அம்மம்மா.. கேளடி தோழி...! -76

76 வருவது எதுவென்றாலும்.. வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பேன்... நிலா வெளிச்சம் பாதையெங்கும் பரவிக் கிடந்தது... அதை உற்றுப் பார்த்தபடி...


76
வருவது எதுவென்றாலும்..
வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பேன்...

நிலா வெளிச்சம் பாதையெங்கும் பரவிக் கிடந்தது... அதை உற்றுப் பார்த்தபடி காருக்குள் அமர்ந்திருந்த பாலமுரளியின் நெஞ்சத்தில் ஒரு மணமகனுக்கேயுரிய கிளர்ச்சியும் ரகசிய சந்தோசமும் அணுவளவும் இல்லை...
'இந்நேரம் அவ மண்டபத்திற்கு வந்திருப்பா...' நினைத்துக் கொண்டான்...
'சும்மாவே அழகாய் இருப்பா.. இன்னைக்கு விசேசமா அலங்காரம் பண்ணியிருப்பாங்க... அதில பார்த்தவுடனே மனசில தீ பத்திக்கிற மாதிரி பச்சக்குன்னு இருந்து தொலைப்பா...'
ஒரு நெடிய பெருமூச்சு அவனது கடுப்பையெல்லாம் சுமந்து கொண்டு வெளிப்பட்டது...
'ராட்சஸி...!' பொருமினான்...
'அழகான... ராட்சஸி...!' பல்லை வேறு கடித்துக் கொண்டான் அவனது கோபம் அவளது அதீத அழகின் குறித்து ஏற்பட்டதல்ல என்று அவனுக்கே தெரியும்...
அந்த அழகை ஆண்டு அனுபவிக்காமல் தள்ளி வைக்கும் முடிவை அவன் எடுத்திருக்கிறான் என்பதால் விளைந்ததுதான் அந்த கோபம்...
அவனது செல்போன் அலறியது.. எடுத்துப் பார்த்தான்...
'மேகலா அழைக்கிறாள்..' என்று ஒளிர்ந்தது செல்போன்... தாயின் அழைப்பை தவிர்க்க முடியாமல் பேசினான்...
"அம்மா..."
"எங்கேயிருக்க முரளி..?"
"குற்றாலத்தில் இருக்கேன்ம்மா..."
அவன் சொன்னது பொய்யென்று மேகலாவுக்கு எப்படித் தெரியும்..? தென்காசியின் நான்கு வழிச்சாலையோர மரத்தடியில் காரை ஒதுக்கி நிறுத்தி.. அதற்குள் பைத்தியக்காரனைப் போல தனிமையில் புலம்பிக்கொண்டு அவனிருப்பதை அவள் அறிவாளா என்ன..?
நிற்க நேரமில்லாமல் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு அலையும் மகன் சொல்வது உண்மைதான் என்று அந்தத்தாயும் நம்பி விட்டாள்...
"அப்படியாப்பா..?" என்று அப்பாவியாகக் கேட்டவள்...
"அங்கே எதுக்குப்பா போன...?" என்ற துணைக் கேள்வியையும் கேட்டு வைத்தாள்..
இதற்குப் பதில் சொல்ல பாலமுரளிக்கா தெரியாது..?
"வியாபார விசயமாய் வந்தேன்ம்மா.." என்று தயாராக வைத்திருந்த பதிலை எடுத்து விட்டான்...
"ஏன்ப்பா.. உன் கல்யாணத்துக்காக ஊரே இங்கே கூடியிருக்கு.. கல்யாண மாப்பிள்ளை நீ... வியாபார விசயமாய் வெளியூர் போயிருக்க... இது நல்லவா இருக்கு..?"
"நல்லாத்தான் இல்ல.. நானென்ன பண்ண..? வந்திருக்கிற ஆளுக முக்கியமான புள்ளிக... குற்றாலத்துக்கு வந்திருக்கோம்.. பார்க்க வாங்கன்னு போன் போட்டாங்க...."
"மண்டபத்துக்கு வாங்கன்னு நீ சொல்ல வேண்டியதுதானே... அப்படியே உன் கல்யாணத்திலயும் அவங்க கலந்துக்கிட்ட மாதிரி இருக்குமில்ல..?"
"எல்லாம் சரிதான்ம்h.. ஆனா... அவங்க மண்டபத்துக்கு வந்தா ஒரு செகண்ட் என்கூட தனியாய் பேசிர முடியுமா...?"
இதுதான் பாலமுரளி... கேள்விகளை.. கேள்விகளாலேயே முறியடிப்பவன்... எந்தக் கேள்விக்கும் தயாரான பதிலை கையிருப்பில் வைத்திருப்பான்...
"ஆமாம்..."
அவன் சொல்வதை நியாயமென்று மேகலாவையே ஒப்புக் கொள்ள வைத்து விட்ட அந்தக் கெட்டிக்-காரனுக்கு... அந்த வெற்றியில் துளியளவு கூட சந்தோசம் ஏற்படவில்லை... அது ஏன் என்றும் அவனுக்குப் புரியவில்லை...
"ஆனா முரளி... இங்கே சொந்தபந்தம் அத்தனை பேரும் வந்து கூடியிருக்காங்க.. நொடிக்கொரு கார் வந்து நிற்குது.. வர்ற உறவு முறைக்கு நான் என்ன பதிலைச் சொல்ல...?"
"முக்கியமான வேலைம்மா..."
"அது எனக்கும் புரியுதுப்பா.. ஆனா.. ஒத்தை ஆளா நான் எத்தனை பேரை சமாளிப்பேன்..? நீயே சொல்லு... கை கொடுக்க உன் அக்கா வரப்போறாளா..?"
கேள்வியின் நாயகனான பாலமுரளியையே அந்தக் கேள்வி அசைத்துப் பார்த்து விட்டது...
'அம்மா...!' அவன் உள்ளம் நெகிழ்ந்து விட்டான்...
"இதோ ஒரு நிமிசத்தில் அங்கே வந்து நிக்கிறேன்ம்மா... நீங்க கவலையே படாதீங்க..."
"உன்னை வான்னுதான் சொன்னேன்.. அதுக்காக அடிச்சுப்பிடிச்சுக்கிட்டு ஒடிவான்னு சொல்லலை... நிறுத்தி.. நிதானமா காரை ஓட்டிக்கிட்டு வா.. இத்தனை நேரமும் சமாளிச்சவ... இன்னும் கொஞ்ச நேரத்துக்கு சமாளிக்காம போயிருவேனா...?"
அந்த நிலைமையிலும் மகனின் பத்திரத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யும் தாயின் தாய்மையுணர்வில் அவன் கரைந்து விட்டான்...
அவனுக்குத் தெரியும்.. அவன்தான் தாயின் பற்றுக்கோடு... அவளின் நம்பிக்கை நட்சத்திரம் அவன் மட்டும்தான்... அவன் சேயாக... அவள் தாயாக இல்லாமல்.. அவன் தாயாக... அவள் சேயாகத்தான் அதுவரை அவளை அவன் பாதுகாத்து வந்திருக்கிறான்...
முதல் முறையாக... வாழ்வின் மிக முக்கியமான தருணத்தில் அவளை தனித்து இயங்க விட்டு.. அவன் சிறிது நேரம் விலகி நின்றுவிட்டான்...
அவளால் அதையே சமாளிக்க முடியவில்லை...
பெண்ணழைத்துக் கொண்டு வருகிற வரைக்கும் பாலமுரளி மண்டபத்தில்தான் இருந்தான்... ராதிகா வரும் கார்.. தென்காசி எல்லைக்குல் நுழைந்த செய்தியை அவன் செல்போனில் அறிந்து கொண்ட மறுநொடியில் அவன் மண்டபத்தை விட்டு வெளியேறி விட்டான்...
'இன்றைக்கு ஓடி ஒளிந்து கொள்கிறாய்.. நாளைக்கு என்ன செய்வாய்..?' அவன் உள்ளம் அவனைப் பார்த்து நகைத்தது...
மீண்டும் ஒரு கனத்த பெருமூச்சு வெளிப்பட.. அவன் காரைக் கிளப்பினான்...
திருமண மண்டபத்தின் வாசலிலே நின்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி அவனைக் கண்டதும் வாயெல்லாம் பல்லானார்...
"மாப்பிள்ளை..."
முகம் மலர அருகே வருகிறவரிடம் முகம் திருப்ப அவனால் முடியவில்லை...
அத்தோடு.. இது அவனுக்கும் ராதிகாவுக்கும் இடையில் நடக்கும் அந்தரங்கப் போராட்டம்.. இதில் மற்றவர்களை நொந்து கொள்வதால் யாதொரு பயனும் இல்லை என்ற நினைவோடு லேசாக சிரித்து வைத்தான்..
"எங்கே போயிருந்தீங்க மாப்பிள்ளை..?"
"குற்றாலத்துக்கு மாமா... ஒரு முக்கியமான வேலையிருந்தது..."
"இரண்டு நாளைக்கு எல்லாத்தையும் மூட்டைகட்டி பரணில் தூக்கிப் போடுங்க மாப்பிள்ளை.. எங்க பக்க உறவுக்காரங்க உங்களைப் பார்க்கனும்னு என்னை அரிச்சு எடுத்திட்டாங்க.. உள்ளே வாங்க..."
அவன் நழுவுவதற்கு இடம் கொடுக்காமல் கைப்பிடியாய் இறுக்கிப் பிடித்தபடி அவர் மண்டபத்திற்குள் நுழைந்தார்...
"இவர்தான் எங்க மாப்பிள்ளை..."
எதிர்படும் உறவினருக்கெல்லாம் அவர் பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்க.. மரியாதை நிமித்தம் அவர்களிடம் ஒரிரு வார்த்தைகள் பேசியபடி யதேச்சையாக மணமேடையைப் பார்த்தான் பாலமுரளி...
நலங்குக்கு அமர்ந்திருந்த ராதிகாவின் முகத்தில் உயிரில்லாதது அவன் கவனத்தில் பட்டது.. அதே சமயத்தில் விழியுயர்த்தி அவன் இருக்கும் திசைப் பக்கம் பார்த்தவளின் முகத்தில் உயிர்ப்பு வர.. கண்கள் ஒளிர்வதை உணர்ந்தவனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது...
'வந்து விட்டான்...'
ராதிகாவின் முகத்தில் பரவிய மலர்ச்சியைக் கவனித்தபடி.. உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தான் பாலமுரளி... பேச்சின் ஊடேயூடே அவனது பார்வை.. அவனது கட்டுப்பாட்டை மீறி... மேடையை நோக்கிப் பாய்ந்தது...
அசையாமல் அவன் மீதே விழி பதித்திருந்த ராதிகாவின் பார்வை அவனது பார்வையைச் சந்திக்கும் போது ஏற்படும் பரவசத்தை அவளது முகம் உணர்த்த.. பார்வையை விலக்கிக் கொள்ளும் வகையறியாமல் அவன் திண்டாடிப் போனான்..
ஒருவழியாய் நலங்கு முடிந்து ராதிகாவை அழைத்துக் கொண்டு போன பின்னால்தான் அவனால் சீராக மூச்சு விட முடிந்தது...
'ஹப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே...'
ஆயுள் முழுவதும் இந்த மோகினியைத் தொடாமல் எப்படிக் குடும்பம் நடத்தித் தொலைப்பது என்று திகிலடைந்து போனான் பாலமுரளி...
அவன் நினைத்ததைப் போலவே.. மணமகளுக்கான பிரத்யேக அலங்காரத்தில் அவள் ஜொலித்தாள்... அவளிடமிருந்து இயல்பாக வெளிப்பட்ட நளினங்களின் மோக அலைகளில் அவன் அடித்துச் செல்லப்பட்டான்...
இந்த அழகை கண்முன்னால் வைத்துக் கொண்டு.. எட்டிக்காயாய் விலகி நிற்க வேண்டும் என்றால் அது எப்பேற்பட்ட கொடுமை...!
"ஹாய் மச்சான்.. எங்கே போயிட்டிங்க...?" ஆரவாரமாய் வந்தாள் கீதா...
"மச்சானா..? அதுசரி.. பக்கத்தில் உன் அக்கா இல்லைங்கிற தைரியமா...?" பாலமுரளி சிரித்தான்...
"உங்க ஆளை ரூமுக்குள்ளே விட்டு பூட்டிட்டேனில்ல... அவ டிரெஸ் சேன்ஜ் பண்ணிக்கிட்டு இருக்கா.. அந்த தைரியத்திலதான் உங்ககிட்ட கடலை போட வந்தேன்..." அவள் கண்சிமிட்டினாள்...
"கடலை சாகுபடிக்கெல்லாம் நான் ரெடியாயில்லைம்மா... எங்க ஊரில நல்ல பிள்ளைன்னு பெயரெடுத்தவன்..."
"அதனால...? என்னதான் சொல்ல வர்றீங்க..?"
"நான் உனக்கு அண்ணன் மாதிரின்னு சொல்ல வர்றேன்.."
"போச்சுடா.. அவனவன் அழகான மச்சினி இருக்காளான்னு பார்த்த பின்னாலேதான் பொண்ணே பார்க்க வர்றான்.. நீங்க என்னடான்னா... தானாய் கிடைத்த மச்சினியையும் தங்கை முறையாக்கறிங்களே.. ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ம்...ப... நல்ல்ல்ல்லவர்தான்... மச்சான்.."
"மச்சினியைவிட.. மச்சினியின் அக்கா அழகாயிருக்காளே..."
"பிழைச்சுக்குவீங்க... இவ்வளவு பேசுகிறவர் இத்தனை நேரமா எங்கே எஸ்கேப் ஆகியிருந்தீங்க...?"
கீதா என்னவோ விளையாட்டாகத்தான் கேட்டாள்.. அது அவனது மனக்கதவைத் தட்டிப் பார்க்கும் என்று அவள் கனவா கண்டாள்..?
'ஆமாம்... நான் தப்பித்துத்தான் போயிருந்தேன்...' அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்...
'உன் அக்காவின் மீதான ஆசையிலிருந்து தப்பிக்க நினைத்துத்தான் ஊரை விட்டு வெளியே
போய் பதுங்கியிருந்தேன்... அவள் மீதான என் மோகத்திலிருந்து தப்பிக்க விரும்பித்தான் மண்டபத்துக்கு வராமல் பதுங்கியிருந்தேன்... அவளைத் தேடும் என் உணர்வுகளிலிருந்து தப்பிக்கத்தான் அவள் பார்வையிலிருந்து விலகி பதுங்கியிருந்தேன்...'
எதுவும் பேசாமல் மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்தவனை விசித்திரமாகப் பார்த்தாள் கீதா... அவன் முன்னால் விரல்களைச் சொடுக்கி...
"ஹலோ... அத்தான்..." என்று அழைத்தாள்...
நொடிப் பொழுதில் தண்ணுணர்விற்கு மீண்ட பாலமுரளி..
"இது பேச்சு..." என்று புன்னகை செய்தான்...
"எதைச் சொல்றீங்க... மச்சான்... அத்தானாகி விட்டதைச் சொல்றிங்களா...? வேறென்ன செய்றது..? மச்சான்னா நீங்க தங்கச்சின்னு சொல்லி வைக்கறிங்க.. அதுக்கு அத்தானே பெட்டரில்லையா..?"
"அதுசரி..."
"ராதிகாதான் உங்களைத் தேடிக்கிட்டே இருந்தா..."
பாலமுரளிக்கு என்னவோ செய்தது... அவன் மீதான அவளது தேடலை சற்று முன் அவளது பார்வையில் அவன் உணர்ந்தவன்தான்.. இருந்தும் அவன் பேசவில்லை...
"எதுக்குன்னு கேட்க மாட்டிங்களா..?"
"எதுக்கு..?"
"கடலை போடத்தான்.. என்னிடம்தானே நீங்க வல்லவர்.. நல்லவர்ன்னு கதை சொல்வீங்க... அவகிட்ட அப்படியே மெல்ட்டாகி விடுவீங்கள்ல..."
"அது தப்பா...?"
"தப்புன்னு யாராவது சொல்ல முடியுமா..? நடத்துங்க.. நடத்துங்க... ஆமாம்.. உங்க அத்தை மகளை எங்கே காணோம்...?"
"அத்தை மகளா..? யாரது...?"
"இதுகூடத் தெரியாதா..? ஷோபாவைத்தான் கேட்கிறேன்..."
"அவளுக்கு உடம்பு சரியில்லையாம்..."
"தலைவலியா...?"
"ஆமாம்... எப்படிக் கண்டு பிடிச்ச..?" முரளி ஆச்சரியமானான்..
"உங்களுக்குத்தான் அவ தலைவலியைப் பத்தித் தெரியாது... எனக்கு ரொம்பவே தெரியும்.. ராதிகான்னு நினைச்சாலே அவளுக்கு தலைவலி வந்திரும்.. அப்படிப்பட்ட தலையை வைச்சுக்கிட்டு அவளாலே எப்படி ராதிகாவோட கல்யாணத்தில தலையைக் காட்ட முடியும்..?" கீதா சிரித்தாள்... ஏன் அவள் அப்படிச் சொல்கிறாள் என்று புரியாவிட்டாலும்.. ஏனோ.. பாலமுரளிக்கு அவளுடன் இணைந்து சிரிக்க வேண்டும் போலத் தோன்றியது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -76
அம்மம்மா.. கேளடி தோழி...! -76
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-76.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-76.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy