எண்ணியிருந்தது ஈடேற -186

186 எப்படி பயன்படுத்துவார்கள்.. ? உத்ரா கேட்ட கேள்வி சரிதானே.. பெற்ற மகள் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறாள்.. வெளிநாட்டில் இருப்...


186


எப்படி பயன்படுத்துவார்கள்..?
உத்ரா கேட்ட கேள்வி சரிதானே.. பெற்ற மகள் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறாள்.. வெளிநாட்டில் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.. அவள் பத்திரமாக இருக்கிறாளா இல்லையா என்ற பதைப்புடன் அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. நந்தினியைக் கண்ணால் காணும் வரை அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இயந்திரமாகத்தான் வலம் வருவார்கள்.. உண்ணுவதைப் போலப் பாவனை செய்து ஒரு களவளம் உணவோடு எழுந்து கொள்வார்கள்.. அது கூட அவர்கள் சாப்பிட்டால் தான் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் சாப்பிடுவார்கள் என்பதற்காக.. ஒருவருக்காக மற்றவர் நடிப்பார்கள்.. படுத்தால் உறக்கம் வராது.. விடியும் வரை ஆயிரம் யோசனைகளுடன் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருப்பார்கள்.. மற்றவர்கள் பார்க்கும் போது அயர்ந்து உறங்குவதைப் போலப் பாவனை செய்வார்கள்..
"உத்ரா.." நந்தினியின் கண்களில் கண்ணீர் வடிந்தது..
"நீ தப்பித்து ஓடி வந்திட்டடி.. துயரப் பெருங்கடலில் உன் குடும்பம் விழுந்திருக்கிறது.. நீந்தித் கரை சேர்ககிற வரைக்கும் அவங்க முகத்தில சிரிப்பு இருக்காதுடி நந்தினி.. நீ கேம்பஸ் இண்டர்வியூவில செலக்ட் ஆகி வெளிநாட்டில வேலை பார்க்கப் போயிருக்கிறதா ஊரில சொல்லி வைத்திருக்காங்களாம்.."
"நான்தான் கெஞ்சினேனேடி.. கதறினேனேடி.."
"ம்ப்ச்.. நீ என்ன செய்வ..? உன் மனதில எந்த அளவுக்கு வெறுப்பு இருந்ததுன்னா சூசைட் அட்டெம்ட் வரைக்கும் போவ.. துணிமணி, நகை நட்டுன்னு எல்லாத்திலயும் பெத்த பொண்ணோட மனசை அறிந்து வாங்கிக் கொடுக்கிற பெத்தவங்க வாழ்க்கையிலேயே அதி முக்கியமான லைஃப் பார்ட்னர் விசயத்தில மட்டும் நம்ம மனசை மதிக்க மாட்டேங்கிறாங்க பாரேன்.."
"நம்ம மனசுன்னு நீயும் என்கூடக் கூட்டணி போடற பார்த்தியா..? உன் அம்மா கோபக்காரங்களா இருந்தாலும் உனக்குப் பிடிச்ச மாப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க.. அப்பா கடைசி வரைக்கும் மனசு இரங்கலையேடி.."
"அதுக்குத்தான் அனுபவிக்கிறார்.."
"அப்படியும் நினைக்க முடியலையேடி.. அப்பாம்மா, நந்து எல்லாம் மனசு கஷ்டப்படுவாங்களேன்னு அழுகையழுகையாய் வருதுடி.. கில்ட்டியாய் இருக்குடி.."
"கில்ட்டியாய் ஃபீல் பண்ணாம இருந்திருக்கனும்னா நீ அந்த பெல்ட் மன்னனுக்கு கழுத்தை நீட்டியிருக்கனும்.."
"அடித்தே கொன்று விடுவேன்.."
"இதுக்குத்தான் வயநாட்டுக்கு வா, வான்னு வருந்தி வருந்தி அழைத்தியா..? உன்னை நம்பி வந்தேன் பாரு.."
"எதுக்குடி வந்த..? ஹனிமூன் கொண்டாட வந்தியா.. இல்லை பெல்ட் மன்னனோடு என்னை கோர்த்து விட வந்தியா..?"
"பொங்குதில்ல..? அப்புறம் என்ன அலுவலுக்கு கில்ட்டியாய் ஃபீல் பண்ற..? உன் அப்பா உச்சாணிக் கொம்பில ஏறி உட்கார்ந்துக்கிட்டு இறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சாரு.. உனக்கு வேற வழியில்ல.. வயநாட்டுக்கு வந்து சேர்ந்திருக்க.. வந்த இடத்தில உன் மனசுக்குப் பிடிச்ச மணாளனையும் மீட் பண்ணிட்ட.. அவர் கழுத்தில மாலை சூட என்ன வழின்னு யோசிப்பாளா.. அதை விட்டுட்டு என்னென்னத்தையோ பேசிக்கிட்டு இருக்கா.. ஒன்னை மனசில வைத்துக்க நந்தினி.. நீ டிராவல் பண்ண ஆரம்பித்திருக்கிறது ஒரு வழிப் பாதையில.. திரும்ப நினைச்சா உனக்குத்தான் கஷ்டம்.."
"திரும்பனும்னு யாருடி நினைச்சது.."
"அதில தெளிவா இரு.. நடந்த எதையும் உன்னால மாத்த முடியாது நந்தினி.. இனி நடக்கப் போகிறதை நல்லதா நடத்திக் காட்டு.. அதில்தான் உன் குடும்பத்தோட சந்தோசமே அடங்கியிருக்கு.."
"உண்மைதான் உத்ரா.."
"நீ வாங்கி வைத்திருக்கிற இந்த கிப்டையெல்லாம் நான் வாங்கிக் கொடுத்ததா உன் ஃபேமிலியிடம் கொடுத்து விடுவேன்.. என்னால் அதைச் செய்ய முடியும்தான்.. பட்.. அவங்க இதையெல்லாம் மூலையில் தான் தூக்கிப் போடுவாங்க நந்தினி.. நீ செஞ்சிக்கு வந்து அங்கிருந்து தப்பிப் போயிட்டங்கிற கோபம் அவங்க அடி மனசில இருக்கத்தான் செய்யும்.. அதை குத்தம்ன்னு சொல்லவும் முடியாது.. நான் கிப்டா கொடுக்கிறதை கர்ட்டசிக்காக அவங்க வாங்கிக்கிட்டு போகிற போக்கில தூக்கி எறிஞ்சுட்டுப் போனாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல.."
மேகநாதன் அப்படிச் செய்யக் கூடியவர்தான் என்பதில் நந்தினி தலையை ஆட்டி ஆமோதித்தாள்..
"இப்பச் சொல்லு.. நான் என்ன செய்யட்டும்..?"
"வேண்டாம் உத்ரா.. இந்த கிப்ட்டெல்லாம் என்கிட்டேயே இருக்கட்டும்.. என் குடும்பத்தோட நான் ஒன்று சேர்கிறப்ப ஒட்டு மொத்தமா சேர்த்து வைச்சு அத்தனை கிப்டையும் கொடுத்துக்குவேன்.."
"அஃது.."
உத்ரா நந்தினியின் நெற்றியில் செல்லமாக முட்டினாள்.. தோழிகள் இருவரும் சற்று நேரம் கதை பேசினார்கள்.. ரவிச்சந்திரனின் மீது நந்தினிக்கு எப்போது காதல் வந்தது என்று உத்ரா கேட்டாள்..
"நீ எப்படியெப்படிக் கேட்டாலும்.. திரும்பத் திரும்ப விசாரித்தாலும் என் பதில் ஒன்னே ஒன்னுதான்.."
"என்னத்தச் சொல்லித் தொலைக்கப் போகிற.. தெரியலைடின்னு சொல்லுவ.."
"அஃதே.."
தோழிகள் இருவரும் கலகலத்துச் சிரித்தார்கள்.. வினித் எழுந்து விடுவான் என்ற நினைவு வந்து உத்ரா கிளம்பிப் போனாள்.. மனதில் இருந்த ரகசிய உணர்வுகளைத் தோழியிடம் பகிர்ந்து கொண்ட சந்தோசத்துடன் நந்தினி கதவை அடைத்து விட்டுக் குளிக்கப் போனாள்..
டைனிங் ஹாலில் அனைவரும் சந்தித்துக் கொண்டார்கள்.. வினித் சங்கடமாக உணராமல்
இருக்க வேண்டுமே என்று நந்தினிக்குக் கவலையாக இருந்தது.. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் இமைகளைச் சுருக்கி 'என்ன'வென்று ரகசிய சமிக்ஞையில் வினவினான்.. நந்தினிக்கு அது பிடித்திருந்தது.. அவளுடைய முக பாவனையை வைத்தே அவளுடைய மனதில் ஏதோ சஞ்சலம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட்ட அவனது அக்கறை பிடித்திருந்தது.. தன்னை மகாராணியாக உணர்ந்தாள்..
வினித், உத்ரா பக்கமாக அவள் கண்காட்டினாள்.. அவர்களுக்கு என்ன என்று விழிகளாலேயே வினவினான் ரவிச்சந்திரன்.. டைனிங் ஹாலைச் சுற்றி வலம் வந்து ரவிச்சந்திரனிடம் நிலைத்தது அவள் பார்வை.. அங்கிருந்தவர்களால் வினித், உத்ராவின் மனம் புண்பட்டு விடுமோ என்று அவள் அஞ்சுவதைப் புரிந்து கொண்டவன் இமைகளை மூடித் திறந்து நான் பார்த்துக் கொள்கிறேன் எனும் விதமாய் சமிக்ஞை செய்தான்..
'அப்பாடா..' நிம்மதியானால் நந்தினி..
அவளுடைய இரும்புக்கை மாயாவி சொன்னதை செய்யக் கூடியவன்.. வாக்களித்ததை நிறைவேற்றுபவன்.. அவன் பாதுகாவலில் வினித்தும் உத்ராவும் இருக்கும் போது அவள் எதற்காக மனதைப் போட்டு உழட்டிக் கொள்ள வேண்டும்..? அரண்மனையில் காலடி வைத்ததுமே அவன் அவளுக்கு இப்போது ரகசிய சமிக்ஞை செய்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இமைகளை மூடித் திறந்ததைப் போல இமைகளை மூடித் திறந்து விட்டானே.. அப்புறமும் நந்தினி கவலை கொள்ளலாமா..?
மனதில் நிரம்பிய தைரியத்துடன் விழிகளை உயர்த்திப் பார்த்தாள் நந்தினி.. செவ்வரி ஓடிய கண்களுடன் யோகானந்தன் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்..
அவ்வளவுதான் நந்தினியின் தைரியம் காணாமல் போய் விட்டது..
'கடவுளே..! ஈ மனுசன் இந்த முழி முழிக்கிறானே..'
யோகானந்தன் அவளை மட்டுமா முறைத்தார்..? என்னவோ அவரின் சொத்தை கொள்ளையடிக்க வந்து விட்டவர்களை முறைப்பதைப் போல வினித்தையும், உத்ராவையும் முறைத்துக் கொண்டிருந்தார்..
'இந்த மனுசனை வினித்தும், உத்ராவும் பார்க்காமல் இருக்க வேண்டுமே..'
கலவரமானாள் நந்தினி.. 'இரண்டு நாள்கள்.. இரண்டே நாள்கள்.. வினித்தும, உத்ராவும் அந்த அரண்மனையில் தங்கி இருக்கப் போகும் அந்த இரண்டு நாள்களும் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் நகர்ந்து வீட வேண்டும் கடவுளே..!'
மனதுக்குள் வேண்டுதலை வைத்துக் கொண்டிருக்கும் போதே இப்படியொரு
சூழலில் வசிக்கும் வீணாவும், ரம்யமாலினியும் எந்த அளவுக்கு சிரமங்களை அனுபவித்திருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது.. பாவம் அவர்கள் என்று மனது பரிதாபப் பட்டது..
ஆனானப்பட்ட ரவிச்சந்திரனின் அன்னையும், தங்கையும் முள்கள் நிரம்பிய இருக்கையில் அமர்வதைப் போன்ற அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருக் கிறார்களே.. இது அநியாயம் அல்லவா..?
அவந்திகாவின் குடும்பத்தைக் கண்டாலே ரவிச்சந்திரனுக்கு ஆகாமல் போனதற்கான காரணம் இதுதானோ..?
"ஓமனா.." வீணா அழைத்தாள்..
"அம்மே.." ஓடோடி வந்தாள் ஓமனா..
"வினித்தும், உத்ராவும் புதிதாக் கல்யாணமானவங்க.. நம்ம அரண்மனைக்கு விருந்துக்கு வந்திருக்கிறாங்க.. இவங்க இங்கே தங்கியிருக்கப் போகிற இந்த இரண்டு நாள்களிலும் இவங்களுக்குப் பிடித்ததைத்தான் சமைக்கனும்.. புரிந்ததா..?"
"மனசிலாயி அம்மே.."
ஓமனா வாயெல்லாம் பல்லாக தலையை ஆட்ட.. அஜந்தா நிமிர்ந்து யாழினியைப் பார்த்தாள்.. பார்த்தாயா என்று வினவிய பேத்தியின் பார்வையால் உசுப்பி விடப் பட்ட யாழினிப் பாட்டி..
"ஓமனா.." என்று அதட்டலாக அழைத்து ஏதோ பேசப் போனாள்..
'போச்சு.. ஃபைட் ஸ்டார்ட் ஆகப் போகுது..' பதட்டத்தில் நந்தினிக்கு உணவே உள்ளே இறங்க வில்லை..
உணவருந்தும் இடத்தில்தான் உள்வீட்டுப் போர் மூளும் என்ற வயநாட்டு அரண்மனையின் நியதிகளைப் பற்றி அறியாத வினித்தும் உத்ராவும் மலையாள வகை உணவுகளின் ருசியில் ஈர்க்கப்பட்டவர்களாக அவற்றை ஒருகை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. உணவை ஆராதிக்கும் நந்தினிதான் சாப்பிட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.. எப்போது கலவரம் வெடிக்குமோ என்று அவளுக்கப் பதக், பதக் என்று இருந்தது..
"அம்மே.." ஓமனா யாழினியிடம் விரைந்தாள்..
யாழினி எந்தத் தூண்டிலைப் போட்டு விலாங்கை இழுக்கப் போகிறாளோ என்று 'தடக், தடக்' என்ற இதயத்துடிப்புடன் நந்தினி தவித்துக் கொண்டிருக்க.. அருள்மொழிவர்மன் யாழினியைப் பேச விடாமல் குறுக்கே விழுந்து..
"அம்மைக்கு குழாய்புட்டு வேணுமல்லோ.." என்று ஓமனாவை திசை திருப்பினார்..
"ஞான் அங்ஙன பறஞ்ஞு..?" யாழினி திமிற..
"நிண்ட மனச ஞான் அறிஞ்ஞு..." என்று அருள்மொழிவர்மன் அவளை அடக்கி விட்டார்..
யாழினி வினயமாக எதையாவது சொல்வாள்.. அதைக் கொண்டு ஒன்றைப் பத்தாக்கி சண்டையை மூட்டி விடலாம் என்று கொக்கைப் போலக் காத்திருந்த அஜந்தாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. அருள்மொழிவர்மன் யாழினிப் பாட்டியை வாய் திறக்க விடவேயில்லை..
அப்படியிருந்தும் யாழினி விசும்ப முயற்சி செய்தால்தான்.. அருள்மொழிவர்மன் தாழ்ந்த குரலில் யாழினிப் பாட்டிவாயைத் திறந்தால் தான் கூறாமல் சன்யாசம் வாங்கிக் கொண்டு மேற்கு தொடர்ச்சி மலைகளில் தவம் பண்ணப் போய் விடுவதாகப் பயமுறுத்தி அவளது திருவாயை மூட வைத்து விட்டார்..
'இந்தக் கிழவியைக் கிழம் பேச விடாது போல இருக்கே..'
இதுதான் ஞான் அருள்மொழிவர்மனண்ட கொச்சு மோளாக்கும் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் அஜந்தா தன் தாத்தா பாட்டிக்குக் கொடுக்கும் மரியாதை..
யாழினியை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று தானே களம் இறங்க முடிவு செய்த அஜந்தா..
"மாமா.." என்று குரலை உயர்த்தினாள்..
வினித்தின் வேலையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்த ரவிவர்மன் ஆட்சேபப் பார்வையோடு அஜந்தாவின் பக்கமாகத் திரும்பி முறைத்தார்... அஜந்தாவுக்கே உடல் தூக்கிப் போட்டு விட்டது... ரவிவர்மன் தங்கையிடமும் தங்கையின் பிள்ளைகளிடமும் முறைப்பாய் பேசுபவரல்ல.. அபராஜிதன் ரம்யமாலினியிடம் வம்பு செய்ததைக் கேள்விப் பட்ட போதுதான் ரௌத்ரமானார்.. அபராஜிதனை வாங்கு வாங்கு என ரவிச்சந்திரன் தூக்கிப் போட்டு மிதித்ததைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்து விட்டு தன் பங்குக்கு நான்கு அப்பு அப்பினார்..
அஜந்தாவிடம் கோப முகத்தைக் காட்டியதில்லை.. அந்த தைரியத்தினால்தான் அவரிடம் உத்ராவைக் குறை சொல்வதைப் போல கலகத்தை ஆரம்பிக்க முடிவு செய்து குரலை உயர்த்தினாள் அஜந்தா..
உத்ரா அஜந்தாவிடம் மரியாதை குறைவாய் பேசினாள் என்ற பிரச்னையைக் கிளப்பினால் உத்ரா சங்கடப்படுவாள்.. அங்கிருக்கப் பிடிக்காமல் உடனடியாக ஊருக்குக் கிளம்பினாலும் கிளம்பி விடலாம்.. அப்படி அவள் கிளம்பி விட்டால் பார்த்தாயா உன் தோழியை
விரட்டி விட்டேன்.. உன்னை விரட்ட எனக்கு எவ்வளவு நேரமாகும் என்று நந்தினியிடம் சவால் விடலாம்.. அப்படிச் சொடக்குப் போட்டுச் சவால் விட வேண்டும் என்பதுதான் அஜந்தாவின் வன்மம்..
அதற்கு இடம் கொடுக்காமல் தங்கையின் மகளைப் பார்வையிலேயே கண்டித்தார் ரவிவர்மன்..








Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -186
எண்ணியிருந்தது ஈடேற -186
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-186.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-186.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy