அழகான ராட்சசியே -83

83 என் இதயத்தில் இடமளித்தும்.. இதயமின்றி எனை விலக்கி வைத்த.. அழகான ராட்சசி நீ.... போதையில் மட்டுமல்ல.. கோபத்திலும் மனதில் மறைந்...


83
என் இதயத்தில் இடமளித்தும்..
இதயமின்றி எனை விலக்கி வைத்த..
அழகான ராட்சசி நீ....

போதையில் மட்டுமல்ல.. கோபத்திலும் மனதில் மறைந்திருக்கும் உண்மைகள் வெளிப்பட்டு விடும்.. அகல்யாவின் மனதிலிருந்த கர்வமும்... திமிரும்... அகம்பாவமும்.. தான் என்ற ஆணவமும் வெளிப்பட்டு விட.. தியாகராஜன் நொறுங்கிப் போனார்..
"ஆக.. இதுதான் நீ.. இல்லையாக்கா..?" நிதானம் குலையாமல் வினவினார்..
"ஆமாண்டா.. இதுதான் நான்.. அதுக்கு இப்ப என்ன செய்யனும்ங்கிற..?" அகல்யாவும் சீறினாள்..
ஊர்மிளாவை விரட்டி விடவேண்டும் என்று அவள் போட்ட திட்டம் வெற்றி பெறவில்லை.. மாறாக ஊர்மிளா அகல்யாவை விரட்டி விட்டு விட்டாள்... அதையும் ரம்யாவின் கண்முன்னால் செய்து விட்டாள்..
'அவ இதைப்பத்தி அம்மாப்பாகிட்டச் சொல்லாமலா இருப்பா..?'
நிச்யமாகச் சொல்வாள் என்பதை அகல்யா கணித்து வைத்திருந்தாள்.. ரம்யா அகல்யாவுக்குக் குறையாத புத்திசாலி.. சில நேரங்களில் ரம்யாபேசும் பேச்சுக்கள் அகல்யாவைத் தாக்கி ஓரம் கட்டி உட்கார வைக்கும் மறைபொருளை உள்ளடக்கியதாக இருக்கும்.. ஆனாலும் அதை அகல்யா வெளிப்படையாக கேள்வி கேட்டு விடாமல் இருக்கும்படி சாமர்த்தியமாக பேசி வைப்பாள் ரம்யா..
'அப்படியே அம்மாவைக் கொண்டு பிறந்திருக்கா..' அகல்யா மனதுக்குள் பொருமுவாள்..
தியாகராஜனுக்கு அந்தச் சாமர்த்தியமெல்லாம் கிடையாது.. அகல்யா சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொள்ளும் பாசக்கார ஏமாளி அவர்... அதனால்தான் ரம்யாவின் சாமர்த்தியங்களை பல்லவியிடமிருந்து அவள் பெற்றிருப்பதாக அகல்யா மனதுக்குள் குமைவாள்..
அதை வெளியில் சொல்லி விடவும் முடியாது.. ரம்யா பல்லவி அல்லவே.. தியாகராஜன் மனைவியைப் பற்றிப் பேசினால் கேட்டுக் கொள்வார்.. மகளைப் பற்றிப் பேசினால் பொங்கி எழுந்து பேசுகிறவரை உண்டு இல்லையென்று ஒரு வழியாக்கி விட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பார்..
அதனால் அகல்யா ரம்யா விசயத்தில் அடக்கியே வாசிப்பாள்.. தவிரவும்.. நரேந்திரனைக் கைப்பற்ற அவளுக்கு ரம்யாவின் தயவு தேவைப்பட்டதே..
'இப்பத்தான் அதுக்கு வழியில்லாம போச்சே..'
நியாய அநியாயம் பேசுகிற தியாகராஜன் நிச்சயமாக அவரின் மகளை அகல்யாவுடன் அனுப்பி வைக்க மாட்டார் என்று தெரிந்த பின்னால் அவரின் தயவு அகல்யாவுக்கு எதற்கு..?
ஊர்மிளாவோ ஓட மாட்டாள்.. நரேந்திரனோ ஊர்மிளாவை விட்டுக் கொடுக்க மாட்டான்.. தியாகராஜனோ இனியும் ரம்யாவை அகல்யாவின் வீட்டில் இருக்க விட மாட்டார்..
இப்படிப்பட்ட சூழல் வந்த பின்பு அகல்யா எதற்காக அவனது தம்பியிடம் பொறுமையாக பேச வேண்டும்..?
"உனக்கு அர்ச்சனாவும்.. ரம்யாவும் ஒன்றுன்னு இதுநாள்வரைக்கும் நினைத்திருந்தேனேக்கா.."
"எப்படி..? அர்ச்சனாவும்.. ரம்யாவும் ஒன்றா..? என் மகளுக்கு உன் மகள் இணையா..?" இகழ்ச்சியாக கேட்டாள் அகல்யா..
அந்த இகழ்ச்சியில் பல்லவியின் இதயம் பிளந்தது.. இவளுடன் ரம்யாவை அனுப்பி வைத்ததால் அல்லவா இந்தக் கேள்வியை அவள் காது கொடுத்துக் கேட்க வேண்டி வந்து விட்டது..
"இணையில்லைதான் அண்ணி..? எப்படி இணையாகும்..? நான் ஒன்னும் உங்க தம்பிக்கு இரண்டாம் தாரமா வாழ்க்கைப்பட்டு.. மூத்ததாரத்தோட மகன் தயவில மகளை வளர்க்கலையே.. அப்புறம் என் மகள் எப்படி உங்க மகளுக்கு இணையாவாள்..?"
பல்லவி பதிலடி கொடுத்து விட்டாள்.. ஆண்டாண்டு காலமாக அடக்கி வைத்திருந்த ஆக்ரோசம் அவள் வார்த்தைகளில் பீறிட்டு வெளியே வந்தது.. அகல்யாவின் முன்னால் பேசத் தயங்கும் பல்லவியைப் பார்த்தேப் பழக்கப்பட்ட அகல்யாவுக்கு அவளின் இந்த நிமிர்வான பேச்சு அதிர்ச்சியைத் தந்தது..
அகல்யாவால் பல்லவியின் பதிலடிக்குப் பதிலடியைக் கொடுக்க முடியவில்லை.. அவள் வார்த்தைகள் வராமல் தவித்தாள்.. தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட வார்த்தைகளை மீட்டெடுக்கும் வழி தெரியாமல் திண்டாடினாள்..
பல்லவி சரியான கேள்வியை நெற்றியடியாய் கேட்டு வைத்து விட்டாளே.. எதைச் சொல்லி பல்லவியின் வாயை அடைப்பது..?
"கேட்டியாடா தம்பி.." அகல்யா எப்போதும் போல தம்பியிடம் அடைக்கலம் புகுந்தாள்..
"கேட்டுக்கிட்டுத்தான்க்கா இருக்கேன்... நீ சொன்னதையும் கேட்டேன்.. பல்லவி சொன்னதையும் கேட்டேன்.." அமைதியாகப் பதில் சொன்னார் தியாகராஜன்..
அகல்யா திகைத்துப் போனாள்.. என்னதான் தூக்கியெறிந்து பேசினாலும்.. ஒரு சின்னச் சிரிப்பில் சமாதானமாகி விடும் தம்பியா அவளிடம் இப்படி பொருள் பொதிந்த வார்த்தைகளைப் பேசுவது..?
'இவனுக்கு இப்படிக்கூடப் பேசத் தெரியுமா..?'
அவசரப்பட்டு வாய் விட்டுத் தன் மனதிலிருப்பதை வெளிப்படுத்தி.. தம்பியை பகைத்துக் கொண்டோமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் அகல்யா.. முதலில் தம்பியைச் சமாதானப் படுத்தி.. அவர் மீதான அவளுடைய ஆளுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானவள்..
"நீரடிச்சு நீர் விலகுமாடா தம்பி..?" என்று நாத்தழுதழுக்க.. வெள்ளைக் கொடியை பறக்க விட்டாள்..
"நெருப்படிச்சு.. நெருப்பு விலகும்க்கா.." இறுகிய குரலில் பதில் சொன்னார் தியாகராஜன்..
தம்பியிடமிருந்து வெளிப்பட்ட அதீத அறிவை ஜீரணிக்க முடியாமல் திண்டாடிப் போனாள் அகல்யா.. இப்படியும் தியாகராஜன் மாறக்கூடும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை..
"ஆயிரம்தான் இருந்தாலும் நீ என் கூடப் பிறந்த தம்பிடா.."
"அதே ஆயிரம் என் பெண்டாட்டி விசயத்திலயும் மகள் விசயத்திலயும் இருக்குக்கா.."
"உன் முன்னாலேயே என்னைப் பேசற தைரியத்தை உன் பெண்டாட்டிக்குக் கொடுத்திட்டில்ல..?"
"என் முன்னாலேயே என் மகளைக் குறைவாப் பேசற தைரியத்தை முதலில் உனக்குக் கொடுத்துட்டேனேக்கா..?"
"தியாகு.."
"அர்ச்சனாவுக்கு என் மகள் இணையில்லைன்னா.. பல்லவிக்கு நீயும் இணையில்லைக்கா.."
தியாகராஜனின் சம்மட்டி அடி பேச்சில் பல்லவியின் முகம் ஜொலித்தது.. தனது ஆளுமை அடிபட்டு போய் விட்டதை உணர்ந்தாள் அகல்யா.. இனிப் பிறந்த வீடு என்பது அவளுக்குக் கிடைக்காது..
"நீ கேட்டுக்கிட்டக்கா.. காலில் விழுகாத குறையாக கதறி அழுத.. உனக்காக.. நீ இரண்டாம் தாரமாய் போய் விட்ட கொடுமைக்காக.. என் மகளையும் உன் புருசனோட மூத்த தாரத்தின் மகனுக்கு இரண்டாம் தாரமாய் கொடுக்க நான் சம்மதிச்சேன்.. அந்த தியாகத்துக்கு நீ சரியான பரிசைக் கொடுத்துட்டேக்கா.."
"இல்லேடா தம்பி.."
"எனக்கு வேணும்க்கா.. பெத்த மகளை விடப் பெரிசா ..கூடப் பிறந்தவளை நினைச்சேனே.. அதுக்கான தண்டனை எனக்குக் கிடைக்க வேணாமா..? கேட்டே பாரு கேள்வி.. என் ஆயுசுக்கும் அது போதும்.. என் மனசெல்லாம் நிறைஞ்சிருச்சு.. நீ கிளம்பு.."
"எங்கேடா..?"
"உன் வீட்டுக்குத்தான்.. இது பல்லவியோட வீடு... நீ பேசி வைத்திருக்கிற பேச்சுக்கு... உன் கூடப் பிறந்துட்டேங்கிற குத்தத்துக்காக எனக்கே அவ சாப்பாடு போடுவாளோ என்னவோ.. இதில உன்னை எங்கே நான் கவனிச்சுக்கிறது..?"
தியாகராஜனின் பேச்சில் பெகுண்டாள் அகல்யா.. அடக்கி வைத்திருந்த அவளின் இயல்பான குணம் தலையைத் தூக்கியது..
"போகிற வழியில ஆயிரம் ஸ்டார் ஹோட்டல்கள் இருக்கு.. என் ஸ்டேட்டஸீக்கு உன் வீட்டில நான் பச்சைத் தண்ணியைக் குடிக்கறதே அதிகம்.. இதில நீ என்னைக் கவனிச்சுக்கறியா..?"
"அதானே.. நீ யாரு.. உன் லெவல் என்ன.. அது தெரியாம பேசிட்டேன்.. தப்புத்தான்க்கா.. மன்னிச்சுரு.,"
"அப்ப.. ரம்யாவை என்கூட அனுப்பி வைக்க மாட்ட..?"
அந்தச் சூழலிலும் அயராமல் அந்தக் கேள்வியைக் கேட்ட அகல்யாவின் அசாத்திய மனோ தைரியத்தில் ரம்யாவிற்கு ஆச்சரியம்.. ஆச்சரியமாக வந்தது..
"எப்படிம்மா.. நம்ம சோதா அப்பாவுக்கு இப்பேர்பட்ட அக்கா கூடப் பிறந்தவங்களா வாய்ச்சிருக்காங்க..?"
வியப்புடன் பல்லவியின் காதில் முணுமுணுத்தாள்.. அவள் வெறுப்புடன் அகல்யாவைப் பார்த்தபடி வார்த்தைகளை மென்று துப்பினாள்..
"நான் வாங்கி வந்த வரம் அப்படி டீ மகளே.."
பல்லவியின் கோபத்தில் ரம்யாவிற்கு லேசாக சிரிப்பு வந்தது..
"ம்மா.. இவ்வளவு டென்சனாகனும்ங்கிற அவசியமே.. இல்லை.." என்றாள்..
"உன் அத்தைகாரி பேசற பேச்சுக்களையெல்லாம் கேட்ட பின்னாலே எப்படிடீ டென்சன் இல்லாம இருக்கிறது..?" பல்லவி கேட்டாள்..
"கெட்டதிலயும் மிகப் பெரிய நல்லது நடந்திருக்கு.. அதுக்காக அத்தையம்மாவுக்கு ஆக்சுவலா நீங்க சூடம் சாம்பிராணி காட்டிக் கும்பிட்டுக்கனும்.." நமட்டுச் சிரிப்புடன் சொன்னாள் ரம்யா..
"அது ஒன்னுதாண்டி பாக்கி.. அதையும் செய்யச் சொல்லு.. ஏன்.. உன் அப்பாதான் இத்தனை வருசமா அக்காவுக்கு சூடம்.. சாம்பிராணி காட்டிக்கிட்டு இருக்காரே.. அது போதாதா..?" பல்லவி எண்ணையில் விழுந்த கடுகாக வெடித்தாள்..
"அப்படியிருந்த மனுசன் எப்படியாகிருக்காரு..? அதைக் கவனிச்சீங்களா..? அந்த அருமை அக்காவை ஆயுளுக்கும் மறக்க முடியாத கேள்வியொண்னை நீங்க கேட்டிருக்கீங்க.. அதை ஏன்னு அப்பா கேட்டாரா..? கேட்கச் சொன்ன அத்தையை எப்படியெல்லாம் கேள்வி கேட்டாருன்னு கேட்டிங்கதானே.." ரம்யா சுட்டிக்காட்டினாள்..
"அதிலதான் என் மனசு குளிர்ந்திருக்குடி ரம்யா.." பல்லவியின் குரல் கம்மியது.. அவளது கண்களில் கணவனின் மீதான காதல் கசிந்தது.. ஒரு மனைவியாக அவளின் இதயம் நிறைந்தது..
"ஸோ.. அதை நினைச்சு சந்தோசப்படுங்கம்மா.. ஸ்வீட் எடுங்க.. கொண்டாடலாம்.." ரம்யா கண்சிமிட்டினாள்..
"இது கிளம்பட்டும்டி.." என்றாள் பல்லவி..
தாய் குறிப்பிட்ட 'இது' எது என்று திரும்பிப் பார்க்காமல் தெரிந்து வைத்திருந்த ரம்யா வாய்க்குள் சிரித்தாள்.. பல்லவியால் 'இது' என்று அழைக்கப்பட்ட அகல்யா.. கடைசி முயற்சியாக ரம்யாவை உடன் அழைத்துச் செல்ல முயன்று கொண்டிருந்தாள்..
"இந்தம்மா மகாராணி.. இதுக்கு அந்தரங்கத் தோழியா உன்னை அனுப்பி வைக்கச் சொல்லுது.." நொடித்தாள் பல்லவி..
"நீங்க சொன்னாலும்.. சொல்லலைன்னாலும்.. பெங்களூரில் நான் அந்த வேலையைத்தான் பார்த்துக் கிட்டு இருந்தேன்ம்மா.. இவங்க பேசற பேச்சுக்கு 'ஊம்' கொட்டறதுதான் என் வேலை.."
"அந்தப் பேச்சை மகளிடம் பேச வேண்டியது தானே..?"
"அரை நிமிசத்துக்கு மேலே அவ கேட்க மாட்டா.."
"நீ மட்டும் ஏண்டி கேட்டே..?"
"எனக்கும் டைம் பாஸ் ஆக வேணாமா..?"
இலகுவாக சொல்லி விட்டுச் சிரித்தாள் ரம்யா.. பல்லவியின் மனதில் குற்ற உணர்வு வந்தது.. இப்படிப்பட்ட மகளை அகல்யாவுடன் அனுப்பி வைத்தது எவ்வளவு பெரிய பிசகு என்று மனம் வருந்தினாள்..
"அம்மா உனக்கு அநியாயம் செய்துட்டேன் ரம்யா.. என்னோட பகைக்காக உன்னை இந்தப் பொம்பளைகூட அனுப்பி வைத்திருக்கக் கூடாது.."
"ஐய்யே.. இதுக்குப் போய் இவ்வளவு ஃபீல் பண்ணனுமா..? நான் ஒன்றும் சும்மா போயிருக்கலையே.. என்னோட பி.ஜி படிப்பை படிச்சு முடிச்சுட்டுத்தானே வந்திருக்கிறேன்.."
ரம்யா சொன்னதும்தான் பல்லவிக்கு அந்த நினைவே வந்தது.. கையை உதறியவளாக..
"உன் செர்டிபிகேட் அங்கே மாட்டியிருக்கே ரம்யா.." என்று பதறினாள்..
"நானாவது.. என் செர்டிபிகேட்டை அங்கே விட்டு விட்டு வருகிறதாவது.. சென்னைக்குக் கிளம்பறோம்ன்னு ஆனதுமே என்னோட பெட்டிகளையும்... செர்டிபிகேட்டையும் கொண்டு வந்திட்டேனில்ல.." ரம்யா கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்..
"எங்கேடி..?" பல்லவி பரபரத்தாள்..
"செர்டிபிகேட்ஸ் என் ஹேண்ட்பேகில் இருக்கு.. பெட்டிகள்ளாம் கார் டிக்கியில இருக்கு.. நேத்தே என்னோட அத்தனை திங்ஸையும் பேக் பண்ணிட்டேன்.. அத்தையம்மாவுக்குத் தெரியாம பெட்டிகளை டிக்கியிலயும் வைத்துட்டேன்.." ரம்யா விவரித்தாள்..
"டிரைவர் பார்த்திருப்பானே.."
"பார்த்திருப்பான்தான்.. ஆனா அத்தையம்மாவிடம் சொல்லலை.."
"ஏண்டி..?"
"நான் பெங்களூரைக் காலி பண்ணிட்டுக் கிளம்பறதில அவனுக்கு அவ்வளவு சந்தோசம்.."
இதற்கும் கண்சிமிட்டினாள் ரம்யா.. எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் அவளின் இயல்பில் பல்லவியின் மனம் கனிந்தது..
"அம்மா சுயநலமாய் யோசிச்சுட்டேண்டி.." என்று அதற்கும் மனம் வருந்தினாள்..
அகல்யா எவ்வளவோ தழைந்து பேசிப் பார்த்தாள்.. தியாகராஜன் மறுத்து விட்டார்..
"நீ என் கூடப் பிறந்த பிறப்பு.. என் வீட்டுக்கு வா.. போ.. ஆனா.. என் மகளை மட்டும் உன்கூட அனுப்ப முடியாது.." என்று சொல்லி விட்டார்..
"நான் தனியா எப்படிடா போவேன்..?" கடைசி அஸ்திரத்தை பிரயோகித்தாள் அகல்யா..
"ராம்குமாரை உன்கூட வந்து விட்டுவிட்டு வரச் சொல்கிறேன்.."
தியாகராஜன் அப்போதே ராம்குமாருக்குப் போன் போட்டார் அவனும் விரைவாக வந்தான்..
"அத்தை ரம்யாவை விட்டுவிட்டுப் போக வந்திருக்கு ராம்.. நாம தனியா அனுப்பி வைச்சா நல்லா இருக்காது.. நீ கூடப்போய் விட்டு விட்டு வாப்பா.." என்றார் தியாகராஜன்..
தந்தை சொல்லைத் தட்டாத தனயனாக ராம்குமார் கிளம்பினான்.. தோற்றுப் போன மனநிலையுடன் அகல்யா முகம் கருக்க தம்பியிடம் விடைபெற்றுக் கிளம்பினாள்.. பல்லவியிடமும்.. ரம்யாவிடமும் அவள் சொல்லிக் கொள்ளவில்லை..
'திருட்டுக்கள்ளி..! பெங்களூரில் இருந்த வரைக்கும்.. அத்தை.. அத்தைன்னு வால் பிடிச்சுட்டு.. இங்கே அப்பன் வீட்டுக்கு வந்ததும் அம்மா பின்னாலே போய் நின்றுக்கிட்டா..'  அவள் மனம் ரம்யாவுக்கு அர்ச்சனை செய்தது..
பெங்களூரில் ரம்யா இல்லாமல் ராம்குமாருடன் வந்து இறங்கிய அகல்யாவைக் கண்டதும் அருண்குமாரும்.. அர்ச்சனாவும் ஆச்சரியப்பட்டார்கள்..
"ரம்யாவின் படிப்பு முடிஞ்சுருச்சே.. அதனாலே அப்பா அவளை பெங்களூருக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டார்.." என்றான் ராம்குமார்..
அர்ச்சனாவின் கண்கள் ராம்குமாரையே விழுங்கு வதைப் போல பார்த்து வைத்தன.. அவன் மிகக் கவனமாக அர்ச்சனாவின் விழிகளை சந்திப்பதைத் தவிர்த்தான்.. அருண்குமாரிடம் மட்டுமே பேசினான்..
"அத்தையை விடனும்ங்கிறதுக்காக எல்லா வேலைகளையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு வந்தேன்.. நான் கிளம்பியாகனும்.."
ராம்குமார் கிளம்பினான்.. வாசலுக்கு ஓடிவந்த அர்ச்சனா..
"அத்தான்.." என்று அவனை அழைத்தாள்..
ராம்குமார் தேங்கி நின்றான்.. அர்ச்சனாவின் கண்ணீர் பார்வை அவன் மனதை அசைத்தாலும்.. இளகி விடாமல்  இரும்பின் உறுதியோடு ஒட்டாத பார்வை பார்த்தான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -83
அழகான ராட்சசியே -83
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-83.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-83.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy