ஏதோ ஒரு நதியில்.. -7

7 " மிஸ் ரூபா... அட்ரஸை சொல்கிறேன். நோட் பண்ணிக் கொள்ளுங்கள்" கௌதம் கூற ரூபா திகைத்தாள். " சார்... நான் மேடத்துடைய அ...


7

"மிஸ் ரூபா... அட்ரஸை சொல்கிறேன். நோட் பண்ணிக் கொள்ளுங்கள்" கௌதம் கூற ரூபா திகைத்தாள்.
"சார்... நான் மேடத்துடைய அட்ரஸைக் கேட்டேன்..."
"நானும் அவர்களுடைய அட்ரஸைத்தான் சொல்கிறேன்..."
"உங்களுக்கு எப்படி அவங்க அட்ரஸ் தெரியும்?"
"எனக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும்?"
"என்ன சொல்கிறீர்கள் சார்?"
"ஷி இஸ் மை வொய்ப்..."
"வாட்...!"
ரூபா ஆச்சர்யத்தில் வாய் பிளந்தாள்.
'அதனால்தான் அவ்வளவு உரிமையாய் கழுத்தில் கை வைத்தானா? பின் ஏன் மேடம் அவனைக் கண்டும் காணாதது போல் இருந்தார்கள்?'
பூஜா தலையில் கை வைத்துக் கொண்டாள்.
"நோட் பண்ணிக் கொள்ளுங்கள் மிஸ் ரூபா."
"ஓ.கே. சார்..." அவள் நோட்டும் பேனாவுமாக தயார் ஆனாள்.
 "மிஸஸ் பூஜா கௌதம்,
    வொ. ஆப். கௌதம்.
    கௌதம் ஸ்பின்னிங் மில்,
    கோயம்புத்தூர்... ஓகே...?"
ரூபா வெளியேறினாள். பூஜா தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருந்தாள். மௌனமாய் அவளை வேடிக்கை பார்த்தான் கௌதம். அவனது பார்வையைக் கண்டவள் முறைத்தாள். அவன் ஏதுமறியாதவன் போல் புருவம் உயர்த்தினான்.
"இப்போது... திருப்திதானா?"
"எதற்காக நான் திருப்திப்பட வேண்டும்?"
"ஊருக்கே விஷயத்தை பரப்பி விட்டீர்கள்..."
"உண்மையைத்தானே பரப்பினேன்? பொய்யில்லையே..."
"எல்லோரும் என்னை என்ன நினைப்பார்கள்?"
"நீ செய்து விட்டு வந்த காரியத்தால் என்னை நினைத்தார்களே அதைவிட மோசமாய் நினைக்க மாட்டார்கள்..."
கௌதம் கொடுத்த பதிலடியில் பூஜா வாயை மூடிக் கொண்டாள். இருவரும் எழுந்து வெளியே வந்து லிப்டிற்குள் நுழைந்தார்கள். லிப்ட் தரையைத் தொட்டதும் பூஜா நகரப் போனாள். கௌதம் கை பிடித்து நிறுத்தினான்.
"எங்கே ஓடப் பார்க்கிறாய்...?"
"என் காரை எடுக்கப் போகிறேன்.."
"அந்தக் கதையே வேண்டாம்... அதற்குத்தான் ஒரு டிரைவரை கையோடு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். நீ சாவியைக் கொடு அவன் உன் காரை எடுத்துக் கொண்டு வருவான்..."
"கௌதம்... திஸ் இஸ் டூ மச். என் மேல் நம்பிக்கை இல்லையா?"
"நம்பிக்கையா? உன் மீதா? நம்பிக்கைக்கு உரியவளா நீ..."
பூஜா மீண்டும் வாய் மூடிக் கொண்டாள். கௌதமின் கை அசைவில் ஒருவன் அருகே வந்து நின்றான்.
"உன் கார் சாவியை அவனிடம் கொடு..."
"காரை நான் அடையாளம் காட்ட வேண்டாமா?"
"தேவையில்லை... நீ காரை நிறுத்திவிட்டு வருவதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்..."
பூஜா கார் சாவியை அவனிடம் கொடுத்து விட்டு கௌதமை பின் தொடர்ந்தாள்... அவன் காரின் முன் பக்கக் கதவைத் திறந்து விட்டு,
"ஏறு..." என்றான்... ஏறிக் கொண்டாள்.
கார் கிளம்பியது... அவள் அபார்ட்மென்டிற்குப் போகும் வழியைக் கூற முயல,
"தெரியும்..." என்றான் கௌதம்.
"தெரியுமா...? எப்படி..?"
"நீ உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் என் கண்ணில் படாமல் தப்ப முடியாது. நீ எங்கேயிருக்கிறாய்... என்ன செய்கிறாய் என்ற அத்தனை விவரமும் எனக்குத் தெரியும்..."
"தெரிந்துமா பேசாமல் இருந்தீர்கள்..."
"ஆமாம்..."
"இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள்?"
"என் அம்மாவிற்காக... நன்றாகக் கவனி... எனக்காக இல்லை...."
பூஜா இதழ் கடித்துக் கொண்டாள். வசுந்தராவின் தாய்மை நிறைந்த முகமும்... அணைப்பும் நினைவில் வந்தது... அவள் சாகக் கிடக்கிறாளா? குற்ற உணர்வுடன்..
"உங்கள் அம்மா எப்படியிருக்கிறார்கள்?" என்று கேட்டாள்.
"அதைத்தான் உன் காது குளிரச் சொன்னேனே... சாகக் கிடக்கிறார்கள்.." அவனது கண்கள் லேசாய் கலங்கியது போல் அவளுக்குத் தோன்றியது.
"என்னால்தானே..." மனம் வலிக்கவும் கேட்டாள்.
"இல்லையென்று சொல்வேனென்று நினைத்தாயா? உன்னால்தான்..." அவன் இரக்கமில்லாமல் கூறினான்.
"ஸாரி..." அவள் அபத்தமாய் மன்னிப்புக் கேட்டாள் அவன் அவளைத் திரும்பி ஒரு துரும்பைப் பார்ப்பது போல் ஒரு பார்வை பார்த்தான்.
"இனி இந்த வார்த்தையைச் சொல்லாதே..."
"ஏன்...?"
"சொல்ல உனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை.. கேட்கும் எனக்குத்தான் எரிச்சலாக வருகிறது..."
"நீங்கள் மிகவும் கடுமையாய் பேசுகிறீர்கள்..."
"பின் வேறு எப்படிப் பேசுவேன்? உன்னைக் கொஞ்சுவேன் என்று எதிர் பார்த்தாயா? நீ செய்த வேலைக்கு உன்னிடமெல்லாம் மதித்துப் பேசுவதே பெரிய விசயம்..."
'இவனோடு பேசுவதைவிட வாயை மூடிக் கொள்வதே உத்தமம்' என்று தோன்ற பூஜா மௌனமாய் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.. அவளது அபார்ட்மெண்ட் வந்து விட்டது.
"காரை எங்கு பார்க் பண்ண வேண்டும் என்று சொல்லு."
பூஜாவின் காரிலிருந்த டிரைவரிடம் பேசியவாறு கேட்டான் கௌதம். பூஜா கூறினாள். அந்த டிரைவர் பார்க் பண்ணிவிட்டு வந்து சாவியை நீட்டினான். கௌதம் வாங்கிக் கொண்டு அவனுக்குப் பணம் கொடுத்து அனுப்பினான்.
"தெரிந்தவனா...?"
"தெரிந்தவரின் டிரைவர்."
அதற்கு மேல் பேசி ஏன் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டுமென்று நினைத்தவள் பேசாமல் முன்னே சென்றாள். கௌதம் பின் தொடர்ந்தான். லிப்டில் ஏறி அவளது அபார்ட்மென்ட் இருக்கும் தளத்தை அடைந்தார்கள்.
அபார்ட்மென்ட் கதவைத் திறந்து உள்ளே சென்ற பூஜா,
"உட்காருங்கள்... " என்றாள்.
"நான் உட்கார வரவில்லை..."
"நான் கிளம்ப வேண்டுமானால் என் துணிகளை பேக் பண்ண வேண்டும். அதற்கு நேரமாகும்... அதுவரை நீங்கள் நிற்கப் போகிறீர்களா?"
பூஜா அவனது பதிலை எதிர்பார்க்காமல் பெட்ரூம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். கௌதம் அவளது முதுகைப் பார்த்து தோளைக் குலுக்கியவாறு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தான். சுவரில் இருந்த கண்ணாடி ஷோ கேஸில் நிறைய ஷீல்டுகள் இருந்தன. அவளது வெற்றிகளுக்கான பரிசுக் கோப்பைகள்.
'இவள் ஒரு சாதனையாளர்தான்... அதில் சந்தேகமில்லை...'
கௌதம் சுவரைப் பார்த்தான். அழகான தஞ்சாவூர் பெயிண்டிங்கில் அன்னம் ஒன்று தமயந்தியிடம் நளனின் காதலை விளக்கித் தூது சொல்லிக் கொண்டிருந்தது.
"என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..." பூஜாவின் குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தான். குளித்து வேறு உடை  மாற்றி வந்திருந்தாள். தாழம்பூ வண்ணத்தில் பிரிண்டட் சில்க் சேலை கட்டியிருந்தாள். நெற்றியில் சற்று அகலமான ஸ்டிக்கர் பொட்டு... உள்ளங் கழுத்தில் வைர அட்டிகை... காதுகளில் வைரத் தொங்கட்டான்கள். கைகளில் வைர வளையல்கள். தலையைப் பின்னலிட்டு ரப்பர் பேன்ட் போட்டிருந்தாள். அவனது பார்வையில் முகம் சிவக்க தலை குனிந்து கொண்டாள்.
"இல்லை... உன் வீட்டில் பழமையின் சின்னமான தஞ்சாவூர் பெயிண்டிங்கா? நீ கூட பழமையை மதிப்பாயா?"
"மதிக்கப் போய்த்தான் உங்களுடன் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்..."
"அந்தக் கதையெல்லாம் என்னிடம் வேண்டாம். நீ மதித்த லட்சணம் எனக்குத் தெரியாதா? நீ நேரத்திற்கு தகுந்தாற்போல்... இப்போது போட்டுக் கொண்டிருக்கிறாயே... இதைப் போல் வேஷத்தை மாற்றிப் போட்டுக் கொள்பவள்... உன்னை எனக்குத் தெரியாதா?"
"அதுதான் தெரிந்து வைத்திருக்கீர்களே... அப்புறமும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள். சாப்பிடலாம்... வாங்க..."
"சாப்பாடா...? உன் வீட்டிலா? நீ சமைப்பாயா?"
பூஜாவின் முகம் சிவந்தது. 'எவ்வளவு சரியாக அவளைக் கணிக்கிறான்.'
"இல்லை... காபி போடுவேன். பிரட் ரோஸ்ட் செய்வேன்."
"எனக்கு அதெல்லாம் போதாது... நான் கொங்கு நாட்டில் பிறந்தவன்... வக்கணையாக வஞ்சகமில்லாமல் சாப்பிட்டுத்தான் எனக்குப் பழக்கம். அதனால் கிளம்பு... போகும் வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம்."
"போகும் வழியிலா...?"
"ஆமாம்... நானும் என் ரூமை காலி பண்ணி விட்டுத் திங்க்ஸை எடுத்துக் கொள்ள வேண்டுமே... அதனால் அங்கேயே போய் சாப்பாட்டை முடித்துக் கொண்டு கிளம்பலாம்."
அவளின் அபார்ட்மென்டை பூட்டி விட்டுக் கிளம்பினார்கள். பூஜா இரண்டு பெரிய பெட்டிகளும். ஒரு தோள்பையும் வைத்திருந்தாள். கௌதம் குனிந்து இரண்டு பெட்டிகளையும் தூக்கிக் கொண்டான்.
"ஐயோ... என்ன இது? நான் ஒன்றைத் தூக்கிக் கொள்கிறேன்" பூஜா பதறினாள்.
"பிரட்டை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு உன்னுடையது... இதைத் தூக்கும் பலம் உனக்கு இருக்காது... பேசாமல் வா..."
லிப்டில் நுழைந்து தரைத்தளத்தை அடைந்து கௌதமின் காரை அணுகினார்கள். டிக்கியைத் திறந்து பெட்டிகளை அடுக்கி விட்டு காரில் ஏறிக் கொண்டார்கள். கௌதம் தங்கியிருந்த ஹோட்டலை அடைந்தார்கள்.
"பெட்டிகள் காரிலேயே இருக்கட்டும்.. நீ வா..."
அவனது அறையை அடைந்ததும்,
"உட்கார்..." என்று சொல்லிவிட்டு போனை எடுத்து ரூம் சர்வீஸை அழைத்து உணவுக்கு ஆர்டர் கொடுத்தான்.
"சாப்பாடு வருவதற்குள் குளித்து விட்டு வந்து விடுகிறேன்.." என்றபடி குளியலறைக்குள் புகுந்தான்.
அவன் குளித்து விட்டு வரவும் உணவு வரவும் சரியாக இருந்தது. அவள் பக்கம் ஒரு தட்டை நகற்றி,
"சாப்பிடு..." என்று சொல்லிவிட்டு தானும் சாப்பிட்டான். பூஜாவிற்கு அவனது செய்கை எல்லாமே ஆச்சர்யத்தைத் தந்தது.. அவள் மேல் எல்லையில்லாத வெறுப்பும் கோபமும் அவனுக்கு உண்டு. அவள் அவனது வாழ்வைப் பாதித்தவள்... அவனது தாயை மரணப் படுக்கையில் தள்ளியவள்.. இருந்த  போதும் அவளது சுமையை அவன் தூக்கிக் கொள்கிறான்... அவளைச் சாப்பிட வைத்து விட்டு அவன் சாப்பிடுகிறான். இந்தப் பொறுப்புணர்ச்சியை என்னவென்று சொல்வது?
ரூம்பாயை அழைத்துச் சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டு கௌதம் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். ரிசப்ஷனில் ரூம் சாவியை ஒப்படைத்து விட்டுக் காரில் ஏறும்போது பின் பக்கக் கதவைத் திறந்து விட்டு,
"ஏறு..." என்றான் கௌதம்.
பூஜா கேள்வியாய் பார்த்தபடி ஏறி அமர அருகே தானும் அமர்ந்தவன், "இது டிராவல்ஸ் கம்பெனி ஒன்றின் கார்..." என்றான்.. அவளது பார்வைக்கு பதிலாய்.
"காலையில் நீங்கள்தானே ஓட்டிக்கொண்டு வந்தீர்கள்?"
"எப்போதுமே அப்டித்தான். இங்கு இருக்கும் வரை கார் என் வசம் இருக்கும். செல்ப் டிரைவிங்தான். இப்போது நாம் ஊர் திரும்ப வேண்டும். ஏர்போட்டில் காரை ஹேண்ட் ஓவர் பண்ணிவிட்டு அக்கவுண்டை செட்டில் பண்ண வேண்டும்."
'நாம் ஊர் திரும்ப வேண்டுமா?' கேள்வி மனதில் எழ,
"இது என் ஊர்..." என்றாள் பூஜா.
"அதை நீ திரும்பி வந்தால் சொல்..."
"வாட் டு யூ மீன்?"
"ஐ மீன் வாட் ஐ ஸே..."
 "நான் வருவது தற்காலிகமாகத்தான்..."
"முடிவு எடுக்கும் உரிமை இப்போது உனக்கு இல்லை."
"என் உரிமையை நிர்ணயிக்க நீங்கள் யார்..?"
"உன் கணவன்..."
பூஜா அடுத்துப் பேச வாய் திறந்தபோது கௌதமின் பார்வை டிரைவரைக் காட்டி அவளை எச்சரித்தன. பூஜா மௌனமாய் சாலையை வெறித்தாள். ஏர்போர்ட் வந்து விட்டது. டிரைவர் இறங்கி பெட்டிகளை இறக்கி வைத்தான். அவனுக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பிய கௌதம் பூஜா குனிந்து பெட்டிகளை எடுக்கப் போனபோது அவளைத் தடுத்து தனது சிறு பெட்டியை அவளிடம் கொடுத்துவிட்டுப் பெரிய பெட்டிகள் இரண்டையும் தான் எடுத்துக் கொண்டான். பூஜா அசையாமல் நின்றாள். கௌதம் கேள்வியாய் அவளை நோக்கினான்.




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,27,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில்.. -7
ஏதோ ஒரு நதியில்.. -7
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoorunathiyil-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoorunathiyil-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy