பொதிகையிலே பூத்தவளே -66

66 அவன் அப்படி நின்றதை மீனா விரும்பவில்லை.. மூர்த்தியின் முகம் சோர்ந்திருந்ததில் அவள் கவலை கொண்டிருந்தாள்.. அவரது களைத்த தோற்றம் அவளை...


66

அவன் அப்படி நின்றதை மீனா விரும்பவில்லை.. மூர்த்தியின் முகம் சோர்ந்திருந்ததில் அவள் கவலை கொண்டிருந்தாள்.. அவரது களைத்த தோற்றம் அவளை பதற வைத்துக் கொண்டிருந்தது.. அதைச் சொன்னால் ஆனந்தன் இரக்கப்பட மாட்டான்.. இன்னும் கொஞ்சம் எகத்தாளம் பேசி நெஞ்சுவலியை அதிகரிப்பான்..
'இன்னும் என்னத்தைப் பேசப் போறான்..? இதுவரை பேசிய பேச்சே இந்த ஜென்மத்துக்கும் போதுமே..'
"இவர்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் மீனா..? ஒருகோடி ரூபாயை இந்த இடத்தில் கொட்டி, இப்படியொரு வசதியான வாழ்க்கையை இவங்களுக்கு உண்டாக்கிக் கொடுத்திருக்கியே.. அதை விட்டுட்டு உன் பணத்தில நீ தனியா வீட்டை வாங்கி, இடத்தை எனக்குக் கொடுத்திருக்கலாமே.. புத்தியில்லாம இருக்கியே மீனா.."
'படுபாவி.. நான் நினைச்சதைப் போலதான் பேசி வைக்கிறான்..'
மூர்த்தியின் கண்கள் கலங்குவதை வேதனையுடன் பார்த்தாள் மீனா... புனிதாவின் நிலை அவரிலும் கொடியதாக இருந்தது.. மூர்த்தி பாவம்.. மகன் மேல் பாசம் கொண்டவர்.. அவன் கேட்டால் வீட்டை வைத்துக் கொள் என்று அவனுக்கு எல்லாவற்றையும் தாi வார்த்துக் கொடுத்து விட்டு தெருவுக்குப் போய் விடுவார்.. புனிதாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. உங்களுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப்பட்டு என்ன சுகத்தைக் கண்டேன்..? எனக்கும் என் குழந்தைக்கும் என்ன வழி..? உங்களுடைய மூத்த தாரத்துப் பிள்ளைகளை வளர்க்க ஆயாவாவும், வீட்டு வேலைக்காரியாவும், சமையல்காரியாவும் காலம் கழிச்சேனே என் பாவம் உங்களைச் சும்மா விடுமா என்று கேள்வி கேட்க அவளுக்குத் தெரியாது.. அவள் மூர்த்தியை மனமாரக் காதலிப்பவள்.. அவருக்காக எதையும் செய்பவள்.. எதையும் விட்டுக் கொடுக்கச் சித்தமாக இருப்பவள்.
இப்படிப்பட்ட இரக்க குணம் கொண்டவர்களைத்தான் இந்த உலகம் ஏமாளி என்று சொல்கிறது.. ஆனந்தனின் பார்வையில் மூர்த்தியும் புனிதாவும் ஏமாளியிலும் ஏமாளிகள்.. அதனால்தான் அவன் அவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு சொத்தையும் பிடுங்க வந்திருக்கிறான்..
"எனக்கும் சேர்த்து நீ புத்தியோடு பிழைக்கிறயே.. அதுபோதும் அண்ணா.. உன் புத்தி, எனக்கு வேண்டாம்.. நான் இப்படியே இருந்துக்கறேன்.. நீ கிளம்பு.. எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு.."
ஆனந்தனின் முகம் சிறுத்துப் போனது.. எப்படிப் பேசினாலும் மீனா மசிய மாட்டாள் என்பது புரிந்து போனதில் வேகமாக வெளியேறி விட்டான்.. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்த மூர்த்தியை கட்டிலில் படுக்க வைத்தார்கள்.. ஏஸி அறையிலும் அவருக்கு வியர்த்துக் கொட்டியதில் புனிதா பயந்து போனாள்..
"மீனா.. டாக்டருக்குப் போன் பண்ணு.." என்று பதறினாள்..
"இது டாக்டரினால் குணமாகிற நோயில்லைம்மா.. டாக்டர் கொடுக்கிற மருந்தும் மாத்திரையும் உடல் வலியைக் கேட்கும்.. மனவலியை நாம்தான் என்னன்னு பார்க்கனும்.." ஞானியைப் போலத் தத்துவம் பேசினாள் மீனா..
புனிதா அதற்கும் பயந்தாள்.. இளம் வயதுப் பெண், கல்யாணக் கனவுகளைப் பேசினால் பொருத்தமாக இருக்கும்.. தத்துவம் பேசினால்..?
மோகனாதான் சரியாகப் பேசினாள்.. அதற்கும் புனிதா மகளைக் கடிந்து கொண்டாள்.. உள்ளதைப் பேசினால் உலகம் என்றுதான் ஏற்றுக் கொண்டிருக்கிறது..? புனிதா மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன..?
"அம்மா.. உங்க மூத்த மகன்தான் வீட்டை விட்டுப் போயிருச்சே.. அப்படியே அமெரிக்காவிலேயே இருந்திருக்க வேண்டியதுதானே..? மதுரைப் பக்கம் வரச்சொல்லி, யார் வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சதாம்.."
"மோகனா.. என்ன பேச்சுப் பேசற..? அவன் உன் அண்ணன்.. இந்தக் குடும்பத்துக்கு மூத்த மகன்.. அமெரிக்காவுக்குப் போனவன் வீடு தேடி வந்தானேன்னு சந்தோசப்படாம இப்படியா பேசறது..?"
"போதும்மா தாங்கலை.. உங்களுக்கெல்லாம் பாசத்தைப் பிழியற மகன் கிடைச்சிருக்கனும்.. கையில பிடிச்சிருக்க முடியாது.. இரக்கமில்லாம ஈட்டிக்காரனைப் போல மொத்தக் குடும்பத்தையும் துரத்தப் பாக்குது.. அது எனக்கு அண்ணனாம்.. போவீங்களா.."
"சின்னப்பொண்ணு மாதிரிப் பேசிப் பழகு மோகனா.. பெரிய பெரிய பேச்சையெல்லாம் பேசாதே.."
"இப்பத்தான் பெரிய பொண்ணா லட்சணமா, அடக்க ஒடுக்கமாப் பேசிப் பழகுன்னு சொன்னீங்க.. ஒரு நிமிசத்தில மாத்திப் பேசறிங்களே.. இது நாயமாம்மா.."
மோகனா புனிதாவைக் கலங்கடித்துக் கொண்டிருக்க, மீனா கட்டிலுக்குப் பக்கத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள்.. சோர்ந்திருந்த மூர்த்தி மூத்த மகளின் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீரை உகுத்தார்.. மீனா அவர் பேசட்டும் என்று காத்திருந்தாள்..
"இவன் மனசில இந்த வீட்டு மேல நோக்கமிருக்குன்னு எனக்குத் தெரியாமப் போச்சேம்மா.." மூர்த்தியின் கை விரல்கள் நடுங்கின..
"தெரிஞ்சிருந்தா என்ன செஞ்சிருப்பீங்கப்பா.."
"இவனுக்கு இந்த வீட்டை எழுதிக் கொடுத்துட்டு வாடகை வீட்டுக்குக் குடி போயிருப்பேன்.."
"அப்படிச் செஞ்சிருவீங்கன்னு பயந்துதானே வீட்டை அம்மா பெயருக்கு கிரயப் பத்திரம் போட வைச்சேன்.."
"புனிதா பெயரில வீடு இருந்தா என்ன..? ஆனந்தனுக்கு வீடு வேணும்னு கேட்டா, அவ எழுதிக் கொடுத்திர மாட்டாளா..?"
"எழுதிக் கொடுத்துட்டு..? எங்கே போவாங்க..? நீங்களோ உடம்பு சரியில்லாதவர்.. நானும் மோகனாவும் வயசுக்கு வந்த பெண்கள்.. எங்களை வைத்துக்கிட்டு கௌரவமா குடியிருக்கச் சொந்த வீடில்லாம வாடகை வீட்டுக்கு அவங்க போகனுமா..?"
"மீனா.."
"பிள்ளைப் பாசம் இருக்க வேண்டியதுதான்.. அதுக்காக மத்த பிள்ளைகளுக்கும், கட்டின பெண்டாட்டிக்கும் அநியாயம் செய்கிற அளவுக்குப் பிள்ளைப் பாசம் இருக்கக் கூடாது.. நம்ம வீடு இடிச்சுக் கட்டற ஸ்டேஜிலதான் இருந்தது.. நாமதான் இழுத்துப் பிடிச்சுக் குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தோம்.. இடத்துக்குத்தான் மதிப்பு.. அந்த இடத்தோட மதிப்புக்கு ஈக்குவலா அவனுக்குச் செலவளிச்சுப் படிக்க வைச்சிருக்கீங்க.. அம்மாவோட நகைகளும், உங்க சம்பளப்பணத்தில பாதியும் அவனுக்குத்தான் செலவாச்சு.."
"நான் இல்லேன்னு சொல்லலையேம்மா.."
"சொல்லித்தான் பாருங்களேன்.. அப்புறம் தெரியும்.. அண்ணன் மட்டும்தான் உங்க பிள்ளையாப்பா..? என்னையும் மோகனாவையும் தவிட்டுக்கு வாங்கிட்டு வந்து வளர்க்கறிங்களா என்ன..?"
"என்னம்மா.. இப்படியெல்லாம் பேசற...?"
"நீங்க பேச வைக்கறிங்கப்பா.. அவன் பாட்டுக்கு வாயில் வந்ததையெல்லாம் பேசித்தள்ளரான்.. நீங்க பேசாம பாத்துக்கிட்டு நிக்கறிங்க.. நீங்க இந்தக் குடும்பத்தோட தலைவர்ப்பா.. உங்களை நம்பித்தான் அம்மாவும் நாங்களும் இருக்கோம்.. நீங்க ஸ்ட்ராங்கா இருந்தாத்தான் நாங்க ஸ்ட்ராங்கா இருக்க முடியும்.. நீங்க பலவீனமானா.. நாங்க அவ்வளவுதான்ப்பா.. இது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது..? அம்மாவை அண்ணன் அந்தப் பேச்சுப் பேசறான்.. நீங்க ஏன்னு கேக்காம நெடுமரமா நிக்கறிங்க.. தப்புப்பா.. என்னதான் அண்ணன் உங்க மகனா இருந்தாலும் அம்மாவைப் பேச அவனுக்கு ரைட்ஸ் இல்லை.. நீங்க அவனோட அப்பாதான்.. அவன் பெண்டாட்டியை நீங்க பேசினா கேட்டுக்கிட்டு இருப்பானா..? உங்களை நார் நாராக் கிழிச்சுற மாட்டான்..? அவன் பெண்டாட்டியைக் காப்பாத்தற புருசனா அவன் இருக்கிறப்ப, உங்க பெண்டாட்டியைக் காப்பாத்தற புருசனா நீங்க இருக்க வேண்டாமாப்பா..?"
மூர்த்தி குற்ற உணர்வுடன் புனிதாவைப் பார்த்தார்.. அவள் உதடுகள் துடிக்கக் கண்ணீரை அடக்கிக் கொண்டு  பேசாமல் நின்றாள்..
"அதில்லை மீனா.."
"அப்பா.. நீங்க விளக்கம் கொடுக்க வேணாம்.. அண்ணன் என்ன கையில பணமில்லாம, பிழைப்புக்கு வழியில்லாம, வீட்டில பங்கு கேட்டு வந்து நின்னுச்சா..? இல்லைப்பா.. அமெரிக்காவில அது வாங்கற சம்பளம் எவ்வளவு தெரியுமா..? நம்ம இந்திய மதிப்புக்கு ஆறு லட்சம் ரூபாய்.. சென்னையில ஒன்னுக்கு ரெண்டா வீடு வாங்கிப் போட்டிருக்காம்.. மதுரையில மாமனார் வீட்டை இடிச்சுக் கட்டிக் கொடுத்திருக்கு.. அந்த ஆளுதான இதைப் படிக்க வைச்சு ஆளாக்குச்சு..? காரும், பங்களாவுமா மாமனாரை வாழ வைச்சுட்டு, நாம கையூண்டி, காலுண்டி வீட்டை எடுத்துக் கட்டிப் பொழைக்கிற வழியைப் பார்க்கறதில பொறாமைப்பட்டு வந்திருக்கு.."
"புரியுதும்மா.."
"தயவு செய்து நிமிர்ந்து நில்லுங்கப்பா.. என்னால போராட முடியலை.. களைச்சுப் போயிருக்கேன்.. அம்மாவுக்கு அநியாயம் செய்யாதீங்க.. வளர்ந்த பிள்ளைகளுக்கு ஆயாவா இருக்கக் கல்யாணம்ங்கிற பெயரில அவங்க கழுத்தில தாலியைக் கட்டி, கணவுகளைக் கலைச்சு இந்த வீட்டில கொண்டு வந்து தள்ளினது போதும்.. கடைசி காலத்திலேயாவது அவங்க வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பைக் கொடுங்க.."
மூர்த்தியின் வியர்வை உலர்ந்து விட்டது.. அவர் எழுந்து உட்கார்ந்தார்.. புனிதா கொண்டு வந்த இஞ்சி டீயைக் குடித்து விட்டுக் கடைப் பக்கம் போய் விட்டார்.. மதிய உணவு உண்டபின் உறங்கி ஓய்வெடுத்தார்.. மாலையில் காபி அருந்திக் கொண்டிருந்த போது சாம்பசிவம் வந்தார்..
"என்ன மூர்த்தி.. எப்படியிருக்க..?" என்று கேட்டபடி வந்த சாம்பசிவத்தை எரிச்சலுடன் பார்த்துவிட்டு டிவியைப் பார்த்தார் மூர்த்தி..
சாம்பசிவத்தின் முகம் விழுந்து விட்டது.. மூர்த்தி உட்காரச் சொல்வார் என்று எதிர்பார்த்தார்.. அவர் உட்காரச் சொல்லவில்லை.. அவர் உட்காரச் சொல்வார் என்று எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று சாம்பசிவம் டக்கென சோபாவில் உட்கார்ந்து விட்டார்.. அதை மோகனா ஏளனமாகப் பார்த்தாள்..
சாம்பசிவம் மூர்த்திக்குத் தெரிந்தவர்.. ஆனந்தனின் மாமனாருக்கு நெருங்கிய சொந்தம்.. இவர்தான் ஆனந்தனை அந்த வீட்டோடு கோர்த்து விட்டார் என்று விவரமறிந்தவர்கள் மூர்த்தியிடம் சொல்லியிருந்தார்கள்..
"பய படிப்பில கெட்டிக்காரன்.. கேம்பஸ் இண்டர்வியூவில அமெரிக்காக் கம்பெனியில வேலை பார்க்கச் செலக்ட் ஆகியிருக்கானாம்.. அப்பனை மதிக்க மாட்டான்.. இவனை வளைச்சுப் போட்டேன்னா, பொண்ணுக்கும் சீர் செனத்தி செய்ய வேணாம்.. மாமனார், நாத்தனார்ன்னு தாங்க வேண்டிய அவசியமில்லாம உன் பொண்ணு அமெரிக்காவுக்குப் பறந்து போயி தனிக்காட்டு ராணியா வாழலாம்.." என்று சொல்லி ஆனந்தனைக் கை காட்டி விட்டாராம்.. பேதாக்குறைக்கு இவரே ஆனந்தனை அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணோடு பழக விட்டாராம்.. ஆனந்தனும் கள் குடித்த நரியாக, தந்திரமாக காதலித்து வீட்டில் இருந்த பணத்தையெல்லாம் வழித்து எடுத்துக் கொண்டு போய் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்குப் பறந்து விட்டான்..
அப்படிப்பட்ட மனிதரை 'உட்கார்' என்று உபசரிக்க முடியுமா..? சாம்பசிவம் உதிர்த்த மனிதர்.. உபசரணையை எதிர்பார்க்கவில்லை.. தடித்த தோலுடன் மனச்சாட்சியில்லாமல் பேச ஆரம்பித்தார்..
"ஆனந்தன் வந்து சொன்னார்.. அவருக்குச் சொத்திலே பங்கு இல்லைன்னு சொல்லிட்டியாமே.. நீ நியாயஸ்தன்.. தர்மம் தவறாதவன்.. பெத்த மகனுக்கு சொத்தில பங்கு இல்லைன்னு நீ சொல்லலாமா..? ஆனந்தனோட மாமனார் விவரம் தெரிஞ்சதும் துப்பாக்கியைத் தூக்கிட்டாரு.. ஜனக்கட்டு இருக்கிற மனுசன்.. ஊம்ன்னு ஒரு வார்த்தை சொன்னா, உன் வீட்டைச் சுத்தி டாட்டா சுமோக்க வந்து குமிஞ்சிரும்.. தேவையா உனக்கு..? பெரிய மனுசங்களை ஏன் பகைச்சுக்கிற..?"
மீனாவின் ரத்தம் 'சளபுள' என கொதிக்க ஆரம்பித்தது.. மூர்த்தி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று அமைதியாக இருந்தாள்..
"பெரிய மனுசனா..? எவன் பெரிய மனுசன்..?"
மூர்த்தி கேட்ட கேள்வியில் 'ஆஹா..' என்று மகிழ்ந்து போனாள் மீனா.. புனிதாவோ, இது தன் கணவர்தானா என்று நம்ப முடியாமல் இமைகொட்டி விழித்தாள்.. மோகனா '' வென வாயைப் பிளந்தாள்..
சாம்பசிவத்திற்கும் அந்த நிலைதான்.. அவரறிந்த மூர்த்தி 'அப்புராணி..' அதிர்ந்து பேச மாட்டார்.. சாத்வீகமாகப் பேசுவார்.. ஆனந்தனின் விசயத்தில் அசாத்திய பொறுமை காட்டுவார்.. மகன்மீது உயிராய் இருப்பார்..
"என்னப்பா.. பொசுக்குன்னு இப்படி ஒரு கேள்விய கேட்டுப்புட்ட.. நம்ம ஆனந்தனோட மாமனாரைத்தான் பெரிய மனுசன்னு சொன்னேன்ம்ப்பா.."
"அவன் பெரிய மனுசனா..? அப்பனுக்குத் தெரியாம மகனை விட்டுக்கு வர வைச்சு, பெத்த பொண்ணோட பழக விட்டு.. திருட்டுக்கல்யாணம் பண்ணி வைச்சவனெல்லாம் பெரிய மனுசனா..?"
"திருட்டுக் கல்யாணமா..? என்னப்பா இப்படிச் சொல்லிப்புட்ட.. ஊரைக் கட்டிக் கோவிலில தாலிகட்டி, ரெஜிஸ்டர் ஆபிசில பதிவு பண்ணின கல்யாணம்ப்பா அது.."
"அந்த வெங்காயத்தையெல்லாம் விவரமாச் செஞ்சிருப்பான்.. அப்பத்தானே அவன் பொண்ணு என் மகனோட பொண்டாட்டின்னு அமெரிக்காவுக்குப் பறக்க முடியும்..? உணக்கையா அதையெல்லாம் பண்ணத் தெரிஞ்ச ஓணாண்டிக்கு, அவ மகளைக் கட்டிக்கிட்டவனோட அப்பன்கிட்ட ஒரு வார்த்தைக் கேக்கனுமின்னு தோணலியா..? அப்பனுக்குத் தெரியாம நடந்த கல்யாணம் திருட்டுக் கல்யாணம்தான்.."
"பொண்ணைப் பெத்தவரு என்ன செய்வாரு..? உன் மகன்தான் எனக்கு அப்பன் பேரைச் சொன்னாக்கூட ஆகாதுன்னு சொல்லிட்டாராமில்ல.. மாப்பிள்ளைக்கு ஆகாத அப்பனுக்கு அவர் எப்படித் தகவல் கொடுப்பார்..?"
இதைச் சொல்லும் போது சாம்பசிவத்தின் முகத்தில்தான் எவ்வளவு சந்தோசம்..! எப்படிப்பட்ட குரூரம் இருந்தால் இப்படிப் பொடித்தனமான சந்தோசத்தை வெளிக்காட்ட முடியும்..
மீனாவின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.. சாம்பசிவத்திற்குக் கொடுத்துக் கட்ட வேண்டும் என்று அவளது ரத்தம் கொதித்தது.. ஆனால் இது மூர்த்தி பேச வேண்டிய நேரம்.. சாது மிரண்டால் காடு கொள்ளாது.. மூர்த்தி என்ற சாது மிரண்டு விட்டது என்பதை ஆனந்தனும், அவனைச் சேர்ந்தவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.. அதற்கு இடம் கொடுத்து மீனா பேசாமல் நிற்க வேண்டும்.
மூர்த்தியும் சக்கை போடு போட்டார்.. அவர் இந்த அளவுக்குக் கொடுத்துக் கட்டுவார் என்பதை அவரது குடும்பம் எதிர்பார்க்கவே இல்லை..
"அக்கா.. இது நம்ம அப்பாவா..? நம்பவே முடியல.." மோகனா மீனாவின் காதில் கிசுகிசுத்தாள்..
"ஆமாண்டா.. அவனுக்கு அப்பன் ஆகாது.. ஆனா அப்பன் வட்டிக்குக் கடன் வாங்கி வைச்சிருந்த பத்துலட்சரூபாய் மட்டும் ஆகும்.. அவன் மாமனாருக்கு சூடு சொரணை இருந்திருந்தா, திங்கிற சோத்தில உப்புப் போட்டுச் சாப்பிடறவனா இருந்திருந்தா, ரோசமானம் இருக்கிற மானஸ்தனா இருந்திருந்தா, என் பணத்தில அவன் மக கல்யாணத்தை நடத்தி, அந்தப் பணத்தில டிக்கெட் எடுத்துப் பாரினுக்கு பறக்க வைச்சிருக்கக் கூடாது.. மாப்பிள்ளைக்கு ஆகாத அப்பனுக்குத் தகவல் மட்டும் கொடுக்க மாட்டானாம்.. ஆனா அவன் கடன் வாங்கி வைச்சிருந்த பணத்தில அம்மாக்கும்மா கொளுத்துவானாம்.. வெம்போட்டுப்பய.."
சாம்பசிவத்திற்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.. வெள்ளாடு வேங்கையாகியிருக்கும் என்று அவர் கனவா கண்டார்..?
"உங்கதங்கச்சி பேசினதுக்கு பயந்து ஓடி வந்திட்டிங்களே மாப்பிள்ளை.. உங்கப்பன் ஒரு தொடைநடுங்கி.. எதுக்கெடுத்தாலும் நெஞ்சைப் பிடிச்சுக்குவான்.. அவன்கிட்ட அரட்டிக் கேட்டா வீட்டை விட்டு ஓடப் போறான்.. இதுக்குப் போயா இடிஞ்சு போய் உக்காந்திருக்கீங்க.. சாயங்காலம் நான் போயி பேசற பேச்சில.. மூர்த்தி அலறியடிச்சுக்கிட்டு இடத்தைக் காலி பண்ணனும்.." என்று சவடால் பேசி விட்டு வந்திருந்தவரின் வயிற்றில் புளி கரைந்தது..
'இவன் என்ன சகட்டு மேனிக்கு போட்டுத் தாக்கறான்.. என்னை என்னப் பேசப் போறானோ..'
அவன் நினைத்து முடிப்பதற்குள் மூர்த்தி மண்டகப்படியை ஆரம்பித்து விட்டார்..
"நீ யாருடா பஞ்சாயத்துப் பேசிக்கிட்டு வர..? திறந்தருக்கிற வீட்டில ஏதோ ஒன்னு நொழைஞ்சதைப் போல நீ பாட்டுக்கு உள்ளே வந்து உக்காந்து நாயம் பொளக்கிற.. உன்னப் பொளந்திருவேன்.. ஓடிப் போயிரு.. இந்த வீடு என் பெயரில இல்ல.. எம் பொண்டாட்டிக்குக் கிரயப் பத்திரமாப் பதிஞ்சு கொடுத்துட்டேன்.. இப்ப நான் வெறும்ப.. இந்த வெறும்பயலுக்கு கஞ்சி ஊத்தி, கடைசி வரைக்கும் பார்த்துக்கிற பொறுப்பு என் மகன் ஆனந்தனுக்கு இருக்கா, இல்லையா..? அதனால நான் போலிஸில கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு, கோர்ட்டில கேஸீ போடறதா இருக்கேன்.."
"என்னாது.. கேஸ் போடப் போறியா..? என்னான்னு போடுவ..?"
"என்னான்னு போடுவேன்..? என் மகன் அமெரிக்காவுக்குப் போறப்ப என்னையும் அவன் தங்கச்சியையும் கையோடு கூப்பிட்டுக்கிட்டுப் போகனும்.. என்னைக் கடைசிவரைக்கும் கண் கலங்காம வைச்சுக் காப்பாத்தனும்.. அவன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்து, சீர் செனத்தி செஞ்சு கட்டிக் கொடுத்து, கடைசி வரைக்கும் சீர் செய்யனும்.. இதைக் கேக்கிற உரிமை எனக்கிருக்கப்பே.. எம் பொண்டாட்டி நகைகளை வித்து, கடன்வாங்கி அவனைப் படிக்க வைச்சு ஆளாக்கினேன்.. என்னையும் அவன் தங்கச்சியையும் காப்பாத்த வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருக்கா இல்லையான்னு கோர்ட்டு கொல்லட்டும்.. அவனை விட்டா எங்களுக்கு யாரிருக்கா..?"
அவ்வளவுதான்.. சாம்பசிவம் துண்டைக் காணோம், துணிiயைக் காணோம் என்று ஒடி விட்டார்.. அதன் பின்னால் அந்த வீட்டுப் பக்கம் ஆனந்தனின் நிழல்கூட விழுகவில்லை.. அடுத்த நாளே அவன் பெண்டாட்டி குழந்தையுடன் அமெரிக்காவுக்கு பறந்து விட்ட செய்தி கிடைத்தது..
"எங்கே, இங்கேயிருந்தா அப்பனும் தங்கச்சியும் வந்து ஒட்டிக்கிட்டு நாங்களும் உன் கூடத்தான் இருப்போம்ன்னு சொல்லிருவாங்களோன்னு பயந்து போயி ஓடிட்டானாம்.." சினத்துடன் சிரித்தார் மூர்த்தி..
இனி தந்தை குடும்பத்தைப் பார்த்துக் கொள்வார்.. அசைந்து கொடுக்க மாட்டார் என்ற நிம்மதி வந்தது மீனாவுக்கு.. இருந்தாலும் அவள் மனதில்..
'இந்த அண்ணா, குழந்தையைத் தூக்கிக்கிட்டு வந்து கண்ணில காட்டியிருக்கலாமே..' என்று ஏக்கம் வந்தது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -66
பொதிகையிலே பூத்தவளே -66
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-66.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-66.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy