பொதிகையிலே பூத்தவளே -56

56 கண்மூடித் தூங்க முயன்றாள் மீனா.. தூக்கம்தான் வருவேனா என்று மல்லுக்கட்டியது.. மனதுக்குள் வினோத் சொன்ன வார்த்தைகளே ரீங்காரமிட்டன.. தூங...


56
கண்மூடித் தூங்க முயன்றாள் மீனா.. தூக்கம்தான் வருவேனா என்று மல்லுக்கட்டியது.. மனதுக்குள் வினோத் சொன்ன வார்த்தைகளே ரீங்காரமிட்டன.. தூங்க முடியாமல் அரண்டு எழுந்து உட்கார்ந்தாள்.. கானாடுகிரி மலையின் குளிரையும் தாண்டி உடல் வியர்த்து வழிந்தது.. விரல்கள் நடுங்கின..
"அக்கா.."
பக்கத்தில் படுத்திருந்த மோகனா எழுந்து உட்கார்ந்தாள்.. கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த ஸ்விட்சை ஆன் செய்தாள்.. விளக்கு வெளிச்சம் அறைக்குள் பரவியது.. மீனாவைப் பார்த்தாள்..
"என்னக்கா.. இந்தக் குளிரில இப்படி வேர்த்திருக்கு.. கெட்ட கனவு கண்டியா..?"
ஆதுரத்துடன் கேட்டவள் துவாலையை எடுத்துக் கொண்டு வந்து மீனாவின் முகம், கைகளைத் துடைத்து விட்டாள்.. மீனா பதில் சொல்லவில்லை..
'கனவில்லை மோகனா.. நனவு.. அந்த வினோத் பேசினதெல்லாம் கனவாய் இருந்தால் பரவாயில்லையே.. படுபாவி.. நிஜமாவே பேசித் தொலைச்சிட்டானே..' அவளது மனம் குமுறியது.
"எப்பப் பார்த்தாலும் வேலை வேலைன்னு காட்டு மேட்டிலேயே சுத்திக்கிட்டு இருந்தா இப்படித்தான்.. கெட்ட கெட்ட கனவா வந்து தொலைக்கும்.." மோகனா தமக்கையை கடிந்து கொண்டாள்..
தங்கையின் கோபத்தில் மீனா வினோத் பேசியதை கொஞ்சம் மறந்தாள்.. லேசாக சிரித்து வைத்தாள்..
"என் வேலையே, காட்டிலும் மேட்டிலும் சுற்றி வந்து கண்காணிக்கிறதுதானேடி.. அதுக்குத்தானே லட்சக் கணக்கில் சம்பளம் கொடுக்கிறாங்க..?"
தங்கையின் தலையைத் தட்டிச் செல்லமாக முட்டினாள்.. மோகனாவின் முகம் மலர்ந்தது.. மீனாவின் முகம் வாடினால் அவள் பதறிப் போகிறாள் என்பதில் மீனாவின் மனம் கனிந்தது.. இதுபோன்ற அன்பையும், கரிசனத்தையும் ஆனந்தன் காட்டியதுண்டா என்ற கேள்வி மனதில் எழுந்தது.. துயரத்துடன் அதை மன ஆழத்தில் அமிழ்த்தினாள்..
தன்னிரக்கம் பொல்லாதது.. அது மனிதனின் தைரியத்தை உறிஞ்சி எடுத்து விடும்.. போராடும் வாழ்க்கையிலே, போரிடச் சக்தியில்லாமல் பலவீனமாக்கி விடும்.. அது கூடாது.. மீனா சோர்ந்து விழுந்தால்.. அவளது குடும்பமும் சோர்ந்து விடும்.. அவளை வளர்த்து ஆளாக்கிய குடும்பம் உற்சாகமாக இருக்க வேண்டும்.. அதற்காக மீனா எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன்  இருந்தாக வேண்டும்..
"காட்டில வேலை செய்ய வந்தா, காட்டு மேட்டிலதான் சுத்தியாகனும்.. உன் லாஜிக் புரியுதுக்கா.. அதுக்காக ஓவர் விசுவாசம் காட்டினா உடம்புக்கு ஆகனுமில்ல.. உன்னையும் கொஞ்சம் பார்த்துக்கனும்க்கா.. இப்படி இருட்டின பின்னாலயும் காட்டுக்குள்ளச் சுத்தச் சொல்லி உன் முதலாளி சொல்லியிருக்காரா..? அவரே ஊரில இல்லை.. கேள்வி கேக்க ஆளில்லைன்னா அக்கடான்னு ஓபி அடிச்சுட்டு எங்ககூட ஊரைச் சுத்தனும்.. அத விட்டுட்டு ஒட்டுமொத்த கானாடுகிரி மலையும் உன் தலைமேல இருக்கிறதைப் போல பாரம் சுமக்கக் கூடாது.."
பெரிய மனுஷி போல மோகனா அறிவுரை சொன்ன விதத்தில் மீனாவின் சிரிப்பு அதிகரித்தது.. மனம் வினோத் சொன்னவைகளிலிருந்து வெளியே வந்து லேசானது.
"போடி குரங்கு..! என்னை நம்பி அவர் தொழில்களை விட்டுட்டு வெளிநாட்டுக்குப் போயிருக்கார்.. அதைக் கண்ணும் கருத்துமாக் கவனிச்சுக்காம ஓ.பி அடிக்கச் சொல்கிற.. உனக்கெல்லாம் செல்லம் கொடுக்கிறாரே.. அவரைச் சொல்லனும்.." தங்கையின் தலையில் ஒரு குட்டு வைத்தாள்..
"ஊர் சுத்த 'வா'ன்னு கூப்பிட்டா உடனே குட்டு வைச்சிருவியே.. வேலைன்னு மலையைச் சுத்துவ.. அதுவே பிக்னிக்குன்னு சுத்த வரச் சொன்னா வியாக்கினம் பேசுவ.." மோகான தலையைத் தடவிக் கொண்டபடி கழுத்தைச் சாய்த்து மீனாவை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தாள்..
"என்னடி பார்வை வேண்டிக் கிடக்கு..?" தங்கையைச் செல்லமாக அதட்டினாள் மீனா..
"அவர், இவர்ங்கிறாயோ.. யார் அந்த அவர்..?" குறும்பாக கண்சிமிட்டினாள் மோகனா..
"போடி.." மீனாவுக்கு வெட்கம் வந்துவிட்டது..
அதை மறைக்கக் கட்டிலில் விழுந்து கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.. மோகனா சிரித்தபடி விளக்கை அணைத்து விட்டு நிம்மதியாகப் படுத்து விட்ட உறக்கத்தைத் தொட ஆரம்பித்தாள்..
மறுநாள் காலையில் எழுந்த போது மனது தெளிவாக இருந்தது.. சுறுசுறுப்பாக பல் தேய்த்துக் காபி குடித்தவள் மூர்த்தியுடனும் புனிதாவுடனும் சிரித்தும் பேசினாள்.. பள்ளிக்குக் கிளம்பிய மோகனாவுக்கு டாட்டாக் காட்டி விட்டுக் குளிக்கச் சென்றாள்.. வேலைக்குச் செல்லத் தயாராகி கீழே வந்தவளுக்கு சூடான டிபன் காத்திருந்தது.. மூர்த்தியுடன் பேசியபடி சாப்பிட்டாள்.. தாய், தந்தைக்கு டாட்டாச் சொல்லிவிட்டுக் காரைக் கிளப்பினாள்..
"லிங்கம் இன்னைக்கும் வரலையாம்மா..?" புனிதா கவலையுடன் கேட்டாள்..
"சாக்லெட் கம்பெனியில ஒரு ஃபலை வாங்கிக்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்ம்மா.. கம்பெனி ஜீப்பில போய் வாங்கிக்கிட்டு நேரா ஆபிசுக்கு வந்துருவாரு.." மீனா விளக்கம் சொல்லி விட்டுக் கையை ஆட்டினாள்..
காட்டுக்குள் கார் சென்றபோது அவள் மனதில் சிறு பயம் வந்தது.. கார் காட்டைக் கடந்தவுடன் நிம்மதியாக மூச்சுவந்தது.. விஷ்வா வந்து விட்டால் நன்றாக இருக்கும்.. எப்போதும் அவளுடன் இருப்பான்.. யாரும் அவளை நெருங்க முடியாது..
'எப்போதுடா வருவ..?' மனதுக்குள் புலம்பினாள்..
செல்லரிக்கும் அவனது நினைவுகளில் இருந்து மீட்சி பெற முடியவில்லை.. இந்த முறை திரும்பி வர சில மாதங்களாகும் என்று சொல்லி விட்டுத்தான் சென்றிருக்கிறான்.. இருந்த போதும் மனம் அதை ஏற்றுக் கொள்ளாமல் அடம் பிடித்தது.. தினமும் நண்பகலில் அவன் போனில் பேசும் சில மணித்துளிகள் அவளுக்குப் போதுமானதாக இல்லை.. நாள் முழுவதும் அவன் பேசிக் கொண்டிருந்தாலும் அவளுக்குப் போதாதுதான்.. அவனைத் தேடும் மனது பறப்பாய் பறந்தது.. அந்தப் பரபரப்பு அவனுக்கு ஏன் இல்லாமல் போனது..?
"வேலைடி.."
அதற்கும் ஒற்றை வார்த்தையில்தான் பதில் சொன்னான்.. ஓய்வில்லாத வேலையென்றான்.. இம்முறை அவன் இந்தியாவில் இருந்தபடி தொழிலகளை இயக்கும் வண்ணம் சில ஏற்பாடுகளை செய்து விட்டு வர வேண்டியிருக்கிறது என்று சொல்லியிருந்தான்..
"என் தங்கைதான் சொல்லுவா.. காடாறு மாதம் நாடாறு மாதம்ன்னு நீ இருக்கிற அண்ணான்னு.. யோசிச்சுப் பார்த்தா அவ சொல்கிறதும் தப்புன்னு தோணுதுடி.. ஃபாரினில் ஒன் இயர்.. இந்தியாவில ஒன் மன்த்துன்னுதான் நான் இருக்கிறேன்.. இதை மாத்தியாகனும் மீனா.. இந்தியாவில் ஒன் இயர்.. ஃபாரினில் ஒன் மன்த்துன்னு மாறியாகனும்.. பிகாஸ்.. இது வரைக்கும் நான் தனி மனிதன். இந்த ஃபாரின் டிரிப் முடிந்து நான் வந்தவுடன் ஃபேமிலி மேனா மாறப் போகிறேன்.."
அதைச் சொல்லியபடி அவளைக் கடித்துத் தின்று விடுவதைப் போல அவன் பார்த்த பார்வை மீனாவின் மனதில் பதிந்திருந்தது.. பார்வையில் மட்டுமா அவன் அவளைத் தின்றான்..? அடுத்து அவன் அவளை அணுகிய விதத்தை நினைத்தவளுக்கு உடல் சூடானது..
'கள்ளன்..'
உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள்.. மனதில் தோன்றிய இன்பப் பரபரப்பு உடலில் பரவியது.. விஷ்வாவை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது.. அதை அவனிடம் சொல்லவும் முடியாது.. வேலையென்று இருப்பவன் அவளிடம் பேசுகிற சில மணித்துளிகளில் சொல்ல வேண்டிய விவரங்கள் நிறைய இருந்தன.. அவற்றைப் பின்தள்ள விட்டு அவனுக்காக அவளுடைய உடலும், மனமும் உருகும் தாபத்தைச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது..
"ஐ மிஸ் யு.." என்ற ஒற்றை வரியில்தான் அனைத்துத் தாபங்களையும் தேடல்களையும் சொல்லியாக வேண்டும்.
அந்த ஒற்றை வரியிலேயே அவன் மௌனமாகி விடுவான்.. உணர்ச்சிக் குவியல்களில் அமிழ்ந்து விடுவான்..
"மீ டு.." என்ற கரகரத்த குரல் அவனுடைய நிலையைச் சொல்லும்..
அதுபோதும் மீனாவுக்கு.. அந்தக் காதல் போதும்.. அது அவளைக் காத்து நின்றது.. வழி நடத்தியது.. ரங்கநாதனையும், வினோத்தையும் எதிர்த்து நிற்கும் வல்லமையைத் தந்தது..
காட்டைத் தாண்டி, மலைப்பாதையில் சீரான வேகத்துடன் சென்று கொண்டிருந்த காரை வழி மறிப்பதைப் போல நின்று கொண்டிருந்தான் வினோத்..
'இன்னைக்கு என்ன வினையைச் சொல்லி என் மனசைக் கலைக்க வந்திருக்கானோ.. படுபாவி..'
மீனா பல்லைக் கடித்தாள்.. அப்படியே காரை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டு போய் அவன் மீது மோதி விடலாமா என்று வெறி வெறியாக வந்தது..
'இவனே வினை..! இவன் பேசறது மட்டும் விளங்கவா செய்யும்..? அதுவும் வினையாத்தான் இருக்கும்..'
காரை நிறுத்தாமல், வேகத்தைக் குறைக்காமல் மீனா ஓட்டியதில் வினோத் அஞ்சி ஒதுங்கினாலும் கார்கிட்ட வந்தபோது கையை ஆட்டினான்.. மீனா அவனைக் கடந்து சென்று காரை நிறுத்தினாள்.. அவன் ஓடிவந்தான்.. மீனா காரை விட்டு இறங்காமல், ஜன்னல் கண்ணாடியை லேசாக இறக்கி விட்டு..
"என்ன..?" என்றாள் கடுமையாக..
"என்மேல காரை மோதிக் காலி பண்ணிட்டா மட்டும் உண்மை காணாமப் போயிருமா..?"
வினோத் கேலியாக கேட்டான்..
"ஷட் அப்.." மீனா சீறினாள்..
"ஹலோ மேடம்..! அந்த விஷ்வா ஒன்னும் உத்தமனில்ல.. ஊர் ஊருக்கு நூறு பெண்களை வைத்திருக்கிறவன்.. அவனுக்கு ரங்கா சார் எவ்வளவோ தேவலாம்.. ஒரு பெண்டாட்டியுடன் ஒழுக்கமாக் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிறவர்.."
"ஏய்ய்..! மத்தவங்க பெர்னலைப் பத்திப் பேச உனக்கு ரைட் இல்லை.. நீ உத்தமனா..? ஒழுக்கமானவனா..? அதைப் பத்திமட்டும் பேசு.."
வினோத்தின் முகம் மாறிப் போனது.. முதல்நாள் அவன் சொன்ன விவரங்களில் மீனா சுக்கு நூறாக உடைந்து போயிருப்பாள்.. இன்றைக்கும் அதுபோல் பேசி அவள் மனதை பதற வைக்கலாம் என்று வழி மறித்தவன் அவன்..
எதற்கும் அசையாத மீனாவின் தைரியத்தைக் கண்டு அவனுக்கு வெறி, வெறியாக வந்தது..
"நான் யோக்கியமில்லைதான்.. அதே சமயம் நீ நம்பிக்கிட்டு இருக்கிற விஷ்வாவும் யோக்கியமில்லை மீனா.. மைண்ட் இட்.."
"அதுக்கென்னப்பா.. மைண்டில வைச்சுக்கிட்டாப் போச்சு.. நீ கிளம்பறியா.. எனக்கு வேலை இருக்கு.."
மீனாவின் உதாசீனமான வார்த்தைகளில் கொதித்துப் போனான் வினோத்.. அவனுடைய வேலையைப் பிடுங்கித் துரத்தியடித்து விட்டு அவளுக்கு வேலையிருக்கிறது என்று அவனிடமே பெருமை பீற்றுகிறாளா..?
"இருக்கும் இருக்கும்.. உனக்கு வேலை இருக்கத்தான் செய்யும்.. ஊர் மேய்கிற அயோக்கியனா இருந்தா என்ன..? பணம் கொட்டிக் கிடக்குதுள்ல..? தலைமுறை, தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலா மில்ல..? வேலை இருக்கத்தான் செய்யும்.."
"வேணாம் வினோத்.. வாயை அடக்கிப்பேசு.."
"உன்னை என்னவோ நேர்மையான ஆளுன்னு இந்த மலைவாழ்மக்கள் கொண்டாடுகிறாங்களே.. கடைசியில் நீ இவ்வளவுதானா..? அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு சின்னப் பெண்ணை விஷ்வா பாழாக்கி அருவியில தள்ளிக் கொன்றிருக்கிறான்.. அதைச் சொல்ல வந்தா காது கொடுத்துக் கேட்க மாட்டேங்கறியே.. நீயும் பெண் தான் மீனா ..இதை நினைவில் வைத்துக்க.."
இதைச் சொல்லும் போது வினோத்தின் கண்களில் வெறி தெரிந்தது.. வேட்டைக்காரன் இரையைக் குறி வைப்பதைப் போல அவன் பார்வை அவளது உடலில் மேய்ந்தது..
"ச்சீ.." மீனா அருவெறுத்தாள்..
"பெண்தானேன்னு இளப்பமா நினைச்சிராதே.. வெட்டருவாள், வீச்சுக்கம்புன்னு கலவர பூமியில பிறந்து வளர்ந்தவ நானு.. உன்னை வெட்டிப் பொலி போட்டிருவேன்.. பார்வையும் பேச்சும் ஒழுங்கா இருக்கனும்.." சீறினாள்..
"இந்தக் கோபத்தை எல்லோரிடமும் காட்டனுமில்ல.. நீதான் தெய்வம்ன்னு நம்பி நிற்கிற மலைவாழ் மக்கள் மத்தியில பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை, நண்பனின் காதலியை ஒருவன் களங்கப்படுத்திக் காணாமப் பண்ணியிருவான்.. அதைப் பத்திப் பேசறதைக் கூட விரும்பாம மத்தவங்க மேல கயவன் பட்டம் போட்டுத் துரத்தி விட்டுட்டு அவன்கூட கூட்டுச் சேர்ந்து உல்லாசமாக இருக்கிற நீயெல்லாம் கோபப் படக் கூடாது.."
"உன் வெட்டிப் பேச்சைக் கேட்டுக்கிட்டு இருக்க எனக்கு விருப்பமில்லை வினோத்.. யோக்கியன் பேசறதை நம்பலாம்.. அயோக்கியன் பேசறதைக் காது கொடுத்துக் கேட்கக் கூடாது.."
"இனம் இமறியும் மீனா.. ஒரு அயோக்கியன்தான் இன்னொரு அயோக்கியனை அடையாளம் கண்டு கொள்வான்.. எனக்கும் அந்த வனமலர் மேல கண்ணிருந்தது.. கிரியை நினைத்து பயந்து அடக்கி வாசிச்சேன்.. எனக்குத்தான் அந்த பயம்.. விஷ்வாவுக்கு அந்த பயமில்லையே.. ஒரு பக்கம் கிரியின் தோள் மேல கைபோட்டு நண்பேண்டா வசனம் பேசிக்கிட்டே இன்னொரு பக்கம் அவனோட காதலிமேல கையை வைச்சுட்டு அருவியில பிடிச்சுத் தள்ளி விட்டுட்டானே.. இதையே நான் செய்திருந்தா தப்பிக்க முடியுமா..? மலைவாழ் மக்கள்.. என்னை அடிச்சே கொன்றிருப்பாங்க.. செய்தது அவங்க கும்பிடற விஷ்வான்னாலும் விட்டு வைச்சிருக்க மாட்டாங்க.. இவன்தான் நடிகர் திலகமாச்சே.. ஒருபக்கம் அந்த வனமலரை கொன்னுட்டு.. மறுபக்கம் அவளோட காதலனையே நண்பன்னு சொல்லிக்கிட்டு, அவ பிறந்து வளர்ந்த மலையிலேயே, அவளோட மலைவாழ் மக்களுக்குத் தலைவன்னு சொல்லிக்கிட்டு அட்டகாசம் பண்ண யாராலே முடியும்..? இவனால்தான் முடியும்.. இவன் முன்னாலே நானெல்லாம் பப்பா.."
அதற்கு மேலும் அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்ற நிலையில் மீனா காரைக் கிளப்பினாள்.. புயல் வேகத்தில் ஓட்டினாள்.. மலைப்பாதையில் அந்த அளவுக்கு வேகமாக ஓட்டக்கூடாது.. வினோத் பேசிய பேச்சு அவளை அப்படி ஓட வைத்தது..
அலுவலகம் போன பின்பும் அவளுடைய படபடப்பு குறையவில்லை.. அன்று வேலை பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.. மனம் அலை பாய்ந்தது.. கிரியைப் பார்த்தால் மனம் சமனப் படக் கூடுமோ என்று தோன்றியதில் லிங்கம் வந்ததும் கிரியைப் பார்க்கக் கிளம்பி விட்டாள்..
வழியில் எதுவும் பேசாமல் யோசனையாகவே இருந்த மீனாவை லிங்கம் திரும்பிப் பார்த்தபடி காரை ஓட்டினார்.. மீனா இப்படி அமைதியாக இருக்கும் ரகமல்ல.. எதையாவது பேசிக்கொண்டே இருப்பாள்.. இன்னது என்று இல்லை.. அலுவலகம், வீடு, மலைவாழ்மக்கள், கானாடுகிரியின் இயற்கைச் சூழல் என்று அவள் பேசுவதற்கு விசயம் இருந்து கொண்டே இருக்கும்..
'இப்ப ஏன் மூட் அவுட்டா இருக்காங்கா..?'
சோர்ந்திருந்த மீனாவின் முகம் அவள் எதனாலோ பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்த்தியது..
'பாவம்..' என்று நினைத்துக் கொண்டார்..
மீனா தாங்கிக் கொண்டிருப்பது சாதாரண பாரத்தையல்ல.. மிகப்பெரும் பாரம்.. ஆண்களாலே சாதிக்க முடியாத ஒன்றை மீனா சாதித்திருக்கிறாள்.. நேர்கொண்ட பார்வையுடன் கயவர்களை எதிர்த்து, களையெடுத்து கானாடுகிரியில் இருக்கும் விஷ்வாவின் தொழில்களைக் காத்து நிற்கிறாள்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -56
பொதிகையிலே பூத்தவளே -56
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-56.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-56.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy