அம்மம்மா.. கேளடி தோழி...! -73

73 பார்த்த விழி பார்த்திருந்தேன்... பாவை மனம் புரியவில்லை... "வாராயென் தோழி வாராயோ...              மணப்பந்தல் காண வாராயோ.....


73
பார்த்த விழி பார்த்திருந்தேன்...
பாவை மனம் புரியவில்லை...

"வாராயென் தோழி வாராயோ...
             மணப்பந்தல் காண வாராயோ..."
திருமண மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்டபடி காரை விட்டு இறங்கி தென்காசிப் பட்டினத்தின் தரையில் கால் பதித்தாள் ராதிகா...
கண்சிமிட்டும் வர்ணப் பூக்களாக... கண்சிமிட்டிக் கொண்டிருந்தன மண்டபத்தைச் சுற்றி வளைக்கப் பட்டிருந்த சீரியல் விளக்குகள்...
பிரம்மாண்டமான அந்த மண்டபத்தின் முன்புறத்தில் வரிசைவரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்களின் அணிவகுப்பு... பால முரளியின் பணக்காரப் பெருமையை பறைசாற்றியது...
அதே நேரத்தில்... மணமகள் திருமண மண்டபத்தில் கால் பதித்த அந்தத் தருணத்தில் ஒலிபரப்பியில் ஒலித்த பழைய பாடல் அந்த மக்களின் கிராமிய கலாச்சாரத்தை அறிவுறுத்துவதாக இருந்தது...
நாதஸ்வர ஓசையுடன்... மண்டபத்திலிருந்து வெளிப்பட்ட மாப்பிள்ளை வீட்டார்... பெண் வீட்டாரை சம்பிரதாயப்படி வரவேற்றுவிட்டு... ராதிகாவிற்கு ஆரத்தி எடுத்து மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றார்கள்...
பளிங்குக் கற்களால் இழைக்கப்பட்டிருந்த திருமண மண்பத்தின் உட்புறத்தைப் பார்த்ததும் கீதா பிரமித்துப் போய்விட்டாள்...
"வாவ்.. நம்ம ஏரியா அளவுக்கு பெரிசா இருக்குடி ராது... நீ கொடுத்து வைத்தவ... போ..."
இதைக் கேட்ட அந்தக் கொடுத்து வைத்தவளோ... இதயத்திலிருந்து வெளிப்பட்ட பெருமூச்சை அடக்கிக் கொண்டாள்...
'மண்டபம் பெரிசா இருந்து என்ன பண்ண..? நாளைக்கு காலையில் எனக்குத் தாலிகட்டப் போகிறவனின் மனசில எனக்குன்னு துளியளவாவது இடமிருக்குமா...?'
அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்த பெரிய வீட்டுப் பெண்மணிகளின் வைர ஒளிர்வைக் கவனித்த ராஜேஸ்வரியின் முகத்தில்கூட ஒளிர்வு வந்தது...
'பரவாயில்ல... மாப்பிள்ளையும்... மாப்பிள்ளையோட அக்காவும் திமிர் பிடிச்சவங்களா இருந்தாலும்... சங்கரை விட பணக்காரங்களாத்தான் இருக்காங்க...'
பணமிருந்தால் போதுமா..? குணமிருக்க வேண்டாமா..? என்ற சிந்தனைக்கே அவள் போகவில்லை...
பாலமுரளி குணக்குன்று என்று அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.. பாலசரஸ்வதியும் கூட வலியத்தான் திமிர் பிடித்தவளின் முகமூடியை மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்பது அவளின் கணிப்பு...
'அந்தம்மா மேகலா... அப்படியே கருணைக் கடலா இருக்காங்க... கொஞ்சம்கூட பணக்காரத்தனமில்லை... ஒரு தலைக் கனமில்லை... சங்கரின் அம்மாவைப் போல ரப்பு இல்லை... ராங்கி இல்லை... திமிர் இல்லை... தெனா வெட்டு இல்லை... அவங்க வயித்திலே பிறந்த பிள்ளைகளுக்கு மட்டும் அதெல்லாம் வந்துருமா.. என்ன? அவங்க அப்படியா பிள்ளைகளை வளர்த்திருப்பாங்க...?'
ராஜேஸ்வரியின் சிந்தனை இப்படித்தான் போனது..
"அம்மா.. நமக்குன்னு மண்டபத்தில் நாலு ரூம் ஒதுக்கியிருக்காங்களாம்... நம்ம சொந்தக்காரங்களுக்கு ஹோட்டலில் ரூம் புக் பண்ணியிருக்காங்களாம்.. போகவர நாலு காரையும் கொடுத்திருங்காங்க..."
கீதா தகவல் ஒலிபரப்பினாள்...
ராஜேஸ்வரிக்கு மாப்பிள்ளை வீட்டாரின் அதீதக் கவனிப்பு மனதிற்கு இதத்தைக் கொடுத்தது... ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறுக்கமாக முகத்தை வைத்தபடி...
"ஓஹோ..." என்று மட்டும் சொன்னாள்...
"அடேங்கப்பா... ராஜி... உன் பொண்ணுக்கு பணக்கார இடத்திலே மாப்பிள்ளை கிடைச்சிருக்குன்னு சொன்னாங்க... இவ்வளவு பெரிய பணக்காரங்கன்னு யாரும் சொல்லவே இல்லையே.. இங்கே வந்து பார்த்த பின்னாலேதானே தெரியுது... உன் பெரியப்பா மகளுக்கும் ஒரு சம்பந்தம் அமைஞ்சது... நம்மள விட கொஞ்சம் வசதி கூடுதல்... அவ அதுக்கே என்னமாய் அலட்டினா தெரியுமா..? நீ இவ்வளவு பெரிய இடத்திலே பெண்ணைக் கொடுக்கப் போகிற... ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி பெருமையாய் பேசலயே..."
ராஜேஸ்வரியின் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி நேரம் காலம் தெரியாமல் ராஜேஸ்வரியைப் புகழ்ந்து வைக்க... கிருஷ்ணமூர்த்தி...
'கேட்டுக்கிட்டியா...' என்ற ஒரு பார்வையை மனைவியின் மீது வீசி வைத்தார்...
கணவரின் முன்னிலையில் தந்நிலையை விட்டுக் கொடுக்க முடியாத சூழலில் மாட்டிக் கொண்ட ராஜேஸ்வரி... உறவுக்காரப் பெண்மணியின் புகழ்ச்சியை காதில் வாங்கிக் கொள்ளாததைப் போல முகத்தை வைத்துக் கொண்டு...
"சரிசரி.. நம்ம பக்கத்து ஆளுகளுக்கெல்லாம் ஹோட்டலில் ரூம் போட்டிருக்காங்களாம்.. போய் குளிச்சு.. டிரெஸ் பண்ணிக்கிட்டு வாங்க... நைட்டு சாப்பிட்ட பின்னாலே தூங்கப் போயிக்கலாம்..." என்றாள்...
"அதுவும் சரிதான்..."
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது காபியும்... டிபனும் அவர்கள் இருந்த இடத்திற்கே தேடிவந்தது... அதைக் கொண்டு வந்த பணியாள்களின் கவனிப்பில்... கொதித்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி குளிர்ந்து விட்டாள்...
"இது என்ன ராஜி... இங்கே பொண்ணு வீட்டுக்காரங்க நாமளா... இல்ல.. அவங்களா...? இப்படி விழுந்து.. விழுந்து கவனிக்கிறாங்க...! என் பொண்ணு கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. உங்களுக் கெல்லாம் ஒரு கணக்கான்னு முகத்தை வைச்சுக்கிட்டு கண்டுக்கவே இல்லை தெரியுமா... ஒப்புக்கு வாங்கண்ணு சொல்கிறதைப் போல தலையை அசைச்சுட்டு...அதுவே அதிகம்ன்னு சொல்கிறதைப் போல முகத்தை வைச்சுக்கிட்டு போனவங்கதான்.. நாங்களா டைனிங் ஹாலுக்குப் போய் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டோம்.. இங்கே கதையே வேறயா இருக்கே ராஜி..."
'வயிறெரியாதேடி...'
வெளிப்படையாகச் சொல்ல முடியாமல்... லேசாக சிரித்து வைத்தாள் ராஜேஸ்வரி...
அதற்குள் கிருஷ்ணமூர்த்தியின் ஒன்று விட்ட தம்பி... அடுத்த பிரமிப்பை வெளிப் படுத்தினார்...
"மனுசங்கன்னா.. இவங்கதான் மனுசங்க அண்ணா..."
"அதைச் சொல்லு..."
"துரும்பைக் கிள்ளிப் போட்டு அதை மாப்பிள்ளைன்னு சொன்னாலும்.. அது உடனே அவ்வளவு கெத்து காட்டுமாம்..."
"என்ன சொன்ன... என்ன சொன்ன..? திருப்பிச் சொல்லு..."
சங்கரின் பெற்றோர் காட்டிய அலட்சியத்தைச் சுட்டிக் காட்டிய ராதிகாவிடம் ராஜேஸ்வரி சொன்ன வார்த்தைகள் இவை... அதை நினைவு கூர்ந்தவராக மனைவியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி... ஒன்று விட்ட தம்பியை ஊக்கப் படுத்தினார் கிருஷ்ணமூர்த்தி...
ராஜேஸ்வரிக்கா கணவரின் யுத்தி தெரியாது..? அவள் வெட்டும் பார்வையை கணவரின் மீது வீசியபடி...
"போதும்.. போதும்... விடிஞ்சா மகளுக்குக் கல்யாணம்.. அதை நினைப்பில வைச்சுக்கிட்டா தேவலாம்..." என்றாள்...
"ஏண்டி... இதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கனுமா..? கிருஷ்ணமூர்த்தி பதிலுக்கு கேட்டார்..."
"எங்கே...? அந்த நினைப்பைத்தவிர.. வேற ஆயிரம் நினைப்புத்தானே உங்க மனசில் ஓடுது..." ராஜேஸ்வரிக்கு முகவாயை இடிக்க தோள்பட்டை வசதியாக இருந்தது...
"என்னண்ணா.. அண்ணி இப்படிச் சொல்கிறாங்க..."
"இவளுக்கென்னப்பா.. வந்த இடத்திலும் இவ சாம்ராஜ்யம்தான் நிமிர்ந்து நிற்கனும்ன்னு நினைப்பு..."
எரிச்சலுடன் கிருஷ்ணமூர்த்தி தன்னயறியாமல் சொல்லிவிட.. அதற்கும் ஒரு அனல்பார்வை வீச்சு... ராஜேஸ்வரியிடமிருந்து வெளிப்பட்டு பறந்து வந்து அவரைத் தாக்கியது...
அதற்குள்... காபி டிபனை உறவினர் கூட்டம் ஒருகை பார்த்து முடித்து விட... அவர்களை ஹோட்டல் அறைகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கும் பொறுப்பு... சுந்தரின் தலைமேல் சுமத்தப்பட்டது...
"இன்னைக்காவது என்னை நிம்மதியா இருக்கவிடறிங்களா...?" அவன் பங்குக்கு அவன் சண்டைக்கு வந்தான்...
"ஏண்டா..?" கிருஷ்ணமூர்த்திக்கு மகனின் கோபம் புரியவில்லை...
"இங்கே வந்தும் எனக்கு வேலை கொடுத்தாகனுமா...?" சுந்தர் நியாயம் கேட்டான்...
"நீதானேடா.. உன் அக்காக்களுக்கு கூடப் பிறந்தவன்..." கிருஷ்ணமூர்த்தி மகனுக்கு சமாதானம் சொன்னார்...
"அப்ப... குட்டிப் பிசாசு கல்யாணத்திலயும் எனக்கு இதே பிழைப்புத்தான்னு சொல்லுங்க..." அவன் வருங்காலத்தை நினைத்து பெருமூச்சு விட்டான்...
"போதும்டா... பெரிசா பீலிம் காண்பிக்காதே... அவனவன் கூடப்பிறந்த அக்கா.. தங்கைக்காக..பாசமலர் வளர்க்கிறானுக... மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாளன்னு பாட்டெல்லாம் பாடறாங்க... நீ என்னவோ இந்த வேலைக்கு இப்படிச் சலிச்சுக்கறியே..." கீதா உதட்டைச் சுழித்து தம்பிக்கு அழகு காட்டினாள்...
"ஹலோ... அது தங்கையைப் பார்த்து அண்ணன் பாடின பாட்டு... உன்னைப் போல குட்டிப் பிசாசைப் பார்த்து தம்பி பாடின பாட்டு இல்லை... நீ படுத்தற பாட்டுக்கு... பாசப்பயிரையா வளர்க்க முடியும்...? பெரிசா கனவு காணாதே..." சுந்தர் அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான்...
அது எப்படி... கிருஷ்ணமூர்த்திக்கு மகனாகப் பிறந்துவிட்டு.. அவர் வீட்டுப் பெண்பிள்ளைகளின் வாயை அடைப்பதைப் போல சாமர்த்தியமாக சுந்தருக்குப் பேச வருகிறது என்று அவருக்கு பிரமிப்பாக இருந்தது...
தமக்கைகளுக்கு சரிக்கு சரியான சவாலை விடும் சிங்கக் குட்டியைப் பெற்று விட்ட பூரிப்பு அவர் முகத்தில் நிலவுவதை நொடிப் பொழுதில் கண்டு பிடித்து விட்டாள் ராஜேஸ்வரி...
"சுந்து.. வாயடிக்கிறதை நிறுத்திட்டு... நம்ம சொந்தக்காரங்களை ஹோட்டல் ரூமுக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போக முடியுமா... முடியாதா..?"
ராஜேஸ்வரியின் இந்தக் கேள்விக்கு... முடியாது என்ற பதிலைச் சொல்ல சுந்தரால் முடியுமா...?
அவன் அவசரமாக... வாயை மூடிக் கொண்டு... உறவினர்களுடன் இடத்தைக் காலி செய்தான்...
'எப்படி...?' என்ற பார்வை ராஜேஸ்வரியிடமிருந்து வெளிப்பட்டது....
ஆனானப்பட்ட கீதாவினாலேயே அடக்க முடியாத அவர்களின் புத்திரனை... ஒரே அதட்டலில் அடக்கி தன் வழிக்குக் கொண்டு வந்து விட்ட மனைவியின் ஆளுமை மீதான பொறாமையுணர்வு... என்றும் போல இன்றும் கிருஷ்ணமூர்த்தியின் மனதில் எழுந்தது...
வீட்டின் அதிகார மையத்தின் மையப் புள்ளியாக அவள் நிலை கொண்டிருப்பதின் சூட்சுமத்தைக் கண்டு கொள்ள அவரால் முடியவில்லை...
ராஜேஸ்வரி அவருடைய கவலையைப் பற்றிக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை... அவள் மடமடவென்று இளைய மகளுக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தாள்...
"கீதா... மசமசன்னு நிற்காம வேலைகளைப் பாரு..."
"ஆகட்டும்மா..."
"நமக்கு இங்கே நாலு ரூம் கொடுத்திருக்காங்க.. அக்காவோட ரூமில் நீயும் தங்கிக்க... அவளைப் பார்த்துக்க..."
"ம்ம்ம்..."
"அப்பாவும்.. சுந்துவும்... இன்னொரு ரூமில் தங்கிக்கட்டும்..."
"நீங்க...?"
"நகை.. பெட்டிகளை ஒரு ரூமில் அடுக்கு... நான் அங்கே தங்கிக்கறேன்... மீதி இருக்கிற ரூமில... நம்ம பக்கத்து சொந்த பந்தம்.. உட்கார்ந்து எழுந்திருக்கட்டும்..."
யோசித்துச் செயல்படும் தனது திறனை... அங்கேயும் கணவருக்கு உணர்த்தினாள் ராஜேஸ்வரி... ஏன்... குடும்பத்தின் அதிகாரமையம்... அளிடம் மையம் கொண்டிருக்கிறது என்ற அப்போது தான் கிருஷ்ணமூர்த்திக்குப் புரிந்தது...
'இந்த யோசனை எனக்கு வரலையே...'
மனைவியின் முன் யோசனையில் அவர் மகிழ்ந்து போய் விட்டார்... தூக்கத்திலும்.. பொருள்களைக் காக்கும் அவள் குணத்தில் அவள் மீதான மதிப்பு அவருக்குள் அதிகரித்தது...
கீதா பெட்டிகளை ராஜேஸ்வரியின் அறைக்குள் அடுக்கி வைத்தாள்.. மணப் பெண்ணை இருபக்க உறவினர்களும் வந்து வந்து பார்வையிட்டுப் போய் கொண்டிருக்க... மணமகளுக்கான அறையில் காட்சிப் பொருளைப் போல ஒரு நாற்காலியில் அழகுப்பதுமையாக அமர்ந்திருந்தாள் ராதிகா...
உறவினர்களுக்கு என்று ராஜேஸ்வரி ஒதுக்கி வைத்திருந்த அறையில் உறவினர்களின் கூட்டம் குழுமியிருந்தது... கிருஷ்ணமூர்த்தி ஒரு குளியலைப் போட்டு விட்டு.. இரவு விருந்துக்கு தயாராகலாம் என்ற எண்ணத்தோடு.. குளியலறைக்குள் புகுந்தார்... அவர் குளித்து முடித்து வந்தபோது.. சுந்தர் ஹோட்டலில் இருந்து திரும்பியிருந்தான்...
"நீயும் குளிச்சு.. டிரெஸ் சேன்ஜ் பண்ணிக்க சுந்து..."
"இப்பவாவது இதைச் சொல்லனும்னு உங்களுக்குத் தோணுச்சே..."
அவர்கள்... இரவு விருந்துக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்... கீதாவை அதட்டி.. ராதிகாவைக் குளிக்க வைத்து... ஒப்பனை செய்யச் சொன்னாள் ராஜேஸ்வரி...
"அதுக்கு ஆள் வந்திருக்காங்கம்மா..." கீதா சிணுங்கினாள்...
"அதுக்காக... நீ அப்படியே விட்டு விடுவியா..." ராஜேஸ்வரி இளைய மகளை முறைத்தாள்...
"சரி... சரி.. அவளை நலங்குக்கு ரெடி பண்ணி.. சபைக்கு அழைச்சுக்கிட்டு வர்றது என்னோட பொறுப்பு.. ஓகேயா..?" கீதா வெற்றிகரமாக.. வெள்ளைக் கொடியை பறக்கவிட்டாள்...
திருமண நாளுக்கான கொண்டாட்டம்.. அங்கிருந்த அத்தனை பேரின் மனதிலும் இருந்தது.. ராதிகாவைத் தவிர....



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -73
அம்மம்மா.. கேளடி தோழி...! -73
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-73.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-73.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy