அம்மம்மா.. கேளடி தோழி...! -52

  52 உன் காலடிச்சுவட்டில் - என்.. கால் பதித்து நடந்தேன்... பாலமுரளி தாயின்மேல் பாசம் கொண்டவன்.. தமக்கையின் மீது பிரியம் கொண்டவன்....


 52
உன் காலடிச்சுவட்டில் - என்..
கால் பதித்து நடந்தேன்...

பாலமுரளி தாயின்மேல் பாசம் கொண்டவன்.. தமக்கையின் மீது பிரியம் கொண்டவன்.. அந்தக் குடும்பத்தின் ஆண்மகன்.. தாயையும்.. தமக்கையையும் ஆதரித்துக் காக்க வேண்டிய கடமையில் கட்டுண்டவன்..
அவன் அந்தக் குடும்பத்தின் அச்சாணி.. ஆணிவேர்...
அவனால்தான் அந்தக் குடும்பத்தின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது.. அவனால்தான் அந்தக் குடும்பம் நிலை கொண்டிருக்கிறது...
தமக்கையின் குண மாறுதலுக்கான காரணத்தை யூகித்துக் கொண்டவனுக்குள் பாசம் பொங்கியது.. அதுவரை அவளுக்கு உரிமையாக இருந்த தம்பியும்.. பிறந்தவீடும் தம்பியின் மனைவியின் வருகைக்குப் பின் மாறிவிடுமோ என்று அக்காபயப்படுவதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது...
அவள் ஏன் அப்படி நினைக்க வேண்டும்..? என்றுமே அவன் அவளின் தம்பிதான்.. இதை அவளுக்கு புரிய வைக்க முயன்றான் பாலமுரளி..
"அவ நல்லவதான்க்கா..."
"உனக்கு எப்படித் தெரியும்..?"
"பழகிப் பார்த்தவன் நான்.."
"காதலா..?"
முகம் சுளித்தாள் பாலசரஸ்வதி.. அவளுக்கு அந்த வார்த்தையைச் சொல்லவே பிடிக்கவில்லை.. குடும்ப கௌரவம்.. பாரம்பர்யம் முதலியவற்றை அவள்தான் கட்டிக்காக்க வேண்டும் என்று இரவும் பகலும் போதித்த மேகலாவின் இடைவிடாத போதனைகளைக் கேட்டு வளர்ந்தவள் அவள்.. பார்வையை இந்தப்பக்கம்.. அந்தப் பக்கமென்று திருப்பாமல் ஒரே நேர் கோட்டில் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு வாழ்க்கைப் பாதையில் பயணித்தவள் அவள்...
பெண் பார்க்க வந்த ராஜராஜனை நிமிர்ந்து பார்க்கக் கூட அவள் தயங்கினாள்.. அவளின் அந்த அச்சமும்.. வெட்கமும் தான் ராஜராஜனை அவள்பால் ஈர்த்து காதலால் கட்டிப் போட்டது...
அப்படிப்பட்டவள் காதல் என்ற வார்த்தையில் முகம் சுளிக்காமல் என்ன செய்வாள்..?
"நீ மாமாவைக் காதலிக்கலையா..?" பாலமுரளி நிதானமாகக் கேட்டான்...
"ஏண்டா.. இதுவும்.. அதுவும் ஒன்னா..?"
"என்ன பெரிய வித்தியாசத்தைக் கண்டுட்ட..? மாமா உன்னைப் பெண்பார்க்க வந்தப்போ உன்னைப் பார்த்தாரு.. பார்த்தவுடனே உன்னை அவருக்குப் பிடிச்சுப் போயிருச்சு.. இது கண்டதும் காதலில்லையா..?"
"முரளி..." பாலசரஸ்வதிக்கு முகம் சிவந்துவிட்டது..
"நானும் அதைப் போலத்தான்.. உன் சின்ன மாமியா வீட்டுக்கு யதேச்சையா போயிருந்தேன்..
அங்கே என்னன்னா.. நம்ம ஊர் திருவிழா மாதிரி சீரியல் செட்டைக் கட்டி.. தோட்டத்தில் ஜெகஜ்ஜோதியா கூடியிருந்தாங்க.. என்னாங்கடா விசேசம்ன்னு கேட்டாக்க.. உன் சின்னமாமியா பொண்ணுக்கு பிறந்தநாளுன்னு சொல்றாங்க... எனக்குத் தலைவலியாப் போச்சு.. உடனே திரும்பிரலாமுன்னு பாத்தா.. அங்கே ஒரு பொண்ணு.. அழகா.. அம்சமா நின்னுக்கிட்டு இருந்தா.. பார்த்தவுடனே மனசுக்குள்ள பத்திக்கிச்சு.. பச்சக்குன்னு அவமுகம் மனசில பதிஞ்சு போச்சு.. மறக்க முடியல.. கட்டினா அவளத்தான் கட்டனும்னு தோணிப்போச்சு.. மாமாவும் உன்னைப் பார்த்துட்டுப் போன உடனே இதைத்தான் அவர் வீட்டிலே சொன்னதா... நீ எனக்குச் சொன்னதாக ஒரு ஞாபகம்.. உண்டா.. இல்லையா..?"
"அவரு முறைப்படி என்னைப் பெண் பார்க்க வந்தாரு முரளி..."
"நான் பெண் பார்க்கன்னு போகலை.. அவ்வளவு தான்.. அதனால் என்ன குறைஞ்சு போச்சு..? முறைப்படி பொண்ணுப் பார்த்து பொண்ணைக் கேட்க.. என் குடும்பத்தோட வர்றேன்னு அவ வீட்டிலே சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்.. எனக்காக.. அம்மாவோட... நீயும் மாமாவும்தான் பொண்ணுக் கேட்கனும்..."
"அந்தப் பொண்ணுகுணம் சரியில்ல முரளி..."
பாலசரஸ்வதி தவிப்பாகச் சொல்ல.. பாலமுரளியின் புருவங்கள் உயர்ந்தன... அவனுடைய அக்காவுக்கு ராதிகாவைப் பற்றிய எந்த விவரமுமே தெரியாது.. அவள்  இருப்பது திருநெல்வேலியில்.. ராதிகா இருப்பது சென்னையில்...
"உனக்கு எப்படித் தெரியும்...?"
"ஷோபா சொன்னா.. இந்தப் பொண்ணு ஷோபா வோட கிளாஸ்மேட்டாமே..?"
பாலசரஸ்வதி சொன்னதைக் கேட்டதும்..
"இவ்வளவுதானா.. நான்.. என்னவோ.. ஏதோன்னு நினைச்சிட்டேன்..." என்று தோள் குலுக்கிச் சிரித்தான் முரளி...
"என்னடா இப்படி ஈஸியா எடுத்துக்கறே..?" பாலசரஸ்வதிக்கு மனம் தாளவில்லை...
"வேற எப்படி எடுத்துக்கச் சொல்ற..? அந்த ஷோபாவைப் பத்தியே எனக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது.. அவ ஒருத்தரைப் பார்த்து நல்லவங்கன்னு சொன்னாதான் நாம யோசிக்கனும்.. பயப்படனும்.. அவளே குணம் சரியில்லாதவ... அவ குணம் சரியில்லன்னு சொன்னா.. ராதிகாதான் குணக்குன்று.. குடும்பத்துக் கேத்த குத்துவிளக்கு.. இதை நீ புரிஞ்சுக்க.. உன் சின்ன மாமியாமக பேசின பேச்சைக் கேட்டுக்கிட்டுத்தான் நீ இப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வர்றியா..? போக்கா..."
"இல்லடா முரளி.. ஷோபா நீ நினைக்கிறதைப் போல இல்ல... நீ அவளைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க.."
"நீ மட்டும் சரியாப் புரிஞ்சுக்கிட்டு இருக்கியாக்கும்.. அவளப்பத்தி எனக்குத்தான் தெரியும்.. விட்டுத்தள்ளு.."
"சரி.. நீ அவளைக் கட்டிக்க வேணாம்.. வேற ஒரு நல்ல பொண்ணாப் பார்த்துக் கட்டிக்கடா தம்பி.. ராதிகா உனக்கு வேணாம்டா முரளி..."
"ஏன்க்கா.. எனக்கு இவளத்தான் பிடிச்சிருக்கு.. கட்டினா இவளத்தான் கட்டுவேன்னு சொல்றேன்.. நீ அதைக் காதில வாங்கிக்காம பேசிக்கிட்டே போற.. ஒன்னைப் புரிஞ்சுக்கக்கா.. எனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு வாழ்க்கையில நடந்தா.. அது இவளோடதான் நடக்கும்.. இவதான் எனக்கு பெண்டாட்டி.. இவ மட்டும்தான் எனக்கு பெண்டாட்டி.. புரிஞ்சுக்க..."
அதற்கு மேல் அந்தப் பேச்சைத் தொடர விருப்பமில்லை என்பதை தெளிவாக உணர்த்தியவனாக பாலமுரளி எழுந்து போய்விட்டான்..
பாலமுரளியின் முடிவை இனி யாராலும் மாற்ற முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்ட பாலசரஸ்வதிக்கு தனக்கு ஏற்பட்ட தோல்வியினை ஜீரணித்துக் கொள்ள சிரமமாக இருந்தது...
அதுவரை அவள் கேட்டு இல்லையென்று பாலமுரளி சொல்லியதே இல்லை.. முதன் முதலாக அவள் கேட்டதைச் செய்ய அவன் மறுத்துவிட்hன்.. அவள் வேண்டாமென்று எவ்வளவோ சொல்லியும் ராதிகாதான் அவனுக்கு மனைவியென்று சொல்லி விட்டான்..
திருமணமாகி அந்த வீட்டில் காலடி வைப்பதற்கு முன்னாலேயே தம்பியின் மீது அவளுக்கிருந்த ஆளுமையை தகர்த்து எறிந்த ராதிகாவை மனமார வெறுத்தாள் பாலசரஸ்வதி...
அவளுக்கென்று அவள் வார்த்தைக்கென்று ஒரு மரியாதை பாலமுரளியிடம் இருந்தது.. அதை.. அவன் கையால் தாலி வாங்கிக்கொண்டு வருவதற்கு முன்னால் உடைத்தெரிந்து விட்டாள் அந்த ராதிகா.. அவளை மன்னிக்க பாலசரஸ்வதிக்கு மனம் வரவில்லை...
தோற்றுப் போன மனநிலையுடன் மறுநாளே அவள் திருநெல்வேலிக்கு திரும்பி விட்டாள்... பாலமுரளி அவளைத் தடுக்கவில்லை.. அதே சமயம் எப்போதும் அவளுடன் செல்லும் சீர்வரிசைகளை குறைவில்லாமல் அனுப்ப மறக்கவுமில்லை...
"வேண்டாம் முரளி..." அவன் முகம் பார்க்காமல் பாலசரஸ்வதி சொன்னபோது...
"ஏன்..?" என்று புருவம் உயர்த்தினான் அவன்...
"இப்பப் போல எப்பயும் உன்னால அனுப்ப முடியுமோ என்னவோ.. எதற்கும் நான் இப்பவே தயாராகிக்கிறது நல்லதுடா.. இதைக் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கப் பழகிக்கறேன்.." பாலசரஸ்வதியின் குரல் கம்மியது..
"இதோ பாருக்கா.. நீ எதை மனசில நினைச்சுக்கிட்டு இப்படிப் பேசறன்னு எனக்கும் புரியுது.. ராதிகாதான் என் பெண்டாட்டி.. அதில எந்தவித மாற்றமுமில்லை.. அதேசமயம்.. நீ என் அக்கா.. கடைசி வரைக்கும் உனக்கு நிரக்க சீர் செய்ய கடமைப்பட்ட உன்னோட தம்பி நான்.. அதைக் கடைசிவரை செய்வேன்.. இதிலயும் எந்தவித மாற்றமுமில்லை.. அதனால எதையும் நீ குறைச்சுக்க பழகிக்க வேணாம்.. உனக்கு எதுவும் குறையவும் குறையாது.. இது உன் வீடுக்கா.. நீ பிறந்து வளர்ந்த வீடு.. இங்கே உனக்கிருக்கிற உரிமையில சிறு குறைவுகூட வராது.. நான் வரவிடமாட்டேன்.." பாலமுரளியின் குரலில் உறுதி இருந்தது...
பாலசரஸ்வதி போய்விட்டாள்... மேகலாவிடம் தமக்கை பேசிய வார்த்தைகளைப் பற்றி அவன்
பேசிய போது அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேயில்லை...
"கிடக்கிறா விடு.." என்றுதான் அவள் சொன்னாள்..
இத்தனைக்கும் அவள் மகளுக்கான முக்கியத்துவம் குறையக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கும் தாய்.. ஒவ்வொரு முறை மகள் பிறந்தவீட்டிற்கு வந்து திரும்பும் போதும் அவளுடன் வண்டி நிறைய சீர் செல்ல வேண்டும் என்பதில் கவனம் எடுப்பவள்.. அதை மகனுக்குச் சொல்லி வளர்த்தவள்..
"அம்மா..." என்று வியந்த மகனின் முகம் பார்த்தாள் அந்த அன்னை.. அவள் முகத்தில் தாய்மையின் பாசம் சொட்டியது...
"கறந்த பாலைவிட உன்பாசம் சுத்தம்டா முரளி.. நீயா ஒற்றை உடன்பிறப்பை கைவிட்டுடவ..? அவ மனசை யாரோ கலைச்சிருக்காங்க.. நம்ம வீட்டில பிறந்த பொண்ணுக்கு கூடப்பிறந்தவனின் பாசத்து மேல சந்தேகம் வரலாமா..? அவ சொல்லியா அவள நீ வளர்த்த..? அவ கேட்டா அவள படிக்க வைச்ச..? அவ ஆசைப்பட்டா.. பெரிய இடத்தில கண்ணுக்கு லட்சணமான புருசனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்த..? அவ உன்னைவிட மூத்தவ... ஆனா.. அவ உன்ன வளர்க்கலையேடா தம்பி.. நீதானே அவள வளர்த்த.. அவளுக்கு தம்பியாவா நீ இருந்த..? தகப்பனா இருந்தியேடா சாமி.. அந்த நன்றி விசுவாசம் அவ மனசில இருந்தா இப்படியெல்லாம் பேசுவாளா..?"
"விடுங்கம்மா.. அதுக்கு அதோட சின்ன மாமியா மகள நான் கட்டிக்கலைங்கிற வருத்தம்..."
"வரலாமா.. அப்படியாப்பட்ட வருத்தம் அவ மனசில வரலாமா..? நீ ஆசைபட்டுட்டன்னு வாய்விட்டு சொல்றியேப்பா.. அவளத்தவிர வேறொருத்தி கழுத்தில தாலியைக் கட்ட மாட்டேன்னு உறுதியா நிக்கறியேப்பா.. அப்படியிருந்தும் இவ இப்படிப் பேசினா.. இவ மனசில உன்மேல பாசம் இல்லைன்னு தானே அர்த்தமாகுது..."
"சேச்சே.. அக்கா அப்படியில்லம்மா.. அதுகுணத்தப் பத்தி நமக்குத் தெரியாதா...?"
"உன் குணத்த அவ தெரிஞ்சுக்கலையேடா தம்பி..  நீ ஒன்னை நினைக்க மாட்ட... நினைச்சா கடைசிவரைக்கும் அதில நிலைச்சு நிற்பன்னு அவளுக்குத் தெரியாதா..? தெரிஞ்சும் ஏன் உன் விசயத்தில தலை கொடுக்கிறா.."
"அதுக்கு என்னவோ ஒரு பயம்.. எல்லாப் பொண்ணுகளைப் போல இதுவும் தாய்வீட்டுப் பாசம் தம்பி பெண்டாட்டி வந்துட்டா குறைஞ்சு போயிடுமோன்னு நினைச்சிருச்சு..."
"அவளுக்கு தாய் வீட்டுப் பாசம் நிலைச்சு நிக்கனும்கிறதுக்கா... காலமெல்லாம் நீ கல்யாணம் பண்ணிக்காமலே நிக்கனுமுன்னு அவ நினைக்கிறாளாடா முரளி..."
"என்னம்மா இது.. அதுதான் விவரம் புரியாமப் பேசுதுன்னா.. நீங்களும் அதைப் போலவே பேசி வைக்கறீங்க..."
"அதில்லைடா முரளி.. நீ ராதிகாதான் உனக்குப் பெண்டாட்டியாய் வர முடியும்ன்னு சொல்லிட்ட... அந்த வார்த்தை வந்த பின்னாலே வேற பேச்சுக்கு இங்கே இடமில்ல.. அதை உன் கூடப்பிறந்தவ புரிஞ்சுக்கனும்.. எனக்கு அவ முக்கியம்தான்.. அதே சமயம் என் மகனும் எனக்கு முக்கியம்.. ராதிகா நல்ல பொண்ணுடா தம்பி.. எனக்கு அவள ரொம்ப புடிச்சிருக்கு.. அக்கா இப்படிச் சொல்லிட்டாளேன்னு மனசில போட்டு ஒழப்பிக்காதே.. அம்மா நான் சொல்றேன்.. ராதிகாதான் என் மருமக.. நிம்மதியாய் ஆக வேண்டிய வேலைகளப் பாரு..."
எப்போதும் மகளைப் பற்றியே பேசிக் கவலைப்படும் மேகலாவின் மனதில் மகனுக்கான இடம் எப்பேற்பட்டதாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட முரளி மெய்சிலிர்த்துப் போனான்...
அந்த வார இறுதியில் அவர்கள் குடும்பத்தோடு சென்னைக்கு ராதிகாவைப் பெண் கேட்டுப் போனார்கள்.. பாலசரஸ்வதி தலைமுதல் கால்வரை வலிப்பதாகச் சொல்லி.. வரமுடியாது என்று கூறிவிட.. மேகலா முதன் முறையாக மருமகனுக்குப் போனைப் போட்டு நேரடியாகப் போசினாள்...
அப்போது பாலமுரளி வீட்டில் இல்லை...
"முரளிக்கு கல்யாணம் கூடி வந்திருக்கு மாப்பிள்ளை.. ஒரு பொண்ணுமேல ஆசைப்படறான்.. பொண்ணு மெட்ராஸில இருக்கு... அழகாயிருக்கு.. படிச்சுக்கிட்டு இருக்கு.. நம்மளப்போல வசதிவாய்ப்பில உச்சத்தில இல்லாட்டியும் மரியாதையா.. கௌரவமா வாழற நடுத்தரக் குடும்பம்.. சரசு இதைப் பிடிச்சுக்கிட்டு தொங்கறா.. நமக்கு பணம் காசுக்கு குறைவில்ல.. வர்றவ எந்த வீட்டில பொறந்தா என்ன..? அவ கொண்டு வந்தா பொழைக்கப் போறோம்..? இதைச் சொன்னா காதில வாங்கிக்க மாட்டேங்கிறா.. முரளியோ கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா அந்தப் பொண்ணோடதான்னு தீர்மானமா சொல்லிட்டான்... உங்களுக்கு அவன் குணம் தெரியும்.. பிடிச்சா உடும்புப்பிடித்தான்.. மாறவே மாட்டான்..."
"அதனால என்னத்தை.. அவரு மனசுப் பிரகாரமே கல்யாணத்தைப் பண்ணிவச்சிர வேண்டியதுதானே..?"
"அதுக்குத்தான் மெட்ராஸீக்கு பொண்ணு கேட்டுக் கிளம்பப் போறோம்.. நீங்களும்.. சரசுவும் வந்து பொண்ணு கேட்டாத்தானே நல்லாயிருக்கும்..?"
"நிச்சயமாய்.. அதானே முறை..?"
"ஆனா சரசு வர மாட்டேங்கிறா.."
"அப்படியா..? இதைப்பத்தி ஒருவார்த்தைகூட எங்கிட்ட அவ சொல்லலையே..."
"சொல்லிட்டதா இல்ல எங்கிட்டச் சொன்னா.. உங்களுக்கு வேலையிருக்காம்... அவளுக்கு தலைமுதல் கால்வரை நோவா இருக்காம்..."
"ஹா.. ஹா.. எனக்கு முக்கியமான வேலையெதுவும் இல்ல.. அவளுக்கும் உடம்பு நல்லாயிருக்கு.. அவ அப்படிச் சொன்னாளா..? நீங்க இதை நினைச்சுக் கவலைப்படாதீங்க.. என்னைக்கு கிளம்பனும்னு சொல்லுங்க.. அன்னைக்கு நான அவளைக் கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்..."
"முரளி தகப்பனில்லாத புள்ள மாப்பிள்ளை.. நீங்கதான் அவனுக்கு முன்னாடி நின்னு கல்யாணத்தை நடத்திக் கொடுக்கனும்..."
"இதை நீங்க எனக்குச் சொல்லனுமா அத்தை..? நான் முரளியை விட்டுக் கொடுக்க மாட்டேன்..."
மேகலா இருந்த இடத்தில் இருந்துகொண்டு நினைத்ததை செய்து முடித்துவிட்டாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -52
அம்மம்மா.. கேளடி தோழி...! -52
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-52.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-52.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy