அழகான ராட்சசியே -70

70 மொட்டவிழ்ந்த வாசம் போல.. நெஞ்சினிலே நேசம் கொண்ட.. அழகான ராட்சசி நீ.... ஊர்மிளா சுவரில் சரிந்து சாய்ந்து அமர்ந்தாள்.. பூங்க...


70
மொட்டவிழ்ந்த வாசம் போல..
நெஞ்சினிலே நேசம் கொண்ட..
அழகான ராட்சசி நீ....


ஊர்மிளா சுவரில் சரிந்து சாய்ந்து அமர்ந்தாள்.. பூங்குழலியின் இதயம் பதறியது.. கணவனுடன் முகமெல்லாம் மலர.. மறுவீட்டுக்கு வந்து போன மகளின் முகமா இது என்று நிலை குலைந்து போனாள்..
"பூங்குழலி.. எடுடி அந்த அறுவாளை.."
சோமசுந்தரம் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கர்ஜித்தார்..
"அப்பா.. ரிலாக்ஸ்.." அவர் கைபிடித்து நாற்காலியில் உட்கார வைத்தாள் ராதா..
"ரிலாக்ஸா இருக்கிறதா..? எப்படிம்மா..? பூப்போல இருந்தாம்மா என் பொண்ணு.. அவ பாட்டுக்கு தானுண்டு.. தன் படிப்புண்டுன்னு இருந்தாளே.. இந்தக் கோடிஸ்வரன் வந்து பெண்ணைப் பார்த்தாரு.. பொய்யைச் சொல்லிக் கட்டிக்கிட்டுப் போனாரு.. இப்ப என் மக கண்ணில சிரிப்பில்லாம திருப்பி அனுப்பியிருக்காரு.. அந்த மனுசனை சும்மா விடச் சொல்றியாம்மா..?" சோமசுந்தரம் வெடித்தார்..
"அவர் அனுப்பலைப்பா.. ஊர்மிளாதான் கிளம்பி வந்திருக்கா.." ராதா விளக்கம் சொல்ல முயன்றாள்..
சோமசுந்தரம் கோபச் சிரிப்பு சிரித்தபடி பூங்குழலியைப் பார்த்தார்.. அவள் விசனத்துடன் விம்மினாள்..
"கேட்டுக்கிட்டியா பூங்குழலி.. நம்ம ராதா என்ன சொல்லுது தெரியுமா..? அவர் ஒன்னும் ஊர்மிளாவை அனுப்பலையாம்.. நம்ம மகளாத்தான் கிளம்பி வந்திருக்காளாம்.."
"அப்பா.."
"நாட்டு வழக்கம் தெரியாம பேசறயே ராதா.. உனக்கென்னம்மா தெரியும்..? நீ பிறந்து வளர்ந்ததெல்லாம் டவுனில.. எங்க ஊரு பழக்கத்தைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது.."
"என்னப்பா சொல்கிறீங்க..?"
"அம்மா.. கல்யாணம்ன்னு ஆனா.. எப்பவுமே இந்த விளம்பரப் படத்தில வர்றதைப் போல சிரிச்சு.. மகிழ்ந்துக் கிட்டே இருக்க முடியுமாம்மா..? ஆயிரம் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும்.. எப்பல்லாம் புருசனுக்கும்.. பெண்டாட்டிக்கும் இடையே சண்டை சச்சரவுகள் வருதோ.. அப்பல்லாம் பெண்டாட்டியாகப் பட்டவ பொட்டியைத் தூக்கத்தான் செய்வா.. இது காலம்.. காலமா.. எல்லாக் குடும்பத்திலயும் நடக்கிற சங்கதிதான்.."
"அதைத்தான் நானும் சொல்கிறேன்ப்பா.. வெயிட் பண்ணலாம்.. எல்லாம் சரியாகிடும்.."
"ஊஹீம்.. இது சரியாகிற சங்கதியில்லையம்மா.."
"என்னப்பா இப்படிச் சொல்கிறீங்க..? நீங்கதானே இது எல்லா ஃபேமிலியிலயும் நடக்கிற இன்ஸிடென்ட்ன்னு சொன்னீங்க.."
"சொன்னேன்தான்... அப்படி பொண்டாட்டி பொட்டியைத் தூக்கும்போது புருசன்காரன் கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பான்னு சொல்லலையே.."
சோமசுந்தரத்தின் வார்த்தைகளில் ஊர்மிளாவின் மனம் வலித்தது.. அவள் மனக்கண்ணில் அவள் பெட்டியுடன் வெளியேறுவதை கூர்மையான பார்வையுடன் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நரேந்திரனின் தோற்றம் வந்து நின்றது..
"அப்பா.." சோமசுந்தரத்தின் சூட்சுமமான வார்த்தைகளில் ராதா வியந்து போனாள்..
"ஆமாம்மா.. பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு பொட்டியைத் தூக்குவா.. புருசன்காரன் அதை பிடுங்கிப் போட்டு வழி மறிப்பான்.. அதையும் மீறி அவன் இல்லாத சமயத்தில அவ கோவிச்சுக்கிட்டு தாய் வீட்டுக்கு வந்திட்டா பின்னாடியே ஓடி வந்து கூப்பிட்டுக்கிட்டுப் போவான்.. இதுதாம்மா நாட்டு வழக்கம்..! உன் தோழி விசயத்திலே இப்படியா நடந்திருக்கு..?"
ராதா ஊர்மிளாவை பார்த்தாள்.. ஊமையின் பாடலைப் போல விழிகளில் வலியுடன் அவளை ஏறிட்ட ஊர்மிளாவின் நிராசையான முகம் அவள் நெஞ்சில் பதிந்தது..
"தோத்துட்டேண்டி.."
ராதாவிடம் வந்து கதறியவளை தேற்ற முடிந்தவரை தேற்றி ஆறுதல் சொல்லி சாப்பிட வைத்தாள் ராதா.. ஊர்மிளா சாப்பிட மறுத்தாள்.. வலுக்கட்டாயமாக ஊட்டி விட்டாள்..
"எனக்கென்னன்னு இருந்தாருடி.. நான் பெட்டியைத் தூக்கிக்கிட்டு கீழே வர்றேன்.. நிற்கிற இடத்தை விட்டு ஓர் அடிகூட நகரலைடி.. செஞ்சு வைச்ச சிலையாட்டம் நின்றாரு.." ஊர்மிளா குமுறினாள்..
"லீவ் இட்.. இப்போதைக்கு எதையும் பேச வேண்டாம்.. நீ ரெஸ்ட் எடு.. டூ டேஸ் போகட்டும்.. அதுக்குப் பின்னாலே உன் ஹஸ்பெண்டிடம் பேசிப் பார்க்கலாம்.." என்றாள் ராதா..
"பேச்சா..? எதைப்பத்தி பேசனும்..?"
"ஊர்மி.. இப்ப நீ கோபத்தில இருக்கேடி.."
"இது நியாயமான கோபம்.."
"இல்லைன்னு நான் சொன்னேனா..? எனக்கென்னவோ நீ கன்சீவ் ஆகியிருக்கிற விசயத்தை மட்டுமாவது உன் ஹஸ்பெண்டிடம் சொல்லியிருக்கலாம்ன்னு தோணுது.."
"சொல்லியிருந்தா.. என்ன பண்ணியிருப்பார்ன்னு நினைக்கிற ராதா..?"
ராதா மௌனமானாள்.. கணவனும், மனைவிக்குமான அந்தரங்க உரிமைப் போராட்டத்தில் அவர்களைப் பெற்றவர்களே மூன்றாம் மனிதர்களாக விலகி நிற்க வேண்டும் எனும்போது.. தோழி எந்த அளவில் உள் புகுந்து கருத்து சொல்ல முடியும்..?
"என் வயிற்றிலே இருக்கிற குழந்தையைக் காட்டி.. என் புருசனை நான் கைக்குள்ள போட்டுக்கிட்டேன்னு அந்த அகல்யா பேசுகிறதுக்கா இந்த விவரத்தை நான் அவருக்குச் சொல்லனும்..?"
"ம்ப்ச்..! என்ன மாதிரியான இன்டீசண்ட் பீபுள்.."
ஊர்மிளாவின் ஓய்ந்த தோற்றத்தில் ராதாவின் மனம் துயரம் கொண்டது.. அவள் யோசித்தாள்.. ஊர்மிளாவின் சுயமரியாதை காயப்பட்டிருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது... அவளின் நம்பிக்கை ஆட்டம் கண்டிருந்தது.. எந்தக் காதல் கணவன் யார் என்ன சொன்னாலும் அவளை கேள்வி கேட்க மாட்டான் என்று அகல்யாவிடம் சவால் விட்டாளோ.. அந்தக் காதல் கணவன் அகல்யா சொன்னதைப் போலவே.. வீட்டின் ஹாலில் அவளை நடுநாயகமாக நிறுத்தி வைத்து.. வீட்டில் இருந்த அனைவரின் முன்னிலையிலும் கேள்வி கேட்டு விட்ட கொடுமையில் அவள் துவண்டிருந்தாள்..
"ராதா.. எனக்கொரு ஹெல்ப் வேணும்.. செய்வியா..?"
சோகையாக கேட்ட தோழியை கடிந்து கொள்வதைப் போல முறைத்துப் பார்த்தாள் ராதா..
"அடிதான் வாங்கப் போற.. என்கிட்டக் கேட்கிறதில உனக்கேண்டி இத்தனை தயக்கம் வருது..? என்ன செய்யனும்..? சொல்லு.. என்கூட நியூயார்க் வந்து விடுகிறயா..? அங்கே உனக்கு வேலை வாங்கித்தர்றேன்.."
'நியூயார்க்கா..?'
ஊர்மிளாவின் மனம் பதறியது... அவ்வளவு தொலைவில் சென்றால் அவளுடைய நரேந்திரன் அவளைத் தேடி வருவானா..?
இந்தக் கேள்வி நெஞ்சில் எழும் போதே..
'அவன் தேடி வரனும்னு நீ எதிர்பார்க்கிறயா..?' என்று அவள் மனம் அவளைப்பார்த்து கை கொட்டிச் சிரித்தது..
அவனைப் பிரிந்து வந்து முழுதாக அரை நாள்கூட ஆகியிருக்கவில்லை.. அதற்குள் அவன் அவளைத் தேடி வரமாட்டானா என்ற ஏக்கம் மனதில் சூழ்வதை திகிலுடன் உணர்ந்தாள் ஊர்மிளா..
அவளது வைராக்கியத்தின் வலிமை இவ்வளவு பலவீனதானதா..?
"இல்லேடி.. நான் அங்கே வரலை.." ஊர்மிளா உடனடியாக மறுத்து விட்டாள்..
அதை எதிர்பார்த்திருந்ததைப் போல ராதாவின் முகத்தில் இளநகை வந்தது.. அவள் மேற்கொண்டு ஊர்மிளாவை வற்புறுத்தவில்லை..
"வேணாம்ன்னா விட்டு விடு.. வேற என்ன செய்யனும்..?" இதமாக வினவினாள்..
"திருச்சிக்குப் போகனும்டி.. தனியாப் போக ஹெல்த் கண்டிசன் இடம் கொடுக்கலை.. வாந்தி, மயக்கமா இருக்கு.. திருச்சி வரைக்கும் துணைக்கு வர்றியா..?" கெஞ்சுதலாக கேட்டாள் ஊர்மிளா..
ராதா தோழியின் கைவிரல்களைப் பற்றி அமைதிப் படுத்தினாள்.. அவள் முன்னரே எச்சரித்திருந்ததால் ராதாவின் அத்தை வீட்டில் ஊர்மிளாவை எதுவும் கேட்கவில்லை.. அவர்கள் இரவில் பயணமானார்கள்.. ராதாவின் மாமா அவருடைய காரையும்.. டிரைவரையும் அனுப்பி வைத்திருந்தார்..
மிதமான வேகத்துடன்.. மேடு, பள்ளத்தில் கார் குழுங்கி விடாமல் டிரைவர் காரை ஓட்டினான்.. ஊர்மிளா பின் சீட்டில் சரிந்து ராதாவின் தோளில் தலை சாய்த்திருந்தாள்.. வானில் பவனி வந்த முழுநிலவு.. கணவனைப் பிரிந்து சென்ற ஊர்மிளாவுக்கு துணைக்கு வருவதைப் போல கூடவே வந்தது..
திருச்சியில் கார் நுழைந்தபோது விடிந்து விட்டிருந்தது.. சோமசுந்தரத்தின் வீடு இருந்த தெருவில் வாசல் தெளித்து கோலம் போட ஆரம்பித்திருந்தார்கள்..
பூங்குழலியும் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.. கோலத்தை ஒட்டி வந்து நின்ற காரைக் காண்டதும் முகம் மலர்ந்து நிமிர்ந்தாள்.. ஊர்மிளா கணவனுடன் தாய்வீட்டுக்கு சீராட வந்திருக்கிறாள் என்ற நினைவுடன் திரும்பி வீட்டுக்குள் பார்த்து குரல் கொடுத்தாள்..
"என்னங்க.. நம்ம ஊர்மிளா வந்திருக்கா.. பாருங்க.."
சோமசுந்தரம் அப்போதுதான் எழுந்து.. வாசல் பக்கம் வந்து கொண்டிருந்தார்.. காலை வேளையில் உலாவப் போய் விட்டு வருவது அவரின் தினப்படி பழக்கம்..
உலாவப் போகிறேன் என்ற பெயரில் அந்த ஏரியாவாசிகளை பொதுவுடைமைக் கருத்துக்களைச் சொல்லி பயமுறுத்தி.. உலாவ விடாமல் ஓட்டி விடுவதற்காக அவர் போகிறார் என்று நரேந்திரன் ஊர்மிளாவிடம் கிண்டலடித்திருக்கிறான்.. சோமசுந்தரம் அதைத்தான் செய்து கொண்டிருந்தார் என்பதால் கணவனை செல்ல முறைப்பு முறைத்து விட்டு லேசாக சண்டை போட்டிருக்கிறாள் ஊர்மிளா..
"எங்கப்பாவை கேலி செய்யலைன்னா உங்களுக்கு வேலையே ஓடாதா..?"
அன்றும் அதுபோல உலவாப் போகிறேன் பேர்வழி யென்று ஏரியா மக்களிடம் மைக் இல்லாமல் பொதுவுடமை கருத்துக்களைப் பேசி.. தண்ணீர், புகை.. போன்ற எதுவுமில்லாமல் அவர்களை கலைந்து ஓட வைக்கும் நோக்கத்துடன் வீட்டு வாசலுக்கு வந்து கொண்டிருந்த சோமசுந்தரத்தின் காதில் தேனாறு பாய்ந்தது..
"ஊர்மிளா.. வந்திருக்காளா..?"
அவர் சந்தோசத்துடன் கார் கதவைத் திறக்கப் போனார்.. பூங்குழலி அவர் கையைப் பிடித்துக் கிள்ளி விட்டு.. சேலை முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்..
"இருக்கிற புழுக்கத்தில இது வேறயா..?" சோமசுந்தரம் தலையில் அடித்துக் கொண்டார்..
"மாப்பிள்ளை காரில இருப்பார்.. அதனால.. முதல்ல அவரை வாங்க மாப்பிள்ளைன்னு கூப்பிட்டுட்டு.. அப்புறமா ஊர்மிளாகிட்டப் பேசுங்க.." முணுமுணுத்தாள் பூங்குழலி..
"இல்லைன்னா மனுசன் கோவிச்சுக்கிட்டு திரும்பவும் ஊரைப் பார்த்துப் போயிருவாரா..?" சோமசுந்தரத்தின் விதண்டாவாதமான கேள்வியில்..
"அச்சாணியமாய் பேசாதீங்க.." என்று பதறினாள் பூங்குழலி..
கார் கதவைத் திறந்து கொண்டு ஊர்மிளாவும், ராதாவும் மட்டும் இறங்கியதைப் பார்க்கும் போதே சொன்னதைப் போலவே ஏதோ அச்சாணியமாக நிகழ்ந்திருக்கிறது என்று பூங்குழலிக்குப் புரிந்து விட்டது..
நரேந்திரன் காரில் இல்லை என்பது புரிந்தவுடனே.. அவள் வாய் வரை..
"மாப்பிள்ளை எங்கேம்மா..?" என்ற கேள்வி வந்து விட்டது..
பூங்குழலி அவசரமாக அதை உள்ளே தள்ளினாள்.. அவளின் கூரிய விழிகள் மகளின் முகத்தை ஆராய்ந்தன.. அதில் மலர்ச்சியில்லை.. பெற்றவளின் மனதுக்கு ஏதோ சரியில்லை என்பது புலப்பட்டு விட்டது..
"அப்பா.." காரை விட்டு இறங்கிய ராதா பாசத்துடன் அழைத்தாள்..
"வாம்மா ராதா.. எப்ப வெளிநாட்டில இருந்து வந்த..?" சோமசுந்தரம் ஆச்சரியத்துடன் அவளை வரவேற்றார்..
"ஊர்மிளா.."
கோலப் பொடி கிண்ணத்தை வாசல் காம்பவுண்டு சுவரின்மீது வைத்து விட்டு மகளின் தோளை அணைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வீட்டுக்குள் போனாள் பூங்குழலி.. அவள் ராதாவை கண்டு கொள்ளவில்லை..
'ராதா வந்திருக்கிறா பாரு..' என்று சொல்ல வாயெடுத்த சோமசுந்தரம் மனைவியின் செய்கையில் முகம் மாறினார்..
பூங்குழலி அவ்வாறு வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியை வாவென்று அழைக்காமல் போகிற ஆளல்ல..
"நீ எங்கேம்மா ஊர்மியைப் பார்த்த..?"
"பெங்களூருக்குப் போயிருந்தேன்ப்பா.."
"ஓ.. உன்னைப் பார்த்ததும் உன் தோழிக்கு திருச்சி ஞாபகம் வந்திருச்சா..? சேர்ந்தே போகலாம்ன்னு உன்கூட கிளம்பி வந்தாளா..?"
சோமசுந்தரத்தின் கேள்விக்கு ராதா பதில் சொல்லவில்லை..
"வீட்டுக்குள்ளே போய் பேசலாமாப்பா..?" என்று கேட்டாள்..
சோமசுந்தரத்தின் நெற்றியில் கோடுகள் விழுந்தன.. முகம் இறுக்கமாக தலையை மேலும்... கீழுமாக அசைத்தபடி வீட்டுக்குள் போனார்.. ராதா அவரை பின்தொடர்ந்தாள்.. உள்ளே சோமசுந்தரம் கண்டகாட்சி அவரை உலுக்கி விட்டது..
"அம்மா.."
பூங்குழலியின் மடியில் முகம் புதைத்து ஊர்மிளா கதறிக் கொண்டிருந்தாள்.. அக்கம் பக்கம் சத்தம் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக ராதா கதவை அடைத்தாள்.. சோமசுந்தரம் பதறினார்.. மகளின் அருகே உட்கார்ந்தார்.. தாயின் மடியில் முகம் புதைத்திருந்தவளின் முகத்தை நிமிர்த்தி.. கண்ணீரில் நனைந்திருந்த அவள் முகத்தை தோளில் கிடந்த துண்டால் துடைத்து விட்டார்.. கண்ணீரின் ஈரத்தில் முகமெங்கும் படிந்திருந்த அவளின் கலைந்த தலைமுடியைக் கோதி சீராக்கினார்..
"அப்பா.."
ஊர்மிளா விம்மினாள்.. நிற்காமல் பெருக்கெடுத்த அவளின் கண்ணீரில் அவளின் காதலின் தோல்வி எழுதப்பட்டிருந்தது..
சோமசுந்தரம் ரௌத்ரமானார்.. நான் அப்போதே சொன்னேனே கேட்டாயா என்பதைப் போன்ற சொல்லிக் காட்டும் வார்த்தைகளை அவர் வாய் சொல்லவே இல்லை.. என் பேச்சை மீறி திருமணம் செய்து கொண்டால் அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று முடிவெடுத்தாயே.. இப்போது என்ன ஆனது பார்த்தாயா.. என்று அவர் குத்திக் காட்டவே இல்லை.. மாறாக கொந்தளித்தார்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -70
அழகான ராட்சசியே -70
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-70.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-70.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy