அழகான ராட்சசியே -69

69 சொன்ன சொல்லைத் தாங்கிடாத.. அழகான ராட்சசி நீ.... நரேந்திரன் அசைவற்று நின்றான்.. அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைய...


69
சொன்ன சொல்லைத் தாங்கிடாத..
அழகான ராட்சசி நீ....


நரேந்திரன் அசைவற்று நின்றான்.. அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனையே பார்த்தபடி நின்றவளின் விழிகளில் வந்து போன ஓராயிரம் உணர்வலைக்களுக்கான அர்த்தம் என்னவென்று அவனுக்குப் பிடிபடவே இல்லை...
அவளது கருவிழிகளில் இருந்தது கோபமா..? இல்லை குமுறலா..?
பதிலை எதிர்பார்த்து நின்றிருந்தவனுக்குப் பதில் கொடுக்காமல் ஊர்மிளா மடமடவென்று மாடிப்படிகளில் ஏறிப் போய் விட்டாள்..
"இதுவும் சரிதான்.." என்றாள் அகல்யா..
"இத்தனை பேருக்கு முன்னாலே நீ கேள்வி கேட்பன்னு எதிர்பார்த்திருக்க மாட்டா.. அதான் மாடி ரூமுக்குப் போயிட்டா.. தனியா உன்கிட்ட விளக்கம் சொல்லலாம்ன்னு நினைக்கிறாளோ என்னவோ.. நீ போப்பா.."
அகல்யா குத்தலாக சொன்னாள்.. அவளது தொனியில் தெரிந்த கிண்டலில் அருண்குமார் அகல்யாவை முறைத்தான்..
"அப்படி அண்ணி நினைச்சா.. அதில தப்பென்னம்மா இருக்கு..? ஹஸ்பெண்டு அண்ட் வொய்புக்குள்ள ஆயிரம் பெர்சனல் இருக்கும்.. மத்தவங்க அதில தலையிடக் கூடாது.."
"நீ சொல்கிறதும் சரிதாண்டா அருண்.. ஆனா.. நரேந்திரன் எல்லோரையும் நிற்க வைச்சு அவங்க முன்னாலே கேள்வி கேட்டுட்டானே.. அதுக்கான பதிலை அவ எல்லோருக்கும் முன்னாலே கொடுத்தாதானே நரேந்திரனுக்கு அது மரியாதையாய் இருக்கும்..? இப்படித் தனியா வா பேசிக்கலாம்ன்னு போனா நம்ம வீட்டில வேலை செய்கிறவங்களே என்ன பேசுவாங்க..?"
"ஒன்றையும் பேசமாட்டாங்க.." எரிச்சலுடன் வெடித்தாள் அர்ச்சனா..
"பேசறதுக்கு என்ன இருக்கும்மா..?"
"ஏண்டி..? ராதா யார்ங்கிற கேள்வி இருக்கே.."
அகல்யா வெகு சாமர்த்தியமாக ராதாகிருஷ்ணன் என்ற பெயரை ராதாவாக மாற்றிக் காட்டினாள்.. அந்த சூட்சுமத்தை அங்கிருந்தவர்களால் உணரமுடியவில்லை.. அகல்யா அப்படியொரு விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறாள் என்பதே அங்கிருந்த யாருக்கும் தெரியாது.. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் சிறு பிணக்கை அகல்யா ஊதிப் பெரிதாக்குகிறாள் என்பதுதான்..
ஏற்கனெவே ஒருமுறை ராதா என்ற ஊர்மிளாவின் தோழியை ராதாகிருஷ்ணன் என்று விளையாட்டுக்குச் சொன்னதாக அகல்யா நடத்தி முடித்திருந்த நாடக காட்சியால்.. அதைப்போல எதையோ நினைத்துக் கொண்டு நரேந்திரன் ஊர்மிளாவிடம் கேள்வி கேட்டு விட்டான் என்றே அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள்..
"நீ ஏம்ப்பா நிற்கிற..? மாடிக்குப் போ.." எள்ளலுடன் சொன்னாள் அகல்யா..
இந்த அம்மா வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் தேவலாம் என்று அருண்குமாருக்கும், அர்ச்சனாவிற்கும் தோன்றியது.. மற்றவர்களோ கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு எரிகிற தீயில் எண்ணையை ஊற்றாவிட்டால் அவள் எப்படி அகல்யா ஆவாள் என்று பல்லைக் கடித்தார்கள்..
"அண்ணி வர்றாங்க.." அர்ச்சனா பதட்டத்துடன் சொன்னாள்..
எதற்காக இந்த பதட்டம் என்ற நினைவுடன் திரும்பிப் பார்த்த நரேந்திரனின் கண்கள் இடுங்கின..
அங்கே ஊர்மிளா கையில் பெட்டியுடன் இறங்கிக் கொண்டிருந்தாள்..
"இந்தக் கொடுமையை எங்கேயும் கண்டதில்லை.." என்றாள் அகல்யா..
'ஆமாமாம்.. நீயிருக்கும் இடத்தில நடக்கிற கொடுமைகள் வேற எங்கேயும் நடக்காதுதான்..' வனிதா பொருமினாள்..
"கட்டின புருசன் கேள்வி கேட்டா பெட்டியைத் தூக்கிக்கிட்டு ஒரு பெண்டாட்டியாகப் பட்டவ வீட்டை விட்டு வெளியே போகக் கிளம்புவாளா..? இது பிளாக் மெயிலால்ல இருக்கு... என் இஷ்டத்துக்கு நான் இருப்பேன்... நீ கேள்வி கேட்டா பெட்டியைத் தூக்கிக்கிட்டுப் போயிருவேன்னு மிரட்டறதைப் போலல்ல இருக்கு.."
"அம்மா.."
"என்னையேண்டி அடக்கப் பார்க்கிற.. நாளைக்கு ஊர், உலகத்தில பெண்டாட்டியை அடக்கத் தெரியாதவன்னு உன் அண்ணனைப் பத்தியில்ல பேசப் போகறாங்க.."
"யாரும் எதுவும் பேச மாட்டாங்க.. பேச இதில என்ன இருக்கு..?"
"நிறைய இருக்குடா அருண்.. நீ விவரம் புரியாம பேசற.. நரேந்திரன் வெளிநாட்டுக்குப் போயிருந்தப்ப அவனோட பெண்டாட்டியைப் பார்க்க அவ கூடப்
படிச்ச பிரண்டு வந்தாப்புலயாம்.. ரெண்டுபேரும் வீடு தங்காம பெங்களூரைச் சுத்தி வட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்களாம்.. திரும்பி வந்த நரேந்திரன் அதைப்
பத்தி பெண்டாட்டிகிட்ட கேள்வி தேட்டானாம்... நீ எப்படி என்னைக் கேள்வி கேட்கலாம்ன்னு அவ பெட்டியைத் தூக்கிக்கிட்டு கிளம்பிட்டாளாம்ன்னு பேச மாட்டாங்களா..?"
அப்படியெல்லாம் பேசுவார்கள் என்று நரேந்திரனின் மனதில் பதியும்படி போதித்தாள் அகல்யா... அவள் போதனையை என்றுமே அவன் கேட்டுக் கொண்ட தில்லை... அன்றும் அதுபோல எதையும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தவனின் மனதில் ஒரே ஒரு கனல்தான் இருந்தது..
அது.. அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து ஊர்மிளா பெட்டியோடு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் என்பது..
ஊர், உலகம் பேசும்படி அவன் மனைவி நடந்து கொண்டிருக்க மாட்டாள் என்பதை அவன் சர்வ நிச்சயமாக நம்பினான்.. அப்போதும் ஊர்மிளாவைப் பார்க்க வந்தது தோழன்தான்.. அவன் பெயர் ராதாகிருஷ்ணன் என்றே அவன் நினைத்திருந்தான்.. அதில் அவன் தவறேதும் காணவில்லை..
அவனுக்கு வேண்டியதெல்லாம் அவன் கேட்ட கேள்விக்கான நேரடியான பதில் மட்டுமே..
அவன் சொன்னதற்கு.. ஆமாம்.. ராதாகிருஷ்ணன் என்னுடன் படித்த என் தோழன்..! நம் திருமணத்திற்கு வரமுடியாததினால் என்னைப் பார்க்க வந்திருந்தான்.. அவனுக்கு நான் நமது ஊரைச் சுற்றிக் காட்டினேன் என்று அவள் நிமிர்வாக பதில் சொல்லியிருந்தால்.. அப்படியா..? உன் நண்பனுக்கு ஒரு விருந்து கொடுக்கலாம்...
என் சார்பாக அவனை இன்வைட் பண்ணு என்று சொல்லியிருப்பான்..
அருண்குமார் முகம் சுளிக்கும்படி.. அர்ச்சனாவின் மனது கெட்டுப்போகும்படி.. வீட்டிலுள்ள வேலையாள்கள் வேடிக்கை பார்க்கும்படி ஒருநாளும் அவன் மனைவியின் செயல்பாடுகள் இருந்திருக்காது என்பதை அவன் அறிந்து வைத்திருந்தான்.. ஒருவேளை அவனில்லாத தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு... அகல்யா அப்படியொரு மாயையை உருவாக்கி வைத்திருந்தால்.. நரேந்திரனின் 'அப்படியா...?' என்ற ஒற்றைக் கேள்வியிலும்.. விருந்து அழைப்பிலும்.. அந்த மாயை அறுந்து விழுந்து விடுமே என்ற திட்டம்தான் நரேந்திரனுக்கு..
இவை எதுவுமில்லாமல் அகல்யா சொன்னது பொய்யாக இருக்கும் பட்சத்தில் அதை அனைவரின் முன்னிலையிலும் அம்பலப் படுத்தி அவளின் முகத்திரையை கிழித்துக்காட்ட வேண்டும் என்ற வன்மமும் நரேந்திரனின் மனதில் இருந்தது..
எவ்வளவு தைரியமிருந்தால் நரேந்திரனின் மனைவி மீது இப்படிப்பட்ட பழியை அகல்யா சுமத்துவாள்..? அதற்கான தண்டனையை அவளுக்கு கொடுக்க வேண்டாமா..?
இவை எவற்றிற்கும் வழியின்றி ஊர்மிளா பெட்டியைக் கையில் தூக்கியபோது... நரேந்திரனின் கோபம் அகல்யாவிடமிருந்து ஊர்மிளாவின் மீது புலம் பெயர்ந்தது..
'உனக்கும்.. எனக்குமிடையில் இருக்கும் உறவு இவ்வளவுதானா..? ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பதில் சொல்லாமல் நீ என்னை விட்டுப் போய் விடுவாயா..?'
நரேந்திரனின் கனல் கக்கும் விழிகளைக் கண்ட அகல்யா இனி அவள் காய் நகர்த்த வேண்டிய அவசியமேயில்லை என்று குதூகலித்தாள்.. வத்திக்குச்சி பற்றி விட்டது..
ஊர்மிளாவின் முகம் கடினமாக இருந்தது.. அத்தனை பேரின் முன்னிலையில் அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் கிளம்பிய அந்த அழகான ராட்சசியின் மீது நரேந்திரனின் மனதில் வன்மம் பிறந்தது.. அவள் அவனுடைய மரியாதைக்கு பங்கம் விளைவித்து விட்டாள் என்ற கோபம் காட்டுத்தீயாக அவனுக்குள் பற்றிக் கொண்டது..
"இத்தனை பேர் முன்னாடியும் எடுத்தெரிஞ்சதைப் போல கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம போகிறாளே.. கொஞ்சமாவது புருசனோட மானம், மரியாதை என்னாகிறதுன்னு நினைச்சுப் பார்த்தாளா..?"
நரேந்திரனின் மனதிலிருந்ததைச் சொன்னாள் அகல்யா.. அர்ச்சனாவோ ஊர்மிளாவைத் தடுக்கப் போனாள்..
"அண்ணி.."
அவள் ஓரடி எடுத்து வைக்க முனைந்தபோது நரேந்திரனின் அனல் பார்வை அவளைத் தடுத்து நிறுத்தி விட்டது..
அருண்குமாரோ கையைப் பிசைந்தான்... அர்ச்சனாவைப் போல அவனால் ஊர்மிளாவை தடுத்து நிறுத்த முடியாது.. அதனால்..
"அண்ணா.. ராதாகிருஷ்ணன்ங்கிறது.." என்று நரேந்திரனிடம் விளக்கம் சொல்லப் போனான்..
"உன்னைக் கேட்டேனா..?" கடுமையான நரேந்திரனின் கேள்வி அவனை விலக்கி நிற்க வைத்து விட்டது..
யாரையும் பார்க்காமல்.. நிமிர்ந்த நன்னடையும்.. நேர் கொண்ட பார்வையுமாக நரேந்திரனைப் பிரிந்து விட்டாள் ஊர்மிளா.. ஓர் பார்வை பார்க்கவில்லை.. ஓர் சொல்லை உதிர்க்கவில்லை..
எதுவும் இல்லாமல் எனக்கும்.. உனக்கும் இடையில் எதுவுமே இல்லையென்று பிரிந்து போனவளை மனமாற வெறுத்தான் நரேந்திரன்..
ஊர்மிளா வாசல் கேட்டைத் தாண்டினாள்.. நரேந்திரன் மாடிப் படிகளில் மடமடவென்று ஏறிப் போய் விட்டான்.. அகல்யா அப்பாடா என்று ஹால் சோபாவில் உட்கார்ந்தாள்.. அவள் முகத்தில் நிலவிய திருப்தியைக் கண்ட வனிதாவிற்கு பூரிக்கட்டையைக் கொண்டுவந்து அகல்யாவின் முகரையைப் பெயர்த்தால் என்ன என்ற வெறி கிளம்பியது..
"பொம்பளையாய்யா இந்தம்மா..? வாழ வந்த பொண்ண.. வாழ விடாம துரத்தியடிச்சுட்டு சந்தோசம் கொண்டாடறதைப் பாரேன்.." ரமேஷிடம் பொருமினாள்..
"இது பொம்பளைன்னு யாரு உனக்குச் சொன்னது..? ஆயிரம் ஆம்பளைகளுக்குச் சமம் இந்தம்மா.." ரமேஷ் விளக்கம் சொன்னான்..
அர்ச்சனாவாலும்.. அருண்குமாராலும் எதையும் செய்யமுடியவில்லை.. அவர்கள் நரேந்திரனின் கண் பார்வைக்கு கட்டுப்பட்டவர்கள்.. அவனது விழி சொல்லும் கட்டளையை மீறியறியாதவர்கள்..
"இங்கே என்னதான் நடக்குதும்மா..?" அருண்குமார் தலையைப் பிடித்தான்..
"யாருக்குடா தெரியும்..? உங்கண்ணன் விவரமானவன்.. வெளிநாட்டுக்குப் போனவன் உன் அண்ணியைக் கண்காணிக்க ஆள் ஏற்பாடு பண்ணி யிருக்கலாம்... இவ வீடு தங்காம ஊர் சுத்தறதைத் தெரிஞ்சுக்கிட்டு கேள்வி கேட்டிருக்கலாம்.. எனக்கு மட்டும் ஜோசியமா தெரியும்..? நானும் உங்க கூடத்தானே இந்த வீட்டில் இருக்கிறேன்.. உங்களுக்குத் தெரியாதது எனக்கு மட்டும் தெரிந்து விடுமா..?"
அகல்யாவா பதில் சொல்ல சளைப்பாள்..? எந்தத் திக்கிலிருந்து எப்படிப்பட்ட கேள்விகள் வந்தாலும் சளைக்காமல் பதில் சொல்வதில் அவளுக்கு நிகர் அவள்தான்..
அவளென்ன ஊர்மிளாவா.. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லாமல் கணவனை விட்டுப் பிரிவதற்கு..?
அவள் அகல்யா..! இது அகல்யாக்களுக்கான உலகம்..!
"ராதாகிருஷ்ணன்னு ஏம்மா அண்ணன் சொல்லனும்..?"
"அவன் சொன்னால்.. உன் அண்ணி வாயில என்ன லட்டா இருந்துச்சு..? இல்லைங்க.. ராதாகிருஷ்ணன்னு எனக்கு யாரையும் தெரியாது.. ராதாவைத்தான் தெரியும்ன்னு சொல்ல வேண்டியதுதானே.. இதில என்னடா வீம்பு வேண்டிக்கிடக்கு..? உண்மையைச் சொல்ல எதுக்குத் தயங்கனும்..? பயந்து ஓடனும்..?"
வேதாளம் தேவாரம் ஓதியது.. அகல்யா நியாயம் பேசினாள்.. அதுதானே என்ற எண்ணத்தை மகனுக்கும்.. மகளுக்கும் வரவைத்தாள்.. எதனால் நரேந்திரன் யார் அந்த ராதாகிருஷ்ணன் என்று கேட்டான் என்ற ஆராய்ச்சியின் பக்கமே அருணையும்.. அர்ச்சனாவையும் போகவிடாமல் செய்து விட்டாள்..
"அன்னைக்கு நான் கூடத்தான் ஒரு கிண்டலுக்கு ராதாவை ராதாகிருஷ்ணன்னு சொன்னேன்.. அதைப் போலதான் உங்க அண்ணனும் கேட்டிருப்பான்.. தப்பா எதுவும் கேட்கலையே.. யாருன்னு கேட்டா இன்னாருன்னு சொல்ல வேண்டியதுதானே..? பெயரை மாத்திச் சொன்னா பிழைதிருத்தம் செய்ய வேண்டியதுதானே..? அதை விட்டுட்டு நான்தான் மைசூர் மகாராணி.. என்னை நடு வீட்டில் நிற்க வைச்சு நீ எப்படி கேள்வி கேட்கலாம்ன்னு ஒரு பெண்டாட்டி பெட்டியைத் தூக்கிக்கிட்டு போகலாமா..?"
அகல்யா சொன்ன மற்றவைகளுக்கு செவி சாய்த்தாலும்.. இதற்கு மட்டும் அருணும், அர்ச்சனாவும் செவி சாய்க்கவே இல்லை..
"அம்மா போதும்.. ஏற்கனெவே அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையே பிரச்னை ஆரம்பிச்சிருச்சு... நீங்க வேற அதை ஊதி ஊதி பெரிசு பண்ணாதீங்க.." கண்டிப்புடன் சொன்னான் அருண்குமார்..
"அதைத்தான் நானும் சொல்றேன்.. சும்மாவே உங்களுக்கு அண்ணியைக் கண்டா ஆகாது.. சான்ஸ் கிடைச்சிருச்சுன்னு சின்ன விரிசலை பெரிய அகழியா மாத்திராதீங்கம்மா.." அர்ச்சனா கவலைப்பட்டாள்..
"எனக்கு வேற வேலையே இல்லைன்னு நினைச்சீங்களா..? இதுதான் என் வேலையா..?"
கோபிப்பதைப் போல பிள்ளைகளை பற்றிவிட்ட அகல்யாவிற்கு அதுதான் வேலையாக இருந்தது.. நரேந்திரனின் மனதிலிருந்த கனல் குறைந்து விடாமல் அவள் பார்த்துக் கொண்டாள்.. பற்றியெரிந்த தீயில் தினமும் எண்ணையை ஊற்றிக் கொண்டே இருந்தாள்.. அதுவரை நரேந்திரனைப் பற்றிக் கண்டு கொள்ளாதவள்.. அவனுக்கான பணிவிடைகளை ஓடி ஓடிச் செய்தாள்.. சாப்பிடுப்பா என்று தட்டைப் போட்டு பரிமாறி உபசரித்தாள்.. கூடவே..
"ஏன் நரேந்திரா.. இந்தப் பொண்ணு எங்கேதான் போயிருப்பா..? அவ அப்பா வீட்டுக்குப் போயிருப்பாளா.. இல்ல.. ராதா உன்கூட நியுயார்க்குக் கிளம்பி வந்துடறேன்னு அந்த ராதாகிட்டப் போயிருப்பாளா..?" என்று தூண்டி விட்டபடி ஆழம் பார்க்கவும் செய்தாள்..
திருச்சியில் சோமசுந்தரத்தின் வீட்டுக்கு ஊர்மிளா போய் சேர்ந்து விட்டாளா என்ற விவரத்தை விசாரிக்க நினைக்கும் நரேந்திரன் அதை வேண்டாமென்று ஒதுக்கி விடுவான்..
'எங்கே போகப் போகிறேன்னு என்னிடம் சொல்லி விட்டாப் போனா..?'
அவனுக்குள் தீ எரியும்.. அது அவளைத் தேடும் தீ..! அவளைத் தழுவத் துடிக்கும் தாபத்தீ..! அவளின் சரசத்தில் குளிக்க விழைகிற மோகத்தீ..! அவனுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் இழைந்து கொண்டிருந்தவளின் பிரிவைத் தாங்க முடியாத வேட்கைத் தீ..!
அல்லும் பகலும் அந்த அழகான ராட்சசியை மட்டுமே நினைத்தான் நரேந்திரன்.. காலையில் கண் விழிக்கும் போதே அவள் முகம் நெஞ்சினில் எழுந்தது.. கனவிலும் மறையாத அந்த முகத்தைப் பார்க்க முடியாமல் அவன் வெறி கொண்டு துடித்தான்.. அவளைத் தேடிச் சொல்ல முடியாமல் சுயமரியாதை அவனைத் தடுத்தது..
'நானா அவளை போன்னு சொன்னேன்..? அவளாப் போனா.. அவதான் என்னைத் தேடித் திரும்பி வரனும்..'
ஊர்மிளா திரும்பி வரவில்லை..
தனிமையென்னும் நட்டாற்றில் நரேந்திரனை விட்டு விட்டு அவள் பிரிந்து நின்று விட்டாள்.. தாய்க்குப் பின்னால்.. தாயினும் சாலப் பரிந்து அன்பு காட்டிய காதல் மனைவி பிரிந்ததில் நரேந்திரன் மீண்டும் தனியனானான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -69
அழகான ராட்சசியே -69
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-69.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaraatsasiye-69.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy