அழகான ராட்சசியே -86

86 முள்ளென்று தெரிந்திருந்தும்.. கை நீட்டத் தயங்காத.. அழகான ராட்சசி நீ.... பிற்பகலைத் தாண்டிய வேளையில் அகல்யா அறையை விட்டு வெளி...


86
முள்ளென்று தெரிந்திருந்தும்..
கை நீட்டத் தயங்காத..
அழகான ராட்சசி நீ....

பிற்பகலைத் தாண்டிய வேளையில் அகல்யா அறையை விட்டு வெளியே வந்தாள்.. மாலைவெயில் அடிக்கத் தொடங்கியிருந்தது.. ஹாலில் உட்கார்ந்தவளுக்கு வனிதா காபி கொண்டு வந்து கொடுத்தாள்.. அதை வாங்கி உறிஞ்சியபடி நரேந்திரனை அந்த வீட்டுக்குள் இழுக்க என்ன வழி என்று ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தாள் அகல்யா..
அவளும் நான்கு தினங்களாக அதே யோசனையில் தான் இருந்தாள்.. சதியாலோசனையில் பங்கு பெற ரம்யாவும் அங்கு இல்லை என்பதில் தனிமையாக உணர்ந்தாள்.. ஊர்மிளாவுடன் சண்டை போட சென்னைக்குக் கிளம்பிப் போனவள் ரம்யாவை அங்கேயே விட்டு விட்டுவந்து... பெங்களூருக்கு வந்திருந்த ராம்குமாருடனும் சண்டை போட்டு அனுப்பி வைக்க நேர்ந்ததில் மனதளவில் அரண்டுதான் போயிருந்தாள்.. அடுத்த நாள் என்ன வருமோ என்று பயந்து.. பயந்து கண் விழித்ததில் நான்கு தினங்கள் ஓடியே போய் விட்டன..
எதுவும் நடக்கவில்லை.. எப்போதும் போல்தான் நிலைமை இருக்கிறது என்ற திட சித்தம் மனதில் திரும்பியதில் அகல்யா பழைய அகல்யாவாகி.. சதித்திட்டம் தீட்ட ஆரம்பித்து விட்டாள்..
அவளைக் கடந்து ஒரு நிழல் சென்றது.. நிமிர்ந்து பார்த்தாள்... அர்ச்சனாதான் கருப்பு வெள்ளை திரைப்படத்தில் சோகப் பாடலைப் பாடியபடி வரும் கதாநாயகியைப் போல வெறுமையாக பார்த்தபடி போய் கொண்டிருந்தாள்..
'இவ ஏன் இப்படி இருக்கா..?'
அகல்யாவுக்குப் புரியவில்லை.. அவள் மகளை அழைத்தாள்..
"அர்ச்சனா.. ஏய் அர்ச்சனா.."
ஊஹீம்.. அகல்யாவின் குரல் அர்ச்சனாவின் காதுகளில் விழுகவே இல்லை.. அவள் யாருக்கு வந்த விருந்தோ என்பதைப் போல தோட்டத்தைப் பார்த்துப் போய் கொண்டிருந்தாள்.. தடுத்து நிறுத்தி அழைத்தால்.. அர்ச்சனாவா..? யார் அது..? என்று கேட்டு விடுபவளைப் போலப் போனவளைப் பார்த்து அகல்யா திகைத்தாள்..
"இவ ஏன் இப்படிப் போறா..? ஏதும் காத்து.. கருப்பு அடிச்சிருச்சா..?"
தனக்குத்தானே கேட்டுக் கொண்ட அகல்யாவின் கேள்விக்கு.. சமையலறையில் தண்ணீர் குடிக்கப் போன மாதுரி வாய் பொத்திச் சிரித்தாள்.. வனிதா அதை ஏனென்று கேட்கவில்லை...
இப்போதெல்லாம் அவள் மாதுரியுடன் எந்த பேச்சு வார்த்தையையும் வைத்துக் கொள்ளவதில்லை.. மாதுரியின் தலையைக் கண்டவுடன் மறக்காமல் அவள் கண்களில் படும்படி.. கரண்டியின் கைபிடி பகுதியை அடுப்பின் ஜ்வாலையில் வைத்து விடுவாள்.. அதைக் கண்டவுடன் மாதுரியின் வாயில் வரும் 'அக்கா' என்ற மழலை அழைப்பு மாறி 'வனிதா' என்ற இயல்பான பேச்சு வழக்கு வந்து விடும்..
சூடுபட்ட பூனை பாலைக் கண்டால் ஓடிவிடும்.. சூடுபட்ட மாதுரியும் கரண்டியைக் கண்டால் வாயை அடக்கி விடுவாள்..
அன்றும் கரண்டிக் காம்பு அடுப்பின் ஜ்வாலையில் படுத்து விட அதை ஓரக் கண்ணால் பார்த்தபடி வெகு சமர்த்தாக..
"வனிதா.." என்று அழைத்தாள்..
'ஊம்..' என்று கூடச் சொல்லாமல் வனிதா கத்தியை கையில் எடுத்தாள்.. மாதுரி ஓடிப் போக தோதாக வாசல் கதவின் பக்கமாக நின்று கொண்டு..
"இந்தம்மாவே பெரிய காத்து, கருப்பு, இவங்க இருக்கிற இடத்தில புதுசா காத்தும், கருப்பும் வந்திருமா..?" என்று கேட்டாள்..
அவள் சரியாகத்தான் சொல்கிறாள் என்பதில் வனிதாவுக்கு சிரிப்பு வந்தது.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டாள்.. அசட்டையாக முகத்தை வைத்தபடி..
"இதை ஏன் என்கிட்டச் சொல்கிற..? போய் அவங்க கிட்டேயே சொல்லு.." என்றபடி அடுப்பில் குக்கரை வைத்தாள்..
"எவங்ககிட்டச் சொல்லச் சொல்ற..?" மாதுரி விழித்தாள்..
"அம்மாகிட்டத்தான்.." அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள் வனிதா..
"என்னது..?" மாதுரிக்கு வாயடைத்து விட்டது.
"ஆமாண்டி.. எதைச் சொன்னாலும் நேரடியாச் சொல்லிப் பழகு.. என்னைப் பத்திப் பேசனும்னா என்கிட்டப்  பேசு.. அவங்களைப் பத்திப் பேசனும்னா அவங்க கிட்டப் போய் பேசு.. அதை விட்டுட்டு புறணி பேசி என் வேலையை கெடுக்காதே.."
வனிதா விட்டி விட.. மாதுரி வாய் பேச முடியாத சோகத்துடன் டைனிங் ஹாலைத் துடைக்கப் போனாள்.. அங்கிருந்துதானே டி.வியில் வரும் சீரியல்களை தெளிவாக பார்க்க முடியும்..?
வனிதாவுக்கு எரிச்சலாக இருந்தது.. அவள் வாய்க்குள் மாதுரியைக் குறித்த வசவு வார்த்தைகளை முணுமுணுத்தபடி ஜன்னல் பக்கமாக எட்டிப் பார்த்தாள். போர்டிகோ தெரிந்தது.. புதிதா வந்து நின்ற காரைக் கண்டவள்.. வருவது யார் என்று கவனித்தாள்.. கார் கதவைத் திறந்து கொண்டு நரேந்திரன் இறங்கினான்..
'ஐயா வர்றாரா..?'
வனிதா அவசரமாக அடுப்பை அளைத்து விட்டு சமையலறையில் மறைவாக நின்று கொண்டாள்.. அங்கிருந்து பார்த்தால் ஹால் தெரிந்தது, அவளது பின்னங்கழுத்தில் சூடான மூச்சுக்காற்றுப் பட்டது..
'யாருடா.. இது..'
திரும்பிப் பார்த்தவள் அப்படியே நின்று விட்டாள்.. அவள் மேல் சாய்ந்த நிலையில் நெருக்கமாக ரமேஷ் நின்று கொண்டிருந்தான்.. வாயில் ஒற்றை விரலை வைத்துப் பேசாமல் இருக்கும்படி அவன் சைகை செய்ததில் அவனுக்கும் நடக்கப் போகும் நடப்பைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்காதா என்று வனிதா பேசாமல் இருந்து விட்டாள்.. வெகு அருகாமையில் அவள் மீது உராய்ந்தபடி நின்றிருந்த ரமேஷின் அண்மையில் அவளது கன்னிமனம் பற்றிக் கொண்டு குளிர் காய ஆரம்பித்தது..
டக்.. டக் கென்ற காலடியோசையுடன் நரேந்திரன் வேகமாக உள்ளே வந்தான்.. காபி தம்பளருடன் ஆழ்ந்த சிந்தனையிலிருந்த அகல்யா எதிரே வந்து நின்ற நரேந்திரனைக் கண்டதும் தான் காண்பது கனவா.. இல்லை நனவா என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள்..
"அண்ணா.."
அதற்குள் தோட்டத்திலிருந்த அர்ச்சனா ஓடி வந்து விட்டதில் அகல்யாவின் சந்தேகம் நிவர்த்தியாகி விட்டது.. தான் காண்பது கனவில்லை.. நனவுதான் என்று உறுதியாகி விட்டதில்..
"நரேன்.. வாப்பா.. இப்பத்தான் இந்த அம்மாவோட நினைப்பு உனக்கு வந்ததா..?" என்று நீலிக்கண்ணீர் விட ஆரம்பித்தாள்..
"போதும்.." நரேந்திரன் அர்ச்சனாவை பார்த்து உறுமினான்..
"அண்ணா.. நானென்ன செய்தேன்..?"
திகைத்து விழித்த அர்ச்சனாவின் மருண்ட பார்வையில் மனம் இளகிய போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடுமையாகவே பேசினான் நரேந்திரன்..
"லுக் அர்ச்சனா.. உங்க அம்மாவை என்னுடன் பேச வேண்டாம்ன்னு சொல்லு.. ஐ ஹேட் ஹெர்.."
"உங்க அம்மாவா..? நரேன்.. நான் உனக்கும் அம்மாதானேப்பா..? எப்படிப்பா இப்படியொரு கொடிய வார்த்தையை உன் வாயாலே சொல்கிற..? இதைக் கேட்கத்தான் நான் உயிரோடு இருக்கிறேனா..? உங்க அப்பா போன போதே நானும் போயிருக்கக் கூடாதா..?" அகல்யா புலம்பினாள்..
"அனுப்பி வைத்ததே உங்கம்மாதானே.." நரேந்திரன் அர்ச்சனாவிடம் கேட்டான்..
"நரேன்.."
"என் பெயரைச் சொல்லக் கூடாதுன்னு சொல்லு அர்ச்சனா.. என் பெயரைச் சொல்கிற உரிமை இவங்களுக்கு இல்லை.. நரேனாம் நரேன்.. இவங்க என்ன எனக்குப்
பெயர் வைத்தாங்களா..? போனால் போகுதுன்னு பார்த்தா.. ரொம்பவும்தான் ஆடிப் பார்க்கிறாங்க..? யார்கிட்ட..? நான் நரேந்திரன்.. தொலைத்துக் கட்டி விடுவேன்.. ஜாக்கிரதை.."
அகல்யா அரண்டு போய் தற்காலிகமாக வாயை மூடிக் கொண்டாள்.. அண்ணன் அந்த அளவுக்கு கோபப் படுகிறார் என்றால் எதுவோ நடந்திருக்க வேண்டும் என்ற யூதத்தில் அர்ச்சனா தாயை வெறுப்பாக பார்த்தாள்..
"எங்கே அருண்..?" நரேந்திரன் போட்ட சப்தத்தில்..
"அண்ணா.." என்று மாடிப்படிகளில் இறங்கி ஓடி வந்தான் அருண்குமார்..
நரேந்திரன் அருண்குமாரை முறைத்த முறைப்பில் அனல் பறந்தது.. அண்ணனின் கோபத்திற்கு ஆளாகும்படி என்ன தவறு செய்தோம் என்று புரியாதவனாக அருண்குமார் கைகளைப் பிசைந்தான்..
"மேரேஜ் பண்ணி வைத்தா ஒரு குழந்தைக்கு அப்பாவாகிற அளவுக்கு வயசாகிருச்சுல்ல.. இன்னும் உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்காமலே இருப்பியா..?" கடினமான குரலில் கேட்டான் நரேந்திரன்...
"அண்ணா..?" அருண்குமாரின் கண்கள் கலங்கிச் சிவந்து விட்டன..
"இது உன் குடும்பம் அருண்.. என் குடும்பமில்லை. ஐ ஆம் ஸாரி டு ஸே திஸ்.. இந்த வார்த்தைகளை உன்னையும்.. அர்ச்சனாவையும் பார்த்துச் சொல்லியிருக்க எனக்கு வெகு நேரமாகியிருக்காது.. இருந்தும் நான் பொறுமையாய் போனேன்.. எதற்காக..? உங்க ரெண்டு பேரோட மனசும் காயப்பட்டு விடக்கூடாது என்பதற்காக.. அதை ஒரு அட்வான்ட்டேஜா நீங்க எடுத்துக்குவீங்களா..?"
சம்மட்டி அடியைப் போலத் தாக்கிய நரேந்திரனின் வார்த்தைகளில் அருண்குமாரும்.. அர்ச்சனாவும் துடித்துக் கொண்டிருக்க.. எதற்கும் அயராத அகல்யா இடையில் புகுந்து பேசினாள்..
"நீ நினைச்சுப் பார்ப்பேன்னு தெரியும்ப்பா.. உன் தம்பி மனசும் உன் தங்கை மனசும் பூப்போலன்னு உனக்குத் தெரியாம வேற யாருக்குப்பா தெரியும்..? மூத்தவன் நீ.. இதுக ரெண்டையும் வளர்த்தவனும் நீதான்.. ஒரு கோட்டைக் கிழிச்சுத் தாண்டாதேன்னு சொன்னா இதுக ரெண்டும் தாண்டிருமா..? நீ கோடு கிழிப்பா.. அண்ணனுக்குக் கட்டுப்பட்ட பிள்ளைகள்ப்பா உன் தம்பியும்.. தங்கையும்.. நீ பார்த்து எதைச் செய்தாலும் அவங்க ஏற்றுக்குவாங்கப்பா.. உன் வளர்ப்பு அப்படி.. இதுகளுக்கு நீதானேப்பா தாயும், தகப்பனும்..?"
உணர்ச்சிப்பிழம்பான அகல்யாவின் பேச்சை..
"என்ன அலுவலுக்கு..?" என்ற ஒற்றைக் கேள்வியை அருண் குமாரிடம் கேட்டு தடைசெய்தான் நரேந்திரன்..
இது உன் குடும்பம் என்று அருண்குமாரைப் பார்த்து நரேந்திரன் சொல்லி விட்ட மறுகணமே அதை உடைக்கும் விதத்தில் அனைத்தும் நீ என்று நரேந்திரனின் காலடியில் அகல்யாவின் குடும்பத்தை இழுத்து நிறுத்திய அகல்யாவின் சாமர்த்தியத்தில் அவனுக்குள் கொலை வெறிதான் மூண்டது..
அகல்யாவின் பேச்சு எதிர்மறையான விளைவு களைத் தான் ஏற்படுத்தியது.. அர்ச்சனாவையும்.. அருண் குமாரையும் தள்ளி நிறுத்த நேர்ந்து விட்டதில்.. மனதுக்குள் சங்கடம் கொண்டிருந்தான் நரேந்திரன்.. அவர்களை முன்னிறுத்தி கேடயமாக அவர்களைப் பயன் படுத்திக் கொண்டு அகல்யா ஆட்டம் போடுகிறாள் என்பதால் அவர்களை தள்ளி நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அவன் ஆளாகியிருந்தான்.. அந்த சங்கடத்தை அறவே துடைத்து விட்டது அகல்யாவின் சாகசப் பேச்சு..
'ஊஹீம்.. இவர்களுடைய உறவே இருக்கக் கூடாது..'
நரேந்திரன் தீர்மானித்து விட்டான்.. அதுவரை அருணிடமும், அர்ச்சனாவிடமும் லேசான இளக்கத்துடன் பேசியவனின் குரலில் ஒட்டாத தன்மையும்.. கடுமையும் வந்து ஒட்டிக் கொண்டன..
"அருண்..! உன்னையோ.. அர்ச்சனாவையோ நான் தத்து எடுத்துக் கொள்ளவில்லை.. அப்புறம் எப்படி உனக்கும், உன் தங்கைக்கும் நான் தாயும், தந்தையுமாக ஆவேன்..?"
நரேந்திரன் கேட்ட கேள்வியில் அருண்குமாருக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போல இருந்தது.. அவன் அகல்யாவை வெட்டி விடுவதைப் போல முறைத்து பார்த்தான்..
"நான் உங்களை வளர்த்தேனா..? இது என்னடா புதுக்கதையாய் இருக்கு..? உங்களை பிறந்ததில் இருந்து நான் பார்த்ததே இல்லையேடா.. என் அப்பா.. ரீமேரேஜ் பண்ணிக்கிட்டார்.. உங்கம்மா அவருக்கு செகண்ட் வொய்பா வந்தாங்க.. நீங்க அவருக்குப் பிறந்தீங்க.. இதனாலே உங்களை நான் சுமக்கனும்னு எனக்கென்னடா தலையெழுத்து..?"
"அண்ணா.." அருண்குமார் துடித்துப்போய் விட்டான்..
"பேசக் கூடாதுன்னுதான் நானும் பார்த்தேண்டா.. உங்கம்மா என்னைப் பேச வைக்கிறாங்க.. எதுக்காகடா உங்கம்மா சென்னைக்கு வந்தாங்க..?"
"ரம்யாவை அவளோட வீட்டில் விட்டுவிட்டு வரன்னு எங்ககிட்டச் சொன்னாங்கண்ணா.."
"அது உண்மையாங்கிறதை நீ வெரிஃபை பண்ணினயா..?"
"இல்லேண்ணா.."
"வெட்கமாயில்லை..? இவங்க குணம் தெரிஞ்சிருந்தும் நீ ஃபாலோ பண்ணாம எனக்கென்னன்னு இருந்திருக்க.."
"என்னண்ணா ஆச்சு..?"
"இவங்க சென்னையில இருக்கிற என் வீட்டுக்கு நான் இல்லாத சமயத்திலே வந்து ஊர்மிளாகிட்ட வம்பு வளர்த்திருக்காங்க.."
நரேந்திரன் சொன்ன செய்தியில் அகல்யாவைத் தவிர மற்றவர்கள் ஆனந்த வியப்பை அடைந்தார்கள்..
"அண்ணியா..? உங்ககூட சென்னையில் இருந்தாங்களா..?"
அருண்குமாரால் கேட்க முடியாத கேள்வியை குதூகலத்துடன் விழி விரிய அர்ச்சனா கேட்டாள்..
குட்டு வெளிப்பட்டு விட்ட ஆத்திரத்துடன் அகல்யா அதற்குப் பதில் சொன்னாள்..
"இப்ப நீ கேட்கற பாரு.. இதைப் போலதான் நானும் கேட்டேன்.. என்னம்மா.. நாலு வருசமா எங்கேயிருக்கிறன்னுகூடத் தெரியாம மறைஞ்சு போனவ.. திருமபி வந்து புருசன் கூட வாழறதில எனக்குச் சந்தோசம் தான்.. அதை எதுக்காக ஒளிஞ்சு மறைஞ்சு வாழனும்..? வாழனும்னு நினைக்கிறவ தைரியமா பெங்களூர் வீட்டுக்கே வந்து வாழ ஆரம்பிச்சிருக்கலாமேன்னு கேட்டேன்ம்மா.. இது ஒரு குற்றமா..? மகராசி புருசன்கிட்டப் போட்டுக் கொடுத்து அனுப்பி வைச்சிருக்கா.."
"அர்ச்சனா.."
நரேந்திரன் போட்ட சத்தத்தில் அர்ச்சனா பயந்து போய் அகல்யாவின் வாயைப் பொத்தினாள்..
"கேட்டுக்கிட்டியாடா..?" அருண்குமாரிடம் விழி சிவக்கக் கேட்டான் நரேந்திரன்..
"அண்ணா.."
"உங்களைப் பாவம் பார்த்த கொடுமைக்கு உங்க அம்மா என் வொய்பைப் பார்த்து என்ன கேள்வியைக் கேட்டிருக்காங்க தெரியுமா..? அவ திருட்டுத்தனமா என்னுடன் குடும்பம் நடத்தறாளாம்.. எப்படி..? செகண்ட் வொய்பா வந்தவங்களோட மெண்டாலிட்டியும் அதே ரேன்ஜிலதான் இருக்கும்ங்கிறதை இவங்க புரூவ் பண்ணிட்டாங்களா இல்லையா..?"
அருண்குமார் துக்கத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.. அனைத்தும் முடிந்து விட்டது என்பது அவனுக்குப் புரிந்து விட்டது..
இனி நரேந்திரன் அவர்களை மன்னிக்கப் போவதில்லை.. அவனுடைய நிழலில் வாழ அவர்களை அனுமதிக்கப் போவதில்லை..
'என்ன காரியம் செய்து விட்டிங்கம்மா..' அவன் மனம்  புலம்பியது..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -86
அழகான ராட்சசியே -86
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-86.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-86.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy