பொதிகையிலே பூத்தவளே -46

46 " எவ்வளவு தங்கமான மனுசங்க.. நம்மள எத்தனை மரியாதையாக நடத்தினாங்க.." ஆயிரத்து ஐம்பதாவது முறையாகச் சொல்லிப் பூரித்துப் போ...


46

"எவ்வளவு தங்கமான மனுசங்க.. நம்மள எத்தனை மரியாதையாக நடத்தினாங்க.."
ஆயிரத்து ஐம்பதாவது முறையாகச் சொல்லிப் பூரித்துப் போனாள் புனிதா.. மூர்த்தியும் அதை வழி மொழிந்து கொண்டிருந்தார்..
'உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்..' என்று நினைத்துக் கொண்டாள் மீனா.. அதைச் சொல்லித் தாய், தந்தையின் மகிழ்வைக் குலைக்க விரும்பவில்லை..
"எனக்கொன்னும் அப்படித் தோணலை அக்கா.."
இரவில் தூங்கப் போன போது அவர்களின் அறையில் மீனாவிடம் சொன்ன மோகனா, அவளுக்கு அதிகமாகச் சிந்திக்கத் தெரியும் என்று நிரூபித்தாள்..
"ஏண்டி அப்படிச் சொல்ற..? உன்கிட்ட யாராவது கடுமையா நடந்துக்கிட்டாங்களா..?" கவலையுடன் கேட்டாள் மீனா..
"சேச்சே.. அப்படியெல்லாமில்ல.. ஆனா, நம்ம சாரோட அண்ணனும், அண்ணியும் நம்மை முறைச்சு முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.. அதை வைச்சுச் சொன்னேன்.."
"அம்மாவும், அப்பாவும் இதைச் சொல்லலையே.."
"அவங்க எங்க அந்த அண்ணனையும், அண்ணியையும் பார்த்தாங்க..? ரூபிணியக்காவைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.. அந்தக்காதான் சிரிச்ச முகமா நம்மைப் பார்த்துக் கையாட்டினாங்களே.."
"நீயும் அவங்களை மட்டும் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..? வேற பக்கம் ஏன் பார்த்த..?"
"இதென்னக்கா வம்பாப் போச்சு.. நான் உள்ளே நுழைய முடியுமான்னு கனவு கண்ட அரண்மனைக்குள்ளே போயிருக்கேன்.. சுத்திப் பார்க்காம இருக்க முடியுமா..? அங்கே வில்லனும் வில்லியும் இருப்பாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்..? எனக்கு மட்டும் அவங்களைப் பார்க்கனும்ன்னு ஆசையா என்ன..? எப்படிப் பார்க்கிறாங்கன்னு தெரியுமா..? என்னவோ, அவங்க
வீட்டுச் சொத்தைக் கொள்ளையடிக்க வந்தவங்களைப் பார்க்கிறதைப் போலப் பார்த்து வைச்சாங்க அக்கா.."
மோகனா தூங்கி விட்டாள்.. நிச்சிந்தையாக உறங்கும் அவள் முகத்தைப் பார்த்தபடி வெகுநேரம் தூக்கமின்றி கழித்தாள் மீனா.. கள்ளமில்லா பிள்ளை முகம்.. இதுபோன்ற நிச்சிந்தையான தூக்கம் தனக்கு வாய்த்திருக்கிறதா என்று யோசித்தாள்.. ஐந்து வயதில் தாயின் இழப்பு.. ஆறு வயதில் மாற்றாந்தாயின் வருகை.. பெற்றவளாக அவளை இவள் ஏற்றுக் கொண்டாலும், பிரித்து நிறுத்தி வைத்த ஆனந்தனின் கலாட்டா.. ஏதோ ஓர் சுமையின் கனம் தாங்காதவரைப் போல, பாரம் சுமக்கும் பார்வையுடன் வலம் வந்த மூர்த்தி.. ஆனந்தனின் உதாசீனத்தைப் பொறுத்துக் கொண்டு அமைதியாக கடமையாற்றிய புனிதா.. மீனாவைச் சுற்றித்தான் எத்துனை சொல்ல முடியாத துயரங்கள்..
'இவ வந்த பின்னாலேதான் வீட்டக்குள்ளே மாற்றம் வந்துச்சு.'
தூங்கிக் கொண்டிருந்த தங்கையின் தலையைப் பிரியத்துடன் கோதி விட்டாள் மோகனா.. அவள் தூக்கத்தில் புரண்டு மீனாவின் இடுப்பில் கைபோட்டு உறங்க ஆரம்பித்தாள்.. மீனாவின் மனம் மென்மையானது.. தங்கையின் நெற்றியில் முத்தமிட்டாள்..
மோகனா பிறந்ததிலிருந்து எந்த மாற்றத்தையும் உணராதவள் அண்ணன் முசுடு.. அவனிடம் தவழ்ந்து போக முடியாமல் கதவை அடைத்துக் கொண்டிருப்பவன் என்பதில் அவள் மனதில் எவ்விதமான வருத்தமும் இருந்ததில்லை.. அவளறிந்த அண்ணன் முசுடு.. அவ்வளவுதான்.. பாரம் சுமக்கும் சோர்ந்த தோற்றத்துடன் அப்பா இருப்பதில் சோர்வு வந்ததில்லை.. அப்பா முகமே அப்படித்தான்.. மற்றபடி அனைத்தையும் இட்டு நிரப்பி விடும் தோழியாக, தமக்கையாக, அன்பைப் பொழியும் அக்கா மீனா அவளுக்குக் கிடைத்திருக்கிறாளே..
சிரித்த முகமாக வீட்டை மாளிகையாக்கிக் காட்டும் இல்லத்தரசியாக அம்மா புனிதா அவளுக்கு இருக்கிறாளே..
மோகனா குதூகலமானவள்.. அவளது ஆசைகள் அளவுக்கு உட்பட்டவை.. கள்ளமிட்டாய், தீபாவளி பொங்கலுக்கு புதுத்துணி.. வார இறுதிகளில் சினிமா என்று அவர்களின் சக்திக்கு உட்பட்ட, குடும்பத்தினரால் நிறைவேற்றப்படக்கூடிய ஆசைகள்தான் அவளுடையது..
'நீயாவது இப்படியே இரு மோகனா.. வாழ்க்கையின் போராட்டங்களைப் பற்றி நீ தெரிந்து கொள்ளவே வேண்டாம்..'
இமை மூடிய மீனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. விஷ்வாவின் மீதான அவளது காதலுக்கு எவ்விதமான எதிர்காலமும் இருக்காது என்று அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது.. காதலுக்கு எதிர்காலம் இல்லாமல் போகலாம்.. காதலுக்கு அனைத்துக் காலங்களும் உண்டு.. அது உயிர்ப்பு நிரம்பியது.. நிரந்தரமானது..
இந்தக் காதலின் நினைவுகளுடன் வாழ்ந்து முடித்துவிட மீனாவால் முடியும்..
மோகனா சொன்னாளே.. அவர்களது சொத்தைக் கொள்ளையடிக்க வந்தவர்களைப் பார்ப்பதைப் போல ரங்கநாதனும், அனுபமாவும் அவர்களைப் பார்த்தார்கள் என்று.. அது உண்மைதான் என்பதை மோகனா அறிவாளா..? விஷ்வா உருவாக்கி வைத்திருக்கும் தொழில் சாம்ராஜ்யத்தை அபகரிக்க முடியாமல் காவல் காக்க வந்திருக்கும் காவல்காரி மீனா.. தம்பியின் சொத்து தன் சொத்து என்று இறுமாந்திருந்தவர்கள், காவல் காக்க வந்தவளைக் கொள்ளைக்காரியைப் போலதானே பார்ப்பார்கள்..? அதிலும் மீனா விஷ்வாவின் மனதை கொள்ளையடித்திருக்கிறாள்.. அந்தத் துவேசம் மனதில் இருக்கத்தானே செய்யும்..?
மறுநாள் எழுந்து வேலைக்குக் கிளம்பு போது சோர்வாக இருந்தாள் மீனா.. தூங்காத கண்கள் எரிச்சல் கொண்டிருந்தன.. இமைகள் வீங்கியிருந்தன.. புனிதா கவலையுடன் மகளின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.. சோகையாக புன்முறுவல் செய்தாள் மீனா..
"ஒன்னுமில்லைம்மா.."
"ஒன்னுமில்லைன்னு சொல்ற.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு..?"
"ராத்திரி சரியான தூக்கமில்லைம்மா.."
"ஏன் தூங்கலை..? எதுவும் பிரச்னையா..?"
புனிதா கவலையானாள்.. இந்த ஒரு வருடமாகத்தான் அவள் கவலையில்லாத முகத்துடன் சந்தோசமாக வளைய வருகிறாள் என்பதில் மீனா அதட்டினாள்..
"உடனே மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கனுமா..? சிரித்த முகமாய் இருங்கம்மா.. எனக்கு ஒரு பிரச்னையுமில்ல.."
"அப்புறம் ஏன் தூங்கல..?"
"என்னன்னு தெரியல.. தூக்கம் வரல.. ஏன் வரலன்னு என்னைக் கேக்காம.. தூக்கத்துக்கிட்டப் போயி கேளுங்க.."
"சிரிக்காதே மீனா.. முகமெல்லாம் வீங்கியிருக்கு.. இன்னைக்கு லீவ் போட்டுரு.. தூங்கி எழுந்திருச்சா சரியாகிரும்.."
"சரியாப் போச்சு போங்க.. இன்னைக்கு முக்கியமான வேலை இருக்கு.. சார் வேற இன்னும் நாலைஞ்சு நாளில ஃபாரின் கிளம்பிருவார்.."
சொல்லும்போதே மீனாவுக்குத் துயரமாக இருந்தது.. விஷ்வா வெளிநாட்டுக்குக் கிளம்பப் போகிறான் என்பதுதான் அவளது தூக்கத்தைப் பறித்துத் துயர் கொள்ள வைக்கிறது என்பதை புனிதா அறிவாளா..?
அதை அறியாத அறியாமையுடன்தான் புனிதாவும் பேசினாள்..
"அவர் கானாடுகிரியில் இல்லாதப்ப நீ லீவ் எடுத்தாத்தான் தப்பு.. அவர்தான் இன்னும் நாலைந்து நாள்கள் இங்கேதானே இருக்கப் போகிறார்..? இந்தச் சமயத்தில நீ லீவ் எடுத்தாத்தான் உண்டு.. ஓய்வில்லாம உழைச்சுக்கிட்டு இருக்கிற மீனா.. காலையிலே கிளம்பிப் போனா ராத்திரிதான் வீட்டுக்கு வர்ற.. உடம்பு என் மெஷினா..? அதுக்கும் ஓய்வு வேணும் மீனா.. நீ உடம்பைப் பார்த்துக்கனும்.. பேசாம அவர் கிளம்பிப் போகிற வரைக்கும் லீவ் போட்டுட்டு அக்கடான்னு வீட்டில தூங்கி எழுந்திரிச்சா உடம்பு சொடக்கெடுத்தைப் போல சரியாகிரும்.. அம்மா உனக்கு தினமும், வடை, பஜ்ஜியை சுட்டுத் தர்றேன்.. கறி, மீனுன்னு ஆக்கிப் போடறேன்.."
அரண்டு போனாள் மீனா.. அவளே இந்த நாலைந்து நாள்களில் பகல் பொழுதுகளும் நீண்டதாக இருக்க வேண்டும் என்று அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருக்கிறாள்.. புனிதா அதற்கு வேட்டு வைக்கப் பார்க்கிறாளே..
'யாருக்கு வேண்டும், பஜ்ஜியும், வடையும்..? எனக்கு விஷ்வாதான் வேணும்..'
மனதிலிருப்பதைச் சொல்ல முடியாமல்..
"ஏம்மா.. சார் இல்லாதப்ப நான் வேலை செய்து என்ன பண்ண..? அவருக்கு நான் வேலை செய்கிறேன்னு எப்படித் தெரியும்..? மதுரையில் ஆறுமுகம் சார், வேலையே செய்ய மாட்டார்.. ஆனா சார் வந்திட்டா அத்தனை வேலையையும் அவர்தான் இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்கிறதைப் போல பாவ்லா பண்ணுவார்.. ஓபி அடிக்கிறவரே அப்படியிருக்கிறப்ப ஒழுங்கா வேலை செய்கிற நான் எப்படியிருக்கனும்..?"
"அதில்ல மீனா.."
"எனக்கு ஒன்னுமில்லைம்மா.. இன்னைக்கு ராத்திரி தூங்கி எழுந்திரிச்சாச் சரியாப் போகிரும்.. கவலைப்படாதீர்கள்.."
அதற்கு மேலும் அங்கே நின்றிருந்தால் புனிதா வேலைக்குக்கிளம்ப விட மாட்டாள் என்பதில் மீனா வாசலுக்கு விரைந்து காரில் ஏறி உட்கார்ந்து விட்டாள்.. காரைக் கிளப்பிய லிங்கம்..
"அம்மா சோர்ந்து தெரியறீங்களே.." என்றார்..
'நீங்களுமா..?' அலுப்புடன் தலையில் கை வைத்த மீனா..
"சத்தமாச் சொல்லிறாதீங்க.." என்று எச்சரித்தாள்..
"ஏம்மா..?"
"அம்மா காதில் விழுந்தா என்னை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வீட்டுக்குள்ளே பூட்டி வைச்சிருவாங்க.."
"ஹா.. ஹா.."
லிங்கம் சிரித்த சிரிப்பு கானாடுகிரியின் மலை முகடுகளில் எதிரொலித்தது.. அது புனிதாவின் காதுகளை எட்டுவதற்குள் ஜீப் வடிவிலான அந்தக் கார் மலைப் பாதையில் விரைந்து விட்டது.. சரிவில் தெரியும் தேயிலைச் செடிகளை வேடிக்கை பார்த்தபடி சிந்தனையில் இருந்த மீனா கார் நின்று விட்டதை உணர்ந்து லிங்கத்தின் பக்கம் திரும்பினாள்..
"ஏன் காரை நிறுத்திட்டிங்க..?"
"பெரிய ஜமீன்தார்ம்மா.." லிங்கம் நடுங்கிய குரலுடன் சொன்னார்..
"அவருக்கென்ன..?" மீனாவுக்குப் புரியவில்லை..
"முன்னால பாருங்கம்மா.."
லிங்கம் அறிவுறுத்தியதில் முன்னால் பார்த்த மீனா முகம் இறுகினாள்.. அங்கே பாதையின் குறுக்கே காரை மறித்துத் தன் காரை நிறுத்தி அதன்மீது சாய்ந்து நின்றிருந்தான் ரங்கநாதன்..
லிங்கம் காரை விட்டு இறங்கினார்.. மீனா இறங்கவில்லை.. காரிலேயே உட்கார்ந்திருந்தாள்.. அதில் கோபமான ரங்கநாதன் வேகநடையுடன் வந்து குனிந்து..
"அம்மணி காரை விட்டு இறங்க மாட்டிங்களோ.." என்று எகத்தாளமாகக் கேட்டான்..
ஆமாம் என்பதைப் போல சீட்டில் சாய்ந்து உட்கார்ந்த மீனா.. ரங்கநாதனின் எகத்தாளத்தைக் கவனிக்காததைப் போல..
"இது பாதை சார்.." என்றாள்..
"நான் மட்டும் இதை வீடுன்னா சொன்னேன்..? உனக்கு வேண்டும்ன்னா இது வீடாத் தோன்றலாம்.. பாதையிலே குடியிருக்கிற நாடோடிதானே நீ..?"
ரங்கநாதன் அவளிடம் வம்பிழுக்கத்தான் வந்திருக்கிறான் என்று தெள்ளத் தெளிவாக அவளுக்குப் புரிந்து போனது.. ரங்கநாதனின் கோபத்துக்குப் பயந்து லிங்கம் காரை விட்டு இறங்கியிருந்தாலும் விலகிச் செல்லவில்லை.. கண்காணித்தபடி பக்கத்தில்தான் நின்றிருந்தார்..
"நாடோடிகள் ஒன்றும் குறைவானவர்கள் இல்லை சார்.. அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள்.. தன் போக்கில் விதி வகுத்த வாழ்க்கையை வாழ்பவர்கள்.. காலத்தின் போக்கில் போகிறவர்கள்.."
நிறுத்தி நிதானமாக மீனா கொடுத்த பதிலில் லிங்கத்தின் முகத்தில் ஒரு 'சபாஷ்' வந்து போனது.. அதை ரங்கநாதனும் உணர்ந்தான்.. கொந்தளித்தான்..
"ஏய்ய்.. எங்கே வந்து யாரிடம் என்ன பேசுகிறாய்ன்னு யோசித்துப் பேசு.. இது கானாடுகிரி.."
"தெரியுமே.. கானாடுகிரியில் வந்து, பெரிய ஜமீன்தாரிடம், அவர் பேசுகிற நக்கல் பேச்சுக்குப் பதில் பேசிக்கிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும் சார்.."
"கொழுப்பா..?"
"ஆமாம் சார்.. உழைத்துப் பிழைக்கிறேனில்ல..?"
"நீ உழைத்துத்தான் பிழைக்கனும்.. அப்பத்தான் திங்கச் சோறு கிடைக்கும்.. அதை மனசில வைச்சுக்கிட்டு ஒழுங்கா நடந்துக்க.."
"நேர்மையாத்தான் நடந்துக்கிட்டு இருக்கேன் சார்.. அடுத்தவங்க சொத்துக்கு நான் ஆசைப்பட்டதேயில்லையே.."
சுற்றிச்சுற்றி மீனா ரங்கநாதனின் அடிமனதில் இருக்கும் கயமையைச் சுட்டிக் காட்டுவதைப் போலவே பேசியதில் ரங்கநாதன் எரிமலையானான்.. அவன் விஷ்வாவின் சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறான் என்று கானாடுகிரியில் இருக்கும் காக்கா, குருவிக்குக் கூடத் தெரியும் என்றாலும் யாருக்கும் இதுபற்றிய பேச்சைப் பேசும் துணிவு வந்ததில்லை.. மீனா அந்தத் துணிச்சலுடன் இருக்கிறாள்.. ரங்கநாதனை எதிர்த்து நிற்கிறாள்.. அவனது கயமையை விரல் நீட்டிச் சுட்டிக்காட்டிப் பகிரங்கப் படுத்துகிறாள்..
'இவளைச் சும்மா விடக் கூடாது..' கருவினான் ரங்கநாதன்..
"ஆப்டர் ஆல்.. பிழைக்க வழியில்லாத நாnhடடி நீ.. என் தம்பியை வளைத்துப் போட்டு அவன் சொத்துக்களை கைப்பத்தப் பார்க்கறியா..? அவன் சொத்த நான் உரிமை கொண்டாடலாம்.. அவனுக்கு நான் அண்ணன்.. ரத்த சொந்தம்.. நீ யார்..? உனக்கு அவன் மீது என்ன உரிமை இருக்கிறது..? என்னவோ கட்டின பெண்டாட்டியைப் போல அவன் சொத்துக்களைக் காவல் காக்கிற..? எனக்கும் என் தம்பிக்கும் இடையில் ஆயிரம் இருக்கும்.. அதைச் சொல்ல நீ யார்..? அண்ணன் தம்பிக்கு ஊடே வர உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது..? நீ என்ன அவன் பார்த்த முதல் பெண்ணா..? போகும் இடமெல்லாம் பெண் பழக்கம் வைத்திருக்கிறான்.. என்னைப் போல அவன் ஒன்னும் ஏகபத்தினி விரதனில்லை.. இப்பக்கூட கோயம்பத்தூரில் 'மேகி' என்கிற பெண்ணோடு ஊர் சுற்றிக்கிட்டு இருக்கிறான்.. இதோ பாரு.."
ரங்கநாதன் தன் செல்போனை உயிர்ப்பித்துக் காண்பித்தான்.. அதில் தேதியும் நேரத்தோடு விஷ்வாவும் மேகியும் தழுவிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்த போட்டோ இருந்தது.. மீனாவின் உயிர் துடித்தது.. 




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -46
பொதிகையிலே பூத்தவளே -46
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-46.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-46.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy