அழகான ராட்சசியே -81

81 உன் மனதில் முள் தைத்தால்.. என் மனதை வலிக்க வைக்கும் அழகான ராட்சசி நீ.... காலிங்பெல்லின் ஒற்றை மணியோசையால் கதவைத் திறந்து வ...


81
உன் மனதில் முள் தைத்தால்..
என் மனதை வலிக்க வைக்கும்
அழகான ராட்சசி நீ....


காலிங்பெல்லின் ஒற்றை மணியோசையால் கதவைத் திறந்து விட்டாள் பல்லவி.. உள்ளே வந்த அகல்யாவின் முகத்தில் படிந்திருந்த கருமையை ஆசை தீர பார்த்தாள்.. இதற்குத்தானே பல்லவி இத்தனை நாளாக தவம் கிடந்தாள்..!
அகல்யாவின் சிவந்த முகம் கருக்க வேண்டும்.. அதை ஆசைதீர பல்லவி பார்க்க வேண்டும்.. பல்லவியின் நீண்டநாள் கனவல்லவா அது..?
ரம்யா வீட்டிற்கு வரப் போவதாக.. பல்லவியிடம் செல்போனில் சொல்லியிருந்தாள்.. ஊர்மிளாவிடம் விடை பெற்றவள்.. அகல்யாவை இடைவெளி விட்டுப் பின் தொடர்ந்தபடி.. நடந்த அனைத்தையும் பல்லவியிடம் பிட்டுப்பிட்டு வைத்து விட்டாள்..
"இனியும் நான் அவங்க வீட்டில இருக்கிறது வேஸ்டும்மா.. ஏற்கனெவே நரேந்திரனுக்கு இரண்டாம் மனைவியாக போக வேணுமான்னு மனசுக்குள்ள கேள்வி இருந்துச்சு.. பெங்களூர் வீட்டில் இந்த இரண்டு வருசமா அவன் பண்ணின டீஸிங்கில போடா.. நீயாச்சு.. உன் பணமாச்சுன்னு கிளம்பி வந்துரனும்னு நிறைய நாள் ஆவேசப்பட்டிருக்கிறேன்.. உங்களைப் பாடாய் படுத்தின என் அத்தையம்மாளை ஒரு கை பார்த்து விடனும்னுதான் பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுமையா இருந்தேன்.. அந்தப் பொறுமைக்கு கை மேல பலன் கிடைச்சிருச்சும்மா.. இனி நான் நிம்மதியா நம்ம வீட்டுக்கு வந்திரலாம்.."
"நிஜமாத்தான் சொல்கிறயா ரம்யா..?"
"ஆமாம்மா.. சும்மாவே அந்த நரேந்திரன் பெண்டாட்டி.. பெண்டாட்டின்னு உருகித் தள்ளுவான்.. இந்த லட்சணத்தில இவனுக்கு குழந்தைவேற இருக்கு.. இனிப் பெண்டாட்டியை விட்டுப் பிரிவானா..? பசை போல ஒட்டிக்குவான்.. நல்ல மனுசங்க அப்படித்தான் இருப்பாங்கம்மா.."
"உங்க அப்பாவும் நல்ல மனுசர்தான் ரம்யா.. அந்த அகல்யாதான் மனசெல்லாம் விசத்தை வைச்சிருக்கிற மனுஷி..."
"அப்பா ஏம்மா அவங்க சொன்னதைக் கேட்டிருக்கனும்..?"
"குற்ற உணர்ச்சி..! அக்காவுக்கு முதலில் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோமேங்கிற குற்ற உணர்ச்சி.. எனக்கும் அது இருந்துச்சு ரம்யா.. அந்தப் பொம்பளை படுத்தின பாட்டில அது ஓடியே போயிருச்சு.."
"இப்ப இந்த அத்தைகாரம்மா ஊர்மிளாவோட வீட்டை விட்டு ஓடி வந்துக்கிட்டு இருக்கு.. என்ன ஓட்டம்ங்கறிங்க.. இந்த ஓட்டத்தை ஒலிம்பிக்கில ஓடினா.. நிச்சயமா அத்தைக்குத்தான் தங்கப் பதக்கத்தைக் கொடுப்பாங்க.. அப்படி ஒரு ஓட்டம்மா.."
"ஆஹா..! அந்த கண்கொள்ளாக் காட்சியை நான் காணாமல் போயிட்டேனே.."
"நான் கண்டுக்கிட்டு இருக்கேனே.. வீட்டுக்கு வந்து விலாவாரியாய் 'லைவ் ஷோ' வைப் போல பிலிம் போட்டுக் காட்டிவிட மாட்டேனா..?"
"வா.. வா.. உனக்காக காத்திருக்கேன்.."
"நீங்க காத்திருக்கீங்க.. இந்த அத்தை என்னைத் திரும்பவும் பெங்களூருக்கு கடத்திக்கிட்டுப் போக திட்டம் போடுது.. என்னவொரு கான்பிடென்ஸ்..!"
"அதுக்கு கான்பிடென்ஸ் இருக்கிறதுக்கென்ன.. ஒன்றுமேயில்லாத பிரச்னையை ஊதிப் பெரிசு பண்ணி.. புருசனையும், பெண்டாட்டியையும் நாலு வருசமா கண்ணில பாக்க விடாம பிரிச்சு வைச்சிருந்த மகராசியில்ல அது.. அந்தவகையில நான் பரவாயில்லை போல ரம்யா.. உன் அப்பாவின் கண்முன்னால என்னை நடமாடவாவது விட்டு வைத்ததே.."
"என்ன ஒரு வக்கிரபுத்தி இந்த அத்தையம்மாளுக்கு.."
ரம்யா வெறுப்புடன் சொன்னாள்.. இப்படிப்பட்ட புத்தியை படைத்திருப்பவளுடன் ஒரே வீட்டில் இரண்டு வருடங்களாக தங்கியிருந்த பாவத்தை எந்த கங்கையில் போய் கரைத்து விடுவது என்று கேட்டாள்..
"நாட்டுல ஓடற அனைத்து தண்ணியும் கங்கையின் அம்சம்தான்.. நீ நம்ம வீட்டுக்கு வா.. குழாயடியில நின்றுக் குளிச்சா.. எல்லாப் பாவமும் கரைஞ்சு ஓடிரும்.." பல்லவி வழி சொன்னாள்..
"இந்த அத்தை என்னை பெங்களூருக்கு இழுத்துட்டுப் போகனும்ன்னுல்ல கனவு கண்டுக்கிட்டு இருக்குது..? பேசாம ஒரு ஆட்டோவைப் பிடிச்சு நான் வந்திரவா..?" ரம்யா யோசனையுடன் கேட்டாள்..
"வேணாம்.. வேணாம்.. அப்படி நீ வந்திட்டா.. அந்தம்மாவோட அரண்டு போன முகத்தை எப்படி நான் பார்ப்பேன்..? அதைக் கையோடு இழுத்துக்கிட்டு நீ வீடுவந்து சேர நான் வழி பண்றேன்..."
"அப்படிங்கறிங்க..?"
"ஆமாங்கிறேன்.. இந்த பல்லவி யாருன்னு நீ பார்க்கப்போகிற.."
"என்னைப் பெத்த அம்மாதானே நீங்க..? இல்லை.. அவங்களோட குளோனிங்கா..? இன்னும் பல்லவி யாருன்னு நான் பார்த்ததே இல்லையா..?"
மகளின் கேள்வியில் மனம் விட்டுச் சிரித்தாள் பல்லவி.. சேர்ந்து சிரித்த அந்த தாய், மகள் இருவரின் மனதிலும் நிறைவிருந்தது..
"இத்தனை துணிச்சலா பேசற அந்த ஊர்மிளா எதுக்காகடி இந்த அகல்யாவுக்கு பயந்துக்கிட்டு வீட்டை விட்டு வெளியில போனா..?"
"எனக்கென்னவோ அவ பயந்துக்கிட்டு போயிருக்க மாட்டான்னு தோணுதும்மா.. நம்ம அத்தைதான் ஏதாவது குறுக்குவேலை பண்ணியிருக்கனும்.. இவளைப் பார்த்தால் நல்லவளைப் போல தெரியுதும்மா.."
"பின்னே..? உன் அத்தைக்கு ஒருத்தியைப் பிடிக்கலைன்னா அவ கட்டாயமா நல்லவளாத்தான் இருப்பா ரம்யா.. இதில் உனக்கென்ன சந்தேகம்..? பாவம் அந்தப் பொண்ணு.."
"இன்னைக்கு உங்க நாத்தனாரை பாவமாக்கிருச்சு.."
"செய்யட்டும்.. செய்யட்டும்.. இவளுக்கு இதுவும் வேணும்.. இதுக்கு மேலேயும் வேணும்.. அப்பத்தான் என் மனசு ஆறும்.."
"கட்டாயம் ஆறும்மா.. இத்தனை நடந்திருக்கு.. அந்த நரேந்திரன் உங்க நாத்தனாரை சும்மா விட்டிருவானா..? பெங்களூர் வீட்டிலேயே உங்க நாத்தனாரை மாடிப்பக்கம் வரக்கூடாதுன்னு சட்டம் போட்டு வைச்சிருந்தான்.. இதுதான் என்மகன்.. என் மகன்னு சொல்லிக்கும்.. அவன் பேருக்குத்தான் அம்மாம்பான்.. மத்தபடி பாசமாய் ஓர் பார்வைகூடப் பார்க்க மாட்டான்.. இந்த அத்தையைப் பத்தி அணுப்பிசகாமல் புரிஞ்சு வைச்சிருக்கிறவன் அவன்ம்மா.. அவன் பெண்டாட்டியை வீடு தேடி வந்து நம்ம அத்தைகாரம்மா பேசிட்டு போயிருக்கிறதுக்கு சும்மா விட்டு வைப்பான்னா நினைக்கறிங்க..?"
"ஆஹா..! அப்படியொன்னு இருக்கில்ல..?"
"யெஸ்.. இது சிறுகதையில்லை.. தொடர்கதை.. அதோட முடிவு நிச்சயமா அகல்யாவுக்கு சுபமாயிருக்காது.."
"எனக்கு அதுதான் வேணும்.."
"எனக்கு நம்ம வீட்டுக்கு வரனும்.."
"அதைச் செய்ய நாணாச்சு.. நீயேன் கவலைப்படற.. உனக்கொன்னு தெரியுமா..? நரேந்திரனுக்கு மகன் இருக்கிறான்னு தெரிஞ்சவுடனே உங்கப்பா உன்னை இங்கே கொண்டு வந்து விட்டுவிடச் சொல்லிட்டாரு.." உற்சாகமாக சொன்னாள் பல்லவி..
"தெரியும்.." என்றாள் ரம்யா..
அவள் மனதில் சோர்வு வந்தது.. கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தாள்.. அகல்யாவின் முயற்சிக்கு அவள் துணையாக நின்றாளே.. அவளுக்கு நரேந்திரனின்
மீது காதலில்லை.. அவனுடைய பணத்தின் மீதும் ஆசையில்லை.. அப்புறமும் எதற்காக இத்தகைய வேலைகளுக்கு துணை நின்றாள்..?
'எல்லாம் இந்த அத்தைகாரியாலே..'
அகல்யாவை வெறுப்புடன் பார்த்தாள் ரம்யா.. அதைப் பாசப்பார்வையாக நினைத்துக் கொண்டு அகல்யா ''யென்று பல்லைக் காட்டினாள்.. பதிலுக்கு பல்லைக் காட்டாமல் முகத்தைத் திருப்பிக் கொண்ட ரம்யாவின் செய்கையில் முகம் கருத்தாள்.. அதுவரை ரம்யா வெளிப்படையாக அவளின் வெறுப்பைக் காட்டியதில்லை.
'குட்டிக்கு குளிர் விட்டுப் போயிருச்சா..'
"அத்தை.. ஊர்மிளாவுக்கு எதிரியாக இருக்கிறதுக்கும் ஒரு தகுதி வேணுமாம்.. அது உங்களிடம் இல்லையாம்.."
அகல்யாவின் மனது வன்மம் கொண்டது... பல்லவியை ஓட ஓட விரட்டிவள்.. பல்லவியின் மகள் முன்னால் குறுகி நிற்பதா..?
'எல்லாம் இந்த ஊர்மிளாக் கழுதையினாலே வந்தது..'
அகல்யாவின் மனம் உலைகலனாய் கொதித்தது.. பல்லவியின் மகளையெல்லாம் அகல்யாவை அலட்சிய மாகப் பார்க்க வைத்து விட்ட ஊர்மிளாவின் தீரத்தை.. எண்ணியெண்ணி அவள் கொதித்துக் கொண்டிருந்தாள்.. செல்போன் அடித்தது.. அந்தக் கொதிப்புடன் செல்போனை காதுக்குக் கொடுத்தவள்..
"யாரு..?" என்று அடிக்கப் போகிறவளைப் போல போனைக் கடிக்காத குறையாய் வினவினாள்..
"அண்ணி.." மறுமுனையில் பல்லவியின் குரலைக் கேட்டதும்..
"யாரு.. பல்லவியா..?" என்று குளிர்ச்சியானாள்..
"என்னங்கண்ணி.. கோபமாய் இருக்கறிங்களா..? அடிக்கிறதைப் போல பேசறிங்க.." நமட்டுச் சிரிப்புடன் பல்லவி வினவியதை அகல்யாவால் அறிய முடியவில்லை..
"ஹி.. ஹி.. உன் நம்பரைப் பார்க்கலை பல்லவி.." என்று வழிந்தாள்..
"இங்கே உங்க தம்பிக்கு உடம்பு சரியில்லை அண்ணி.." இனிப்பான அல்வாவை விழுங்கியபடி பல்லவி சந்தோசமாகச் சொன்னதை இப்போதும் அகல்யாவினால் அறிய முடியாமல் போனது..
"ஏன்..? அவனுக்கென்ன..?" என்று பதறிவிட்டாள்..
இருந்திருந்து அகல்யாவுக்கு ஆதரவாக.. அவள் எதைச் சொன்னாலும் காது கொடுத்துக் கேட்கும் ஒரே ஜீவன் தியாகராஜன் மட்டும்தான்.. காது கொடுத்து கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அகல்யா கேட்கும் உதவிகளை சிரமேற் கொண்டு முடிக்கும் சகோதர வாஞ்சை கொண்டவர்..
அந்த தியாகராஜனுக்கு உடல்நலம் சரியில்லையா..?
"ஆமாம் அண்ணி.. ஒரு வாரமா அவர் படுத்த படுக்கையா இருக்காரு.."
சுறுசுறுப்பாக வீட்டுக்குள் வந்து கொண்டிருந்த கணவரைப் பார்த்த வண்ணம் அயராமல் பொய் சொன்னாள் பல்லவி..
"என்னம்மா இப்படிச் சொல்ற..? ஹாஸ்பிடலுக்குப் போனீங்களா..?"
"அங்கேதான் அட்மிட் பண்ணியிருந்தோம் அண்ணி.. நேத்துத்தான் டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தோம்.. எங்கே இவர்தான் ஆஸ்பிடல் அட்மாஸ்பியர் ஒத்துக்கலைன்னு அடம் பிடிக்கிறாரே.. அதனால வீட்டில இருந்தபடி ட்ரீட் மெண்டை கண்டினியு பண்ணுகிறோம்ன்னு சொல்லி அழைச்சுக்கிட்டு வந்துட்டோம்.."
"போனவாரம் கூட அவனிடம் பேசினேனே.." நம்பாத குரலில் கேட்பாள் அகல்யா..
'உன் ஞாபக சக்தியில் இடி விழ..' பல்லைக் கடித்தாள் பல்லவி..
"அது போனவாரம் அண்ணி.. இது இந்த வாரம்.."
பல்லவியா பின் வாங்குவாள்..? அவள்தான் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க தூண்டிலை வீசி விட்டாளே..
அகல்யாவின் குழம்பிய மனதால் பல்லவியின் பொய் ஆரத்தைக் கண்டு கொள்ள முடியவில்லை.. தியாகராஜனுக்கு உடம்புக்கு முடியவில்லை என்ற செய்தியைக் கேட்டதில் அவள் ஆடிப்போயிருந்தாள்..
"நாங்க உடனே நம்ம வீட்டுக்கு வருகிறோம் பல்லவி.." என்று பரபரத்தாள்..
'நம்ம வீடா..? இது என் வீடு..' பல்லவி எரிச்சல் அடைந்தாள்..
"உடனே வர்றீங்கன்னா.. எப்படிண்ணி..? உங்க வீடு பெங்களூரிலில்ல இருக்கு..?" மறக்காமல் அக்லயாவின் வீடு சென்னையில் இல்லை.. அது பெங்களூரில் இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்தியபடி அறியாத வளைப் போல வினவி வைத்தாள் பல்லவி..
அகல்யாவுக்கு இருந்த மன உளைச்சலில் அவள் அதை கண்டு கொள்ளவில்லை..
"சென்னiயிலதான் நாங்களும் இருக்கிறோம் பல்லவி.." என்றாள்..
"சென்னையிலா..?" வரவழைத்துக் கொண்ட ஆச்சரியத்துடன் கேட்டாள் பல்லவி..
"ஆமாம் பல்லவி, சென்னையிலதான் இருக்கிறோம்.."
"இருக்கிறோம்ன்னா..? உங்ககூட யார் இருக்கிறாங்க அண்ணி..?" பல்லவி மீண்டும் ஒன்றும் அறியாதவளாக ஆனாள்..
"நானும், ரம்யாவும் வந்திருக்கோம் பல்லவி.."
"என்னது..? ரம்யா உங்ககூட இருக்காளா..? இப்பத்தான் அவளுக்குப் போன் போட்டேன் அண்ணி.. நம்பர் பிஸின்னு வந்துச்சு.. சரி.. முதல்ல உங்களுக்கு விவரத்தைச் சொல்லலாம்ன்னு நினைச்சேன்.." பல்லவி கதை பிணைந்தாள்..
"யார் கூடவோ பேசிக்கிட்டு இருந்தா.. பிரண்டா இருக்கலாம்.."
"இருக்கும்.. இருக்கும்.. நீங்க வர்றப்ப ரம்யாவை கையோட கூப்பிட்டுக்கிட்டு வந்துருங்க அண்ணி.. உங்க தம்பி மகள் பெயரைச் சொல்லியே புலம்பறாரு.."
பல்லவி போனில் பேசிக் கொண்டிருக்க.. உடை மாற்றிக் கொண்டு வந்து உட்கார்ந்த தியாகராஜன் புருவங்களை உயர்த்தினார்..
"மகள் பெயரைச் சொல்லிப் புலம்பறானா..? என் தம்பிக்கு என் நினைவே இல்லையா..?" அகல்யா அங்கலாய்த்தாள்..
'நீ அதிலேயே இரு..' பல்லவியால் தாங்க முடியவில்லை..
பெற்ற மகளின் பெயரைக் கூட தியாகராஜன் சொல்லக் கூடாதா..? அகல்யாவின் பெயரை மட்டும்தான் சொல்ல வேண்டுமா..?
'கொடுமை..' அவளுக்கு சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது..
எதிரே அமர்ந்து அவள் முகத்தின் உணர்வுக் கலவைகளை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்த தியாகராஜனை முறைத்தாள்..
'இவரை கட்டிக்கிட்டதுக்குப் பதில் சாமியாரிணியாய் போயிருக்கலாம்..'
பல்லவிக்கு அருள் வாக்குச் சொல்ல ஆசை வந்தது..
"உங்களைத்தான் முதலில் நினைச்சாரு அண்ணி.. உங்க பேரைச் சொல்லித்தான் புலம்பினாரு.. அதுக்கப்புறம் தான் ரம்யா பேரைச் சொன்னாரு.." அகல்யாவின் பொறாமை கொண்டு எரிந்த வயிற்றில் பொய்யெனும் பாலை வார்த்தாள்..
"அதானே.. பார்த்தேன்.." அகல்யா நிம்மதியானாள்..
"என் தம்பிக்கு நான்தானே உயர்த்தி.."
'நினைச்சுக்கிட்டே இரு..'
பல்லவி கோபத்துடன் போனை அணைத்து சோபாவில் விசிறினாள்.. அதை எடுத்து வைத்த தியாகராஜன்..
"ஐயாயிரம் ரூபாய் போன்டி.." என்றார்..
"அதை நீங்க கொடுக்கலை.. என் மகன் கொடுத்தான்.." என்றாள் பல்லவி..
தியாகராஜனின் முகம் கருத்தது.. குழந்தைகள் வளர.. வளர.. தான் தனிமைப்பட்டு.. பல்லவி பலப்பட்டு விட்டாளோ என்று அவர் சஞ்சலம் கொண்டார்.. எந்தத் தேவையாக இருந்தாலும் அவரிடம் சொல்லாமல் ராம்குமாரிடம் சொல்லி வாங்கிக் கொள்ளும் பல்லவியின் சமீப கால நடவடிக்கை அவரைக் காயப்படுத்தியது..
ரம்யா எப்போதுமே அவரிடம் ஒட்ட மாட்டாள்.. பல்லவியின் சேலை முந்தானையைப் பிடித்தபடி தாயை பின் தொடர்வாள்..
"உன்னை யாருடி அவனிடம் கேட்கச் சொன்னது..? என்கிட்டக் கேட்டா நான் வாங்கிக் கொடுக்க மாட்டேனா..?" என்று ஒரு கணவனின் கோபத்தோடு கேட்டார் தியாகராஜன்..
"நீங்கதானே..? கேட்டவுடனே வாங்கிக் கொடுத் துட்டுத்தானே மறுவேலை பார்ப்பீங்க..?" ஏளனமாக சொன்னாள் பல்லவி..
மனைவியின் ஏளனம் தியாகராஜனின் மனதில் தைத்தது..
"வாங்கிக் கொடுக்க வக்கில்லாதவன்னு சொல்கிறயா..?" ஒரு மாதிரியான குரலில் வினவினார்..
"வக்கெல்லாம் இருக்கு.. மனசுதான் இல்லை.." விட்டேற்றியாக பதில் சொன்னாள் பல்லவி..
"புரியலை.." தீர்க்கமாக அவளைப் பார்த்தார் தியாகராஜன்..
"உங்களுக்கா புரியாது..? நான் உங்களிடம் கேட்டிருப்பேன்தான்.. நீங்க உங்க அக்காகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு வாங்கிக் கொடுக்கிறேன்னு சொல்லியிருப்பீங்க.." நொடித்தாள் பல்லவி..
தியாகராஜனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது.. இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ள நேரிடும் போது.. இயலாமையுடன் அவர் தன்னைத்தானே நொந்து கொள்கிறார்.. தமக்கை மீதா அவரின் பாசம் எந்த அளவுக்கு அவரை கையாலாகாத கணவனாக மாற்றியிருக்கிறது என்ற கடந்த கால வரலாற்றில் அவர் இது போன்ற பல தருணங்களைத் தினந்தோறும் எதிர்கொள்ள வேண்டி வருகிறது என்பதில் அவர் மனம் துன்பம் கொண்டது..
"யாரிடம் பேசிக்கிட்டு இருந்த..? ஒரு வாரமா படுத்த படுக்கையா இருக்கிறார்ன்னு சொன்னயே.. யார் படுத்த படுக்கையா இருக்கிறது..?"
பேச்சை மாற்ற விரும்பி அவர் கேட்டார்.. பல்லவி அவர் முகத்தைப் பார்க்காமல் உலர்ந்திருந்த துணிகளை மடித்து வைத்தபடி அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னாள்..
"உங்க அக்காகிட்டத்தான் பேசிக்கிட்டு இருந்தேன்.. ஒருவாரமா படுத்த படுக்கையா நீங்க இருக்கறிங்கன்னு அவங்ககிட்டச் சொல்லிக்கிட்டிருந்தேன்."
"என்னது..?" அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது..
"ஏண்டி.. புருசனைப் பிடிக்கலைன்னா அவனை படுத்த படுக்கையாய் ஆக்கி விடுவயா..?" கோபத்தில் அவருக்கு மூச்சிரைத்தது..
"பிடிக்காமல்தான் உங்க அக்கா பண்ணின அத்தனை அட்டூழியங்களையும் சகித்துக்கிட்டு உங்ககூட வாழ்ந்து.. ஒன்றுக்கு இரண்டாய் பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்தேனா..?"
பல்லவியின் கோபத்தில் அவர் முகத்தில் அசடு வழிந்தது.. என்றுமே மனைவி.. மனைவிதான் என்று வெற்றிகரமாக தோல்வியைத் தழுவினார் அவர்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -81
அழகான ராட்சசியே -81
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-81.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-81.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy