அம்மம்மா.. கேளடி தோழி...! -71

71 நீ கொல்வதில் எனக்குச் சம்மதம்தான்.. கொல்வது உன் கைகளாக இருப்பதினால்.. "இப்படிப்பட்ட ஒரு துரோகியை என் வாழ்நாளில் நான் சந்த...


71
நீ கொல்வதில் எனக்குச் சம்மதம்தான்..
கொல்வது உன் கைகளாக இருப்பதினால்..

"இப்படிப்பட்ட ஒரு துரோகியை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே இல்லைடி... ச்சீ.. நீயும் ஒரு பெண்ணா..? உன்னைப் போய் காதலித்தேனே.. எனக்கே என்மேல் வெறுப்பாய் இருக்குடி..."
பாலமுரளியின் வார்த்தைகள் உமிழ்ந்த வெறுப்பில் ராதிகா விக்கித்துப் போய் விட்டாள்...
"முரளி..."
"ச்சீ... என் பெயரைச் சொல்லாதே.. உனக்கு அதற்கான அருகதை கிடையாது.. உன்னை எந்த அளவுக்கு என் மனசில கொண்டாடினேன்..? நீ இந்த அளவுக்கு இறங்கிப் போனவளா இருக்கியே..."
"முரளி..."
"என் பெயரைச் சொல்லாதேன்னு சொன்னேனில்ல.. தென்காசிப் பட்டினத்தில வந்து கேட்டுப்பாரு.. என் பெயரைச் சொல்ல.. வயசில் பெரிய மனுசங்களும்.. பணத்தில் பெரிய மனுசங்களும் கூடயோசிப்பாங்க.. நீ தைரியமாய் என் முகத்துக்கு நேரேயே பெயரைச் சொல்லிக் கூப்பிடற.. இது யார் கொடுத்த தைரியம்..? உனக்கெப்படி இந்த உரிமை வந்துச்சு...?"
"ப்ளீஸ்... நான் சொல்கிறதைக் கேளுங்க..."
"இத்தனை நேரமும் நீ சொன்னதை அவன் கேட்டுக்கிட்டு இருந்தான்.. இப்போ.. நான் கேட்கனுமா..? நேரத்துக்கு ஒரு ஆளை மாற்றுவியா...?"
காதுகளில் தேன் பாய்வதைப் பற்றித்தான் பாரதியார் சொல்லிப் படித்திருக்கிறாள்.. அமிலத்தைக் காய்ச்சி காதில் ஊற்றுவதைப் பற்றி யார் சொல்லியும் அவள் படித்ததுமில்லை.. கேட்டதுமில்லையே...
அமிலம் பாய்ந்த காதுகளைப் பொத்திக்கொண்டு.. ரணமான மனத்துடன் அதன் வலி தாங்கமாமல் துடித்துப் போனாள் ராதிகா..
"கடவுளே..!"
அவளின் கதறல் அவன் மனதைத் தொடவில்லை.. மாறாக அவன் கோபத்தைத்தான் அதிகப் படுத்தியது...
"கடவுளை ஏண்டி கஷ்டப்படுத்தற...? உன்னை மாதிரி ஆளுக எல்லாம் கடவுள் பெயரைச் சொல்லலாமா..?"
"நான் என்ன செய்தேன்னு சொல்லுங்க... ஏன் இப்படிப் பேசி என்னை சித்திரவதை பண்றீங்க..."
"ஓ.. இது வேற பழியா..? போ... போய் இதையும் அவனிடம் சொல்லு... அதான் நேத்தே அவனுக்கு தூது சொல்லி விட்டிருக்க இல்ல.. அந்த ஹேமாவைக் கூப்பிட்டு தூது சொல்லி அனுப்பு..."
"நான் ஹேமாவிடம் எதுவும் சொல்லலை முரளி..."
"திரும்பவும் என் பெயரைச் சொன்னேன்னு வை.. அடித்துப் பல்லைக் கழட்டி விடுவேன்.. அதான் அவன் தெள்ளத் தெளிவா சொன்னானே.. ஹேமா சொல்லித்தான் அவன் வந்தான்னு பிட்டுப்பிட்டு வைச்சானே.. என்ன சொல்லி விட்ட..? அன்னைக்கு மகாபலிபுரத்துக்குப் போய் அவனிடம் என்ன சொல்ல நினைச்சியோ.. அதைச் சொல்லி விட்டயா...?"
"மு..." என்னு ஆரம்பித்தவள் அவன் பெயரைச் சொல்ல முடியாமல் வாய் பொத்தினாள்.. அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது...
"இல்லை.. அப்படியெல்லாம் நான் எதுவும் சொல்லி விடலை..." அவள் மன்றாடினாள்...
"நான் கேணயனில்லைடி..." அவன் நம்பத் தயராக இல்லை...
"என் காதால் கேட்டேனே.. அவன் உன்னிடம் பேசின முத வார்த்தையில இருந்து.. கடைசி வார்த்தை வரைக்கும்.. அத்தனை வார்த்தைகளையும் அட்சர சுத்தமாய் கேட்டேனே..."
"அவர் புரியாம எதையோ பேசினா.. அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன்...?"
"புரிஞ்சுதாண்டி பேசினான்.. புரியாம உன்னிடம் மயங்கிப்போய் கிடந்தவன் நான்தான்.. மச்சான்னு காலையிலே சொல்லித் தொலைச்சியேடி.. அதில மயங்கிப் போனவன்.. பதினொரு மணிக்கே வந்து தொலைச்சிட்டேண்டி.. எனக்குத் தெரியாம போச்சே.. அவனை வரச்சொல்லி... அவனிடம் பேசத்தான் பரிட்சை எழுதப் போவதா நீ நாடகம் போட்டேன்னு எனக்குத் தெரியாம போச்சே..."
"இல்லை..." ராதிகா அழுது விட்டாள்...
இப்படியெல்லாம் வினை வருமென்று அவள் நினைத்தா பார்த்தாள்..?
"நான் எக்ஸாம் எழுதத்தான் வந்தேன்.. நம்புங்க.."
"அப்பறம் எப்படி அவன் இங்கே வந்தான்...?"
"எனக்குத் தெரியாது..."
"என்னை நம்பச் சொல்கிறியா.. இன்னும் உன்னை நம்ப நான்ஒன்னும் முட்டாளில்லைடி... எனக்கு மயக்கம் தெளிஞ்சாச்சு..."
'என் மயக்கம் தெளியலையே...'
ராதிகா அவனை ஏக்கத்துடன் பார்த்தாள்...
ரௌத்திரத்தில் வெளிப்பட்ட அவனது ஆண்மை நிறைந்த கம்பீரத்தில் அவள் மனம் சிக்குண்டு தத்தளித்தது.. மிக அருகில் அமர்ந்திருந்தவனின் மனம்.. அவளால் தொட்டு விட முடியாத தொடு வானாக நெடுந் தொலைவில் விலகியிருப்பதை உணர்ந்தவளாக அவள் திகிலடைந்து போனாள்.. அவள் அவனின் தொடுகையை உணர்ந்தவள்.. இந்த நொடியில் அவன் மீதான அவளது தாபத்தில் அவன் விரல் தொட்டு விட மாட்டானா என்று அவள் ஏங்கினாள்..
அந்த ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் அவன் தீயாக அவளை நாவால் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தான்...
"வந்து விடுன்னு சொன்னானே.. எப்படி? அவன்கூடப் போய் விடனும்னு உனக்கு உத்தேசமா..?"
"தயவு செய்து இப்படிப் பேசாதீங்க..."
"இதை அவனிடம் நீ சொல்லலையே.. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னானே.. அதுக்குப் பின்னாலே என்ன..? முதலிரவா..? அவன் கூடவும் முதலிரவைக் கொண்டாடுவியா..?"
"சீச்சீ..."
ராதிகா அருவெறுத்து அவனைப் பார்க்க... அவன் மனதில் தணல் கொஞ்சம் தணிந்தது.. அவளின் அந்த அருவெறுப்பில் அவன் அவளையே இமைக்காமல் பார்த்தான்...
"இப்போ இப்படிச் சொல்றவ.. அவனிடம் எதையும் சொல்லலையே... மறுத்துப் பேசாம நின்னயே... கல்யாணம்ன்னா அடுத்து என்ன நடக்கும்...? அதுதானே நடக்கும்...?"
"எனக்கு இந்தப் பேச்சு பிடிக்கலை..."
"உனக்கு என்னைக் கூடத்தான் பிடிக்கலை.. அதனால விட்டுத் தொலைச்சுட்டுப் போக என்னால முடிஞ்சதா..? சொல்லியிருக்க வேண்டியது தானே.. நமக்குள்ளே என்ன நடந்ததுன்னு அவனிடம் சொல்லியிருக்க வேண்டியதுதானே.. ஒருவேளை இதைத்தான் ஹேமாவிடம் நீ சொல்லி அனுப்பினயோ.."
"இது நமக்குள்ளே நடந்த ரகசியம்..."
"இப்படிச் சொன்னதை நானும் நம்பினேண்டி.. உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் நமக்குள்ள காதல் இருக்குன்னு சொல்லி வைச்சேன்.. கடைசிவரை அந்த ரகசியம் நம்மோடயே இருக்கும்ன்னு நினைச்சேன்.. அந்தரங்கத்தை நீ அம்பலப் படுத்திட்டியேடி..."
"நான் யாரிடமும் சொல்லலை..."
"ஹேமாவிடம் சொல்லியிருக்க... அவ சங்கரிடம் சொல்லியிருக்கா..."
"இல்லவே இல்லை..."
"இதை நான் நம்ப மாட்டேன்.. உனக்கு எது நடந்திருந்தாலும் நான் பொருட்படுத்த மாட்டேன்னு அவன் எதுக்காக சொன்னான்..?"
"எதுக்காக இதை அவர் சொன்னாருன்னு எனக்குத் தெரியாது.. ஆனா இதுதான்னு எதையும் அவர் நிச்சயமாய் சொல்லலையே.. நீங்க சொல்கிறதைப் போல ஹேமாவிடம் நான் உண்மையை சொல்லியிருந்தா.. அதைச் சொல்லித்தானே அவர் பேசியிருப்பார்...?"
ராதிகாவின் கேள்வியில் பாலமுரளி நிதானித்தான்.. ஆனாலும் அவனது முகச்சுளிப்பு மறையவேயில்லை...
"எதுவோ நடந்திருக்குன்னு யூகிச்சிருக்கானே.. அது எதனால்..? ஹேமா சொன்னான்னு சொன்னானே.. அவ எதைச் சொன்னா..? நீ அவளிடம் எதைச் சொல்லிவிட்ட..?"
"ஐயோ.. நான் அப்படி எதையும் அவளிடம் சொல்லி விடவே இல்லையே.. உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா இப்பவே வாங்க.. அவ காலேஜில்தான் இருப்பா.. உங்க முன்னாலேயே அவளைக் கேள்வி கேட்கிறேன்..."
"என்ன கேட்ப...?"
"அவளிடம் நான் என்னத்தைச் சொன்னேன்னு கேட்பேன்..."
"அவ அதை என் முன்னாலே சொல்லிட்டுத்தான் வேற வேலையைப் பார்ப்பா.. போடி.. போ.. என்னிடமே ஆட்டம் காட்டறியா..?"
"நீங்க வேணும்னா மறைஞ்சு நில்லுங்க..."
ராதிகா தன்னை நிருபிக்கும் வேகத்தில் சொல்ல.. பாலமுரளியின் விழிகளில் நெருப்புப் பொறி பறந்தது.. அவன் பல்லைக் கடித்தான்..
"உன்னைப் போய் காதலிச்சுத் தொலைச்சதினாலே.. மறைஞ்சு நின்னு ஒட்டுக் கேட்கிறதையே நான் என் பிழைப்பாய் வைச்சுக்கனுமா..?"
"நான் அப்படிச் சொல்லலை..."
"இப்பத்தாண்டி.. நீயும் அவனும் நெகிழ்ந்து உருகிப் பேசறதை மறைஞ்சு நின்னு கேட்டேன்... அதுக்கே எனக்கு 'ச்சீ'ன்னு ஆகிப் போச்சு.. என் லெவலுக்கு இதெல்லாம் எனக்குத் தேவையா..?"
ராதிகா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து விழித்தாள்...
அதைப் பார்த்தவனின் புருவ முடிச்சு இன்னும் இறுகியது...
"இப்படித்தானேடி அவனையும் பார்த்த..?" என்று அவன் கேட்டு வைத்தான்...
பேசாமல் கடலில் போய் விழுந்து விடலாமா என்று ராதிகாவிற்கு தோன்றிவிட்டது... அவனது பேச்சைத் தாங்க மாட்டாமல் அவள் நொந்து நூலாகிக் கொண்டிருந்தாள்.. அவன் அதை உணர்ந்து கொண்டவனாகவே தெரியவில்லை... விடாமல் அவளை எண்ணைச் சட்டியில் போட்டு வறுத்துக் கொண்டே இருந்தான்...
"சங்கர்... சங்கர்ன்னு மட்டும் சொல்லிவைக்கிற.. அவன் பெயரைத் தாண்டி வேற பேச்சே வரமாட்டேங்குது.. இஞ்சி இடுப்பழகனைப் பார்த்தா வாயில காத்துத்தான் வரும்.. வார்த்தை வராதுன்னு கேள்விப் பட்டிருக்கேன்.. இந்த இஞ்சி இடுப்பழகனைப் பார்த்த உனக்கு பெயர் மட்டும்தான் வாயில வரும் போல இருக்கு.. அதென்னடி அவனைப் பார்த்தாலம் சங்கர்.. சங்கர்ன்னு பினாத்தற.. அதே வாயாலே என்னையும் பார்த்து.. முரளி.. முரளின்னு பினாத்தறே.. எப்படிடீ.."
அவனுடைய பெயரை அவள் உச்சரித்ததும் ஏன் அவன் கோபம் கொண்டான் என்று இப்போது அவளுக்குப் புரிந்தது...
"சரியான ஆளுடி நீ.. ஒரு நிமிசத்தில ஆள் மாற்றி மாற்றிப் பேசற.. இப்படி நடிக்க எங்க கத்துக்கிட்டடீ..."
'இதுக்குன்னு ஒரு டியுசன் சென்டர் ஆரம்பிச்சிருக்காங்கடா..'
அவள் நெந்து போனவளாக தலையைப் பிடித்துக் கொண்டாள்.. இனி அவள் என்ன சொன்னாலும் அவன் காதுகளில் ஏறப்போவதில்லை என்று மிகத் தெளிவாக அவளுக்குப் புரிந்து விட்டது...
"ஒன்னைப் புரிஞ்சுக்க..."
'நீ முதலில் என்னைப் புரிஞ்சுக்கடா..'
"நம்ம கல்யாணம் முடிவாகிருச்சு.."
'அப்பாடி.. கல்யாணத்தை நிறுத்த மாட்டான்...'
"இது ஒரு வழிப்பாதைப் பயணம்.. இதில நீ நடந்துதான் ஆகனும்..."
'மாட்டேன்னு யாரு சொன்னா...?'
"இனி நீ திரும்ப நினைச்சாலும் திரும்ப முடியாது.. நான் திரும்பவிட மாட்டேன்..."
'மகராஜனாய் இருப்பேடா.. இப்படியே என்னைப் பாதுகாத்துக்க.. உன் காலடியிலேயே காலம் முழுவதும் நான் கிடப்பேன்..'
"உனக்கு இஷ்டப்பட்ட பாதைன்னு நீ வழி மாறமுடியாது.."
'நீ கல்லையும்.. முள்ளையும்.. கண்ணாடிச் சில்லையும் கூடக் கொட்டிவை.. சந்தோசமாய் நான் நடக்கிறேன்.. எனக்கு உன்னோடு வாழ்கிற ஒர்வழிப் பாதைதான் வேணும்.. வேற பாதை எனக்கு எதற்கு...? இதுதாண்டா நான் இஷ்டப்பட்ட பாதை...'
"அவன் கூப்பிட்டான்னு நீ எதையாவது பண்ண நினைச்ச.. உன்னைக் கொலை பண்ணக்கூட நான் தயங்க மாட்டேன்..."
அந்த நொடியில் அவன் மீது அவளுக்குள் பீறிட்டு எழுந்த காதல் உணர்வை என்றேனும் ஒர்நாளில் அவன் உணர்ந்து கொள்வானா என்று அவள் மனம் தவித்தது...
அவன் உணர்ந்தாலும்.. உணராவிட்டாலும்.. அவளுக்கு அவன்போதும்.. அவன் வெறுத்தாலும்.. விரும்பினாலும்.. அவளுக்கு அவன் நிழல் போதும்.. அவன் கொன்றாலும்.. வாழ்ந்தாலும்.. அவளுக்கு அவன் காலடி போதும்...
அவள் பார்வையில் அதை உணர்த்த முயன்றவளைப் பார்த்தவனின் முகம் கடுமையானது.. அவன் விழிகள் வெறுப்பைக் கக்கின..
"இப்படிப் பார்த்தே என்னை மயக்கிரலாமுன்னு திட்டம் போடாதே.. அன்னைக்கு உன்னைத் தொட்டதோடு விட்டிருக்கனும்.. தாலியை மட்டும் கட்டிட்டு ஒதுங்கிப் போய்விடனும்னு நினைச்சவனை இந்தப் பார்வை பார்த்துத்தானே திரும்பவும் ஒரு தடவை தொடவைச்சே.. இனி அது நடக்காதுடி.. நான் தொட்ட உன்னை வேறொருத்தன் கல்யாணம் கட்டக் கூடாது.. அதுக்காக மட்டும்தான் உன்கழுத்தில் நான் தாலி கட்டப் போறேன்.. மத்தபடி.. உனக்கும்.. எனக்குமிடையே இனிமே ஒன்னுமேயில்லடி..."
கடலில் ஒர் பேரலை தோன்றி எழுந்து வந்து ஆவேசமாக கரையில் விழுந்து மீண்டது.. காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவளாக பேரதிர்வுடன் ராதிகா உறைந்து போனாள்...


- இரண்டாம் பாகம் முடிந்தது -





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -71
அம்மம்மா.. கேளடி தோழி...! -71
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-71.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-71.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy