அம்மம்மா.. கேளடி தோழி...! -56

56 பரபரப்பாய் பறப்பதினால்... என்மனமும் பறவையினம்தான்... எல்லோரின் முன்னாலும் வந்து நின்று கை குவித்தபோது.. கீதா சொல்லிய வார்த்தைக...


56
பரபரப்பாய் பறப்பதினால்...
என்மனமும் பறவையினம்தான்...

எல்லோரின் முன்னாலும் வந்து நின்று கை குவித்தபோது.. கீதா சொல்லிய வார்த்தைகள் அத்தனையும் அட்சர சுத்தமான உண்மை என்பதை உணர்ந்து கொண்டாள் ராதிகா...
"இவங்க தான் என் அம்மா..."
பாலமுரளி அறிமுகப் படுத்தியதும் மேகலா அவளைப் பார்த்து இதமாகச் சிரித்தாள்..
அவளது பார்வையில் சொந்தமிருந்தது.. பரிவிருந்தது.. அன்யோன்யம் இருந்தது.. நீதான் எங்கள் வீட்டின் மருமகள் என்ற செய்தியிருந்தது.. விட்டால் அப்போதே கைபிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடும் ஆவலோடு அவள் ராதிகாவை அழைத்தாள்...
"வாம்மா.. இங்கே வந்து என்பக்கத்தில் உட்காரு..."
அந்த அழைப்பில் அதுவரை ராதிகாவின் மனதில் பனிமூட்டம் போல சூழ்ந்திருந்த சஞ்சலமும்.. பயமும் விலகி ஓடிவிட்டன.. ஆண்டாண்டு காலமாக அறிந்தவளைப் போன்ற அந்த உரிமையான அழைப்பில் மெய் சிலிர்த்துப் போய் விட்டாள் ராதிகா...
மூன்று நபர் அமரக்கூடிய சிறிய அளவிலான சோபாவில் பாலமுரளியும் மேகலாவும் அமர்ந்திருந்தார்கள்.. ராதிகா அமர்வதற்காக மேகலா நகர்ந்து கொள்ள.. ராதிகா அவளருகில் அமர்ந்து கொண்டாள்...
மேகலா நடுவிலிருக்க.. இருபக்கமும் பாலமுரளியும்.. ராதிகாவும் அமர்ந்திருக்கும் அந்தக் காட்சியில் பாலசரஸ்வதியின் மனம் அதிர்ந்தது...
'இனி இதுதான் அம்மாவின் குடும்பமா..?'
அவள் தனிமைப் பட்டு விட்டதாக உணர்ந்தாள்.. அவளுக்கு உரிமையான தாய் ராதிகாவை அரவணைத்துக் கொண்டதில் இனம் புரியாத பொறாமை கலந்த வேதனைக்கு ஆளானாள் பாலசரஸ்வதி...
அவளுடைய தம்பி.. இனி இன்னொருத்தியின் உடமை என்ற உணர்வில் அவள் கண்களுக்கு ராதிகா அவளையும்.. அவளுடைய தம்பியையும் பிரிக்க வந்த பகையாளியாக தோற்றமளித்தாள்...
நீண்ட சோபாவில் கணவன் குழந்தைகள் சகிதம் குடும்பத்துடன் அமர்ந்தது தவறோ என்ற எண்ணம் அவள் மனதில் ஓடியது.. முதலிலேயே மேகலாவின் அருகே அவள் அமர்ந்திருந்தால் ராதிகாவை பிரித்து அமர விட்டிருக்கலாம்... அவளிடம் இதுதான் எங்கள் குடும்பம்.. இது என்னுடைய அம்மா.. இவன் என்னுடைய தம்பி.. நான் சொன்னால்தான் இவர்கள் கேட்பார்கள்.. நான் சொல்வதுதான் இவர்களுக்கு வேதவாக்கு என்று ராதிகாவுக்கு மறைமுகமாக உணர்த்தியிருக்கலாம்...
இப்போது அதற்கு வழியில்லாமல் போய் விட்டது... பாலசரஸ்வதியின் குடும்பம் தனி.. பாலமுரளியின் குடும்பம் தனி என்று ஆகிவிட்டது... அதில் பாலசரஸ்வதியின் அன்னை மகனின் பக்கம் அமர்ந்து விட்டாள்.. அந்தக் குடும்பத்தின் அங்கமாக ராதிகாவை அங்கீகரித்து விட்டாள்...
மேகலாவின் அருகே அமர்ந்திருந்த ராதிகா.. இனம் புரியாத உணர்வுகளின் கலவைக்கு ஆளானாள்... தயக்கத்துடன் மேகலாவைப் பார்த்தபோது அவளின் பார்வை ராதிகாவை வருடிக் கொடுத்ததை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது...
"படிச்சிக்கிட்டு இருக்கியாம்மா...?"
வார்த்தைகளுக்கு வலிக்கும் என்று நினைப்பவளைப் போல மிகமென்மையாக கேட்டாள் மேகலா...
ராதிகா வாயசைத்தாள்.. அவளுக்கு படபடப்பில் பேச வரவில்லை.. அவளது நிலையைப் பார்த்த பாலமுரளி அதை ரசித்துச் சிரித்தான்...
"படிச்சுக்கிட்டுத்தான் இருக்காம்மா..."
அவளுக்குப் பதில் அவன் பதில் கொடுத்தான்.. நன்றியுடன் அவனை ஒர் பார்வை பார்த்து வைத்தாள் ராதிகா... அதை உணர்ந்தவனின் கண்கள் மின்னின...
"நீயாடா ராதிகா..?"
செல்லக் கோபத்துடன் மகனை முறைத்தாள் மேகலா..
"நான் உங்க மகன் பாலமுரளிம்மா.. அக்கா நீயாவது அடையாளம் சொல்லுக்கா..."
பாலமுரளி விளையாட்டாய் கேட்டபோது... தன்னையுமறியாமல் பாலசரஸ்வதியின் பக்கம் பார்த்தாள் ராதிகா.. கடினமான அவள் முகத்தையும்... கண்டனம் தெரிவித்துக் கொண்டிருந்த அவள் பார்வையையும் கண்டவுடன் ராதிகாவின் மனம் துணுக்குற்றது.. அது நேரம்வரை அவள் மனதில் படிந்திருந்த இன்ப உணர்வு சிறிது விலகியது....
பாலசரஸ்வதியின் பார்வை உணர்த்திய அப்பட்டமான எதிர்ப்பில் ராதிகா அரண்டு போனாள்...
'ஏன் இப்படி முறைக்கிறாங்க..? இவங்களுக்கு என்னைப் பிடிக்கலையோ...' அவள் மனம் சந்தேகம் கொண்டது...
மீண்டும் ஒர்முறை பாலசரஸ்வதியை அவள் பார்த்த போது.. சந்தேகத்துக்கு இடமேயின்றி தனக்கு ராதிகாவை பிடிக்கவில்லையென்பதை தன் உதாசினப் பார்வை மூலம் உணர்த்தினாள் பாலசரஸ்வதி...
'சங்கரின் அம்மா கூட இப்படிப் பார்க்கல...'
ராதிகாவின் பார்வையும்.. கீதாவின் பார்வையும் சந்தித்து மீண்டன...
"எனக்கே இது நீதானான்னு அடையாளம் தெரியல.. அம்மாவுக்கு எப்படிடா தெரியும்..?"
பாலசரஸ்வதியின் குரலில் தொனித்த எரிச்சலை ராஜேஸ்வரி மிக எளிதாக இனம் கண்டு கொண்டு விட்டாள்...
கிருஷ்ணமூர்த்தியை அர்த்தத்துடன் பார்த்து விலகிய அவள் பார்வை சொல்லிய செய்தியை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது...
'என்னவோ சங்கரின் அம்மாதான் ராங்கித்தனமானவங்கன்னு சொன்னீங்களே.. இப்ப இந்தப் பொண்ணு எப்படியிருக்கா..?'
இதைத்தான் அவள் தன்பார்வையில் கேட்டாள்...
பாலமுரளி அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை... அவன் தன் போக்கில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்... அதில் மேகலாவும் கலந்து கொண்டாள்..
"என்னவோ முகமூடியை மாட்டிக்கிட்டு வந்திருக்கவனைச் சொல்றதைப்போலல்ல அக்கா சொல்லி வைக்குது.. என்னம்மா..?"
"ஆமடா முரளி.. கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணுகளுக்கு அவங்க வீட்டாளுகளைத்தான் அடையாளம் தெரியும்.. பிறந்தவீட்டு மனுசங்களை அடையாளம் தெரியாது..."
"அப்ப.. ராதிகாவும் அப்படித்தான் ஆகிடுவாளா...?"
"பின்னே..? நாளைக்கே அவ தம்பியைப் பார்த்து யார் நீன்னு கேட்டாலும் கேட்பா.."
மேகலா இப்படிச் சொன்னதும் கிடைத்தது வாய்ப்பென்று கீதாவும் ஊடே புகுந்தாள்...
"அதெப்படி அத்தை.. கரெக்டா.. இவன் பேய்ன்னு கண்டு பிடிச்சீங்க..?"
கீதாவின் கேள்வியைக் கேட்ட மேகலாவின் முகத்தில் ஆச்சரியம் பரவியது...
"நான் எப்போம்மா உன் தம்பியை பேய்ன்னு சொன்னேன்..?"
"பேயைப் பார்த்துத்தானே அத்தை யார் நீன்னு கேட்க முடியும்..? போனவாரம் டிவியில நான் பார்த்த பிளாக் அன்ட் ஒயிட் படத்தில அப்படித்தான் வந்தது.. எனக்கே இது தெரியுது.. உங்களுக்குத் தெரியாதா..?"
சுந்தர் ஆத்திரத்துடன் கையைப் பிசைந்தான்.. அதைப் பார்த்த கீதா இன்னும் கொஞ்சம் பற்ற வைத்தாள்...
"பார்த்தீங்களா அத்தை.. இவன் நம்பியாரைப் போலவே கையைப் பிசைகிறதை.. இவன் பேய் மட்டுமில்ல அத்தை.. பக்கா வில்லனும்தான்..."
மேகலாவுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியத்தை அளித்துக் கொண்டே... சுந்தருக்கு ஆத்திரத்திற்கு மேல் ஆத்திரத்தை அளித்துக் கொண்டிருந்தாள் கீதா...
"எதுக்கு என்னை வம்புக்கு இழுக்கிற.." அவன் கிசுகிசுப்பான குரலில் கீதாவிடம் சீறினான்..
"நானாடா குட்டிப்பிசாசு...?" அவள் அதே தாழ்ந்த குரலில் காரணத்தை உணர்த்தினாள்...
முரளியைப் பார்த்த மேகலாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை... பார்த்த முதல்நாளிலேயே அத்தை என்று உறவு கொண்டாடிய ராதிகாவின் உடன்பிறப்புகளை அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது...
அதை அவளது முகக்குறிப்பு உணர்த்தி விட பாலசரஸ்வதிக்கு பொறுமை காக்க முடியவில்லை...
"ஏம்மா.. நாம இங்கே எதுக்கு வந்திருக்கோம்..?"
அவளது கோபக்குரலில் ராஜராஜனின் முகம்கூட மாறிப் போனது...
"என்ன சரஸ்..? எதுக்கு இந்த கோபம்..?"
"பின்னே என்னங்க.. பொண்ணு பார்க்க வந்திருக்கோம்.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அப்படிங்கிற மட்டு மரியாதை கொஞ்சம் கூட இல்லாம அந்தப் பொண்ணு கதையடிக்குது.. அதைக் கண்டிக்காம பெண்ணைப் பெத்தவங்க பேச விட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருங்காங்க... அம்மாவும் அதை ரசிச்சு சிரிச்சுக்கிட்டு இருக்காங்க.. இங்கே என்னதான் நடக்குது..? இவங்க பேசிச் சிரிக்கிறதைப் பார்த்து மகிழத்தான் நாம இவ்வளவு தூரம் காரைப் போட்டுக்கிட்டு வந்திருக்கோமா..?"
கீதாவும் சுந்தரும் தங்களுக்குள் நடந்து கொண்டிருந்த சண்டையை மறந்து விட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...
ராதிகாவின் முகத்தில் கலவரம் மண்டியது.. அவ்வளவு நேரமும் பாலசரஸ்வதியை பேசவிட்டு ராஜேஸ்வரி கேட்டுக் கொண்டிருந்ததே பெரிய சமாச்சாரம்... அவள் நிமிர்ந்து பாலசரஸ்வதியைப் பார்த்த போதே கிருஷ்ணமூர்த்தி 'போச்சுடா..' என்று மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டார்...
பாலசரஸ்வதிக்கு ராஜேஸ்வரி கொஞ்சம் கூட சளைத்தவளல்ல.. இன்னும் சொல்லப் போனால்.. ராஜேஸ்வரிக்கு எதிராகப் பேச பால சரஸ்வதியால் தான் முடியாமல் போகும்.. ஆனானப்பட்ட கிருஷ்ண மூர்த்தியையே அடக்கி ஒடுங்கி அமரவைக்கக் கூடிய ஆற்றல் படைத்தவள் ராஜேஸ்வரி.. யாருக்கும் அடங்காத மூன்று பிள்ளைகளையும் தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கும் சக்தி வாய்ந்தவள்...
அப்பேற்பட்டவள் மகளுக்காக வாய்மூடி நின்றால்.. இந்த பாலசரஸ்வதி அதை உணராமல் எதை வேண்டுமானாலும் பேசிவிடுவதா...?
"ஏம்மா.. உங்க குடும்பத்தில் யாரும் பேசி சிரிக்க மாட்டிங்களா...?"
ராஜேஸ்வரி நிதானமகாக் கேட்டதும்.. பாலசரஸ்வதிக்கு பற்றிக் கொண்டு வந்தது...
எவ்வளவு தைரியமிருந்தால் பெண்ணைப் பெற்றதாய் மாப்பிள்ளையின் அக்காவிடம் கேள்வி கேட்பாள்...?
'எல்லாம் இந்த பாலமுரளி கொடுக்கிற இடம்...' பல்லைக் கடித்தாள்...
உன்கூடவெல்லாம் நான் பேசியாக வேண்டுமா..? என்ற பாவனையில் முகம் திருப்பிக் கொண்டவளை ராஜேஸ்வரி விடுவதாக இல்லை...
"உன்னைத்தான் கேட்கிறேம்மா... பதில் சொல்லு..."
"ஏங்க.. உங்க மனசில என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..?"
"எதுவும் நினைக்கலை.. நீதான் எதையோ மனசில நினைச்சுக்கிட்டு இப்படிப் பேசற மாதிரி எனக்குத் தோணுது..."
"இங்கே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நீங்களா.. இல்லை.. நாங்களா..?"
"சந்தேகமில்லாம நீங்கதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. நாங்க பொண்ணு வீட்டுக்காரங்கதான்.. அதுக்கென்ன இப்ப..?"
"உங்க பேச்சையும்.. தோரணையும் பார்த்தா அப்படித் தெரியலையே..."
"என்ன செய்யனும்கிற..? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க காலைக்கழுவி குடிக்கனுமா...? எங்களுக்கு அப்படியெல்லாம் பழக்கமில்லை..."
வார்த்தை தடிப்பதை உணர்ந்த பாலமுரளி.. அக்காவின் கணவரைப் பார்த்தான்.. ராஜராஜன் குறிப்பறிந்து மனைவியைக் கட்டுப் படுத்தினான்...
"சரஸ்.. வாட் இஸ் திஸ்..?"
"பாருங்க.. இவங்க எப்படிப் பேசறாங்கன்னு.."
"பெரியவங்க.. யதார்த்தமா பேசறாங்க..."
"இதுவா யதார்த்தம்...?"
"எனக்கு அப்படித்தான் தோணுது.. கீப் கொயட்..."
பாலசரஸ்வதி.. வாய்க்குள் முணுமுணுத்த படி முகத்தை திருப்பிக்கொள்ள.. பாலமுரளி ராஜேஸ்வரியுடன் சமாதானப் பேச்சு வார்த்தையில் இறங்க யார் முன்வருவார்கள் என்ற யோசனையுடன் கிருஷ்ண மூர்த்தியைப் பார்த்தான்...
அவன் அப்படித்தான் செய்து வைப்பான் என்பதை உணர்ந்திருந்த அவர் அவனுடைய பார்வையைத் தவிர்த்தார்..
அவனுக்கென்ன.. பெண் பார்த்து முடிந்ததும்.. வேலை முடிந்ததென்று வீட்டுக்கு கிளம்பிப் போய் விடுவான்.. அவர்தானே ராஜேஸ்வரியிடம் தனியறையில் மாட்டிக் கொள்ள வேண்டும்..?
இந்த விளையாட்டுக்கு நான் வரமாட்டேன் என்று அவர் ஒதுங்கிக் கொள்ள பாலமுரளி ராதிகாவைப் பார்த்தான்... அவள் விழிகளில் பயத்தின் சாயல் அப்பட்டமாகத் தெரிய.. அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
மாமனாரை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று தானே களத்தில் இறங்க முடிவு செய்தவனாக அவன் பேசப் போனபோது.. அவனை முந்திக் கொண்டு மேகலா பேசினாள்...
"தப்பா எடுத்துக்காதீங்க சம்பந்தியம்மா.. பெண் பார்க்க வந்தவங்க.. கல்யாணத்துக்கு நாளைக் குறிக்காம பேசிக்கிட்டு இருந்தோமா.. அதைச் சொல்லத்தான் பாலசரஸ்வதி பேச்சை ஆரம்பிச்சா..."
"எனக்கென்னவோ அப்படித் தோணலையே..."
"அவ பேசின விதம் அப்படி.. பேசத் தெரியலை.. அப்படி நான் வளர்த்துட்டேன்.. என்ன செய்கிறது..?"
மேகலா வருத்தப் படவும் ராஜேஸ்வரிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.. இவ்வளவு தன்மையாகப் பேசுகிறவளிடம் முகம் முறித்துப் பேசவும் அவளுக்கு மனம் வரவில்லை...
"நீங்க என்ன செய்வீங்க..? நாம வளர்க்கிறது என்னவோ நல்லாத்தான் வளர்த்து வைக்கிறோம்.. அதுகளா இப்படி வளர்ந்து நின்னா நாமளா பொறுப்பாளியாக முடியும்..? இந்தச் சின்னப் பொண்ணும்.. பையனும் அடிக்கிற லூட்டி அப்படி.. உங்க பொண்ணு சொன்னதிலயும் தப்பில்ல.. இதுகளுக்கு கொஞ்சமாவது அக்காவைப் பெண் பார்க்க வந்திருக்காங்கன்னு தோண வேணாமா..?"
ஒரு வார்த்தை... ஒரேயொரு சின்னஞ்சிறு வார்த்தை போதும்...
அதைச் சொல்வதால் நாம் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை.. நமது கிரீடம் இறங்கி விடப் போவதில்லை.. பெரிய காட்டுத் தீயின் வேகத்துடன் பற்றியெரியும் சொற்போர் கூட இந்த ஒரு வார்த்தையில் அடங்கி விடும்...
தேனூத்தின் பெரிய மனிதரான மாணிக்க வாசகத்தின் மனைவியும்.. தென்காசி மாவட்டத்திலேயே பெயர் பெற்ற தொழிலதிபனான பாலமுரளியின் அன்னையுமான மேகலா அதைச் செய்தாள்...
பணத்திலும்.. சொத்திலும்.. பாரம்பர்யத்திலும் மிக உயர்ந்த இடத்தில் அவள் இருந்தாலும்.. மகனின் காதலுக்காக தணிந்து சொன்னாளே ஒரு சொல்..! அந்த இடத்தில் தான் அவள் பாலமுரளிக்கு பூரண அன்னையானாள்
   



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -56
அம்மம்மா.. கேளடி தோழி...! -56
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-56.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-56.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy