அம்மம்மா.. கேளடி தோழி...! -53

53 என் மனதில் உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகளை ஏன் எழுப்பி விட்டாய்.. ? மேகலா கெட்டிக்காரி.. அந்தக் காலத்திலேயே மாற்றி யோசித்து தன்...


53
என் மனதில் உறங்கிக் கொண்டிருந்த
உணர்வுகளை ஏன் எழுப்பி விட்டாய்..?

மேகலா கெட்டிக்காரி.. அந்தக் காலத்திலேயே மாற்றி யோசித்து தன் பிள்ளைகளுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொடுத்த சாமர்த்தியசாலி....
பாலசரஸ்வதி அதை மறந்து விட்டாள்.. தாயிடம் மறுப்புச் சொல்லிவிட்டால் போதும்.. பிடிக்காத பெண்ணை தம்பிக்காக பெண் கேட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து கழன்று கொள்ளலாம் என்ற அவளது நினைவு பொய்த்து விட்டது...
மேகலா மகளைக் கெஞ்சாமல்.. மருமகனிடம் இரண்டு நிமிடம் பேசினாள்.. ராஜராஜன் மனைவியைத் தூக்கி காரில் போட்டுக் கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கு கிளம்பி வந்து விட்டான்...
எந்த பண்ணை வீட்டில் ராதிகாவை பாலமுரளி தொட்டானோ.. அதே பண்ணை வீட்டில்தான் அவர்கள் எல்லோரும் தங்கினார்கள்...
"வாவ்..! பெண்டாஸ்டிக்..! டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரியே இருக்கு.."
ராஜராஜன் பண்ணை வீட்டைச் சுற்றி வந்து அதன் அழகை ரசித்தான்.. ராஜீவும்.. சாதனாவும்.. வெளியூருக்கு வந்திருக்கும் மகிழ்வில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. மேகலா ஓய்வாக அமர்ந்திருக்க.. பாலமுரளி வேலைக்கு வைத்திருந்த வள்ளியம்மாள் அவளுக்கு காபிகொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள்.. அவளுடைய கணவனான பொன்னுச்சாமி கார்களை துடைத்துக் கொண்டிருந்தான்..
"இந்த வீட்டை எப்ப வாங்கின முரளி...?" பாலசரஸ்வதி எரிச்சலுடன் கேட்டாள்...
"இப்பத்தான்..." சாதாரணமாகக் கூறினான் பாலமுரளி..
"எங்ககிட்ட சொல்லவேயில்ல..." குற்றம்சாட்டும் பாவனையில் அவள் குரல் இருந்தது..
"வேலையில மறந்திருப்பேன்.." அதே சாதாரணமான குரலில் பாலமுரளியிடமிருந்து பதில் வந்தது...
"நம்ம தேனூத்து வீடே டூரிஸ்ட் ஸ்பாட் போல அழகா இருக்கு.. இங்கே நமக்கு எதுக்குடா வீடு...?" பாலசரஸ்வதி விடாமல் கொக்கி போட்டாள்..
"அடடா.. விடு சரஸ்.. இது ஒரு பெரிய மேட்டரா..? முரளி சென்னையில பெண்ணெடுக்கனும்னு தீர்மானம் பண்ணிட்டார்.. எதுக்கெடுத்தாலும் மாமனார் வீட்டில நேராய் போய் உட்கார்ந்திர முடியுமா..? இப்பப்பாரு.. இந்த வீடு இருக்கிறதினால நாம நேரா இங்க வந்திட்டோம்.. இல்லைன்னா ஹோட்டலிலதான் தங்கியிருக்கனும்..? நாலையும் யோசித்துத்தான் உன் தம்பி சென்னையில வீடு வாங்கிப் போட்டிருக்கனும்.. அவருக்கு எப்பவுமே முன்யோசனை அதிகம்.." ராஜராஜன் மைத்துனன் பக்கம் நின்று பேசினான்...
"அதைச் சொல்லுங்க.. இவன் முன்யோசனை யாருக்கு வரும்..? தென்காசியில் இவன் பங்களா மேல பங்களாவா வாங்கிப் போடும் போதே நினைச்சேன்.. எதுக்கு தம்பி டவுனுக்குள்ள மாளிகையைக் கட்டறான்னு.. இப்ப இல்ல தெரியுது.. அவன் வசந்த மாளிகையை கட்டியிருக்கான்.. சென்னையில பிறந்து வளர்ந்தவ தேனூத்தில குப்பை கொட்ட மாட்டான்னு இவன்
மனசு கணக்குப் போட்டு வச்சிருக்கு.. அதனால அம்மாவ தேனூத்தில விட்டுட்டு இவன் தென்காசியில தனிக்குடித்தனம் போட ஐடியா பண்ணிட்டான்..."
"உளராதேக்கா..."
"அப்ப தென்காசியிலயும் இருக்க மாட்டயா..? ஓ... சென்னையில பிறந்து வளர்ந்த மகராணிக்கு தென்காசிப் பட்டினமும் பட்டிக்காடாத்தானே தெரியும்..? அதுக்காகத்தான் இங்கேயே இப்படியொரு வீட்டை வாங்கிப் போட்டிருக்கயா..? அவகூட இங்கேயே குடித்தனம் போட்டுரலாமுன்னு முடிவு பண்ணியிருக்கயா..?"
பாலமுரளி ராஜராஜனை குறிப்பாக பார்க்க.. அவன் மனைவியை முறைத்தான்...
"உனக்கேண்டி இப்படியெல்லாம் புத்தி போகுது...?"
"இல்லைங்க.. யார் மனசில என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும்..?"
"இத்தனை நாளா.. உன் மனசில என்ன இருக்குன்னு தெரியாம நான் குடும்பம் நடத்தியிருக்கேன் பாரு.. என்னைச் சொல்லனும்...."
ராஜராஜன் கடிந்து கொண்ட விதத்தில் பாலசரஸ்வதி வாய் மூடிக்கொண்டாள்.. அவள் நகர்ந்ததும் மனைவியின் சார்பாக மைத்துனனிடம் மன்னிப்புக் கேட்டான் ராஜராஜன்...
"அவ கிறுக்குப் பிடிச்சதனமா பேசறா.. அதையெல்லாம் மனசில வைச்சுக்காதீங்க முரளி..."
பாலமுரளி தோளைக் குழுக்கிச் சிரித்தான்... அவர்கள் குளித்து சாப்பிட்டார்கள்.. வள்ளியம்மாள் பரிமாறிய உணவு வகைகளின் ருசியில் அவளை மேகலா பாராட்டினாள்.. பாலசரஸ்வதி அடுத்த கேள்விக்கணையை தொடுக்க ஆரம்பித்தாள்..
"இவங்க ரெண்டு பேரும் புருசன் பெண்டாட்டி போல இருக்கே..."
"ஆமக்கா..."
"இங்கேதான் தங்கியிருக்காங்களா...?"
"தோட்டத்தில இருக்கிற அவுட்-ஹவுஸில இருக்காங்க..."
"ஓஹோ.. இந்தக் காலத்தில ரெண்டு பேருக்கு வேலையைப் போட்டுக் குடுத்து.. குடும்பத்தோட தங்க வீடும் குடுத்துன்னு.. இத்தனை பண்ணியிருக்கயே முரளி.. இதெல்லாம் எதுக்கு..? வீண்செலவுதானே..."
பரிமாறிக் கொண்டிருந்த வள்ளியம்மாள் முகம் கருக்க.. சமையலறைப் பக்கம் வேலையிருப்பதைப் போல போய் விட்டாள்... மேகலா மகளை கோபத்துடன் பார்த்தாலும்.. மருமகனின் முன்னால் மகளைத் திட்டக் கூடாது என்ற நினைவோடு மௌனமாக மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தண்ணீர் தம்ளரை எடுத்து வாயில் சரித்து தன் கோபத்தை குறைத்துக் கொள்ள முயன்றாள்...
ராஜராஜனுக்கும் அதே நிலைமைதான்.. எப்படித்தான் அடக்கி வைத்தாலும்.. ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்து அதைப்பற்றி கேள்வி எழுப்பும் மனைவியை வாயை மூட வைக்கும் மார்க்கங்களை யோசித்து யோசித்து அவனுக்கு தலைவலியே வந்துவிட்டது...
பாலமுரளி இதற்கெல்லாம் அலட்டிக் கொள்கிறவனாகத் தெரியவில்லை... உன்னைப் போல எத்தனை பேரை பார்த்திருப்பேன் என்ற ரீதியில் பாலசரஸ்வதியை ஓர்பார்வை பார்த்தவன்.. நிதானம் குறையாமல் அதற்கும் ஒரு பதிலைச் சொன்னான்...
"இல்லேக்கா.. இதெல்லாம் வீண்செலவு இல்லை.. இன்னும் சொல்லப் போனா இதனால எனக்குப் பணம் தான் மிச்சமாகுது..."
எவ்வளவு நேரம்தான் வள்ளியம்மாளால் சமையலறையில் வேலையிருப்பதைப் போல பாவனை செய்தபடி ஒளிந்திருக்க முடியும்..? பரிமாற அவள் சாப்பாட்டு மேஜைக்கு வந்துதானே ஆக வேண்டும்..? வேறு வழியின்றி சாப்பாட்டு மேஜைக்கு வந்தாள் பாலமுரளியின் பேச்சில் முகம் மலர்ந்தாள்...
'வேலைக்காரியின் முன்னால் என்னை வாரி விடுகிறானா....?'
பாலசரஸ்வதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது...
"யாருகிட்டடா காது குத்தற...?"
"காதும் குத்தலை.. ஜிமிக்கியும் போட்டு விடலை.. நீ கதையைக் கேளு... எப்படியும் மாசத்துக்கு ஒரு தடவையாவது நான் சென்னைக்கு வந்து போக வேண்டியிருக்கு..."
"முதல்லதான் மாசத்துக்கு ஒருதடவ.. இனி மாசத்துக்கு எத்தன தடவையோ...?"
"தெரிஞ்சால் சரி... இங்கே வரும் போதெல்லாம் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போடனும்.. அந்தச் செலவில் பாதிதான் இவங்களுக்கு நான் சம்பளமாய் கொடுக்கிறேன்.. அவுட் ஹவுஸ் சும்மாதான் இருக்கு.. இவங்க அதில தங்கியிருக்கிறதால வீட்டுக்கும்.. தோட்டத்துக்கும் பாதுகாப்பு... அதோட.. இங்கே இருக்கிற பழ மரங்களிலயும்.. தென்னை மரங்களிலயும் வருமானம் வருது.. அதைக் கட்டிக்காப்பாத்தி.. கணக்கு வழக்கைப் பார்க்க இவங்க இங்கேயே இருந்தாகனும்..."
பாலமுரளி கோர்வையாக பேச.. பாலசரஸ்வதி அடுத்த கேள்விக்கணையைத் தொடுக்க ஆயத்தமானாள்...
"அப்ப.. உன் மாமனாரா வரப் போகிறவரு பாடு கொண்டாட்டம்தான்னு சொல்லு..." பாலசரஸ்வதியின் குரலில் எகத்தாளம் மிதந்தது...
"அவரு எதுக்காக இதைக் கொண்டாடனும்..?" பாலமுரளி புருவங்களை உயர்த்தினான்...
"இங்கேயோ வருமானம் கொட்டுதுங்கிற.. நீயோ தேனூத்தில இருந்துக்கிட்டு வந்து போகப் போறேங்கிற.. இதை மேற்பார்வை பார்க்கிற சாக்கில அவர் ஆண்டு அனுபவிக்கலாமே..."
ராதிகாவின் தகப்பனாரை பாலசரஸ்வதி குறைவாகப் பேசுவதில் பாலமுரளிக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை.. அவன் அவளுடைய தம்பி.. அவனைப் பேசுவதைக்கூட.. அக்கா என்பதற்காக பொறுத்துக் கொள்ளலாம்.. ஆனால் அவளுக்கு பிடிக்காத பெண்ணைப் பெற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக கிருஷ்ணமூர்த்தியின் மீது அவள் பழி போட்டது பாலமுரளியின் கோபத்தை கிளறிவிட்டது...
"எல்லோருமே.. அடுத்தவங்க சொத்துக்கு ஆளாப் பறக்கிறவங்களா இருக்க மாட்டாங்கக்கா.. அவங்க வீடு நம்மளப் போல பெரிய பணக்கார வீடா இல்லாம இருக்கலாம்... அதுக்காக வசதி குறைஞ்சவங்கன்னு அர்த்தமில்ல.. ராதிகாவோட அப்பா சென்ட்ரல் கவர்ண்மென்டில ஆபிசரா இருக்கார்.. சென்னையில சொந்தவீடு.. கிராமத்தில நிலபுலன்னு அவரும் வசதிவாய்ப்பா இருக்கிறவர்தான்.. மகளோட சொத்தில உரிமை கொண்டாட வேண்டிய அவசியம் அவருக்கில்ல.."
"மகளோட சொத்தா..?"
"ஆமா.. இந்த பண்ணை வீட்டை ராதிகாவின் பெயரில்தான் வாங்கியிருக்கேன்..."
"என்னது..???"
பாலசரஸ்வதி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட.. பாலமுரளி கைகழுவ எழுந்து சென்று விட்டான்...
"ம்ஹீம்.. எனக்குத்தான் நெஞ்சுவலி வருதுன்னா.. நீயும் அதை இழுத்துக்கிட்டியா..? வள்ளி கொஞ்சம் ஜீஸைக் கொண்டு வாம்மா..."
மேகலா தலையில் அடித்துக் கொண்டு மகளுக்கு பழச்சாற்றைக் கொடுத்தாள்...
"ஏம்மா... கல்யாணமே இன்னும் ஆகலை.. அதுக்குள்ள அவ பெயரில இவ்வளவு பெரிய
பண்ணை வீட்டை.. அதுவும் சென்னையில வாங்கிப் போட்டிருக்கானேம்மா..."
"அவன் சம்பாத்தியம் அவன் வாங்கிப் போடறான்.. இதில உனக்கு எதுக்கு இத்தனை வருத்தம்..? வந்த வேலையைப் பார்ப்பியா.. அதை விட்டுட்டு எதையெதையோ ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருக்க..."
"என்னம்மா இப்படிச் சொல்றிங்க... கோடிக் கணக்கில பணத்தைக் கொட்டி இந்த பண்ணை வீட்டை வாங்கிப் போட்டிருக்கான்ம்மா... அதுவும் அவ பேரில வாங்கிப் போட்டிருக்கான்..."
"எவ பேரில..? தெருவில் போகிறவ பேரிலயா வாங்கிப் போட்டிருக்கான்..? அவனுக்கு வரப்போற பொண்டாட்டி பேரிலதான வாங்கிப் போட்டிருக்கான்.."
"இன்னும் அவ இவனுக்கு பெண்டாட்டியாகலை..."
"ஆகப் போகிறவதான..?"
"அதெப்படி அவ்வளவு நிச்சயமாய் சொல்ல முடியும்..? மணவறை வரைக்கும் வந்த கல்யாணம் கூட நின்னு போயிருக்கு..."
அதுவரை பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த மேகலா இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பொறுமையைக் கைவிட்டாள்..
"சரசு..."
அவள் போட்ட சத்தத்தில் பாலசரஸ்வதி ஆடிப் போய்விட்டாள்..
"அம்மா..."
"பேசாதே.. நாம இங்கே என்ன வேலைக்கு வந்திருக்கோம்..? நம்ம முரளிக்கு நிச்சயம் பண்ண வந்திருக்கோம்..."
மேகலா கோபக் குரலில் சொல்லிக் கொண்டிருக்க.. அவளது கோபத்தைக் கிளப்பி விட்டுவிட்ட நினைவேயில்லாமல் மேலும் அவளது கோபத்தீயை தூண்டி விடும் வகையில் பேசிவைக்க ஆரம்பித்தாள் பாலசரஸ்வதி...
"இல்லேம்மா.. பொண்ணு பார்க்கத்தான வந்திருக்கோம்..? நீங்க எதுக்கு நிச்சயம் வரைக்கும் போறிங்க...?"
'இவளை என்ன செய்தால் தேவலாம்...'
பல்லைக் கடித்த மேகலாவிற்கு நெஞ்சை வலிப்பது போல் இருந்தது.. அதை சொல்லி வைத்தால் அதுதான் சாக்கென்று அதையே காரணமாகக் காட்டி பாலசரஸ்வதி பெண் கேட்கப் போகாமல் மேகலாவை மருத்துவ மனைக்கு கொண்டு போய் விடுவாள்.. அதுவும் போதாது என்று... பெண் கேட்க வந்தவுடனே மேகலாவின் உயிருக்கு ஆபத்தாகி விட்டது என்று கதை பரப்பி திருமணத்தையே நிறுத்தி விடுவாள்...
மேகலாவிற்கு மகளைப் பற்றி மிக நன்றாகவே தெரியும்.. ஒருவரைப் பிடித்துப் போய் விட்டாள் பாலசரஸ்வதி தேவதைப் பெண்.. அதுவே அவர்களைப் பிடிக்காமல் போய்விட்டால்... அவள் குணம் மாறிவிடும்...
'இவளுக்கு ஏன் ராதிகாவப் பிடிக்காமப் போச்சு..'
கண்ணால் காணாமலேயே ராதிகாவை பாலசரஸ்வதி வெறுப்பதற்கான காரணம் புரியாமல் திகைத்தாள் மேகலா...
"சரசு.. பொண்ண உன்தம்பி பார்த்துட்டான்.. அவள அவனுக்குப் பிடிச்சுப் போயிருச்சு.. கட்டினா அவளத்தான் கட்டுவேன்னு தீர்மானமா சொல்லிட்டான்.. அதுக்குப் பின்னால பேச வேற பேச்சே இல்லை..."
"அவனுக்கென்னம்மா தெரியும்..?"
"அதைச் சொல்லு.. அவனுக்கென்ன தெரியும்..? சின்னப்பையனா லட்சணமா பெத்தவ பேச்சைக் கேட்டு.. உன்னை பட்டப்படிப்பு படிக்க வைக்காம மூலையில முடக்க அவனுக்கு தெரிஞ்சுச்சா..? என்தம்பி அஞ்ஞ்ஞ்.. சாவது.. படிச்ச மேதாவி.. அவனுக்குத்தான உன்னைக் கட்டிக் கொடுக்கனும்னு நான் ஒத்தக்காலில நின்னேன்.. என் பேச்சை எதுக்கக் கூடாதுன்னு தெரிஞ்சுச்சா..? ரொம்பப் பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்க்கறியே... உன்னால நிரக்க சீர் செய்ய முடியாதுடா தம்பி.. வேற இடம் பாருன்னு சொன்னேன் அம்மா பேச்சைக் கேட்கனும்ன்னு அப்ப அவனுக்கு தெரிஞ்சுச்சா..? தகப்பனில்லாத பொண்ணுடா தம்பின்னு சொன்னேன்.. ஆமாம்ன்னு சொல்ல அவனுக்கு தெரிஞ்சுச்சா..? இல்லையே.. அவனுக்கு அதெல்லாம் தெரியலையே.. தகப்பனுக்கு தகப்பனா.. தம்பி நானிருக்கேன்னு சொன்னானே.. ஒரு அண்ணன்காரன் இந்த வார்தையச் சொல்லியிருந்தா அதில ஒரு அர்த்தமிருக்கு.. தம்பிகாரன் சொல்லி வைச்சானே.. அவனுக்கு ஒன்னும் தெரியாதுதான்.. உனக்குத்தான் எல்லாம் தெரியும்..."
இந்தப் பேச்சில் பாலசரஸ்வதி அடங்கிப் போய்விட்டாள்.. அவள் முகத்தில் ஈயாடவில்லை...
"பேசிப்பாரு.. இந்தப் பேச்ச அவன்கிட்டப் பேசிப்பாரு.. உனக்கு அந்த தைரியம் இருக்கா..?"
இருந்ததில்லை... பதினைந்து வயதில் குடும்பப் பொறுப்பை தன்கையில் எடுத்துக் கொண்ட பாலமுரளியின் பேச்சுக்கு எதிர் பேச்சுப் பேச யாரும் துணிந்ததில்லை...
மேகலாவே மகனின் மனமறிந்து.. குறிப்பறிந்துதான் பேசுவாள் எனும்போது மற்றவர்கள் எம்மாத்திரம்...
பாலமுரளியிடம் எதிர்த்து நின்று கேள்வி கேட்டது.. ராதிகா மட்டும்தான்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -53
அம்மம்மா.. கேளடி தோழி...! -53
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-53.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-53.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy