ஏதோ ஒரு நதியில்...-1

முத்துலட்சுமி ராகவன் எழுதிய ஏதோ ஒரு நதியில்... 1 ' திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு     திருப்பம் நேருமடா... உந்தன் ...


முத்துலட்சுமி ராகவன் எழுதிய
ஏதோ ஒரு நதியில்...

1

'திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு
    திருப்பம் நேருமடா... உந்தன்
    விருப்பம் கூடுமடா...'
சத்தம் போட்டுப் பாடிக் கொண்டே மில்லிற்குள் நுழைந்தார் ராமாமிர்தம். அவருக்குப் பின்னாலேயே வந்த வின்சென்ட் சிரித்துக் கொண்டே,
"அக்கவுண்ட்ன்ட் சார் வாயைத் திறந்தாலே பெருமாள் பாட்டுத்தான்..." என்றார்.
"நீர் மட்டும் என்னவாம்... அவன் பாட்டைத்தானே தினமும் பாடுகிறீர்..." என்று கூறியவாறு டேபிளின் மேலிருந்த பைல்களை ஒழுங்குபடுத்திய ராமாமிர்தம் கம்ப்யூட்டரை தொட்டு வணங்கிவிட்டு சேரில் அமர்ந்தார்.
அவரது செயல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தன் சீட்டில் அமர்ந்த வின்சென்ட், "சார்.. நீங்கள் பேசுவதும் வினோதமாய் இருக்கிறது.... செய்வதும் வினோதமாய் இருக்கிறது" என்றார்.
"அப்படி என்ன வினோதத்தைக் கண்டு விட்டீர்கள் ஓய்..."
"நான் கிறிஸ்துவன்... நான் பாடுவது கர்த்தரின் ஸ்தோத்திரப் பாட்டு. நீங்கள் என்னவோ உங்களுடைய பெருமாள் பாட்டை நான் தினமும் பாடுகிறேன் என்கிறீர்களே.. அதையும்தான் சொல்கிறேன்.. நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு வாயில் பெருமாள் பாட்டைப் பாடிக் கொண்டு கம்ப்யூட்டரைத் தொட்டுக் கும்பிடுகிறீர்களே... இதையும்தான் சொல்கிறேன். இரண்டுமே வினோதம்தானே..."
"வின்சென்ட்... உங்களுடைய கர்த்ரும் மாட்டுக் கொட்டிலில் பிறந்தவர். எங்கள் பெருமாளும் மாடுகள். மேய்க்கும் யாதவகுலத்தில் பிறந்தவர். கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். நாம் நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப அவரை ஏசு என்றும்.. அல்லா என்றும்.. பெருமாள் என்றும் வணங்குகிறோம். முஸ்லீம்கள் இறைவனை உருவமில்லாதவன் என்கிறார்கள்.. எங்கள் இந்துக்களும் சிவபெருமானை ஜோதி வடிவானவர் என்றும் ஆதி அந்தமுமில்லாதவன் என்றும் சொல்லுகிறார்கள். அதனால்தான் சொல்கிறேன்.. உங்களுக்கு ஏசு என்றால்.. அவரே எனக்குப் பெருமாள்."
"முதலாம் வினோதத்திற்கு பதில் வந்து விட்டது. இரண்டாம் வினோதத்திற்கு இன்னும் பதில் வரவில்லையே..."
"என் பெருமாள் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? செய்யும் தொழிலே தெய்வன்னு சொல்லியிருக்கிறார் கம்ப்யூட்டரில்தான் நாம் முழு வேலைகளையும் செய்கிறோம். அது சுணங்கிக் கொண்டு விட்டால் நம்ம கதி என்ன ஆகிறது? அதனால்தான் அதைத் தொட்டு வணங்கினேன்."
"நீங்க எதைச் சொன்னாலும் கரெக்டா இருக்கு.. எதைச் செய்தாலும் அதில் ஓர் அர்த்தமும் இருக்கு.. சும்மாவா எம்.டி. உங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்..?" வின்சென்ட் மெச்சுதலாய் கூறியவாறுதன் முன்னாலிருந்த கம்ப்யூட்டரை உயரிப்பித்தார்.
"பாவம்.. அவரை ஏன் ஓய்... என்னைப் பாராட்டுகிறேன்னு பேச்சில் இழுக்கிறீர்.." என்றபடி ஃபைலை புரட்ட ஆரம்பித்தார் ராமாமிர்தம்.
"அவர் பாவமா? விளையாடுகிறீர்களா சார்..? கோயம்புத்தூரில் பெரிய துணி மில்லுக்கு ஓனர்.. ஊட்டியில் எஸ்டேட்டுக்குச் சொந்தக்காரர்.. பொள்ளாச்சி பக்கம் ஏக்கரா கணக்கில் பண்ணை நிலம். பால் பண்ணை... அவருடைய சொத்துகளின் கணக்கு அவருக்கே சரியாய்த் தெரியுமோ என்னவோ... அவ்வளவு பெரிய பணக்காரரைப் பாவம் என்கிறீர்களே சார்.. குட்ஜோக்.."
"என்ன சொத்து சுகம் இருந்து என்ன செய்ய வின்சென்ட்.. வாழ்க்கையில் நிம்மதி வேண்டாமா?
போன வருசம் வரைக்கும் சந்தோசமாய் துள்ளித் திரிந்த மனுசன்... இந்த ஒரு வருசமாய் படாதபாடு படுகிறாரே... இதை எங்கே போய் சொல்ல..? என் பெருமாளிடம்தான் சொல்ல வேண்டும்.. அதைத்தான் தினமும் செய்து கொண்டிருக்கிறேன்."
"அவருடைய அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்கு சார்?"
"இன்னும் சரியாகவில்லை... வின்சென்ட்... நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகிக் கொண்டுதான் வருகிறதாம்... ம்ம்.. எப்படியிருந்த மனுஷி...! உங்களுக்குத் தெரியாது வின்சென்ட்... நம்ம எம்.டி.யின் அப்பா காலத்தில்தான் நான் இங்கே வேலைக்குச் சேர்ந்தேன். மனுசன்னா அப்படித்தான் இருக்கணும் குணத்தில் தங்கம். நம்ம எம். டி. அப்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஹார்ட் அட்டாக்குன்னு விழுந்த எம்.டி.யோட அப்பா எழுந்திருக்கவே இல்லை.. அப்போதுதான் நம்ம வசுந்தராம்மா.. நம்ம எம்.டி. யுடைய அம்மா... கம்பெனி பொறுப்பை எடுத்துக்கிட்டாங்க... மகன் வெளிநாட்டில் இருந்து வரும் வரைக்கும் அவங்கதான் இத்தனை சொத்தையும் கட்டிக் காத்தாங்க... அப்பேர்ப்பட்ட இரும்பு மனுஷி. இன்றைக்கு கண் திறக்காமல் கிடக்கிறாங்க...."
"எல்லாவற்றுக்கும் காரணம்..." வின்சென்ட் முடிக்காமல் நிறுத்தினார்.
"பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதற்கு வின்சென்ட்.? நம்ம எம்.டி. யுடைய போதாத காலம்... இப்படி கிடந்து தவிக்கிறார். ம்ம்.. விடுங்க... நாம் நம் வேலையைப் பார்ப்போம்." ராமாமிர்தம் பேச்சை நிறுத்திவிட்டு வேலையில் ஆழ்ந்தார்.
டக்டக்கென்று ஷூ சத்தம் கேட்டதும் அந்த அலுவலகத்தில் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கம் அளவிற்கு நிசப்தம் நிலவியது.
"குட்மார்னிங் சார்... என்ற குரல்கள் வரிசையாய் ஒலிக்க, தலையை அசைத்து அதை அங்கீகரித்துக் கொண்டே வந்த கௌதம்... ஆறடி உயரத்திலிருந்தான். கோதுமை நிறம்.. கருமையான முடி... செதுக்கியது போன்ற நாசி.. கூர்மையான விழிகள்.. நிமிர்ந்த நேரான நடை.. மிகக் கம்பீரமான தோற்றம்... கௌதம்... எம்.பி.ஏ., மேனேஜிங் டைரக்டர்.. என்ற பெயர் பலகை பொறித்த அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று சுழல் நாற்காலியில் அமர்ந்தான்."
இன்டர்காமை அழுத்தி அவனது பி.ஏ.வை உள்ளே அழைத்தான்.
"யெஸ் சார்..." என்றபடி பேனாவும் குறிப்பேடுமாக அவன் எதிரே வந்து நின்றாள் பாமா. அவனது பர்சனல் செரட்டரி.
"இன்றைக்கு என்ன எங்கேஜ்மென்ட்ஸ்."
அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டே கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து மெயில் பாக்ஸை ஆராய்ந்தான். அதிலிருந்த முக்கியமான கடிதங்களுக்கு உடனே பதில் மெயில் அனுப்பச் சொன்னான். அவள் சென்றதும் அன்று அவன் கையெழுத்திட வேண்டிய பைல்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். அவனது செல்போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். பி.எஸ்.ஜி. மருத்துவ மனையின் நம்பர். அவசரமாய் பேசினான். அவனது அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்த நர்ஸ் பேசினாள்.
"உங்கள் மதருக்கு நிலைமை சீரியஸாய் இருக்கிறது. உடனே வாங்க சார்..."
"இதோ கிளம்பி விட்டேன்."
செல்போனை அணைத்துவிட்டு அவசரமாய் பாமாவை அழைத்தான்.
"மிஸ் பாமா... நான் ஹாஸ்பிடல் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.. ஆபீஸில் என்ன அர்ஜென்ட் மேட்டரென்றாலும் என்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். மிக முக்கியமானவைகளை ராமாமிர்தம் சாரிடம் சொல்லி ஹேண்டில் பண்ணச் சொல்லுங்கள்."
"ஓ.கே. சார்..."
அவன் வேகமாய் ஆபீஸை விட்டு வெளியேறினான்.
மிக நீண்டு பரந்திருந்த பி.எஸ்.ஜி மருத்துவமனை ஒரு ஊரைப் போல் தனியாக இயங்கிக் கொண்டிருந்தது. அதன் சுற்று மதில் சுவர் ஓர் தலைநகரத்தின் கோட்டை சுவர் போல் உயர்ந்து வலுவாக நீண்டு சென்றது. அதன் பிரதான வாயிலுக்குள் கார்கள் போய்க் கொண்டும்  வந்து கொண்டும் இருந்தன. பிரதான சாலையிலிருந்து மருத்துவமனை வளாகத்திற்குள் மக்களை அழைத்துச் செல்ல மருத்துவமனைக்குச் சொந்தமான இலவச வேன்கள் இயங்கிக் கொண்டிருந்தன. எங்கும் சுத்தம்... எதிலும் சுத்தம்... மருத்துவமனைக்குள் செல்லும் சாலையின் ஓரங்களிலும் சரி.... ஆங்காங்கே தனித் தனியாய், பிரமாண்டமாய் இருக்கும் கட்டிடங்களின் முன்னாலும் சரி... மரங்களும்... பூச்செடிகளும் வளர்ந்து நின்று... அது மருத்துவமனையா.. இல்லை பூங்காவா என்று சந்தேகம் கொள்ள வைத்தன.
அந்தப் பரந்து விரிந்த மருத்துவமனையின் உள்ளேயிருந்த கட்டிடங்களில் அவசர சிகிச்சை பெறும் நோயாளிகள் இருந்த கட்டிடத்தில் ஒரு  அறையில் கட்டிலில் வசுந்தரா படுத்திருந்தாள். அவள் பக்கத்தில் சிந்தாமணி நின்று கொண்டிருந்தாள்.
"சிந்தா... கௌதம் எங்கே..." வசுந்தரா தளர்வான குரலில் கேட்டாள்.
"நர்ஸ் போன் பண்ணியிருக்கு அண்ணி. தம்பி வெரசா வந்துரும்.. நீங்கோ கவலைப்படாதேங்கோ அண்ணி.." சிந்தாமணி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"நான் கவலைப்படவென்று பிறப்பெடுத்த பிறவி. கவலைப்படாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? என்னைப் பெத்தவங்க பொள்ளாச்சியில் பெயர் பெற்ற பணக்காரருக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்கள். அவர் ஊரில் உள்ள மற்ற புருசன்கள் போல் இல்லாமல் வருசக் கணக்கில் என்னைக் காதலித்தவர் போல் என் மேல் உயிரை வைத்திருந்தார். கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றினார். ஒற்றை மகன். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தான். நெஞ்சு வலின்னு விழுந்தவர் கண் சிமிட்டும் நேரத்திற்குள் என்னை விட்டுப் போய் விட்டார்... உட்கார்ந்து அழக்கூட எனக்கு நேரமில்லை. என் மகன் வரும் வரை அவனின் சொத்துக்களைக் கட்டிக் காக்க வேண்டும்.. என் மகனும் வந்தான்... என்னைத் தரையில் விடாமல் உள்ளங்கையில் தாங்கிக் கொண்டான்..."
"ஏனுங்கோ அண்ணி... உன்ர புருசன் மாதிரி உலகத்தில் யாரு இருந்தா? ஏன் உன்ர புள்ளை மாதிரி தான் யாரு இருக்கா? உங்களுக்கு ஒரு கொறையும் இல்லை அண்ணி. மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க... தம்பி இப்ப வந்திரும். கண்ணை செத்த மூடிப் படுஙகோ..."
"எனக்கா குறை இல்லை? குறையில்லை... குறையில்லைன்னு சொல்லிச் சொல்லி வாழ்ந்து எல்லாம் குறையாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறேனே சிந்தா... என்றைக்கு என் புருசன் என்னை விட்டுட்டுப் போனாரோ அன்றைக்கே நான் அவர் பின்னாலேயே போயிப்பேன். கடமை என்னைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது... அதையும் சரிவரச் செய்ய முடியவில்லைன்னு என் மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது சிந்தா...."
"சும்மா உன்ர மனசைப் போட்டு ஒழப்பிக்காதேங்கோ அண்ணி... கடவுள் இருக்கிறார். அவர் நல்ல வழியை விடுவார்..."
"விடவில்லையே.. சிந்தா... என் வழியை மட்டும் அடைத்து விட்டாரே."
சிந்தாமணி கவலையுடன் அறை வாசலைப் பார்த்துக் கொண்டாள். இந்த கௌதம் சீக்கரம் வந்து விட்டால் தேவலாம். எப்போதையும் விட நேற்று இரவிலிருந்து வசுந்தராவின் புலம்பல் அதிகமாகி உள்ளது. காய்ச்சல் சிறிது கூடத் தணியவில்லை. தூக்க மாத்திரை கொடுத்தும் தூங்க வைக்க முடியவில்லை. ஏற்கனவே கை கால்களை அசைக்க முடியாமல் படுக்கையில் விழுந்து விட்டவள்... படும் வேதனையைப் பார்க்க சகிக்கவில்லை.
சிந்தாமணி கண்ணீர் தளும்ப வசுந்தராவைப் பார்த்தாள். அவளது ஒன்று விட்ட அண்ணன் நீலமேகத்தை மணந்து பொள்ளாச்சியில் வாழ வந்தவள். அவளது அழகும்... அறிவும்... அவர்களது வட்டாரத்தில் அதிசயமாய் பேசப்பட்ட ஒன்று...
"கோயம்புத்தூர் வட்டாரத்தை விட்டு மதுரைப் பக்கம் போய் பொண்ணு கட்டுகிறாங்களேன்னு நினைச்சேன். பொண்ணு இம்புட்டு அழகா அம்சவதியாய் இருக்காளே.... கொங்கு தேசத்தில் பிறந்த நம்ம நீலமேகம் அண்ணனுக்கு பெரியப்பா தெற்குச் சீமையிலே போய் பொண்ணு எடுக்கும்போது எனக்குக் கோபம் வந்தது.. இப்ப... இம்புட்டு அழகோடு என்ர அண்ணி இருக்கறதைப் பார்க்கிறப்போ வந்த கோபம் பஞ்சாய் பறந்துடுச்சு..."
முதன் முதலில் வசுந்தராவைப் பார்த்தபோது சிந்தாமணி கூறிய வார்த்தைகiள் இவை. அப்பேற்ப்பட்ட அழகி.. இன்று சிறகொடிந்த கிளியாகப் படுக்கையில் கிடக்கிறாள்.
கௌதம் புயல்போல் அறைக்குள் வந்தான். சிந்தாமணி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
"அத்தை... அம்மாவுக்கு என்ன?"
"புதுசாய் என்ன வந்திருக்கு மருமகனே... எப்போதும் இருப்பதுதான்... இன்னைக்குன்னு அதிகமாய் படுத்துது.. நேத்து ராத்திரியில் ஆரம்பிச்ச காய்ச்சல் இன்னும் நிக்கலை... பத்தாக்குறைக்கு என்ர அண்ணிக்கு பழ செல்லாம் நினைவில் வருது... புலம்பித் தள்ளுது. என்னால் கண் கொண்டு என்ர அண்ணி படுற துயரத்தைப் பார்க்க முடியவில்லையப்பா... என்ன கொடுமைடா சாமி... என்ர அண்ணி என்ன பாவம் பண்ணுச்சு... அதை உசிரோடு
இந்த வதை வதைக்க அந்தக் கடவுளுக்கு எப்படித்தான் மனசு வருதோ தெரியலையே..." சிந்தாமணி கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டாள்.
"கௌதம்..."
தாயின் குரல் கேட்டதும் பசுவைத் தேடி ஓடும் கன்றாய் அவளது அருகில் ஓடி அமர்ந்தான் கௌதம். அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். உடல் அனலாய் கொதித்தது. தன் மெலிந்த விரல்களால் மகனின் கைபற்றிக் கொண்டாள் வசுந்தரா.
"கௌதம்... கௌதம்..."
"என்னம்மா..."
"இல்லை... ஒன்றும் இல்லை...."
"எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கம்மா.."
"அது... அது வந்து... கௌதம்."
"சொல்லுங்க அம்மா..."
வசுந்தரா சொல்ல முடியாமல் தவித்தாள். சிந்தாமணி கௌதமின் தோள் தொட்டு எழுப்பினாள்.
"என்ன அத்தை...?"
"டாக்டர் நீ வந்தவுடன் அவரைப் பார்க்க வரச் சொன்னார். ஒரு நடை போய் பார்த்து விட்டு வந்து விடு..."
"அத்தை.. அம்மா... ஏதோ சொல்லணும்னு நினைக்கிறாங்க..."
"நீ போ கௌதம்... டாக்டரைப் போய் பார்... அப்புறம் வந்து என்ர அண்ணியோட பேசு... போப்பா..."
கௌதம் அறையை விட்டு வெளியே வந்து நீண்ட காரிடாரின் மறுமுனையில் இருந்த டாக்டரின் அறையை நோக்கி நடந்தான். அந்த மருத்துவமனை வளாகத்தில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்த வெள்ளை கோட்டும் ஸ்டெதஸ்கோப்புமாய் இருந்த ஆண்.. பெண் டாக்டர்கள்... வெள்ளைச் சீருடையில் இருந்த நர்ஸ்கள் நோயாளிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் யாருமே கௌதமின் புத்தியில் பதியவில்லை. அவன் நினைவில் நின்றது படுக்கையில் கிடந்த தாயின் தோற்றம் மட்டும் தான்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,3,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில்...-1
ஏதோ ஒரு நதியில்...-1
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAww/Jyyw94kfZeIPam-81s1z0SiNmlrSaQi_ACLcBGAsYHQ/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAww/Jyyw94kfZeIPam-81s1z0SiNmlrSaQi_ACLcBGAsYHQ/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoorunathiyil-1.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoorunathiyil-1.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy