அழகான ராட்சசியே -95

95 சின்னச் சின்ன ஆசைகளை சிறகொடித்து போட்டு விட்ட அழகான ராட்சசி நீ.... "அவ எங்கே பாட்டி.. ?" பால்கனியின் ஊஞ்சலில் ...


95
சின்னச் சின்ன ஆசைகளை
சிறகொடித்து போட்டு விட்ட
அழகான ராட்சசி நீ....


"அவ எங்கே பாட்டி..?"
பால்கனியின் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த நரேந்திரன் கேட்டான்.. அங்கிருந்து பார்த்தால் நீச்சல் குளமும்.. தோட்டமும்.. சாலையும்.. சாலையோர மரங்களும் ஒரு கை தேர்ந்த ஓவியன் வரைந்த அழகான ஓவியம் போல பரந்து விரிந்து தெரிந்தது..
"அங்கேயிருக்கா பாரு.."
சித்ரலேகா கை நீட்டிய இடத்தில் சுரேந்திரனுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.. நீச்சல் குளத்தின் ஓரமாக இருந்த செடிகளின் மறைவில் ஒளிந்து மறைந்து விளையாடுவதும்.. இருவரில் ஒருவர் அகப்பட்டு விட்டால்.. நீச்சல் குளத்தின் கரையோரமாக இருந்த நாற்காலிகளில் அமர்ந்து மூச்சு வாங்குவதுமாக அவர்களின் விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.
அந்த விளையாட்டில் மனம் லயித்தான் நரேந்திரன்.. தாய், மகன் இருவரின் முகத்திலும் பொங்கி வழிந்த மகிழ்வைக் கண்டவனுக்கு..
'இந்த விளையாட்டில் எனக்கு இடமில்லையா..?' என்று மனம் வெதும்பியது..
அதுபோன்ற மலர்ச்சியை அவனுடன் இருக்கும் போது ஏன் அவர்கள் இருவருமே காட்ட மறுக்கிறார்கள் என்ற சினம் அவனுக்கு வந்தது..
சுரேந்திரன் தந்தையுடன் ஒட்டிக் கொள்வான்தான்.. ஆனால் அது சிறிது நேரம்தான் நீடிக்கும்.. சற்றுப் பொழுதிலேயே அம்மா எங்கே என்று அவன் தேட ஆரம்பித்து விடவான்.. அதுவே ஊர்மிளாவுடன் இருந்தால் அப்பா எங்கே என்று தேட மாட்டான்..
அது நரேந்திரனின் மனதை உறுத்தியது.. அவன் தோள் சாய்ந்திருக்கும் நேரத்திலும் சுரேந்திரனின் கண்கள் ஊர்மிளா எங்கேயிருக்கிறாள் என்று தேடிக் கொண்டே இருப்பதை அவன் கவனித்திருக்கிறான்.. அவள் பக்கத்தில் இருந்தால் பேசாமல் இருப்பான்.. அவள் இல்லையென்றால் அவன் விழிகளில் தாயைத் துழாவ ஆரம்பித்து விடும் பார்வை வந்து விடும்..
அதைப் பற்றி அவன் ஒருமுறை ஊர்மிளாவிடம் மனத்தாங்கல் பட்டபோது.. அவள் வெறுமையான பார்வையோடு சொன்னாள்..
"பிறந்தது முதல் தாயைப் பிரிஞ்சு அறியாதவனை முதன் முதலா நீங்க வந்து பிரிச்சுத் தூக்கிட்டு வந்தீங்கள்ல.. அந்த பயம் இன்னும் அவன் பிஞ்சு மனசில் பதிஞ்சிருக்கும்.. சென்னை ஹாஸ்பிடலிலேயும் இப்படித்தான் இவன் என்னைத் தேடுவான்.. பிள்ளை பயந்து போயிருவான்னு நான் இவனை விட்டு நகர மாட்டேன்.."
அந்த அழகான ராட்சசி.. அவனுக்கு மகன் பிறந்து வளர்வதையே அவனிடம் சொல்லாமல் மறைத்து விட்டு கடைசியில் அவனை ராட்சசன் ஆக்கி விட்ட கொடுமையில் அவன் வெடித்து விட்டான்..
"நானாடி தாயையும், பிள்ளையையும் பிரிச்சேன்..? நீதாண்டி அப்பாவையும், மகனையும் பிரிச்ச.."
"அப்படியா..? உங்ககிட்ட வளர்ந்த பிள்ளையை தேடிவந்து நான் பிடுங்கிக்கிட்டுப் போனேனா..?"
ஆக்ரோசத்துடன் கேட்டு விட்டு வேகமாக போய் விட்டாள் ஊர்மிளா.. அதற்குப் பின்னால் ஒருவாரம் வரை அவள் அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை..
'இவதான் முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போக எதுடா சாக்குன்னு அலைவாளே.. ராட்சசி.. அழகான ராட்சசி..'
பொருமினான் நரேந்திரன்.. அவனால் அதை மட்டும் தான் செய்ய முடிந்தது.. ஊர்மிளாவின் மனதை அவன் பக்கம் திருப்ப முடியவில்லை.. போராடிக் களைத்துக் கொண்டிருந்தான்..
"காபி, டிபன் வேணாமா..? ஆபிஸிலிருந்து வந்தவன் கீழே வருவேன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்.. நீ வருகிற வழியாய் தெரியலை.. சரி.. உன் ரூமுக்குக் கொண்டு வரலாம்ன்னு கொண்டு வந்தா அங்கேயும் நீயில்லை.. எங்கே போயிட்டன்னு தேடி வந்தா.. நீ பால்கனி ஊஞ்சலிலே ஆடாம உட்கார்ந்துக்கிட்டு வானத்தை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கே.. என் பேரன் நரேந்திரனாடா நீ.. உன் ஆக்டிவ்னெஸ் எங்கே போனது..?"
"ஊம்.. பிளைட் பிடிச்சு பாரின் வரைக்கும் போயிருக்கு.. நீங்க எதுக்காக காபி, டிபன் கொண்டு வந்தீங்க..?"
"ஏண்டா..? நான் காபி டிபன் கொண்டு வந்தா நீ கையாலே தொட்டுக்கூடப் பார்க்க மாட்டியா..?"
"ஸ்ஸ்ஸ்.. என்ன பாட்டி நீ.. நேரம் காலம் புரியாம வம்பு பண்றிங்க.. வயசான காலத்திலே உங்களை படியேற விடனுமா..? இந்த வேலையையெல்லாம் அவ செய்ய மாட்டாளா..?"
"யார்..? செல்வியையா சொல்கிற..?"
தெரியாததைப் போல வினவியபடி ஊஞ்சலில் பேரனின் பக்கத்தில் உட்கார்ந்தாள் சித்ரலேகா.. அவர்கள் இருவருக்கும் இடையில் காபி, டிபன் இருந்த டிரேயையை வைத்து விட்டு..
"இத்தனை நேரமும் சும்மா இருந்துட்டு.. இப்ப வந்து ஊஞ்சலை ஆட்டி வைச்சுராதேடா.. டிபனும், காபியும் கொட்டிரும்.." என்று பேரனை எச்சரிக்க வேறு செய்தாள்..
நரேந்திரனுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
'தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் நரேந்திரனைப் பார்த்துப் பேசுகிற பேச்சா இது..'
சித்ரலேகாவை ஒரு தினுசாக பார்த்தபடி இதை அவன் சொன்ன போது.. '' என்ற தினுசில் காற்றில் கையை விசிறினாள் அவனுடைய பாட்டி..
"இந்தப் பெருமையெல்லாம் இங்கே வேணாம்.. தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் நரேந்திரனுக்குப் பாட்டியா கிறதுக்கு முன்னாலேயே.. தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் கஜேந்திரனுக்குப் பெண்டாட்டியா ஆகிட்டேன்.. ஆனானப் பட்ட கஜேந்திரனே இந்த சித்ரலேகாவைக் கண்டா தும்பிக்கையை சுருட்டிக்கிட்டு ஓரமா உட்கார்ந்திடுவாரு.. இந்த நரேந்திரன் எம்மாத்திரம்..?"
சித்ரலேகா போட்ட போட்டில் நரேந்திரனின் புருவங்கள் அடேங்கப்பா என்னும் விதமாக ஏறி இறங்கின..
"பிக் ஷாட்தான் நீங்க.. இப்பேர்பட்ட பிக்ஷாட் வொய்பைப்  பத்திக் கேட்கிறவன்கிட்ட செர்வண்டோட பெயரைச் சொல்கிறது எப்படின்னுதான் தெரியலை.. அவ செய்ய மாட்டாளான்னு கேட்டா.. யாரு.. செல்வியையா சொல்கிறன்னு கேட்டு வைக்கறிங்க.. என் வொய்போட பெயர் செல்வியா..?"
"அது ஊர்மிளா..!"
என்னவோ நேர்முகத் தேர்வில் விடையளித்து விட்டு நான் சரியாகச் சொல்லி விட்டேனா என்பதைப் போல அவன் முகத்தைப் பார்த்து வைத்தாள் சித்ரலேகா.. நரேந்திரனுக்கு ஊஞ்சல் கம்பியில் தலையை மோதிக் கொள்ள வேண்டும் போல இருந்தது..
"ஏன் பாட்டி இந்தப் பாடுபடுத்தறிங்க..?" என்று கேட்டு விட்டான்..
அவன் கேள்வியை ரசித்துச் சிரித்தாள் சித்ரலேகா.. பெண்டாட்டி ராட்சசியாக அமைந்து விட்டதில் எப்பேர்பட்ட கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்ண வேண்டியதிருக்கிறது என்று மனம் வெறுத்துப் போய் விட்டான் நரேந்திரன்..
"இப்ப எதுக்காக பாட்டி இப்படி சிரிச்சு வைக்கறிங்க..?"
"மடையா..! அவ வரேன்னுதான் சொன்னா.. நான் தான் வேண்டாம்மா.. உன் மகனோடு கொஞ்ச நேரம் விளையாடுன்னு சொல்லி அனுப்பி வைச்சேன்.."
"இது நீங்க செய்த சதியா..?"
பற்களை நறநறத்தான் நரேந்திரன்.. காபி, டிபன், சாப்பாடு என்று.. அவனுடைய வயிற்றுக்கு ஈயும் வேலைகளையாவது அவள் தவறாமல் செய்கிறாள் என்று அவன் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்க.. சித்ரலேகா அதற்கும் வெடி வைத்து விட்டதில் அவனுக்கு கடுப்பு கிளம்பியது..
'அவ இதுதான் சான்ஸீன்னு இந்த வேலைக்கும் டாட்டா சொல்லிருவாளே..' கவலை மேலிட..
"இது உங்களுக்கே நியாயமா இருக்கா பாட்டி.. இந்த ஒரு வேலையைத்தான் அவ உருப்படியா செய்துக்கிட்டு இருந்தா.. இப்ப அதில இருந்தும் அவளுக்கு ரிலாக்சேசன் கொடுத்து வைக்கறிங்க.." என்று எரிச்சல் பட்டான்..
தோட்டத்தில் சிரிப்புச் சப்தம் கேட்டது.. ஒளிந்து கொண்டிருந்த ஊர்மிளாவைக் கண்டு பிடித்து விட்டதில் சரேந்திரன் கை கொட்டி சிரித்தான்.. அவனுடன் சேர்ந்து சந்தோசமாக சிரித்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா..
'எவ்வளவு சந்தோசம்..! புருசனிடமிருந்து விலகிப் போகிறதுன்னா இவளுக்கு அல்வா சாப்பிட்டதைப் போல இருக்குமே.. நாள் முழுவதும் ஆபிஸ் பக்கம் போயிருந்தவன் அலுத்துக் களைத்து வீட்டுப் பக்கம் வந்திருக்கேன்.. இவ ஒரு
வாய் காபி, டிபன் கூடக் கொடுக்காம பிள்ளைகூட ஓடிப் பிடித்து விளையாடிக்கிட்டு இருக்கா.. அதில எத்தனை சந்தோசம் கொண்டாடறா..'
நரேந்திரன் கடுகடுப்பாக நினைத்ததை வேறு விதமாக சொன்னாள் சித்ரலேகா..
"உன் மகன் முகத்தில எத்தனை சந்தோசம்ன்னு பார்த்தியா நரேன்.. அவனோட அம்மாவை கண்டு பிடிச்சுட்டானாம்.. அதிலே அவன் ஜெயிச்சுட்டானாம்.. அவனுக்குத் தெரியுமா நரேன்.. அவனுடைய அம்மா தெரிந்தேதான் அவனிடம் தோற்றாள் என்பதை..?"
சித்ரலேகாவின் வார்த்தைகளில் ஏதோ ஒரு உட்பொருள் ஒளிந்திருப்பதைப் போல நரேந்திரனுக்குத் தோன்றியது.. கேள்வியுடன் நோக்கினான்..
"பெத்தவளுக்கு பிள்ளையிடம் தோற்கிறதில சந்தோசம்தான் நரேன்.. ஒருவகையில் அதுதான் அவளுடைய வெற்றி.. இதுவே புருசன்னு வருகிறப்ப மாறி விடும் நரேந்திரா.. உனக்கேன் அது புரியலை..?"
"பாட்டி.."
நரேந்திரன் ஆச்சரியத்துடன் சித்ரலேகாவை பார்த்தான்.. இது போல ஏன் அவன் யோசிக்கவில்லை..?
"காபி, டிபனைச் சாப்பிடு நரேன்.. ஆறிவிடப் போகுது.."
"இங்கே வாழ்க்கையே ஆறிப் போய் கிடக்கு பாட்டி.. இந்த அழகான ராட்சசியை காதலித்து மேரேஜ் பண்ணிக்கிட்டதில என்ன சுகத்தைக் கண்டேன் பாட்டி..? ஒரு வருசம் கூட சேர்ந்து வாழலை.. ஒரு சின்னக் கேள்விக்கு பதிலைச் சொல்ல மாட்டேன்னு என்னை அத்தனை பேர் முன்னாலும் இன்சல்ட் பண்ணிட்டு பெட்டியைத் தூக்கிட்டுப் போயிட்டா.. ஒரு போன்கால் இல்லை.. லெட்டர் இல்லை.. மூன்றரை வருசம் கழிச்சுத் தகவல் வருது.. அதுவும் இவள் தகவல் தரலை.. இவளோட டாக்டர் பிரண்ட் தகவல் தருகிறா.. எப்படித் தெரியுமா..? உன் மகனுக்கு உடம்பு சரியில்லை.. ட்ரீட் மெண்ட் நடந்துக்கிட்டு இருக்குது.. ஓடிவான்னு.. எனக்கு எப்படியிருந்திருக்கும்..?"
அவனுக்கு எப்படியிருந்திருக்கும் என்பதை சித்ரலேகாவினால் உணர முடிந்தது.. அதே சமயம் அவளிடம் ஊர்மிளா சொல்லி அழுத..
'எனக்கு எப்படியிருந்திருக்கும் பாட்டி..?' என்ற அதே கேள்வியில் இருந்த துயரத்தையும், துக்கத்தையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது..
"காத்திருந்தேன் பாட்டி.. அவர் என்னைத் தேடி வந்திருவாரான்னு காத்திருந்தேன்.. தெருவில் கார் போகிற சப்தம் கேட்டா ஓடிப்போய் பார்ப்பேன்.. அது நடுஜாமமா இருந்தாலும் சரி.. யோசிக்க மாட்டேன்.. அவர் வரவேயில்லை பாட்டி.. என் வயிற்றில் சுரேன் வளர்ந்தான்.. அதை அவரிடம் சொல்லச் சொல்லி அப்பாவிடம் அம்மா சொன்னாங்க.. நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.."
"ஏம்மா..? சுரேன் நரேந்திரனோட குழந்தைம்மா.. அவன் பிறக்கப் போகிறதை அவனோட தகப்பனுக்குச் சொல்ல வேண்டியது உன்னோட கடமையில்லையா..?"
"நிச்சயமா அது என்னோட கடமைதான் பாட்டி.. அதுக்கு முன்னாலே வீட்டை விட்டு வெளியேறிப் போன பெண்டாட்டி பிறந்த வீட்டுக்குப் போனாளா.. இல்லை.. வழியிலேயே ஏதாவது ரயில் தண்டவாளத்திலே தலையைக் கொடுத்துட்டாளான்னு தெரிஞ்சுக்க வேண்டியது புருசனா அவரோட கடமையில்லையா பாட்டி.. அவர் செஞ்சாரா பாட்டி..?"
"ஊர்மிளா.."
"அவர் செய்யலை.. நான் என்ன ஆனேன்னு அவர் கவலைப் படவே இல்லை.. அப்படிப்பட்ட மனிதர்கிட்ட குழந்தையைக் காட்டி நான் ஒட்டிக்கனுமா பாட்டி..?"
"என்ன கண்ணம்மா இப்படிப் பேசற..?"
"வேற எப்படிப் பேச பாட்டி..? உங்க பேரன் தஞ்சாவூருக்கு வந்தார்.. எதுக்காக வந்தார்..? அவரோட பெண்டாட்டியைத் தேடி வரலை பாட்டி.. அவரோட மகனைத் தேடி வந்தார்.. வந்தவர் மகனைத் தூக்கிக்கிட்டுப் போயிட்டார்.. நான் அவனைப் பெத்த தாய்ன்னு கூட அவர் நினைச்சுப் பார்க்கலை.. என்னைவிட்டு என் மகனைப் பிரிக்கிறார்ங்கிறதை யோசிக்கக் கூட இல்லை.. கொஞ்சம் கூடத் தயக்கமில்லாம என் சுரேனை என்னிடமிருந்து பிரிச்சுத் துக்கிட்டுப் போனார் பாட்டி.. எனக்கு எப்படியிருந்திருக்கும்..?"
எப்படியிருந்திருக்கும் என்ற கேள்வியை கணவனும், மனைவியும் வெவ்வேறு இடங்களில் வைத்து.. வெவ்வேறு நேரத்தில் சித்ரலேகாவிடம் கேட்கிறார்கள்.. அவள் எப்படியிருந்திருக்கும் என்பதை எப்படிச் சொல்வாள்..?
கோவிலில் வைத்து ஊர்மிளா அவளிடம் கொட்டிய கதைகளிலும், சொல்லிய நிகழ்வுகளிலும், கேட்ட கேள்விகளிலும்.. ஆறாத மன ரணமிருந்தது..
பால்கனியில் உட்கார்ந்து நரேந்திரன் அவளிடம் பேசிய பேச்சுக்களிலும் ஆறாத மன வேதனை இருந்தது..
இவரும் நல்லவர்கள்.. ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த காதலைக் கொண்டிருப்பவர்கள்.. இருந்தும் இருவரும் எதிரெதிர் கரைகளில் என்றால் அவர்களின் விதியை என்னவென்று சித்ரலேகா சொல்லுவாள்..?
'நளினி..! என் மகளே..! இது ஒரு சாபமாடி..! நீ மருகினதைப் போல உன் மருமகளும் மருகுகிறாளே அம்மா..'
சித்ரலேகாவின் மனம் துயர் கொண்டது..
"நீ காபி டிபனை சாப்பிடு நரேன்.."
"த்ச்சு.. வேணாம் பாட்டி.."
"சொன்னாக் கேட்கனும்.. உன்கூடப் பேசனும்னு நான்தான் ஊர்மிளாவை தோட்டத்துக்கு அனுப்பி வைச்சுட்டு காபி, டிபனை எடுத்துக்கிட்டு வந்தேன்.. உன் தலையைக் கண்டதும் அவள் காபி கலக்க ஆரம்பிச்சுட்டா.. இது அவள் போட்ட காபிதான்.. டிபனும் அவள் செய்தது தான்.. உனக்கு உளுந்து வடையும், ரவாகேசரியும் பிடிக்குமில்ல.. அதைத்தான் அவ செய்திருக்கா.."
சித்ரலேகா சொல்லியதும் தன்னிச்சையாக நரேந்திரனின் கை டிபன் தட்டை எடுத்துக் கொண்டது.. சிணுங்கிய அவன் மனது சமனப்பட்டு விட்டதைப் புரிந்து கொண்ட அந்த பாட்டியின் மனதில் இவனுக்குத்தான் இவன் மனைவியின் மீது எத்துணை காதல் என்ற பிரமிப்பு ஏற்பட்டது..
இப்படிப்பட்ட காதலை ஊர்மிளாவும் கணவன் மீது வைத்திருக்கிறாள்.. அவன் நினைவில் வாழ்ந்திருக்கிறாள்.. ஒரு நாளின் அத்தனை மணித்துளிகளிலும் அவன் நினைவாகவே இருந்திருக்கிறாள்..
அதனால்தானே.. கஜேந்திரனின் பேரனான நரேந்திரனின் மகனுக்கு 'சுரேந்திரன்' என்று அவள் பெயர் வைத்திருக்கிறாள்..!




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -95
அழகான ராட்சசியே -95
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-95.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-95.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy