அழகான ராட்சசியே -92

92 கொடிபோன்ற அழகுடனே.. எனைத் தனிமையிலே தள்ளிவிட்ட அழகான ராட்சசி நீ.... ஊர்மிளா கண் விழித்த போது லேசாக விடிந்திருந்தது.. சுரேந்த...


92
கொடிபோன்ற அழகுடனே..
எனைத் தனிமையிலே தள்ளிவிட்ட
அழகான ராட்சசி நீ....

ஊர்மிளா கண் விழித்த போது லேசாக விடிந்திருந்தது.. சுரேந்திரன் எங்கே என்று தேடினாள். அவன் முன்சீட்டில் நரேந்திரனின் தோள் மீது சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தான்.. அவன் விழுந்து விடாமலிருக்க சீட் பெல்ட் அவனை இறுக்கியிருந்தது..
"இவன் தூங்க ஆரம்பிச்சவுடனே பின்சீட்டுக்கு அனுப்பியிருக்கலாமில்ல..?"
தூங்கிவிட்ட குற்ற உணர்வுடன் ஊர்மிளா கேட்டாள்.. நரேந்திரன் லேசாக அவளைத் திரும்பிப் பார்த்தான்..
"எதுக்கு..? இவனை உன் மடியில போட்டுக்கிட்டு நீ விடிய விடிய தூங்காம டிராவல் பண்றதுக்கா..?"
அவளுடைய தூக்கத்திற்காக பார்த்திருக்கிறான்.. ஊர்மிளா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவள் மீதான அவனின் அக்கறையில் அவளது மனக்காயம் லேசாக ஆறத் தொடங்க ஆரம்பித்திருப்பதை அவளால் உணர முடிந்தது..
இப்போதெல்லாம் அவனுடன் இயல்பாக பேசிப் பழக முடிகிறது.. இதுவே தஞ்சையில் அவனைப் பார்த்த போது எதிரியைப் பார்ப்பதைப் போல முகம் பார்க்காமல் தானே அவள் நின்றிருந்தாள்..?
தூக்கம் வந்து திரும்பவும் கண்களைச் சுழற்றியது.. அதை துரத்தியடித்தபடி..
"குட்டியை இங்கே கொடுங்க.." என்றாள்..
"இவனே நிம்மதியா தூங்கிகிட்டு இருக்கான்.. எதுக்காக இவன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணனும்னு நினைக்கிற..? பேசாம தூங்கு.." நரேந்திரன் அதட்டினான்..
ஊர்மிளாவின் இமைகள் அதுதான் சாக்கென்று மூடிக் கொள்ள முயன்றன.. சாலையைக் கவனித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்த நரேந்திரனின் சோர்ந்த தோற்றத்தில் அவளது தூக்கம் தள்ளி நின்றது..
"நீங்க தூங்காம காரை ஓட்டறிங்களே..?"
"அதுக்கு..? நீ டிரைவிங்கை மாத்திக்கறேன்ங்கிறியா..?"
"செய்யவா..?"
"அதையெல்லாம் கிரௌவுண்டில் ஓட்டிப் பார்க்கும் போது செய்துக்க.. இத்தனை வருசத்திலே டச் விட்டிருக்கும்.. எனக்கு கண் விழித்து பழக்கம்தான்.. நீ தூங்கு.."
இதற்கு மேலும் வழக்கடிப்பானேன் என்று அவள் உறங்கிப் போனாள்.. திரும்பவும் அவள் கண் விழித்த போது கார் அடர்ந்த மரங்கள் கொண்ட அழகான குடியிருப்புகள் நிறைந்த பகுதியிலிருந்த சாலையில் ஓடிக் கொண்டிருந்தது..
'இது என்ன இடம்..?'
ஊர்மிளா கண்களை கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தாள்..
சாலையில் இருபக்கமும் அடர்ந்திருந்த மரங்கள் கொட்டியிருந்த ஆரஞ்சு வண்ண மலர்கள் பூக்குவியல்களாக கிடந்தன.. குடியிருப்பிலிருந்த ஒவ்வொரு வீடும் மாளிகைக்கு நிகராக இருந்தது.. கோடிஸ்வரர்கள் மட்டுமே குழுமியிருக்கும் பகுதி அது என்று ஓர் பார்வையிலேயே ஊர்மிளாவுக்குப் புரிந்து விட்டது.. அது எந்த ஊரிலிருக்கும் குடியிருப்புப் பகுதி என்று மட்டும் அவளுக்குத் தெரியவில்லை..
உயர்ந்த காம்பவுண்டு சுவர்களும்.. பிரம்மாண்டமான கேட்களும் இருந்த வீடுகள் அமைதியாக இருந்தன.. வாசலில் இருந்த செக்யூரிட்டிகள் காலைப் பேப்பரைப் படித்த வண்ணம் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்..
'சுதந்தரமில்லாத வாழ்க்கை...' ஊர்மிளாவின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது..
குடியிருப்புப் பகுதியில் இருந்த பெயர் பலகைகள் அந்தந்த வீட்டின் பெயரையும்.. வீட்டில் குடியிருந்தவர் களைப் பற்றிய விவரத்தையும் மட்டுமே அறிவித்தது.. ஊர் பெயரைக் குறிப்பிடவில்லை..
"இது எந்த ஊர்..?" ஊர்மிளா கேட்டு விட்டாள்..
காரை ஓட்டிக் கொண்டிருந்த நரேந்திரனின் முகத்தில் இருந்த ஏதோ ஒன்றில் ஊர்மிளா குழம்பினாள்..
'என்ன சஸ்பென்ஸா இருக்கும்..? இப்படிப் பார்த்து வைக்கிறானே.. ஒருவேளை என்னையும் சுரேந்திரனையும் திருச்சிக்கு அழைத்து வந்திருக்கிறானோ..?'
நினைவு வந்தவுடனே இருக்காது என்று அதை மறுத்தாள் ஊர்மிளா.. அவள் திருச்சிக்குப் போகப் போவதாக சொன்னபோது.. சுரேந்திரன் வர மாட்டான் என்று நரேந்திரன் சொன்னதை நினைவு படுத்திக் கொண்டாள்..
அத்துடன் அந்த ஏரியா திருச்சியைச் சேர்ந்ததைப் போல இல்லையே.. அவள் பிறந்து வளர்ந்த திருச்சியைப் பற்றி அவளுக்குத் தெரியாதா..?
'ஒருவேளை.. இது தஞ்சையாக இருக்குமோ..'
இருக்காது என்று அந்த நினைவையும் துரத்தி விட்டாள்.. தஞ்சையில் அது போன்ற ஏரியாவை அவள் பார்த்ததில்லை என்பது ஒரு புறமிருக்க.. தஞ்சைக்குப் போனால் ஊர்மிளா அவளுடைய வேலையில் சேர்ந்து விடுவாள் என்பதால் நரேந்திரன் ஊர்மிளாவை தஞ்சையின் பக்கமே போக விடமாட்டான் என்பது ஊர்மிளாவின் அனுமானம்..
ஓங்கி உயர்ந்த பிரம்மாண்டமான மாளிகைகளின் மத்தியில் எல்லாவற்றையும் விட பிரம்மாண்டமாக இருந்த பெரிய மாளிகையின் சுற்றுப்புற வளாகத்துக்குள் கார் நுழைந்தது.. அந்த வீட்டின் பிரம்மாண்டத்தில் மலைத்தாள் ஊர்மிளா..
'இது யார் வீடா இருக்கும்..?'
அது வீடல்ல.. மாளிகை..! அகன்ற அகலமான தூண்களோடு அரண்மனையின் முகப்பைப் போல அமைந்திருந்த போர்டிகோவின் கீழ் நூறு கார்களை வரிசை கட்டி நிறுத்தலாம் போல இருந்தது..
போர்டிகோவின் அந்தப் பக்கமாக நீச்சல் குளம்.. அதைச் சுற்றியிருந்த பளிங்கு விளிம்பு.. அதன் ஓரமாக போடப் பட்டிருந்த அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய நாற்காலிகள்.. இந்தப் பக்கமாக தோட்டம்.. அதிலிருந்த மலர் வளைவுகள்.. சாய்வான மரபெஞ்சுகள்.. பூங்காவைப் போல ஆங்காங்கே செயற்கை நீருற்றுகள்..
சுரேந்திரன் கண்களை அகல விரித்து அந்தச் சூழலை ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான்.. புன்னகையுடன் இறங்கிய நரேந்திரன் காரைச் சுற்றி வந்து.. முன் பக்கம் கதவைத் திறந்து சுரேந்திரனைத் தூக்கிக் கொண்டான்... பின்பக்கம் இறங்க மறந்து திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த ஊர்மிளாவிடம்..
"ஊம்.. வீடு வந்தாச்சு.. இறங்கு.." என்றபடி கார் கதவைத் திறந்து விட்டான்..
கேள்வியுடன் கணவனைப் பார்த்தபடி ஊர்மிளா இறங்கினாள்.. அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து தடதட வென்று வேலையாள்கள் ஓடி வந்தார்கள்.. நரேந்திரனைக் கண்டதும் ஆனந்தத்துடன் வணக்கம் சொன்னார்கள்.. கார் டிக்கியைத் திறந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு போனார்கள்..
"இங்கேயா நாம தங்கப் போறோம்..?" ஊர்மிளா கேட்டாள்..
"ம்ம்ம்.." மர்மமான புன்முறுவலுடன் தலையசைத் தான் நரேந்திரன்..
"ஆனா.. ஏன் இங்கே வந்து தங்கனும்..?"
ஊர்மிளா தொடர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.. எதற்கும் பதில் சொல்லாமல் வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் நரேந்திரன்.. திடிரென்று அவன் கண்கள் மின்னின.. முகம் கனிந்தது..
'யாரைப் பார்த்து இப்படி ஜெர்க் ஆகிறான்..?'
ஊர்மிளாவும் திரும்பிப் பார்த்தாள்.. அங்கே சினிமாவில் வரும் கோடிஸ்வரத் தம்பதிகளைப் போல களையான முகமும், தோரணையுமாக ஒரு பெரியவரும்.. பெண்மணியும் வந்து கொண்டிருந்தார்கள்.. அவர்களுக்குப் பின்னால் ஆரத்தி தட்டுடன் வேலைக்காரப் பெண் வந்தாள்..
"பெண்டாட்டி பிள்ளையோடு சேர்ந்து நில்லுடா.." அந்த முதிய பெண்மணி அதட்டினாள்... அழகாக கொண்டையிட்டு அதைச் சுற்றி மல்லிகைச் சரத்தை வளையமாக வைத்திருந்தாள்.. காதிலும் கழுத்திலும், கைகளிலும் வைரங்கள் டாலடித்தன.. அகலக் கரையுடன் கூடிய பட்டுப் புடவையை அணிந்திருந்தாள்..
"சரி பாட்டி.."
சிரித்தபடி சுரேந்திரனை ஒரு கையில் இறுக்கிக் கொண்டு.. மறுகையை ஊர்மிளாவின் தோள்மீது போட்டு அவளை அருகே இழுத்து இறுக்கியபடி நின்றான் நரேந்திரன்..
'பாட்டியா..?..!...'
ஊர்மிளா ஆச்சரியம், ஆர்வம், பிரமிப்பு என்று பல்வேறு உணர்ச்சிக் கலவைகளுடன் சித்ரலேகாவைப் பார்த்தாள்.. அந்த முதிய பெண்மணியின் கருணையே வடிவான சாத்வீக முகத்தைக் கண்டவளின் கண்கள் கலங்கி விட்டன..
'இவள் எனது நரேனைப் பெற்ற தாயைப் பெற்ற தாயா..?'
ஊர்மிளா நரேந்திரனிடமிருந்து விலகி.. வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல சித்ரலேகாவின் காலடியில் போய் விழுந்தாள்..
"பாட்டி.."
குனிந்து பேரனின் மனைவியைத் தூக்கிய சித்ரலேகாவின் கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது..
"ஊர்மிளா.. என் கண்ணே..! இந்தப் பாட்டியைப் பார்க்க வர இத்தனை நாள் ஆனதாம்மா..? வயதான உன் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் உங்களை விட்டா சொந்தம்ன்னு சொல்லிக்க இந்த உலகத்தில யாரிருக்காங்கம்மா..? கல்யாணம் ஆனவுடனே நீ வலது காலை எடுத்து வைத்து நம்ம வீட்டுக்கில்ல வந்திருக்கனும்..? அப்படி வந்திருந்தா இந்த குட்டி நரேந்திரனைப் பார்க்க நான் இத்தனை வருசமா காத்திருக்க வேண்டி வந்திருக்குமா..?"
சித்ரலேகாவின் கேள்வியில் அவள் தோளில் சாய்ந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு உடைந்து போய் அழுதாள் ஊர்மிளா..
"பாட்டி.."
அவளால் பேசமுடியவில்லை.. எது அவளை அந்த வீட்டிற்கு வர விடாமல் செய்தது..? இப்படிப்பட்ட பண்பான முதியவர்களை விட்டு எந்த சக்தி அவளைப் பிரித்து நிறுத்தியது..? இந்த வயதானவர்களுக்கு சேவை செய்து.. அவளுடைய கணவனை வளர்த்தவர்களுக்கு நன்றிக் கடனை செழுத்த முடியாமல் அகல்யா இருக்குமிடத்தில் ஏன் அவளது வாழ்க்கை அவளைக் கொண்டு போய் சேர்த்தது..?
என்னவோ காலம் காலமாய் சித்ரலேகாவை அறிந்தவளைப் போல ஊர்மிளா துடிதுடித்து அவள் தோள் சாய்ந்து அழுததில் கஜேந்திரன் நெகிழ்ந்து விட்டார்..
சித்ரலேகாவும் பேரனின் மனைவியோடு சேர்ந்து அழுதாள்.. பெண் மனதின் துக்கம் பெண் மனதிற்குப் புரிந்தது.. இருவரும் ஒருவருக்காக மற்றொருவர் பரிதாபம் கொண்டு அழுதார்கள்.. ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க வேண்டி வந்து விட்டதற்காக அழுதார்கள்.. ஒருவரின் கண்ணீரை மற்றொருவர் துடைக்க முடியாமல் போய் விட்டதாற்காக அழுதார்கள்..
ஊர்மிளா அங்கே அதுவரை வந்ததில்லை என்ற  உணர்வே கஜேந்திரனுக்கு வரவில்லை... எதையும் சொல்லாமல் அவள் சித்ரலேகாவைக் கட்டிக் கொண்டு தேம்பி அழுத துக்கத்தில்... அடிபட்ட குழந்தை தன் காயத்தைக் காட்டித் தாயிடம் அழுவதைப் போலவே இருந்தது..
அப்படி அழுதவளைக் கட்டிக் கொண்டு அழுத சித்ரலேகாவின் அழுகையில் குழந்தையின் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாத தாய்மையின் தவிப்பும், வலியும் இருந்தன..
கஜேந்திரன் பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டார்..
'நளினி..! உன் மருமகளைப் பார்த்தாயா அம்மா..! இந்த வீட்டு மனிதர்களைத் தன் மனிதர்களாக நினைக்கிறாள்.. எங்களைப் பார்க்காமலே எங்கள் மீது பாசம் வைத்திருக்கிறாள்.. பார் அம்மா.. இவள்தான் உன் மருமகள்.. நம் வீட்டு குலவிளக்கு..!'
அவரது மனம் காற்றில் கரைந்து நின்ற மகளின் ஆத்மாவிடம் கூறியது.. அதை நளினி ஆமோதித்ததைப் போல.. தோட்டத்திலிருந்த பூமரம் அசைந்தது..
தாயின் கதறலைக் கண்ட சுரேந்திரன் மிரட்சியுடன் தானும் அழப் போனான்.. நரேந்திரன் தொண்டையை அடைத்த துக்கத்துடன்..
"ஊஹீம்.." என்று மகனை சமாதானப் படுத்தி வைத்தான்..
ஒருவழியாக அழுது முடிந்த சித்ரலேகாவும், ஊர்மிளாவும் விலகி நின்றார்கள்.. கலைந்திருந்த ஊர்மிளாவின் முடியைக் கோதி சீர் செய்தாள் சித்ரலேகா..
"இனி அழுகக்கூடாது.. நம்ம வீட்டுக்கு வந்திட்டல்ல.. அழுகையை சுத்தமா மறந்திரனும்.." என்று கண்ணீருடன் சிரித்தாள்..
ஊர்மிளாவும் கண்ணீருடன் தலையை ஆட்டினாள்..
"தாத்தா பக்கத்தில சேர்ந்து நில்லுங்க பாட்டி.." என்றான் நரேந்திரன்..
"எதுக்குடா..? எனக்கும் உன் தாத்தாவுக்கும் ஆரத்தி எடுக்க சொல்லப் போகிறியா..?" கண்களைத் துடைத்தபடி கேட்டாள் சித்ரலேகா...
வாசலுக்குப் போய் தெருவில் ஆரத்தியின் கரைசலை ஊற்றிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண் சித்ரலேகாவின் பேச்சில் சிரித்தாள்..
"ஆமாமாம்.. நேற்றுத்தானே உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆகியிருக்கு.. ஆரத்தி எடுக்கச் சொல்ல வேண்டியதுதான்.. ஆரத்தி போதுமா..? இல்லை ஹனிமூனுக்கும் டிக்கெட் போடச் சொல்லவா..?" கிண்டலாகக் கேட்டான் நரேந்திரன்..
"படவா.." அவன் காதைப் பிடித்துத் திருகினார் கஜேந்திரன்..
அவருடைய நரைத்த மீசையை முறுக்கியபடி சித்ரலேகாவை சிருங்காரத்துடன் பார்த்து வைத்தவர்..
"ஏண்டா.. எங்களுக்கு ஆரத்தி எடுக்கக் கூடாதா..? ஹனிமூனுக்கு டிக்கெட் போடக் கூடாதா..? எங்களைப் பாத்தா வயசான ஜோடி போலவா இருக்கு..? நாங்க 'யங் கப்புள்'டா.." என்று பேரனிடம் கண்ணைச் சிமிட்டினார்..
"த்ச்சு.. ஊர்மிளா முன்னாலே என்ன பேச்சுன்னு இதைப் பேசறிங்க.. இளமை திரும்புதாக்கும்..?" கணவரை செல்லமாக கடிந்து கொண்ட சித்ரலேகாவின் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது..
இவர்களுடன் இருக்கும்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா.. பொசுக்கும் வெயிலில் காலெல்லாம் புண்ணாக பாலை வனத்தின் சுடுமணலில் நடந்து வந்தவளுக்கு இளைப்பாற நிழல் கிடைத்தைப் போல இருந்தது..
இது அவளைக் காக்கும் மரத்தின் நிழல்.. அவளுடைய கணவனின் பாரம்பர்ய நிழல்.. இங்கே சுடுவெயில் அவளை அண்டாது..
ஊர்மிளாவின் மனதில் நிம்மதி சூழ்ந்தது.. அது அவளின் முகத்தில் தெரிந்தது.. நரேந்திரனுக்கு அதைப் பார்க்கத் திருப்தியாக இருந்தது.. ஊர்மிளாவைச் சேர்க்க வேண்டிய இடத்தில் அவன் சேர்த்து விட்டான்..
"தாத்தா பக்கத்தில நிக்கக் சொன்னதற்கு காரணமே வேற பாட்டி.."
நரேந்திரனின் வற்புறுத்தலில் கஜேந்திரனின் பக்கத்தில் போய் நின்று கொண்டாள் சித்ரலேகா.. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவராய் அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு அணைத்துக் கொண்டார் கஜேந்திரன்..
"ம்ம்ம்.. இப்படித்தான்... சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணிரக் கூடாது... சந்துக்குள்ளே சிந்து பாடி முடிச்சிரனும்.."
சிரித்தபடி ஊர்மிளாவுடன்.. சுரேந்திரனைக் கைகளில் அணைத்தபடியே குனிந்து தாத்தா பாட்டியை வணங்கி எழுந்தான் நரேந்திரன்..
"என் தங்கங்களா.."
கஜேந்திரன் நரேந்திரனையும்.. சுரேந்திரனையும் அணைத்துக் கொண்டார்.. என்னதான் நடக்கிறது என்று தெரியாமல் என்னவோ நடக்கிறது என்று விழித்துக் கொண்டிருந்த சுநேந்திரனை வாங்கி உச்சி முகர்ந்தார்..
"அப்படியே நளினியில் ஜாடையில் இருக்கிறானில்ல.."
சித்ரலேகாவிடம் கேட்டு மகிழ்ந்து போனார்.. சித்ரலேகாவும் அதை ஆமோதித்துக் கண் கலங்கியதில் ஊர்மிளாவுக்கு திகைப்பு ஏற்பட்டது..
சுரேந்திரன் நரேந்திரனை உரித்து வைத்ததைப் போல அச்சு அசலாய் நரேந்திரனின் சாயலில் இருந்தான்..
'அப்புறம் எப்படி இவங்க இப்படிச் சொல்கிறாங்க..?'




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -92
அழகான ராட்சசியே -92
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-92.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-92.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy