எண்ணியிருந்தது ஈடேற -175

175 முதல் முத்தம்..! அவன்மீது காதல் கொண்டு அவனது காதலியாய் அவள் அவனுக்குக் கொடுத்த முதல் முத்தம் அது.. தேனாக இனித்தது.. அவன் பெண்...


175


முதல் முத்தம்..!
அவன்மீது காதல் கொண்டு அவனது காதலியாய் அவள் அவனுக்குக் கொடுத்த முதல் முத்தம் அது.. தேனாக இனித்தது.. அவன் பெண்களை அறிந்தவன்தான்.. காதலை அறிந்தவனல்ல.. காதலியையும் அறிந்தவனல்ல..  நந்தினியை அறிந்த பின்னால் காமம் இல்லாத காதல் என்றால் என்ன என்பதை அவன் அறிந்தான்.. இந்த ஒற்றை முத்தத்தில் கிடைக்கும் பரவசம் கூடல்களில் கிடைக்க வில்லையென்று அவன் மனம் கிறங்குகிறதே..
தீராக் கிறக்கமல்லவா இது..!
அவனிடம் மயங்கும் பெண்கள் அவனது ஆகிருதியைக் கண்டு மயங்கவில்லை.. அவனது புகழைக் கண்டு மயங்கினார்கள்.. பணத்தைக் கண்டு மயங்கினார்கள்.. அவனைக் கண்டும் மயங்கினார்கள்.. அவர்களில் எவரும் நந்தினியைப் போலக் கள்ளமற்ற வெள்ளை மனத்துடன் இருக்கவில்லை.. கபடமும், சூதும், சாகசமும், நிறைந்தவர்களாக இருந்தார்கள்..
நந்தினி தேவதைக்கு நிகரானவள்.. சூழ்ச்சிகளற்ற வெள்ளை மனதுக்கு சொந்தக்காரி.. மழை பொழியும் கார் மேகம் போன்றது அவளது குணம்.. வசீகரம் நிறைந்த.. அதை உணராத வசீகரி..
நந்தினி அவனிடம் மயங்கியதில் அவன் எந்த அளவுக்கு மயங்கினான் என்பதை நந்தினி அறிய மாட்டாள்.. அவன் மீதான அவளது மயக்கமும்.. அந்த மயக்கத்தைக் குறித்த அவளது பயமும் அவனை ஈர்த்தது.. அவளை நினைக்க வைத்தது..
எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல் முழு மனதாக தன்னை அவனிடம் ஒப்படைத்துத் தழுவி நின்றவளின் ஆசை முத்தத்தில் அலை பாய்ந்த அவன் மனம் சமனப் பட்டது..
பதிலுக்கு அவளது நெற்றியில் முத்தமிட்டான்.. இமை மூடிக் கிறக்கத்துடன் அவனுடைய முத்தத்தை ஏற்றுக் கொண்டாள் நந்தினி.. முதல் முத்தத்தைப் போல முதல் இசைவு இது.. நான் உன்னுடையவள் என்று முழுமனதாக தன்னை அவனிடம் ஒப்புக் கொடுக்கும் தருணம் இது.
'இது.. இது.. இதற்காகத்தானே இத்தனை நாளாய் உன்னுடன் போராடிக் கொண்டிருந்தேன் கண்மணி..'
சடசடவென மழைத் துளிகள் அவர்கள் மீது ஊசிச் சாரலாய் விழுந்து நனைத்ததில்.. அவள் மீது மழைச்சாரல் விழுந்து நனைத்திடா வண்ணம் தன் ஜெர்கினுக்குள் அவளை இழுத்துத் தலையோடு போர்த்தி விட்டான்.. கோட் போன்ற ஜெர்கின்.. குளிர் கால கேரளாவுக்கான பிரத்யேக தயாரிப்பு.. எந்த நொடியும் மழை பொழியும் வயநாட்டில் தகுந்த உடையில்லாமல் வெளியே கிளம்ப முடியாது..
நந்தினி ரவிச்சந்திரனின் விருப்பத்திற்காக சேலையில் வந்திருந்தாள்.. அதன் மேல் ஸ்வெட்டர் போட்டு சால்வையைப் போர்த்தியிருக்க வேண்டும்.. அவ்வாறு தலைமுதல் கால்வரை போர்த்திக் கொண்டாலும் கோழிக்கோடின் குளிர் ஊசி முனைகளாய் உடலை பதம் பார்த்து விடும்..
ரவிச்சந்திரனே வாய் விட்டுக் கேட்ட பின்பு அவன் கூறிய சேலையை உடுத்திக் கொண்ட நந்தினிக்கு அதன் அழகை அவன் கண்டு ரசிக்க வேண்டுமென்ற ஆவல்.. அதை மறைக்க ஸ்வெட்டர் போடவில்லை.. சால்வை போர்த்தவில்லை.. தமிழ்நாட்டில் உலா வருவதைப் போலக் கிளம்பி வந்து விட்டாள்.. நேரம் செல்லச் செல்லக் குளிரின் ஆதிக்கத்தையே அவளால் தாங்க முடியவில்லை.. இதில் மழைவேறு கூட்டுச் சேர்ந்து வந்து அவளைக் கலவரப் படுத்தியது.. வயநாட்டு மலைப் பகுதியின் அருகாமையிலிருக்கும் கோழிக்கோடில் நினைத்தவுடன் மழை பொழிவது எப்போதும் நிகழ்வது தான்..
'மழை பெய்யுதே..' நந்தினிக்கு பயமாக இருந்தது..
இத்தனை நாளாய் ஏதேதோ செய்து... எஸ்கிமோக்களைப் போலத் தலை முதல் கால்வரை கம்பளிகளால் போர்த்தியபடி நடமாடி ஜலதோசம் அவளை அண்டி விடாமல் தற்காத்துக் கொண்டிருக்கிறாள்.. இன்று தற்காப்புத் தகர்ந்து விடுமோ..?
இல்லை என்பதைப் போல ரவிச்சந்திரன் அவனது ஜெர்கினுக்குள் அவளைப் புகுத்திக் கொண்டதில் கிளுகிளுப்பான சந்தோசம் கொண்டாள்.. அவளது தலையைத் தன் மார்போடு புதைத்துப் போர்த்தி விட்டவனின் தலைமுடி மழைநீரில் நனைந்தது..
"நீங்க நனைகிறீங்களே.."
நந்தினி விலக முயன்றாள்..
"ம்ப்ச்.." கோபத்துடன் அவளை இழுத்து நிறுத்திக் கொண்டான் அந்த இரும்புக்கை மாயாவி..
"ப்ளீஸ்.. நீங்க நனைஞ்சா எனக்குக் கஷ்டமாயிருக்கும்.."
"நீ நனைஞ்சா எனக்கு அதைவிடக் கஷ்டமாயிருக்கும்.."
"இதில கூட பிடிவாதமா..?"
"யெஸ்.. மை டியர்.."
"சொன்னாக் கேட்கனும்.."
"சொல்லுடி.. கேட்கறேன்.. நீ சொல்லி நான் கேட்கனும்னுதானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்..?"
"சமத்துப் பிள்ளையாய் என்னை ஜெர்கினில்ல இருந்து ரிலீஸ் பண்ணுவீங்களாம்.. நான் ஒரே ஓட்டமா பங்களாவுக்குள்ளே ஓடித் தப்பிச்சுக்குவேனாம்.."
"தப்பிக்கிறதா..? வயநாட்டு மழையிடமிருந்தா..? நோ சான்ஸ்.. அதுக்குள்ளே நீ தொப்பல் தொப்பலாய் நனைஞ்சிருவ.. அது என்ன..? என்னை சமர்த்துப் பிள்ளைன்னு உன் பிள்ளையாக்கிற..? எந்த ஊரில் ஆறடி உயர பிள்ளையிருக்கும்..?"
"ஆறடிதான் உயரமா..?"
அண்ணாந்து அவன் முகத்தைப் பார்த்து நகைத்தாள் நந்தினி.. முத்துப்பல் சிரிப்பழகில்.. மோகனப் புன் முறுவலில்.. தன்னை இழந்தான் ரவிச்சந்திரன்..
"மயக்கறடி.." அவளது கன்னத்தைக் கடித்தான்..
"ரவி.." சன்னக்குரலில் கிறக்கமாக முணுமுணுத்தாள் நந்தினி..
"ஹேய்.. என்னடி சொன்ன..? என் பெயரையா சொன்ன..?" அவன் பரபரத்தான்..
அப்போதுதான் அதை உணர்ந்த நந்தினி நாக்கைக் கடித்தாள்..
'எப்படிக் கேசுவலாய் இவன் பெயரைச் சொன்னேன்..?'
அவளுக்கே புரியவில்லை.. அதுவரை அவனை சார், சாரே, பாஸ் என்றுதான் அழைத்திருக்கிறாள்.. மனதுக்குள் திட்டும் போது கூடப் பெயர் சொல்லித் திட்டியதில்லை.. 'கம்மாண்டர்..' என்றும் 'மாமியார்' என்றும் அவ்வபோது தோன்றும் இன்ன பிற பட்டப் பெயர்களைக் கொண்டும் தான் அவனை விளித்து அர்ச்சனை செய்திருக்கிறாள்..
'ஞானா.. ரவியெண்டு விளிச்சு..?'
மலையாளத்து மங்கம்மாவாகவே மாறிப் போனாள் நந்தினி..
'ம்ஹீம்.. செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியாய் பிறந்தவ.. மலையாள வயநாட்டு ரவிச்சந்திரனைக் காதலிச்சுத் தொலைச்சிட்டேனே.. கேரளத்து மருமகளுக்கு மலையாளம் துணை வர்றதில ஆச்சரியம் என்ன இருக்கு..?'
"இன்னொரு முறை சொல்லு.." அவன் கெஞ்சினான்.
"பாஸ்.." வெட்கத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் அவள்..
"சொல்லுடி.."
"மாட்டேன்.."
"சொல்லித்தான் ஆகனும்.."
"வேண்டாம் பாஸ்.."
"நான் உனக்குப் பாஸா..?"
"பின்னே இல்லையா..? ஈ நந்தினியெனும் பெண்குட்டி நிங்களண்டே ஜோலி பார்க்க வந்து.."
"ஹேய்.. என்னடி இது..?"
"மலையாளம்.."
"இது மலையாளமா..?"
"யெஸ்.. மை டியர்.."
அவனைப் போலவே சொல்லி விட்டு அவள் கண் சிமிட்டியதில் போதை தலைக்கேற அவளது இதழோடு இதழ் பொருத்தக் குனிந்தான் ரவிச்சந்திரன்.. கொட்டிய மழைநீரில் நனைந்ததினால் நீ சொட்டிய அவன் முகத்தைக் கண்டுப் பதறிப் போன நந்தினி திமிறினாள்.. அவன் விடவில்லை..
"வயநாட்டில பிறந்து வளர்ந்தவனுக்கு மழையென்ன அன்னியமா..? வருசம் முழுவதும் மழை பெய்கிற இடம்டி வயநாடு.. நான் மழையோடு விளையாடி மழையோடு உறவாடி வளர்ந்தவன்.."
"இந்தப் பெருமையை எத்தனை தரம்தான் சொல்வீங்க..?"
"எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்வேன்.. எப்பேற்பட்ட பெருமை தெரியுமா இது.. வயநாடுன்னா சும்மாவா..?"
"சும்மான்னு யார் சொன்னதாம்..?"
"யார் சொன்னாலும் சொல்லலைன்னாலும் ஐ டோன்ட் கேர் எபௌட் இட்.. நீ சொல்லக் கூடாது.. தட்'ஸ் ஆல்.."
"ஏனாம்..?"
"ஏன்னா நீ வயநாட்டின் மருமகள்.. மனசிலாயி.."
"அடேங்கப்பா.. அதிகாரம் தூள் பறக்குது.."
"அப்படித்தான் தூள் பறக்கும்.. வாயைத் திறக்கக் கூடாது.."
"ஆகட்டும் சாரே.."
"எனக்குப் பழக்கமான கிளைமேட் இது... உனக்குத்தான் ஈரக்காற்று பட்டாலே தும்மல் வந்திருதே.."
அவனது அக்கறையில் மனம் குளிர்ந்தாள் நந்தினி.. அவளுக்கும் ரவிச்சந்திரனுக்கும் இது தொடர்பாக சண்டை வந்து ஓய்ந்திருந்தது.. நீலிமலைக் காட்டின் மரக்குடிலில் அவன் காதல் சொல்லி அவள் ஏற்றுக் கொள்ள மறுத்த தினத்திலிருந்து அவன் தினமும்
ஏதாவது ஒரு காரணத்துக்காக என்று பெயர் வைத்து அவளை வாட்டி வதைப்பான்.. அப்படியொரு நாளில் மழை பெய்தது.. ரவிச்சந்திரனும் நந்தினியும் எஸ்டேட்டின் மலைப் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள்.. சடசடத்த மழைத்துளியில் அரண்டு போன நந்தினி அவசரமாக சால்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு அருகிலிருந்த கட்டிடத்தில் ஒதுங்கி நிற்க ஓடினாள்.. அதற்கு ரவிச்சந்திரன் கடுகடுத்தான்..
"இயற்கையோடு இசைந்து வாழத் தெரியனும்.. ஒரு துளி மழையில் நனைந்தால் நீ ஒன்றும் முளைத்து விட மாட்டாய்.. வயநாட்டுக்கு வந்த பின்னால் மழையைக் கண்டு ஒதுங்கி ஓடினால் சரி வருமா..? இது வயநாடு மட்டுமில்லை.. மலை நாடு.. கூடவே மழை நாடு..! வருசம் பூராவும் மழை பெய்துகிட்டே இருக்கும்.. எத்தனை நாளைக்கு ஓடி ஒளிவாய்..? நனையப் பழகிக் கொள்.."
உத்தரவிட்டான் ரவிச்சந்திரன்.. அதற்கென்ன என்று நந்தினி தலையாட்டி விட்டுப் போயிருக்கலாம்.. அப்படிச் செய்தால் அவள் எப்படி நந்தினியாவாள்..? அதிகாரத்துடன் ரவிச்சந்திரன் பேசியதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவளாக..
"வயநாட்டு மழைக்கு நான் ஏன் பழகிக்கனும்..? நான் செந்தமிழ் நாட்டுத் தமிழச்சி..! தஞ்சாவூருக்குத் திரும்பிப் போயிருவேன்.. இருக்கிற கொஞ்ச நாளில பாதுகாப்பா இருந்துட்டுப் போகாம மழையில நனைஞ்சு ஜலதோசத்தை இழுத்து விட்டுக்கச் சொல்கிறீங்களா..?" என்று சொல்லி விட்டாள்..
"என்ன சொன்ன..?" என்று கர்ஜித்த ரவிச்சந்திரன் பேசு, பேசு எனப் பேசித் தீர்த்து விட்டான்..
அந்த நந்தினிதான் இன்று வயநாட்டின் மழைக்கு அவள் பழகிக் கொள்ள வேண்டும் என்ற கட்டளையை ரவிச்சந்திரன் மறுபடியும் சொல்லும் போது எதிர்த்து வாயாடாமல் 'ஏனாம்' என்று சரசத்துடன் கேட்டுப் பூரித்துப் போகிறாள்..
ஆனாதிக்கம் என்பது பார்ப்பவரின் கண்ணோட்டத்தையும் மன ஓட்டத்தையும் பொறுத்தது.. உண்மையில் பெண்ணால் ஆதிக்கம் செழுத்தப் படுவதை  ஒவ்வொரு குடும்ப ஆணும் பெருமையாக உணர்கிறான்.. நினைக்கிறான்..
அன்று ரவிச்சந்திரன் பேசிய பேச்சைத் தாங்க முடியாமல் மழையில் நனைந்த நந்தினிக்கு அன்று இரவே குளிர்காய்ச்சல் வந்து விட்டது.. என்னவென்று கேட்ட வீணாவிடம் காய்ச்சல் வேகத்தில் நந்தினி உளறி விட.. அவள் மகனிடம் பொங்கலோ பொங்கல் என்று பொங்கிப் பதிலுக்குப் பேசித் தீர்த்து விட்டாள்.. பதிலுக்குப் பதிலாக அவனுடைய அன்னையிடம் போட்டுக் கொடுத்து சண்டையிட வைத்திருக்கிறாளா என்று அவன் சண்டையிட முடியாமல் அவள் காய்ச்சால் வேகத்தில..
"எனக்கு மழையில நனைஞ்சா ஒத்துக்காது.. ஜலதோசம் பிடிச்சுக்கும்.. காய்ச்சல் வரும்.. ஜன்னி வரும்.. மழை எனக்கு அலர்ஜி பாஸ்.." என்று புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தாள்..
'இவதான் டிரெயினில வரும்போதே மழையும், குளிரும் அலர்ஜின்னு சொன்னாளே.. அது தெரிஞ்சிருந்தும் இவளை மழையில நனைய வைத்து ஜீரத்தில விழுக வைச்சிட்டேனே..' அவன் குற்ற உணர்வு கொண்டான்..
திறமையான டாக்டர்களை வரவழைத்து அவருக்கு சிகிச்சையளித்து இரண்டே நாளில் அவளை எழுந்து உட்கார வைத்து விட்டான்.. அவளது முகம் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி அவன் 'ஸாரி..' சொல்ல.. அவள் வேறு எங்கோ பார்த்தபடி 'என்னிடம் யாரும் ஸாரி சொல்ல வேணாம்..' என்றாள்.. ரவிச்சந்திரனின் மனம் மிருதுவானது..
அன்று அவளை மழையில் நனையச் சொல்லிக் கட்டாயப் படுத்திய ரவிச்சந்திரன்தான் இன்று மழையில் தான் நனைந்து கொண்டு அவளை நனைய விடாமல் சிறகுகளுக்கடியில் தாய் பறவை குஞ்சைப் பாதுகாப்பதைப் போல அவளைத் தனது ஜெர்கினுக்குள் பதுக்கிப் பாதுகாக்கிறான்..
காதலில் விழுந்த பின்னால் நியாயங்கள் மாறுபட்டு விடுகின்றன.. காதலுக்கு தனி நீதி.. தனி நியாயம்..
மழையில் நனைந்தபடி ஒற்றை மழைத்துளிகூடத் தன் காதலிமீது விழுந்து நனைத்து விடாமல் பாதுகாத்து அடை காத்து அணைத்தபடி பங்களாவை நோக்கி நடந்தான் ரவிச்சந்திரன்.. அவனது ஜெர்கினுக்குள் அடங்கியிருந்த நந்தினியின் மனம் இவன் எனது ஆண்மகன் என்ற பெருமிதத்துடன் கூவியது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -175
எண்ணியிருந்தது ஈடேற -175
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-175.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/enniyirunthathueedera-175.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy