அழகான ராட்சசியே -85

85 என்னிடத்தில் தவறு கண்டு.. தண்டனையை உனக்களிக்கும்.. அழகான ராட்சசி நீ.... அகல்யாவுக்கு அந்தக் காட்சியைக் காணப் பிடிக்கவில்லை...


85
என்னிடத்தில் தவறு கண்டு..
தண்டனையை உனக்களிக்கும்..
அழகான ராட்சசி நீ....


அகல்யாவுக்கு அந்தக் காட்சியைக் காணப் பிடிக்கவில்லை.. அவளுடைய மகள் அர்ச்சனா ராம்குமாருடன் நின்று பேசிக் கொண்டிருப்பதா..?
"என்ன ராம்..? இன்னுமா நீ போகலை..? வேலையிருக்குன்னு சொன்னியேப்பா.. அர்ச்சனா என்ன இது..? ஊருக்குப் போய்க்கிட்டிருக்கிற பிள்ளையிடம் பேச்சை வளர்த்து நிறுத்தி வைச்சிருக்க.. ரம்யாவைப் பற்றி விசாரிக்கிறதா இருந்தா அவளிடம் போன் போட்டுப் பேசு.. ராமிடம் உனக்கென்ன பேச்சு..?"
அகல்யாவின் படபடப்பில் ராம்குமாரின் கோபம் அதிகரித்தது.. அர்ச்சனாவை அவள் அதட்ட.. அர்ச்சனாவோ உன்னால்தானே எனக்கு இந்த நிலைமை என்று அசையாமல் நட்டு வைத்த நெடுமரம்போல அங்கேயே நின்றாள்..
"உள்ளே போ அர்ச்சனா.." அகல்யா கண்டிப்புடன் சொன்னாள்..
"ஏன்..?" என்று கேட்டான் ராம்குமார்..
'ஆஹா..' என்று மகிழ்ந்து போய் விட்டாள் அர்ச்சனா..
அவளுடைய காதலனா இது போன்ற வீர வசனத்தை பேசுகிறான்..?
அந்த வீரவசனம் இரண்டே எழுத்துக்களைக் கொண்ட 'ஏன்..' என்ற கேள்வி என்பதில் அவளொன்றும் அலட்டிக் கொள்ளவில்லை..
'என் அம்மாவைப் பார்த்து ஏன் என்ற கேள்வியை கேட்டுட்டாரே..'
இதுதான் அவளுக்கு உவப்பாக இருந்தது.. என்னவோ அவளுடைய காதலன்..
'ஏன் என்ற கேள்வி - இங்கு..
             கேட்காமல் வாழ்க்கை இல்லை..'
என்று பாடி விட்டதைப் போல புல்லரித்துப் போய் அவன் முகத்தை பருகு.. பருகு.. என்று பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
அந்தப் பார்வையில் அகல்யா கொதிகலன் ஆனாள்..
"உன்னை உள்ளே போன்னு சொன்னேன் அர்ச்சனா.. அதைக் காதிலே வாங்கிக்காம அங்கேயென்ன பார்வை வேண்டிக்கிடக்கு...?"
"அட..! அவ மாமா மகனைத்தானே பார்க்கிறா அத்தை..? அதில உங்களுக்கு எதுக்கு இத்தனை கடுப்பு..? நீ பாரு அர்ச்சனா.."
ராம்குமார் அர்ச்சனாவை தூண்டி விட்டான்.. அவனுடைய அந்த தைரியத்தில் புளகாங்கிதம் கொண்டாள் அர்ச்சனா.. அவன் குதிரையை கொண்டு வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது..
அகல்யாவின் கண் முன்னால் குதிரையிலிருந்து அவன் குனிந்து அவள் இடுப்பைப் பற்றித் தூக்கி அவனுடன் உட்கார வைத்து.. குதிரையை விரட்டிப் பறந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..?
"தூள்.." கற்பனையின் பரவசத்தோடு அவள் சொன்னாள்..
"தூளா..? என்னடி.. நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்.. உன் போக்கு சரியில்லாம இருக்கே.. இவன் பேசுகிறதுக்கு துள்ன்னு சொல்கிறயே.. என்ன..?" அகல்யா அதட்டினாள்..
ராம்குமாரை 'அவன்.. இவன்..' என்று அவள் சொன்னதில்லை.. தனியாக இருக்கும் போது அப்படித்தான் சொல்லுவாள் என்றாலும் நேரடியாக அப்படிப் பேசிய தில்லை.. அன்று அவள் அப்படிப் பேசி விட்டதில் ராம்குமாரின் முகம் கடுத்தது..
"மரியாதை.." அகல்யாவை அதட்டினான்..
"மரியாதையாய் பேசனும் அத்தை... நீங்க கொடுக்கிறதுதான் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.." என்று சீறினான்..
அகல்யா நிதானித்தாள்.. அப்போதுதான் ஊர்மிளா விடம் வாங்கிக் காட்டிக் கொண்டு வந்தவளுக்கு ராம்குமாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளத் தெம்பு இல்லை..
'இவன்கூட எதுக்கு வம்பு..? இவன் தான் நியாய.. அநியாயம்ன்னு கவைக்கு உதவாத கொள்கைளை கட்டிப் பிடிச்சுக்கிட்டு இருக்கிறவனாச்சே.. உன் தகுதி இவ்வளவு தராதரம் இவ்வளவு.. உன் இருப்புக்கு அர்ச்சனா இருக்கிற உயரம் உனக்கு எட்டாக்கனின்னு எடுத்துச் சொன்னா ஓடிற மாட்டானா..?' கணப்பொழுதில் முடிவுக்கு வந்தாள்..
"ஏதோ அவசரத்தில வாய் தவறி வந்துருச்சுப்பா.. இல்லேன்னா அத்தை உன்னைப் போய் அப்படிப் பேசி வைப்பேனா..? நீ மனசுக்குள்ளே எதையும் வைச்சுக்காதே ராம்.."
'அதாவது உன் மகளை வைச்சுக்க வேணாம்ன்னு சொல்கிற.. படு கில்லாடி அத்தை நீ..'
"அர்ச்சனா கல்யாணமாக வேண்டிய பொண்ணு.."
'நானென்ன அவ கன்னி தெய்வமா இருக்க வேண்டிய பொண்ணுன்னா சொன்னேன்..? அர்ச்சனாதான் கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணா..? என் தங்கை ரம்யாவைப் பார்த்தா உனக்கு அப்படித் தோணலையா..? என்ன திட்டத்தோட என் தங்கையை உன் வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கிற..'
"என்னதான் நீயும் அவளும்.. மாமா மகன், அத்தை மகள் உறவில இருந்தாலும், சில விசயங்களில ஒன்னா நிற்க முடியாதில்லையா..?"
'எந்த விசயங்களில அத்தை..? உன் வீட்டுப் பெண்ணை உள்ளே பத்திரமா பாதுகாத்துக்கிட்டு.. அடுத்த வீட்டுப் பெண்னோட வாழ்க்கையில விளையாடிப் பார்க்க நினைக்கிறயே.. அந்த விசயங்களிலா அத்தை..?'
"அவ வானத்திலே இருக்கிற நட்சத்திரம்.. நீ பூமியிலே இருக்கிறவன்ப்பா.. எண்ணையும் தண்ணியும் எந்தக் காலத்திலேயும் பக்கத்தில பக்கத்தில நிற்கக் கூட முடியாதுப்பா.. உனக்குப் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.."
பாலிஷ் போட்ட குருரத்துடன் அவனுக்கு புளி போட்டு விளக்கிச் சொன்ன அகல்யா இனி பயல் ஒதுங்கி விடுவான் என்ற நிம்மதியோடு பேச்சை நிறுத்த..
"எனக்குப் புரியலையே அத்தை.." என்று சொல்லி அவள் ஆவியைக் குறைத்தான் ராம்குமார்..
அன்று முழுவதும் கத்திக் கொண்டிருந்ததினால் அகல்யாவின் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போயிருந்தது... அதற்கு மேலும் அவனுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதில் அகல்யா பொறுமையை கை விட்டாள்..
"என்னத்தைப் புரியலை..? உன் தகுதி என்ன..? தராதரம் என்ன..? அர்ச்சனாவின் பக்கத்தில் நிற்கக் கூட உனக்கு யோக்கியதை கிடையாது.. இது உனக்குப் புரியலையா..?"
"ஓ.. அப்படி எந்த வகையில் நான் குறைந்து விட்டேன் அத்தை..? உழைத்து முன்னேறியிருக்கிறேன்.. என்னிடமிருக்கும் ஒவ்வொரு பைசாவும் என் உழைப்பில் வந்தது.. அடுத்தவங்க முதுகில் சவாரி செய்து.. ஒட்டிப் பிழைத்ததினால் வந்ததில்லை.."
ராம்குமார் சொல்லிக் காட்டி விட்டான்.. அதில் அகல்யாவின் முகம் விகாரமாக மாறியது..
"தேவையில்லாம பேசாதே.. என் பெண்ணோட நிழல் பக்கத்தில் நிற்கக்கூட உனக்குத் தகுதி கிடையாது.. வெளியே போ.."
வாசல்பக்கமாக கையைக் காட்டினாள்.. பார்த்துக் கொள் என்பதைப் போல அர்ச்சனாவை ஒரு பார்வை பார்த்து வைத்தான் ராம்குமார்.. அவள் துடித்துப் போய்..
"அம்மா.." என்றாள்..
"நீ பேசாதே அர்ச்சனா.. உனக்கென்னடி தெரியும்.. உன் ஸ்டேடஸ் என்னனன்னு மறந்துடடு இவன்கூட சரிக்குச் சரியா நின்னு பேசினதுக்கு இவன் என்ன மாதிரி பேசிட்டான்னு கேட்டுக்கிட்டயில்ல.. நீ பச்சைக் குழந்தைடி.. உன் மனசை இவன் கரைக்கப் பார்த்தாலும் நீ அதுக்கு இடம் கொடுக்கக்கூடாது அர்ச்சனா.. யாருடி நீ..? நரேந்திரனோட தங்கை.. அவன் லெவலுக்கு தகுந்தாப்புல தானே உனக்கு மாப்பிள்ளை பார்ப்பான்.. அதை மனசில வைச்சுக்கடி மகளே.."
மெலிதான கை தட்டல் ஒலி கேட்டது.. ராம்குமார் தான் கை தட்டினான்..
"பிய்த்து உதறிட்டிங்க அத்தை.." என்று பாராட்டவும் செய்தான்..
"இது எனக்கும்.. என் மகளுக்கும் இடையில நடக்கிற பேச்சு.. நீ வெளியே போ.." அகல்யா சத்தம் போட்டாள்...
"அடேங்கப்பா.. சவுண்டெல்லாம் பலமாத்தான் இருக்குத்தை.. ஆனா நறுக்குன்னு உங்களை நாலு கேள்வி கேட்காம நான் வெளியே போக முடியாதே அத்தை.." ராம்குமார் வருத்தப் படுகிறதைப் போல முகத்தை வைத்துக் கொண்டான்..
"நீ யார் என்னைக் கேள்வி கேக்க..?" அகல்யா கொதித்தாள்..
"ரம்யாவுக்கு அண்ணன்.." அழுத்தம் திருத்தமாக சொன்னான் ராம்குமார்..
அகல்யாவின் மனதில் பயம் வந்தது.. ரம்யாவை அவள் அழைத்து வந்த நோக்கத்தைப் பற்றி ராம்குமாருக்குத் தெரியாது.. அது தெரிந்தால் அவன் வீட்டில் உள்ள அனைவரையும் கிழி.. கிழியென்று கிழித்துத் தோரணம் கட்டி விடுவான் என்று தியாகராஜனே பயத்துடன் சொல்லியிருந்தார்.. அந்த நினைவு அப்போது வந்த தொலைத்ததில்.. அந்தத் தோரணமாக அகல்யாவை அவன் ஆக்கி விடுவானோ என்று பயந்துபோனாள் அகல்யா.. ஏற்கனெவே ஊர்மிளா அவளை தோரணம் கட்டியிருந்ததில்..
'இன்னைக்குன்னு எல்லாம் ஒன்னாச் சேர்ந்து வருதே..' என்று அரண்டாள்..
"இதென்னப்பா புதுசா பேசற..? ரம்யா என் தம்பி மக.. நீ என் தம்பி மகன்.. அவ உனக்குத் தங்கை.. நீ அவளுக்கு அண்ணன்.. என் தம்பி பிள்ளைகளான நீங்க ரெண்டு பேரும் எனக்கு ரெண்டு கண்கள்... இதையெல்லாம் நீ சொல்லித்தான் நான் புரிஞ்சுக்கனுமா ராம்.. நான் யாருப்பா.. உங்கப்பாவோட கூடப் பிறந்த பிறப்பு.. உனக்கு ரத்த சொந்தம்.. எது விட்டுப் போனாலும் பாசம் விட்டுப் போகுமா ராம்.."
எப்படித்தான் கோர்வையாக வந்து சேர்ந்ததோ தெரியவில்லை.. அகல்யா காய்ச்சல் வேகத்தில் உளருவதைப் போல உளறிக் கொட்டி கிளறி மூடினாலும் அவளுக்குத் தேவைப்பட்ட வார்த்தைகள் கோர்வையாக வந்து கொட்டத்தான் செய்தன..
ராம்குமார் கேலி கலந்த கோபத்துடன் அவளைப் பேச விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.. அவள் வளர்த்த பாசப்பயிரில் அவனிடமிருந்து கோபச் சிரிப்பு வெளிப் பட்டது..
"கெட்டிக்கார அத்தை நீங்க.. உங்க கெட்டிக் காரத்தனம் உங்க தம்பியிடம் இல்லாம போச்சே அத்தை.. எப்ப உறவு கொண்டாடனும்.. எப்ப துண்டு வெட்டி விடனும்ங்கிறதில கில்லாடியா இருக்கீங்க.. சபாஷ்..!"
"ஹி.. ஹி.. எல்லாம் எங்க அப்பா.. அதான் உன் தாத்தாவின் வளர்ப்பு ராம்.. நீ கிளம்பு.."
"எங்கே..?"
"உன் வீட்டுக்கு.."
"என் வீட்டுக்குப் போகாம உங்க வீட்டில உட்கார்ந்து சாப்பிடுவேன்னு நினைச்சீங்களா..? அது உங்க பழக்கம்.. என் பழக்கம் கிடையாது.."
ராம்குமாரின் குத்தல் பேச்சில் நெஞ்சை அடைத்து விழி குத்தி உட்காராமல் 'அப்பாடி..' என்று ஆசுவாசப் பட்டுப் போனாள் அகல்யா..
'பயல் ரோசக்காரன்.. அவன் வீட்டுக்குப் போயிருவான்..'
அவள் நினைத்து முடிப்பதற்குள் அந்த நிம்மதியின் மீது கல்லைத் தூக்கிப் போட்டான் ராம்குமார்.. டமாலென்று விழுந்த அந்த அடியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள் அகல்யா..
"ஆனா அத்தை.. கிளம்பறதுக்கு முன்னாலே உங்களை நாலு கேள்வி கேட்டுட்டுப் போகனும்.."
"அது எதுக்குப்பா உனக்கு..? நாலு பேர்தான் நாலு விதமா கேள்வி கேட்கனும்.. நீ ஒற்றை ஆள்.. ஒரு கேள்விதான் கேக்கனும்.. அந்தக் கேள்வியையும் அத்தையைப் பார்த்துக் கேட்கக் கூடாதுன்னு நீ போய்க் கிட்டே இருக்கனும்ப்பா.."
"என்ன தேவைக்குங்கிறேன்.. நாலு கேள்வியில்லை.. உங்க கிட்டக் கேட்க நாற்பதாயிரம் கேள்விகள் இருக்கு.."
"ஏம்ப்பா ராம்.. ஒற்றைக் கேள்வியே வேணாம்ங் கிறேன்.. இதில எதுக்காக நாற்பதாயிரம் கேள்விகளை இழுத்துக்கிட்டு வர்ற..?"
"நீங்க எதுக்காக ரம்யாவை இழுத்துக்கிட்டு வந்தீங்க..?"
ராம்குமார் கேட்டு விட்டான்.. அதை அவன் கேட்டு விட்டானே என்று பயந்தாள் அகல்யா.. சமரசமாக பேசவும் முயன்றாள்..
"நான்தானேப்பா இழுத்துக்கிட்டு வந்தேன்..? என் மகன் இழுத்துக்கிட்டு வந்தாத்தான் நீ கோபப்படனும்.. தப்புச் சொல்லனும்.."
"இழுத்துருவானோ.. கையை வெட்டிருவேன்.."
ராம்குமார் சீறினான்.. அகல்யா பயந்தாலும்.. ராம்குமார் வெட்டப் போவதாக சொல்லியது நரேந்திரனின் கையைத்தானே என்று ஆறுதலடைந்தாள்.. அந்த ஆறுதலில் ராம்குமார் ஒரு வண்டி மண்ணைக் கொண்டு வந்து கொட்டினான்..
"உங்க மகன் அருண்குமார்தான் ஆம்பளை.. இந்த ராம்குமார் என்ன வளையல் போட்டுக்கிட்டு இருக்கிறவனா..?"
"நீ ஏன்ப்பா அருண்குமாரை இழுக்கிற..?"
"உங்க மகன் அவன்தானே..?"
"நான் நரேந்திரனைச் சொன்னேன்ப்பா.. அதனால நீ அருண்குமாரை விட்டிரு.."
"நரேந்திரன் என்ன உங்க மகனா..? அருண்குமார் என்ன ஊரார் வீட்டு மகனா..? நானும் அப்போப் பிடிச்சுப் பார்க்கறேன்.. அர்ச்சனாவை அருண்குமாரின் தங்கைன்னு சொல்ல மாட்டேங்கறிங்க.. நரேந்திரனின் தங்கைங் கறிங்க.. அருண்குமாரை உங்க மகன்னு சொல்லாம அதுக்கும் நரேந்திரனைக் கொண்டு வந்து நிறுத்தறிங்க.. பணம் காசு இருந்தாத்தாத்தான்.. பெற்ற மகனையே மகன்னு சொல்வீங்க போல.."
'என்னாங்கடா இது..' மனம் வெறுத்துப் போய் விட்டாள் அகல்யா..
அவளே வன்பாடுபட்டு நரேந்திரனுடன் உறவு முறையைக் கொண்டாடி அம்மா என்று அழைக்க வைத்திருக்கிறாள்.. அதைக் கனவிலும் மறந்து விடக் கூடாது என்று என்மகன்.. என்மகன்.. என்று சொன்னால் அதற்கும் இந்த ராம்குமார் நொனனாட்டியம் சொல்வானா..?
"உனக்கு என்னதாம்பா பிரச்னை..?" அகல்யா தலையைப் பிடித்தபடி கேட்டாள்..
அர்ச்சனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.. ஆணானப் பட்ட அகல்யாவுக்கே ராம்குமார் தலைவலியை வரவழைத்து விட்டானா..?
'வாட் எ மேன்..!' அவளுக்கு காதல் பொங்கியது..
அவளது காதலனோ 'யார் நீ' என்பதைப் போல அவளை ஓர் பார்வை பார்த்துவிட்டு.. அகல்யாவிடம் சண்டை போடுவதிலேயே முனைப்பாக இருந்தான்..
"ரம்யா படிக்கத்தான் இங்கே வந்திருந்தான்னு நான் நினைத்தேன்.."
"அந்த படிப்பைத்தான் முடிச்சுட்டாளே.. கெட்டிக்காரி.. அதையெல்லாம் சரியா செய்திருவா... யாரு அவ...? உங்கம்மா பெத்த பெண்ணாச்சே.. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்ணாய் இருக்க மாட்டாளா..?"
"ஓ.. அதில உங்களுக்கு ரொம்பத்தான் வருத்தம் போல.. ரம்யா படிப்பைக் கவனிக்காம வேற எதைக் கவனிச்சிருக்கனும்னு நீங்க எதிர்பார்த்தீங்க..? நரேந்திரனையா..? இந்த திட்டத்தோட என் தங்கையை அழைத்துக்கிட்டு வர உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்கனும்..? உங்க மகளை இதைப்போல ஒருத்தரை மயக்கனும்னு எங்கம்மா அழைத்துக்கிட்டுப் போனா அனுப்பி வைத்து விட்டுத்தான் வேற வேலை பார்ப்பீங்களா..?"
"அத்தான்..." அர்ச்சனா மீண்டும் அதிர்ந்தாள்..
இதைச் சொல்லும்போது ராம்குமாரின் நாவு தடுமாற வில்லையா..? அவளின் அதிர்ந்த பார்வையில் ராம்குமாரின் விழிகளில் குற்றஉணர்வு வந்ததும்தான் அர்ச்சனா தந்நிலைக்குத் திரும்பினாள்..
'மன்னிச்சுரு..' ராம்குமாரின் விழிகள் இறைஞ்சின..
அர்ச்சனாவின் விழிகள் கலங்கின.. அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்..
"நானென்ன உங்க அப்பா.. அம்மாவா..?" அகல்யா எகத்தாளமாக கேட்டாள்..
"ஒருநாளும் நான் என் மகளை உங்க அம்மா கூட அனுப்பி வைத்திருக்க மாட்டேன்.. உங்கப்பனும், அம்மாவும்தான் உன் தங்கை ரம்யாவை என்கூட அனுப்பி வைச்சாங்க.. நாற்பதாயிரம் கேள்வியென்ன நாலு லட்சம் கேள்வியைக் கூட நீ அவங்களைப் பார்த்துக் கேளு.. என்கிட்டக் கேட்காதே... அர்ச்சனா உள்ளே வா.."
அதற்கு மேலும் அங்கே நின்றால் ராம்குமார் கோபத்தில் கை நீட்டி விடுவான் என்று பயந்தாளோ என்னவோ.. அகல்யா அர்ச்சனா வருகிறாளா என்று பார்க்காமல் உள்ளே ஓடி விட்டாள்..
"இதுக்கு மேலேயும் நான் உன் காதலை ஏத்துக்கிட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைக்கறியா..?"
ராம்குமார் கடினமான முகத்துடன் அர்ச்சனாவிடம் கேட்டு விட்டு வேக நடையுடன் போய் விட்டான்.. அவன் போன திசையையே வெறித்துப் பார்த்த வண்ணம் கண்களில் நீர்வழிய அங்கேயே நின்றிருந்தாள் ரம்யா..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -85
அழகான ராட்சசியே -85
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-85.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-85.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy