அழகான ராட்சசியே -74

74 எனக்கும் உனக்கும் என்ன உறவென்று.. ஏட்டிக்குப் போட்டியாக கேட்டுவைக்கும் அழகான ராட்சசி நீ.... அகல்யா கைகளைப் பிசைந்தாள்.. செ...


74
எனக்கும் உனக்கும் என்ன உறவென்று..
ஏட்டிக்குப் போட்டியாக கேட்டுவைக்கும்
அழகான ராட்சசி நீ....


அகல்யா கைகளைப் பிசைந்தாள்.. செல்போனில் அடுத்த நம்பர்களை அழுத்தினாள்.. அவள் பெயரைக் கேட்டதுமே அணைத்து இணைப்புகளும் துண்டிக்கப் பட்டதில் அவளுக்குள் ஆத்திரம் கிளம்பியது..
'எல்லாம் அந்தக் கிழவன் செய்கிற வேலை..' ஆத்திரப் பட்டாள்..
அவளால் அதை மட்டும்தான் செய்ய முடியும்.. நரேந்திரனின் கம்பெனிகளின் பக்கம் போய் விட முடியாது.. அங்கே கஜேந்திரனின் ஆளுகை இருந்தது.. முக்கியமான பொறுப்புக்களை இன்னமும் தன் வசத்திலேயே வைத்திருந்தார் அவர்.. சில கம்பெனிகள் அவர் பெயரில் இருந்தன.. கிழட்டுச் சிங்கமான அவரிடம் நரேந்திரன் பணிவையும், மரியாதையையும் மட்டுமே காட்டி வந்தான்.. அவர் நரேந்திரனின் குரு.. அனைத்து மானவர்.. நரேந்திரன் குருப் ஆஃப் கம்பெனிஸின்.. மூலமான கஜேந்திரன் இண்டஸ்ட்ரிஸின் மேனேஜிங் டைரக்டர் என்பதினால் நரேந்திரன் குருப் ஆஃப் கம்பெனிஸின் மேல்பட்ட தொழிலாளர்கள் முதல் அடிமட்டத் தொழிலாளர்கள் வரை அனைவருமே அவரின் ஆணைக்குக் கீழ்படிந்தனர்.. அருண்குமாரால் அந்தக் கோட்டைக்குள் அங்கே வேலை செய்பவன் என்ற ரீதியில் மட்டுமே போய்வர முடிந்தது.. மற்றபடி அவன் தனது உறவு முறையை கம்பெனியில் சொல்லிக் கொண்டதில்லை..
'ச்சே..! அந்த ஆளை கோடிஸ்வரன்னு நம்பி ஏமாந்துட்டு.. இப்படி எதுக்கும் சொந்தம் கொண்டாட முடியாம தள்ளி நிக்கறேன்..'
அகல்யாவின் மனதில் பதட்டம் வந்தது.. நரேந்திரன் அந்த வீட்டை விட்டுப் போய் ஆறுமாதங்களாகி விட்டன.. முதலில் அதை கண்டு கொள்ளாமல்தான் இருந்தாள் அகல்யா.. திடிர், திடிரென வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் நரேந்திரன் அதைப்பற்றி அகல்யாவுக்கோ.. மற்றவர்களுக்கோ சொல்லமாட்டான்.. பெங்களூரில் இருந்தால் வருவான்.. வேலை வந்தால் கிளம்பிப் போய் கொண்டே இருப்பான்..
'நாடோடி..' இப்படித்தான் அகல்யா அவனை நினைப்பாள்..
'ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாத பிழைப்பு.. என்ன பிழைப்பு..'
இப்படி இகழ்ச்சியாக நினைப்பவள்.. அந்த நாடோடி கொடுத்த பணத்தில் உட்கார்ந்து சாப்பிட்டாள்.. உயர்ந்த விலையில் வைரங்களை வாங்கிப் பூட்டிக் கொண்டாள்.. காஞ்சிப் பட்டில் நகர்வலம் வந்தாள்..
அவையெல்லாம் என்றும் நிலைக்க வேண்டு மென்றால் நரேந்திரன் அந்த வீட்டில் நிலைக்க வேண்டும் என்பதே அவளின் தீவிரமான குறிக்கோளாக இருந்தது..
அதற்காகத்தான் ரம்யாவை அவனுடன் பழக விட்டு அவள்மூலம் அவனை அந்த வீட்டில் இருத்திக் கொள்ள முயன்றாள்.. நரேந்திரனோ ஒரு கனல் கக்கும் பார்வையிலேயே ரம்யாவை ஓரம் கட்டி நிறுத்தி விட்டான்..
"எங்கே போயிருப்பான்னு தெரியலையே.."
அகல்யா திகிலுடன் வாய் விட்டுப் புலம்பினாள்.. இரண்டு மாதங்களுக்கு மேல் நரேந்திரன் வெளிநாட்டில் தங்கியதில்லை.. இதைப்போல ஒருமுறை அவன் மாதக் கணக்கில் மாயமாகி யாரும் அறியாத வண்ணம் அவனது திருமண ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்து முடித்து.. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் அகல்யாவிற்கும்.. அவள் பிள்ளைகளுக்கும் விவரம் சொல்லி.. ஊர்மிளாவின் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கி கொண்டதை நினைத்துப் பார்த்தவளுக்கு திகில் அதிகரித்தது..
நரேந்திரன் மாதக் கணக்கில் வீட்டுக்கு வராமல் இருந்ததைக் கூட அவளால் தாங்கிக் கொண்டிருக்க முடியும்.. அவனுடைய பொருள்களும், உடைமைகளும் அந்த வீட்டிலிருந்து வெளியேறியதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
நரேந்திரன் கிளம்பிப் போன இரண்டாம் மாதமே அந்த வீட்டிலிருந்த அவன் பொருள்களை ஏற்றிச் செல்ல லாரி வந்தது.. அகல்யா சப்தம் போட்டாள்.. நரேந்திரனின் அறைச் சாவியை கையில் வைத்திருந்த அவனுடைய செக்ரட்டரி அகல்யாவை பொருட்படுத்தவே இல்லை..
"என் மகன் வீட்டில் இல்லாதப்ப அவன் பொருள்களை நீ எடுத்துக்கிட்டுப் போக நான் அனுமதிக்க மாட்டேன்.." அகல்யா குறுக்கே நின்று கை மறித்தாள்..
"அம்மா அவங்களை அவங்கவேலையைச் செய்ய விடுங்க.."
அருண்குமார் அகல்யாவை இழுத்து விட்டு, செகரட்டரியிடம் மன்னிப்புக் கேட்டு வைத்தான்..
"என்னடா செய்கிற..?" அகல்யா பொங்கினாள்..
"அண்ணன் எனக்குப் போன் பண்ணியிருந்தாரும்மா.. அவரோட திங்ஸை பேக் பண்ணி அனுப்ப அவரோட செகரட்டரி வருவாங்க.. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுன்னு சொன்னாரு.."
"உன்கிட்டப் பேசினானா..? எப்படிடா..? நான் போன் போட்டா அவன் நம்பர் கிடைக்கலியே.."
"வேற சிம் மாத்தியிருக்காரு.."
"அந்த நம்பரை என்கிட்டக் கொடு.. நான் அவனிடம் பேசுகிறேன்.."
"வேண்டாம்.. உங்களிடம்தான் முக்கியமா சொல்லக் கூடாதுன்னு அண்ணன் சொல்லியிருக்காரு.."
"டேய்.. நான் உன் அம்மாடா.."
"பட், அவர் எனக்கு பாஸ்..! ஆபிஸ் ரகசியங்களை வெளியே சொல்ல முடியாது.. ஐ ஆம் ஸாரி.."
அருண்குமார் மறுத்து விட்டான்.. செக்ரட்டரியின் ஏளனப் பார்வையில் அகல்யா முகம் கருத்தாள்.. அவளை கண்டு கொள்ளாமல் செகரட்டரி கையில் இருந்த பேப்பரில் சொல்லப்பட்டிருந்த அத்தனை பொருள்களையும்.. நரேந்திரனின் உடைகள் அடங்கிய பெட்டிகளையும் சரிபார்த்து லாரியில் ஏற்றி விட்டு.. அறையைப் பூட்டிச் சாவியை கையில் எடுத்துக் கொண்டாள்..
"அதான் இருந்த சாமானையெல்லாம் ஏத்தி விட்டாச்சே.. இன்னும் என்ன இருக்குன்னு ரூமை பூட்டிச் சாவியைக் கொண்டு போகிற..? இங்கே கொடு.." சாவியை வாங்கிக் கொள்ள கை நீட்டினாள் அகல்யா..
"ஊஹீம்.. சார் சொன்ன திங்ஸெல்லாம் பேக் பண்ணி அனுப்பிட்டாலும் முக்கியமான எதையாவது சார் சொல்லாமல் விட்டிருக்கலாம்.. திடிர்ன்னு நினைவு
வந்து எடுத்து அனுப்பச் சொல்லலாம்.. அதனால் சாவி என்னிடமே இருக்கட்டும்ன்னு சார் சொல்லியிருக்கார்.." செக்ரட்டரி அகல்யாவை நம்பாத பார்வை பார்த்தபடி சொன்னாள்..
'எல்லாம் அவன் கொடுக்கிற திமிர்..' அகல்யாவின் ரத்தம் கொதித்தது..
அவள் வீட்டிலேயே ஒரு அறை பூட்டப் படுகிறது.. அதன் சாவி நரேந்திரனிடம் வேலை பார்க்கும் ஒரு நபர் வசம் இருக்கிறது.. அவள் அந்தச் சாவியை அகல்யாவிடம் தர மறுக்கிறாள் என்றால் அந்த வீட்டில் அகல்யா என்ன நிலைமையில் இருக்கிறாள்..?
'வாடகைக்கு குடியிருந்தாக்கூட.. இப்படிப்பட்ட அராஜகம் நடக்காது..' அவள் பொருமினாள்..
அலட்சியப் பார்வையுடன் செகரட்டரி படியிறங்க முற்பட்டாள்..
"அதுக்குள்ளே கிளம்பனுமா..? ஒரு கப் காபி சாப்பிட்டுட்டுப் போகலாமே.." அகல்யா அவளிடம் கொஞ்சினாள்..
அகல்யா அப்படித்தான்.. காரியம் ஆக வேண்டுமானால் கழுதையாக அவள் நினைப்பவர்களின் கால்களையும் பிடிப்பாள்.. அதிலெல்லாம் மான, ரோசம் பார்க்க மாட்டாள்..
அந்த செகரட்டரி அகல்யா போலில்லையே.. அவள் அதையெல்லாம் பார்ப்பவளைப் போல இருந்தாள்.. அகல்யாவை முறைத்தாள்.. உன் காபி யாருக்கு வேண்டும் என்பதைப் போல உதாசீனப் பார்வையை பார்த்தாள்..
"பாரு வனிதா.. இந்தம்மாவுக்கு இப்படியாப்பட்ட ஆளுகதான் தோது.. என்னமாப் பாக்குது அந்தப் பொண்ணு.." வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாதுரி வனிதாவின் காதை கடித்தாள்..
வனிதாவுக்கும் அதே எண்ணம்தான் என்றாலும் அவள் மாதுரியின் வார்த்தைகளுக்கு ஆமாம் என்று தலையாட்டவில்லை..
காலையில்தான் மாதுரி டிரைவர் ரமேஷின் முன்னாலே வனிதாவை 'அக்கா' என்று அழைத்து வைத்திருந்தாள்.. ஒன்றும் தெரியாத குழந்தையைப் போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் நான்கு அப்பு அப்ப வேண்டுமென்ற கோபம் இன்னமும் வனிதாவின் மனதில் கனன்று கொண்டிருந்தது.. அப்படி 'அக்கா' என்று அழைத்தவள் வனிதாவைப் பார்த்து அழைக்காமல், டிரைவரைப் பார்த்தபடி அழைத்ததில் வனிதாவின் ரத்த அழுத்தம் எகிறி விட்டது..
'இருக்குடி உனக்கு.. நீ பப்பா..! நான் உனக்கு அக்காவா..?'
அவள் பல்லைக் கடித்தபடி மாதுரியை துவம்சம் பண்ண நல்லதொரு சமயத்திற்காக காத்துக் கொண்டிருந்தாள்..
அப்படி ஓடு மீனை ஓட விட்டு.. உறுமீன் வரும் வரை.. காத்திருக்கும் கொக்காக அவள் மாறியிருப்பதை அறியாத பப்பாவான மாதுரி வனிதாவிடம் பழமைபேச விழைய.. வனிதாவோ.. 'யாரடி நீ மோகினி..!' என்ற வெறுப்புப் பார்வையுடன் சமையலே கண்ணாகினாள்.. அதை கண்டுகொண்டு ஒதுங்காமல் மாதுரி வனிதாவின் தோளைத் தட்டி அழைத்தாள்..
"அங்கே பாரு வனிதா.. நம்ம வீட்டம்மா போடற நாடகத்தை.."
வனிதா அசூசையோடு மாதுரியின் கையைத் தட்டி விட்டாள்.. அதில் மாதுரி முகம் மாறிப் போனாள்..
"ஆமாண்டி.. உனக்கெல்லாம் மூணுவேளையும் சோற்றைப் போட்டு, இருக்க இடமும் கொடுத்து.. நல்ல நாள்.. திங்க நாளைக்கு புதுத்துணி வாங்கிக் கொடுத்து.. மாதம் பொறந்தா டாண்ணு ஆயிரக்கணக்கில சம்பளமும் கொடுத்தா.. நீ அவங்க போடறது நாடகம்ன்னு பேசுவ.. நீ பேசலைடி.. உன் கொழுப்பு பேசச் சொல்லுது.."
வனிதா போட்ட போட்டில் மாதுரி அரண்டு போனாள்.. அன்றுவரை அகல்யாவிற்கு எதிரான அத்தனை புறம் பேசல்களுக்கும் காதைக் கொடுத்துக் கொண்டிருந்த வனிதா எப்போது அகல்யாவின் அடி வருடியாக மாறினாள் என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தாள்..
"இருடி.. இப்பவே அவங்களைக் கூப்பிட்டு நீ ஆடற நாடகத்தைப் பிட்டுப் பிட்டு வைக்கறேன்.. அவங்களையா நாடகம் போடறாங்கன்னு சொன்ன..? நீதாண்டி நாடகம் போட்டுக்கிட்டு இருக்க.."
"நான் நாடகம் போடறேனா..?"
"ஆமாம்.. நீ நாடகம்தான் போடற.."
ரமேஷைக் கண்டதும் மாதுரி கண்களை ஒரு மாதிரி கிறக்கமாக போதை தளும்ப 'சில்க்' மாதிரி வைத்துக் கொண்டு.. அவன் கவனத்தைக் கவரும் விதத்தில் உரக்கப் பேசி.. சிரித்து.. மயக்க முற்படுவதை நினைவு கூர்ந்தபடி பல்லைக் கடித்தாள் வனிதா..
"வேணாம் வனிதா.. நானே எனக்கென்னன்னு இருக்கறேன்.."
"நான் மட்டும் நீ வேலைக்கென்னன்னு இருக்கிறன்னா சொன்னேன்..? உண்கிறதும், உறங்கறதும், இந்த வீட்டிலதான்ங்கிறதை மறந்துட்டு.. எதுக்காக இந்த வீட்டிலே இருக்கிறோம்ங்கிற நினைப்பில்லாம.. தரைக்கு வலிக்குமோன்னு கூட்டித் துடைச்சுக்கிட்டு.. டிவி சீரியல் ஒன்னு விடாம பாத்து முடிச்சுட்டு.. நேரா நேரத்துக்கு கொட்டிக்க மட்டும் டாண்ணு வந்து நின்னுடறயே.. நீ எனக்கென்னன்னு இருக்காம எப்படி இருக்க..?"
விட்டால் வனிதா மாதுரியை கொத்து புரோட்டா போட்டு விடுவாள் என்று அஞ்சிப் போன மாதுரி அவசரமாக வாயை மூடிக்கொண்டு நகரத்தான் போனாள்.. ஆனால்.. விதிஅவளை ரமேஷின் ரூபத்தில் அங்கேயே நிறுத்தி வைத்தது..
"ஏன்க்கா.. இப்படி கோவிச்சுக்கற..? அக்கா நீ சொன்னா.. தங்கச்சி நானு கேட்டுக்க மாட்டேனாக்கா..? சொல்லுக்கா.. அக்கா நீ இருக்கிற தைரியத்திலதான.. சின்னப் புள்ளயான நானு இந்த வீட்டிலே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்.. பெரியவளான நீ நல்லது  கெட்டதை எடுத்துச் சொல்வ.. பச்சைப் புள்ளையான எனக்கு வழி காட்டி விடுவங்கிற தைரியத்திலதான நானு உன் சேலை முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு சுத்திச் சுத்தி வர்றேன்.. தாயைப் போல இருந்தவ.. பச்சைப் புள்ளய கடிஞ்சு பேசினா நான் எங்கேக்கா போவேன்..?"
ஏற்ற இறக்கத்துடன் பேசியவளின் பேச்சு பேச்சாக இருக்க.. கண்கள் ஆலவட்டம் ஆடியதில் அந்தப்பக்கம் ரமேஷ் நின்று கொண்டிருக்கிறான் என்பதை வனிதா புரிந்து கொண்டாள்.. கொதித்துப் போனவள்.. தோசைக் கரண்டியை எடுத்து கேஸ் ஸ்டவ்வின் தணலில் வைத்தாள்.. ஆலவட்டம் போட்டுக் கொண்டிருந்த மாதுரியின் பார்வை அந்தப் பக்கம் திரும்பினால்தானே அதைப் பார்ப்பதற்கு..?
அவள் ரமேஷின் பார்வையை தன் காந்தப் பார்வையால் இழுக்கும் முயற்சியில் இருந்தாள்.. வனிதா சூடான தோசைக் கரண்டியை எடுத்து இயல்பாக வைப்பதைப் போல மாதுரியின் கையில் வைத்து அழுத்தி விட்டாள்..
"ஸ் ஆ..! வனிதா...!"
மாதுரி அலறியபடி கையை உதறினாள்.. பதறிப் போன ரமேஷ் என்னவென்று பார்க்க அருகில் வர முனைந்தான்.. நிமிர்ந்து அவனைப் பார்த்த வனிதாவின் உக்கிரமான பார்வையில் அதைவிடப் பதறிப் போனவனாக வந்த வேகத்தில் பின்னால் போனான்..
ஆடி.. அசைந்து திரும்பிப் பார்த்த வனிதா.. அலட்டிக் கொள்ளாமல் மாதுரியைப் பார்த்து விழி விரித்தாள்..
"இங்கேயென்னடி பண்ணிக்கிட்டு இருக்கிற..? உன்னை வீட்டை கூட்டித் துடைக்கச் சொல்லி அப்பவே அம்மா சத்தம் போட்டாங்களே.. நீ அங்கேயிருக்கன்னுல்ல நான் நினைச்சேன்.. அடுப்படி பக்கம் வராதேடி.. இன்னைக்கு கரண்டி சூட்டோடு போச்சு.. இதில்லாம கொதிக்கிற குழம்பு உன்மேல கொட்டியிருந்தா என்ன ஆகியிருக்கும்..?"
'என்ன ஆகியிருக்கும்..!'
அந்த நினைவில் அரண்டு போனாள் மாதுரி.. வனிதா விடுக்கும் அப்பட்டமான எச்சரிக்கையில் அவளுக்கு குளிரும் காய்ச்சலும் சேர்ந்து வந்து விடுவதைப் போல ஆகிவிட்டது..
'யார்கிட்ட வைச்சுக்கிட்டாலும் சமையல்காரிகிட்ட பகையை வைச்சுக்கக் கூடாது போல..'



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -74
அழகான ராட்சசியே -74
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-74.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-74.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy