அம்மம்மா.. கேளடி தோழி...! -51

51 என்மனதை நீ அறிய... ஒற்றை வார்த்தை போதாதா.. ? பச்சைப் பசேலென்ற புல்வெளியைப் போல.. நாற்றுக்கள் பாவிப் படர்ந்திருந்தன... எந்த நேர...


51
என்மனதை நீ அறிய...
ஒற்றை வார்த்தை போதாதா..?

பச்சைப் பசேலென்ற புல்வெளியைப் போல.. நாற்றுக்கள் பாவிப் படர்ந்திருந்தன... எந்த நேரமும் நீர் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருந்ததால் அவற்றின் நடுவே நீரில் கால் நனைத்து நாரைகள் நின்று கொண்டிருந்தன... வரப்பின் மீது லாவகமாக நடந்த வண்ணம் கூட வந்த மருதமுத்துவிடம் வயலைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தான் பாலமுரளி... மரியாதையான இடைவெளி விட்டு அவனைப் பின்தொடர்ந்தபடி மருதமுத்துவும் அவன் கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தான்...
"வெள்ளாமை செய்து விளைச்சலை எடுக்கற வரைக்கும் பெரிய பாடுதான் போ..."
"ஆமாங்கய்யா.. இப்பல்லாம் முன்னமாதிரி கழனி வேலைக்கு ஆள் கிடைக்கறிதில்லங்கய்யா.. அம்புட்டு ஜனமும் டவுனைப் பார்த்து நகர்ந்துக்கிட்டு இருக்கு..."
"நிஜம்தான் மருதமுத்து.. விவசாயம் செய்கிறதை நம்ம ஜனங்க கொஞ்சம்.. கொஞ்சமாக.. குறைச்சுக்கிட்டும்.. மறந்துக்கிட்டும் வர்றாங்கதான்..."
"காட்டு வேலை செய்யறதைவிட கட்டிடவேலை செய்ய ஜனங்களுக்கு பிடிச்சுப் போயிருச்சுங்கய்யா.. சின்ன விவசாயிக யாரும் இப்ப கலப்பையைத் தொடறதில்ல..."
"அதர்காக விவசாயம் அழிஞ்சு போயிராது மருதமுத்து... கம்யூட்டரில பணம் கொட்டினாலும்.. வயித்துக்குள்ளப் போட காய்கறியும்.. அரிசியும் தான வேணும்..தேவையிருக்கிறப்போ எந்தத் தொழிலும் அழிஞ்சு போயிராது.. கவலையை விடு.."
"என்னமோ போங்கய்யா.. நாட்டு நிலைமையைப் பார்க்கிறப்போ காலம்.. காலமா.. பயிர் செஞ்சு வர்ற என்னைப் போல ஆளுகளுக்கு பகீருன்னுதான இருக்கு..?"
"நம்ம இந்தியா விவசாய நாடு மருதமுத்து..."
"அது அப்போங்கய்யா.. இப்ப இதோட முகமும் மாறிப் போச்சே.. காடுகரையை அழிச்சு.. அதில வீட்டைக்கட்டி விக்கிறாங்க.. வீடா சோறு போடும்..காட்டில வர்ற விளைச்சல் தானே சோறு போடும்..?"
ஒரு உண்மையான உழவனின் மனக்குமுறலை வெளிப்படுத்தினான் மருதமுத்து.. அவனுக்கு பதில் சொல்லப் போன பாலமுரளி போன் மணியொலிக்கவும் எடுத்துப் பேச ஆரம்பித்தான்.. மேகலாதான் பேசினாள்..
"என்னங்கம்மா..."
"அக்கா வந்திருக்கா முரளி..."
"எப்ப வந்துச்சு..?"
"இப்பத்தான்.. வீட்டுக்கு வந்துட்டுப் போறயா..?"
"ஆகட்டும்..."
மருதமுத்துவின் மனக்குமுறலை ஆற்றிவிட்டு வீடு நோக்கி காரை விட்டான் பாலமுரளி...
"மாமா..!"
பாலசரஸ்வதியின் பத்துவயது மகன் ராஜீவும் எட்டுவயது மகள் சாதனாவும் வாசலுக்கே ஓடிவந்து பாலமுரளியின் கால்களைக் கட்டிக் கொண்டார்கள்..
"ஹேய் ராஜீ.. சாதுக்குட்டி.."
அவர்களைக் குனிந்து கைக்கு ஒருவராக தூக்கி கொஞ்சியபடியே வீட்டுக்குள் நுழைந்தான் பாலமுரளி...
"இங்க பாரு... இதுகளுக்கு ஏழுகழுதை வயசாகுது.. இன்னும் மாமன் தோளில ஏறி சவாரி பண்ணனும்னு நினைக்குதுக..."
மகன் மகள்வயிற்று பேரக் குழந்தைகளிடம் காட்டும் பாசத்தில் மனம் நிறைந்து போனாலும்.. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் முகம் நிறைய பெருமையுடன்.. பேரன்.. பேத்தியை பொய்யாக கண்டித்தாள் மேகலா...
அதைக் கேட்ட பாலசரஸ்வதியின் முகம் மாறிவிட்டது...
"என்னம்மா.. இப்பவே இப்படின்னா.. இன்னும் இவனுக்கு கல்யாணமும் ஆகிட்டா என்னையும்.. என் பிள்ளைகளையும் தள்ளியே வைச்சுருவீங்க போல இருக்கு.."
மேகலாவின் முகம் மாறிவிட்டது.. அவளால் மகளின் மனத்தாங்கலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அவளாவது.. மகளைத் தள்ளி வைக்கிறதாவது.. என்ன பேச்சு பேசிவிட்டாள்..!
அவளது விழிகளின் ஓரமாகத் தெரிந்த கண்ணீரின் கசிவைப் பார்த்தபடி.. மேகலாவின் பக்கத்தில் உட்கார்ந்த பாலமுரளி.. முகம் சுளித்தான்...
"என்னக்கா.. வந்தவுடனே அம்மாவைப் போட்டுத் தாக்கற..என்ன விசயம்..இங்கே பிறந்த வீட்டை நீ தள்ளி வச்சிருக்கியா.. இல்லை... பிறந்தவீடு உன்னைத் தள்ளி வைச்சிருக்கா..?" குரலில் மெலிதான கோபத்தின் சாயல் தென்பட்டது...
"ஆமடா.. ஏன் கேட்க மாட்ட..பொண்ணாப் பிறந்தவ கல்யாணமானா பொற்ற வீட்டை விட்டுப் போய்த்தானே ஆகனும்..அது உனக்குக் குத்தமாப் போயிருச்சா..?"
"யாரு உன்னைக் குத்தம் சொன்னது..நீதான் மத்தவங்களை குத்தம் சொல்லிக்கிட்டு இருக்கிற.."
"ஓ.. இப்பவே இவ்வளவு தூரத்துக்கு பேச ஆரம்பிச்சுட்டியா..?"
பாலமுரளியின் முகச்சுளிப்பு மாறி புருவங்கள் உயர்ந்தன...
"இரு.. இரு.. நானும் வந்ததில இருந்து பாக்கறேன்.. நீயென்ன வார்த்தைக்கு வார்த்தை.. இப்பவே இப்படின்னா.. இப்பவே இவ்வளவு தூரத்துக்குன்னு.. சொல்லிக்கிட்டு இருக்க..அந்த இப்பவேக்கு என்ன தான் அர்த்தம்..?"
"உனக்கு ஒன்னும் தெரியாதா..?"
"சத்தியமாத் தெரியலை.. அதோடு.. எப்பவும் நீ இப்படிப் பேச மாட்டியே.. அதென்ன.. இப்ப மட்டும் இப்படிப் பேசி வைக்கிற..உனக்கு என்ன ஆச்சு..?"
"இது வரைக்கும் எதுவும் ஆகலை.. இனிமேத்தான் என்னவாகும்ன்னு ஒன்னும் புரியலை..."
பாலமுரளி மண்டை காய்ந்து போனான்.. அவன் மிகவும் நுட்பமான புத்தி கூர்மையுடையவன்தான்.. வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை திறம்பட அறிந்தவன்தான்... எந்த இடத்தில்.. எப்படிக் காய் நகர்த்தினால் வெற்றிபெறலாம் என்ற அரசியல் நுணுக்கங்களை அறிந்த வித்தகன்தான்.. தினமும் ஒரு தொழிலைத் தொடங்கி... அவற்றில் வெற்றிக் கொடியை நாட்டும் திறமைசாலிதான்...
அப்பேற்பட்டவனுக்கு இந்தப் பெண்களின் பொடி வைத்த பூடகமான பேச்சிற்கு பொருள் கண்டு பிடிக்க முடியவில்லை...
ஏன் தமக்கை இப்படிப் பேசுகிறாள் என்று பிடிபடாதவனாக அக்கா பெற்ற பிள்ளைகளைப் பார்த்தவனுக்கு புத்தியில் ஒன்று உறைத்தது..
'அப்படியும் இருக்குமோ..யோசனையுடன் அக்காவின் முகத்தைப் பார்த்தான்.. அதில் மண்டிக் கிடந்தக் கவலையைக் கண்டதும் அவனுக்குள் சந்தேகம் முளைவிட்டது...
"ஏன்க்கா.. உன் வீட்டுக்காரர் உன்கூட வரலையா..?"
அவனின் கேள்வியைக் கேட்டவள் பதிலைச் சொல்லாமல் குரோதமாக அவனை விழித்துப் பார்த்தாள்..
'ஏன் இப்படிப் பார்க்குது..?' திரும்பவும் அவனுக்கு மண்டை காய்ந்தது...
"அந்த அளவுக்கு ஆகிப் போயிருச்சா..?" பால சரஸ்வதியின் விழிகள் கனல் கக்கின..
"எந்த அளவுக்கு..?" பாலமுரளிக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை..
அதை நம்ப பாலசரஸ்வதி தயாராக இல்லை.. தம்பியிடம் யுத்தம் புரிய வந்திருந்தவள் எதுடா சாக்கு என்று போர்முரசு கொட்டுவதற்கான காரணத்தைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டிருந்தாள்...
பாலமுரளிபாவம்.. அதை எங்கே அவன் கண்டான்..?
"உங்க மாமாவை.. என் வீட்டுக்காரர்ன்னு சொல்லுகிற அளவுக்கு ஆகிப் போயிருச்சா..?" பாலசரஸ்வதி ருத்ர முகம் கொள்ள...
"அவ்வளவுதானா...?" என்று நிம்மதி முகம் கொண்டான் பாலமுரளி...
"ஏன்க்கா.. இதுக்குப் போயா இவ்வளவு பில்ட் அப்பைக் கொடுகிற..நான் என்னவோ.. ஏதோன்னு பயந்து போயிட்டேன்.. சரி.. மாமா உன்கூட வரலையா..?"
"வரலை..."
"ஏன்..?"
"இதென்னடா கேள்வி..அவர்கூட வந்தால்தான் என்னையும்.. என்பிள்ளைகளையும் நீ வீட்டுக்குள்ள விடுவியா..நான் தனியா என் புள்ளைகளோட இங்கே வந்து போக முடியாதா..?"
இவளுக்கு என்னதான் பிரச்னை என்று திகைத்துப் போய் விட்டான் முரளி.. இந்த அக்கா அவனுக்குப் புதியவளாகத் தெரிந்தாள்.. அவனறிந்த அவனுடைய அக்கா.. அவனுடைய இனிய சிநேகிதி.. சிலசமயங்களில் அவனைத் தன் தாய்பறவையாக நினைத்து அவனின் சிறகுக்கடியில் ஒன்றிக் கொள்ளும் மென்மையான குணம் கொண்ட அவனின் இனிய சகோதரி... அவனின் பாதுகாவல் என்னும் நிழலில் வளர்ந்த பூங்கொடி...
தம்பியிடம் சிரித்த முகத்தை மட்டுமே அவள் காட்டுவாள்.. சிலசமயம் அவளுக்கான அவனது அதீத கவனிப்பில் மனம் நெகிழும்போது பாசப் பறிவில் அவள் கண்களில் நீர் துளிர்க்கும்...
ஒரு போதும் அவள் அவனிடம் கடுமைமுகம் காட்டியதில்லை... அவளா இன்று அவனிடம் இந்த முறையில் பேசுகிறாள்..?
"உனக்கு என்னக்கா ஆச்சு..?"
"இதுவரைக்கும் எதுவும் ஆகலை.. இனிமேத்தான் என்ன ஆகும்ன்னு எனக்குத் தெரியலை..."
பாலமுரளிக்கு களைப்பு மேலிட்டது... இதே ரீதியான பதில்கள் தொடர்ந்து வந்தால் அவனையுமறியாமல் அவன் கோபம் கொண்டு விடும் அபாயத்தை தவிர்க்க என்ன மார்க்கத்தை மேற்கொள்வது என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்..
இந்த வகையான பேச்சு வார்த்தையை மேகலா எப்படி அனுமதித்துக் கொண்டிருக்கிறாள் என்றுதான் அவனுக்குப் புரியவில்லை.. தாயின் முகம் பார்த்தான்.. பாலசரஸ்வதியின் பேச்சைக் கேட்டு... பாலமுரளிக்கு ஏற்பட்டிருக்கும் மண்டைக்குழப்பம் எதுவும் அவள் மண்டையில் உதயமாகி இருப்பது போன்ற அறிகுறிகள் எதுவும் அவளிடம் தென்படவில்லை... அது அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது...
அக்காவின் வரவையும்.. பேச்சின் போக்கையும் எதிர்பார்த்திருந்தவளைப் போல இருந்தது அவனுடைய அம்மாவின் செய்கை...
"இங்கே பாரு.. எதுவா இருந்தாலும் நேராப் பேசு.. இப்படிச் சத்தி வளைச்சு மூக்கைத் தொடாதே.. எனக்கு ஆயிரம் வேலையிருக்கு..."
"ஓஹோ.. இப்பவே இந்தளவுக்கு வந்துட்டியா.. கூடப்பிறந்தவ வந்திருக்கேன்.. என்கூட உட்கார்ந்து ஒற்றை வார்த்தைப் பேசக்கூட யோசிக்கிற அளவுக்கு மாறிப் போயிட்டன்னா.. இன்னும் எந்த அளவுக்கு நீ மாறிப் போக மாட்ட..?"
"என்னத்தை நான் மாறிப் போயிட்டேன்..நீ பெரிசா கண்டுட்ட.. நீதான் மாறிப் போயிட்ட.. என் அக்காவா நீ..?"
"பேசுவடா.. பேசுவ.. நீ இதுவும் பேசுவ.. இன்னமும் பேசுவ.. உனக்கு அந்த அளவுக்கு ஆகிப் போயிருச்சில்ல.."
"ந்தா.. சும்மாக் கத்தாதே.. இப்ப என்ன ஆகிப் போச்சுன்னு இந்தக்குதி குதிக்கிற..?"
"இன்னும் என்னடா ஆகனும்..உன் கூடப் பிறந்த அக்கான்னு நான் ஒருத்தி எதுக்கு இருக்கிறேன்..?"
"இப்படி பொடிவைச்சுப் பேசி.. என் உயிரைக் குறைக்கனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கிற.. வேறெதுக்கு இருக்கிற.."
"வேணாம் முரளி.. சொல்லிட்டேன்.."
"நானும் அதைத்தான் சொல்றேன்.. வேணாம்.. விட்டுரு.. ஒழுங்காய் என்ன பேசனும்னு நினைக்கறியோ.. அதை மட்டும் பேசு..."
"எனக்குத் தெரியாம எப்படிடா நீ உன் கல்யாணத்தை முடிவு பண்ணலாம்..?"
'ஓ.. இதுதான் விசயமா..?'
மென்மையான அக்காவின் புதிதான போர்க் கோலத்திற்கான காரணத்தை அறிந்துகொண்டதில் மண்டை காய்தலில் இருந்து விடுபட்டான் பாலமுரளி....
கூடப்பிறந்தவள்.. வயதில் மூத்தவள்.. அவளிடம் சொல்லாமல் தம்பியின் திருமணப்பேச்சு ஆரம்பித்து விட்டதில் கோபம் வரத்தானே செய்யும்..?
மனது சிறகைப் போல லேசாகிவிட.. பழையபடி அவளது தம்பியாக அக்காவிடம் இலகுவாகச் சிரித்தான் பாலமுரளி...
"இதுக்குத்தான் இந்த கோபமா...நான் என்னவோ.. ஏதோன்னு பயந்துட்டேன்..."
"ஏண்டா.. உனக்கு இது ரொம்பச் சாதாரணமான விசயம் போலத் தோணுதா....?"
"அப்படியில்லக்கா... அம்மாவுக்கே இப்பத்தான் சொன்னேன்..."
"விளங்கிரும்டா... நம்ம குடும்பத்திலேயே இல்லாத ஒன்னைச் செய்ய ஆரம்பிச்சுருக்கே.. இது கொஞ்சம் கூட நல்லாயில்ல முரளி.. கொஞ்சம் என்னைப் பத்தி நீ நினைச்சுப் பார்த்தியா..?"
"இது என் கல்யாணம்.. இதில உன்னைப் பத்தி நினைக்க என்னக்கா இருக்கு..செய்ய வேண்டிய சீர்வரிசையைப் பத்திச் சொல்றியா..அதை ஒன்னுக்குப் பத்தா.. எப்பவும் போல குறைவில்லாம செய்துருவேன்.. கவலைப்படாதே.."
அவள் என்ன சொல்கிறாள்.. அவன் எப்படிப் பதில் சொல்கிறான்..கோபத்தில் முகம் ஜிவுஜிவுவென்று ஆகிவிட.. பாலசரஸ்வதி பல்லைக்கடித்தபடி தாயைப் பார்த்தாள்..
அவளோ எனக்கென்ன என்று மோட்டுவளையைப் பார்த்தாள்...
இதுவேலைக்கு ஆகாது என்ற முடிவுடன் தனித்து தம்பியுடன் வாதாட ஆரம்பித்தாள் பாலசரஸ்வதி..
"ஆக.. எனக்கும்.. இந்த வீட்டுக்கும் உள்ள ஒரே சம்பந்தம் சீர்வாங்குறது மட்டும்தான்.. இல்லையாடா தம்பி..?"
"வேற என்னக்கா வேணும்..?"
"உரிமை வேணும்டா.. என் தம்பியின் கல்யாணத்தில நல்லது.. கெட்டதை எடுத்துச் சொல்கிற உரிமை எனக்கு வேணும்.. ஒற்றைத் தம்பி நீ ......எனக்கும் அம்மாவுக்கும் உன்னை விட்டா யாருடா இருக்கா..உனக்கு வருகிற பெண்டாட்டி நல்லவளா இருந்தாத்தானே எனக்கும் பிறந்தவீட்டு சொந்தம் நிலைக்கும்..என் அம்மாவும் நிம்மதியா நடமாடுவாங்க..."
பாலசரஸ்வதியின் கண்கள் கலங்கி விட்டன.. அதில் உதிர்ந்த நீர்த்துளிகள்.. பாலமுரளியை பதற வைத்தன.. உதிர்ந்த அந்த நீர்த்துளிகளில் அவன் உருகிப் போய்விட்டான்...





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -51
அம்மம்மா.. கேளடி தோழி...! -51
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-51_3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/ammammaakeladitholi-51_3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy