அம்மம்மா.. கேளடி தோழி...! -74

74 உன் கைவிரல்கள் தொட்டபோது... மின்சாரம் எனில் பாய்ந்தது ஏன்.. ? "வாங்கண்ணா.. வாங்க.. வாங்க..." அவசரமாக கரம் குவித்து...


74
உன் கைவிரல்கள் தொட்டபோது...
மின்சாரம் எனில் பாய்ந்தது ஏன்..?

"வாங்கண்ணா.. வாங்க.. வாங்க..."
அவசரமாக கரம் குவித்து பரபரப்புடன் வரவேற்றாள் மேகலா...
"அண்ணனா..? என்னங்க.. உங்க தங்கச்சிக்கு உறவுமுறை இன்னும் மறக்கலை போல..."
மேகலாவினால் அண்ணனென்று விளிக்கப்பட்ட கோமதி நாயகத்தின் மனைவி குரோதத்துடன் சொன்னாள்...
"விடு தங்கம்... மத்தவங்க முன்னாலே உறவு முறையை விட்டுக்கொடுக்க முடியுமா..? இல்ல... வந்தவங்களைத்தான் வாங்கன்னு வரவேற்காம இருக்க முடியுமா..? அதத்தான் தங்கச்சி செய்யுது..."
மேகலாவின் பக்கம் நியாயம் பேசுகிறவரைப் போல... கோமதிநாயகம் குத்தலுடன் சொன்னார்...
மேகலாவின் முகம் வாடிவிட்டது...
வந்திருந்தவர்களோ... தென்காசியின் மிகப்பெரிய வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.. மேகலாவின் கரம் குவிப்பிற்கு பதிலுக்கு கரம் குவித்த கோமதி நாயகத்தின் பத்து விரல்களிலும் வைரங்கள் மின்னின... அவரது மனைவியின் உடல் பூராவும் தங்கத்தோடு சேர்ந்து வைரங்கள் ஒளிர்ந்தன... அகலக் கரையிட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் அலட்சியமான முகபாவனையுடன் மற்றவர்களெல்லாம் எனக்கு இணையா என்று பார்த்துக் கொண்டு வந்த அந்த தங்கத்திற்கு மனதிற்குள் ஒர் அபிலாசை இருந்தது...
அது.. அந்த தென்காசிப் பட்டினத்தின் கதாநாயகனான பாலமுரளிக்கு பெண் கொடுத்து அவனது மாமனார் வீடென்ற அந்தஸ்தைப் பெற்று விடவேண்டும் என்பது...
அந்த அபிலாசையை இற்றுப் போகச் செய்து விட்டு.. யாரோ ஒரு சென்னையில் பிறந்த சொப்பன சுந்தரியை பாலமுரளி மணக்கப் போகிறான் என்பதில் அவர்களுக்கு தீராத வருத்தம்...
அதைப் பேச்சால் கூட வெளிப் படுத்தாவிட்டால் அவர்களுக்கு நெஞ்சுவலி வந்து விடாதா..?
அதை மேகலாவும் உணர்ந்திருந்ததால் தணிந்தே பேசினாள்...
"அண்ணனும்.. அண்ணியும் மனசில எதையும் வைச்சுக்கக் கூடாது..."
"இனி வைச்சிருந்துதான் என்ன செய்யப் போறோம்..?"
"உங்களுக்கே நல்லாத் தெரியும்.. எங்க குடும்பத்திலே முரளி ஒரு முடிவை எடுத்துட்டா... அதை மறுத்துப் பேசி யாருக்கும் பழக்கமில்லை..."
"நீ ஏம்மா மறுத்துப் பேசப் போற..? நாbன்ன உன் கூடப்பிறந்த அண்ணனா..? இல்ல.. சொந்த சித்தப்பாமகன்.. பெரியப்பா மகனா..? ரெண்டும் இல்ல... உறவு முறையில உனக்கு அண்ணன் ஆகனும்.. எனக்காக நீ துரும்பை முறிச்சுப் போடக்கூட யோசிப்பதான்.. இதில மலையை பொரட்டச் சொன்னா... மகராசி.. நீ என்ன பண்ணுவ...?"
"அதக்கில்லண்ணே.. முரளி ஆசைப்பட்டுட்டான்..."
"அதைச்சொல்லு... நானென்ன அழகு ரதியைப் போலவா மகளப் பெத்து வைச்சிருக்கேன்..? உன் மகனுக்கு என்மக மேலே ஆசை வராது... ஊரான் மகமேலதான் ஆசைவரும்..."
"உங்க பொண்ணுக்கென்னண்ணே.. இந்த தென்காசிச் சீமையிலேயே இப்படியொரு அழகை நாம பார்க்க முடியாதே..."
"அப்புறம் எதுக்கும்மா... உன் மகன் சென்னைச் சீமையைத் தேடி ஓடினாரு..?"
கோமதி நாயகம் விடாமல் மலையேறினார்.. அவரை மலையிறங்க வைக்க.. ஆனமட்டும் முயற்சி செய்து பார்த்த மேகலா களைத்துப்போய் விட்டாள்.. வந்தவர்கள் போர் நிறுத்தம் செய்யும் உத்தேசத்தில் இல்லாதவர்களாக இருக்கும் போது அவளும் தான் எத்தனை நேரத்துக்கு வெள்ளைக்கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பாள்..?
அவர்கள் நிறுத்தாவிட்டால் என்ன.. நாம் நிறுத்திவிடலாமே என்ற நினைவுடன் பறக்க விட்டுக் கொண்டிருந்த சமாதானப் புறாவை பறக்க விடும் முயற்சியைக் கைவிட்டாள் மேகலா...
"ஏண்ணே.. இதெல்லாம் ஆகிற பேச்சா..? பெண் பார்த்து.. பரிசம் போட்டு.. பத்திரிக்கை அடிச்சு.. அதை ஊரெல்லாம் குடுத்து.. இப்ப விடிஞ்சாக் கல்யாணம்ன்னு பொண்ணு மணவறையில வந்து உட்கார்ந்தாச்சு... இப்பப் போயி.. ஏழூரு ராமாயணத்தை இழுத்தா என்னதான் செய்ய முடியும்..? வந்தவங்க மனசார பொண்ணையும்... மாப்பிள்ளையையும் வாழ்த்தி விட்டுப் போவிங்களா.. அதை விட்டுட்டு போன கதையெல்லாம் இழுத்து வைச்சுப்  பேசிக்கிட்டு இருக்கீங்க.. கோதாவரி..."
"அக்கா..."
"நம்ம அண்ணனும் அண்ணியும் வந்திருக்காங்க பாரு.. முன் வரிசையில உட்கார வைச்சு.. காபியைக் குடு.."
"ஆகட்டும்க்கா.. வாங்கண்ணா.. வாங்கண்ணி..."
"உள்ள போங்கண்ணா.. நலங்கு முடிஞ்சதும் இருந்து சாப்பிட்டுத்தான் போகனும்.. பந்திக்கு அழைச்சுட்டுப் போக நானே வர்றேன்.. கூப்பிட்டுக் கிட்டுப்போ கோதாவரி.. அடடே.. வாங்க மாமா.. வாங்க அத்தை.. நீங்கள்ளாம் இப்பத்தான் வர்றதா.. ஒரு வாரத்துக்கு முன்னாலேயே வந்து இறங்கியிருக்க வேணாமா..."
மேகலா.. மற்றவர்களை வரவேற்கச் சென்றுவிட.. கோதாவரியின் பின்னால் சென்ற கோமதிநாயகத்துக்கும்.. தங்கத்துக்கும் மனதில் எரிச்சல் மூண்டது...
'கொஞ்சமாவது மதிக்கிறாளான்னு பாரு.. எல்லாம் கெட்டிக்கார மகனைப் பெத்துப்புட்ட மண்டைக்கனம்..! திமிர்..!'
கோபத்துடன் பாலசரஸ்வதியின் பக்கத்தில் அமர்ந்த தங்கத்தின் முகத்தில் எள்ளும்.. கொள்ளும் வெடித்தன...
"வாங்க.. வாங்க..." திரும்பிப் பார்த்த சரஸ்வதி வரவேற்க...
"அதான் வந்துட்டோமில்ல..." என்று கடுகடுப்புடன் பதில் சொன்னாள் தங்கம்...
"என்ன மாமா.. அத்தைக்கு என்ன கோபமாம்..?"
"அதை என்கிட்ட எதுக்குக் கேட்கிற மருமகளே.. உன் அத்தைகிட்டயே கேளு.. ஊட நான் எதுக்கு..?"
"பார்த்தீங்களா அத்தை.. மாமா கழண்டுக்கிறார்.."
"கழண்டுக்கிட்டது அவரில்ல சரசு... உன் குடும்பம் தான் கழண்டுக்கிச்சு... இதைச் சொன்னா உன் அம்மா விடிஞ்சா கல்யாணம்ன்னு பழமை பேசறாங்க..."
மனத்தாங்கலுடன் தங்கம் சொல்ல... 'ஆஹா..' என்று மகிழ்ந்து போனாள் பாலசரஸ்வதி...
அந்தத் திருமணத்தில் சந்தோசமாக கலந்து கொள்வதைப் போல வேசம் போட்டுக் கொண்டிருந்தவளுக்கு அந்த வேசத்தைப் போட வேண்டா மென்பதில் சந்தோசம் பெருக்கெடுத்தது...
அவள் வேசத்தைக் கலைத்து.. தன் மனக்கிடக்கையை தங்கத்திடம் கொட்ட ஆரம்பித்தாள்...
"உங்களைச் சொன்னதுக்கே இத்தனை பேசறிங்களே.. பெத்த மக.. என்னையே இந்த விசயத்தில எங்கம்மா தூக்கி எறிஞ்சுட்டாங்க.. அது தெரியுமா அத்தை...?"
"அடக் கடவுளே.. அப்படியா...?"
"ஆமாம் அத்தை..."
"இந்தக் கொடுமையை எங்கேயாச்சும் கண்டிருக்கமா..?"
"என் வீட்டில நடக்குதே..."
"ஒத்தப் பொண்ணு.. அதிலயும் வீட்டுக்கு மூத்த பொண்ணு.. உன் பேச்சுக்கே மதிப்பில்லாம போச்சு பார்த்தியா...?"
"இதை எங்கே போயி சொல்றது..?."
"நான் எதுக்கு இருக்கேன்..? என்கிட்டச் சொல்லு சரசு... உன் ஆத்தாமையை காது கொடுத்து நான் கேட்கிறேன்.."
அவ்வளவு சொன்னால் போதாதா..? பாலசரஸ்வதி... வாகாக தலையை சாய்த்து தங்கத்தின் காதுக்குள் பேச ஆரம்பிக்க.. அதைவிட வாகாக காதைக் கொடுத்து.. அதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் தங்கம்...
ஊடேயூடே.. 'ஓ..' 'அட..' 'இதைப்பாருடா..' 'அதைச்சொல்லு...' 'அடேங்கப்பா...' என்பதைப் போன்ற சொற்றொடர்களை தகுந்த பாவத்துடன் உச்சரித்தாள்.. அதற்கேற்றார் போல முகவாயை தோள்பட்டையில் இடித்துக் கொள்ளவும் செய்தாள்...
வந்தவர்களை வரவேற்றபடி.. சற்றுத் தள்ளி நின்று இந்த நாடகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த மேகலாவுக்கு பெருங்கவலையாக இருந்தது...
'இந்த சரசு.. வீட்டு விசயத்தை அந்தத் தங்கத்தின் காதில ஓதிக்கிட்டு இருக்காளே... இதுக்கு அவ தண்டோரா போட்டேச் சொல்லி விடலாம்...'
எப்படி மகளின் திறந்த வாயை மூடச் செய்வது என்ற  பலத்த சிந்தனையுடன் வாசலைப் பார்த்தவளுக்கு முகம் ஒளிர்ந்தது...
அங்கே ராஜராஜன் யாரோ ஒருவருடன் பேசியபடி வந்து கொண்டிருந்தான்...
"மாப்பிள்ள...!"
என்னவோ... கடவுளைப் பக்தி பரவசத்துடன் ஆனந்தமயமாக அழைப்பதைப் போல... மருமகனை அழைத்தாள் மேகலா...
"என்னங்கத்தை..."
ராஜராஜன் நின்றுவிட.. கூட வந்தவரோ.. கூட்டத்தை நோக்கிப் போய்.. காலியாக கிடந்த சேர்களில் ஒன்றில் இடம் பிடித்தார்...
"நம்ம சரசைப் பார்த்தீங்களா மாப்பிள்ள..."
அவள் சொல்ல ஆரம்பித்தபோது.. மாமியார்... தனது மகளைத் தேடுவதாக புரிந்து கொண்டான் அந்த மருமகன்...
"இங்கதான இருந்தா..? இப்பத்தான் என்கூடப் பேசிக்கிட்டு வந்தவ எனக்கு முன்னாலே உள்ள வந்தா.. எங்கே போயிருப்பா..?"
"அவ எங்கேயும் போகலை.. அதோ.. அங்கேதான் உட்கார்ந்திருக்கா.."
மருமகன் புரிந்து கொண்ட விதத்தில் புல்லரித்துப் போனவளாக எரிச்சலுடன் கை காட்டினாள் மேகலா... அவள் விரல் நீட்டிய திசைப் பக்கம் பார்த்த அந்த புத்திசாலி மருமகன்...
"அட.. ஆமாம்.. அங்கேதான் உட்கார்ந்திருக்கா.." என்று மகிழ்ந்து போனான்..
"உங்களுக்குத்தான் அவ இருக்கிற இடம் தெரிஞ்சிருக்கே... அப்புறமும் எதுக்காக அத்தை.. அவளைப் பார்த்தீங்களான்னு என்னைக் கேட்டிங்க..."
அவன் சந்தேகம் கேட்க.. 'தெரியாமல் கேட்டு விட்டேன்...' என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் மேகலா...
"நான் அவளப் பார்த்தீங்களான்னு கேட்டது.. வேற ஒன்னுக்காக மாப்பிள்ள..."
"எதுக்காக அத்தை...?"
"நீங்களே அவ இருக்க திசைப்பக்கம் திரும்பிப் பாருங்க.. நான் சொல்லாமலே எதைச் சொல்ல வருகிறேன்னு உங்களுக்குப் புரியும்..."
யோசனையுடன் புருவங்களை சுருக்கிய ராஜராஜன் மனைவியின் பக்கம் பார்த்தான்.. அவனுக்கு அப்படியே 'பேசும் படத்தை'ப் பார்க்கும் உணர்வு ஏற்பட்டது...
அவர்கள் பேசும் வார்த்தைகளின் சப்தம் சிறிதளவு கூட அவர்களின் காதுகளில் விழுகவில்லை.. ஆனால்.. பாலசரஸ்வதியின் முகத்தில் பிரதிபலித்த உணர்வுகளும்.. பாவனைகளும்.. அவள் என்ன பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை அப்படியே உணர்த்தின...
'பார்த்தீங்களா...' என்று அவனது மாமியார் எதற்காக வினவினாள் என்று இப்போது அவனுக்குப் புரிந்தது...
"அந்த லேடி.. நமக்குச் சொந்தம்தானே..?"
"ஆமாம் மாப்பிள்ள.. எனக்கு அண்ணி முறையாகணும்..."
"அவங்களுக்கு நம்ம குடும்பத்து மேலே என்ன பகை..?"
"வரப்புத்தகராறும்.. வாய்க்காத் தகராறும் இல்ல மாப்பிள்ளை... அவங்க வீட்டில கல்யாண வயசில பொண்ணிருக்கு..."
"ஓ.. அதுதான் விசயமா..?" ராஜராஜனுக்கு விளங்கி விட்டது..
"அது அந்தக் கோவத்தில இருக்குது.. நம்ம சரசு அதுகிட்டப் போயி நம்ம வீட்டு விசயத்தை கடை பரப்பிக்கிட்டு இருக்கா..."
"இவள என்ன செய்தால் தேவலை..."
"இப்போதைக்கு இவ வாயை மூடவைத்தால் தேவலை..."
"கவலையே படாதீங்க.. அவள நான் பார்த்துக்கறேன்..."
"இப்போதைக்கு பார்த்துக்குவீங்க..."
"கல்யாணம் முடிகிற வரைக்குமே.. காவல் காக்கிறேன்.. போதுமா..."
"அது போதும் மாப்பிள்ளை..."
நிம்மதிப் பெருமூச்சுடன் மேகலா.. மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றாள்... ராஜராஜன் மனைவியைக் கவனிக்கச் சென்றான்...
கணவன் வந்ததைக் கூடக் கவனிக்காமல் தலையைத் தலையை ஆட்டி ரகசியம் பேசிக் கொண்டிருந்தாள் பாலசரஸ்வதி... அவளாக திரும்பிப் பார்ப்பாள் என்று பொறுமை காத்த ராஜராஜன்
அவளுக்கு திரும்பிப் பார்க்கும் உத்தேசமே இல்லையென்று கண்டு கொண்டவனாக அவளின் தோளைத் தட்டினான்...
"த்ச்சு..."
யாரோ பேச்சின் ஊடே தொந்தரவு செய்கிறார்கள் என்ற நினைவில் அதிருப்தியுடன் சூள் கொட்டிவிட்டு பேச்சைத் தொடர்ந்தாள் பாலசரஸ்வதி...
'திரும்பிப் பார்க்கிறாளான்னு பாரு...'
பல்லைக் கடித்த ராஜராஜன்.. மீண்டும் அவளது தோளைத் தட்டி அவள் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயற்சி செய்தான்...
"த்ச்ச்ச்... சு..."
இந்த முறை பலமான அதிருப்தி ஒலியுடன் சூள் கொட்டினாள் சரஸ்வதி.. போதாக்குறைக்கு தோளைத் தட்டிய இடத்தில் லேசாக தட்டி விட்டு.. விட்ட இடத்திலிருந்த பேச ஆரம்பித்தாள்...
ராஜராஜனுக்கு கோபம் வீறிட்டது.. அவளது தோளில் ஓங்கித் தட்டினான்.. தட்டல் பலமாக இருந்ததில் சரஸ்வதியின் தோள்பட்டையில் பலமான வலி 'சுளீர்..' என்று ஏற்பட 'யார் அது..?' என்ற கோபத்துடன் திரும்பிப் பார்த்த சரஸ்வதியின் முகத்தில் பிடிபட்டு விட்ட உணர்வு தோன்றியது...
"என்னடி..?" ராஜராஜன் அழுத்தமான குரலில் வினவினாள்..
"ஒன்.. ஒன்னுமில்லையே..." சரஸ்வதி தடுமாறினாள்..
"ஏண்டி.. நாம எதுக்கு வந்திருக்கோம்.. நீ என்ன வேலையைச் செய்துக்கிட்டு உட்கார்ந்திருக்க...?"
"என்ன செய்கிறேன்..? அத்தை கூடப் பேசிக்கிட்டு இருக்கேன்..."
"பேச்சுவார்த்தையெல்லாம் பலமாய் இருக்கு..?"
"சும்மா.. வீட்டுக் கதையைப் பேசிக்கிட்டு இருந்தோம்..."
"இருந்தோம்ன்னு சொல்லாதே.. இருந்தேன்னு சொல்லு.. நானும் அப்போதிருந்து பார்க்கிறேன்.. உன் வாய் மட்டும்தான் அசையுது.. அங்கே ஒன்னையும் காணோமே.."
ராஜராஜன் பற்களைக் கடித்தபடி ரகசியக் குரலில் பேசிய விதத்தில் அவனது அதீதமான கோபம் வெளிப்பட.. சரஸ்வதி கையைப் பிசைந்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -74
அம்மம்மா.. கேளடி தோழி...! -74
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-74.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-74.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy