அம்மம்மா.. கேளடி தோழி.-54

54 நீயென்னை நினைக்கவில்லையென்று.. நிலவின் மீது ஆணையிட்டுக் கூறு.... அந்த நொடியில் பாலமுரளியும் அதைத்தான் நினைத்து ஆச்சரியப்பட்டுக...


54
நீயென்னை நினைக்கவில்லையென்று..
நிலவின் மீது ஆணையிட்டுக் கூறு....

அந்த நொடியில் பாலமுரளியும் அதைத்தான் நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான்..
அவன் பயமறியாதவன்.. ஆனால் அவனிடம் மற்றவர்களுக்கு இருந்த மரியாதையுடன் கூடிய பயத்தைப் பற்றி நன்கு அறிந்தவன்...
தென்காசியின் சுற்று வட்டாரத்தில் அவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளாமல் எந்தவொரு விழாவும் நடந்ததில்லை.. அவனிடம் நேரம் கேட்டு வருபவர்கள்.. அந்தக் குறிப்பிட்ட நாளில் விழாவில் கலந்து கொள்ள அவனுக்கு நேரம் இல்லையென்றால் விழா நடக்கும் நாளையே மாற்றி அமைத்து விடுவார்கள்...
அந்த அளவுக்கு அவன் முக்கியமானவன்.. அவனிடம் பேச வரும் பெரிய மனிதர்கள் நேரம் கேட்டு.. அனுமதி வாங்கித்தான் பேச வருவார்கள்... ஒன்றிரண்டு வார்த்தைகளில் பேச்சை முடித்து விடுபவன் வாய்மொழியில் உதிர்க்கும் அந்த சில வார்த்தைகளை மிகக் கவனத்துடன் கேட்டுக் கொள்பவார்கள்.. தங்கள் கருத்துக்களை மிகத்தயக்கத்துடன் பவ்யமாக அவன் முன்னால் வைப்பார்கள்.. அவன் மறுத்தால் எதிர்ப்பேயில்லாமல் அதை ஏற்றுக்கொள்வார்கள்...
அப்படிப்பட்டவன் போன் பண்ணி.. அன்று மாலை குடும்பத்துடன் ராதிகாவைப் பார்க்க வரப் போவதைச் சொல்லுகிறான்.. கேட்டுக் கொண்ட ராதிகாவோ.. வெகு சாதாரணமாக...
"ஒருவழியா உங்களைக் கட்டி இழுத்தாச்சு போங்க.." என்று சொல்கிறாள்...
"மலையைக் கட்டி இழுத்துட்டதைப் போலச் சொல்கிறயா..?" என்று அவன் கேட்டபோது...
"நீங்க.. மலையா..? ஹ.." என்று சிலுப்பிக் கொள்கிறாள்...
"பின்னே.. நான் என்ன சாதாரணமான ஆளுன்னு நினைச்சிட்டியா..?" அவன் புஜம் தட்டிய போது...
"நீங்க ஹி மேனாவே இருங்க.. எனக்கென்ன வந்துச்சு..? அதனாலேயெல்லாம் எனக்கொன்னுமில்ல.. மைமேனா இருங்க... எனக்கு அதுமட்டும் தான் முக்கியம்.. வெட்டியா அரட்டையடிக்காம.. காலாகாலத்தில உங்க குடும்பத்தோட வந்து களம் இறங்கிற வழியைப் பாருங்க.." என்று வெகு எளிதாக அவனது பராக்கிரமத்தைப் புறக்கணிக்கிறாள்...
"களமா..? ஏண்டி.. உன் வீட்டுக்குத்தானே வரப் போறோம்..? என்னவோ போர்க்களத்துக்கு வரச் சொல்கிறதைப் போல இப்படிச் சொல்லி வைக்கிற..?" பாலமுரளி புரியாமல் கேட்டதற்கு...
"இங்கே லேடி ஹிட்லர் அப்படித்தான் ரெடியாகிக்கிட்டு இருக்காங்க..." என்று எடுத்துக் கொடுக்கிறாள்..
"நான் பயமறியாதவன்னு ஊரே சொல்லும்... வந்து கேட்டுப்பாரு.." என்றவனிடம்...
"அது அப்போ... இது இப்போ..." என்கிறாள்...
"அப்ப இருந்ததுதானே இப்பவும் இருக்கும்..?" வியந்தவனிடம்...
"ஹலோ.. கல்யாணம் ஆகிற வரைக்கும் தான் நீங்க வீரத்திருமகன்.." என்று பயமுறுத்துகிறாள்...
"என்னடி இது.. இப்படிப் பயமுறுத்தற.. பெண்டாட்டின்னா.. பூலான்தேவின்னு அர்த்தமா..?" அவன் சிரித்தபோது...
"இப்பவே சிரிச்சுக்கங்க பாஸ்..." என்று வயிற்றில் புளியைக்கரைத்து ஊற்றுகிறாள்...
"எத்தனையோ பார்த்துட்டோம்.. இதைப் பார்க்க மாட்டோமா.." காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவனிடம்..
"எங்க வீட்டு லேடி ஹிட்லரைப் போல ஒரு ஷி-வுமனை நீங்க பார்த்திருக்க மாட்டிங்க..." என்று படம் காட்டுகிறாள்...
"ஷி-வுமனா..?" புரியாமல் விழித்தால்...
"நீங்க ஆம்பளைங்க மட்டும் ஹிமேன்னு பிலிம் காட்டலாம்.. நாங்க லேடிஸ் மட்டும் ஷி வுமன்னு பிலிம் காட்ட மாட்டோமா..?" என்று விளக்கம் கொடுக்கிறாள்..
"அடேங்கப்பா.. நீ பிலிம் காட்டு.. காட்டு... மாமியாரைப் பார்த்து எனக்கென்ன பயம்..?" என்றவனிடம்....
"எப்பவுமே.. மாமியாரையும்.. சாமியாரையும் சாதாரணமா எடை போட்டுவிடக் கூடாது சார்..." என்று வியாக்கினம் பேசுகிறாள்...
"இப்ப எதுக்குடி சாமியாரை வம்புக்கு இழுக்கறே..? கல்யாணப் பேச்சு பேசும்போது சாமியாரைப் பத்திப் பேசனுமா..?" என்று அதட்டினால்...
"மாமியாரைப் பார்த்தாலும் சாதுவாகத்தான் தோணும்.. சாமியாரும் சாதுன்னுதான் எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க.. அது ரெண்டுமே வெடிச்சுச்சுன்னு வையுங்க.. நாம தாங்க மாட்டோம்..." என்று மாமியாருக்கும் சாமியாருக்குமுள்ள ஒற்றுமையை பிரகடனம் படுத்துகிறாள்...
"வேணாண்டி ராது.. சாமியார் பிழைச்சுப் போகட்டும்.. விட்டுவிடு.. இப்ப மாமியாரின் கதைக்கு வா.. எனக்குத்தான் மாமனர் சப்போர்ட் இருக்கே.. குடும்பத் தலைவரைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு இருக்கிற கெட்டிக்கார மாப்பிள்ளையின் முன்னால லேடி ஹிட்லர் என்னசெய்ய முடியும்..?" என்று அவன் மார்தட்டிய போது...
"குடும்பத் தலைவர்ன்னு அப்பாவாதான் சொல்லிக்கனும்.. தலைமை பதவி சத்தமேயில்லாம அம்மா கையில இருக்கு..." என்று பிட்டுப் பிட்டு வைக்கிறாள்..
"அப்படியா சொல்ற..? உன் அப்பாவைப் பார்த்தா அடங்கிப் போகிறவரைப் போலத் தெரியலையே..." அவன் தாடையைத் தடவியபடி கேட்டபோது...
"அவர் அடங்கிப் போகிறவரில்லைதான்.. அதே சமயம் வீட்டு நிர்வாகத்தை கோட்டை விடாம கெட்டியாப் பிடிச்சுக்கிட்டவருமில்லை..." என்று தகப்பனாரின் குணாதிசியத்தை எடுத்துரைக்கிறாள்...
"நீ என்னதான் சொல்லவர்ற..?" தலை சுற்றியவன் அவளிடமே விளக்கம் கேட்டபோது...
"தோடா... எல்லாத்துக்கும் என்கிட்டயே விளக்கம் கேட்டா எப்படி..? நான் என்னவோ தென்காசிப் பட்டினத்து தேசிங்குராஜா குதிரைமேல ஏறிவந்து என்னை தூக்கிக்கிட்டு போகப் போகிறார்ன்னு எல்லார்கிட்டயும் பீலா விட்டுக்கிட்டு இருக்கேன்.. அதெல்லாம் சும்மாவா..?" என்று உசுப்பேற்றி விடுகிறாள்...
"சும்மாவா..? யாருகிட்ட என்ன கேள்வியைக் கேட்கிற..?" என்று அவன் புஜங்களைத் தட்டியபோது..
"சாயங்காலம் பார்க்கலாம் மச்சான்..." என்று வெகு சாதாரணமாகக் கூறுகிறாள்...
"எதைப் பார்க்கலாம்கிற..?" கேட்டவனிடம்...
"உங்க வீரத்தைத்தான் பார்க்கலாம்கிறேன்.." என்று துளிக்கூட பயமில்லாமல் சொல்கிறாள்...
மொத்தத்தில் பயமற்ற அவனிடம் பயமில்லாதவளாக அவள் பேசினாள்.. அவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது... இரண்டு நாள்களில் ஏற்பட்டிருந்த இனிப்பான மாற்றங்களினால் அவன் ஆனந்தத்தில் தோய்ந்திருந்தான்...
இரவும்... பகலும் அவள் நினைவுதான் அவனுக்கு...
ஏதோ ஒரு வேகத்தில் அவளைத் தொட்டு விட்டவனுக்கு அவளை விட்டு விலக முடியவில்லை... காலமெல்லாம் அவளது நினைவுச் சிலுவையை சுமக்க வேண்டுமா என்ற மனபாரத்தோடு இருந்தவனை உசுப்பேற்றி விட்டு வெற்றி கண்டு விட்டாள் ராதிகா... சங்கரைத் தேடிப் போனவளை கொன்று புதைத்துவிட வேண்டுமென்று நின்றவனை வார்த்தைக் கத்திகளால் காயப்படுத்தி அவளது நிலையை உணர வைத்தாள்.. அவன் வாயாலேயே அவளை மணந்து கொள்வதாகச் சொல்ல வைத்தாள்.. அவனுடைய மனபாரத்திலிருந்து அவனை மீட்டு அவளை முறையாக அடைவதற்கான வழிமுறையை முன்னால் வைத்தாள்...
'இது உனக்குத் தண்டனை...' என்று சொன்னவன் தான் மனதுக்குள் வலியேற்று தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.. அவள் எப்படியும் வார்க்கைப் பிச்சை கேட்டு அவன் காலில் வந்து விழுவாள் என்று மனதிற்குள் மிகவும் எதிர்பார்த்தான்.. அப்படி வரும்போது.. அவளை நன்றாக கண்டித்து விட்டு.. ஊரறிய மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவனது எண்ணமாக இருந்தது... அதே சமயம்.. அவள் ரோசப்பட்டு அவனிடம் வராமலே இருந்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் அவன் நெஞ்சில் எழுந்து அவனை மிகவும் வதைத்துக் கொண்டிருந்தது...
மனதுக்குள் போராடிக் கொண்டிருந்தவனிடம் மீண்டும் ஷோபா பற்ற வைத்தபோது.. எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைத்து விடும் வேகத்துடன்தான் இரண்டாம் முறையும் ராதிகாவைக் கடத்தினான்... இந்த முறை அவள் மிகத் தெளிவாக அவனை எதிர்கொண்டாள்.. பயமேயில்லாமல் அவனிடம் வாதாடினாள்... அவளைத் திருமணம் செய்து கொள்ளும் நிர்பந்தத்தை அவனுக்கு உருவாக்கினாள்...
அவளுக்குத் தெரியாது.. அவள் அவனுடைய மனச்சிக்கலில் இருந்து அவனை வெளிக் கொணர்ந்து விட்டாள் என்பது...
பாலமுரளி மாணிக்கவாசகத்தின் மகன்.. மேகலாவின் வளர்ப்பு... ஒரு பெண்ணை நாசம் செய்து விட்டு கைகழுவி விடுவது அவனது இயல்புக்கு மாறான ஒன்று...
கண்களிலே காதலை உணர்த்தியவள்.. வேறு ஒருவன் பின்னால் போகலாமா என்ற கோபத்தில் தவறு செய்து விட்ட பாலமுரளி.. மனதுக்குள் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.. ராதிகாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த சித்திரவதையிலிருந்து விடுதலை கிடைத்தது மில்லாமல் அவன் காதலித்தவளை.. அவன் தொட்டு ஆண்டவளை... உரிமையாக்கிக் கொள்ளும் மார்க்கமும் கிடைத்துவிட்டது...
"செம வாய்டி உனக்கு..." அவன் சிலாகித்தான்...
"இல்லைன்னா தென்காசிக்காரங்க என்னைப் பலகாரம் பண்ணி விட மாட்டிங்களா..?" அவள் நியாயம் கேட்டாள்...
"உன்னைப் பலகாரம் பண்ண ஒருத்தன் பிறந்து தான் வரனும்டி..."
"அப்ப.. தேனூத்தில பிறந்து வந்திருக்கிற நீங்க யாரு சார்..?"
"அட.. நான் உன்னைப் பலகாரம் பண்றதா..? நீ விட்டுட்டுத்தான் வேற சோலியப் பார்ப்ப..."
"விடலையா..?" அவள் ஆழ்ந்த குரலில் கேட்டபோது அவனுக்கு அந்த நாளின் நினைவு வந்து விட்டது.. அவளைத் தொட்டுத் தழுவி.. ஆண்ட அந்தக் கணங்களின் நினைவில் அவனது உடல் சூடேறியது.. வெப்பப் பெருமூச்சுடன்...
"ராதிகா.." என்று அழைத்தான்...
அவன் குரலில் எதை உணர்ந்தாளோ... அவள் பேச்சிழந்தவளாக மௌனித்தாள்..
"நீ பலகாரம் தாண்டி.. திரும்பச் சாப்பிட உடம்பு துடிக்குதுடி.." அவன் குரல் தாபத்தில் குழைந்தது...
"எத்தனை மணிக்கு வருவீங்க..?" அவள் பேச்சை மாற்றினாள்....
"பேச்சை மாத்தறியா..?" கண்டு கொண்டவனாக  அவன் கேட்டான்...
"தெரியுதில்ல... அப்புறம் எதுக்கு கேள்வி கேட்கறிங்களாம்..?" அவளது குரலில் மறைந்திருந்த வெட்கச் சிணுங்கலில் அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது...
"எதுக்குன்னுதான் நான் சொல்லிட்டேனே..."
"போதும்.. முதலில் பெண் கேட்டு வருகிற வேலையை முடிங்க..."
"அப்புறம்..?"
"கல்யாணத்துக்கு நாள் பாருங்க..."
"அப்புறம்..?"
"அப்புறம்.. அப்புறம்.."
அவள் பேச முடியாமல் தடுமாறினாள்... அவன் அதை ரசித்துப் பலமாகச் சிரித்தான்... அவளின் அந்த வெட்கத்தில் அவன் மனம் நனைந்து திளைத்து எழுந்தது...
அப்போதே அவளைச் சிறையெடுக்கும் வேட்கை அவனுக்குள் பொங்கியது.. அவள் சொன்னதைப் போலவே குதிரையின் மீது ஏறி அவள் வீட்டுக்குப் போக வேண்டும்.. அவனைப் பார்த்ததும் வெளியே ஓடி வருகிறவளின் இடையில் கைகொடுத்து தூக்கி குதிரையில் அணைவாக அமர வைத்துக் கொள்ள வேண்டும்..
'என் மகள்...' என்று தடுப்பவர்களிடம்...
'இல்லை... இவள் என் மனைவி...' என்று சொல்லி விட்டு குதிரையில் பறந்துவிட வேண்டும்..
"ராதிகா..."
"ம்ம்ம்..."
"இந்தப் பெண் கேட்டு.. நிச்சயம் பண்ணி.. நாள் பார்த்து.. தாலிகட்டின்னு என்னால காத்திருக்க முடியலைடி..."
"அதுக்கு...?"
"இப்பவே நீ வேணும் போல இருக்குடி..."
மறுமுனையில் மௌனமானதுதான் அவனுக்குத் தெரியும்.. அவள் உதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கப் போராடியது அவனுக்குத் தெரியாது...
"ப்ளீஸ்..." என்றாள் ராதிகா...
"எதுக்கு ப்ளீஸ் போடற..?" அவன் கோபப் பட்டான்..
"என்னைப் பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்லையா..?"
"என் பாவத்தை நீ பார்க்கவே மாட்டியா...?"
"இப்ப என்ன செய்யனும்கிறிங்க...?"
"வந்து விடு..."
"வந்து...?"
"சொல்லவா..?" அவன் வேட்கையுடன் கேட்க..
"வேண்டாம்.. வேண்டாம்.." என்று உடனடியாக மறுத்தாள்...
"நீதானேடி கேட்ட...?"
"இங்கே பாருங்களேன்.. நான் வந்து நின்னா உங்க அம்மா என்ன சொல்லுவாங்க..? உங்க அக்கா என்ன நினைப்பாங்க..."
அவன் வழியிலேயே போய் கேள்வி கேட்டு அவள் மடக்கி விட்டாள்.. அவன் பதில் சொல்ல முடியாமல் திகைத்தான்..
"என்ன சார்.. பதிலைக் காணோம்..." அவள் குறும்புடன் கேட்டபோது... அவனுக்கு நினைத்தது கிடைக்காத கோபம் கிளர்ந்தது..
"நான் உனக்கு சாராடி...?" சுள்ளென்று விழுந்தான்...
"ஓகே.. மச்சான்.. சரிதானே..."
"இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை..."
"இப்ப உங்களுக்கு என்ன வேணும்..?"
"நீ தான் வேணும்..."
மறுமுனையில் மெலிதாக அவள்சிரித்தாள்.. சிரிப்பைத் தொடர்ந்து மெல்லிய குரலில் பாடினாள்...
"வரலாம்... தொடலாம்...
             மணநாள் வரும் போது...
    தருவேன்.. எனை நான்..
             பக்கம் நீவரும் போது...
    உன்னைத் தொட்டக் காற்றுவந்து
             என்னைத் தொட்டது....
    அதுவே போதுமென்று பெண்மையின்று..
             கேட்டுக் கொண்டது..."
அவன் போனை அணைத்து விட்டாள்.. பண்ணை வீட்டின் மாடிப் பால்கனியில் நின்றிருந்த பாலமுரளியின் உடலை ஈரப்பசையுடன் கூடிய கடல்காற்று வந்து தழுவியது...
'இது அவளைத் தொட்ட காற்றோ...'
அவள் பாடலில் அவன் மையம் கொண்டான்.. அவளைத் தொட்டுத் தழுவிய அந்த மணித்துளிகளுக்கு அவன் மனம் திரும்பியது... அந்த நொடிகளில் அவன் உணர்ந்த அவளின் மென்மையும்.. குழைவும் மீண்டும் வேண்டுமென அவனது உணர்வு கேட்டது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.-54
அம்மம்மா.. கேளடி தோழி.-54
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-54.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-54.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy