அழகான ராட்சசியே -90

90 சொல்லாலே உனையடித்தேன்.. சொல்லாமல் விலகி விட்ட அழகான ராட்சசி நீ.... அவனும்.. அவளும் எதிரும் புதிருமாக நின்று எப்போதும் பேசி...


90
சொல்லாலே உனையடித்தேன்..
சொல்லாமல் விலகி விட்ட
அழகான ராட்சசி நீ....


அவனும்.. அவளும் எதிரும் புதிருமாக நின்று எப்போதும் பேசியதில்லை.. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் சொல்லி மரியாதையை தெரியப் படுத்திக் கொள்வார்கள்..
அவர்கள் பேசிக் கொள்வது அரிதாகத்தான் இருக்கும்.. அதையும் ஊர்மிளாவின் முன்னிலையில் அவர்கள் பேசியிருக்கிறார்கள்.. அப்படியில்லாமல் அவர்கள் தனித்து நின்று பேசியதில்லை..
முதல்முறையாக அப்படி பேச நேர்ந்த போது நரேந்திரன்.. அவளை 'அனாமிகா..' என்று குறிப்பிட்டது ராதாவிற்கு ஆச்சரியத்தைத் தந்தது..
"அனாமிகாவா..?"
"யெஸ்.. உங்க பெயர் அனாமிகாதானே..?"
ராதாவுக்கு வியப்பாக இருந்தது.. நரேந்திரனைப் போன்ற ஒரு பிஸினெஸ் மேக்னெட்.. இப்படிச் சொல்வதாக இருந்தால் எதனால் அவன் அப்படிச் சொல்கிறான் என்பதை அறியாமல் அவள் வாய் விட்டு விடக்கூடாதே..
ராதா அவனுடன் இசைந்து.. ஆனால் பொய் கலக்காத எச்சரிக்கை உணர்வுடன் பேசினாள்..
"இதை உங்களுக்கு யார் சொன்னது..?"
"உங்க பிரண்டுதான் சொன்h.."
'ஊர்மிளாவா..?'
ராதாவுக்கு ஏதோ புரிவதைப் போல இருந்தது..
"உங்க பெயர் என்னன்னு கேட்டேன்.. மர்மமா பார்த்துட்டு.. அனாமிகான்னு சொன்னா.."
"அவ சொன்னாளா..?"
யோசனையுடன் கேட்டாள் ராதா.. எதனால் ஊர்மிளா அப்படிச் சொல்லியிருப்பாள் என்பது முழுவதுமாக அவளுக்குப் புரிந்தது..
"அனாமிகான்னா பெயரில்லாதவள்ன்னு அர்த்தம்.. உங்களைப் போல ஒருத்தங்க.. அனாமிகாங்கிற பெயரோடு இருக்கிறது ஆச்சரியம்தான்.. அதைத்தான் நான் சொன்னேன்.."
"அனாமிகான்னா பெயரில்லாதவள்ன்னு மட்டும் அர்த்தமில்ல.." சிந்தனையுடன் சொன்னாள் ராதா..
"தென்..?"
"அடையாளமில்லாதவளையும் அப்படித்தான் சொல்வாங்க.."
"ஐ ஸீ..."
"ஊர்மிளா அனாமிகாவாக ஆக்கப்பட்டிருக்கிறா.. நீங்க அதைப் பத்தி யோசிக்காம என்னைப் பத்தி யோசிக்கறிங்க.. ஐ மீன் என் பெயர் காரணத்தைப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க.."
நரேந்திரனின் முகம் மாறியது.. இதைச் சொல்லிய ராதாவின் குரலில் பகைமை இல்லை.. இருந்தும் அவள் ஊர்மிளாவை நரேந்திரன் சரியான முறையில் பாதுகாக்காமல் அவளுடைய அடையாளத்தை அழித்து விட்டதாகச் சொல்கிறாள்..
அவள் வார்த்தைகளுக்கு அதுதானே பொருள்..!
"ஐ ஸீ.." என்றான் நரேந்திரன்..
ராதா ஜீன்ஸ் பேண்டில் கையை விட்டபடி நிமிர்ந்து அவனை பார்த்தாள்.. பெண்மையின் நளினமில்லாத அவளின் கம்பீரத்தில் தனி சோபை இருப்பதை போல உணர்ந்தவன் புன்னகைத்தான்..
"என்மேல் குற்றம் சொல்கிறீங்க..? உங்க பிரண்ட் ஏதாவது சொல்லியிருப்பா.. இல்லைன்னா இப்படி நீங்க பேச மாட்டிங்க.." என்று சொன்னான்..
"மே.. பி.." ராதா தோளைக் குழுக்கினாள்..
"ஒரு சொல்..! ஒரு கேள்வி..! அதற்கா மூன்றரை வருசப் பிரிவு..?" லேசான கோபத்துடன் கேட்டான் நரேந்திரன்..
"அந்த ஒரு சொல்ங்கிறது சாதாரணச் சொல்லில்லை.. துப்பாக்கிக்குண்டு.. அது உங்கள் மனைவியின் இதயத்தை துளைப்பது.. அந்த ஒரு கேள்வியும் சாதாரணக் கேள்வியில்லை மிஸ்டர் நரேந்திரன்.. அது கூர்மையான வெட்டுக்கத்தி... உங்கள் மனைவியின் கழுத்தை வெட்டுவது.." ராதாவின் முகம் கடுமையாக மாறியிருந்தது..
"உங்கள் பிரண்டு தேவைக்கு அதிகமாகவே உங்களிடம் பேசியிருக்கிறாள் போல.." நரேந்திரனும் முகம் கடுத்தான்..
"நீங்கள் பேசவில்லையா..?" ராதா மடக்கினாள்..
"நானா..?"
"நீங்களேதான்.. ஒரு சொல்லையும்.. ஒரு கேள்வியையும் பற்றி என்னிடம் சொன்னது யார்..? நீங்களா இல்லை அவளா..?"
"குட்.. அவளுக்கு அருமையான பிரண்ட்ஸ் கிடைத் திருக்காங்க.. நீங்க.. அப்புறம்.. அமிர்தா.."
"பட்.. அருமையான வாழ்க்கை கிடைக்கலை.. அவள் அருமையானவ மிஸ்டர் நரேந்திரன்.. அவளோட அருமை எனக்கும் அமிர்தாவுக்கும் தெரிஞ்சிருக்கிறதைப் போல உங்களுக்கு ஏன் தெரியலை மிஸ்டர் நரேந்திரன்.?."
ராதா பதிலை எதிர்பார்க்காமல் காரில் ஏறிப் போய் விட்டாள்.. நரேந்திரன் வீட்டுக்குள் வந்தான்.. ஊர்மிளா அங்கு இல்லை.. சுரேனுக்கு உடை மாற்றிவிட அழைத்துப் போய் விட்டதாக தேன்மொழி சொன்னாள்.. அவன் மாடிக்குப் போகாமல் அப்படியே ஹாலில் இருந்த சோபாவில் சரிந்தான்..
'மாடிக்குப் போனா.. பிள்ளைக்கு டிபன் ஊட்டி விடனும்னு கீழே இறங்கி வருவா..'
அவனுக்கா ஊர்மிளாவைத் தெரியாது..? அவன் அனுமானித்ததைப் போலவே சற்று நேரத்தில் சுரேந்திரனுடன் கீழே வந்து விட்டாள் ஊர்மிளா.. சுரேந்திரனை குளிக்க வைத்து உடை மாற்றி விட்டிருந்தாள்.. அவன் காதோரமாக இவள் எதையோ கேட்டாள்.. சிறுவன் சன்னக்குரலில் பதில் சொன்னான்.. ஊர்மிளா விழிகளை உருட்டி விழித்து அவனை மிரட்டுவதைப் போல செல்லமாக முறைத்தாள்.. சுரேந்திரன் உடனடியாக அவளுக்கு விளக்கம் சொன்னான்.. அவள் மகிழ்ந்து போய் மகனின் கன்னத்தில் முத்தமிட்டாள்..
நரேந்திரனுக்கு பொறாமையாக இருந்தது.. மகனும் அவளுமாக உருவகித்துக் கொண்டிருக்கும் சின்ன உலகில் அவனுக்கு இடமில்லையா..? அவன் தனிமைப்பட்டு விட்டதைப் போல உணர்ந்தான்..
ஊடே யதேச்சையாக நரேந்திரனின் பக்கம் பார்த்தவளின் முகம் சிவந்தது.. தேன்மொழியை அழைத்து ஏதோ சொன்னாள்.. அவள் நரேந்திரனைப் பார்த்து விட்டு சமையலறைக்குள் ஓடினாள்..
'எனக்கு காபி, டிபன் கொடுக்கச் சொல்லியிருப்பா..' நரேந்திரனுக்குள் மெலிதான கோபம் படர்ந்தது..
வேலைக்காரி காபி, டிபன் கொடுக்க அவன் சாப்பிடுவதாக இருந்தால் வீட்டுக்காரியென்று ஊர்மிளா எதற்காக இருக்கிறாள்..?
அவனுக்கான எதற்காகவும் அவள் இருப்பதில்லை என்ற நினைவில் அவன் பல்லைக் கடித்தான்.. தேன்மொழி காபி டிபனுடன் வந்தாள்..
"எனக்குப் பசிக்கலை.."
நரேந்திரன் இறுக்கமான முகத்துடன் சொல்லி விட்டு டிவியை உயிர்ப்பித்தான்.. அதில் வந்த செய்திகளில் அவன் ஆழ்ந்திருந்தபோது அவன் கழுத்தை பிஞ்சுக் கைகள் கட்டிக் கொண்டன.. அவன் கன்னத்தில் படிந்த ஈர முத்தத்தில் நரேந்திரன் மகிழ்ந்து போனான்..
"அப்பா.." அவன் காதோரமாக கொஞ்சியது சுரேந்திரனின் மழலைக்குரல்..
அவ்வளவு நேரமாக அவன் அப்பாவை மறந்து விட்டு அம்மாவிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான் என்பதை நரேந்திரன் மறந்து விட்டான்..
"அப்பாதாண்டா.. அப்பாவுக்கு என்ன வைத்திருக்கிற..?" அவனும் மகனைக் கொஞ்சினான்..
காபி, டிபனுடன் அருகில் வந்த ஊர்மிளா அதைக் காட்டி மகனிடம் சைகை செய்தாள்.. கப்பென்று தாய் சொன்னதைப் பிடித்துக் கொண்டான் அந்தக் குட்டிப் பையன்..
"காபி, டிபன் வைச்சிருக்கேனே.." என்று ஊர்மிளாவின் கையிலிருந்த டிரேயை வாங்க முயன்றான்..
"கீழே போட்டிருவடா.." நரேந்திரனின் கவனத்தை ஈர்த்தாள் ஊர்மிளா..
அவன் வாங்கிக் கொள்ளாவிட்டால் மகன் வாங்கி கீழே போட்டு விடுவான் என்பதால் அவன் வேறு வழியின்றி ஊர்மிளா நீட்டிய டிரேயை வாங்கி அருகிலிருந்த டீப்பாயில் வைத்தான்.. டிபன் தட்டை எடுத்தபடி அவளை முறைத்துப் பார்த்தான்.. மகனிடம் பேசுவதைப் போல பாவனை செய்தபடி ஓரக்கண்ணால் அவனது கோபத்தை அவள் பார்த்துக் கொண்டிருந்ததில் அவன் கோபம் அதிகரித்தது..
'கெட்டிக்காரி..! வேலைக்காரியிடம் டிபன் கொடுத்து விட்டாள்ன்னு நான் கோபமாய் இருக்கிறதாலே.. இவள் டிபன் கொண்டு வந்து கொடுத்தா நான் வாங்க மாட்டேன்னு மகனை விட்டு கொடுக்க வைக்கிறா..'
முகம் கடுக்க டிபனை காலி பண்ணிய போதும் நீண்ட சோபாவில் ஒரு பக்கமாக அவனும், மறுபக்கமாக அவளும்.. மகனை ஊடே வைத்து அமர்ந்திருந்ததில் அவனுக்குள் திரும்பவும் அமைதி வந்தது..
அவளுக்கும் மகனுக்குமான உலகத்தில் அவனுக்கும் இடமிருக்கிறது என்பதில்தான் எத்துணை நிம்மதி இருக்கிறது..!
அந்த மாத இறுதியில் ஊர்மிளா எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்தன.. பள்ளிக்குப் போன சுரேந்திரன் டிரான்ஸ்பர் செர்டிபிகேட்டோடு வீடு திரும்பினான்..
"ஏன்..?" பதறின ஊர்மிளாவுக்கு விடைகிடைக்க வில்லை..
கண்ணம்மாவுக்கும், தேன்மொழிக்கும்.. ஆறுமாத கால ஊதியத்தை கையில் கொடுத்து அந்த வார இறுதியிலிருந்து வேலைக்கு வர வேண்டாமென்றும்.. வேறு வேலை தேடிக் கொள்ளுமாறும் நரேந்திரன் சொல்லி விட்டான்..
நிம்மதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் களின் முகத்தில் இருள் படிந்தது.. மணிவாசகத்தைத் தேடிப் போனார்கள்..  அவனுக்கும் அதே நிலைதான் என்று அவன் புலம்பினான்.. வேறு இடத்தில் வேலை கிடைத்து விடும்தான்.. ஆனால் இது போன்ற வீட்டில் வேலை கிடைக்க வேண்டுமே..
உயர்மட்ட அலுவலர்கள் முதல்.. அடிமட்டத் தொழிலாளிகள் வரை பணிச்சூழல் என்பது நிம்மதியான ஒன்றாக இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அவர்களால் முழுமனதுடன் வேலைசெய்ய முடியாது..
செக்யூரிட்டிக்கு மட்டும் வேலை நிலைத்திருந்தது.. அவனும் அந்த வார இறுதியிலிருந்து பூட்டிக்கிடக்கும் வீட்டைக் காவல் காக்க வேண்டும் என்பதில் மற்ற மூவரும் குழம்பிப் போனார்கள்.. ஊர்மிளாவை அவர்கள் அணுகி விவரம் கேட்டபோது.. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு மௌனம் சாதித்தாள்..
அவர்களுக்காகவது அந்த வார இறுதியோடு அவர்களுக்கு வேலை முடிகின்றது என்பது தெரிந்திருக்கிறது..
அவளுக்கு..? எதுவும் தெரியாதே..
சுரேந்திரனின் பள்ளி மாற்றப்படப் போகிறதா..? அப்படியானால் அது எந்தப் பள்ளி..? இத்தனை நாள்களாக அவன் பழகிய பள்ளியையும்.. தோழர்களையும் பிரிந்தால் சிறுவனின் மனம் பாதிக்கப்படாதா..?
அவர்கள் வேறு வீட்டிற்கு மாறப் போகிறார்களா..? அது எந்த வீடு..? இந்த வீட்டைப் பூட்டி செக்யூரிட்டியை காவலுக்கு வைத்துவிட்டு.. அந்த வீட்டுக்கு மாற வேண்டியதன் அவசியம்தான் என்ன..?
இவை எவற்றுக்கும் ஊர்மிளாவுக்கு விடை கிடைக்கவில்லை.. நரேந்திரன் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பினான்.. நள்ளிரவில் வீடு திரும்பினான்..
காலையில் ஊர்மிளா விவரம் கேட்கப் போனால்.. நேரமாகிவிட்டது.. வந்து பேசலாம் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவான்..
நள்ளிரவில் திரும்புகிறவனிடம் அவள் பேச முயன்றால் அலுப்பாக இருக்கிறது.. அவன் தூங்க வேண்டும் என்று சொல்லி விடுவான்.. அவனுடைய சோர்ந்த முகத்தில் ஊர்மிளாவால் எதையும் பேச முடியாமல் போய் விடும்..
வீட்டிலுள்ள பொருள்களை அடுக்கிக் கட்ட வேண்டும் என்று சிலர் லாரியில் வந்து இறங்கினார்கள்.. நரேந்திரன் அவர்களை அழைத்துக் கொண்டு போய் வீட்டைச் சுற்றிக் காட்டினான்.. ஊர்மிளா பார்த்துக் கொண்டிருக்கும் போதே பொருள்கள் கனமான அட்டைப் பெட்டிகளில் அடுக்கப்பட்டு கட்டி சீல் வைக்கப்பட்டன..
"நம்ம டிரஸ்ஸை பெட்டிகளில் அடுக்கிரு.. சுரேனின் ஸ்கூல்பேக் செர்டிபிகேட்ஸ் எல்லாம் தனிப் பெட்டியில் வை.. அதைப் போல அவனின் மெடிகல் ஹிஸ்டரியோட ஃபைல்.. டேப்லெட்ஸ்.. எக்ஸ்ரேஸ் மத்த டெஸ்டுகளோட ரிசல்ட்ஸ் இதையெல்லாம் வேறொரு பெட்டியில் வைத்து பத்திரமா எடுத்துக்க.." என்றான் நரேந்திரன்..
"எங்கே போகிறோம்..?"
ஊர்மிளாவின் கேள்வி காதில் விழுகாததைப் போல அவன் வெளியே சென்று விட்டான்.. ஊர்மிளாவுக்கு துக்கமாக இருந்தது.. அவனும்.. அவளும் மகனுடன் வாழ்ந்த இனிய நினைவுகள் நிரம்பிய அந்த வீட்டை விட்டுக் கிளம்ப அவளுக்கு மனம் வரவில்லை..
பெங்களூர் வீட்டை விட அளவில் சிறியதுதான்.. ஆனால் அது அவளுக்கான வீடு.. அவளை மட்டும் தாங்கிய வீடு.. அந்த வீட்டில்தான் அவள் கணவன், மகனென்று அழகான குடும்ப வாழ்வை வாழ்ந்தாள்.. அந்த வீட்டில்தான் அவளைத் தேடிவந்து நோகடித்த அகல்யாவை எதிர்த்து நின்று விரட்டியடித்தாள்..
அந்த வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டுமா..?
ஏனென்று கேட்டும் உரிமையில்லாமல் போனதில் ஊர்மிளா இறுகிப் போனாள்.. ஒரு வீட்டில் நிலைத்திருக்கக் கூட அவளுக்கு கொடுப்பினை இல்லையா என்று அவள் மனம் வெம்பிப் போனது..
"பேசாமல் திருச்சிக்கே போயிருக்கலாம்.."
சுரேந்திரனிடம் சொல்வதைப் போல நரேந்திரனின் காதுபடச் சொன்னாள்.. அவன் உக்கிரமாக அவளை முறைத்து விட்டு..
"அங்கே யாரிருக்கா சுரேன்..?" என்று கேட்டான்..
'உனக்குத் தெரியாதா..?' அவளுக்கு வேகம் வந்தது.
"என் அப்பா இருக்கிறார்டா.." என்று மகனிடம் சொன்னாள்..
"பட்.. உன்னோட அப்பா இங்கேதான் இருக்கேண்டா.. ஸோ.. உங்க அம்மாவை வேணும்னா அவ அப்பாவிடம் போய் விடச் சொல்லு.. நீ உன் அப்பாவுடன் வந்து விடு.." கடுமையாகச் சொன்னான் நரேந்திரன்..
ஊர்மிளாவின் மனம் எரிந்தது.. திரும்பவும் வாய் விடுகிறான் என்று குமுறினாள்..
"ஆமாண்டா.. உன் அப்பாவுக்கு மகன் மட்டும்தான் முக்கியம்.. அவனோட அம்மா முக்கியமில்லை.. நானென்ன வாடகைத் தாயாடா..?" என்று கேட்டு விட்டாள்..
"அதே கேள்வியை நானும் கேட்கலாம்டி.." அவள் அருகில் வந்து அவள் விழிகளுக்குள் உறுத்துப் பார்த்தான் நரேந்திரன்..
அவள் முகம் திருப்பிக் கொண்டாள்.. அவன் முகம் சினந்தான்..
"என்மேல தப்பிருக்குன்னு நீ குற்றம் சொல்கிறதாலே பொறுமையாய் போகிறேண்டி.. இல்லைன்னா நடக்கிறதே வேற.." என்றான்..
'என்ன நடந்திருக்கும்..?'
ஊர்மிளாவால் அனுமானிக்க முடியவில்லை.. அவன் டிக்கியில் பெட்டிகளை அடுக்கச் சொன்னான்.. லாரியில் பொருள்கள் ஏறியதும் அது கிளம்பியது.. கண்ணம்மாவையும்.. தேன்மொழியையும் அனுப்பி விட்டு ஊர்மிளாவைக் காரில் ஏறச் சொன்னான்.. அவள் சுணங்கிய முகத்துடன் சுரேந்திரனைத் தூக்கியபடி பின் சீட்டில் ஏறினாள்.. கார் கிளம்பியது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -90
அழகான ராட்சசியே -90
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-90.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-90.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy