பொதிகையிலே பூத்தவளே -60

60 " உள்ளம் நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்              உள்ளம் நிறைவாமோ நன்னெஞ்சே..!     தெள்ளிய தேனிலும் சிறிது நஞ்சையும் ...


60

"உள்ளம் நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
             உள்ளம் நிறைவாமோ நன்னெஞ்சே..!
    தெள்ளிய தேனிலும் சிறிது நஞ்சையும்
                சேர்த்தபின் தேனாமோ நன்னெஞ்சே..!"
தோட்டத்திலிருந்து ஊஞ்சலில் ஆடியபடி பாடிக் கொண்டிருந்தாள் மோகனா.. போர்டிகோவை ஒட்டியிருந்த சிட் அவுட்டில், சாய்வான மூங்கில் நாற்காலியில், கம்பளியைப் போர்த்திப் படுத்தபடி புனிதாவிடம் பேசிக் கொண்டிருந்தார் மூர்த்தி.. சிட் அவுட்டையும் தோட்டத்தையும் பிரிக்கும் உயரமான கைபிடி சுவர் கிரானைட் பதிக்கப்பட்டு, திண்ணை போல அழகாக இருக்கும்.. அது புனிதாவுக்கான இடம்.. அங்கே உட்கார்ந்து தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடி மூர்த்தியிடம் கதை பேசுவது என்றால் அவளுக்குக் கொள்ளை பிரியம்..
அந்த நேரங்களிலும் சும்மா இருக்க மாட்டாள்.. காய்களை வெட்டுவது, கீரை ஆய்வது, துணிகளை மடித்து வைப்பது என்று ஏதேனும் ஒரு கை வேலையைச் செய்து கொண்டிருப்பாள்.. அப்போது பூக்கட்டிக் கொண்டிருந்தாள்..
பரத்தியிருந்த முல்லைப் பூக்களை நூலில் தொடுத்த வண்ணம் இளைய மகளைப் பார்ப்பதும், கணவரின் பேச்சுக்குப் பதில் சொல்வதுமாக இருந்த புனிதா, அங்கு மீனா வந்து நின்றதைப் பார்க்கவில்லை.. விக்ராந்தியான மனநிலையோடு மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த மூர்த்தியும் மகள் வந்து நிற்பதைக் கவனிக்கவில்லை.. கணவன், மனைவி இருவருமே அந்தத் தருணத்தின் அன்பான உரையாடலில் திளைத்திருந்தார்கள்.. மூர்த்தி எதையோ சொல்ல, புனிதா அதை ஆமோதித்து தலையை ஆட்ட என்று உணர்வுகளால் வேயப்பட்ட உன்னதமான உரையாடல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.. மீனாவுக்கு நிறைவாக இருந்தது.. இதுபோன்ற சூழலை அவர்களுக்குத் தொடர்ந்து தரமுடியுமா என்று கலக்கமாகவும் இருந்தது.. மோகனாவின் இந்த உற்சாகம் என்றும் நிலைத்திருக்குமா..?
"ஆயிரம் தான் சொல்லு புனிதா.. சிலுசிலுன்னு குளிர்காத்து பச்சைப்பசேல்ன்னு செடியும் கொடியுமா இயற்கைக் காத்தோடு இருந்தாலும் நம்ம ஊருக்கு இணையாகுமா..?"
மூர்த்தியின் கேள்வியில் மீனாவுக்கு தைரியம் வந்தது.. அவள் பேச வந்ததை பேசி விடலாம் போல இருக்கிறதே என்று ஆசுவாசமானாள்..
"அது எப்படி இணையாகும்..? ஆளில்லாம இருக்கிற இந்த வனாந்தரமும், எப்பப் பார்த்தாலும் ஜேஜேன்னு இருக்கிற நம்ம தூங்கா நகரமும் ஒண்ணாகிருமா..? இங்கே பகலிலேயே இருட்டாகிருது.. நம்ம ஊரு தூங்காம முழிச்சிருக்கிற ஊரு.. மதுரை, மதுரைதாங்க.."
புனிதாவின் சிலாகிப்பில் மீனாவின் தைரியம் கூடியது.. தாயும், தந்தையும் அவள் எடுத்திருக்கும் முடிவினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற நிம்மதியில் அவளது சுவாசம் சீரானது.. இனி மோகனா மட்டும் தான்.. அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.. அவள் இயற்கையை ரசிப்பவள்.. மலைவாழ் ஊரில் வசிப்பதை விரும்பி வாழ்பவள்.. குன்னூரில் கான்வெண்டில் படித்துக் கொண்டிருப்பவள்.. அவள் மனதில் என்ன இருக்கிறதோ..
மீனா நினைத்துக் கொண்டிருந்த போதே, அவளது நினைவுக்குப் பதில் சொல்வதைப் போல புனிதா மூர்த்தியிடம் சொன்னாள்..
"மோகனாவும் இதைத்தான் சொல்றா.. நம்ம ஊரைப் போல வருமான்னு ஏக்கப்படறா.. இங்கே பிரண்ட்ஸ் இருந்தாலும் சேர்ந்து ஊரைச் சுத்த முடியலையாம்.. அக்கம் பக்கத்து வீடுகளில போய் பேச முடியலையாம்.. ஸ்கூல்.. ஸ்கூல் விட்டா வீடு.. ஞாயித்துக் கிழமையில அருவி, காடுன்னு ஊர் சுத்தறதுன்னு ஒரே வட்டத்துக்குள்ள சுத்திச்சுத்தி வர்றதைப் போல இருக்காம்.. சொர்க்கமே ஆனாலும் இது நம்ம ஊரைப் போலாகுமான்னு பாட்டுப் பாடறா.."
'அப்பாடி..' நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் மீனா..
அடுத்த கவலையும் தீர்ந்தது.. இனி அவள் எடுத்திருக்கும் முடிவை தயக்கமில்லாமல் குடும்பத்தினரிடம் சொல்லலாம்.. இதைப்பற்றி யோசனை இல்லாவிட்டாலும் என்றேனும் ஓர்நாள் மதுரைக்குத் திரும்ப வேண்டியிருந்தால் என்ன செய்வது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் மீனா சில வேலைகளைச் செய்து வைத்திருந்தாள்.. இரண்டு லட்சத்தில் ஆரம்பித்த அவளது சம்பளம் ஆறு மாதங்களுக்கு ஓர்முறை ஒரு லட்சம் உயர்ந்து இப்போது ஆறு லட்சத்தில் வந்து நிற்கிறது.. இரண்டு வருடத்தில் அவர்கள் ஒர்முறைகூட மதுரைக்கு சென்று வரவில்லையென்றாலும் அங்கிருந்த வேண்டப்பட்டவர்களுடன் தொடர்பில்தான் இருந்தார்கள்..
குடியிருக்க குவார்ட்டர்ஸ், குறைந்த விலையில் காய்கறிகள், என்று மாதாந்திரச் செலவு இருபதாயிரத்துக்குள் அடங்கி விட்டது.. மோகனாவின் பள்ளிக்கட்டணம் மட்டும்தான் அதிகம்.. மற்றபடி கையிருப்பில் எண்பது லட்சம் வரை சேர்ந்து விட்டதில் புனிதா அரண்டுதான் போனாள்.. மீனாதான் தெளிவாகச் சிந்தித்து அந்தப் பணத்தை முதலீடாக மாற்றினாள்.. அதன்படி மதுரை வீட்டை இடித்துக் கட்ட முடிவானது.. மூர்த்தியின் உழைப்பில் வாங்கிய இடம்.. மீனாவைப் பெற்ற அன்னை வசந்தா உயிருடன் இருந்தபோது கட்டப்பட்ட வீடு.. அப்போது செலவு ஒன்றும் அதிகமானதாக இல்லையே.. அதன்பின் ஆனந்தனும் மீனாவும் பிறந்து வளர்ந்து குடும்பம் பெருகியதில் சேமிக்க முடியவில்லை.. மூர்த்தியின் சம்பளம் குடும்பத்தை நடத்துவதற்கே சரியாக இருந்தது.
குடியிருக்க சொந்த வீடு.. புனிதாவுக்கு அதுவே பெரிய விசயம்.. அவள் இருக்கம் வீட்டை அழகுபட வைத்துக் கொள்வாள்.. அதற்கு மேல் அவள் ஆசைப்பட்டதில்லை.. அந்த வீட்டை இடித்துக் கட்டலாம் என்று மீனா சொன்னபோது அவள் தடுத்தாள்..
"வீட்டை இடிச்சுக் கட்டறதா..? வேணாம் மீனா.."
"இல்லம்மா.. இப்பல்லாம் நம்ம வீடு இருக்கிற ஏரியாவில இடம் வாங்கறதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது.. அந்தக் காலத்தில அப்பா வாங்கிப் போட்ட இடம்.. இப்ப இரண்டு கோடியைத் தாண்டிப் போகும்.. மெயினான ஏரியாவா மாறிப் போச்சு.. கிரௌண்ட் ப்ளோரில முன்பக்க காம்பவுண்டுக்குப் பதிலா ரெண்டு கடையைக் கட்டி விட்டுட்டு.. உள்ளேயும், பர்ஸ்ட் ப்ளோரிலையும் வாடகைக்கு விட வீடுகளைக் கட்டிட்டு, செகண்ட் ப்ளோரில நமக்குப் பெரிசா நாலு பெட்ரூமோட வீடு கட்டிக்கலாம்.."
"இதெல்லாம் கேக்க நல்லாத்தான் இருக்கு.. நடக்குமா..?"
"கையிருப்பில் எண்பது லட்சம் இருக்கும்மா.. கவனமா கட்டினா நாம நினைச்சது நடக்கும்.."
நடந்தது.. மீனா நினைத்தபடி கட்டிடம் எழுந்து விட்டது.. புதுமனை புகுவிழாவை விஷ்வா வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் நடத்திவிடலாம் என்று பேசியிருந்தார்கள்..
"கிரௌண்ட் ப்ளோரில் முன்னாடி ரெண்டுகடை.. மூணு கார் பார்க்கிங்.. சின்னதா ஒரு பெட்ரூமோட ஒரு வீடு.. பர்ஸ்ட் ப்ளோரில டபுள் பெட்ரூமோட ரெண்டு
வீடு.. செகண்ட் ப்ளோரில பெரிய ஹால்.. ஊஞ்சல் தொங்கறதைப் போல அகலமான பால்கனி.. டைனிங்ஹால்.. பூஜைரூம்.. கிச்சன்.. வாஷிங்ரூம்.. அப்புறம் நாலு பெட்ரூமுன்னு அட்டகாசமாய் நாம குடியிருக்க வீடு.."
மீனா விவரித்ததை வாய் பிளந்து கண்கள் மின்னக் கேட்டுக் கொண்டாள் புனிதா.. அவள் குடியிருந்த தெருவில் மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் ஹவுஸ் ஓனராக அவள் வலம் வரப் போகிறாளா..?
"நெஜமாவா சொல்ற மீனா..?"
"பின்னே, உட்டாலங்கடி கிரிகிரின்னு பொய்யா சொல்றேன்.. இங்க பாருங்க.."
மீனா செல்போனில் வீட்டின் அமைப்பையும் அறைகளையும் வாட்ஸ் அப்பில் படம் பிடித்து வந்தவைகளைக் காண்பித்தாள்.. ஆசை ஆசையாக அதைப் பார்த்தாள் புனிதா.. அவளது விழிகளில் அப்போதே மதுரைக்குப் பறந்து விடும் ஆவல் தெரிந்தது.. அதை மோகனா சொல்லி கேலி செய்தாள்..
"அம்மாவை விட்டா இப்பவே ரெக்கைகட்டி மதுரைக்குப் பறந்திருவாங்க போல இருக்குக்கா.. என்ன.. ஹவுஸ் ஓனரம்மா..! நான் சொல்கிறது சரிதானே.."
"போடி.." வெட்கச் சிரிப்புச் சிரித்த புனிதா.. மீனாவைக் கட்டிக் கொண்டு அவளது கன்னத்தில் முத்தமிட்டாள்..
"என் மக எங்கே இருக்காளோ.. அங்கேதான் நானும் இருப்பேன்.."
"அதுசரி.. அக்காவுக்கக் கல்யாணம் ஆனா என்ன செய்வீங்களாம்..? பெண்ணைக் கட்டினா இலவச இணைப்பா அவ குடும்பமும் சேர்ந்து வரும்ன்னா, கட்டிக்க வருகிற மாப்பிள்ளை, தலை தெறிச்சு ஓடிற மாட்டானா..?"
"அப்ப வேணும்னா மதுரைக்குப் போயிக்கலாம்.. அக்காவுக்குக் கல்யாணமானா, நாம மதுரையில நம்ம வீட்டிலதான் இருக்கனும்டி.. அக்கா வந்து போக தாய் வீடு வேணாமா..?"
தாய்மைப் பெருக்குடன் சொன்னவள் மீனாவைப் பெற்ற தாயில்லை என்பதை அங்கிருந்த யாருமே நினைக்கவில்லை..
பெற்ற தாயினும் மேலாக மீனாவை நேசித்த புனிதாவுக்கே அவளைத் தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்ததைப் போலதான் இருந்தது..
விஷ்வா வந்தவுடன் திருமணப் பேச்சை ஆரம்பித்து விடுவான் என்று மீனாவுக்குத் தெரியும்.. அது நன்முறையில் நடந்து முடிய வேண்டுமே என்ற சஞ்சலம் அவன் மனதிலிருந்தாலும் எதிர்பார்ப்பு என்ற ஒன்று அவள் மனதில் இல்லை.. விஷ்வாவுடன் அவளுக்குத் திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும் அவள் வாழ்வில் அவன் மட்டும்தான்.. வேறு ஒருவனை மனதாலும் நினைக்கமாட்டாள்.. அப்படியே பெற்றோருக்கு மகளாக, மோகனாவுக்கு அக்காவாக வாழ்ந்து முடித்து விடுவாள்.. ஒருவேளை, விஷ்வா உறுதியாக நின்று திருமணத்தை நடத்தி விட்டால்.. மீனா அவனுடன் வாழ கானாடுகிரி அரண்மனைக்கு மருமகளாக காலடி வைக்க வேண்டும்.. அவளுடைய குடும்பம் அவளுடன் வரமுடியாது..
அப்படி ஒரு காலம் வந்தால், மூர்த்தியும் அவளது குடும்பமும் மதுரைக்குத் திரும்பி வசதியுடன் வாழ வகை செய்ய வேண்டும்.. அதனால்தான் மீனா யோசித்து செயலாற்றினாள்..
'வீட்டு வாடகைப் பணம் போதும்.. இருக்க சொந்தவீடு.. மோகனாவுக்கு நகைகள் இருக்கு.. படிப்பையும் குடும்பத்தையும் அப்பாம்மாவால பார்த்துக்க முடியும்..'
மீனா நினைத்ததை செய்து முடித்தாள்.. குடும்பத்திற்கு வழி செய்ய அவள் கட்டிடத்தைக் கட்டிய போது அவளும் குடும்பத்துடன் மதுரைக்குத் திரும்ப வேண்டும் என்று அவள் நினைத்துப் பார்க்கவே இல்லை.. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் வாழ்க்கையில்
நாம் ஜெயித்துவிட மாட்டோமா..? நினைக்காதது நடப்பதுதானே வாழ்க்கை..?
"அக்கா.." ஊஞ்சலாடிக் கொண்டிருந்த மோகனா கூவினாள்.. புனிதாவும், மூர்த்தியும் திரும்பிப் பார்த்து விட்டுச் சிரித்தார்கள்..
"வாம்மா.." மூர்த்தி அன்புடன் அழைத்தார்..
"இப்படி வந்து உட்காரு.. பூ வைச்சு விடறேன்.." தொடுத்து வைத்திருந்த முல்லை சரத்தை மகளின் தலையில் வைத்துவிட்டு அழகு பார்த்தாள் புனிதா..
"ம்மா.. இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஓரவஞ்சனை ஆகாதும்மா.. எனக்கு முடியில்லையா..? அதை பின்னிப் போட்டுக்கலையா..? உங்க மூத்த மகளுக்கு மட்டும் பூவைச்சு விடறீங்க.. என்னைக் கண்டுக்கவே மாட்டேன்கறீங்க... என்னை என்ன தவிட்டுக்கா வாங்கிட்டு வந்தீங்க..?" செல்ல கோபம் காட்டினாள் மோகனா..
"ஆமாண்டி.." அவளும் அழகுகாட்டினால் மீனா..
மூர்த்தி மட்டும் மூத்த மகளின் முகத்தை யோசனையுடன் பார்த்தார்.. அவள் எதையோ சொல்ல வந்திருப்பதை அவரது மனம் உணர்ந்தது.. அது என்னவாக இருக்கக் கூடும்..? ஏன் அவளது முகம் வாடியிருக்கிறது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -60
பொதிகையிலே பூத்தவளே -60
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-60.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-60.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy