அம்மம்மா.. கேளடி தோழி...! -58

58 பெண்ணென்று பிறந்ததினால்.. பெருந்துன்பம் நான் கொண்டேன்...   "இதற்கிதுதான் என்று              முன்னே யார் நினைத்தது... ? ...


58
பெண்ணென்று பிறந்ததினால்..
பெருந்துன்பம் நான் கொண்டேன்...

  "இதற்கிதுதான் என்று
             முன்னே யார் நினைத்தது...?
      பழி இங்கு வந்து
             முடியுமென்றால் யார் தடுப்பது..?"
கருப்பு வெள்ளைப் பாடல் காட்சி ஓடிக் கொண்டிருக்க.. ராதிகா தரையில் குத்துக் காலிட்டு அமர்ந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தாள்...
ராஜேஸ்வரி அவளிடம் பேசவில்லை... மேகலா கூறிய நாளை ஏற்றுக் கொண்டாள்.. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் என்ற போது...
"அதுக்கென்னங்க.. பண்ணிட்டாப் போச்சு.." என்றாள்..
"அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை வைச்சுக்கலாம்.."
"செய்யுங்க..."
"நிச்சயத்துக்கு மண்டபம் பிடிச்சுருங்க.. எங்க பக்கம் ஜனக்கட்டு அதிகம்... வீடு கொள்ளாது..."
"எங்க பக்கமும் அப்படித்தான்.. மண்டபத்தையே பிடிச்சுரலாம்..."
"கல்யாணம் எங்க ஊரிலதான் நடக்கும்..."
"எங்க பக்கமும் அதுதான் வழக்கம்.."
"அப்ப நாங்க கிளம்பறோம்..."
"தாராளமாக கிளம்புங்க.. அதான் பேச வேண்டியதை பேசிட்டோமே..."
ராஜேஸ்வரி கூறிய எகத்தாளமான பதிலை பண்ணை வீட்டிற்கு வந்த பின்பு விமரிசித்தாள் பாலசரஸ்வதி...
"பேச வேண்டியதையெல்லாம் பேசியாச்சாமே.. அப்படி என்னத்தை பேசிக் கிழிச்சுட்டோம்.. பெண்ணுக்கு எத்தனை பவுன் நகை போடறிங்கன்னு கேட்டோமா..? வைரத்தில நெக்லஸ் வேணும்ன்னு பேசினோமா..? எத்தனை கிலோ தங்கம் போடறதுன்னு முடிவு பண்ணினோமா..?"
"சரஸ்..."
"நீங்க சும்மாயிருங்க.. காதல்ன்னு சொல்லி.. இவன் ஏதோ ஒன்னில் இறங்கறான்.. இது எனக்குச் சரியாப்படலை..."
"அவருக்குப் பிடிச்சிருக்கே சரஸ்..."
"அதுக்காக இப்படியா தழைஞ்சு போவாங்க..? நம்ம தகுதிக்கும் தரத்துக்கும் அவங்க ஏணி வைச்சாலும் எட்டிப் பிடிக்க முடியுமாங்க..?"
"முடியாதுதான்..."
"இருந்தும் அந்தம்மா என்ன பேச்சு பேசுது..? அந்தப் பொண்ணு மேல இவன் ஆசைப்பட்டதாலதான் அந்த வீட்டு வாசல் படியை நாம மிதிச்சோம்... இல்லேன்னா நம்ம தரத்துக்கு இவங்க வீட்டுக் கெல்லாம் வந்து போவோமாங்க..?"
மனைவியின் கேள்விக்கு மௌனம் சாதித்தான் ராஜராஜன்.. அந்த மௌனம் மனைவியின் வார்த்தைகளுக்கான அவனது ஆமோதிப்பை உணர்த்த.. அதை பாலமுரளியால் அலட்சியம் செய்ய முடியவில்லை..
"மாமா.. ராதிகாவைப் பெண் கேட்டு வந்தது யார் தெரியுமா...?"
பாலமுரளியின் கேள்விக்கு...
"யாராக இருக்கும்..? அவங்க சொந்த பந்தத்தில சாதாரணப்பட்டவங்க யாராவது வந்திருப்பாங்க.. வேற யாரு இவங்க வீட்டுக்கு பெண் கேட்டு வந்திருக்கப் போகிறாங்க..?" என்று அலட்சியமாகப் பேசினாள் பாலசரஸ்வதி...
ராஜராஜனின் முகக் குறிப்பும் அதையே உணர்த்தியது...
"சங்கர் மாமா..."
பாலமுரளியின் குரலில் ஆழ்கடலின் அமைதியிருந்தது...
அவனுக்குத் தெரியும்.. சங்கர் யாரென்று ராஜராஜன் உடனே இனம் கண்டு கொள்வான் என்பது..
ஷோபா ராஜராஜனுக்கு சித்தியின் மகள்.. அவளுக்கு சங்கரை மாப்பிள்ளை பார்க்கிறார்கள் எனும் போது.. அவனைப்பற்றி ராஜராஜனுக்கு தெரியாமல் இருக்குமா..? ஒருவேளை அது பாலசரஸ்வதிக்கு தெரியாமல் இருக்கலாம்...
அவனது கணிப்பு சரியாக இருந்தது...
"என்னது..? சங்கரா..?" ராஜராஜன் வாய் பிளந்தான்...
'அவன் என்ன பெரிய இவனா..? என் அக்கா புருசன் இப்படி வாய் பிளக்கிறாரு..' பாலமுரளிக்கு எரிச்சல் வந்தது..
"அவன் தான்.. வேணும்னா ஷோபாவைக் கேட்டுப் பாருங்க..."
"என்னாலே நம்பவே முடியலையே..."
"இப்ப அது பிரச்னை இல்லை.. சங்கரைக் கல்யாணம் பண்ணிக்க ராதிகா சம்மதிக்கலை.. என்னைக் காதலிக்கிறவள விட்டுக் கொடுக்க நான் விரும்பலை.. இதில ராதிகாவோட அப்பா என்பக்கம் சாயறாரு.. ராதிகாவோட அம்மா சங்கர் பக்கம் சாயறாங்க..."
"இப்படியொரு கதை வேற ஓடுதா..."
"ம்ம்ம்..."
"சரஸ்.. ராதிகாவோட அம்மா பேசினதை நீ பெரிசு பண்ணிக்காதே.. ராதிகாவை பெண் கேட்டிருக்கிறதும் ஒரு கோடிஸ்வரன்தான்.. இதில நாம முரளியின் பக்கம் சப்போர்ட் பண்ணித்தான் ஆகனும்.."
'இல்லைன்னா.. உங்க சித்தி மகளுக்கு சங்கரை எப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறது...'
"எப்படி.. நம்ம வீட்டுக்கு வர வேண்டிய பொண்ண நாம விட்டுக் கொடுக்க முடியும்..? முரளி பேசியது தான் சரி..."
ராஜராஜனின் உதவிக்கரம் மீண்டும் வலுவானது.. பாலசரஸ்வதி திடிரென்று கிடைத்த கணவனின் ஆதரவு மறைந்ததில் தனித்து நின்றாள்...
மேகலாவும்.. பாலமுரளியும் திருமண ஏற்பாடுகளைக் குறித்து ஆலோசனை செய்ய ஆரம்பிக்க.. ராஜராஜன் அதில் கலந்து கொண்டு... தன் ஆலோசனைகளைக் கூறிக் கொண்டிருந்தான்...
அதில் சுவராஸ்யம் இல்லாத பாலசரஸ்வதி பிள்ளைகளுடன் தூங்கப் போனாள்...
பெண் கேட்டுவிட்டுப் போனவர்களின் கதை இப்படியிருக்க.. ராதிகாவின் வீட்டில் கதை வேறு மாதிரி இருந்தது..
ராஜேஸ்வரி பெரிய மகளைப் புறக்கணித்தாள்.. அவளிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.. ராதிகாவே மனம் தாளாமல்...
"அம்மா..." என்று அருகே போனபோது...
'யார் நீ...' என்பதைப் போல ஒரு அறிமுகமற்ற பார்வை பார்த்து விட்டு சமையலறைக்குள் சென்று விட்டாள்...
"அப்பா..."
விசும்பின மகளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி...
ஒருவார்த்தை கூட அவரைப் பேச விடாமல் மேகலாவிடம் தானே பேசி திருமணத்தை முடிவு செய்த ராஜேஸ்வரியின் கோபத்தை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது...
பெற்று வளர்த்த மகள்... சொல் பேச்சை மீறுகிறாள் என்பதை எந்தத் தாயால் சகித்துக் கொள்ள முடியும்..?
"ராஜேஸ்வரி..."
இருந்தும் மகளுக்காக மனைவியிடம் பேசப் போனார் கிருஷ்ணமூர்த்தி...
"வேண்டாங்க.. என்னை விட்டுருங்க.. இது ஒன்னை மட்டும் பெத்திருந்தா.. இப்பவே நான் தலை முழுகியிருப்பேன்.. இதுக்குப் பின்னாலே இன்னும் ரெண்டைப் பெத்து வைச்சிருக்கேனே... அதுகளுக்காக பார்க்கிறேன்... இவளக் கல்யாணம் பண்ணிக்கப் போகிற மகராசன்தான் சவால் விட்டாரே... பெண்ணைக் கொடுக்கறிங்களா.. இல்லை உங்களை மீறி உங்க பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிருச்சுங்கிற பேச்சுக்கு ஆளாகிறிங்களான்னு.. இவ வீட்டை விட்டு வெளியே போய் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா யாருக்கு நஷ்டம்..? நமக்குத்தானே நஷ்டம்.. இன்னொரு பெண்ணையும் கரையேத்தனுமே.. இவனுக்கு நல்ல குடும்பத்தில பெண்ணெடுக்கனுமே... அதுக்கு.. நாமளே முன்னால நின்று இவளை கல்யாணம் பண்ணிக் கொடுத்து அனுப்பியாகனுமே.."
"எனக்கும் புரியுதுடி..."
"அதுக்காகத்தான் பொறுமையா போறேன்... இனி இவயாரோ.. நாம யாரோ... என் கடமையை சரியா செஞ்சுருவேன்.. ஒரு குறையும் வைக்க மாட்டேன்... கல்யாணமாகி போகிற வரைக்கும் நம்ம குடும்ப மானத்தை காற்றில பறக்க விடாம இருக்கச் சொல்லுங்க..."
ராஜேஸ்வரியின் சொற்கள் ராதிகாவின் இதயத்தில் தைத்தன... ராதிகா அப்படியே சரிந்து தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.. கீதா அவளைத் தேற்ற முயன்றாள்...
"பட்டுச்சேலை கசங்குதுடி.. எழுந்து வா..."
ராதிகா எழுந்து கொள்ளவில்லை.. கசங்கிய சேலையைப் பற்றி கவலை கொள்ளவில்லை... தாயின் கோபத்துக்கு ஆளாகி விட்ட துயரம் மட்டுமே அவளை வாட்டியது...
'நானும் கீதாவையும்.. சுந்தரையும் நினைத்துத்தாம்மா இதையெல்லாம் செய்கிறேன்...'
சொல்ல முடியவில்லை... காதல் என்று சொல்லி பெண் கேட்டு வந்தவன்.. அவளைத் தொட்டு பெண்டாட்டு விட்டவன் என்ற கதையை அந்தரங்க மனதில் புதைத்துக் கொண்டு ஊமையாக அவள் அழுதாள்...
அவனைத்தான் அவள் கைபிடித்தாக வேண்டும் என்ற நிலையில் காலஅவகாசம் எடுத்து தாயின் மனதை மாற்ற முடியாத சூழ்நிலையின் அவசரத்தை எண்ணி அவள் அழுதாள்...
"பெண்ணென்று பூமிதனில்...
             பிறந்து விட்டால் - மிகப்
    பீழை இருக்குதடி தங்கமே தங்கம்.."
பாரதியின் பாடல் வரிகளுக்கு அபிநயம் பிடித்து ஆடிக் கொண்டிருந்த கருப்பு வெள்ளைத் திரைப்படத்தின் பாடல் காட்சியைப் பார்க்காமல் அதன் முன்னே அமர்ந்து அவள் அழுது கொண்டிருந்தாள்...
"சொன்னீங்கள்ல... அந்த சங்கரின் அம்மா ஆணவம் பிடிச்சவ.. ராங்கி பிடிச்சவன்னு சொன்னீங்கள்ல.. இப்ப இந்த முரளியோட அக்காகாரியின் குணம் எப்படி..? அதைவிட ஆயிரம் மடங்குன்னு தெரியுதில்ல.. இப்ப உங்க வாய் ஏன் மூடிக்கிச்சு..?"
ராஜேஸ்வரியின் கேள்விக்கு பதிலைச் சொல்ல முடியாமல் மகளைப் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி...
"சொல்லலாம்.. நமக்குப் பிடிக்கலைன்னா யாரை வேணும்னாலும் குறை சொல்லலாம்.. அதே.. பிடிச்சுப் போன இடம்ன்னா எந்த குற்றம் குறை இருந்தாலும் அது நம்ம கண்ணில்படாது..."
"ராஜி..."
"வேணாங்க... எனக்கு சலிச்சுப் போச்சு.. என்வீடு.. என் குடும்பம்... என் பிள்ளைகன்னு ஓடி ஓடி வேலை செஞ்சேன்.. என்ன பலனைக் கண்டேன்..? இந்தா.. என் கண்முன்னாலேயே எனக்குப் பிடிக்காத இடத்திலே என் பெண்ணுக்கு கல்யாணம் பேசி முடிச்சிருக்கேன்.. இதைத்தானே கண்டிருக்கேன்..?."
"விடேண்டி..."
"எனக்கு எதுக்காகங்க அந்த சங்கர் குடும்பத்தை பிடிச்சுச்சு..? ஆயிரம் தான் இருந்தாலும்.. அவங்க சென்னையில இருக்கிறவங்க.. அந்த அம்மா திமிராய் இருந்தாலும் வாயைத் திறக்கலை... மகனோட பேச்சுக்கு கட்டுப்பட்டு வாய்மூடி உட்கார்ந்திருந்தாங்க... இன்னைக்கும் ஒன்னு வந்துச்சே.. மாப்பிள்ளையோட அக்கான்னு சொல்லிக்கிட்டு.. என்னமா பேசுது..? இந்தப் பேச்சு சங்கர் குடும்பத்தில இல்லையே..."
"வாழப் போகிறது ராதிகாதானேடி..."
"அதுதாங்க நானும் சொல்ல வர்றது.. ராதிகாவைக் கண்டாலே அந்தப் பொண்ணுக்கு பிடிக்கலை.. பார்க்கிற பார்வையிலேயே வெறுப்பைக் கக்குறா.. இப்பவே இப்படின்னா... கல்யாணமாகிப் போன பின்னாலே எப்படி இருப்பாளோ... அதனாலதானே நான் யோசிக்கலாமுன்னு சொன்னேன்...?"
ராஜேஸ்வரியின் பக்கம் ஆயிரம் நியாயங்கள் இருந்தன... அவள் அதைப் பட்டியலிட்டாள்... ராதிகா பழியேற்றாள்...
தொட்டவனையே கட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவளது யுத்தத்தில் பெற்ற தாயின் மனக் கசப்புக்கு ஆளானாள் ராதிகா...
"என்னடி உம்முன்னு இருக்க...?"
ஹேமா துருவித்துருவி கேள்வி கேட்டாள்...
"ஒன்னுமில்லைடி..." ராதிகா சோர்வாக பதில் சொன்னாள்...
நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் இரண்டு தினங்கள்தான் இருந்தன.. திருமண ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப்பற்றி இன்னும் அவள் தோழிகளிடம் சொல்லவில்லை...
காதலித்தவனால் காதலிக்கப் பட்டாள்... ஆனால்.. அந்தக் காதலை ருசிக்க அவளால் முடியவில்லை...
அவளைத் தொட்டு தழுவ வேண்டியவன் தான் தொட்டுத் தழுவினான்... அவளுடன் குடும்பமும் நடத்தினான்.. இருந்தும்.. அதை எண்ணி மகிழ அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை...
இன்று அவனுடன் அவளுக்கு திருமணமே நடக்கப் போகிறது... ஆனந்த வானத்தில் சிறகடிக்க அவளால் இயலவில்லை...
ராதிகா பாவம்...
எல்லாம் கிடைத்தும்.. எதுவுமே கிடைக்காததைப் போல வாழ வேண்டிய துர்பாக்கிய சாலியாகி விட்டாள் அவள்...
செல்போன் மணியடித்தது.. எடுத்துப் பேசினாள்.. மறுமுனையில் பாலமுரளி 'ஹலோ' சொன்னான்...
அவள் மனம் பூவாய் மலர்ந்தது...
"என்ன டல்லாய் பேசற..? ஏதும் பிரச்னையா..?" என்றான்..
ஹேமா அருகிலிருக்கும் நினைவில் எதுவும் பேச முடியாதவளாய்
"ம்ம்ம்.." என்றாள் ராதிகா...
"என்ன..?"
"நத்திங்..."
"என்னடி.. பிரச்னையான்னு கேட்ட ஊம் கொட்டற.. என்னன்னு கேட்டா.. நத்திங்ன்னு சரடு விடற.. என்ன விசயம்..? பக்கத்தில் ஆளிருக்கா..?"
"ம்ம்ம்..."
"இருந்தா என்ன..? கட்டிக்கப் போறவன் கிட்டத்தான பேசற.. வழியில போகிற வழிப் போக்கன்கிட்டயா பேசற..?"
இதற்கு எப்படி 'ம்ம்' என்று அவளால் சொல்ல முடியும்..? அப்படிச் சொல்லிவைத்தால் அவன் சும்மா விட்டு விடுவானா..?
செய்வதறியாதவளாக அவள் மௌனம் சாதித்தாள்..
"ஊஹீம்.. இது வேலைக்கு ஆகாது.. நீ சாயங்காலம் என்னைப் பார்க்க வா..."
"ம்ம்ம்...."
"எங்கேன்னு கேட்க மாட்டியா...?"
"ம்ம்ம்...?"
"அதுக்கும் 'ம்' தானா..? ஊம் கொட்டியே மனுசனை ஒருவழி பண்ணிருவ போல இருக்கே..."
"ம்ம்ம்..."
"வேணாம்டி... வெறியேத்தாதே.. சாயங்காலமா.. உன் காலேஜ் வாசலில் இருக்கிற பஸ் ஸ்டாப்பில நில்லு... அன்னைக்குப் போல இன்னைக்கும் வந்து உன்னைக் காரில அள்ளிப் போட்டுக்கறேன்..."
"ஊஹீம்..."
"என்ன ஊஹீம்..?"
"நான் கோவிலுக்குப் போகனும்..."
"அங்கே வரவா...?"
"ம்ம்ம்..."
"இதுக்கும் 'ம்' தானா.. வாடி.. சாயங்காலம் உன்னை நேரில பார்த்ததும் பேசிக்கறேன்..."
மறுமுனை துண்டிக்கப் பட்டதும்.. போனை கைப் பைக்குள் போட்டுக் கொண்டவளைப் பார்த்தாள் ஹேமா...
"யாருடி போனில..? சங்கரா...?"
ஒருநொடி ஹேமாவின் கேள்வியில் ராதிகாவின் உடல் தூக்கிப் போட்டது...
அவள் கள்ளத்தனமாக பேசினால் அது சங்கரிடமாகத்தான் இருக்கும் என்று அவளின்
நெருங்கிய தோழியே அனுமானிக்கும் போது.. முரளியை குறைசொல்லி என்ன ஆகப் போகிறது..?
"இல்லை..."
"ஹை.. ஹை.. இப்படிச் சொன்னா நான் நம்பிடுவேனாக்கும்..? வேற யாரிடம் நீ ரகசியம் பேசப் போறயாம்..?"
"ஹேமா ப்ளீஸ்.. எனக்குத் தலையை வலிக்குது..."
"என்னடி ஆச்சு...? இப்போல்லாம் நீ அடிக்கடி தலையைப் பிடிக்கிற.. தலையை பிடிக்க வேண்டிய ஷோபாவே ஆரோக்கியமா நடமாடிக்கிட்டு இருக்கிறா.. உனக்கு என்ன வந்தது...?"
"ம்ம்ம்..? அவ தலைவலியை நான் குத்தகைக்கு எடுத்திருக்கேன்.. போதுமா...?"
"குத்தகைன்னா என்னடி அர்த்தம்...?"
"இது வேறயா..? 'லீஸ்..' போதுமா..."
"இது எப்படி உனக்குத் தெரியும்..? இது வில்லேஜ் லாங்வேஜாச்சே..."
ஹேமா கூறியது சரிதான்.. எதற்கோ பாலமுரளி 'குத்தகை' என்ற வார்த்தையை உபயோகித்தான்.. அவன் பேசும் அத்தனை பேச்சுக்களும் ராதிகாவின் மனதில் ஆழப் பதிந்து விடும்.. அந்த பழக்கத்தில்தான் அவள் அவளையுமறியாமல் குத்தகை என்ற வார்த்தையைக் கூறிவிட்டாள்...
"அப்படி எதுவும் பட்டா போட்டு வச்சிருக்கா..?"
"பட்டாவா..? இதுவும் நம்ம பக்க பேச்சில்லையே.."
மீண்டும் மாட்டிக் கொண்ட ராதிகாவுக்கு நிஜமாகவே தலைவலி வந்துவிட்டது...
"நான் வீட்டுக்குப் போறேண்டி..." எழுந்து விட்டாள்...
ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு போனவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹேமா.. ராதிகாவின் பதட்டம் அவளுக்கு எதையோ உணர்த்தியது...
அதுவரை அவளின் அந்தரங்க தோழியாக இருந்தவளின் அந்தரங்கத்தில் அவளறியாத சுழல் இருப்பதாக உணர்ந்தாள் ஹேமா...
'என்னவோ நடக்குது... அது என்னன்னுதான் தெரியல...'
ராதிகா வீட்டுக்குள் நுழைந்த போது.. யாரோ போல பார்த்தபடி கதவைத் திறந்து விட்டாள் ராஜேஸ்வரி...
"தலைவலிம்மா... அதான் சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டேன்..."
விளக்கம் சொன்னவளிடம் 'நான் விளக்கம் கேட்டேனா...' என்ற பாவனையுடன் அவள் நகர்ந்துவிட.. ராதிகாவின் மனதில் துக்கம் பொங்கியது...
'அம்மா...' என்று அன்னையின் கழுத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல அவள்மனம் பொங்கியது...
அதற்கு வழியின்றி சோக முகத்துடன் மாடியேறினாள்.. லேசான சீழ்க்கையொலியுடன் கீதா எதிரே வந்தாள்...
"இன்னைக்கு ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டயா..?"
"ஸ்கூலுக்குப் போகலைன்னா.. உடனே மட்டம் போட்டுட்டேன்னு நீயாய் முடிவு பண்ணிடறதா.. இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் டே..."
"நீ எதிலயும் கலந்துக்கலயா...?"
"நான் விளையாடற விளையாட்டையெல்லாம் ஸ்போர்ட்ஸில சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்கடி ராது..."
கண்சிமிட்டி சிரித்தவளைப் பார்த்தபோது ஏனோ ராதிகாவுக்கு பொறாமையாக இருந்தது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -58
அம்மம்மா.. கேளடி தோழி...! -58
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-58.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-58.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy