அழகான ராட்சசியே -82

82 நீ சிரிக்க.. நான் சிரித்தும்.. சிரிப்பை மறந்து முறைக்கின்ற.. அழகான ராட்சசி நீ.... தியாகராஜன் மனைவியைப் பார்த்தார்.. அவர் முக...


82
நீ சிரிக்க.. நான் சிரித்தும்..
சிரிப்பை மறந்து முறைக்கின்ற..
அழகான ராட்சசி நீ....

தியாகராஜன் மனைவியைப் பார்த்தார்.. அவர் முகத்தைப் பார்க்காமல் கோபத்துடன் துணிகளை மடித்துக் கொண்டிருந்த பல்லவியிடம் மயங்கிப் போனார்.. அவளே சொன்னதைப் போல.. அவருக்காக அவள் பொறுத்துக் கொண்ட துயரங்களை நினைத்துப் பார்த்தார்..
"ஹி.. ஹி.. பல்லவி.." என்றார்..
"பல்லவிங்கிற பெயரை சொல்லிப் பார்த்துக் கறிங்களா..? இல்லைன்னா பெண்டாட்டியோட பெயர் மறந்து போகுமில்ல..?" கறாராக வினவினாள் பல்லவி..
"இல்லைடி பல்லவி.."
"என்ன இல்லை..?"
"உன் பெயரை நான் மறக்கலை.."
"ரொம்ப சந்தோசம்.."
"உன்னை என்னால மறக்க முடியுமாடி.."
"நம்பிட்டேன்.."
"பல்லவி.. ஐ லவ் யு.."
பல்லவிக்கு சிரிப்பு வந்தது.. மறைத்துக் கொண்டாள். சில வருடங்களாகவே தியாகராஜன் இதுபோன்ற அசட்டுத் தனங்களை செய்ய ஆரம்பித்திருந்தார்.. மிகச் சரியாக அது எந்த வருடத்தில் ஆரம்பித்தது என்பதை நினைவு கூர்ந்தாள் பல்லவி..
அவர்களின் மகன் ராம்குமார்.. கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் வருடத்திலிருந்து ஆரம்பித்தது அது..
"அப்படியா சார்.. இதை மறுக்காம நினைவில வைச்சுக்கங்க.." முகம் மாறாமல் சொன்னாள்..
"நான் ஏண்டி மறக்கப் போறேன்..?"
"இதை உங்க அக்கா இப்ப வருவாங்கள்ல.. அப்ப நினைவு படுத்திக்கங்க.."
"அக்காவை நீதான் வரச் சொன்னியா..?"
"வினையை நானா போன் போட்டு வரச் சொல்வேனா..? அதுவா வந்திருக்குது.. வந்த வினை தம்பியைத் தேடிவந்து தம்பி மகளை ஒப்படைக்கனும்ங்கிற நினைவில்லாம அந்த நரேந்திரனோட பெண்டாட்டிக்கிட்ட சண்டை போட தம்பி மகளை கூப்பிட்டுக்கிட்டுப் போயிருக்குது.."
"என்னடி சொல்ற..?"
தியாகராஜனுக்கு கோபம் வந்து விட்டது.. அவரிடம் சில நெறிமுறைகள் உண்டு.. ஊர்மிளா நரேந்திரனை விட்டுப் பிரிந்து ஒரு வருடம் ஆனபின்னால்.. நரேந்திரன் ஊர்மிளாவை விவாகரத்து செய்து விடுவான் என்று அகல்யா அடித்துச் சொன்னதினால்.. வேறு ஒரு பெண் நரேந்திரனுக்கு மனைவியாக வந்து விட்டால் அக்காவின் நிலைமை என்ன ஆவது என்று இரண்டாம் தாரமாக மகளை நரேந்திரனுக்கு மணம் முடிக்கும் யோசனைக்கு அவர் சம்மதித்தார்..
மற்றபடி.. நரேந்திரனிடமிருந்து ஊர்மிளாவைப் பிரித்து.. அவளை வாழாவெட்டியாக்கி விட்டு.. அந்த இடத்திற்கு மகளைக் கொண்டு வரவேண்டுமென்ற கெட்ட எண்ணமெல்லாம் அவருக்கு துளிக்கூட இருந்ததில்லை..
"இந்தக்காதான் சொன்ன பேச்சைக் கேட்காது.. என்னவோ செய்து தொலைன்னு விட்டுட்டேன்... இது எப்படி என் மகளை ஊர்மிளா வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டுப் போகலாம்..?"
"அதை நான் கேட்க முடியுமா..?"
"ஏய்ய்.. ரம்யா உன் மகள்டி.."
"இப்ப இப்படிப் பேசுவீங்க.. அக்கா முன்னாலே என் மகள்ம்பீங்க.. தேவையா எனக்கு..? பத்து மாதம் வயித்திலே சுமந்து பெத்தது நானு.. அக்கா கேட்டுக்கிட்டதும் கூடப் போன்னு என்னவோ விசுவாமித்திர முனிவர்கூட ராமரை தசரதன் அனுப்பி வைச்சதைப் போல ரம்யாவை அனுப்பி வைச்சது நீங்க.. விசுவாமித்திர முனிவர் தாடகையை விரட்ட ராமரை அழைத்துக்கிட்டுப் போனார்.. நீங்க என்னடான்னா வாழவந்த ஒரு பெண்ணை விரட்ட உங்க அக்கா கேட்டுக்கிட்டாங்கன்னு உங்க மகளை அனுப்பி வைச்சீங்க.."
தியாகராஜன் என்னவோ அதை அன்று மறுத்தார் தான்.. பல்லவிதான் அகல்யாவை பழிவாங்க இதைவிடச் சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று ரம்யாவை அனுப்பி வைக்க தூண்டி விட்டாள்..
அதை மிக வசதியாக பல்லவி மறந்து போனது மல்லாமல் தியாகராஜனையும் மறக்க வைத்தாள்..
அகல்யாவைப் போன்ற ஒரு நாத்தனார் அமைந்து விட்ட வன்கொடுமையில்.. எலும்புக்குக் கூடத் தீங்கு நினைக்காத குணம் படைத்த பல்லவியைப் போன்ற பெண் எப்படியெல்லாம் மாற வேண்டியிருக்கிறது..?
"இப்ப என்னதாண்டி ஆச்சு.."
"ஊம்..? ஊர்மிளா உங்க அக்காவை விரட்டி விட்டுட்டா.."
"என்னது..? விரட்டி விட்டுட்டாளா..?"
"பின்னே..? வெற்றிலை பாக்கு வைத்து வீட்டுக்குள்ளே அழைத்து விருந்து சமைத்துப் போடுவாளா..? உங்க அக்கா என்ன மூன்றரை வருசம் கழித்து வீட்டுக்கு வாழவந்த மூத்த மருமகளையும், பேரனையும் பார்த்து விட்டு வரவா போனாங்க..? அவங்களை விரட்டி விடப் போனாங்க.. அவ பதிலுக்கு இவங்களை விரட்டி விட்டுட்டா.. இதில பெரிய கொடுமை என்னன்னா.. அந்த இடத்திலே என் மகளையும் உங்க அக்கா கூட்டுச் சேர்த்து நிறுத்தி வைத்திருக்காங்க.."
"அட்டூழியம்.."
"இதை உங்க அக்காகிட்ட யார் சொல்கிறது..? ரம்யா கல்யாணம் ஆக வேண்டிய பெண்.. அவளைக் கொண்டு போய் ஊர்மிளாவின் முன்னால் நிறுத்தி.. இவதான் உன் புருசனைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறவன்னு உங்க அக்கா சொல்லலாமா..? அந்தப் பெண்ணோட மனது என்ன பாடுபட்டிருக்கும்..? அது நம்ம பெண்ணோட வாழ்வை பாதிக்காதா..?"
தியாகராஜன் கொதித்துப் போய் விட்டார்.. அதை திருப்தியுடன் பார்த்துக் கொண்டாள் பல்லவி.. அவரின் கைபிடித்து அந்த வீட்டுக்குள் அவரின் மனைவியாக அவள் காலடி வைத்து வாழ ஆரம்பித்த இத்தனை வருடங்களில் இப்போதுதான் முதன்முதலாக அகல்யாவுக்கு எதிராக பேச்சை அவள் பேச அவர் காதுகொடுத்து கேட்கிறார்..
'இது போதும்..'
பல்லவியின் மனதில் சாந்தம் திரும்பியது.. அவள் பழைய பல்லவியாக மாறினாள்... வாசலில் காலிங் பெல்லின் ஓசை கேட்டது.. கணவரின் முகம் பார்த்தாள்..
"உங்க அக்காதான் வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்.."
"கதவைத் திற.."
பல்லவி கதவைத் திறந்தாள்.. வாசலில் அகல்யா நின்றிருந்தாள்.. அவள் முகத்தில் படிந்திருந்த கருமையையும்.. சுருக்கங்களையும் பார்த்தவள் லேசான உதட்டுச் சுழிப்போடு அகல்யாவுக்குப் பின்னால் நின்றிருந்த ரம்யாவைப் பார்த்தாள்.. அவள் வலது கையின் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தாள்..
"உள்ளே போங்கண்ணி.. உங்க தம்பி உங்களுக் காகத்தான் காத்திருக்கிறார்.." மர்மச் சிரிப்புடன் சொன்னாள் பல்லவி..
"நான் வர்றேன்னு அவன்கிட்டச் சொல்லியிருப்ப.. அக்கா வருகிறான்னதும் படுத்த படுக்கையை கிடந்த என் தம்பி எழுந்திருச்சு ஹாலில் வந்து உட்கார்ந்திருப்பான்.." பெருமையுடன் உள்ளே போனாள் அகல்யா..
'போடி போ.. உன் தம்பி உனக்காகத்தான் காத்திருக்கிறார்..'
அகல்யாவின் முதுகைப் பார்த்துக் கருவினாள் பல்லவி.. தாயை அணைத்துக் கொண்டாள் ரம்யா..
"என்னடி.." என்றாள் பல்லவி..
"ஆடாமல் ஜெயிச்சோமம்மா..
             பாடாமல் ஜெயிச்சோமம்மா..
    ஓடாமல் ரன்னெடுத்தோம்..
             சும்ம உக்காந்தே விண்னெடுப்போம்.."
வாய்விட்டுப் பாடினாள் ரம்யா.. அவளுடன் சேர்ந்து சிரித்த பல்லவியின் மனதில் மகள் வீட்டுக்குத் திரும்பி விட்ட மன அமைதி வந்திருந்தது.. அவள் மகளை அணைத்தபடி வீட்டுக்குள் போனாள்..
கடுமை விரவிய முகத்துடன் தமக்கையை முறைத்துக் கொண்டிருந்த தியாகராஜன் திரும்பிப் பார்த்தார்.. மகளை அணைத்தபடி உள்ளே வந்த பல்லவியின் தோற்றத்தில் அவர் மனம் கனிந்தது.. சேய் பறவையை தாய் பறவை சிறகுக்கடியில் காத்து நிற்பதைப் போல அக்காட்சி தோன்றியது..
'என் குடும்பம்.. என் பெண்டாட்டி.. என் மகன்.. என் மகள்ன்னு நினைக்காமல் அக்கா மேலே இருந்த பாசத்திலே என்ன காரியம் செய்யத் துணிஞ்சேன்..?'
ஊர்மிளாவின் வீட்டில் நடந்த நிகழ்வுகளினால் மகள் பயந்து போயிருக்கிறாள் என்று பல்லவி அவரிடம் சமிக்ஞையில் கூறினாள்.. தியாகராஜன் கண் சிவந்தார்..
அதை அறியாத அகல்யா தம்பியிடம் நலம் விசாரிக்க ஆரம்பித்தாள்.. நமட்டுச் சிரிப்புடன் பல்லவியும், ரம்யாவும் அதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்..
"எப்படிடா இருக்க தியாகு..?" அகல்யா உருகினாள்..
"இன்னும் உயிர் போகலை.." பல்லைக் கடித்தார் தியாகராஜன்..
"என்னடா தம்பி இப்படிச் சொல்கிற..?"
"வேற எப்படிச் சொல்லச் சொல்கிற..?"
"கல்லுக்குண்டு போல இருந்தியேடா.."
"என்ன செய்கிறது..? உன் கூடப் பிறந்திட்டேனில்ல.. கல்லுக்குண்டெல்லாம்.. உப்புக் கரைசலைப் போல கரைஞ்சுதானே ஆகனும்..?"
அப்போதுதான் பேச்சு வார்த்தை போகும் திசையை அறிந்தாள் அகல்யா.. துணுக்குற்றவளாக..
"தியாகு..?" என்றாள்..
"ஏன்க்கா.. நான் உனக்கு என்ன கெடுதல் பண்ணினேன்..?" காட்டமாக கேட்டார் தியாகராஜன்..
"என் கூடப் பிறந்த ஒற்றை உடன்பிறப்பு நீ.. உன்னை விட்டா எனக்கு யாருடா இருக்கிறா..? தம்பியே உலகம்ன்னு இருக்கிற அக்காவை தங்கத்தட்டில வைச்சுத் தாங்கலைன்னாலும்.. தரையில விடாம தாங்கற தங்கக் கம்பியாச்சேப்பா நீ.. என்னைப் பெத்தவங்களும் உயிரோடு இல்லை.. என்னைக் கட்டிக்கிட்டவரும் உயிரோடு இல்லை.. பெத்த பிள்ளைகளும் சொல்பேச்சுக் கேட்கிறதில்லை... நான் வளர்த்த பிள்ளையும் கைவிட்டுட்டு.. எவளோ ஒருத்தி பின்னாலே ஓடிட்டான்.. உன் ஒருத்தனாலேதானேடா நான் இந்த மண்ணில இன்னமும் உயிரோடு இருக்கிறேன்..? நீயில்லைன்னா என்னைக்கோ இந்த உலகத்தைவிட்டுப் போயிருக்க மாட்டேனா..?"
அகல்யாவின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் தரைகளில் 'இனி அவ்வளவுதான்..' என்று அவநம்பிக்கை கொண்டாள் பல்லவி..
ரம்யாவும் தலையை ஆட்டி அதை ஆமோதித்தாள்..
"இந்தப் பொம்பளை நடிகையர் திலகம்டி.. பாசப் பயிருக்கு தண்ணியை ஊத்த ஆரம்பிச்சிருச்சு.. உங்கப்பா எரிமலையாய் வெடிக்கப் போகிறார்ன்னு நினைச்சேன்.. இந்தம்மா.. சுனாமியப் போல பாசத்தில பொங்கி எரிமலையையும் குளிர வைச்சிருச்சே.." பல்லவி தலையில் கை வைத்தாள்..
"அஃதே..." என்றாள் ரம்யா..
அவர்கள் இருவரின் கணிப்புப்படி எரிமலை ஒன்றும் குளிர்ந்து விடவில்லை.. மாறாக.. அது கனல் கக்கும் விழிகளுடன் பாசப்பறவையை பார்த்தது..
"நீ வளர்த்த பிள்ளையா..? யாருக்கா அது..?" என்று கேட்டும் வைத்தது..
'ஆஹா..' பல்லவி ஆனந்தத்துடன் ரம்யாவின் விரலுடன் விரல் கோர்த்துக் கொண்டாள்..
தாயின் குழந்தைத்தனமான சந்தோசத்தைக் கண்ட ரம்யாவின் மனம் நெகிழ்ந்தது.. எந்த அளவுக்கு அவள் பாதிக்கப் பட்டிருந்தால்.. இப்படி சந்தோசப் படுவாள்..?
தியாகராஜன் கேட்டு வைத்த கேள்வியில் அகல்யாவின் முகம் மாறிப் போனது..
"என்னடா தம்பி இப்படிக் கேட்டுட்ட..? நீயே இப்படிக் கேட்டா என் மனசு தாங்குமா..?" நியாயம் கேட்டாள்..
"எல்லாம் தாங்கும்.." இரக்கமில்லாமல் சொல்லி விட்டார் தியாகராஜன்..
"நரேந்திரன் நான் பெற்ற பிள்ளையா இல்லாம போனாலும் நான் வளர்த்த பிள்ளை இல்லையா..?"
"இல்லை.. அவனை நீயா வளர்த்த..? அவன்தான் உன்னையும், உன் பிள்ளைகளையும் வளர்த்தான்.. அவனை அவனோட அம்மாவும்.. அவங்களைப் பெத்த தாத்தா பாட்டியும் வளர்த்தாங்க.."
"தியாகு.."
"என்னவோ அவன் எவளோ ஒருத்தி பின்னாலே ஓடிட்டான்னு வாய் கூசாம சொல்கிறியே.. அது எவளோ ஒருத்தி இல்லை.. அவன் தாலிகட்டின பெண்டாட்டி.."
"நீயாடா இப்படிப் பேசற..?"
"ஏன்க்கா..? நான் பேசக்கூடாதா..? ஏன் இப்படிக் கேட்கிற...? உன் பேச்சைக் கேட்டுக்கிட்டு... என் பெண்டாட்டியை தள்ளி வைச்சேனே.. அதனால இப்படிக் கேட்கறியா...? நீ வந்து கண்ணைக் கசக்கியதும்... கல்யாணம் ஆக வேண்டிய என் மகளை உன் பின்னாலே அனுப்பி வைச்சேனே.. அந்த முட்டாள் தம்பி இப்ப
இப்படி மாறிப் போயிட்டான்னு இந்தக் கேள்வியைக் கேட்கறியா..?"
தியாகராஜன் பேசப்பேச.. அகல்யாவின் முகத்தில் இருள் அதிகரித்தது.. அன்று விழித்த விழி சரியில்லை என்று நொந்து போனாள்.. விடிந்ததும் யார் முகத்தில் விழித்தோம் என்று அவள் யோசித்துப் பார்த்தபோது.. கண்ணாடியில் பார்த்துக் கொண்ட அவள் முகம் முன்னால் வந்து நின்று அச்சுறுத்தியது..
"நான் உனக்கு என்னக்கா தீங்கு பண்ணினேன்..? நரேந்திரன் பெண்டாட்டியைத் தேடி வந்திட்டான்.. குழந்தை, பெண்டாட்டின்னு தனிக்குடித்தனம் ஆரம்பிச் சுட்டான்னு தெரிஞ்சவுடனே என் மகளை என் வீட்டுக்கு அனுப்பி வைச்சிருன்னு சொன்னேனா இல்லையா..?"
"சொன்னேடா.."
"ஏன் நீ அதைச் செய்யலை..?"
"அது வந்துடா.."
"என்னத்தை வந்து போயின்னு ராகம் இழுக்கற..? நீ ஊர்மிளா வீட்டுக்குப் போயிருக்கிற.. சும்மாவும் போகாம கூட என் மகளையும் கூப்பிட்டுக்கிட்டுப் போயிருக்க.. போனவ என் மகளைக் காட்டி.. இவளைத்தான் உன் புருசன் இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கப் போகிறான்னு அந்தப் பொண்ணு ஊர்மிளாகிட்டச் சொல்லியிருக்க.. செய்யலாமா அக்கா..? தெரியாமத்தான் கேட்கிறேன்.. நீ பெத்த பொண்ணு அர்ச்சனாவைக் காண்பித்து பல்லவி இதைப் போல எதையாவது பேசி வைத்தா நீ சும்மாயிருப்பியா..?"
நெற்றியடியான கேள்வியை கேட்டு விட்டார் தியாகராஜன்.. பல்லவிக்கு தான் காண்பதும்.. கேட்பதும் நனவா.. இல்லை கனவா என்ற சந்தேகம் கிளம்பி
விட்டது..
'என்ன கேள்வி கேட்டுட்டான்.. இவன் மகளும்.. என் மகளும் ஒன்னா..?' அகல்யாவின் முகம் பயங்கரமாக மாறிவிட்டது..
"நாக்கை அடக்கிப் பேசுடா.." என்று சீறிவிட்டாள்..
"உன் பொண்ண வெறும் பேச்சுக்கு சொன்னதுக்கே உனக்கு இவ்வளவு கோபம் வருதே... என் மகளை உண்மையாகவே நீ பேசி வைத்துட்டு வந்திருக்கிற.. இதுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிற..?" நிதானமாக  கேட்டார் தியாகராஜன்..
"என்ன பதிலைடா சொல்லனும்..? நான் கேட்டதும் உன் மகளை என்கூட அனுப்பி வைச்சியே.. அப்ப இதுக்கான பதிலை நீ கேட்டிருக்கனும்டா.. இப்ப வந்து கேட்டா எப்படி பதிலைச் சொல்கிறது..? நல்லாக் கேட்டுக்க.. உன்னைப்போல நான் ஒன்னும் என் பெண்ணை இரண்டாம் தாரமா கட்டி வைன்னு உன் பெண்டாட்டி கூட அனுப்பி வைக்கலை.. அனுப்பி வைக்கவும் மாட்டேன்.. அவ இந்த அகல்யா பெத்த பொண்ணுடா.. உன் மகள்ன்னு நினைச்சியா..?"




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -82
அழகான ராட்சசியே -82
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaratsasiye-82.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaratsasiye-82.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy