ஏதோ ஒரு நதியில். -5

5 பெண்ணுக்கு நலங்கு வைத்தார்கள். அப்போதுதான் கௌதம் பூஜாவை முதன் முறையாகப் பார்த்தான். குளிந்த தலை நிமிராமல் அமைதியாய் நாற்காலியில் அம...


5

பெண்ணுக்கு நலங்கு வைத்தார்கள். அப்போதுதான் கௌதம் பூஜாவை முதன் முறையாகப் பார்த்தான். குளிந்த தலை நிமிராமல் அமைதியாய் நாற்காலியில் அமர்ந்திருந்தவளுக்கு எல்லோரும் நலங்கு வைத்து கன்னத்தில் சந்தனம் தொட்டு வைத்து விட்டுச் சென்றார்கள். பூஜா மனதிற்குள் புயலை அடக்கிக்
கொண்டு வெளியே அமைதியாய் எனக்கென்ன என்று அமர்ந்திருப்பது தெரியாமல் அவளது அமைதியை அடக்கம் என்று பொருள் கொண்டான் கௌதம்.
ஏற்கனவே வந்தரா ஆசைப்பட்டவுடன் மும்பையில் ஒரு டிடெக்டிவ் ஏஜன்ஸி மூலம் பூஜாவைப் பற்றி விசாரித்தபோது அவனுக்குக் கிடைத்த ரிப்போர்ட் இப்படிக் கூறியது.
'பூஜா ஒரு நெருப்பு.. அவள் இயல்பானவள்.. விளம்பரத் தொழிலில் வெற்றி பெற்றவள்.. நேர்மையானவள்.'
அவனுக்கு அது போதுமானதாக இருந்தது. தாயின் தேர்வு வேறு. சம்மதம் சொன்னான். இப்போது திருமணப் பெண்ணாக அவள் தலை குனிந்து அமர்ந்திருந்ததைக் கண்டதும் அவனுக்குள் புதிதாய் ஒரு உணர்வு உருவானது. அவளையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்ன மாப்பிள்ளை... எங்க பெண்ணை இப்பவே விழுங்கி விடுவது போல் பார்க்கிறீங்க. நாளைக்குக் காலையிலேதான் கல்யாணம். மறந்து பெண் பின்னாலேயே போய் விடாதீங்க..." தண்டாயுதபாணி அவன் தோளில் தட்டிச் சிரித்தார்.
சமாளிக்கும் புன்னகையுடன் அவரைப் பார்த்தாலும் கௌதமின் விழிகள் மீண்டும் பூஜாவிடமே தாவின. அவளுக்கு நலங்கு முடிந்து அழைத்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.
'இந்த ஓர் இரவுதானே...' தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவனாய் கௌதம் படுக்கப் போனான். தூக்கம் வரவில்லை.
காலையில் மாப்பிள்ளையாய் மன மேடையில் அமர்ந்திருக்கும் போது அவளை மணமேடைக்கு அழைத்து வருவதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
'ஏன் நிமிர்ந்து பார்க்க மாட்டேன் என்கிறாள்... என்னதான் அல்ட்ரா மாடர்ன் யுவதியாக இருந்தாலும் இந்தியப் பெண்களுக்கே உரிய இயல்பான நாணம் இவளுக்கு இவ்வளவு இருக்கிறதா...?'
அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.. கௌதம் இயல்பாய் நகர்ந்து  அவளுடன் ஒட்டி அமர்ந்தான்... அவள் அதை உணர்ந்தாளோ என்னவோ.. அவளது உடலில் ஓர் நடுக்கம் பரவியதை கௌதமால் உணர முடிந்தது. கெட்டி மேளம் ஒலிக்க தாலியை எடுத்து பூஜாவின் கழுத்தில் கட்டினான் கௌதம். அவளது தளிர் விரல்களைப் பிடித்து அக்கினியை வலம் வரும்போது மெதுவாக அவளது விரல் தொட்டு அழுத்தினான். அவளது உடலில் மீண்டும் ஓர் அதிர்வு ஏற்பட்டதை அவனால் அறிய முடிந்தது.
திருமண மேடையை விட்டு இறங்கிய மணமக்கள் வசுந்தராவிடம் போய் ஆசீர்வாதம் வாங்கினார்கள். வசுந்தரா நெகிழ்வாய் மருமகளை அணைத்துக் கொண்டாள்.
'இந்த அம்மாள் இவ்வளவு பாசத்தைக் காட்ட வேண்டாமே...'
பூஜாவின் உள்ளம் தவித்தது. அவளால் இங்கே இருக்க முடியாது. அவள் ஏற்றுக் கொண்ட வேலைகளை முடிக்க குறைந்தது ஒரு வருடமாவது  ஆகும். விருப்பமில்லாத  திருமண உறவில் சிக்கி அடையாளமில்லாமல் தன்னை மாற்றிக் கொள்ள அவள் சிறிதளவும் விரும்பவில்லை.
பூஜா.. அங்கிருந்து கிளம்பி விட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை அறியாத விநாயகம்... தண்டாயுதபாணியிடம்மும் சிந்தாமணியிடமும் நிம்மதியாய் பேசிக் கொண்டிருந்தார்.
"என்னவோ மாமா... ஒரு வழியாய் கல்யாணம் முடிஞ்சிருச்சு. அம்மிணி ஊடால எதுவும் கிரித்துருவம் பண்ணிருமோன்னு மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக் கிட்டு இருந்துச்சு... நல்ல வேளையாய் அப்படி எதுவும் நடக்கவில்லை... இனிமேக்கொண்டு நாம நிம்மதியாய் கண் அசரலாம்... நேற்று ராத்திரி ஒரு பொட்டு கண்ணுறக்கம் இல்ல..."
"ஆமாம் சிந்தாமணி... இவ்வளவு பெரிய இடத்தில் அம்மிணிக்கு மாப்பிள்ளை அமைந்திருக்கு... எங்கே கூறு கெட்டத்தனமாய் கல்யாணத்திற்கு முன்னாலேயே மும்பைக்கு ஓடிப் போயிடுமோன்னு பயந்துக் கிட்டு வெளியே தெரியாமல் காவலுக்கு ஆள் போட்டு கண்காணித்துக்கிட்டு இருந்தேன். இனி அந்தப் பயலுகளை போகச் சொல்லி விடலாம் கல்யாணம் நல்லபடியாய் முடிஞ்சிருச்சு... இனி ஒரு பயமும் இல்லை."
"எனக்கும் அப்படித்தான் அண்ணா.. சிந்தாவுடைய அண்ணனின் குடும்பம். நல்ல மாதிரியான குடும்பம். நம்ப பொண்ணு அங்கே வாழ்க்கைப்பட்டுப் போனால் கடைசி வரை அருமை.. பெருமையாய் இருக்கும்... என்னதான் நாம் கோடீஸ்வரங்களா இருந்தாலும் அவங்களுக்கு நிகரில்லை.. இதைத் தெரியாம அம்மிணி இப்படி சண்டை போடுதேன்னு நினைச்சேன்.. இனி நிம்மதியாய் நாம நம்ம வேலைகளைப் பார்க்கலாம்.. ஒரு பயமுமில்லை..."
'பயமேயில்லை... பயமேயில்லை' என்று அவர்கள் பேசி முடித்துவிட்டு நண்பகல் விருந்தையுண்டு விட்டு கண் அயர்ந்த நேரத்தில் பூஜா திருமண மண்டபத்தை விட்டுக் கம்பி நீட்டியிருந்தாள். மாலை ரிசப்ஷனுக்கு அவளைத் தயார் செய்ய எல்லோரும் அவளைத் தேடிய போது மும்பை நோக்கி வானத்தில் பறந்து கொண்டிருந்தாள். மணமகளின் அறையில் கட்டிலின் மேலிருந்த கடிதத்தைக் கண்ட அழகு நிலையப் பெண்கள் அதை எடுத்துப் படித்துப் பார்த்துவிட அடுத்த நிமிடம் திருமண மண்டபத்தில் இருந்த அனைவருக்கும் விஷயம் பரவிவிட்டது.
'கல்யாணப் பொண்ணு ஓடிப் போயிட்டாளாம்...'
'கல்யாணத்தில் இஷ்டமில்லையாம்...'
'வேறு யாரு கூடவோ காதலாம்...'
'தாலியை அவிழ்த்து வைத்து விட்டுப் போயிட்டாளாம்...'
'வெளிநாட்டில் ஏற்கனவே அவளுக்கு கல்யாணம் ஆகி புருசன் இருக்கிறானாம்...'
செய்தி கண் காது... மூக்கு வைத்து உருமாறி சிறகடித்துப் பறந்தது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் கோயம்புத்தூர் முழுவதும் தகவல் ஒளிபரப்பப்பட்டது.
கௌதமின் செல்போனும்... வசுந்தராவின் செல்போனும் இடைவிடாது அலற... எல்லோரும் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வந்தது போல் வந்து வேடிக்கைப் பார்த்துவிட்டு திருமணத்தை விசாரிக்காமல்... துக்கம் விசாரித்து விட்டுச் சென்றனர்.
வசுந்தரா மயக்கமடைந்து விழுந்தாள்... அவளை உடனே மருத்துவமனையில் சேர்த்தார்கள்... சிந்தாமணி குடும்பத்தை மறந்து வசுந்தாவுடன் தங்கி விட்டாள்.
"என்னால்தானே என்ர அண்ணிக்கு இப்படி ஆகிப் போச்சு... நம்ம நாத்தனாரோட மச்சான் மகள்ன்னு நினைச்சுத்தானே என்ர அண்ணி நம்ம வீட்டில் பொண்ணு கட்டுச்சு... என்ர அண்ணியை இந்தக் கதிக்கு ஆளாக்கிய பாவி நான்தான்.. இதுக்கு பரிகாரமும் நான்தான் செய்யோணும்.. எப்ப என்ர அண்ணிக்கு குணம் ஆகுதோஅன்னைக்கு நான் நம்ம வீட்டுக்கு வருகிறேன்..." தண்டாயுதபாணியின் முகத்தைப் பார்த்துக் கூறினவள் விநாயகத்திடம் பேசவேயில்லை.
அவள் மட்டுமல்ல... தண்டாயுதபாணியும் அண்ணனுடன் பேசுவதைத் தவிர்த்தார்.. விநாயகம் சோர்ந்து போய் பொள்ளாச்சியிலிருந்த அவரின் வீட்டோடு அடங்கி விட்டார். மகளிடம் போனில் பேசவுமில்லை. பூஜாவும் அதன் பின்னால் அவரோடு தொடர்பு கொள்ளவும் இல்லை.
கௌதம் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு வேலையில் மூழ்கினான். வசுந்தராவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமானதே ஒழிய தேறவே இல்லை. திருமண மண்டபத்தில் இருந்து மருத்துவமனைக்குச் சென்றவள் வீடு திரும்ப முடியாமல் அவளது உடல் நலம் சீர் கேடடைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தவளை நாள்தோறும் போய் பார்த்த கௌதமிடம் எதையோ சொல்லத் தவிப்பாள்...சொல்ல முடியாமல் திணறுவாள். தாயின் மன வேதனை புரிந்தும் குறைக்க வழியில்லாமல் கௌதம் நொந்து போனான்.
வசுந்தராவின் மனவேதனை தீராமல் அவளது நோய் குறையாது என்று டாக்டர் திட்டவட்டமாய் கூறிய பின்பு வேறு வழியில்லாமல் கௌதம் பூஜாவைத் தேடிக் கிளம்ப வேண்டியதாகி விட்டது. தாயை வீட்டிற்கு அழைத்து வந்து வாக்குறுதியும் அளித்து சிந்தாமணியின் மேற்பார்வையில் விட்டு விட்டு மும்பக்கு பறந்தான்.
ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டுக் குளித்து உடை மாற்றிவிட்டு அவளது அட்வர்டைஸிங் கம்பெனிக்குப் போனான். அவள் வேலையில் தீவிரமாக இருந்தாள். அவளது செயலாளரை அழைத்து அவளைப் பார்க்க வேண்டும் என்று சொன்னான்.
"மேடம் இஸ் பிஸி..." என்று பதில் வந்தது.
"ஸோ வாட்...? ஐ ஆம் வெயிட்டிங் பார் ஹெர்."
அவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.
அவனது நடையுடை பாவனை தோற்றம் இவற்றால் கவரப்பட்ட அந்தச் செயலாளர் அவனை சுவாரஸ்யமாய் பார்த்தாள். பதிலுக்கு அவன் கல்லையும்.. மண்ணையும் பார்ப்பது போல் அவளையும் ஓர் பார்வை பார்த்து வைத்தான்.
'இது வேலைக்கு ஆகாது' என்ற முடிவுடன் அவள் பூஜாவைத் தேடிப் போனாள். இவனது வருகையை அறிவித்தாள். பூஜா எரிச்சலுடன் இவனைத் திரும்பிப் பார்ப்பது தெரிந்தது... அலட்சியத்துடன் அவள் வேலையில் மூழ்கியும் விட்டாள்.
"மேடம் வேலை முடியாமல் யாரையும் பார்க்க முடியாதுன்னு சொல்லி விட்டாங்க..." செக்ரட்டரி வந்து கூறினாள்.
"இட்ஸ் ஓகே..." அவன் அமர்த்தலாய் பதில் கூறினான்.
வேலை முடிய மாலையாகி விட்டது... அதுவரை கௌதம் அமர்ந்திருந்த இடத்தை விட்டு அசையவில்லை.. பூஜாவின் நடமாட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணியமான உடை.. கண்டிப்பான முக பாவம்.. நேர்த்தியான படப்பிடிப்பு... சுறுசுறுப்பான செயல்பாடு என்று அவளின் அனைத்து அம்சங்களும் அவனைக் கவர்ந்தன. வேலை முடிந்து களைத்த முகத்துடன் அவனை அவள் எதிர்கொண்டபோது... ஏனோ அவள் மீது அவனுக்குக் கோபம் வரவில்லை.
"நீங்கள்... யார்?" என்று கேட்டாள்.
சொன்னான்... அவள் வாயடைத்துப் போய் அமர்ந்து விட்டாள். அவனை அவள் பார்த்ததில்லை... அன்று நடந்த ஒரு நாள் திருமண நிகழ்வுகளில்... எப்படி  அங்கிருந்த தப்பிப்பது என்ற சிந்தனையில் இருந்தவள் அவனது முகத்தைப் பார்த்து வைத்துக் கொள்ள மறந்தே போனாள்... அவன் அவளது கணவன் என்ற நினைவோ... உணர்வோ... அவள் மனதில் தோன்றியதே இல்லை.
இயல்பாய் ரத்தத்தில் ஊறிய தமிழக கலாச்சாரத்தின் பண்பாடு அவளது மனத்தை உறுத்த மாங்கல்யத்தை ஒரு செயினில் கோர்த்து சுடிதாருக்குள் மறைவாய் போட்டுக் கொண்டாள். அந்தச் செயின் கூட தாலிக்கொடி போன்ற அமைப்பில் இருக்காது. டிசைனாய் இருக்கும்.
இதுவரை அவள் திருமணம் ஆனவள் என்பது யாருக்கும் தெரியாது... அவளே மறந்து போனதை நினைவு படுத்திக் கொண்டு நிஜமாய் அவளது கணவன் எதிரே வந்து நிற்கிறான்.
'இப்போது என்ன செய்வது...?' பூஜா யோசித்தாள்.
'இத்தனை நாட்களாய் தேடி வராதவன் ஒரு வருடம் கழித்து எதற்கு வந்திருக்கிறான்...? ஒரு வேளை... விவகாரத்திற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்... என்பதால் ஒரு வருடம் காத்திருந்து... இப்போது டைவர்ஸ் கேட்டு வந்திருக்கிறானோ...'
நினைத்துப் பார்க்கும் போதே அவளுக்கு மனம் வலித்தது... ஆனாலும் என்ன செய்ய முடியும்? அவளுக்கு திருமண வாழ்வில் நாட்டமில்லையே. அப்பா கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்கலாம். இப்படி ஒரு திருமண பந்தத்தை அவள் மேல் அவளது விருப்பமில்லாமல் திணித்து விட்டாரே... விலகி ஓடி வர வேண்டிய கட்டாயம்.. விலகி வந்து விட்டாள்.. இந்தத் திருமண பந்தத்தில் சிக்குண்ட இன்னொரு மனிதனின் நிலையைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை... அவனை நினைத்துப் பார்த்ததே இல்லை என்கிற போது அவனது நிலையைப் பற்றி எங்கே அவள் யோசிப்பது?
அவன் மௌனமாக அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது எண்ண வோட்டத்தைப் படிப்பது போல அவனது விழிகள் அவளது விழிகளுக்குள் ஊடுருவின. அவர்களைச் சூழ்ந்திருந்த மௌனத்தின் கனத்தைத் தாங்க முடியாமல் பூஜாவே வாய் திறந்து அந்த மௌனத்தைக் கலைத்தாள்.
"ஐ ஆம் ஸாரி..."
"எதற்கு?"
அவனது கேள்வியில் ஒரு கோடி அர்த்தங்கள் புதைந்திருந்தன. பூஜா குற்றவாளியாய் தவித்தாள்.
"எல்லாவற்றிற்கும்..."
"ஊஹூம்...?'ஸாரி' என்ற ஒரே வார்த்தையில் அத்தனையும் சரியாகி விடுமா? அது அவ்வளவு எளிதா?"
"இல்லைதான்... ஆனால் நான் வேறு என்ன செய்ய முடியும்?"
"எவ்வளவோ... முடியும்... முதலில் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியும்... உயிர்... விலை மதிக்க முடியாத மனித உயிர்..."
அவள் பதறிப் போனாள்.
"அப்பா... அப்பாவிற்கு என்ன ஆனது?..."
அவன் கோபமாய் நகைத்தான்... இதுவரை அவனிடம் குடி. கொண்டிருந்த அமைதி பறந்து போயிருந்தது... அவன் முகத்தில் எல்லையற்ற வெறுப்பும்.... சினமும் தோன்றின.. ஓராண்டு காலமாய் அவனது மனதில் புதைந்திருந்த கேள்விகள் எரிமலையாய் வெடித்துச் சிதறின.




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில். -5
ஏதோ ஒரு நதியில். -5
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoornathiyil-5.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ethoornathiyil-5.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy