக்கு வந்திருக்கிறான் என்பதில் அவளுக்குள் ஏன் இத்தனை சந்தோசம் குமிழிடுகிறது..?
"போகாத ஊருக்கு வழி சொல்கிறிங்க.."
"நீ வந்து போன ஊர்தாண்டி.."
"இருக்கட்டும்.. நடக்காத எதையும் நினைச்சுப் பார்க்கறதில பிரயோசனமில்லை.."
"நடந்ததைத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேண்டி.."
அழுத்தமாக அவன் சொன்ன விதத்தில் அவனுக்கும் அவளுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள் மீனா.. அதன் ஆழம் அவளை உள்ளே இழுத்ததில்..
'என்ன இது..?' என்று பயந்து போனாள்..
அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்..? வேண்டாம் என்று விலகி வந்த பின்னால் பழைய நினைவுகளில் குளிர் காய முற்படுவது எப்படிப்பட்ட முட்டாள்தனம்..
"நீங்க எதையெதையோ நினைத்துக்கிட்டு இருக்கிறதுக்கு நான் பொறுப்பில்லை.. சொல்ல வந்த பிழை திருத்தத்தைச் சொல்லிடறேன்.."
"சொல்லித் தொலை.."
"யார் யாரோ சொன்னதைக் கேட்டு நான் கானாடுகிரி மலையை விட்டுவரலை.. உங்க மனசில வனமலர் மேலே ஒரு பிரியம் இருந்திருக்கு.. அதனால விலகி வந்தேன்.. அத நினப்பில வைச்சுக்கிட்டுப் பேசினா நல்லது.."
யாரிடமோ அறிமுகமற்றவனிடம் பேசுவதைப் போல ஒட்டாத குரலில் அவள் பேசியதில் விஷ்வா வெறி கொண்டான்..
"ஏய்ய்.. எத்தனை தடவைதான் சொல்கிறது..? அந்தப் பொண்ணு ஆக்ட்டிவ்வா இருந்தா.. இண்டலிஜென்ட் கேர்ள்.. கிரியோட முறைப் பெண்.. மலைவாழ் மக்கள் மத்தியில அப்படியொரு துறுதுறுப்பான பெண்ணைப் பார்த்ததில் ஒரு ஆச்சரியம்.. தட்'ஸ் ஆல்.. இதுக்குப் போய் இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கறியேடி.."
"வேற எதுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்க முடியும்..?"
"உன்னிடம் நான் இதை எதிர்பார்க்கலை மீனா.. கொஞ்சம்கூட யோசிக்க மாட்டியா..? வனமலர் இப்ப உயிரோடு இல்லைடி.."
"இருந்திருந்தா..?"
உதடுகள் துடிக்கக் கேட்டாள் மீனா..
"ஏய்ய்.." விஷ்வா திகைத்தான்..
'இவள் என்ன சொல்ல வருகிறாள்..?'
"என்னுடைய கேள்வி இதுதான்.. அவ உயிரோடு இருந்திருந்தா மீனாங்கிற ஒருத்தி உங்க வாழ்க்கையில் வந்திருக்க மாட்டாள்ல..? எனக்கு நீங்க இம்பார்ட்டன்ஸ் கொடுத்திருக்க மாட்டிங்கள்ல..?"
"மீனா.. அவ கிரியின் காதலி.."
"அவ கிரியின் காதலியா இல்லாமல் இருந்திருந்தா, நீங்க அவளைக் காதலிச்சிருப்பீங்கதானே..? ராப்பகலா இந்தக் கேள்விதான் என்னைத் துரத்துது.. அவ முன்னாலே நான் ஒன்னுமேயில்லன்னு தோணுது.. அந்த நினப்பில இருந்து என்னால வெளியே வரமுடியல.. பித்துப் பிடிக்குது.."
விட்டால் அழுது விடுவாள் போலப் பேசினாள் மீனா.. பில் போட வந்த முதியவள் அவளைக் கூர்ந்து பார்க்க, அவசரமாக முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.. அந்த முதியவள் விஷ்வாவையும் மீனாவையும் சந்தேகத்துடன் மாறிமாறிப் பார்த்தபடி..
"என்ன மீனா.. கடையில எப்பப் பாத்தாலும் கூட்டமாக் குமிஞ்சு கிடக்கு..? நல்ல வியாபாரம் போல.." என்று பட்டவர்த்தனமான பொறாமையுடன் சொன்னாள்..
'உன் கொள்ளிக்கண்ணுல பட்டிருச்சில்ல.. இன்னும் ரெண்டு நாளைக்காவது கடையில காத்தாடிரும்.. நீயெல்லாம் கடைக்கு வரலைன்னு யார் அழுதது..?' மீனா மனதுக்குள் பொருமியபடி..
"எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் பாட்டி.." என்றாள்.
"ம்ஹீம்.. என் வீட்டில என் ஆசிர்வாதம் எடுபட மாட்டேங்குது.. எதத் தொட்டாலும் விளங்க மாட்டேங்குது.. அடுத்தவங்களுக்கு அமோகமா இருக்குது.. தொட்டதெல்லாம் துலங்குது.."
அந்த முதியவள் விட்டப் பெருமூச்சில் ஏஸியின் குளிர் குறைந்து தணல் காற்று நிரம்பியது..
"மனசில நல்ல எண்ணம் இருக்கனும்.." வெடுக்கென பதில் சொன்னாள் மீனா..
"என்னாது..?" ராகம் போட்டாள் முதியவள்..
"உங்களைப் போல மனசில நல்ல எண்ணத்தோட மத்தவங்க நல்லா இருக்கனும்னு வாழ்த்தினா நல்லாத்தானே இருக்கும் பாட்டி..?"
"ஓ.. நீ அப்படிச் சொல்றியா..?" நம்பாத பார்வையுடன் இழுத்தாள் முதியவள்..
நடைபெற்றுக் கொண்டிருந்த உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த விஷ்வாவுக்கு சிரிப்பு வந்தது..
'எப்படி போட்டுத் தாக்கறா.. இது.. இது.. இது.. இந்தக் கெட்டிக்காரத்தனமும் புத்திசாலித்தனமும்தான் என்னை இம்ப்ரெஸ் பண்ணுது.. அதைப் புரிந்துக்காம ஏதேதோ பேசறாளே..'
"அவ்வளவுதானே பாட்டி..?" முதியவளைத் துரத்தி விட்டால்தான் நிம்மதி என்று பல்லைக்கடித்தபடி கேட்டாள் மீனா..
"இம்புட்டுத்தான்.. உன் கடைக்கு வந்தா மொத்தக் கடையையும் காலி பண்ணிட்டுத்தான் போகனுமின்னு சொல்லுவ போல இருக்கே.." நல்ல வார்த்தைகளைச் சொல்லுவதைப் போல பொல்லாத வார்த்தைகளைச் சொன்னாள் முதியவள்..
"கடையைக் காலி பண்ணிருவீங்களா..? அது உங்களால மட்டுமில்ல.. யாராலயும் முடியாது பாட்டி.. விற்க விற்கச் சரக்கு வந்துக்கிட்டே இருக்கும்.. அத்தனையையும் வாங்க நீங்க ஆயுசுக்கும் சம்பாதிச்சாலும் முடியாது.." சிரித்துக் கொண்டே கொடுத்துக் கட்டினாள் மீனா..
மூதாட்டியின் முகம் ஜிவுஜிவு என ஆகிவிட்டது.. அவள் என்ன பொருள் வாங்கவா கடைக்கு வந்தாள்..? மீனாவின் கடையிலும் மூர்த்தியின் டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலும் எப்படி வியாபாரம் ஆகிறது என்று கண்டு போகத்தானேவந்தாள்.. மூர்த்தியின் ஸ்டோரில் ஐந்து ரூபாய்க்கு இஞ்சியும், மீனாவின் கடையில் ஒரு கைக்குட்டையும்... ஹேர்பின் அட்டையும் வாங்கியிருப்பவள் கடையைக் காலி செய்யும் அளவுக்குப் பேசுகிறாள் என்றால் மீனா விட்டு வைப்பாளா..? போட்டுத் தாக்கி விட மாட்டாளா..?
'இவளை எதையாச்சும் பேசனுமே..' வெறிகொண்ட மூதாட்டி விஷ்வாவைப் பார்த்து விட்டு..
"இந்தப் பையன் யாரு..? கடைக்கு சாமான் வாங்க வந்ததைப் போல இல்லையே... வெள்ளையும் சொள்ளையுமா வெளியூர் போல இருக்கே.. கடைவாசலில நிக்கிற பெரிய காரு இந்தப் பையனோட கார்தானா..? உன்கிட்ட உக்காந்து பேசிக்கிட்டு இருக்கே.. உனக்குத் தெரிஞ்ச பையனா..? உன்னைப் பாக்கத்தான் காரப் போட்டுக்கிட்டு வந்திருக்குதா..? எப்புடித் தெரியும்..? உன்கூடப் படிச்ச பையனா..? இல்ல, பழகின பையனா..?" என்று உரத்த குரலில் கேட்டாள்..
கடையில் இருந்த மற்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.. அந்தக் கிழவியின் நோக்கமே அதுதானே.. மீனா அதைக் குறித்துக் கவலை கொள்ளவில்லை.. அந்த முதியவளுக்குப் பதில் சொல்ல வாய் திறப்பதற்குள் கடைக்குள்வந்த புனிதா விஷ்வாவைக் கண்டதும் பரபரத்தாள்..
"தம்பி நீங்களா..? எப்போ வந்தீங்க.. ஊரில அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாம் சுகம்தானா..? தங்கச்சிக்கு கல்யாணம் எப்போ..?"
மீனா கேட்டுக்கொள் என்பதைப் போல மூதாட்டியைப் பார்த்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -68
பொதிகையிலே பூத்தவளே -68
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-68.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-68.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy