அழகான ராட்சசியே -72

72 கல்நெஞ்சம் உனில் வைத்து.. காதலையே எனில் வைத்த.. அழகான ராட்சசி நீ.... தோட்டத்து காய்கறிச் செடிகளைப் பார்த்தபடி வாசல் படியில் ...


72
கல்நெஞ்சம் உனில் வைத்து..
காதலையே எனில் வைத்த..
அழகான ராட்சசி நீ....

தோட்டத்து காய்கறிச் செடிகளைப் பார்த்தபடி வாசல் படியில் அமர்ந்திருந்தாள் ஊர்மிளா.. பச்சைப் பசேலென்ற செடிகளின் அழகு எப்போதும் ஊர்மிளாவின் மனதில் உற்சாகத்தையே உண்டாக்கும்.. அந்த உற்சாகம் இப்போது ஊர்மிளாவின் மனதிற்குள் புகுந்து கொள்ள தயங்கி நின்றது.. அவளது இமையோரக் கனவுகள் காணாமல் போய் அங்கே சோகம் குடி கொண்டிருந்தது..
'ஒரு மாதம் ஓடிப் போயிருச்சு..'
ஊர்மிளாவின் மனம் கணக்குப் போட்டது.. இந்த ஒரு மாதமும் தெருவில் கார் சப்தம் கேட்டால் அது நரேந்திரனின் காராக இருக்குமோ என்று ஓடிப் போய் பார்ப்பாள்.. தூங்கும்போதும் அவளது செவி.. அவனது கை கதவைத் தட்டுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.. சிறிய ஒலியிலும் புரண்டு எழுந்து கதவைப் பார்ப்பாள்..
மகளின் ஆவலையும்.. துடிப்பையும்.. காணாததைப் போலக் கண்டு கொண்டிருந்த பூங்குழலியின் உயிர் துடித்தது..
பூங்குழலியும் ஒரு பெண்..! காதலாகி.. கசிந்துருகிய கணவனுடன் வாழ்ந்து கொண்டிருப்பவள்.. பெற்றவர் களுக்கு செல்ல மகளாய் இருந்தவள்.. திருமணத்திற்குப் பின்னால் ஓர்நாள் கூட பிறந்த வீட்டில் தங்கியதில்லை.. பெற்றவர்களைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பிப் போவாள்.. நேரம் செல்லச் செல்ல.. அவள் மனம் சோமசுந்தரத்திடம் தாவி விடும்..
'இப்ப என்ன செய்துகிட்டு இருப்பார்..? சாப்பிட்டிருப்பாரா..?'
இப்படி ஓடும் நினைவுகள் கடைசியில் வந்து..
'என்னை நினைச்சிருப்பாரா..?' என்பதில் வந்து முடியும்..
அதற்கு மேல் அவளுக்கு இருப்புக் கொள்ளாது.. எப்படிக் கிளம்புவது என்று அவள் தவித்துக் கொண்டிருக்கும் போதே வாசலில் சோமசுந்தரத்தின் சப்தம் கேட்டு விடும்..
"இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன்.. அப்படியே குழலியைக் கூப்பிட்டுக்கிட்டுப் போகலாம்ன்னு.." அவர் இழுப்பார்..
வீட்டில் உள்ளவர்கள் சிரித்தபடி பூங்குழலியை அவருடன் அனுப்பி வைப்பார்கள்.. மனதுக்குள் பெருமை பொங்கி வழிய சோமசுந்தரத்தின் சைக்கிளின் பின் சீட்டில் ஏறிக் கொள்வாள் பூங்குழலி..
போகும் வழியில் சோமசுந்தரம் அவளுக்கு பூ வாங்கித் தருவார்.. நேராய் வீட்டுக்குப் போகாமல் காவிரியாற்றின் கரையில்.. மணலில் உட்கார்ந்து கதை பேசுவார்கள்.. சில நாள்களில் அவர், அவளை சினிமாவுக்கு அழைத்துச் செல்வார்.. கணவனின் கை விரல்களுடன் விரல் கோர்க்க. அவர் தோளில் தலை சாய்ந்து சினிமா பார்ப்பதை பரம சுகமாக நினைப்பாள் பூங்குழலி..
அது போன்ற உணர்வுகளும், நினைவுகளும், ஏக்கங்களும், பெண்களுக்கு மட்டுமே சொந்தமானவை..
அவை ஊர்மிளாவிற்கும் இருக்குமல்லவா..?
அதை வெளியில் சொல்லாமல் மனதுக்குள் மறைத்து.. ஒரு சிறு சப்தத்திலும் கணவனின் காலடி யோசையைத் தேடி ஏமாறிச் சோரும் மகளைக் கண்டு மனம் நைந்தாள் பூங்குழலி..
வைராக்கியத்துடன் இருந்தாலும்.. மனம் முழுவதும் நரேந்திரனைப் பற்றிய நினைவுகளுடனும்.. அவன் மீதான காதலுடனும் இருந்தாள் ஊர்மிளா.. அவனைப் பற்றி எந்தவொரு வார்த்தையையும் பேசாமல் இறுகிப் போனவளாய் மௌனத்தில் உறைந்திருக்கும் மகளின் மனதில் கணவனின் மீதான காதல் உறைந்திருக்கிறது என்பதை கண்டு கொண்டாள் பூங்குழலி..
"இவதான் இப்படி இருக்கிறான்னா.. நீங்களும் அவ போக்கிலேயே போனா எப்படிங்க..?" தயக்கத்துடன் சோமசுந்தரத்திடம் பேச்சை ஆரம்பித்தாள்..
"வேறென்ன செய்யலாம்ன்னு நினைக்கிற..?" சோமசுந்தரத்தின் கூர்மையான பார்வை மனைவியை துளைத்தது..
"அதில்லைங்க.. வாயும், வயிறுமா இருக்கிற பொண்ணு.." பூங்குழலியில் கண்கள் கலங்கின..
சோமசுந்தரம் நிதானித்தார்.. மனைவி சொல்வதை அவர் நினைத்துப் பார்க்காமல் இல்லை.. அதே சமயத்தில்.. இந்த மாதிரியான உடல்நிலையுடன் இருக்கும் மனைவிக்கு மனவேதனையைத் தந்து பிறந்தவீட்டுக்கு ஓடி வர வைத்து விட்ட நரேந்திரனை மன்னிக்கவும் அவரால் முடியவில்லை.
"பிள்ளைத் தாய்ச்சிப் பொண்ணுக்கு புருசன் பக்கத்தில இருக்கனும்னு ஆசை இருக்காதா..?"
அவளும் அது போல்தான் இருந்திருக்கிறாள் என்பதை குறிப்பில் உணர்த்தினாள் குழலி..
"இருக்கும்தான் குழலி.. அதை உன் மக வாய்திறந்து சொன்னாளா..?"
"அவ எப்படிங்க சொல்வா..? நாமதான் அதைப் புரிஞ்சு.." பூங்குழலி இழுக்க..
"சொல்லு.. அதைப் புரிஞ்சுக்கிட்டு என்ன செய்யனும்கிற..?" சோமசுந்தரம் ஊக்குவித்தார்..
உணர்வுகள் துடைக்கப்பட்ட அவரின் இறுகிய முகத்திலிருந்து பூங்குழலியால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.. அவர் கோபமாய் இருக்கிறாரா.. இல்லை குணசாலியாய் பேசுகிறாரா என்று புரியாமல் குழம்பியபடி..
"நீங்கதான் மாப்பிள்ளைக்கு போன் போட்டுத் தகவலைச் சொல்லாமில்ல.." என்று சொல்லி விட்டாள்..
"என்னை யாருன்னு நினைச்சேடி..?" சோமசுந்தரம் கர்ஜித்தார்..
"மெல்லப் பேசுங்க.. ஊர்மிளா காதில் விழுந்திரப் போகுது.." பூங்குழலி பயந்தாள்..
சோமசுந்தரம் குரலைத் தாழ்த்திக் கொண்டாலும் கோபம் குறையாதவராகப் பேசித் தள்ளினார்..
"நிச்சயமாச் சொல்லுவேண்டி.. எப்போத் தெரியுமா..? என் பெண்டாட்டி எங்கேன்னு உன் மருமகன் நம்ம வீட்டு வாசப்படியிலே வந்து நின்னுக் கேக்கட்டும்.. அப்போ இந்த தகவலைச் சொல்றேன்.. அதுவரைக்கும் இங்கேயிருந்து புறா விடு தூது கூட உன் மருமகன் இருக்கிற திசைப் பக்கம் போகாது.."
"ஊர்மிளாவுக்காக பாருங்க.."
"அவளுக்காகத்தான் பார்க்கிறேன்.. இல்லேன்னா எனக்கிருக்கிற கோபத்தில பெங்களூருக்குப் போய் அந்த கோடிஸ்வரன் சட்டைக் காலரைப் பிடிச்சு.. இதுதான்
நீ குடும்பம் நடத்தற லட்சணமான்னு கேட்டுட்டு வந்திருப்பேன்.. பெரிய மனுசனாம்.. பெரிய மனுசன்.. பணம் காசு இருந்தாப் போதுமாடி..? குணமிருக்கனும்.."
சோமசுந்தரத்தின் கொதிப்பில் பூங்குழலி நரேந்திரனைப் பற்றிய பேச்சை எடுப்பதையே விட்டு விட்டாள்.. ஊர்மிளாவோ.. மனதுக்குள் இருக்கும் ஏக்கத்தையும், காதலையும் வெளிக்காட்டாமல் இறுகிப் போன முகத்துடன் வீட்டை வளைய வந்தாள்.. நாளாக.. ஆக.. அவளின் மனவேதனை அதிகரித்துக் கொண்டே இருந்தது.. திருச்சியில் அவளும், நரேந்திரனும் சுற்றிய இடங்களின் நினைவுச் சுவடுகள் அவளை அலைக்கழித்தன..
அந்த நேரத்தில்தான் அவளைப் பார்க்க வந்தாள் அமிர்தா.. தோழியை பரிசோதித்தவள் அவளுக்கான மருந்து, மாத்திரை, டானிக்குகளை எழுதிக் கொடுத்தாள்.. அவள் கை பிடித்து..
"தஞ்சாவூரிலே எனக்கு ஒரு வேலை வாங்கிக் குடு அமிர்தா.." என்று கெஞ்சுதலாக கேட்டாள் ஊர்மிளா..
"ஏண்டி..? இங்கேன்னா.. உங்களுக்குன்னு சொந்த வீடு இருக்கு.. அப்பாவோட புத்தகக் கடை இருக்கு.. பழகினவங்க இருக்கிறாங்க.."
"கூடவே நரேனோட நினைவுகளும் இருக்கே.."
துயரத்துடன் சொன்ன தோழியை கூர்ந்து பார்த்தாள் அமிர்தா.. அலைபாயும் அவள் மனக் கடலை.. அவள் விழியசைவில் அமிர்தாவினால் கண்டுணர முடிந்தது..
அவள் யோசித்தாள்.. வழி கிடைத்தது.. அதை தோழியிடம் சொன்னாள்..
"என் ரிலேடிவ் ஸ்கூல் நடத்தறாங்க.. அதில் உனக்கு டீச்சர் போஸ்ட் வாங்கித் தரேன்.. நீ எம்.எஸ்.ஸி. பி.எட்.. உடனே அப்பாயிண்ட் பண்ணிக்குவாங்க.. வீடும் பார்த்து வைக்கிறேன்.. இந்த மன்த் எண்டில நீங்க கிளம்பி வாங்க.."
அமிர்தா சொன்னதைச் செய்தாள்.. தஞ்சையில் ஊர்மிளாவுக்கு வேலை கிடைத்தது.. வீடும் கிடைத்தது.. சோமசுந்தரத்திடம் அவள் தயங்கியபடியே குற்ற உணர்வுடன் விவரம் சொன்னபோது அவர் இதமாக புன்னகைத்து மகளின் தலைமுடியை கோதிவிட்டார்..
"இதுக்கு ஏம்மா இவ்வளவு தயங்கற..? உனக்கு எங்கேயிருக்கனும்னு தோணுதோ.. அங்கே நாம் இருக்கலாம்.."
"அப்பா.." நன்றியுடன் அவர் கரங்களில் முகம் புதைத்துக் கொண்டாள் ஊர்மிளா..
"நீ அமைதியா இருக்கனும்.. அதுதான் எங்களுக்கு முக்கியம்.."
"ஆனாப்பா.. உங்க புத்தக்கடை..?"
சோமசுந்தரம் எந்த அளவுக்கு அவருடைய புத்தகங்களையும், அந்தப் புத்தகக் கடையையும் நேசித்தார் என்பதை அறிந்து வைத்திருந்த ஊர்மிளா குரல் நடுங்கக் கேட்டாள்..
"புத்தகக் கடை எங்கே போகப் போகுது..? வீட்டை வாடகைக்கு விட்டுரலாம்.. புத்தகக்கடையைக் கவனிக்க ஆள் போட்டுரலாம்.. வாரம் ஒருதடவை வந்து நான் கணக்கு வழக்கைப் பார்த்துட்டுப் போய்க்கறேன்.. தஞ்சாவூர் எங்கே இருக்கு..? திருச்சியில இருந்து கூப்பிடு தொலைவிலதான இருக்கு.. அங்கே போக நாம எதுக்காக மலைக்கனும்..?"
ஊர்மிளாவின் குற்ற உணர்வை ஊதித் தள்ளினார் சோமசுந்தரம்.. ஊர் விட்டு ஊர் போகும் மகளின் முடிவை வெகு இலகுவாக ஏற்றுக் கொண்டார்.. அவளுக்காக அவளுடைய பெற்றோர் குடி பெயர்ந்தார்கள்..
தஞ்சையில் அமிர்தா பார்த்து வைத்திருந்த வீடு.. அழகாகவும் வசதியாகவும் இருந்தது... ஊர்மிளா வேலைக்குப் போய் வர ஆரம்பித்தாள்... மெல்ல அந்த வாழ்க்கைக்கு அவர்கள் பழகிப் போனார்கள்.. ஊர்மிளாவின் வயிறு வளர்ந்தது.. பிரசவ நாளும் நெருங்கியது.. அமிர்தாவின் கவனிப்பில் அவள் வேலை பார்த்த மருத்துவ மனையிலேயே பிரசவத்திற்காக சேர்ந்தாள் ஊர்மிளா..
விடியலை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் நரேந்திரனின் மகன் பிறந்தான்.. தகப்பனின் சாயலை தனதாக்கிப் பிறந்ததிருந்த குழந்தையைக் கண்டதும் ஊர்மிளாவின் முகம் விகசித்தது... அவள் விழிகள் மலர்ந்தன..
"அவங்கப்பாவைப் போலவே இருக்கானில்லம்மா..?"
ஆனந்ததுடன் பூங்குழலியிடம் கேட்டபடி குழந்தையை ஏந்திக் கொண்டவளைப் பார்த்ததும்.. கண்கள் பனிக்க கணவரை ஏறிட்டாள் பூங்குழலி.. இருவரின் பார்வைகளும் பேசிக் கொண்டன..
"இப்பயாவது அவருக்குத் தகவல் சொல்லுங்களேன்.." பூங்குழலி கெஞ்சினாள்..
"எவருக்கு..?" தெரியாதவரைப் போல கேட்டார் சோமசுந்தரம்..
'இந்த மனுசருக்கு இருக்கிற அழும்பிருக்கே..' பூங்குழலிக்கு அழுகை வந்து விடும் போல இருந்தது..
"ம்ம்ம்.. வழியில் போகிற யாருக்கோ சொல்லி விடச் சொல்கிறேன்.. எல்லாம் நம்ம மருமகனுக்குத்தான் சொல்லச் சொல்கிறேன்.." கோபத்துடன் சொன்னாள் பூங்குழலி..
"அதாவது நம்ம பேரனோட அப்பாவுக்குச் சொல்லனும்கிற.." அடாவடி சோமசுந்தரம் விடாமல் விளக்கம் கேட்டார்..
"அப்பா சாமி.. உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்.. இப்படி வில்லங்கம் வீராச்சாமியா வியாக்கினம் பேசிக்கிட்டு இருக்காம.. அவருக்குத் தகவல் சொல்லி விடுங்க.." பூங்குழலி கை குவித்து விட்டாள்..
"அதை நம்ம பேரனோட அம்மா சொல்லட்டும்டி.." என்று சொல்லி விட்டார் சோமசுந்தரம்..
ஊர்மிளாவிடம் பஞ்சாயத்து போனபோது.. அவள் கை அணைவிலிருந்த மகனின் முகத்தையே பார்த்தபடி பேசாமல் இருந்தாள்.. அவள் முகம் இறுகியது..
"வேண்டாம்மா.." மறுத்து விட்டாள்..
"நான் சொல்லலை..?" வெற்றி முரசு கொட்டினார் சோமசுந்தரம்..
"உங்களுக்கு சந்தோசம் கொண்டாடுமே.." பூங்குழலி பல்லைக் கடித்தாள்..
"இருக்காதா பின்னே..? அவ யாரு.. என் மகள்டி.. ரோசத்திலேயும் கோபத்திலேயும் என்னைக் கொண்டிருக்கா.." சோமசுந்தரம் தோள் தட்டினார்..
"எப்படியோ போங்க.."
அதற்குப் பின்னால் பூங்குழலி அந்தப் பேச்சை எடுக்கவில்லை..
சுரேந்திரன் பிறந்து வந்து ஊர்மிளாவின் தொலைந்து போன சிரிப்பை மீட்டுக் கொடுத்திருந்தான்.. அவன் வளர.. வளர.. அவனது மழலையிலும்.. விளையாட்டிலும் தன்னை மறந்து குதூகலம் கொண்டாள் ஊர்மிளா..
"அம்மா.. இவனைப் பாருங்களேன்.. பொக்கை வாயைத் திறந்து என்னமா பேசறான் தெரியுமா..?"
அவனது ஒவ்வொரு செய்கையிலும் மகிழ்ந்து போய் விடுவாள் ஊர்மிளா.. மகனை இமைப் பொழுது கூடப் பிரிய மாட்டாள்.. பூங்குழலியின் பொறுப்பில் விட்டுவிட்டு வேலைக்குப் போக யோசிப்பாள்... பள்ளியிலேயே ஆயாவை ஏற்பாடு பண்ணிக் குழந்தையை தன்னுடன் தூக்கிக் கொண்டு போய் விடுவாள்..
'நான் பார்த்துக்க மாட்டேனா..' பூங்குழலியின் மனம் வருந்தினாலும்.. மகளின் மனநிலையை புரிந்து கொண்டவளாக எதுவும் சொல்ல மாட்டாள்..
ஊர்மிளாவின் உலகமாக சுரேந்திரன் ஆகிப் போனான்.. அவளது சிந்தையெல்லாம் மகனின் மீதே இருந்தது.. மகனுக்காக அவள் எதையும் செய்ய சித்தமாக இருந்தாள்..
அதனால்தான் அவனுடைய சிகிச்சை என்று வந்த போது அவனையே பிரிந்து நிற்க மனம் துணிந்தாள்..
சோமசுந்தரமாகட்டும்... பூங்குழலியாகட்டும்... என்றாவது ஒருநாள் நரேந்திரன் ஊர்மிளாவைத் தேடி வருவான் என்று நினைத்தார்களே தவிர.. அவன் மகனைத் தேடி வருவான்.. மனைவியைக் குற்றம் சாட்டிவிட்டு அவனைத் தூக்கிப் போவான் என்று கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கவில்லை..
நினைத்துப் பார்க்காததெல்லாம் நிகழ்வதுதானே வாழ்க்கை..? நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அது எப்படி வாழ்க்கையாகும்..?
தஞ்சைக்கு மகளுக்காக அவர்களை வரவைத்ததும் அந்த வாழ்க்கைதான்... அதே தஞ்சையை விட்டு திருச்சிக்கு அவர்களை திரும்பிப் போக வைத்ததும் அந்த வாழ்க்கைதான்..
நரேந்திரனின் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டேன் என்று ஊர்மிளாவை வைராக்கியம் கொள்ள வைத்ததும் அந்த வாழ்க்கைதான்.. அதே நரேந்திரனின் பின்னால் மகனுக்காக அவளைப் போக வைத்ததும் அந்த வாழ்க்கைதான்...
வாழ்க்கை வகுத்து வைத்திருக்கும் திருப்பங்களைப் பற்றி யாரால் கணிக்க இயலும்..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -72
அழகான ராட்சசியே -72
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-72.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-72.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy