பொதிகையிலே பூத்தவளே -49

49 " வனமலர் ரொம்பவும் அழகாயிருப்பா.. எங்க ஜனங்களுக்காக பாடுபடனும்னு நினைச்சவ.. என்னுடன் உறுதுணையா நிற்பேன்னு சொன்னவ.. உயிருக்குய...


49

"வனமலர் ரொம்பவும் அழகாயிருப்பா.. எங்க ஜனங்களுக்காக பாடுபடனும்னு நினைச்சவ.. என்னுடன் உறுதுணையா நிற்பேன்னு சொன்னவ.. உயிருக்குயிராய் என்னைக் காதலிச்சா.. என்மேல அம்புட்டுப் பித்து.. என்னையே சுத்திச்சுத்தி வந்தா.."
கிரியின் கண்கள் சிவந்தன.. அவன் உதட்டைக் கடித்துத் தன் உணர்வுகளை அடக்கியபடி ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தான்.. மீனா குறுக்குடவில்லை.. அருவியெனக் கொட்டும் உணர்வுகளை சிறு 'ஊம்' ஒலி கூட தலை செய்து விடும்.. அது கூடாது..
"எங்க கல்யாணத்துக்கு நாள் குறிச்சதில் இருந்து அவளுக்குத் தலைகால் தெரியலை.. எப்பவும் இந்தக் குடிசையில்தான் இருப்பா.. நானும் வந்துருவேன்.. எனக்காக சமைச்சுக் கொடுப்பா.. இன்னும் தெளிவாச் சொல்றதா இருந்தா அவளும் நானும் இந்தக் குடிசையில் புருசன் பொஞ்சாதியா வாழ்ந்தோம் மீனா.. புரிகிறதா..?"
மீனாவுக்குப் புரியாமல் இருக்குமா..? அதனால்தான் அவளுடைய குடிசையில் மீனாவும் விஷ்வாவும் கணவன் மனiவிபோல கூடி விடக்கூடாது என்று வனமலர் தன் போட்டோவை கீழே விழ வைத்தாளோ..
"கல்யாணம் என்கிறது ஊருக்குத்தான்.. மனசாலும் உடலாலும் நாங்க எப்பவோ சேர்ந்துட்டோம்.. இந்தக் குடிசையிலே வாழ ஆரம்பிச்சுட்டோம்.."
"வனமலரின் அப்பாம்மா..?"
"அவங்க வீட்டில அவங்க இருந்தாங்க.."
"அப்ப இது வனமலரின் வீடில்லையா..?"
"இல்லைங்க மீனா.. இது எனக்கும் அவளுக்குமான தனித்த குடிசை.. இங்கே நாங்க மட்டும்தான் வந்து போவோம்.. தங்கியிருப்போம்.."
"ஓ.."
"அருவிக்குக் குளிக்கப் போனவ கால் வழுக்கி மலையுச்சியில இருந்து அருவியோடு அருவியா விழுந்துட்டாளாம்.. இதை நம்ப நான் என்ன முட்டாளா..?"
கிரி கோபத்துடன் ஸ்டிரியங்கின் மேல் கைகுவித்து குத்தினான்.. மீனா திடுக்கிட்டாள்..
"என்ன அண்ணா சொல்கிறீங்க..?"
"இந்த மலையில பிறந்து வளர்ந்தவளுக்கு அருவியில் குளிக்கத் தெரியாதா..? அவள் வழுக்கி விழுந்ததா சொல்லும் அருவி, மலை முகட்டில இருந்து ஓங்கித் தண்தரையா இருக்கிற பாறைமேல விழுந்து ஆறா ஓடுகிற அருவி.. மலைமுகட்டில் ஆறாத்தான் ஓடி வந்து அருவியா கொட்டும்.. அது ஆரம்பிக்கும் இடத்தில் ஆத்தில்தான் குளிக்க முடியும்.. கொட்டற அருவியில குளிக்கனும்னா கீழேதான் வரனும்.. வனமலர் அருவி கொட்டற இடத்தில இருந்து அருவியோடு அருவியா விழுந்திருக்கா.."
"அண்ணா.."
"அது குளிக்கப் போய் விழுந்ததா இருக்க முடியாது மீனா.. அருவி கொட்ட ஆரம்பிக்கிற இடத்தில நிற்கக்கூட முடியாது.. ஆவேசமா ஓடி வரும் ஆத்து நீர் அருவியா மாறுகிற இடத்தில நிற்கக்கூட முடியாது.. அருவியில குளிக்கனும்னா கீழே வரனும்.. அது விடுகிற இடம் மணலும் பாறையும் கலந்ததா இருக்கும்.. அங்கே வழுக்கவே வழுக்காது.. அப்படியே வழுக்கினாலும் ஆத்துத் தண்ணியிலே நீச்சலடிச்சுக் கரையேறி விடலாம்.. இவ அருவி கொட்டற இடத்தில இருந்து அருவியோடு அருவியா எப்படிப் பாய்ஞ்சிருக்க முடியும் மீனா..?"
கிரியின் கேள்விகளில் அரண்டு போனாள் மீனா.. சுற்றிலும் பார்த்தாள்.. அழகான பசுமையும், ஆங்காங்கே கொட்டும் ஆறுகளாகவும் இருந்த மலையின் அழகு அவளை மருட்டியது..
"இது எங்க கோட்டை மீனா.. இங்கே யாரும் எங்களிடம் வாலாட்டி விடமுடியாது.. முதல் முறையா யாரோ வாலாட்டியிருக்காங்க.. அது யார்..?"
மீனாவுக்கு ஏனோ ரங்கநாதனின் நினைவு வந்து தொலைத்தது.. அவன் ஏன் கிரியைக் கண்டால் பயந்து விலகுகிறான்..?
"தேடிக் கொண்டிருக்கிறேன் மீனா.. தடயம் கிடைத்து குற்றவாளி அகப்பட்டால் அது யாராக இருந்தாலும் விட மாட்டேன்." என்ற கிரி சற்று நிறுத்தி மீனாவை நேர் கொண்ட பார்வை பார்த்து..
"அது நம்ம சின்ன ஜமின்தாரின் அண்ணனாக இருந்தாலும் சரி.." என்றான்..
'ஆக.. கிரிக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது..'
மீனாவுக்கு ஒன்றுதான் புரியவில்லை.. கிரிக்குத் தோன்றியிருக்கும் சந்தேகங்கள் விஷ்வாவின் மனதில் தோன்றாமல் இருக்குமா..? அவன் இதைப் பற்றிக் கிரியிடம் பேசியிருப்பானா..?
"சின்ன ஜமின்தார் இதைப் பத்தி எதுவும் பேசலைன்னாலும் என் மனசில் இருக்கிற சந்தேகங்கள் அவர் மனசிலும் இல்லாமல் இருக்காது.. அப்படி அவருடைய அண்ணன்தான் குற்றவாளின்னா, நான் என்ன தண்டனை கொடுத்தாலும் ஊடே வராம ஒதுங்கிக்குவாரு.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.."
மீனாவுக்குத் துயரமாக இருந்தது.. ஏன் இது போல எல்லாம் நடக்க வேண்டும்.. கிரியைப் போன்ற ஒருவனின் காதல் நிறைவேறியிருக்கலாமே..
"வனமலர் போன துக்கத்திலே அவளைப் பெத்தவங்களும் போய் சேர்ந்துட்டாங்க.. நான் தனிச்சு நிற்கிறேன்னு அம்மாவுக்கு வருத்தம்.. அவங்களுக்கு எப்படித் தெரியும்.. நான் அவகூட வாழ்ந்துக்கிட்டுத்தான் இருக்கேன்.."
கிரி வனமலரின் குடிசைக்குத் தினமும் வருவான் என்று விஷ்வா சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது மீனாவுக்கு..
"நீங்க குடிசையைச் சுத்தமா வைத்திருக்கீங்க அண்ணா.. சமைத்துக் கூடச் சாப்பிடுவீங்க போல.. வீட்டுக்குப் பின்னாடி காய்கறித் தோட்டம் வேற போட்டிருக்கிங்க.."
கிரி மீனாவைத் திரும்பிப் பார்த்த பார்வையில் எதுவோ இருந்தது.. மீனா திகைத்தாள்.. அவள் சாதாரணமாகத்தானே பேசினாள்.. அதற்கு ஏன் கிரி இப்படிப் பார்க்கிறான்..?
"நான் குடிசைக்குத் தினமும் போவது உண்மைதான்.. ஆனா, குடிசையைச் சுத்தம் பண்ணி வைப்பது நானில்லை.. சமைப்பது, கணப்புக்கான விறகுகளை அடுக்கி வைத்திருப்பது, காய்கறித் தோட்டம் போட்டுத் தண்ணீர் பாய்ச்சுவதுன்னு எதையுமே நான் செய்ததில்லை.."
"பின்னே..? வேறு யார் செய்கிறாங்க..? வனமலரின் அப்பாம்மாவா..?"
கேட்கும் போதே தன் கேள்வியில் இருந்த அபத்தத்தை உணர்ந்தாள் மீனா.. வனமலரின் தாய், தந்தை உயிருடன் இல்லையே..
"இல்லை.."
கிரி ஜீப்பின் வேகத்தை அதிகப்படுத்தினான்.. அவன் மீனாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்க்கப் பார்க்கிறான் என்று புரிந்து விட்டது.. ஏனென்றுதான் அவளுக்குத் தெரியவில்லை.. கிரி அப்படிக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தப்பிக்கப் பார்ப்பவன் அல்ல.. எந்தக் கேள்வியையும் எதிர் நோக்குபவன்..
"நான் கேட்டதுக்கு நீங்க தெளிவான பதிலைச் சொல்லலை அண்ணா.." மீனா வற்புறுத்தினாள்..
"வேண்டாம்மா.." கிரி மென்மையாக மறுத்தான்..
"ஏன்..?" மீனா பிடிவாதமாகக் கேட்டாள்..
"உங்க கேள்விக்கான பதில் தெரிஞ்சா நீங்க பயந்திருவீங்க.."
'ஏன் பயப்படனும்..?'
நினைக்கும் போதே பயம் வந்து தொலைத்தது.. முதுகுத் தண்டு ஜில்லிட்டது.. நா தடுமாறியது.. தொண்டை வறண்டது.. உடலில் நடுக்கம் ஏற்பட்டது..
கிரியின் பதில் எதுவாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்திற்கு அவள் வந்திருந்தாள்.. அப்படியும் இருக்குமா..? அது சாத்தியமா..?
"நீங்க பயப்படுவதைப் போலதான் என் பதில் இருக்கும்.. அதை நீங்க தெரிஞ்சுக்க வேணாம்.."
"தெரிந்தா பயம் வரலாம்.. தெரியலைன்னா அதுவா, இதுவான்னு ஆயிரம் குழப்பம் வரும்.. அதுக்கு பதிலை தெரிந்துக்கிட்டு நான் பயப்படறதே பெட்டர் அண்ணா.."
மீனாவின் வலியுறுத்தலிலும் ஓர் உண்மை இருந்ததில் கிரி அவளை ஆழமாகப் பார்த்தான்..
"அந்தக் குடிசையில் வனமலர் இருக்கிறாம்மா.."
"என்னது..?"
மீனா அலறிவிட்டாள்.. கொட்டும் மழையில், குளிர் துளைக்கும் அந்த மலையில்.. அவளது உடல் வியர்த்தது.. கிரி கணிவுடன் அவளைப் பார்த்தான்..
"இதுக்குத்தான் நான் பதில் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.. நீங்க கேட்கலை.."
"எப்படி அண்ணா.. வனமலர் இறந்துட்டா.."
"அது ஊர், உலகத்துக்குத்தான்.. எனக்கு இல்லை.. அதுக்கான சாட்சி அந்தக் குடிசைதான்.. அங்கே அவ நடமாடிக்கிட்டு இருக்கிறா.. குடிசையைச் சுத்தம் பண்ணி.. காய்ந்த விறகுகளைக் கொண்டு வந்து அடுக்கி.. சமையல் செஞ்சு வைச்சிருப்பா.. நான் சமையலுக்கான அரிசி, பருப்பை வாங்கி வைச்சிருவேன்.. அவ்வளவுதான்.. காய்கறியெல்லாம் தோட்டதில் பறிச்சுக்குவா.."
என்னவோ உயிருடன் இருக்கும் மனைவியைப் பற்றிப் பேசுவதைப் போல நெகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தான் கிரி.. மீனா கலவரத்துடன் சுற்று முற்றும் பார்த்து வைத்தாள்.. கானகத்தின் அடர் இருட்டில் வனமலர் கரைந்து நிற்பதைப் போல இருந்தது..
எஸ்டேட் அலுவலக வளாகத்தில் ஜீப் நுழைந்தது.. மீனா இறங்கப் போகும் போது அவளது செல்போன் ஒலித்தது.. விஷ்வாதான் அழைத்தான்.. மீனா வனமலரை மறந்தாள்.. அவளது மனதில் பயம் விலகி பரவசம் வந்தது.. அவசரமாக போனை உயிர்ப்பித்தாள்..
"சார்.."
"உடனே வீட்டுக்கு வா.."
விஷ்வா உத்தரவிட்டான்.. அந்த நேரத்தில் எஸ்டேட்டுக்கு வராமல் அவள் வீட்டுக்கு ஏன் வரச் சொல்கிறான்..?
மீனாவின் மனதில் அனுபமாவின் முகம் வந்தது..
அவள் சொடக்குப் போடும் ஒலி காதில் கேட்டது..
'என்னவா இருக்கும்..?'
தொய்வாக இருந்தது.. களைத்துப் போன மனதுடன் கிரியைப் பார்த்தாள்.. அவனது புருவங்கள் சுருங்கின..
"என்னம்மா..?"
"என்னன்னு தெரியலைண்ணா.. சார் உடனே வீட்டுக்கு வரச் சொல்கிறார்.."
"அவர் கோயம்பத்தூருக்குப் போயிருந்தாரே.."
கிரி இயல்பாகச் சொல்ல.. மீனாவுக்கு ரங்கநாதன் காட்டிய போட்டோவில் மேகியுடன் விஷ்வா நின்றிருந்தது நினைவுக்கு வந்தது..
"அப்படித்தான் சொன்னாங்க.." முணுமுணுத்தாள்..
"வீட்டுக்குத்தானே வரச் சொல்கிறார்.. அங்கே போய் பார்த்தா என்னன்னு தெரிந்து விடப் போகுது.."
கிரி இலகுவாகச் சொன்னான்.. அவனைப் போல ஏன் அவளால் எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்ற சோர்வுடன் அவள் ஜீப்பிலிருந்து இறங்கப் போனாள்..
"இருங்க.. நானும் உங்களுடன் வருகிறேன்.. நாம் ஜீப்பிலேயே போய் விடலாம்.. லிங்கம், நீங்க காரைக் கொண்டு வந்து மீனாவின் வீட்டில் நிறுத்திட்டு உங்க வீட்டுக்குப் போங்க.."
கிரியும் கூட வருகிறான் என்பதில் மீனாவுக்கு தெம்பாக இருந்தது.. மனம் படபடக்க அவள் சீட்டில் சாய்ந்து விழிகளை மூடினாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -49
பொதிகையிலே பூத்தவளே -49
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-49.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-49.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy