அம்மம்மா.. கேளடி தோழி...! -63

63 நீ   விதைத்த   காதல்   விதை.. செடியாகாமல்   விருட்சமானது... ஷோபாவிற்கு வயிற்றெரிச்சலாக இருந்தது... அவள் நினைத்தது என்ன.. ? இ...


63
நீ  விதைத்த  காதல்  விதை..
செடியாகாமல்  விருட்சமானது...

ஷோபாவிற்கு வயிற்றெரிச்சலாக இருந்தது...
அவள் நினைத்தது என்ன..? இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன..?
சங்கருடனான ராதிகாவின் திருமணப் பேச்சு முறிந்து போனதில் அவளுக்கு எல்லையற்ற சந்தோசம் தான்.. அதற்காக.. பாலமுரளியை ராதிகா திருமணம் செய்து கொள்ளப் போவதில் அவளுக்கு துளிக்கூட சந்தோசமில்லை...
செய்தியைக் கேள்விப்பட்ட சுசிலாவே ஒர்கணம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் என்றால்.. ஷோபாவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சியின் அளவைச் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை...
பரந்தாமனுக்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றுமேயில்லை.. அவருக்கு வேண்டியது நடந்து விட்ட மகிழ்வில் அவர் திளைத்துக் கொண்டிருந்தார்..
"அப்பாடி.. கவலைவிட்டது.. நல்ல வேளையா.. இந்த ராதிகாப் பெண்ணை... உன் பட்டிக்காட்டு சொந்தக்காரன் மேரேஜ் பண்ணிக்கப்போறான்.. நாம சங்கரைக் குறிவைக்கலாம்..."
சுசிலாவிற்கும் அந்த நிம்மதி உண்டென்றாலும்.. ஷோபாவின் திருமணத்திற்கு முன்பாகவே பாலமுரளி திருமணம் பண்ணிக் கொள்வதில் உள்ளூர அவளுக்கு உதைப்பு இருக்கத்தான் செய்தது..
கைக்காவலாய் இருந்த மாப்பிள்ளை கைநழுவிப் போவதில் அவளுக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லைதான்..
ஆனால்.. அவள் உடன் பாட்டை யார் கேட்டார்கள்..?
"சுசி.. நாளைக்கு நம்ம சரஸ்வதியோட தம்பிக்கு சென்னையில நிச்சயம் பண்ண வர்றாங்க.. நாங்களும் வருகிறோம்..."
அகிலா போனில் சொன்னபோது.. அவள் பதறிப் போய்விட்டாள்...
"என்னக்கா.. இப்படிச் சொல்ற..?"
"எனக்கும் உன் நினைப்பு புரியுதுடி.. ஆனா.. நாம என்ன செய்கிறது..? சொல்லு..இன்னார்க்கு இன்னார்ன்னு அன்னைக்கே இறைவன் எழுதி வைச்சிட்டானே.."
"நீ வேற.. நேரம் காலமில்லாம வேதாந்தம் பேசுவ.. பொண்ணுயாராம்..?"
"உன் மக கூடப் படிக்கிறவதானாமே.. சரஸ்வதி சொன்னா..."
"ஷோபா கூடப் படிக்கிறவளா..?"
ஏற்கனெவே.. ஷோபாவுக்கு பார்த்த சங்கர் பெண் கேட்டுப் போனதும் ஷோபாவின் கூடப் படித்த ஒருத்தியைத்தான்...
அடுத்ததாக ஷோபாவுக்கு மண முடிக்க நினைத்திருந்த பாலமுரளியும் ஷோபாகூடப் படித்த ஒருத்தியைத்தான் தேர்வு செய்திருக்கிறான் என்றால் இந்தக் கொடுமையை சுசிலா யாரிடம் சொல்லி அழுவாள்..?
ஊரில்.. உலகத்தில்.. கூடப் பிறந்த பெண்களால் தான் திருமண வயதிலிருக்கும் பெண்களுக்கு சிக்கல் வரும் என்று சுசிலா கேள்விப்பட்டிருக்கிறாள்.. அக்காவைப் பெண் பார்க்க வந்து விட்டு தங்கையைப் பிடித்திருக்கிறது என்று சொல்வார்கள்...
இப்படிக் கூடப் படிக்கிற பெண்களால் கூடவா சிக்கல் வரும்..?
'இந்த ஷோபாவோட ராசியே இப்படித்தானா..'
"ஏன் ஷோபா.. உனக்குக் கூடப் படிக்கிற பெண்களால்தான் பிரச்னை வரும்ன்னு ஜாதகத்தில இருக்கும் போல இருக்கே..."
"ஏம்மா... அப்படிச் சொல்றீங்க..?"
"வேற என்னன்னு சொல்கிறது போ.. அது எப்படித்தான் உனக்குப் பார்க்கிற மாப்பிள்ளைகளை உன் கூடப் படிக்கிற பெண்கள் கணக்குப் பண்ணிராங்களோ.. அது எப்படின்னுதான் எனக்குப் புரிஞ்சு தொலைக்க மாட்டேன்குது..."
ஷோபா பேச முடியாமல் மௌனியானாள்.. இது அவளாக இழுத்து விட்ட இழுவை என்று அவளால் எப்படிச் சொல்லமுடியும்..?
'அன்றைக்கு மட்டும்.. அந்த பர்த்டே பார்ட்டிக்கு ராதிகாவை இன்வைட் பண்ணாம இருந்திருந்தா.. எல்லாமே நல்லாயிருந்திருக்குமே...'
அவள் மனம் ஏங்கியது.. கரைந்து போன பணத்தைக்கூட சம்பாதித்து விடலாம்.. கடந்து போன காலத்தை கைப்பற்றி விட முடியுமா..? நடந்து போன எந்த நிகழ்வுகளையும் மாற்றி அமைக்க முடியாத காலச்சக்கரத்தின் சுழற்சியில்.. அவளால் பாவம் என்ன செய்ய இயலும்..?
சுசிலாவின் அக்கா அகிலா அடிக்கடி சொல்வாள்..
'நெல்லை விதைச்சா.. நெல்லை அறுக்கலாம்.. புல்லை விதைச்சா புல்லைத்தானே அறுக்க முடியும்..' என்று...
ஷோபா.. புல்லைக்கூட விதைக்க முயலவில்லை.. அவளைப் பற்றிய பெருமையை ராதிகாவின் மனதில் விதைக்க முயன்றாள்.. அது இப்படிப்பட்ட விளைவுகளில் கொண்டு வந்து நிறுத்திவிடும் என்று அவள் கனவா கண்டாள்..?
அவளால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான்.. அதை அவள் உடனடியாகச் செய்ய வில்லையென்றால் சுசிலாவுக்கு நெஞ்சுவலி வந்து அறுவைச்சிகிச்சை வரை போய்விடும் அபாயம் இருந்ததால் அவள் அதைச்செய்தாள்..
"அம்மா... சங்கரும்... பாலமுரளியும் பெண் கேட்டுப் போனது வேற.. வேற பெண்களையில்லை.. ஒரே ஒருத்தியைத்தான் அவங்க இரண்டு பேரும் பெண் கேட்டுப் போனாங்க..."
இதைச் சொல்கையில் ஷோபாவின் மனம் கொண்ட வலியை அவளைத் தவிர அறிந்தவர் யாருமில்லை...
"என்ன சொல்கிற ஷோபா..?" சுசிலாவின் விழிகள் விரிந்தன..
தாயின் வியப்பில் ஷோபா தன் தோல்வியை உணர்ந்தாள்.. அது எப்படித்தான் ராதிகாவினால் அவளை எல்லா வகையிலும் தோற்கடிக்க முடிகிறது என்று அவளால் இனம் காண முடியவில்லை...
"ஆமாம்மா.. சங்கர் பெண் கேட்ட ராதிகாவைத்தான் பாலமுரளி நிச்சயம் பண்ணப்போகிறான்..."
"அப்படியா..? அந்தப் பொண்ணு அழகா.. திருத்தமா.. அம்சமாத்தான் இருக்குது.. இப்படிப்பட்ட பிரண்டையெல்லாம் நீ உன் பர்த்டே பார்ட்டிக்கு இன்வைட் பண்ணலாமா ஷோபா..? உன்னை டாமினேட் பண்ணுகிறவங்களை நீ கிட்டவே சேர்த்திருக்கக் கூடாது.."
சுசிலாவின் வார்த்தைகளில் ராதிகாவைப் பற்றிய பாராட்டு மறைமுகமாக பொதிந்திருக்க.. ஷோபா எரிச்சல் பட்டாள்..
"நான் என்ன இப்படியெல்லாம் நடக்கும்ன்னா நினைச்சேன் மம்மி.. அவ நம்மளப் போல ஸ்டேட்டஸில் இருக்கிறவளில்ல.. அதனால அவளைப் பற்றி நான் மைன்ட் பண்ணிக்கல..."
"எல்லாருமே பணத்தைப் பெரிதா நினைக்கிறவங்களா இருக்க மாட்டாங்க ஷோபா... இனிமேலாவது இதை நீ தெரிந்து நடந்துக்க.."
'குணத்தைப் பார்ப்பாங்கன்னு இந்த மம்மி சொல்கிறாங்களா...'
ஷோபா மனதுக்குள் புகைந்தாள்.. ராதிகாவைப் பார்த்த மாத்திரத்தில் அனைவரும் அவளைக் குணக்குன்று என்று எப்படித்தான் கணிக்கிறார்களோ என்று அவளுக்கு ஆற்றாமையாக இருந்தது...
"எது எப்படியோ.. சங்கர் ஃப்ரியாகிட்டான்.. நமக்கு அதுபோதும்.. என்ன ஒன்னு.. பாலமுரளி கையில் வெண்ணையைப் போல இருந்தான்.. அவன் கைநழுவிப் போகிறதுதான் மனதுக்கு கவலையாய் இருக்கு..."
சுசிலாவிற்கு அது மட்டும்தான் கவலையாக இருந்தது.. ஷோபாவுக்கோ.. அவளைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதி படைத்த கோடிஸ்வரனுக்கு மனைவியாக ராதிகா மாறிவிடப் போவதை நினைத்து பெருங்கவலையாக இருந்தது...
தேனூத்தில் இருந்த பாலமுரளியின் வீட்டிற்கு ஷோபா பலமுறை போயிருக்கிறாள்.. பரந்து..விரிந்து... ஒரு பெரிய அரண்மனையை நினைவு படுத்தும் அந்த வீட்டின் கலையம்சம் நிறைந்த சுற்றுச் சுவர் மதில்களையும்.. பிரம்மாண்டமான முன்புறத் தூண்களையும்.. பார்த்து பிரமித்திருக்கிறாள்.. அழகான செடி வளைகளையுடைய அந்தப்புரத்தின் நந்தவனம் போல அமைந்திருக்கும் அந்த வீட்டின் முன்புறத் தோட்டம் ஒரு சுற்றுலாத்தலத்தை போல இருந்ததை உணர்ந்திருக்கிறாள்..
'சங்கரின் வீடு.. இதில் பதினைந்தில் ஒரு பங்குகூட வராது...'
பாலமுரளி மட்டும் அப்பேற்பட்ட வீட்டுடன் சென்னையில் இருந்திருந்தால்... சங்கரின் கவர்ச்சிகரமான அழகைக்கூட மறந்து பாலமுரளியின் மீது மட்டும் ஷோபா கவனத்தை செழுத்தியிருப்பாள்..
அப்படிப்பட்ட மாளிகை தான் பாலமுரளியின் வீடு...
அந்த வீட்டுக்கு உடமைக்காரியாக ராதிகாவை நினைத்துப் பார்க்கக் கூட ஷோபாவுக்கு மனம் தாளவில்லை...
'சங்கரைப் பத்தி அவ பேசின பேச்சையெல்லாம் ரிகார்டு பண்ணி அனுப்பி வைச்சிருந்தேன்.. அதைக் கேட்ட பின்னாடியுமா இவன் ராதிகாவை மேரேஜ் பண்ணிக்கப் போறான்..?'
இந்த ஆண்களின் குணாதிசியங்களை அனுமானிக்கவே முடியவில்லையே என்று தலை காய்ந்து போனாள் ஷோபா...
இந்தமுறை பாலமுரளியும் மேகலாவும் தங்கியிருந்த பண்ணைவீட்டுக்குப் போகாமல்.. ஷோபாவின் வீட்டுக்கு  வந்துவிட்டாள் பாலசரஸ்வதி..
"எங்க குடும்பத்தில.. எங்க சொந்தக்காரங்க வீட்டில தான் தங்குவோம்ன்னு சொல்லிட்டாங்கம்மா.. நானும் எங்க குடும்பதோடதானே தங்கியாகனும்..?"
வார்த்தைக்கு வார்த்தை 'எங்க குடும்பம்' 'எங்க குடும்பம்..' என்று பிரித்துப் பேசிய பாலசரஸ்வதியின் நோக்கம் மேகலாவுக்கு புரிந்தது...
'இவ மனசைப் புண்படுத்தனும்னு நினைக்கிறா...'
மேகலாவா அதற்கு இடம் கொடுப்பார்..?
"நல்ல வேலை செஞ்ச சரசு.. இங்கே நம்ம சொந்த பந்தமெல்லாம் வந்து இறங்கியிருக்காங்க.. நீ வந்தா உன்னை உட்காரச் சொல்லக்கூட இந்த வீட்டில இடமில்ல.. இந்த லட்சணத்தில.. மாப்பிள்ளையையும் சம்பந்தி குடும்பத்தையும் எப்படிக் கவனிக்கப் போகிறோம்ன்னு நான் கதிகலங்கிப் போயிருந்தேன்.. நல்ல வேளையா நீ என்னைக் காப்பாத்திட்ட..."
நீ வராவிட்டால் என்ன..? வீடு நிறையக் கூடியிருக்கும் உறவினர் கூட்டம் கொண்டது என் குடும்பம்.. என்று சொல்லாமல் சொல்லி மகளுக்கு சரியான பதிலடியைக் கொடுத்தாள் மேகலா...
வந்திருந்த உறவினர்களின் முன்னிலையில் அதைப்பற்றிப் பேசினால் யாருக்கு குறைவு என்று பாலசரஸ்வதிக்கு தெரியாதா என்ன..?
அவள் முகம் கருக்க.. கிளம்பிச் சென்றுவிட்டாள்..
"என்ன அண்ணி.. நான் அவளைப் பற்றி அவ்வளவு தூரத்துக்கு எடுத்துச் சொல்லியும் இப்படி வந்து மாட்டிக்கிட்டிங்க.."
ராஜராஜன் இல்லையென்ற நினைவில் பாலசரஸ்வதியிடம் பரிதாபப்படுவதைப் போல அவளைத் தூண்டி விட்டாள் ஷோபா...
பாத்ரூமில் முகம் கழுவிக் கொண்டிருந்த ராஜ ராஜனுக்கு அவளது பேச்சு தெளிவாக காதில் விழுந்தது...
பேசாமல் கதவைத் திறந்து வெளியே வந்து... சங்கருக்கு ஷோபா குடும்பம் குறி வைத்திருக்கும் கதையை மனைவியிடம் சொல்லி விடலாமா என்ற கோபம் ராஜராஜனுக்குள் கனன்றது..
அதையறியாத பாலசரஸ்வதி...
"விதி ஷோபா.." என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்...
"மம்மியும்.. டாடியும்.. அவங்க மனதில ஆசையை வளர்த்துக்கிட்டு இருந்தாங்கண்ணி...."
அவள் மனதில் இருந்த ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்துவதைப் போலப் பேசினாள் ஷோபா..
பாத்ரூமுக்குள் இருந்த ராஜராஜனுக்கோ பற்றிக் கொண்டு வந்தது...
பாலசரஸ்வதியோ ஷோபாவின் பேச்சில் உருகி விட்டாள்...
"அவர்களுக்கு மட்டுமா ஆசையிருந்தது..? எனக்கும் மனசுக்குள்ள மலையளவுக்கு ஆசை இருந்துச்சு.. என்ன செய்கிறது..? கைகாரி..! என்ன வசியம் பண்ணி என்தம்பியை மயக்கினாளோ.. கட்டினா அவளைத்தான் கட்டுவேன்னு என்தம்பி சொல்லிட்டானே ஷோபா..."
இப்படிப்பட்ட வார்த்தைகளை ஷோபாவைப் பார்த்துச் சொல்ல ஏன் எந்த ஆண்மகனும் முன் வரவில்லையென்ற பொறாமைத்தீ ஷோபாவின் மனதில் பற்றியெரிந்தது...
"அவங்க வளர்ப்பு அப்படியண்ணி.. நம்ம வீட்டிலேயெல்லாம் மனதுக்குப் பிடித்திருந்தாலும்.. அந்த ஆண்கள்கிட்ட நின்று பேச தயங்குவோம்.. அவங்க அப்படியில்ல.. வசதியான மாப்பிள்ளையை வலை போட்டுத் தேடுவாங்க.. வலையில் அகப்பட்டுக்கிட்டா.. அப்படியே அமுக்கிவிடுவாங்க..."
'நீ ரொம்பத்தான் கண்டு வைத்திருக்கயா..?' என்று கேட்கத் தோன்றியது ராஜராஜனுக்கு...
"ராஜா.. நம்ம ஷோபாவ உன் மச்சினன் கூட ஊரைச் சுற்றிப் பார்க்கிற சாக்கில வெளியே அனுப்பி வை... அவன் மனசில ஷோபாவைப் பத்தின நினைவு வருமில்ல... இங்கே சென்னையில இருக்கிற சங்கர் கூட ஷோபாவை பேசிப் பழக விட்டுக்கிட்டுத்தான் இருக்கோம்... இது அமைஞ்சா இது.. இல்லைன்னா... அது..."
இப்படி அவனிடம் சுசிலா சொன்னபோது ஷோபாவும் அருகில் இருந்தாள்.. இந்தப் பேச்சைக் கேட்ட ராஜராஜன்தான்...
"இது என்ன பழக்கம் சித்தி..?" என்று முகம் சுளித்தான்...
ஷோபா கொஞ்சம்கூட முகத்தைச் சுளிக்கவில்லை.. தாயின் பேச்சை ஆட்சேபிக்கவுமில்லை..
'இவளெல்லாம்... வளர்ப்பைப் பற்றியும்.. பழக்க வழக்கங்களைப் பற்றியும் பேசுகிறா..' அவன் பல்லைக் கடித்தான்...
"சொல்லாதே ஷோபா.. எங்க அம்மாவுக்கு வந்த ஹார்ட்அட்டாக் எனக்கும் வந்துடும் போல இருக்கு.." பாலசரஸ்வதி தலையைப் பிடித்துக் கொண்டாள்..
"இப்பவே இப்படின்னா.. இன்னும் போகப்போக என்ன ஆவிங்களோ.." ஷோபா பீதியைக் கிளப்பி விட்டாள்..
"அந்தப் பயம்தான் எனக்கும்..."
"இதை நிறுத்த நீங்க டிரை பண்ணலியாண்ணி..?"
"தலைகீழா நின்னு பார்த்துட்டேன்.. முரளி அசைஞ்சு கொடுக்க மாட்டேன்னுட்டானே.."
"உங்க அம்மாவை உங்க கண்ட்ரோலில் வைத்திருந்திருக்கனும் அண்ணி.. அவங்க உங்க கண்டரோலில் இருந்திருந்தா.. அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சுன்னு சொல்லி.. இந்த எங்கேஜ் மென்டை நடக்க விடாம பண்ணியிருக்கலாம்..."
"அப்படியா சொல்கிற..?"
பாலசரஸ்வதி அது குறித்த யோசனையில் வீழ ஆரம்பிப்பதை உணர்ந்து கொண்ட ராஜராஜனுக்கு 'பகீக்' என்றது.. அவன் அவசரமாக கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.. அவனைக் கண்டதும் ஷோபா அவசரமாக இடத்தைக் காலிசெய்தாள்.. அதற்குப்பின்னால் ஷோபாவை மனைவியிடம் பேச விடாமல் அடைகாக்க ஆரம்பித்தான் ராஜராஜன்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -63
அம்மம்மா.. கேளடி தோழி...! -63
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-63.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-63.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy