பொதிகையிலே பூத்தவளே -57

57 " அம்மா..." லிங்கத்தின் அழைப்பில் சிந்தனை கலைந்த மீனா சோர்வுடன் அவரைப் பார்த்தாள்.. " சொல்லுங்க லிங்கம்.." ...


57
"அம்மா..."
லிங்கத்தின் அழைப்பில் சிந்தனை கலைந்த மீனா சோர்வுடன் அவரைப் பார்த்தாள்..
"சொல்லுங்க லிங்கம்.."
"என்னம்மா.. யோசனையா இருக்கீங்க.."
"ஒன்னுமில்லை.. வேலையைப் பற்றிய நினைவு.."
"அவ்வளவுதானே..?"
சந்தேகத்துடன் கேட்டார் லிங்கம்.. ஆம் எனும் வகையில் தலையசைத்து முறுவலித்தாள் மீனா.. லிங்கம் சமாதானமாகவில்லை.. இருப்பினும் அதற்கு மேல் கேள்வி கேட்பது முறையாகாது என்பதினால் மௌனமாகி விட்டார்.. தூரத்தில் மலைவாழ் மக்களின் பேக்டரி தெரிந்தது..
"சார் மலைவாழ் ஜனங்களுக்காக யோசித்து யோசித்து பேக்டரி கட்டியிருக்கிறார்.. அவங்க இடத்திலேயே அவங்களுக்கான தொழில்களை அவர் ஆரம்பித்துக் கொடுத்திருக்கிறதினாலதான் மலைவாழ் இனப் பெண்கள் தைரியமா சங்கடமில்லாம வேலைக்கு வர்றாங்க.." மீனா விஷ்வாவை சிலாகித்தாள்..
இப்படிப்பட்டவனைப் பற்றி அந்த வினோத் என்னவெல்லாம் சொல்லி விட்டான் என்று நினைத்துப் பார்த்தவளுக்கு ரத்தம் கொதித்தது..
"ஆமாங்கம்மா.. வனமலர் பாப்பாவும் இப்படித்தான் சொல்லும்.." தலையை ஆட்டி ஆமோதித்தார் லிங்கம்..
மீனாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது..
விஷ்வாவை சிலாகித்துப் பேசும் அளவிற்கு வனமலருக்கும் விஷ்வாவிற்கும் பழக்கம் இருந்ததா..? கிரியின் காதலி, அவனுக்காக நிச்சயிக்கப்பட்ட முறைப்பெண் என்ற அளவில்தான் விஷ்வாவுக்கு வனமலரைத் தெரியும் என்று அவள் நினைத்துக் கொண்டிருப்பது மாயையா..?
"என்ன லிங்கம் சொல்கிறிங்க..? வனமலருக்கு நம்ம சாரை தெரியுமா..?"
"என்னம்மா இப்படிக் கேட்கறிங்க..? ரெண்டு பேரும் இந்த மலையில் பொறந்து வளர்ந்தவகதானே.. நம்ம ஐயா ஜமின்தார்.. வனமலர் மலைவாழ் இனத்தில் பொறந்தது.. அவ்வளவுதானே வித்தியாசம்..? ஒரே மலையில பொறந்து வளந்தவங்களுக்கு ஒருத்தரையொருத்தர் தெரியாம இருக்குமா..?"
"நான் கூடக் கிரியின் முறைப்பெண்ங்கிற வகையிலதான் சாருக்குத் தெரியும்ன்னு நினைச்சேன்.."
மீனா இறங்கிய குரலில் சொன்னாள்.. வனமலருக்கும் விஷ்வாவிற்கும் பழக்கம் இருந்திருக்கிறது.. அதுவும் விஷ்வாவின் செயல்பாடுகளை அவள் வியந்து பேசும் அளவிற்கு பழக்கம் இருந்திருக்கிறது என்பதை மீனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
'இதை ஏன் விஷ்வா என்னிடம் சொல்லலை..?'
இந்தக் கேள்வி அவள் மனதை அரித்தது..
"மலைவாழ் மக்கள் மத்தியிலே அதிகம் படிச்சது கிரியும் வனமலரும்தான்.. அவங்க மக்களோட உயர்வுக்கு பாடுபட்டாங்க.. கிரி நம்ம ஐயாவோட நண்பனா ஆன பின்னாலே ஐயாவும் அந்த மக்களுக்காக எதையாவது செய்யனும்னு நினைத்தாரு.. அப்ப பெண்களுக்காக தொழில தொடங்குங்கன்னு கேட்டுக்கிட்டது வனமலர்தான்.."
'என்ன...?'
மீனாவுக்கு இடி விழுந்ததைப் போல இருந்தது.. அவள் சொன்னதெற்காகத்தான் விஷ்வா மலைவாழ் மக்களுக்காக மேல்நிலைப் பள்ளியை ஆரம்பித்தான்.. மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தான்.. இன்னும் பள்ளியைக் கல்லூரியாக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறான்.. அவற்றை நிர்வகிக்க டிரஸ்ட் ஒன்றை நிறுவியிருக்கிறான் என்ற பெருமை இடிந்து தரை மட்டமானது..
இல்லை.. அவளுக்கு முன்னாலே வனமலர் விஷ்வாவிடம் சொல்லியிருக்கிறாள்.. மலைவாழ் இனப் பெண்களுக்காக ஏதாவது செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாள்.. விஷ்வாவும் வனமலர் சொன்னதற்காக மலைவாழ் இனப் பெண்கள் வந்து வேலை செய்யத் தோதாக அவர்களது இருப்பிடத்திலேயே பேக்டரியைக் கட்டியிருக்கிறான்..
"அப்போல்லாம் வனமலரும் கிரியும் பிரிஞ்சிருக்க மாட்டாங்க.. சேர்ந்தேதான் இருப்பாங்க.. ஐயா கிரியைப் பார்க்கப் போகிறப்ப வனமலரும் கூடத்தான் இருக்கும்.. ஐயாகிட்ட சிரிச்சுப் பேசும்.. ஐயாவும் பேசுவாரு.."
இதையெல்லாம் ஏன் விஷ்வா மீனாவிடம் சொல்லவில்லை..?
"வாங்க மீனா.."
கிரி பரபரப்புடன் வந்து வரவேற்றான்.. சோர்ந்த தோற்றத்துடன் இறங்கிய மீனாவைக் கண்டதும் புருவங்கயை உயர்த்தினான்.. லிங்கத்திடம் விழிகளால் என்ன ஆனது என்று கேள்வி கேட்டான்.. அவர் என்னவென்று தெரியவில்லை என்று ஜாடை செய்தார்..
"என்ன பிராப்ளம் மீனா..?"
கனிவுடன் கிரி கேட்டதும் மீனா பொலபொலவென கண்ணீரை உதிர்த்து விட்டாள்.. என்னவென்று அவள் சொல்வாள்..? உன் காதலியைக் கொன்றது என் காதலன் என்று அந்த வினோத் சொல்கிறான் என்பதை எப்படி அவள் கிரியிடம் சொல்வாள்..?
"ம்ப்ச்.. அழக்கூடாது மீனா.. அண்ணன்னு நான் ஒருத்தன் இருக்கிறப்ப நீங்க கலங்கவே கூடாது.. எது வந்தாலும் எதிர்த்து நிற்கனும்.. புரியுதா..?" அதட்டிய கிரி, லிங்கத்தைப் பார்த்து..
"நீங்க கிளம்புங்க லிங்கம்.. நான் மீனாவை அவங்க வீட்டில டிராப் பண்ணிக்கறேன்.." என்று விடை கொடுத்தான்..
மீனாவின் வீட்டில் காரை நிறுத்தி விட்டால் அன்றைய வேலை முடிந்தது என்ற உற்சாகத்துடன் லிங்கம் பறந்து விட்டார்..
கிரி ஆதுரத்துடன் மீனாவைப் பார்த்து..
"ஜீப்பில் ஏறுங்க.." என்றான்..
"எங்கே அண்ணா..?"
"வேற எங்கே..? வீட்டுக்குத்தான்.. அம்மா காலையிலதான் உங்களைப் பத்திப் பேசினாங்க.. பாத்து ரொம்ப நாளாச்சுடா கிரின்னு சொன்னாங்க.."
"பேக்டரிக்கு வந்துட்டு விசிட் பண்ணாமக் கிளம்பினா எப்படிண்ணா..?"
"உள்ளே வந்தா நீங்க சும்மாயிருக்க மாட்டிங்க... பெண்களிடம் நிறை, குறைகளைக் கேட்க ஆரம்பிச்சிருவீங்க.. பொழுது போயிரும்.. வாங்க.. வாங்க.. இன்னொரு நாள் விசிட் பண்ணி கலந்துரையாடலாம்.."
கிரி அவளை பேக்டரிக்குள் நுழைய விடாமல் அவனுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டான்.. கிரியின் அம்மா மீனாவைக் கண்டதும் முகமலர்ச்சியாக அவளது கைகளைப் பிடித்து..
"வாம்மா.. இங்கேயும் உனக்கு அம்மா இருக்கேன்ங்கிறது மறந்து போயிட்டியா..?" என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்..
"இல்லேம்மா.. வேலை அதிகமா இருந்தது.." மெல்லிய குரலில் சொன்னாள் மீனா..
சூடாகச் சமைத்துப் போட்டாள் கிரியின் அம்மா.. அதுவரை மீனாவுக்கு வேறு சிந்தனை வரவிடாமல் விஷ்வாவைப் பற்றியும் அவனுடைய குடும்பத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தான் கிரி..
"விஷ்வாவின் அம்மா பிள்ளைகளுக்கு இடையே பேதம் பார்க்கிறவங்க இல்ல மீனா.. நல்லவங்க.. அவங்க மனசை அந்த ரங்கநாதன்தான் கெடுத்து வைச்சிருக்கான்.. அவன் மட்டும்தான் உத்தமபுத்திரன் என்கிறதைப் போலவும், கானாடுகிரி ஜமின் வம்சத்தின் பெருமையை அவனால் மட்டும்தான் கட்டிக் காப்பாற்ற முடியும் என்பதைப் போலவும் பொய்யான ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறான்.. பேதாக்குறைக்கு அவன் கல்யாணம் பண்ணியிருப்பது சொந்த தாய்மாமனின் மகளை.. அண்ணன் பெண் என்கிற பாசம் அந்த அம்மாவிற்கு.. அவங்க வீட்டில்தான் விஷ்வாவின் தங்கையையும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போகிறாங்க.. ரங்கநாதனின் மனைவி ரங்கநாதனை விடவும் புத்திசாலி.. எங்கே அடிச்சா எப்படிக் காரியத்தைச் சாதிக்க முடியும்ன்னு கற்று வைச்சிருக்குறவங்க.. காரியத்தை சாதிச்சுட்டாங்க.."
"விஷ்வாவின் பக்கமும் நியாயம் இருக்கும் என்கிறதை அவங்கம்மா நினைச்சுப் பார்க்க வேணாமா அண்ணா..? பெத்த மகனுக்கு அநியாயம் நடக்கிறதுக்கு துணை போகலாமா..?" மீனா மனம் கசிந்தாள்..
"அதை அந்தம்மாவுக்கு யார் சொல்கிறது..? உலகம் பூராவும் விஷ்வாவுக்குத் தொழில் இருக்கு.. கானாடுகிரியின் வம்சப் பெருமை குறையாமல் இருக்க இங்கேயிருக்கிற தொழில்களை சார் விட்டுக் கொடுத்துட்டு விலகியிருந்தாத்தான் என்னன்னு அவங்களே சின்ன மகனைப் பார்த்துக் கேட்கிறாங்களே.." கிரி பொருமினான்..
விஷ்வாவின் மீது கிரி வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து மீனாவின் மனம் தடதடத்தது.. இப்படிப்பட்ட உயிர் நண்பனுக்கு விஷ்வா துரோகம் இழைத்திருப்பானா..?
சுடச்சுடப் பரிமாறினாள் கிரியின் அம்மா.. சாப்பிட்டு முடிந்ததும் மீனாவை அவனுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு பேக்டரி வரை போயிருந்தான் கிரி.. பேச்சு பேச்சாக இருக்க சுவரில் மாட்டப் பட்டிருந்த வனமலரின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் மீனா.. அதைக்கண்ட கிரியின் அம்மா..
"மாடியில கிரியோட ரூமில ஆல்பம் போட்டு வைச்சிருக்கான்ம்மா.. அதப் பாத்தா நான் அழுவேன்னு காட்ட மாட்டான்.. நீ வேணும்னா போய்ப் பாரு.." என்று சொன்னாள்..
போய்ப் பார்த்தால்தான் என்ன என்று மீனாவின் மனம் தூண்டியது.. கிரி இல்லாதபோது அவனுடைய அறையில் இருக்கும் புகைப்பட ஆல்பத்தை அவனது அனுமதியின்றி எடுத்துப் பார்ப்பது தவறு என்று தயக்கமாகவும் இருந்தது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -57
பொதிகையிலே பூத்தவளே -57
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-57.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-57.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy