அழகான ராட்சசியே -87

87 பூப்பூக்கும் காதல்சொல்லி.. பித்தாக எனை மாற்றிவிட்ட அழகான ராட்சசி நீ.... அர்ச்சனாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்...


87
பூப்பூக்கும் காதல்சொல்லி..
பித்தாக எனை மாற்றிவிட்ட
அழகான ராட்சசி நீ....


அர்ச்சனாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிய ஆரம்பித்து விட்டது.. அதை திருப்தியுடன் பார்த்தாள் அகல்யா.. அவள் சொல்லிக் கொடுக்காமலே மகள் அழுக ஆரம்பித்து விட்டதில் அவளும் முந்தானைச் சேலையைச் சுருட்டி வாய்க்குள் அடைத்துக் கொண்டு துக்க வீட்டுக்குள் துக்கம் விசாரிக்கப் போனவளைப் போல நின்று வைத்தாள்..
அருண்குமார் ஆண்பிள்ளை.. அர்ச்சனாவைப் போல அவனால் அழுது விட முடியாது.. உதட்டைக் கடித்தபடி பேசாமல் நின்றான்..
"அருண்.. என் அப்பா சாகப் போகிற சமயத்திலே என்னைக் கூப்பிட்டாரு.. அவரோட செகண்ட் வொய்புக்கு பிறந்த பிள்ளைகளுக்கு உதவி செய்ன்னு கேட்டுக் கிட்டாரு.. நானும் அதைத்தான் செய்தேன்.. உங்கம்மாவுக்கு எடுத்துச் சொல்லு.. நான் உங்களுக்கு செய்தது உதவிதான்.. கடமையில்லை.."
அருண்குமார் மரம் போல நின்றான்.. இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்பதை விட உன் உதவியே எனக்கு வேண்டாம் என்று நிமிர்ந்து விலகிப் போய் விடலாம்தான்.. ஆனால் அருண் நரேந்திரனிடம் நன்றிக்கடன் பட்டு விட்டானே.. அவனையும்.. அர்ச்சனாவையும் படிக்க வைத்து.. அவர்கள் வசிக்க வீட்டை வாங்கிக் கொடுத்து.. அருணுக்கு உயர்ந்த வேலையையும் போட்டுக் கொடுத்த நரேந்திரன் பேசினால் அவன் கேட்டுக் கொண்டுதானே ஆக வேண்டும்..?
நரேந்திரன் கடுமையானவன்தான்.. அருணையும் அர்ச்சனாவையும் ஒரு அளவுக்கு மேல் உரிமை கொண்டாட விடாமல் தள்ளி நிறுத்தியிருந்தவன்தான்.. ஆனாலும் இந்த அளவுக்கு மனம் நோகும்படி அவன் பேசியதில்லை..
இன்று அப்படி அவன் பேசுகிறான் என்றால்.. அதற்குக் காரணம் அகல்யா அல்லவா..?
"என்னோட இண்டஸ்டரி அப்பாவோட சொத்தில்லை.. என்னைப் பெற்ற அம்மாவோட சொத்து.. என் தாய் வழிச் சொத்தை பங்கு போட்டுக்கிற உரிமை மாற்றாந்தாயின் பிள்ளைகளான உங்களுக்கு இல்லை அருண்.."
"அண்ணா.. அது எங்களுக்கும் தெரியுமே.. நாங்க உங்களிடம் சொத்தை எதிர்பார்த்ததே இல்லையே.."
அருண்குமார் தழுதழுக்க.. அர்ச்சனாவும் கூடச் சேர்ந்து தலையை ஆட்டினாள்..
'அடப்பாவிகளா..! இதுக ரெண்டும் என் வயித்திலே தான் பொறந்ததுகளா..?' அகல்யா மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு ஊடே புகுந்தாள்..
"நீ எதிர்பார்க்காம இருக்கலாம் அருண்.. அர்ச்சனாவும் உன்னைப் போலவே நினைக்கலாம்.. ஆனா ஊர் உலகம் என்ன சொல்லும் அருண்..? இவ்வளவு பெரிய கோடிஸ்வரன்.. தன்னோட தகப்பன் பெத்த பிள்ளைகளை.. உடன் பிறப்புகளை.. தள்ளி வைச்சுட்டான்னு தானே சொல்லும்..? அப்படி ஒரு பெயர் உன் அண்ணனுக்கு வந்து விடக் கூடாதுன்னு தானே நான் அடிச்சுக்கறேன்..? அம்மான்னு கூப்பிட்ட மகன் வீட்டை விட்டு வெளியே போனா இந்தப் பெரிய மனுசனுக்கு தாயை மதிக்கத் தெரியலைன்னு சொஸைட்டியில பேசிற மாட்டாங்களா அருண்..? என்னதான் நான் உன் அண்ணனை பத்து மாதம் வயிற்றிலே சுமநது பெறலைன்னாலும் உங்கப்பாவுக்கு நானும் பெண்டாட்டிதானேடா.. உன் அண்ணனோட அம்மாதானேடா.. இதை அழிக்க முடியுமா அருண்..? யார் குடும்பத்திலே பிரச்னை இல்லை..? இது நம்ம குடும்பம்டா அருண்.. உன் அண்ணன் இந்தக் குடும்பத்துக்கு தலைவன்.. குடும்பத்தலைவன் அவனோட பொறுப்புகளை உதறிட்டு வெளியே போகக் கூடாதுப்பா.. இதனாலதான் நான் உன் அண்ணனுக்கு புத்தி சொல்லி நம்ம வீட்டுக்குக் கூப்பிட்டு வந்துரலாம்ன்னு தேடிப் போனனேன்.."
நரேந்திரனின் கை முஷ்டி இறுகியதை கவலையுடன் பார்த்தான் அருண்குமார்.. இந்த அம்மா வாயைத் திறக்காமல் இருந்தால் தேவலாம்.. என்று அவனுக்குத் தோன்றியது..
"அம்மா.." எரிச்சலுடன் முகம் சுளித்தான்..
அகல்யாவா பேச்சை நிறுத்துவாள்..? அவள் மீண்டும், மீண்டும் நரேந்திரனைச் சுற்றித் தளைகளை வீசி அந்த வீட்டுக்குள் அவனை இழுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தாள்..
"சரிப்பா.. உன் அண்ணனுக்கு பெண்டாட்டியை மறக்க முடியலை.. இவன் தேடிப் போய் காலில் விழுந்தான்.. அவளும் போனால் போகுதுன்னு இவன்கூட குடும்பம் நடத்தக் கிளம்பி வந்துட்டா.. உன் அண்ணன் என்ன செய்திருக்கனும்..? நேரே நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வரவேண்டியதுதானே..? எதுக்காகப்பா.. ஒளிவு மறைவா சென்னையில குடித்தனம் வைக்கனும்..?"
ஆக்ரோசமான அகல்யாவின் கேள்வியில் நரேந்திரன் தன் முன்னாலிருந்த கண்ணாடி டீப்பாயை ஓங்கி ஒரு உதை உதைத்தான்.. அதுவே கண்ணாடி டீப்பாய்.. வேகமாக காற்றில் பறந்து சுவரில் மோதி கண்ணாடித் துகள்களாக சிதறி ஹாலின் தரை முழுவதும் பரவியது..
"ஐயோ.." அர்ச்சனா அலறினாள்..
துகள் துகளாக கிடந்த கண்ணாடித் துண்டுகளை விரக்தியுடன் பார்த்தான் அருண்குமார்..
'உடைந்த கண்ணாடி ஒட்டாது..'
அவன் மனம் சொல்லியது.. இனி ஒரு நாளும் நரேந்திரனின் தம்பி என்று அவன் உரிமை கொண்டாடி விட முடியாது.. நரேந்திரன் அதற்கு இடம் கொடுக்கவே மாட்டான்..
'மனிதர்களோட மதிப்புத் தெரியாத பிறவி..' வெறுப்புடன் அகல்யாவை பார்த்தான்..
அகல்யா அப்போதும் அஞ்சாமல்தான் நின்றிருந்தாள்..
"உள்ளதைச் சொன்னால் ஏன் அருண் உன் அண்ணன் கோபப் படுகிறான்..?" என்று கேட்டுக் கொண்டிருந்தாள்..
"அருண்.. சில மேட்டர்களை பேசி முடிக்கனும்னு நான் இங்கே வந்திருக்கேன்.. உன் அம்மா என்னை கொலைகாரனாக்கி விடுவாங்க போல இருக்கு.. பார்த்துப் பேசச் சொல்லு.." எச்சரித்தான் நரேந்திரன்..
"எதையும் முடிக்க முடியாதுப்பா.. இது பிறப்பிலே வந்த உறவுடா அருண்.. உன் அப்பாதான் உன் அண்ணனுக்கும் அப்பா.. இது முடிகிற உறவா..?" அகல்யா விட்டுக் கொடுக்காத விடாக்கண்டியாக இருந்தாள்..
"அப்பவே என் தாத்தா சொன்னார்.. இவங்களை வைக்க வேண்டிய இடத்திலே வை நரேந்திரான்னு.. அவர் சொன்னதை நான் கேட்கலை.. அதுதான் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்குது.." வெறுப்புடன சொன்னான் நரேந்திரன்..
அவன் சொன்ன விதத்தில் அருணுக்கும்.. அர்ச்சனாவுக்கும் உயிர் போவதைப் போல இருந்தது.. அகல்யாவுக்கு அப்படி எல்லாம் இல்லை..
"ஊரில இருக்கிறவங்க குடும்பத்தைப் பிரிக்கனும்னு ஆயிரம் சொல்வாங்க.. அதையெல்லாம் கேட்டா குடும்பம் ஒற்றுமையா இருக்க முடியாதுடா அருண்.." என்றாள் அவள்..
"ஊரில இருக்கிறவங்க..!"
நரேந்திரன் உரத்த குரலில் சிரித்தான்.. அவன் சிரிப்பில் அர்ச்சனாவின் இதயம் தடதடத்தது.. இந்த அம்மா எப்படி பயமற்றவளாக நிற்கிறாள் என்ற ஆச்சரியமெல்லாம் அவளுக்கு வரவில்லை.. வெறுப்புத்தான் வந்தது..
'இவங்களாலே எத்தனை பேச்சை கேட்க வேண்டியிருக்கு..'
"என் தாத்தா.. தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் கஜேந்திரன்.. பெங்களூரின் நம்பர் ஒன் பிஸினெஸ்மேன.. ஊரில இருக்கிறவர் ..அவர் பெற்ற மகளோட ஹஸ்பெண்டுக்கு செகண்ட் வொய்பா வந்துட்டு.. அவரோட சொத்து மேலேயே ஆசைப்படற உங்கம்மா அவரோட பேரனுடைய குடும்பம்..! குட் ஜோக்.. எப்படிடா உங்க அம்மாவாலே இப்படிப் பேச முடியுது..? எழும்பில்லாத நாக்குன்னா எப்படி வேண்டும்னாலும் பேசுமா..?"
அருண்குமாருக்கு அவமானமாக இருந்தது.. உரிமையில்லாத சொத்தை அவன் கேட்டானா..? அகல்யா எதற்காக அடுத்தவரின் சொத்துக்கு ஆளாய் பறக்கிறாள்..?
"உனக்கும்.. எனக்கும் ஒரே அப்பாதான் அருண்.. ஒரே அம்மா இல்லை.. உன் அம்மா வேறு.. என் அம்மா வேறு.. நாம மூன்று பேரும் அப்பாவோட சொத்துக்கு வாரிசா உரிமை கொண்டாட முடியும்..? என் அம்மாவோட சொத்துக்கு நான் மட்டும்தான் வாரிசா உரிமை கொண்டாட முடியும்.. நம்ம அப்பாகிட்ட என்ன இருந்தது..? கடன்தான் இருந்தது.. அதுவும் லட்சக்கணக்கான ரூபாயில்ல.. கோடிக்கணக்கில் கடன் வாங்கிட்டு ஹாயாய் செத்துப் போனார்.. அவருக்கு பிள்ளையாய் பிறந்து தொலைச்சுட்டேன்னு அதையெல்லாம் அடைச்சேன்.. வேணும்னா சொல்லு.. அந்தக் கடனில உனக்கும் அர்ச்சனாவுக்கும் பங்கு தர்றேன்.. உங்களாலே கட்ட முடிஞ்சா கட்டுங்க.."
நரேந்திரன் பேசுவதை வீட்டில் வேலை செய்யும் வேலையாள்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைவில் முகம் சிவந்தாள் அர்ச்சனா.. அருண்குமாருக்கோ உயிரே போவதைப் போல இருந்தது.. அகல்யாவுக்குத்தான் அப்படி எதுவும் இருக்காதே..
அவள்..
"நல்லாயிருக்கு அருண் உங்க அண்ணன் சொல்கிற நியாயம்.. இதை வெளியில சொன்னா உங்க அண்ணனுக்குத்தான் மரியாதை குறைவு.." என்று நொடித்தாள்..
"மிரட்டிப் பார்க்கறிங்களாடா..?" கண்கள் இடுங்க ஒரு தினுசான குரலில் வினவினான் நரேந்திரன்..
"இல்லேண்ணா.." அருண்குமார் தடுமாறினான்..
"வெளியில போய் சொல்லிப் பாருங்கடா.. உங்க மரியாதைதான் குறையும்.. எதையும் வெளிவிடாம நீங்க வாழ வழிசெய்தேன் பாரு.. அதுக்காகத்தான் என் குடும்பத்தை சிதறடிச்சீங்களா..?"
"அண்ணா.."
"பேசாதே அருண்.. இனி எனக்கும்.. உங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.. என் பெயரை.. நீங்களும் உங்க அம்மாவும் யூஸ் பண்ணக் கூடாது.. எனக்குச் சொந்தம்ன்னு சொல்லிக்கக் கூடாது.."
"அதெப்படி சொல்லாம இருக்க முடியும்..?" அகல்யா நிஷ்டுரமாக கேட்டாள்..
"உன் அண்ணன் நினைக்கிறதைப் போல இது லேசில் அறுத்துப் போடற உறவு இல்லை அருண்... இது பாசச் சங்கிலி.. உன் அண்ணனோட அப்பாவுக்கு நான் பெண்டாட்டி.. நீங்க அவரோட பிள்ளைகள்.. இதையெல்லாம் இல்லைன்னு உங்க அண்ணனாலே சொல்ல முடியுமா..?"
"முடியும்.."
அகல்யா விட்ட சவாலுக்குப் பதில் சொன்னான் நரேந்திரன்.. அவன் பேசட்டும் என்று விட்டு விட்டான் அருண்குமார்.. எந்த அளவுக்கு நரேந்திரன் போவான் என்பதை அறிந்தால்தான் அகல்யா அடங்கியிருப்பாள்.. இல்லையென்றால் அவளை அடக்க அருண்குமாராலும் முடியாது.. அர்ச்சனாவாலும் முடியாது..
"கேட்டுக்க அருண்.. நான் மீடியாவில இண்டர்வியூவே கொடுப்பேன்.. கஜேந்திரனின் மகள் வழிப் பேரனான எனக்கும்.. என் அப்பாவான செழியனின் இன்னொரு குடும்பத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை அறிவித்து விடுவேன்.. சட்டப்படி என் அம்மாவின் சொத்துக்கு நான் மட்டும் தான் வாரிசாக இருக்க முடியும்ங்கிறதை வக்கீல் மூலமா நோட்டிஸ் விட்டிருவேன்.. பட் அருண்.. அதுக்குப் பின்னாலே நீயும், உன் தங்கையும் உங்க அம்மாவுடன் இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டியிருக்கும்.. ஆல்ரெடி உன்னை வேலையிலிருந்து தூக்கிட்டேன்.. இப்படிப்பட்ட ஆக்சன்களை நான் எடுத்துட்டேன்னா நீ எங்கேயும் வேலைக்குப் போக முடியாது.."
'என்னது..?'
அகல்யாவுக்கு மூச்சை அடைத்தது.. முதன் முதலாக அவள் திகிலடைந்தாள்.. அருண்குமாரை வேலையை விட்டே நரேந்திரன் தூக்கி விட்டான் என்றால் அவன் எதையும் செய்யத் தயங்க மாட்டான் என்பதில் அகல்யா நடுங்கத் தொடங்கினாள்..
'இந்த வீட்டை விட்டு வெளியில் போகிறதா..?'
அருண்குமாருக்கும் வேலை இல்லை.. நரேந்திரனும் விலகி விட்டான்.. வீட்டை விட்டும் வெளியேற வேண்டும் என்றால் அகல்யா வயதுப் பெண்ணை வைத்துக் கொண்டு எங்கு நிற்பாள்..?
'பிளாட் பாராத்திலா..?'
நினைக்கும் போதே அவளின் நெஞ்சம் பதறியது..
அப்படிப்பட்ட பதட்டங்கள் எதுவும் இல்லாமல்.. நரேந்திரன் கொடுக்கும் தண்டனைகளை வாங்கிக் கொள்ளச் சித்தமானவர்களாய் அருண்குமாரும்.. அர்ச்சனாவும் நின்றிருந்தார்கள்..
"நீங்க என்ன செய்தாலும் சரி அண்ணா.."
அருணின் பணிவில் நரேந்திரன் கொஞ்சம் மலையிறங்கினான்.. அவனது முகபாவனையில் அதை யூகித்து விட்ட அகல்யா..
"நீ ராமருக்கேத்த லட்சுமணன் அருண்.." என்று திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்கப் போனாள்..
"ஏண்டா.. உன் அம்மா அடங்கவே மாட்டாங்களா..?"
நரேந்திரன் திரும்பவும் மலையேற.. அகல்யா சப்த நாடியும் ஒடுங்கிப் போய் வாய் மேல் விரலை வைக்காத குறையாக நின்றாள்..
"அருண்.. சட்டம் வேறு.. மனசு வேறு.. என் சொத்தில சட்டப்படி உனக்கும்.. அர்ச்சனாவுக்கும் உரிமையில்லை.. பட் என் மனசு..? அது உன்னையும்.. அர்ச்சனாவையும் அனாதையா விடக் கூடாதுன்னு சொல்லுது.."
நரேந்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அர்ச்சனா அழுக ஆரம்பித்து விட்டாள்.. அருண்குமாரின் கண்களும் பனித்தன.. நரேந்திரன் கை நீட்ட..
"அண்ணா.." என்று அவன் தோள் சாய்ந்தாள் அர்ச்சனா..
"என்ன புள்ள இது..? வெடிகுண்டு புஸ்வாணமா போச்சு.." ரமேஷ் வனிதாவிடம் கிசுகிசுத்தான்..
"அப்படியில்லைன்னு எனக்குத் தோணுதுய்யா.." என்றாள் வனிதா..
அவளது கணிப்புத்தான் சரியாக இருந்தது.. அதுதான் சாக்கென்று வாயிலிருந்த ஒற்றை விரலை எடுத்து விட்ட அகல்யா..
"என் கண்ணே பட்டிரும் போல இருக்கு.. யார் கண்ணு பட்டுச்சோ என் பிள்ளைகள் மூணுபேரும் ஆளுக்கொரு திசையில பிரியத் தெரிஞ்சாங்களே.. எப்படியோ.. எல்லாம் சரியாகி இப்பக் குடும்பம் ஒன்னாகிருச்சு.. அர்ச்சனா.. அண்ணனை மாடிக்குக் கூப்பிட்டுக்கிட்டு போம்மா.. அவன் ரூமில ரெஸ்ட் எடுக்கட்டும்.. பாவம் புள்ளை.. கேட்பார் பேச்சைக் கேட்டு குழம்பிப் போய் வந்திருக்கு.." என்று வசனம் பேசி சேலை முந்தானையில் கண்களைத் துடைத்துக் கொண்டாள்..
நரேந்திரன் அவளை உதாசீனமாய் பார்த்தபடி அருண்குமாரிடம் மூன்று பத்திரங்களை நீட்டினான்.. அருண் தயக்கத்துடன் வாங்கிக்கொண்டான்..
"அருண் இந்த வீட்டையும்.. நான் புதிதா ஆரம்பித்திருக்கிற சின்னக் கம்பெனியையும் உன் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறேன்.. இது அர்ச்சனாவுக்கு கல்யாணப் பரிசா சென்னையில அவள் பெயருக்கு வாங்கியிருக்கிற வீட்டோட பத்திரம்.. உங்க இரண்டு பேருக்கும் நான் செய்ய வேண்டியதை செய்துட்டேன்.. பிழைத்துக் கொள்வது உங்களின் சாமர்த்தியம்.. இனி எதற்காகவும் என்னைத் தேடி நீங்க யாரும் வரக்கூடாது.. உங்களுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.. நீங்க யாரோ.. நான் யாரோ.."
நரேந்திரன் திரும்பி நடந்து விட்டான்.. அருண்குமார் அகல்யாவை வெறுப்புடன் பார்த்துவிட்டு மாடிக்குப் போய் விட்டான்.. அர்ச்சனா தனிமையில் கண்ணீர்விட தோட்டத்துக்குப் போய்விட்டாள்..
அகல்யா இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -87
அழகான ராட்சசியே -87
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-87.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-87.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy