அழகான ராட்சசியே -73

73 காற்றோடு காதல் சொல்லியும்.. நேற்றோடு எனை நிறுத்திவிட்ட அழகான ராட்சசி நீ.... நரேந்திரன் சாப்பிட வந்தான்.. சுரேந்திரனுக்கு ஸ...


73
காற்றோடு காதல் சொல்லியும்..
நேற்றோடு எனை நிறுத்திவிட்ட
அழகான ராட்சசி நீ....


நரேந்திரன் சாப்பிட வந்தான்.. சுரேந்திரனுக்கு ஸ்பூனில் இட்லியை விண்டு ஊட்டி விட்டபடி கதை பேசிக் கொண்டிருந்த ஊர்மிளா மகன் சொன்ன எதையோ கேட்டு மனம் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள்.. சிரிக்கும்போது அவளின் கண்களும் சேர்ந்து சிரிப்பதைக் கண்ட நரேந்திரன் அவளை கூர்மையாக பார்த்தபடி சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்..
அவன் பார்வையில் ஊர்மிளாவின் சிரிப்பு நின்று விட்டது... அதில் அவன் முகம் கடுத்தான்.. மகனைப் பார்த்தான்.. மகனோ தகப்பனைக் கண்டதும் சிரித்தான்..
"நீ சிரிக்கிற..? உன் அம்மாவானா சிரிப்பை முழுங்கறா.. ஏண்டா..? என்னைப் பார்த்தா அவளுக்கு வில்லனைப் போல இருக்கா..?" என்று கேட்டு வைத்தான் நரேந்திரன்..
'பிள்ளைகிட்டப் பேசுகிற பேச்சைப் பார்..'  ஊர்மிளாவின் முகம் சிவந்து விட்டது..
அதை விழுங்கி விடுபவனைப் போல பார்த்த நரேந்திரனின் பார்வையில் தடுமாறியது அவளின் பெண்மனம்..
"பேசாம சாப்பிடச் சொல்லுடா..." தட்டைப் போட்டபடி மகனிடம் சொன்னாள்..
"சாப்பிதுங்க.." சுரேந்திரன் அவன் பங்குக்கு உபசரித்தான்..
"பாருடா.. இவரு எனக்கு ஆர்டர் போடறதை.." நரேந்திரன் கை நீட்டி மகனை இழுத்துக் கொண்டான்..
"சுரேன்..! யூனிபார்ம் அழுக்காயிரும்.." ஊர்மிளா நரேந்திரனை முறைத்தபடி குரல் கொடுத்தாள்..
'நேராச் சொல்ல மாட்டாளாமா..' நரேந்திரன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான்..
'பார்வையைப் பாரேன்..' ஊர்மிளாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது..
அதை மறைத்தபடி முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு பரிமாறினாள்.. அவளைப் பார்த்தபடியே சாப்பிடுகிறேன் பேர்வழியென்று டிபனை சுரேந்திரனின் யூனிபார்மில் போட்டு வைத்து ஊர்மிளாவின் பலத்த கண்டனப் பார்வைக்கு ஆளானான் நரேந்திரன்..
"ஒன்னுத் தானாத் தெரியனும்... இல்லேன்னா.. சொல்றதைக் கேட்டாவது தெரிஞ்சுக்கனும்.. இரண்டும் இல்லாம இப்படி முறைச்சு முறைச்சுப் பார்த்துக்கிட்டு.. தட்டு எங்கேயிருக்குன்னு கூடப்பார்க்காம சாப்பிட்டா இந்தக் கதிதான்.."
ஊர்மிளா மகனைத் திட்டியபடி அவனுடைய கையையும் வாயையும் துடைத்து விட்டு.. அவனுடைய யூனிபார்மில் ஒட்டியிருந்த டிபன் துகளை கைக்குட்டையில் தட்டி விட்டு.. தண்ணீரில் கழுவி விட்டு சுத்தம் செய்தாள்..
தான் ஒன்றும் செய்யவில்லையே என்ற குழப்பம் சுரேந்திரனுக்கு.. அவனை அம்மா திட்டுகிறாள் என்ற உணர்வுடன்..
"அப்பாம்மா..?" என்று நரேந்திரனின் பக்கம் கைகாட்டி விட்டான் அவன்..
"நீ சொல்லித்தான் தெரியனுமாடா கண்ணா.. எல்லாத்தையும் பார்த்துக் கிட்டுத்தானே இருக்கேன்.." ஊர்மிளா உதட்டைச் சுழித்தபடி நொடித்தாள்..
அந்த உதட்டுச் சுழிப்பிற்கே தன் அத்தனை சொத்தையும் எழுதி விடலாம் போலச் சொக்கிப் போனான் நரேந்திரனாகப்பட்ட சுந்தரபுருசன்..
"ஏண்டா டேய்... அப்பாவையே காட்டிக் கொடுக்கிறயா..?" என்றான்..
மகனைக் கொஞ்சுவதைப் போல ஊர்மிளாவிடம் ஓட்டிக் கொள்ள முயன்றான் நரேந்திரன்.. அவளோ எட்டி நின்றாள்.. நரேந்திரன் முகம் கடுத்தான்..
'இது ஒன்னு இருக்கு இவ கிட்ட..' பல்லைக் கடித்தவன்..
"என்னை வில்லன் ரேன்ஜிலேயே வைக்கிறாடா உன் அம்மா.." என்று மகனிடம் குற்றம் சொன்னான்...
தகப்பன் எதைச் சொல்கிறான் என்பது புரியா விட்டாலும்.. அவனை திடிர் பஞ்சாயத்து தலைவராக ஆக்கி விட்டதற்காக.. ஊர்மிளாவைப் பார்த்து..
"வொய்..?" என்று கை குவித்தான் குட்டி சுரேந்திரன்..
அவனின் அரட்டலைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்ட வில்லை ஊர்மிளாவுக்கு.. மத்தாப்பூ போல முகம் ஒளிர மகிழ்ந்து போனாள்...
"இது பெரிய ஆளகிருச்சு.. அம்மாவையே மிரட்டுது.." மகனின் தலையில் செல்லமாக முட்டிச் சிரித்தாள்..
அவன் ஒருவன் அங்கே இருப்பதை உணராதவர் களாக தாயும், மகனும் கொஞ்சிக் குழாவியதில் நரேந்திரனின் கடுப்பு அதிகரித்தது.. ஏகத்துக்கும் கடுப்பானவன்..
"என்னடா.. உங்கம்மாவுக்கு பிள்ளை போதும்ன்னு சொல்லாமல் சொல்லுகிறாளா..? அந்தப் பிள்ளையைக் கொடுத்த புருசன் வேணாமா..?" என்று கொதித்தான்..
'கடவுளே..' ஊர்மிளாவின் முகம் அந்தி வானமானது.
அவள் இப்போது நேரடியாகவே நரேந்திரனை முறைத்தாள்.. அதற்காகத்தானே அவன் அவளை வம்புக்கு இழுத்தான்..? அவனும் பதிலுக்கு விட்டுக் கொடுக்காமல் முறைத்தான்..
"என்னடா சொல்றா உங்கம்மா..?" கோட்டை மடிக்க வேறு செய்தான்..
அவனது திட்டம் என்னவென்பதை ஊர்மிளாவால் யூகிக்க முடிந்தது.. அவனுக்கும்.. அவளுக்கும் இடையில் எழும்பியிருக்கும் சுவரை உடைக்க வேண்டும்..
'அது அவ்வளவு எளிதானதா..?' ஊர்மிளாவின் முகம் கடினமானது..
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நரேந்திரனின் முகமும் கடினமானது..
"சுரேன்.. உனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு.. கிளம்பு.." கண்டிப்புடன் சொன்னாள் ஊர்மிளா..
"அதாவது.. அவனைக் கூப்பிட்டுக்கிட்டு நான் இடத்தைக் காலி பண்ணிடனும்.. அதானே உன் ஆர்டர்..?"
நரேந்திரன் ஊர்மிளாவைப் பார்த்துக் கேட்டான்... ஓர் நொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஊர்மிளா.. நீண்ட நாள்களுக்குப் பின்னால் அவளிடம் நேரடியாகப் பேசுகிறான் அவன்.. அத்தனை தினங்களாய் அவளுடன் அவன் நேரடியாய் பேசியதில்லை... சுரேந்திரனை ஊடே வைத்துத்தான் கணவனும் மனைவியும் பேசிக் கொள்ளுவார்கள்..
திடிரென்று உடைந்த தடுப்புச் சுவரில் ஏதும் பேச முடியாமல் உதட்டைக் கடித்தாள் ஊர்மிளா.. நரேந்திரனே தொடர்ந்து பேசினான்..
"நீ செய்கிறது ரொம்பவும் ஓவர்ன்னு உனக்கேத் தெரியலையாடி..? தெரிஞ்சும் தெரியாததைப் போல நடிக்கிறயா..?"
கோபமான அவனது கேள்வியில் ஊர்மிளாவின் தடுமாற்றம் விடைபெற்று ஓடி விட்டது.. அவளின் பழைய நிமிர்வு மீண்டுவிட்டது..
"நடிக்கிறேனா..? நானா..? எனக்கு நடிக்கத் தெரியாது.. எங்கப்பா அதைச் சொல்லிக் கொடுத்து வளர்க்கலை..?"
சூடான அவளது பதிலில் அவன் இன்னும் சூடாகிப் போனான்..
"இப்ப எதுக்காகடி உன் அப்பாவைப் பத்திப் பேசற..? எப்பவும் அவர் மகளாவே இருப்பியா..? கொஞ்சமாச்சும் என் பெண்டாட்டிங்கிற நினைப்பு உன் மனசில வரவே வராதா..? எப்பப் பாரு.. எங்கப்பா.. எங்கப்பாதான்.. ஒரு நாளாவது உன் மகனோட அப்பாவைப் பத்தி நினைச்சுப் பார்த்திருப்பியா..?"
'என்ன தேவைக்கு..?' ஊர்மிளாவின் விழிகள் அலட்சியமாக அவனைப் பார்த்தன..
"எனக்கு வேலையிருக்கு.." அவள் நகரப் போனாள்..
"ஏய்ய் நில்லு.." அவன் தடுத்தான்..
"உனக்குத்தான் வேலையிருக்கு.. எனக்கு ஒன்னுமேயில்லை பாரு.. உன் மனசில என்னதாண்டி நினைச்சுக்கிட்டு இருக்கே..?"
"எதையும் நினைக்கலை.."
"என்னை நினைக்கலைன்னு சொல்கிறயா..?"
ஊர்மிளா பதில் சொல்லவில்லை.. அவனின் கேள்விகள் எல்லை கடந்து அவள் போட்டுக் கொண்டிருக்கும் வேலியை உடைக்க முயலும் போதெல்லாம் அவள் பதில் சொல்வதை தவிர்த்து விடுவாள்..
"கல்நெஞ்சக்காரி.." அவன் குமுறினான்..
'நானா..?' அவள் இதயம் துடித்தது..
"பேசாமலே வதைக்கிறயேடி.. கிட்ட வந்தா என்னவோ ரேப் பண்ண வருகிற வில்லனை ஹீரோயின் பார்க்கிறதைப் போல பார்த்து வைக்கிற.. அதையும் மீறி கையைப் பிடிச்சா பிள்ளையைக் காட்டி என்னைத் தொட நினைக்கிறாயான்னு மனசை உடைக்கிற.. ராட்சசி..! அழகான ராட்சசி..! உனக்கு மனசுங்கிறதே இல்லையாடி.."
"இருந்தது.."
அவனது பேச்சின் வலிதாங்காமல் அவள் சொல்லி விட்டாள்..
"இருந்தது.. ஒரு காலத்திலே எனக்கும் மனசிருந்தது.. அது பூப்போல இருந்தது.. என்னைக்கு உங்ககூட வாழன்னு அந்த வீட்டில அடியெடுத்து வைச்சேனோ.. அன்றைக்கிருந்தே அது கல்நெஞ்சா மாறிருச்சு.."
"ஊர்மிளா.."
"பேசு.. பேசுன்னு சொல்கிறீங்களே.. என்ன பேச..? எதைப் பேச..? இன்னும் அந்த ராதாகிருஷ்ணன் யார்ன்னு நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லலை..
மறந்து போயிருச்சா..? பதில் கிடைக்கலைன்னாலும் பரவாயில்லைன்னு கேள்வி கேட்ட நீங்க நினைக்கலாம்.. அந்தக் கேள்வியை என் காதால் கேட்ட நான் நினைக்க முடியாது.. ஐ ஆம் ஸாரி.. நான் ராட்சசியாவே இருந்துட்டுப் போறேன்.."
ஊர்மிளா சரேலென்று பூஜையறைக்குள் போய் விட்டாள்.. அவள் மனக்கதவைத் திறக்க மாட்டாள் என்பதில் பெருமூச்சு விட்ட நரேந்திரன் மகனை கீழே இறக்கி விட்டான்.. சுரேந்திரன் பூஜையறைக்குள் போனான்.. ஊர்மிளா அவனுக்கு குங்குமமும் திருநீரும் கலந்து நெற்றியில் சின்னப் பொட்டைப் போல தீற்றி விட்டு.. அவன் கை குவித்து கடவுள்களை வணங்கச் செய்தாள்..
மகனைத் தூக்கியபடி அவனிடம் எதையோ பேசியபடி வந்தவளின் முகத்தில் மலர்ச்சி மீண்டிருந்தது.. அவளையே உறுத்துப் பார்த்தபடி மகனை வாங்கிக் கொண்டான் நரேந்திரன்.. அப்போது அவன் கைபட்டதில் நெருப்புப் பட்டதைப் போல அவள் விலகிக் கொண்டாள்..
"வேணும்னா பாத்ரூமுக்குள்ள போய் முழு சோப்பையும் கரைச்சு என் கை பட்ட இடத்தைக் கழுவி விடு.." மனம் பொறுக்காமல் பல்லைக் கடித்தபடி யோசனை சொன்னான் நரேந்திரன்..
அவள் முகம் சிகப்போடு பதில் சொல்லாமல் பேசாமல் நின்றாள்.. நரேந்திரனின் பார்வை அவள் மேல் படிந்து சுரேந்திரனின் மீதும் படிந்தது..
"இவன் எனக்குப் பிறந்தவன்.."
அழுத்தம் திருத்தமாக அவன் சொன்னதில் என் கைபட்டு விட்டதற்கே குதித்து விலகுகிறாயே.. இவன் உனக்கும், எனக்குமான உறவில் பிறந்தவன் என்ற செய்தி இருந்தது..
"ஸ்ஸ்ஸ்.." ஊர்மிளா லஜ்ஜையுடன் அடக்கினாள்..
அவனா அடங்குவான்..? அந்த அழகான ராட்சசியால் அவன் மனதில் பொங்கும் அடக்க முடியாத தாபத்தீயில் பொசுங்கிக் கொண்டிருந்தவன் அந்த கோபத்தை அப்படியே அவள்மீது கொட்டினான்..
"என்ன 'ஸ்ஸ்ஸ்..'? நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்..?"
"ஆமாமாம்.. இருக்கிறததைத்தான் சொல்லிட்டிங்க.."
ஊர்மிளாவின் மனதில் ராதாகிருஷ்ணன் யார் என்ற கேள்வி எழுந்தது.. ராதாவிற்கும்.. ராதாகிருஷ்ணனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை தெரிந்து கொள்ளாதவன் இவன் என்கிற நினைவில் அவள் முகம் கடுத்தது..
முதல் நொடியில் லஜ்ஜை கொண்டிருந்தவளின் முகம்... மறுநொடியில் கடுத்ததில் நரேந்திரனுக்கு ஆயாசமாக இருந்தது..
"உண்மையில் கோபப்பட வேண்டியது நான்.. அதைச் செய்யாமல் இயல்பா உன்னிடம் பேசிப் பழக நினைக்கிறேன்.. நீதான் உச்சாணிக் கொம்பில ஏறுகிற.." என்றான்..
"எதுக்குக் கோபப்படனும்..?" நிதானமாக வினவினாள் ஊர்மிளா..
"நீங்க இல்லாத நேரத்திலே என் பிரண்டோட நான் கூத்தடிச்சேனே.. அதுக்காக கோபப்படறிங்களா..?"
"ஏய்ய்ய்.." அவன் சினந்தான்..
"அப்படி நான் சொன்னேனா..? இல்லை அப்படித்தான் உன்னைக் கேள்வி கேட்டேனா..? நான் கேட்ட கேள்வியே வேறு.."
"ஹ..! அந்தக் கேள்வி ஒன்றும் என்னைக் கௌரவப் படுத்துகிற கேள்வி இல்லை.. எனக்கும் சுயமரியாதை இருக்கு.."
"அந்த மரியாதை எனக்கில்லையா..? நான் பாரினில் இருக்கிறேன்.. உன்னோடு போனில் பேச முடியலை.. உன் போன் சுவிட்ச் ஆஃப் ஆகுது.. நான் எப்பக் கேட்டாலும் உன் பிரண்ட் ராதாகிருஷ்ணன் கூடப் பேசிக்கிட்டு இருக்கிறதா என் சித்தி சொல்கிறாங்க.."
"ஓ.." இகழ்ச்சியாக உதட்டைக் குவித்தாள் ஊர்மிளா..
"உங்க சித்தி வாக்கு தெய்வ வாக்கு..! இல்லையா..? என்னைப் பத்தி அவங்க சொன்னா அவங்களை ஏன்னு கேட்காம.. அவங்க சொன்னது உண்மையா.. பொய்யான்னு வீட்டில் இருக்கிற அத்தனை ஆள்களையும் கூப்பிட்டு வைச்சு அவங்க முன்னாலே என்னைக் கேள்வி கேட்பீங்க.. அப்படித்தானே.."
ஊர்மிளாவின் கொதிப்பில் பல்லைக் கடித்தான் நரேந்திரன்.. அவன் என்ன செய்ய நினைத்தான் என்பதை அவள் கேட்டிருக்கிறாளா..? அவள்பக்க நியாயத்தையே சொல்கிறவள் கொஞ்சமாவது அவன் பக்கமும் ஏதேனும் நியாயம் இருக்கக் கூடும் என்று யோசித்துப் பார்க்க முனைந்திருக்கிறாளா..?
"இது அநியாயம்டி.." அவன் வெறுப்புடன் சொன்னான்..
"எனக்கு நீங்க செய்தது நியாயமா இருந்தால் மட்டுமே இது அநியாயமா இருக்கும்.. போய் என் அப்பாவிடம் கேட்டுப் பாருங்க.. அவர் சொல்வார்.. நியாயம் எது.. அநியாயம் எது என்பதை.." ஊர்மிளா உதட்டைச் சுழித்தாள்..
"மிரட்டுகிறயா..?" ஒரு மாதிரியான புயலை உள்ளடக்கிய குரலில் கேட்டான் நரேந்திரன்..
"அதையேன் நான் செய்யனும்..? நான் பிள்ளைக்காக இங்கே இருக்கிறேன்.. மத்தபடி இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.. உங்களை மிரட்ட நான் யார்..?"
ஒட்டாத குரலில் சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள் ஊர்மிளா.. கண்கள் சிவக்க.. மகனை பள்ளியில் விடக் கிளம்பினான் நரேந்திரன்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -73
அழகான ராட்சசியே -73
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-73.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-73.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy