பொதிகையிலே பூத்தவளே -67

67 அந்த நிகழ்வுக்குப் பின்னால் புனிதாவின் முகத்தில் ஓர் ஒளிர்வு குடி கொண்டது.. அவளைப் பற்றியும் கணவர் யோசிக்கிறார் என்பதில் வந்த மகிழ...


67

அந்த நிகழ்வுக்குப் பின்னால் புனிதாவின் முகத்தில் ஓர் ஒளிர்வு குடி கொண்டது.. அவளைப் பற்றியும் கணவர் யோசிக்கிறார் என்பதில் வந்த மகிழ்வு அது.. புனிதா அருமையானவள்.. அத்தனைக்குப் பின்னாலும் ஆனந்தனின் மீது பாசமாக இருந்தாள்.. அவனுடைய குழந்தையைப் பற்றி அடிக்கடி பேசுவாள்.. அப்போது நெகிழ்வில் அவளது கண்கள் கலங்கும்.
"பக்கத்து வீட்டு பார்வதி மாமி கோவிலில் ஒருநாள் பார்த்தாளாம்.. ஆனந்தன், அவனோட பெண்டாட்டி, குழந்தையோட மாமனார் குடும்பத்தோட கோவிலுக்கு வந்திருந்தானாம்.. அவனோட குழந்தை அச்சு அசல் உன்னைப் போலவே இருந்தாளாம்.. குண்டுக் கன்னமும், பெரிய கண்ணுமா நம்ம மீனாவைப் பார்க்கிறதைப் போலவே இருக்கான்னு ஆத்தாத்துப் போனா.. மனசு கிடந்து அடிச்சுக்குச்சு.. அவளுக்குப் பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கு.. நமக்குத்தான் கொடுத்து வைக்கலை.."
மீனா உதட்டைக் கடித்துத் தன் உணர்வுகளை அடக்கிக் கொள்வாள்.. அதில் ஒரு சிறுதுளி வெளிப்பட்டு விட்டாலும் போதும்.. புனிதா குற்ற உணர்வில் மறுகி விடுவாள்.. அண்ணனும் தங்கையும் பிரிந்து நிற்பதற்கு அவள்தான் காரணமோ என்று உடைந்து விடுவாள்.. அது கூடாது.. அணை உடைந்த வெள்ளமாக தமையனைத் தேடிப் பரிதவிக்கும் பாசத்தை வெளிக்காட்டி விடக் கூடாது.. அப்படிக்காட்டி விட்டால் மீனா கட்டிக் காப்பாற்றி வரும் குடும்பம் சிதறி விடும்.. ஆனந்தனால் அந்தக் குடும்பத்திற்கு நடந்த அநீதிக்கான பரிகாரத்தை மீனாதான் செய்தாக வேண்டும்.. எவ்விதத் தந்நலமும் பார்க்காமல், சக்களத்தியின் குழந்தைகளைத் தன் குழந்தைகளைப் போல நினைத்து வளர்த்தாளே அந்த உத்தமி.. அவளுக்கான வாழ்க்கைப் பாதுகாப்பை மீனா கொடுத்தாக வேண்டும்.. அதற்கு ஆனந்தன் விடமாட்டான்.. தடைகல்லாக நிற்பான்.. நன்றி மறந்தவன்.. அவனைப் போலத் தங்கையும் இருந்தாக வேண்டும் என்று கட்டாயப் படுத்துவான்.. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் ஆனந்தனைத் தள்ளி நிறுத்தியாக வேண்டும்.. அப்படி அவனைத் தள்ளி நிறுத்தியாக வேண்டுமானால் அண்ணனைத் தேடும் மனதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மீனா மனதை இறுக்கிப்பூட்டித் தாழிட வேண்டும்..
அது அழகர் சீர் செய்து தங்கை மீனாட்சியை சோமசுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படும் சொக்கநாதருக்குத் திருமணம் செய்து கொடுத்த மதுரை.. கூடப் பிறந்தவளுக்கான அண்ணன் சீர், திருமணத்துக்குப் பின் அவள் குடும்பத்தில் நிகழும் அத்தனை சுபகாரியங்களிலும் முன்னால் நிற்கும் தாய்மாமன் சீர் என்று கூடப்பிறந்தவளுக்குச் சீர் செய்வதில் பெருமை கொள்ளும் ஆண்சிங்கங்கள் வாழும் மதுரை மாநகரம்.. அங்கேதான் ஆனந்தனும் பிறந்திருக்கிறான்.. அழகரிடம் சீர் வாங்கும் மீனாட்சியைப் போல மீனாம்பிகை ஆனந்தனிடம் சீர் கேட்கவில்லை.. அன்பைத்தான் கேட்டாள்.. பாசத்தைத்தான் கேட்டாள்.. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தமையனிடம், தன் காதல் தோல்வியைச் சொல்லித் தோள் சாய்ந்து கதறியழும் சொந்தத்தைத்தான் கேட்டாள்..
ஆனந்தன், தங்கை சாய்ந்து கொள்ளத் தோள் கொடுக்கும் தமையனாக இருக்கவில்லை.. மாறாக தங்கையின் வருமானத்தைக் கவர்ந்து செல்ல வந்த பேரசைக்காரனாக வந்து நின்றான்.. நான் உன்னுடன் பிறந்தவன்.. உன் உழைப்பில் வந்த ஊதியத்தில் உருவான கட்டிடத்தை எனக்குக் கொடு என்று கேட்டான்.
"அம்மா.. அவனே நமக்கு வேண்டாம்ன்னு சொல்லித் தள்ளி வைச்சுட்டான்.. அவனோட மகளைப் பத்தி நமக்கென்ன பேச்சு..? வேலையைப் பாருங்கம்மா.. மோகனா சொன்னதைப் போல, உங்களுக்குத் தாங்கிப் பிடிக்கிற மகன் கிடைச்சிருந்தா, கையில பிடிக்க முடியாது.." பட்டுக் கத்தரித்தாள் மீனா..
"மனசு கேட்க மாட்டேங்குது மீனா.. கல்யாணத்துக்குத்தான் நம்மைக் கூப்பிடலை..கட்டின பொண்டாட்டியையாவது கூப்பிட்டுக்கிட்டு வந்து நம்ம கண்ணில காட்டிட்டு விருந்து சாப்பிட்டுட்டுப் போயிருக்கலாம்..."
"அவன் பண்ணி வைச்சுட்டுப் போன வேலைக்கு விருந்து ஒன்று தான் குறைச்சல்.. ஆக்கிப் போட்ட விருந்தெல்லாம் பத்தாதா..? தின்னு வளர்ந்த நன்றிக்குத்தான், அப்பா வட்டிக்குக் கடன் வாங்கி வைச்சிருந்த பத்தலட்ச ரூபாயைச் சுட்டுட்டு ஓடிப் போயிட்டானே.. ஏம்மா இப்படி இருக்கீங்க..?"
"உன்னப் போலவே ஆனந்தனோட பொண்ணு இருக்கிறாளாமில்ல.. உங்கப்பா என் கழுத்தில தாலியைக் கட்டி இந்த வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டு வந்தப்ப உனக்கு ஆறுவயசு.. குண்டுக் கன்னமும், நீள்வடிவப் பெரிய கண்களுமா என்னைப் பாத்து 'அம்மா'ன்னு கூப்பிட்ட.. எனக்கு உடம்பே சிலிர்த்துப் போச்சு.. மறுபடியும் உன்னைக் குழந்தையாக்கிக் கொஞ்ச முடியுமா..? ஆனந்தனோட மகளைப் பாக்க மனசு பறக்குது மீனா.."
இந்தப் பாசத்தைத்தான் ஆனந்தன் துச்சமாகப் பேசுகிறான்.. புறக்கணிக்கிறான்.. இகழ்கிறான்.. ஏளனம் செய்கிறான்..
"இந்த அன்புக்கு அவன் அருகதையில்லாதவன்ம்மா.. புரிஞ்சுக்கங்க.."
கம்மிய குரலில் சொல்லிவிட்டு அதை புனிதா உணர்ந்து கொள்வதற்குள் பேச்சை வேறு திசையில் மாற்றி விட்டாள் மீனா.. சமையலைக் கவனிக்க புனிதா எழுந்து சென்றவுடன் பால்கனியில் ஊஞ்சலில் சோர்வாக சாய்ந்து கொண்டாள்.. எதையோ தொலைத்து விட்ட சோகம் மனதைக் கவ்வியது..
"அம்மா புரிஞ்சுக்கிறது இருக்கட்டும்.. நீ புரிஞ்சுக்கிட்டியாக்கா..?"
ஊஞ்சலின் கம்பியைப் பிடித்தபடி நின்ற மோகனா ஆழ்ந்த குரலில் கேட்டாள்.. மீனாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது..
"என்னடி சொல்கிற..?"
"அம்மா அன்பானவங்கக்கா.. அதுவே அவங்களோட பலவீனமா ஆகிப்போகிருச்சு.. நீ புத்திசாலிதானேக்கா.. ஸ்ட்ராங் மைண்டோட இருக்க வேணாமா..?"
"இப்கே யாரு ஸ்ட்ராங் மைண்டில்லாம இருக்கிறதாம்..?"
"அம்மாவும், அப்பாவும் அப்படித்தானே இருக்காங்க.. நீ கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்டில அப்பா சுதாரிச்சு நிமிர்ந்து நின்னுட்டார்.. அவர் ஸ்ட்ராங்கா இருந்தாப் போதும்.. அம்மாவை பாதுகாத்துருவார்.. ஆனா உன்னை யார் பாதுகாக்கிறது.. நீ ஸ்ட்ராங்கா இல்லையேக்கா.."
"போடி.. பேசனும்ங்கிறதுக்காக எதையாவது உளராதே.."
"இது உளறல் இல்லை.. உண்மை.. அது உனக்கும் தெரியும்.."
"இதை தெரிஞ்சும் தெரியாததைப் போல இருந்து விடறதுதான் நல்லதுடி.."
"அப்படின்னா, ஏன்க்கா விஷ்வா சாரை விட்டு விலகி ஓடிவந்த..?"
மோகனாவின் நிதானமான நெற்றியடிக் கேள்வியில் நிதானமிழந்தாள் மீனா..
"அடிச்சேன்னா பாரு.. அதிகப்பிரசங்கி..! எப்பப் பார்த்தாலும் எதையாவது ஏடா.. கூடமாப் பேசிக்கிட்டே இருப்பியா.. சின்னப் பொண்ணாய் லட்சணமாய் இருக்க மாட்டியா..? படிப்பை மட்டும் பாரு.. மத்த விசயமெல்லாம் உனக்கு எதுக்கு..?"
எரிந்து விழுந்த மீனாவை இமைக்காமல் ஓர் பார்வை பார்த்து விட்டுக் போய் விட்டாள் மோகனா.. அவள் போனபின்புதான் மீனாவுக்குத் தான் அவளைக் கடிந்து கொண்டது தவறு என்பது உறைத்தது.. எவர் மீதோ இருந்த கோபத்தையும், எரிச்சலையும் மாட்டிக்கொண்ட மோகனாவின் மீது அவள் கொட்டிக் கவிழ்த்திருக்கிறாள்..
மீனா தங்கையைத் தேடிப் போன போது அவள் கட்டிலில் ஒய்யாரமாகப் படுத்து போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.. மீனாவைக் கண்டதும் கண்சிமிட்டிச் சிரித்தாள்..
"என்ன..? நீ திட்டினதும் நான் ரோசப்பட்டுக்கிட்டு, பாடம் படிக்க ஆரம்பிச்சுட்டேன்னு நினைச்சுட்டியா..? அதுக்கெல்லாம் வேற ஆளைப்பாரு.. யாரு என்ன திட்டினாலும் பாடப் புத்தகத்தைப் புரட்டியே பார்க்கக் கூடாதுங்கிறதில இந்த மோகனாவை அடிச்சுக்க யாராலும் முடியாது.. நான் கில்லியில்ல.. ஏன்னா.. என் டிசைன் அப்படி.."
மீனாவின் மனம் இறகை விட லேசானது.. தங்கையைத் தேவையின்றித் திட்டி மனதைக் காயப்படுத்தி விட்ட குற்ற உணர்வு அகன்று அவள் வாய் விட்டுச் சிரித்தாள்.. தமக்கையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மோகனாவின் முகம் மென்மையானது.. பரிவுடன் பார்த்தாள்..
"நீ இருக்கியே.. உண்மையிலேயே உன்னை அடிச்சுக்க யாராலேயும் முடியாதுடி.. திட்டிட்டோமேன்னு சமாதானம் செய்ய வந்தா, இங்கே இவ என்னவோ பாராட்டு வாங்கிட்டு வந்ததைப் போலப் பாட்டுக் கேட்டுக்கிட்டு உக்காந்திருக்கா.."
"திட்டினயா..? எப்பத் திட்டின..?"
"இப்பத்தானேடி வசவு வாங்கிக்கிட்டு வந்த.."
"ஹலோ.. மை டியர் சூப்பர் லேடி.. நீ வாயைத் திறந்து என்ன பேசினாலும் எனக்கு அது கொஞ்சறதைப் போலத்தான் இருக்கும்.. அதுக்கெல்லாம் சமாதானப் படுத்த வந்திருவியா..?"
"மோகனா.."
மீனா தங்கையை அணைத்து உச்சி முகர்ந்தாள்.. அவளது அணைப்பில் அடங்கிய மோகனா நெகிழ்ந்தாள்..
'நீ இப்படியே சிரிச்சுக்கிட்டு இருக்கனும்க்கா.. நீயும், நானும் வேற வேற தாய் வயிற்றில் பிறந்தவங்க என்கிறதை வெளிக்காட்டிக்காம பாசத்தைக் கொட்டறியே.. நீ நல்லா இருக்கனும்.. என்னைப் பெத்த தாயை உன்னைப் பெத்த தாயா நினைச்சு, அவங்க வாழ்க்கை பாதுகாப்புக்காக போராடறியே.. நீ உன் வாழ்க்கையிலே ஜெயிக்கனும்.. அதுக்கு விஷ்வா சாரோட நீ சேர்ந்தாகனும்.. அது ஏன்க்கா உனக்குப் புரிய மாட்டேங்குது..'
"என் தங்கம்.. என் செல்லம்.. என் மோகனாக்குட்டி.."
"இதுதான் சாக்குன்னு என்னைக் குட்டியாக்கிருவியே.. நான் டென்த் படிக்கிறேன்.. ஸ்வீட் பிப்ட்டீன்.. நினைவிருக்கட்டும்.."
"பதினைஞ்சு வயசெல்லாம் ஒரு வயசாடி.."
"இதுதான் வயசு.. டீன் ஏஜ் கேர்ள் நானு.. குன்னூரில் எத்தனை பசங்க என்னை சைட் அடிச்சாங்க தெரியுமா..?"
"உனக்கு சூடு வைக்கனும்டி.. அப்பத்தான் அடங்குவ. இது மதுரை.. நாம பொறந்து வளர்ந்த ஊரு.. அடக்கி வாசி.."
"என்ன கழுதைக்கு..?"
"எல்லா இடத்திலயும் நமக்குத் தெரிஞ்சவங்கதான் இருப்பாங்க.."
"இந்தக் கழுதைக்குத்தான் நான் குன்னூரிலேயே படிக்கிறேன்னு சொன்னேன்.. யாரு கேட்டாங்க..? குண்டுக்கட்டாத் தூக்கிக்கிட்டு வந்து மதுரையில கடாசிட்டாங்க.. ஒரு ஸ்வீட் பிப்ட்டீன் கேர்ளுக்குத்தான் எம்புட்டு சோதனை..!"
"உன் வாயிருக்கே.."
தங்கையின் பின்னந்தலையில் செல்லமாக ஒரு தட்டு தட்டி விட்டு, மனப்பாரம் அகன்றவளாக, அங்கிருந்து அகன்றாள் மீனா.. அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த மோகனாவின் மனதில் பாசம் வந்து அமர்ந்தது..
ஆனந்தனுடன் பிறந்தவள்தான் மீனா.. ஆனால் மோகனாவுடன் பிறந்தவளைப் போல இவள் மீதுதான் பாசத்தைப் பொழிவாள்.. ஆனந்தனின் மீது மீனா பாசத்தைப் பொழிந்தாலும் அவன் அதைத் தூக்கி எறிந்து  உதாசீனம் செய்து விடுவான் என்பது வேறு விசயம்..
அதை மீனா அறிவாள்.. மோகனா அறிவாள் என்பதை அறியாள்.. அன்பான அக்காவின் மனது வேதனைப் படுவதை மோகனாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..
மீனாவின் உதடுகள்தான் சிரித்தன.. மனதுக்குள் அவள் அழுது கொண்டிருந்தாள்.. அதை மோகனா மட்டுமே உணர்ந்தாள்...
வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது.. மூர்த்தி டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஒன்றிப் போனார்.. மோகனாவுக்கு புது ஸ்கூல் என்றாலும் பிறந்து வளர்ந்த மதுரையில் படிக்கிறாள் என்பதினால் தோழிகள் சேர்ந்து விட்டார்கள்.. ஸ்கூலும் பழக்கமாகி விட்டது.. புனிதா சொந்த ஊருக்குத் திரும்பி மதிப்பான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டதில் ஒரு சுற்று பெருத்து விட்டாள்.. மூர்த்தியை அவள் கவனித்துக் கொண்டிருந்த காலம் மாறி, மூர்த்தி புனிதாவைக் கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தார்.. ஞாயிறுகளில் மதியம் வரைதான் கடைகள் இருக்கும்.. மதியத்திற்கு மேல் விடுமுறை.. ஒவ்வொரு ஞாயிறும் கணவனும், மனைவியும் மட்டும் கோவிலுக்குப் போய் வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.. கானாடுகிரியில் ஆரம்பித்த பழக்கம் அது.. மீனா வேலைக்கும், மோகனா பள்ளிக்கும் போய் விடுவார்கள்.. தனித்திருக்கும் மூர்த்தியும் புனிதாவும் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருப்பார்கள்.. மூர்த்திக்கு உடல் தேறியதும் மலைப் பாதையில் நடந்து விட்டு வருவார்கள்.. அப்படி நடக்கும் போது மனம் விட்டுப் பேச அவர்களுக்குள் நிறைய விவரங்கள் இருந்ததை அறிந்தார் மூர்த்தி.. எதையும் வாய் திறந்து பேசாமல் மௌனச் சுரங்கம் போல நடமாடிக் கொண்டிருந்த புனிதாவின் மனதில் கொட்டிக் கிடந்த காதலையும், பிரியத்தையும், அவர்மீது அவள் கொண்டிருந்த நேசத்தின் அளவையும் அவர் உணர்ந்து சிலிர்த்த தருணங்கள் அவை..
கணவன் மனைவியாகவே இருந்தாலும், அவர்கள் மனம் விட்டுப் பேசிக் கொள்ளும் தருணங்கள் கிடைப்பது அரிதிலும் அரிது.. சிலருக்கு அதுபோன்ற தருணங்கள் வாய்க்காமலே வாழ்க்கை முடிந்து விடுவது உண்டு.. மூர்த்திக்கும் புனிதாவுக்கும் அத்தகைய அரிதான தருணங்களை கானாடுகிரிமலை கொடுத்திருந்தது.. மதுரையில் அவர்கள் தருணங்களை உருவாக்கிக் கொண்டார்கள்.. ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வயது தடையில்லை..
மீனா யோகியைப் போல மாறியிருந்தாள்.. குடும்பத்தினருக்கான வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுத்திருந்தவளின் மனதில் புயல் அடித்துக் கொண்டிருந்தது.. அந்தப் புயலை உருவாக்கியிருந்தவன் புயல் போன்றவன்..
அவனை மறக்க முடியாமல் அல்லாடினாள் மீனா.. இரவு பகலாய் அவளைத் துரத்திய அவனுடைய நினைவுகளில் இருந்து தப்பிக்க மார்க்கமில்லாமல் தவித்தாள்.. உறங்காத இரவுகளை அவளது கண்ணிமைகள் உணர்த்த புனிதா கவலையானாள்.. சின்ன மகளை அழைத்து விசாரித்தாள்..""
"அக்கா ஏண்டி ஒரு மாதிரி இருக்கா..?"
மோகனா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. இந்தக் கேள்விக்கு அவள் என்ன பதிலைச் சொல்வாள்..? தூக்கமில்லாமல் மீனா புரண்டு புரண்டு படுப்பதையும், மோகனா விழித்துக் கொண்டால் தூங்குவதைப் போல நடிப்பதையும் புனிதாவிடம் அவளால் சொல்ல முடியுமா..? சில இரவுகளில் மீனா சத்தமில்லாமல் அழுவதை மோகனா கேட்டு கொண்டுதான் இருக்கிறாள்.. அவளால் என்ன செய்ய முடியும்..? அக்கா அழாதே என்று ஆறுதல் சொல்ல முடியாதே.. அக்கா தங்கைதான் என்றாலும் சில உள்ளார்ந்த உணர்வுகளில் எல்லைக்கோடு கிழித்துத் தள்ளித்தானே நிற்க வேண்டியதாய் இருக்கிறது..
விஷ்வா நல்லவன்தான்.. அதில் மோகனாவுக்கு துளியளவும் சந்தேகம் இல்லை.. மாற்றுக் கருத்தும் இல்லை.. அவனும் மீனாவும் காதலர்களா என்று கேட்டால் அதுவும் மோகனாவுக்குத் தெரியாது.. விஷ்வா அவர்களின்  குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கொண்டான்.. அவனும் மீனாவும் ஆழ்ந்த புரிதலுடன் பேசிக் கொண்டார்கள்.. என்னதான் சம்பளம் தரும் முதலாளியாக இருந்தாலும் மீனா ஒர் அளவுக்கு மேல் எந்த ஆணிடமும் நின்று பேசியிருக்க மாட்டாள்.. விஷ்வாவிடம் பேசினாள்.. அவனிடம் குடும்ப விவரங்கள் முதற்கொண்டு பகிர்ந்து கொண்டாள்.. அவர்களுக்கு இடையே ஆழ்ந்த நட்பு மட்டுமே இருந்தது என்று சொல்வதற்கு மோகனா ஒன்றும் பப்பா இல்லையே.. சின்ன வயதுதான் என்றாலும் அவளுக்கும் சில விசயங்கள் புரிந்து தொலைக்கிறதே..
உனக்கும் விஷ்வா சாருக்கும் இடையில் என்ன இருக்கிறது என்று கேள்வியை மறைமுகமாக மீனாவிடம் கேட்டு விட்டாள்.. எதற்காக விஷ்வாவைப் பிரிந்து மதுரைக்கு வந்திருக்கிறாய் என்றும் கேட்டு விட்டாள்.. மீனாவிடமிருந்து கோபம்தான் வந்ததேயொழிய பதில் வரவில்லையே.. அவள் வாய் விட்டுச் சொல்லாமல் அவளைப் பற்றி மோகனா உணர்ந்ததைத் தாயிடம் சொல்ல முடியாது.. சொல்லவும் கூடாது..
"என்ன மாதிரி இருக்கு..? எனக்கொன்னும் தெரியலையே.."
"என்னடி பேசற.. கூடவே படுத்துத்துங்கறவ, அக்கா தூங்குச்சா, இல்லையான்னு கவனிக்க மாட்டியா..?"
'அதை நீங்க சொல்லித்தான் கவனிப்பேனா..? எனக்கே தெரியும்மா..'
"என்னடி வாயில இட்லியைத் திணிச்சிருக்கிறதைப் போல பேசாம இருக்க..? வாயைத் திறந்துதான் பேசேன்.."
"வாயில திணிக்க இட்லிதான் கிடைச்சதா..? பிரியாணியெல்லாம் கிடைக்காதா..? பேச்சுக்குக்கூட பிரியாணி வாயில வர மாட்டேங்குதே.."
"அதான் வாரத்துக்கு ரெண்டு தடவை பிரியாணியா செஞ்சு தள்ளரேனே.. என்னமோ பிரியாணியைக் கண்ணிலே காணாதவளைப் போல பேச்சைப் பாரு பேச்சை.."
"அம்மா.. என் பேச்சுக்கு என்னவாம்.. எங்க ஸ்கூல் கல்ச்சுரல் பங்சனில பேச்சுப் போட்டியில பர்ஸ்ட் பிரைஸ் வாங்கின ஆளாக்கும் நானு.. பாத்துப் பேசுங்க.."
"பாத்துப் பேசலைன்னு என்னடி செய்வ..? வழக்கு வைச்சிருவியோ.. இத்தணூண்டா இருந்துக்கிட்டு, என்னப் பேச்சுப் பேசறா.. அக்கா ஏண்டி தூங்காதவ மாதிரி வீங்கின மூஞ்சியோட இருக்கான்னு கேட்டா அதுக்குப் பதிலக் காணோம்.. வாய் மட்டும் மதுரை ஜில்லா முழுக்கக் கேட்கிறதைப் போலக் கிழி கிழின்னு கிழியுது.."
"அப்ப, அழகான அக்காவோட மூஞ்சிய வீங்கின மூஞ்சின்னு சொல்கிறிங்க..?"
"அடிச்சேன்னா பாரு.. நான் என்ன சொல்றேன்.. நீ என்னடி அர்த்தப்படுத்திக்கிற..?"
"நீங்க என்னை அடிக்கிறதிலேயே குறியாய் இருங்க.. எதுடா சாக்குன்னு தேடிக்கிட்டு இருப்பீங்க போல.."
"என்னடி சுத்த விவரம் கெட்டவளா இருக்க..?"
"கிளாஸ் பர்ஸ்ட் வாங்கறவளை விவரமில்லாதவன்னு பட்டம் கட்டறிங்களே.. உங்களுக்கே இது அடுக்குமா..?"
"இவ புரிஞ்சுதான் பேசறாளா..?"
புனிதா தலையில் அடித்துக் கொண்டு போய் விட்டாள்.. அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல் தலையில் தண்ணீர் குடிக்க வைத்து வெற்றிகரமாக புறமுதுகும் காட்ட வைத்து ஓய்ந்து போன மோகனா, புனிதா போனதும் ஒரு பாட்டில் தண்ணீரைத் தொண்டையில் சரித்து ஆசுவாசமானாள்..
'ஸ்.. அப்பா.. அம்மா நோட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. அப்பா எப்போக் கவனிச்சு கொஸ்டின் பேப்பரை நீட்டப் போறாரோ தெரியலையே.. ரெண்டு பேரும் அக்காவை விட்டு விடுவாங்க.. எனக்குத்தான் பரிட்சை வைப்பாங்க.'
மோகனா தன் பங்குக்குத் தலையில் அடித்துக் கொண்டு பள்ளிக்குப் போய் விட்டாள்.. புனிதாவின் மனதை சஞ்சலம் ஆட்கொண்டது.. அவளுடைய அன்பு மகள் மீனாவின் மனதில் என்னதான் இருக்கிறது..? ஏன் சோர்நது காணாப்படுகிறாள்..?
மீனா அப்படித்தான் இருந்தாள்.. கலகலப்பில்லாமல், கடமைக்கு வாழ்கிறவளைப் போலக் காணப்பட்டாள்.. மகளிருக்காக என்று அவள் தொடங்கிய கடை அவளுக்கு அடைக்கலம் கொடுத்தது.. எப்போதும் கூட்டம் இருக்கும் கடையின் வியாபாரத்தில் அவள் தன் துயரத்தை மறந்தாள்.. அப்படி ஓர்நாள் மும்முரமாக அவள் வேலையில் இருந்தபோது அவளுக்குப் பழக்கமான கம்பீரகுரல் கேட்டது..
"பிஸினெஸ் பிக்-அப் ஆகிருச்சு போல.. இனி விஸ்வரூபம் மாலில் வேலை செய்யனும் என்கிற அவசியமும் இல்லை.. கானாடுகிரியில் என் தொழில்களைக் காவல் காக்கனும் என்கிற பொறுப்பும் இல்லை.. கெட்டிக்காரிதான்.. அது எப்படிடீ எல்லாத்தையும் ஒரு செகண்டில மறந்து தூக்கிப் போட்டுட்டு வர உன்னால முடியுது..?"
விழிகள் விரிய நிமிர்ந்தாள் மீனா.. அங்கே விஷ்வா நின்றிருந்தான்.. அவனுடைய தீட்சண்யமான விழிகள் அவளைத் தீர்க்கமாக உறுத்துப் பார்த்தன.. குற்றம் சாட்டின..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -67
பொதிகையிலே பூத்தவளே -67
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-67.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-67.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy